காலையில் ஹூப்ளியிலிருந்து கிளம்பி வளைந்து வளைந்து செல்லும் ரம்மியமான கானக மலைப்பாதைகளின் வழியே பயணித்தோம். வழி முழுவதும் பசுமை கொஞ்சும் சிறு கிராமங்கள். அவற்றின் வாழ்க்கை சுருதியோடு இசைந்து பீடபூமியின் மேட்டுப் பகுதியிலிருந்து மெதுமெதுவாகக் கீழிறங்கினோம். மேற்கு கடற்கரை சாலையைப் பிடித்து மதியம் 11 மணிவாக்கில் கோகர்ணத்திற்கு வந்து சேர்ந்தோம்.
கோகர்ணா கர்நாடகத்திலுள்ள ஒரு சுவாரஸ்யமான ஊர். பழம்பெருமை வாய்ந்த புனித ஸ்தலமாகவும் அதே நேரத்தில் கடற்கரை உல்லாசப் பயணக் கேளிக்கைகளுக்கான இடமாகவும் இருக்கிறது. ஊரின் குறுகலான மைய சாலை முழுவதும் இரு மருங்கிலும் விதவிதமான பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் தெருவிலேயே கடை போட்டிருக்கிறார்கள். அவற்றுக்கு நடுவே மாடுகள் மந்த கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. ஹிப்பிகள் போன்ற ஆடை அணிகளுடன் விசித்திரமான வெளிநாட்டவர்கள் தன்னிச்சையாக சந்தோஷமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்த வாகனங்கள் இதற்கு நடுவே புகையைக் கக்கிக் கொண்டு ஊர்ந்து ஊர்ந்து நேராக கடற்கரையை நோக்கிச் செல்கின்றன. அந்த சின்ன ஊரில் கடற்கரை ஓரத்தில் தான் இவ்வளவு வாகனங்களையும் நிறுத்த பெரிய இடம் இருக்கிறது. கடற்கரையிலிருந்து திரும்பி வருவதற்கு வேறு ஒரு புறச்சாலை.
கால்களால் பயனென்
கறைகண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயனென்
என்று திருநாவுக்கரசர் பாடியிருப்பது இந்தத் திருத்தலத்தைத் தான் என்று கூறுகிறார்கள். மராட்டிய கோயில்களில் உள்ளது போன்ற நாகர பாணி சிகர விமானத்துடன் கூடிய சிவாலயம். கோயில் ரொம்பப் பெரிதல்ல, நடுத்தர அளவிலானது. சமுத்திரத்தை நோக்கியுள்ள தெருவில் பல்வேறு கடைகளின் சமுத்திரத்திற்கு நடுவில் அமர்ந்திருக்கிறார் மகாபலேஸ்வரர் என்று அழைக்கப் படும் ஆத்மலிங்கேஸ்வரர்.
கோயிலின் ஸ்தலபுராணம் ராமாயண காலத்தியது. கடுமையான தவத்திற்குப் பின் சக்தி வாய்ந்த ஆத்மலிங்கத்தைப் பெறுகிறான் ராவணன். கயிலாயத்திலிருந்து வேகவேகமாக ஆத்மலிங்கத்தை கையில் தாங்கி இலங்கையை நோக்கி வருகிறான். எக்காரணம் கொண்டும் ஆத்ம லிங்கத்தைக் கீழ வைக்க்க் கூடாது என்று நிபந்தனை. இருட்டுவதற்குள் இலங்கையை அடைந்து விட வேண்டுமென்பது இலக்கு. சிவனாரின் சக்தி சொரூபமான அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அவன் வெல்லமுடியாதவனாகி விடுவானே என்று தேவர்கள் கலக்கமுறுகின்றனர். மும்மூர்த்திகளையும் விநாயகரையும் பிரார்த்திக்கின்றனர். மேற்குக் கடற்கரைப் பக்கமாக ராவணன் வரும்பொழுது விஷ்ணு மாயையால் அந்தி