லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2

முந்தைய பகுதி…

ANNA-LOKPAL
நாட்டை அழிக்கும் ஊழல் பூதத்திற்கு கடிவாளம் லோக்பால்!

 

விதிமுறைகளும் சிறப்பம்சங்களும்…

.

ஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம்,  வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,… என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது.

இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள். சொல்லப்போனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கள்ள ஆடுகள் பெருகிவிட்டன.

இதற்கெல்லாம் மாற்று என்ன? பொதுமக்களின் வரிப்பணத்தில் மாதாந்திர ஊதியம் பெறும் அரசு ஊழியர், மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைக்கு மீண்டும் காசு கேட்பதைத் தடுப்பது எப்படி? லஞ்சம் மூலமாக குறுக்குவழியில் முன்னேறும் எண்ணம் இருப்பவர்கள் உள்ள வரை, லஞ்சம் ஒழிய வாய்ப்பில்லை. இந்த சுயநல மனிதர்களையும், லஞ்சம் வாங்கும் கயவர்களையும் தண்டிக்காமல், பிரச்னைக்குத் தீர்வு கிடையாது.

இதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் தான் லோக்பால். இதற்கான சிந்தனை தோன்றி 50 ஆண்டுகள் கழிந்த பிறகே, இதை நம் நாட்டில் நிதர்சனமாக்க முடிந்துள்ளது. லோக்பால் சட்டம் வந்துவிட்டது. இதனால் என்ன லாபம்?

முதலில் லோக்பாலின் அமைப்பு, விதிமுறைகள், அதிகாரங்கள் குறித்து நாம் அறிந்தாக வேண்டும். லஞ்ச ஒழிப்பு சட்டம் இப்போதும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், லஞ்சம் ஒழியவில்லையே! எனவே, முதலில் லோக்பால் குறித்து மக்களிடையே முழுமையாக விளக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும்.

.

லோக்பாலின் அமைப்பு:

expose-corruption
ஊழலை அம்பலப்படுத்த அரசியல்சாசன அமைப்பு தயார்!

லோக்பால் என்பது ஏற்கனவே கூறியது போல, மக்களின் கண்காணிப்பாளராகச் செயல்படக்கூடிய அமைப்பு. லோக்பால் சட்டப்படி, மத்தியில் லோக்பாலும் (மக்கள் கண்காணிப்பு ஆணையம்) மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் (மக்கள் கண்காணிப்பு அதிகாரி) அமைக்கப்பட வேண்டும். மாநிலங்களில் நிலவும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவர லோக் ஆயுக்தாவும், மத்தியில் ஊழலை ஒழிக்க லோக்பாலும் செயல்படும்.

உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவர் ஆகிய அமைப்புகளைப் போல, லோக்பாலும் அரசியல் சாசன அமைப்பாகும். சுதந்திரமான அதிகாரங்கள் கொண்டதாகவும், அரசால் கட்டுப்படுத்த முடியாததாகவும், அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் அதிகாரம் மிக்கதாகவும் லோக்பால் திகழும். எந்த ஒரு அமைச்சரோ, அரசியல்வாதியோ இதன் அதிகார எல்லைக்குள் தலையிட முடியாது.

மாநிலங்களில் ஓராண்டுக்குள் லோக் ஆயுக்தா அமைப்புகளை நிறுவுவது கட்டாயமாகி விட்டது. இதனை மாநில அரசுகளே நிறுவ வேண்டும். இதன் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு; அதற்கென வழிமுறைகளும் உண்டு. இதற்கு முன்னர், மாநிலங்களில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே லோக் ஆயுக்தா நிறுவ முடியும் என்றிருந்தது. அதில் மத்திய அரசுக்கும் அதிகாரம் இருந்தது.

லோக் ஆயுக்தாவில் மூன்று உறுப்பினர்கள் நீதிபதிகளாகச் செயல்படுவர். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, மாநில கண்காணிப்பு ஆணையர், சட்ட வல்லுனர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருக்கலாம். மாநில அளவிலான ஊழல் புகார்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உள்ளது.