சாய்கிறது. அடடா மாலைக் கடன்களுக்கான நேரம் வந்து விட்டதே என்ன செய்வது என்று ராவணன் யோசித்துக் கொண்டிருக்கும்போது பசு மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு பிரம்மசாரி சிறுவன் வருவதைப் பார்க்கிறான். அவன் கையில் ஆத்ம லிங்கத்தைக் கொடுத்து ஜாக்கிரதையாகக் கையிலேயே வைத்திருக்கச் சொல்லி விட்டுப் போகிறான் ராவணன். போன கொஞ்ச நேரத்திலேயே கத்திக் கூப்பிடுகிறான் சிறுவன். பதைபதைப்புடன் ஓடி வந்து ராவணன் பார்க்க, தூக்க முடியாமல் லிங்கத்தைக் கீழே வைத்து விட்டதாக சொல்கிறான் சிறுவன். என்ன முயன்றும் கீழே வைத்த லிங்கத்தை ராவணனால் பெயர்த்தெடுக்க முடியவில்லை. ஆத்திரத்தில் சிறுவனாக வந்த விநாயகப் பெருமானின் தலையில் ஓங்கிக் குட்டுகிறான். அதையும் ஏற்று குட்டுத் தழும்புடன் அந்தத் தலத்திலேயே அமர்ந்து விடுகிறார் விநாயகர். ராவணன் கைபட்டு முறுகியதால் பசுவின் காது போல சிவலிங்கத் திருமேனி வளைகிறது. பசுவின் காது போன்ற (கோ-கர்ணம்) வடிவம் கொண்ட அந்த அழகிய கடற்கரையில் அவ்வாறே நிலைபெற்று எம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்வோம் என வானில் சிவபெருமான் தோன்றி ஆசியளிக்கிறார். இப்படியாக கோகர்ணம் ஆத்ம லிங்க ஸ்தலமாகிறது.
இந்தக் கோயிலில் சிவலிங்கத்தை பக்தர்கள் கைகளால் தொட்டு பூஜை செய்யலாம். தென்னிந்தியாவில் ஸ்ரீசைலம் தவிர இத்தகைய தாந்திரீக வழிபாட்டு நெறி புழக்கத்தில் இருக்கும் மற்றொரு பெரிய கோயில் இது ஒன்று தான் என நினைக்கிறேன். கட்டணம் செலுத்தினால் நவதான்ய அபிஷகம் மற்றும் பூஜைக்கான பொருட்களை கோயிலிலேயே தருகிறார்கள். அர்ச்சகர்கள் மிகுந்த சிரத்தையுடன் சங்கல்பமும் பூஜையும் செய்து வைக்கிறார்கள். கருவறையில் கீழே பதித்த பீடம் போன்ற அமைப்பில் உள்ள குழிக்குக் கீழே லிங்க ரூபம் இருக்கிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நூறு நூறு கைகளுடன் இணைந்து நாமும் அபிஷேகமும் பூஜையும் செய்கிறோம். விதவிதமான குரல்களில் கூச்சல்களில் சிவ நாமம் கருவறையெங்கும் எதிரொலிக்கிறது. உடனடியாக அலங்காரங்கள் கலைந்து அடுத்த அபிஷேகம்! மற்றொரு சன்னிதியில் தாம்ர கௌரி என்ற திருநாமத்துடன் கைகளில் ஈசனுக்கு சூட்டுவதற்கான மாலையோடு தேவி தரிசனம் தருகிறாள். விநாயகரும் தனிக் கோயிலில் அருள் பாலிக்கிறார்.
கடற்கரையில் வெயில் சுட்டெரிக்கிறது. எனவே தரிசனத்தை முடித்துக் கொண்டு கடைவீதியில் உலாத்துகிறோம். பை ரெஸ்டாரெண்ட் என்ற சிறிய, சுத்தமான உணவகத்தில் எண்ணெய்க் கத்திரிக்காய் கறி, தேங்காய் அரைத்த குழம்புடன் சாப்பாடு மிகச் சுவையாக இருக்கிறது. அன்னாசிப் பழ லஸ்ஸியும் அசத்தலாக இருக்கிறது.
கடற்கரைச் சாலையில் மீண்டும் பயணிக்கிறோம். வழியெங்கும் தென்னை மரங்கள் செறிந்த கடற்கரையின் விளிம்புகளும், காயல்களும், சிறு வாய்க்கால்களும் தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மாலை வெயில் தாழும் நேரம் முருடேஷ்வர் வந்து சேர்கிறோம். முருடேஷ்வரும் சிறிய ஊர் தான். சமீபகாலங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக ஆகியிருக்கிறது.
நீண்ட கடற்கரை. பயணிகள் வட்டமடிக்கும் இடத்திலிருந்து விலகி சிறு தூரம் நடந்து சென்று அமைதியான இடத்தில் அமர, அந்தி வானச் சூரியன் கடலைத் தழுவும் காட்சி நெஞ்சை அள்ளுகிறது. அமைதிக்குப் பங்கமில்லாமல் மெதுவாகப் பறக்கும் கடற்பறவைகள். சற்றுத் தொலைவில் கந்துக கிரி மலைமீது அமைந்த கம்பீரமான சிவபிரானின் திருவுருவம் இங்கிருந்தே தெரிகிறது. மற்றொரு புறம் தூரத்தில் தொடுவானத்தைத் தீண்டிய படி மேற்குத் தொடர்ச்சி மலைகள் கோட்டோவியம் போலக் காண்கின்றன. இருள் கவியும் வரை அந்தக் காட்சியில் மூழ்கி ரசிக்கிறோம். இரவொளியிலும் சிவபெருமான் ஜாஜ்வல்யமாக சுடர் விடுகிறார். சிவாலயம் உள்ள பகுதியைச் சுற்றிலும் அழகான மின் விளக்குகளால் நேர்த்தியாக அலங்கரித்திருக்கிறார்கள். கடற்கரையின் பின்னணியில் அது ஓர் இனிய காட்சியாக விரிகிறது. அலைகளின் இசை கனவோடு கலந்து வர, கடற்கரைக்கு அருகிலேயே உள்ள விடுதியில் கண்ணயர்கிறோம்.
கடற்காகங்களின் கரைதலுடன் மறுநாள் காலை தொடங்குகிறது. வங்கக் கடலைப் போன்று சீறிப் பாயும் அலைகள் முருடேஷ்வரில் வருவதில்லை. ஒன்றையே பற்றிக் கொண்டு கொந்தளிப்புகள் அடங்கிய நிச்சலமான மனம் போல, அலைகளற்ற கடல் இது. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் கடலுக்குள் காலார நடந்து செல்ல முடிகிறது. புத்துணர்வூட்டும் அனுபவம்.
ராவணன் கொணர்ந்த ஆத்ம லிங்கேஸ்வரரின் கதை இங்கும் தொடர்கிறது. சிவலிங்கம் கோகர்ணத்தில் நிலைபெற்று விட்டது. கோபம் அடங்காத ராவணன் லிங்கம் இருந்த பூஜைப் பெட்டியை வீசி எறிய, அது சஜ்ஜேஸ்வரத்தில் சென்று விழுந்தது. அதன் மூடி இப்புறம் குணேஸ்வரத்தில் விழுந்தது. அதன் மீது சுற்றியிருந்த நூல்கயிறு தென்புறம் தாரேஸ்வரத்தில் சென்றது. லிங்கத்தின் மீதிருந்த வஸ்திரத்தைத் தூக்கி எறிய அது கந்துக கிரியின் மேல் முருடேஷ்வரத்தில் வந்து விழுந்தது. எனவே மேற்குக் கடற்கரையில் இந்த ஐந்து இடங்களுமே ஆத்ம லிங்க ஸ்தலங்களாக அறியப் படுகின்றன. ஐந்து கோயில்களும் சுமார் 70 கிமீ தொலைவுக்குள் உள்ளன.
முருடேஷ்வரத்தின் சிறிய பழைய கோயில் பழுதடைந்து விட்டதால், 1970களில் தமிழக ஸ்தபிகளின் கைவண்ணத்தில் முற்றிலும் புதியதாகக் கட்டப் பட்டிருக்கிறது. 250 அடி உயரம் உள்ள ராஜகோபுரம் இருபுறமும் சரிவில்லாமல் நெட்டுக் குத்தாக பிரம்மாண்டமாக நிற்கிறது. இதன் உச்சி வரை லிஃப்டில் ஏறிச்சென்று பார்க்க வசதி செய்துள்ளார்கள். கோயிலுக்குப் பின்புறம் மலையில் நிறுவப் பட்டுள்ள 121 அடி உயரமுள்ள சிவபெருமானின் சிலை இந்தத் தலத்தின் அடையாளமாகவே ஆகியிருக்கிறது. மூலஸ்தானத்தில் சுவாமிக்கு முகலிங்க கவசம் சாத்தியிருக்கிறார்கள். உருண்டையான திருமுகத்தில் முறுக்கு மீசை பொலிய தரிசனம் தருகிறார் முருடேஷ்வரர். கோயில் மிகத் தூய்மையாக, நேர்த்தியாக பராமரிக்கப் படுகிறது. ஸ்தல புராணக் கதையை வண்ணச் சிற்பங்களாக ஒரு குகை போன்ற அரங்கில் செய்து வைத்திருக்கிறார்கள். சிற்பங்கள் மிக அழகாக கலை நயத்துடன் வடிக்கப் பட்டுள்ளன. கந்துக கிரி மலை மீதிருந்து தெரியும் கடல் காட்சியும் அற்புதமாக இருக்கிறது.
முருடேஷ்வரிலிருந்து இன்னும் தெற்கு நோக்கி அதே கடற்கரைச் சாலையில் பயணிக்கிறோம். சிறிது தொலைவிலேயே பத்கல் (Bhatkal) என்ற ஊர் வருகிறது. இந்தியன் முஜாகிதீன் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தூண்களான Riyaz Bhatkal உள்ளிட்ட குற்றவாளிகளின் பிறப்பிடம் என்பதால் செய்திகளில் அடிபட்ட ஊர் இது. உ.பியின் அஜம்கர், தமிழகத்தின் மேலப்பாளையம் போல கர்நாடகத்தில் உள்ள ஜிகாதி பயங்கரவாத உற்பத்தி சாலையாக சமீபகாலங்களில் இந்த ஊர் ஆகிவிட்டிருக்கிறது. கடல் வழியாக பாகிஸ்தானிய தொடர்புகளும் இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகப் படுகின்றனர். கோவாவிலிருந்து கொச்சி, திருவனந்தபுரம் வரையில் மேற்குக் கடற்கரையின் பல இடங்களில் இஸ்லாமிய ஆதிக்க அரசியலும் அடிப்படைவாதமும் வளர்ந்து வருகின்றன என்பது கவலைக்குரிய விஷயம்.
வழியில் அகநாசினி நதி (குற்றங்களை அழிப்பவள் என்று பொருள்) வருகிறது. மாரவந்தே என்ற இடத்தில் கடற்கரை, நதி, நெடுஞ்சாலை என மூன்றும் அடுத்தடுத்து உள்ளன. அங்கு வண்டியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் அந்த இயற்கை எழிலை ஆற அமர ரசித்து விட்டுக் கிளம்புகிறோம்.
அடுத்த இடமான சிருங்கேரிக்கு செல்வதற்கு கடற்கரைச் சாலையிலிருந்து விலகி, தென்கிழக்காக மலைக் காட்டுப் பாதையில் பயணிக்க வேண்டும். மளே நாடு என்றழைக்கப் படும் இந்தப் பகுதியில் வருடத்தில் பெரும்பகுதி மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தியாவிலேயே சிரபுஞ்சிக்கு அடுத்து அதிகம் மழை பெய்யும் பகுதி. இது டிசம்பர் மாதம் என்பதால் மழை இல்லை. அதனால் இருபுறமும் அடர்ந்த காடுகளின் பசுமையை கண்களால் தெளிவாகப் பருகிக் கொண்டு மலைக் காற்றின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டு செல்கிறோம். வாகனப் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்ததால் அந்தப் பின்பகல் நேரத்திலும் காட்டின் ஓசைகளைக் கேட்க முடிகிறது.
வழியில் சங்கர நாராயணா என்ற சிற்றூர் வருகிறது. ஊருக்குப் பெயரளித்தது அங்குள்ள புராதனமான சங்கர நாராயணர் திருக்கோயில். கருவறையில் சிவனும் விஷ்ணுவும் இரண்டு லிங்கங்களாக கீழே ஜல பிரதிஷ்டையில் இருக்க, அதன் பின் சங்கர நாராயணர் திருவுருவம் மிளிர்கிறது. பழைய கோயிலை எடுத்துக் கட்டி மிக நேர்த்தியாக கலைநயத்துடன் அண்மையில் சீரமைத்திருக்கிறார்கள். வண்ணத் தட்டைகளாக பெயிண்ட் அப்பாத கருஞ்சாம்பல் நிற சிமெண்ட் சிற்பங்கள் கண்ணுக்கு இனியதாக இருக்கின்றன.
கோயிலுக்கு எதிரில் அழகான குளம். தென்னை மரங்களின் சலசலப்பு மட்டுமே கேட்கும் அமைதியான மாலைப் பொழுது. தெப்பக் குளப் படிக்கட்டுகளில் அமர்ந்து கொள்கிறேன். ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தமிழ்நாட்டின் சங்கரன்கோயில் என்ற ஊரிலும் இதே போல சங்கர நாராயணர் அருள்பாலிக்கிறார். என்ன ஒரு அபூர்வமான ஒற்றுமை என்ற எண்ணம் தோன்றுகிறது. நீரில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் மீன்கள் வாரியிறைத்த பொரித்துகள்களை விழுங்கி விட்டு ஒரு சுற்று நீந்தி விட்டுத் திரும்பி வந்து மீண்டும் எதிர்பார்ப்புடன் விழிகளை அசைக்கின்றன. தங்கள் சிறிய வாய்களைத் திறந்து திறந்து அழகு காட்டி விட்டுப் போகின்றன. குளத்து நீரின் மெல்லிய அசைவுகளில் வானத்தின் நீலம் மெதுமெதுவாகக் கரைகிறது.
புகைப்படங்கள்:
https://picasaweb.google.com/100629301604501469762/MurudeshwaraShankaraNarayanaDec2013Trip
(பயணம் தொடரும்)
கோகர்ணா சுற்றி வெளிநாட்டு பயணிகள் , முருடேஷ்வர் சுற்றி (கோவில் பின்புறம் இல்ல விடுதி சேர்த்து) முஸ்லிம்களின் கூட்டம் — நான் பார்த்தது
அந்த கோபுரம் தான்….பார்பதற்கு அட்டகாசமாக இருந்தாலும் கட்டுமானத்துறை விதிகளுக்குள் அடங்காத மாதிரி இருக்கு.
\\ கால்களால் பயனென்
கறைகண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களால் பயனென் \\
பல வருஷங்கள் முன் கண்டஸ்தமான தேவாரப்பாமாலை. தற்போது முழுதும் நினைவிலில்லை. மேற்கண்ட பகுதியை வாசித்து நினைத்து நினைத்து மண்டையைக் குடைந்து குடைந்து நினைவில் கொணர்ந்தது மிகுந்த மன நிறைவைத் தந்தது.
கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை,
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ
கடல்நஞ்சுண்ட கண்டன்
கடற்கரையின் பின்னே
காணாத கண்களும்
கண்கள் தாமோ
என்று ஸ்ரீமான் ஜடாயு கேழ்க்கிறாரோ
ம்……. மிக அருமையான திருவங்கப் பாமாலை. தலையும், கண்களும், செவிகளும், மூக்கும், வாயும், நெஞ்சும், கைகளும் கால்களும் நமக்கு எதற்கு. இவையனைத்தையும் நமக்களித்த சிவபரம்பொருளைத் துதிப்பதற்கே.