ஏற்கனவே, மஹராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், உ.பி, குஜராத், கர்நாடகா, ம.பி, ஆந்திரா, தில்லி ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா உருவாக்கப்பட்டுவிட்டது. இவற்றில் மஹாராஷ்டிராவில் லோக் ஆயுக்தாவின் அதிகாரம் மிகக் குறைவாக உள்ளது. கர்நாடக லோக் ஆயுக்தா மிகுந்த வலிமை உடையதாக, உயர் நீதிமன்றத்திற்கு இணையானதாக மதிக்கப்படுகிறது. பாஜகவின் எடியூரப்பா முதல்வர் பதவியை இழக்க, கர்நாடக லோக் ஆயுக்தாவே காரணம்.

மத்தியில் லோக்பால் அமைப்பு அதிகபட்சம் 8 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட வேண்டும். அவர்களில் சரிபாதிப் பேர் நீதித்துறை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மீதமுள்ளோரில் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர் ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் ஒருவர், பெண் ஒருவர், சிறுபான்மையினர் ஒருவர்- இவர்கள் இடம்பெற வேண்டும். லோக்பாலாக (மத்திய லோக்பால் தலைவர்) உச்ச நீதிமன்ற நீதிபதியோ, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியோ நியமிக்கப்பட வேண்டும்.

லோக்பால், லோக் ஆயுக்தா பதவிகளுக்கு குற்றச்சாட்டுகள் இல்லாதவரே நியமிக்கப்பட வேண்டும். லோக்பாலை பிரதமர், லோக்சபா சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய நால்வரும் சேர்ந்த குழு தேர்வு செய்யும். இந்த்த் தேர்வுக்குழுவில், பிரபலமான ஒருவரை ஐந்தாவது உறுப்பினராக ஜனாதிபதி நியமிக்கலாம். அல்லது குழுவின் இதர 4 உறுப்பினர்களும் இணைந்து பரிசீலித்து ஐந்தாவது உறுப்பினரை நியமிக்கலாம்.

லோக்பால், லோக் ஆயுக்தா நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள் மீதே புகார் எழுமானால், அவர்களை நீக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் 100 எம்.பி.க்களோ, மத்திய அரசோ உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் லோக்பால் குறித்து புகார் செய்யலாம். மாநில அரசோ, எம்.எல்.ஏ.க்களோ உயர் நீதிமன்ற நீதிபதியிடம் லோக் ஆயுக்தா குறித்து புகார் செய்யலாம்.

அனைத்து மக்கள் பிரதிநிதிகள் (எம்.எல்.ஏ, எம்.பி.க்கள்), அமைச்சர்கள், நீதிபதிகள், அரசுப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் (ஆட்சியர் முதல் உதவியாளர் வரை) அனைவருமே லோக்பாலின்/ லோக் ஆயுக்தாவின் வரம்புக்கு உட்பட்டவர்கள். ராணுவத்திற்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

.

பிரதமரும் அடக்கம்:

பிரதமர் மட்டும் என்ன தவறே செய்யாதவரா?

பிரதமரும் கூட லோக்பாலின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயன்றபோது ‘பிரதமரையும் அதன் அதிகார எல்லைக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சொன்னார். ஆனால், கட்சிகளிடையே ஆதரவு இல்லாததால் அப்போது லோக்பால் சட்டமாகவில்லை. இப்போது அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரதத்தால், பிரதமரும் லோக்பாலின் விசாரணை வரம்புக்குள் (சில முக்கியமான விதிவிலக்குகள் தவிர) கொண்டுவரப்பட்டுள்ளார்.

பிரதமர் மீதே ஊழல் புகார் கூறப்படும்போது, அதனை லோக்பால் விசாரிக்கலாம். ஆனால், அதற்கு லோக்பால் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தாக வேண்டும்.

அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் விசாரிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்த விசாரணை அமைப்பு ஊழல் புகாரை விசாரிப்பது, எந்த முறையில் விசாரிப்பது என்பதை லோக்பாலே/ லோக் ஆயுக்தாவே தீர்மானிக்கலாம். மத்தியப் புலனாய்வு அமைப்பால் (சி.பி.ஐ.) ஊழல் புகார் விசாரிக்கப்பட வேண்டும் என்று லோக்பால் கருதினால், அந்த அமைப்புக்கு லோக்பால் உத்தரவிடலாம். சி.பி.ஐ. இப்போதுள்ளது போல அரசின் தாளத்திற்கு ஆடாமல், லோக்பாலின் உத்தரவுப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி, குற்றமிழைத்தோருக்கு தண்டனை பெற்றுத் தரும். குற்ற விசாரணைகள் மொத்தமாக இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

சி.பி.ஐ.யின் தன்னாட்சிக்கு உதவும் வகையில், வழக்குத் தொடரும் ஆணையம் அமைக்கப்படும். இதனை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமிப்பார். இதற்கு முன்னர், வழக்குப் பரிமாற்றங்கள் சட்ட அமைச்சகத்தின்  கட்டுப்பாட்டில் இருந்தன.  வழக்குத் தொடரும் ஆணையத்தின் ஆணையரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். லோக்பால் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகளை இடம் மாற்ற அரசால் முடியாது. அந்த அதிகாரிகளின் மாற்றம் லோக்பால் அதிகாரத்திற்கு உட்பட்டது. சி.பி.ஐ. நடத்தும் வழக்குகளை லோக்பால் நேரடியாகக் கண்காணிக்கும்.

ரூ. 10 லட்சத்திற்கு மேல் பொதுநிதி வசூலிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகள் (என்.ஜி.ஓ.) வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் மத அமைப்புகளும் அறக்கட்டளைகளும் லோக்பால் விசாரணை வரம்புக்கு உட்பட்டவை.

.

காலக்கெடுவும் தண்டனையும்:

நீதிக்கு முன் பாரபட்சம் இல்லை

அரசு ஊழியர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சம்பந்தப்பட்டவரிடமே தன்னிலை விளக்கம் கோரப்படும். போலியான குற்றச்சாட்டுகளால் அரசு இயந்திரத்தை குலைப்பதைத் தவிர்க்க, அரசு ஊழியர்களுக்கும் போதிய வாய்ப்பு அளிக்கப்படும். அதனை லோக்பால்/ லோக் ஆயுக்தா பரிசீலித்து மேல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.

அரசு ஊழியர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும். காலக்கெடுவுக்குள் வழக்கை விசாரித்து தீர்வளிப்பதை லோக்பால் உறுதிப்படுத்தும். சட்டத்தின் ஓட்டைகளைப் பயனபடுத்தி ஊழல் குற்றவாளிகள் தப்பிவிடும் தற்போதுள்ள நடைமுறையை லோக்பால் மாற்றியமைக்கும்.

அரசாங்க வேலைகள் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவினுள் முடிக்கப்படாவிட்டால், அதற்கு ஊழல காரணம் என்று தெரியவந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் மீது ’லோக்பால் அபராதம் விதித்து, சேவை குறைபட்டவருக்கு நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிடும்.

அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம். அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்து குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட்து உறுதியானால், அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கலாம். ஊழலில் அரசு அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் ஈட்டிய சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரமும் லோக்பாலுக்கு உண்டு.

அதே சமயம், அரசு ஊழியருக்கு எதிராக்க் கூறப்பட்ட புகார் பொய்ப்புகார் என்பது தெரியவந்தால், புகார் கூறியவருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத் தண்டணையும், அதிகபட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

ஊழலுக்கு எதிராகப் போராடுவோருக்கும், ஊழலை அம்பலப்படுத்த முனைவோருக்கும் உரிய பாதுகாப்பை லோக்பால்/ லோக் ஆயுக்தா அளிக்கும்.

ஒவ்வொரு மாதமும் தனது இணையதளத்தில் லோக்பால்/  லோக் ஆயுக்தா தன் கீழுள்ள வழக்குகளின் பட்டியல், சுருக்கமான விவரங்கள்,  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,  எடுக்கவிருக்கும் செயல்கள் ஆகியவற்றை வெளியிட வேண்டும். மேலும் கடந்த மாதத்தில் பெறப்பட்ட குறைகள்,  நடப்பு மாதத்தில் தீர்வானவை மற்றும் நிலுவையிலுள்ளவை ஆகியவற்றை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். அதாவது லோக்பால் அமைப்பு வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

***

நமது கடமை:

ஆயுதத்தின் மதிப்பு
பலவானுக்கே தெரியும்!

மேற்கண்ட விதிமுறைகளும், சிறப்பு உரிமைகளும், தெளிவான கட்டமைப்பும் கொண்டதாக லோக்பால் சட்டம் செயல்படும். ஹஸாரே குழுவினர் முன்வைத்த ஜனலோக்பாலுக்கும் அரசு நிறைவேற்றியுள்ள லோக்பாலுக்கும் கொள்கை அடிப்படையிலான சிறிய வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜனலோக்பால், தளைகள் அற்றதாக, அரசின் கட்டுப்பாடற்றதாக இருக்க வேண்டும் என்கிறது. அரசின் லோக்பால், சில கட்டுப்பாடுகளுடன் கூடியதாக உள்ளது. இருப்பினும், பிரதமரையும் சி.பி.ஐ.யையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவந்துள்ளது வரவேற்கத் தக்க மாற்றமாகும்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்ட்த்தை அமல்படுத்தும்போது தான் அதன் நடைமுறைச் சிக்கல்கள் புலப்படும். சுமார் ஓராண்டுக்கேனும், இதனை கடுமையாக நடைமுறைப்படுத்தினால் தான், லோக்பால் அமைப்பின் சாதக பாதகங்களை உணர முடியும். அதன்பிறகு தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதே சரியானதாக இருக்கும்.

லோக்பாலுக்கான ஊழியர் கட்டமைப்பு, நிர்வாக அலுவலக்க் கட்டமைப்பு, ஆவணக் காப்பகம் ஆகியவை குறித்த தெளிவான வரையறைகள் தேவை. தற்போதைக்கு, ஏற்கனவே உள்ள அரசு அமைப்பில் இருந்தே இந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டாக வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகளை லோக்பால் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இதனையும் மாற்றும் வகையில் சட்டத்தில் சில உட்பிரிவுகள் சேர்க்கப்படுவது காலக் கட்டாயமாகலாம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள நீதித் துறையுடன் லோக்பால்/ லோக் ஆயுக்தா முரண்படும் சூழல் வந்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கும் விளக்கம் தேவைப்படலாம்.

மொத்தத்தில், சட்டப்பூர்வமாக ஒரு கடிவாளச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களின் கருணையற்ற போக்கிற்கு தடைக்கல்லாக லோக்பால் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. எனினும் இதன் வெற்றி, சாமானியரான மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதில் தான் உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டமும் லோக்பால் சட்டமும் இணைகோடுகளாகப் பயணிக்கக் கூடியவை. எனவே, இவற்றை முழுமையாக அறிந்துகொண்டு, தக்க முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வுள்ள மக்களால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.

லோக்பால் சட்டம் வெறும் அலங்காரக் கண்காட்சி அல்ல; அரசு பிரதிநிதிகளின் அகங்காரத்தைத் தடுக்கும் கேடயமாகவும் வாளாகவும் விளங்கும் கூர்மையான ஆயுதம் இது. பலவானின் கரத்தில் தான் ஆயுதம் அர்த்தம் பெறும். எனவே மக்களை விழிப்புணர்வுள்ள பலவான் ஆக்குவதே சமூக மாற்றம் விரும்புவோரின் எதிர்காலக் கடமையாக இருக்கும்.

(நிறைவு)

2 Replies to “லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2”

 1. லோக்பாலின் தேவை என்ன ?

  இப்போது இருக்கும் சட்டங்களின் கீழேயே ,

  1.பீகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லூவுக்கும்,

  2.ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடிக்கும்,

  3.ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரான மதுகோடாவுக்கும்,

  4.லல்லூவுக்கு முன்பு இருந்த பீகார் முதல்வரான ஜகன்னாத் மிஸ்ராவுக்கும்

  தண்டனை வழங்கப்பட்டுள்ளதே ?