ஸ்ரீ முத்துகுமாரஸ்வாமி மஹாசயர், ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயர் போன்றோர் யாரேனும் இதற்கு அழகான விரிவுரையை ஒரு வ்யாசமாக சமர்ப்பித்தால் வாசகர்கள் அனைவரும் பயனுறுவர் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களது க்ருதியும் மதுரை மணி ஐயரின் பாடலும் கருணை நிலவு பொழியும் வதனமுடைய காபாலியின் அழகைப் பாடியுள்ளது என்றால் – ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் பகிர்ந்துள்ள படம் அதை அப்படியே சித்திரமாக வடித்துள்ளது என்றால் மிகையாகாது.
பாடல் :-
காபாலி காபாலி காபாலி காபாலி
கருணை நிலவு பொழி வதன மதியனொரு காபாலி
ஆபால கோபாலம் ஆழிசூழ் தலத்தவரும்
பூபாலரும் அட்டதிக் பாலரும் போற்றும் அற்புத காபாலி
கருணை நிலவு பொழி வதன மதியனொரு காபாலி
மதி புனல் அரவு கொன்றை தும்பை அருகு
மத்தை புனை மாசடையான்
விதி தலை மாலை மார்பை உரித்த கரிய
வெம்புலியின் தோலுடையான்
அதிர முழங்கும் உடுக்கையும் திரிசூலமும்
அங்கியும் குரங்கமும் இலங்கிடும் கையான்
துதி மிகு திருமேனி முழுதும் சாம்பல்
துலங்க, எதிர் மங்கையர் மனம் கவர் ஜகன் மோகன
சிவபெருமானுரை கையிலயங்கிரி வெண்மை; சிவபெருமானும் வெண்மை நிறத்தோன். பூசிய நீறு வெண்மை. அவன் தலையில் சூடும் புஷ்பம் வெண்மையான தும்பைப் புஷ்பம். அவன் சிரஸில் பொலிவுடன் அணிவது மதியெனும் சந்த்ரகலை.
கோகர்ண சமுத்ரக்கரையில் கருணைநிலவு பொழில் வதனமொடு பளீரென ச்வேத வர்ணமொடு காட்சி தருகிறான் பெருமான்.
இவனது திருமுகத்தின் ப்ரதிபலிப்பு தானோ என்னவோ பின்னால் இருக்கும் நீலக்கடலும் நீலமேகமும் கூட பளீரென பெருமானின் வெண்மையை உள்வாங்கி ஒன்றுடனொன்று போட்டி போட்டு வெண்மையையே வீசுகிறது போலும்
பச்சைமாமலைபோல் மேனி பவளவாய்க்கமலச்செங்கண் அச்சுதன் இக்கண்கொள்ளாக் காட்சியை பரந்து விரிந்த புற்கூட்டங்களாக ஆயிரக்கணக்கான கண்களால் இமைகொட்டாது பார்க்கிறான் போலும்
காபாலி — எதிர் மங்கையர் மனம் கவர்பவன் மட்டிலுமல்லன்
ஆபால கோபாலம் ஆழிசூழ் தலத்தவரும் பூபாலரும் அட்டதிக் பாலரும் – இவையனைத்தவரின் மனம் கவர்பவனாகவே இருக்க வேண்டும்.
காபாலி.
https://www.youtube.com/watch?v=1E-zobWXdiE
தலையே நீ வணங்காய் – சாதாரி பண் – பந்துவராளி?
NEAR PUDUKKOTTAI, THERE IS ONE THIRUKOKARNAM. WHAT IS THE SPECIALITY OF THAT PLACE?
ஐயா நான் இதுவரை கண்டதில்லை இக்கோயிலை….
உங்களது காட்சி அனுபவம் அப்படியே எழுத்துக்களில் வரலாற்றோடு பிரதிபலிப்பதால் …
நானும் நேரிடையாக கண்ட தன்யனானேன்….
உணர்வுடன் பயணம் பலருக்கும் உண்டு, ஆனால் அதை வார்த்தைகளால் கண்முன் கொண்டு வந்தது பாரட்டுக்குரியது. நன்றி