  உண்மை என்னவென்றால் , 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு பணியாளர் கைது செய்யப்பட்டு , சிறையில் அடைக்கப்பட்டு , வேலையை இழந்து, தண்டிக்கப்படுவார். அவரது எதிர்காலம் வீணாகப் போய்விடும் . ஆனால் பல லட்சம் கோடி ஊழல் செய்யும் பெரிய அரசியல்வாதிகள் , ஊழல் பணத்தை வெளிநாட்டு பாங்குகளில் போட்டு விட்டு, ஹாயாக விமானநிலையத்தில் தாரை தப்பட்டையுடன் வெட்கம் இல்லாமல் , வரவேற்புக்கு ஏற்பாடு செய்து கொள்வார்கள்.

  நகர்வாலா வழக்கினை காங்கிரஸ்காரர்கள் அமுக்கி விட்டனர். நகர்வாலாவும், ஸ்டேட் பாங்கு அதிகாரி மல்ஹோத்ராவும், கைது செய்யப்பட்டனர். ஆனால் அரசியல் வாதிகள் யாரும் இதில் மாட்டிக்கொள்ளவில்லை தப்பித்து விட்டனர். அதேபோல போபார்ஸ் ஊழலில் குவாத்ரோச்சியிடம் பணம் முழுவதையும் வட்டியுடன் திருப்பிக்கொடுத்தனர். அவரும் மண்டையைப் போட்டுவிட்டார்.

  லோக்பால் வந்ததால் ஒரு மாற்றமோ, முன்னேற்றமோ வந்துவிடாது . இது நிச்சயம். கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவரை விஜிலன்சு கமிஷனில் காங்கிரஸ் அரசு நியமித்து, பின்னர் உச்ச நீதிமன்றத்தின் கரங்களால் குட்டுப் பட்டவுடன் , அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்த லோக்பாலிலும், மத்திய ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டிய ஊழல் நபர்களை மட்டுமே பெரிய பதவிகளில் நியமிப்பார்கள். அப்படி நடக்காது என்பது என்ன நிச்சயம் ? லோக்பால் ஒரு தேவை இல்லாத சட்டம். இதனால் எந்த ஊழலும் ஒழியாது. மேலும் சில நீதிமன்றங்கள் வரும். அரசுக்கு உற்பத்தி சாராத செலவு ( unproductive expenditure )சற்று கூடும் அவ்வளவுதான்.

  இப்போது இருக்கும் சட்டங்களிலேயே தேவையான திருத்தங்களை செய்து, தவறு செய்யும் எல்லா அரசியல்வாதிகளையும் கம்பி என்ன வைக்க வேண்டும். லோக்பால் ஒரு வேஸ்ட் ஆகும். லோக்பாலுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 2. திரு மாசிப் பெரியசாமி அவர்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

  T N சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையாளராக வந்த பின்புதான், நம் நாட்டில் தேர்தல் முறையாக நடக்க ஆரம்பித்தது. இவர் பதவியில் இருப்பதற்கு முன்பும் பின்பும் இருந்தது அதே சட்டம்தான்.

  எனவே எந்தப் பொறுப்பாக இருந்தாலும், அதனை ஏற்கும் நபரின் நற்பண்புகளைப் பொறுத்தே நல்ல அல்லது கேட்ட விளைவுகள் ஏற்படும்.

  இன்று, பணம் அல்லது செல்வாக்கு மட்டும் இருந்தால் போதும் – அந்த நபர் சட்டத்திற்கு அப்பால் பாட்டவர் ஆகி விடுகிறார். (எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்).

  இன்றையத்தேவை – தன்னலமில்லாத, எளிமையான தலைமை. சீரிய ஆட்சி.
  சட்டமும் நீதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள், யாராக இருந்தாலும், தண்டனை குறுகிய காலத்தில் கிடைக்க வேண்டும்.

  தனி நபர் ஒழுக்கம் மற்றும் நேர்மை நம் நாட்டில் அனேகமாக பூஜ்ஜியமாக உள்ளது. சாலை உதாரணமாக, சாலை விதிகளை மீறி பிடி பட்டால், அனேகமாக அனைவரும் பணம் கொடுத்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறோமே தவிர, அதற்குண்டான அபராதத்தினைக் கட்ட தயாராக இல்லை.

  புதிய பாரதம் தலையெடுக்க புதிய தலைமை மலர வேண்டும் என்ற சங்கப்பாடலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பாட வேண்டி வாரமோ, தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *