மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

vyasa_ganapatiறைந்த மலையாள சினிமா சாதனையாளர் ஏ.கே. லோஹிததாஸ் (லோகி) ஒரு முறை சொன்னாராம் – உலகின் இது வரை எழுதப்பட்ட, எழுதப்படப் போகிற எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம், மகாபாரதத்தில் தேடிப் பார்த்தால் அந்தக் கதைக்கான மூலம் கிடைக்கும் என்று சொன்னாராம். அவரிடம் யாரோ பதிலுக்கு நீங்கள் திரைக்கதை எழுதி பெருவெற்றி பெற்ற கிரீடம் திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு அதுதான்யா அர்ஜுனன்/அபிமன்யு கதை என்று சொன்னாராம். நான் அவரோடு முழுமையாக ஒத்துப் போகிறேன். தேடிப் பார்த்தால் மகாபாரதத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் கூடக் கிடைக்கும். (அர்ஜுனனின் சாகசங்கள்!)

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். ராமாயணம் கூட அருகே வரமுடியாது. இந்த முடிவு அதில் எல்லாக் கதைகளும் இருக்கிறது, அதனால் அது தலை சிறந்த இலக்கியம் என்ற தர்க்கபூர்வமான முடிவு அல்ல. தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்.

மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக் கட்டுரை. சில வருஷங்களுக்கு முன்னால் என் தளத்தில் இப்படி ஒரு முயற்சியை எடுத்தேன். இந்தக் கட்டுரை அதன் நீட்சியே. இந்திய/ஹிந்து பண்பாட்டில் தீவிரமான பற்று கொண்ட இந்தத் தளத்தின் வாசகர்கள் விட்டுப் போன பலவற்றை எடுத்துச் சொல்லி இந்த முயற்சியை இன்னும் கொஞ்சம் முழுமை பெறச் செய்வார்கள் என்ற ஆசையும் ஒரு பக்கம் இருக்கிறது.

இங்கே நான் குறிப்பிட்டிருக்கும் ஆங்கில/தமிழ் படைப்புகள் அனேகமாக நான் பார்த்தவை/படித்தவை. அவற்றைப் பற்றி என் கருத்தை இந்தத் தளத்தில் முடிந்த வரையில் தவிர்க்கவே விரும்புகிறேன். இது ஒரு பட்டியல் போடும் முயற்சி, அவ்வளவுதான். என் மூலக் கட்டுரையில் இவற்றில் பலவற்றைப் பற்றி ஓரிரு வரிகளில் என் எண்ணங்களையும் எழுதி இருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் தமிழ் ஹிந்து தளத்தின் ஹிந்துத்துவ அரசியல் சிந்தனைகளை மறுத்து இங்கே எதிர்வினை புரியும் எனக்கும் இந்தத் தளத்துக்கும் என்ன பந்தம் இருக்கிறது, எது வரை எண்ணங்கள் இசைந்து போகின்றன என்பதும் இதைப் படிப்பவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அதுவும் ஒரு bonus.

ஆரம்பப் புள்ளிகள்:

ராஜாஜியின் மகாபாரதம் (வியாசர் விருந்து) – இதை விட சிறந்த சுருக்கத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பதின்ம வயதினர் இங்கிலிருந்து ஆரம்பிக்கலாம். தமிழ்/ஆங்கிலம் இரண்டிலும் கிடைக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில் தமிழகத்தைத் தாண்டியும் இந்த மொழிபெயர்ப்பு பிரபலமாக இருக்கிறது. துக்ளக்கில் தொடராக வந்த சோவின் மகாபாரதம் பேசுகிறது இன்னும் அதிகமாக விவரங்களை கொண்டிருந்தாலும் அதுவும் ஒரு ஆரம்பப் புள்ளியே.  இவை இரண்டின் அளவுக்கு பிரபலம் இல்லாவிட்டாலும் நா. பார்த்தசாரதி எழுதிய அறத்தின் குரல் இன்னொரு நல்ல அறிமுகம். பாரதியின் பாஞ்சாலி சபதம் கவிதைக்கும் சரி, பாரதத்துக்கும் சரி, நல்ல ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

ACKMahabharata3in1Editionதமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல் இருக்கும் பதின்ம வயதுத் தமிழர்கள் இன்று சர்வ சாதாரணம். அவர்களுக்கு ஆர்.கே. நாராயண் ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் மகாபாரதா நல்ல அறிமுகமாக இருக்கக் கூடும். நான் குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் வலுவாகப் பரிந்துரைப்பது அமர் சித்ரா கதா காமிக்ஸ். பெரியவர்களும் படிக்க ஏற்ற ஒன்று. எல்லா இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.

சுபாஷ் மஜூம்தார் எழுதிய Who Is Who in Mahabharatha மற்றும் தேவதத் பட்நாயக் எழுதிய ஜயம் (விகடன் பிரசுரம்) இரண்டையும் எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கிறார்.

பல தொலைக்காட்சித் தொடர்கள் வந்துவிட்டாலும் (வந்து கொண்டிருந்தாலும்) பி.ஆர். சோப்ரா இயக்கிய தொடரே seminal மற்றும் iconic தொடர். சில சமயங்களில் வேண்டுமென்றே இழுப்பது தெரிந்தாலும், பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. இன்றும் பதின்ம வயதினருக்கு நல்ல ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

அடுத்த கட்டம்:

  • கமலா சுப்ரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் அதிக விவரங்கள் உள்ள புத்தகம்.

  • கிசாரி மோஹன் கங்குலி 1800களின் இறுதியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Sacred Texts தளத்தில் கிடைக்கிறது. மொழி கொஞ்சம் பழையதாகிவிட்டாலும் படிக்க முடியும்.

  • கிசாரி மோஹனின் மொழிபெயர்ப்பை தமிழில் அருட்செல்வப் பேரரசன் என்பவர் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். இதுவும் இணையத்தில் கிடைக்கிறது.

  • ம.வீ. ராமானுஜாசாரியாரின் கும்பகோணம் பதிப்பு – மறுபதிப்பு வரப் போகிறது. பாரதத்தில் விருப்பம் உள்ளவர்கள் இந்த முயற்சியை கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும், புத்தகத்தைப் படிக்கிறீர்களோ இல்லையோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்!

  • 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வில்லிபாரதம். பிற மொழிகளில் பாரதம் மொழிபெயர்க்கப்படும்போது கதையின் போக்கு மாறாது, ஆனால் பாத்திரங்களில் சின்னச் சின்ன மாற்றங்கள் தெரியும். இதுவும் அப்படித்தான். நான் முழுமையாகப் படித்த ஒரே காவியம் இதுவே. (பித்து!) சிறு வயதில் கிராமங்களில் மழை பெய்யாதபோது இதிலிருந்து விராட பர்வம் வாசிப்பார்கள் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

  • பெருந்தேவனார் மகாபாரதம். பெருந்தேவனாருக்கு “பாரதம் பாடிய” பெருந்தேவனார் என்று அடைமொழியே உண்டு. இது முழுமையாகக் கிடைக்கவில்லை. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. படிப்பவர்கள் யாருக்காவது மேல்விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

  • நல்லாப்பிள்ளை பாரதம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1888?) எழுதப்பட்ட இந்த புத்தகம் இப்போது மீண்டும் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.

  • பண்டார்கர் ஆய்வு மையத்தின் critical edition

ma_vee_ramanujacharyar_mahabharatha

பிற இந்திய மொழிகளில், காவியமாக:

இந்திய மொழிகளில் பொதுவாக ராமாயணமே பாரதத்தை விட அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ராமாயண மொழிபெயர்ப்பு பாரத மொழிபெயர்ப்பை விட காலத்தால் முற்பட்டதாக இருக்கும். பாரத மொழிபெயர்ப்புகள் பல முறை முழுமையாக இருக்காது. குறிப்பாக பாரதப் போருக்குப் பிற்பட்ட பர்வங்கள் விட்டுப்போக நிறைய வாய்ப்பு உண்டு. கீழே எனக்குத் தெரிந்த வரை பிற இந்திய மொழிகளில் காவிய முயற்சிகளைக் கொடுத்திருக்கிறேன். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இணைப்புகளையும் கொடுத்திருக்கிறேன். குறிப்பாக விக்கி இணைப்புகள் மிகவும் சுவாரசியமனவை, உங்களை அங்கிருந்து வேறு பல சுட்டிகளுக்குக் கொண்டு செல்லக் கூடியவை.

  • 2, 3ஆம் நூற்றாண்டுகள் – பாசர் சமஸ்கிருதத்தில் உருபங்கம் நாடகத்தை எழுதினார்.  காவலம் நாராயணப் பணிக்கர் இதை மலையாளத்தில் மீண்டும் நாடகமாக தெய்யம் பாணியில் உருவாக்கி இருக்கிறார். மத்யம வ்யாயோகா, கர்ணபாரா, தூத கடோத்கஜா பாசரின் பிற மஹாபாரத நாடகங்களாகத் தெரிகின்றன. பாசரின் காலம் சரியாகத் தெரியவில்ல, தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

  • பத்தாம் நூற்றாண்டு – கன்னட மொழியின் ஆதிகவி என்று புகழப்படும் பம்பா பம்ப பாரதத்தை விக்ரமார்ஜுன விஜயா இயற்றினார்.

  • 10, 11-ஆம் நூற்றாண்டுகள் – ஜாவனீஸ் மொழியில் மகாபாரதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இன்றும் இந்தோநேசியாவில் ஹிந்து பாரம்பர்யம் இருப்பது தெரிந்ததே. ககவின் என்று அழைக்கப்படும் நீண்ட கவிதை வடிவில் இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அர்ஜுன விவாஹ, கிருஷ்ணாயணா, பாரத யுத்தா, கடோத்கஜஸ்ரய, அர்ஜுன விஜய என்று சில ககவின்களின் பேர்கள் தெரிகின்றன.

  • 10, 11-ஆம் நூற்றாண்டுகள் – சாளுக்கிய அரசவைக் கவியும் கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்பட்டவருமான ரன்னா கதா யுத்தாவை எழுதினார். வீர ரசம் பொங்கும் காவியமான இது பீம-துரியோதன யுத்தத்தை விவரிக்கிறது.

  • 12,13,14ஆம் நூற்றாண்டுகள் – தெலுகு மொழியின் ஆதிகவி என்று கொண்டாடப்படும் நன்னய்யா, மற்றும் திக்கண்ணா, எர்ரப்ரகடா (எர்ரண்ணா) மூவரும் எழுதிய ஆந்திர மஹாபாரதமு. நன்னய்யா கீழைச் சாளுக்கிய வம்ச அரசனான ராஜராஜ நரேந்திரனின் வேண்டுகோளால் பாரதத்தை தெலுகில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். மூன்றில் ஒரு பகுதியை அவரும் மிச்ச பகுதிகளை அவருக்குப் பின்னால் வந்த திக்கண்ணா (13ஆம் நூற்றாண்டு), மற்றும் எர்ரப்ரகடாவும் (14ஆம் நூற்றாண்டு) மொழிபெயர்த்தனர். இந்த முயற்சி கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக நடந்திருக்கிறது.

  • பதினான்காம் நூற்றாண்டு – அஸ்ஸாமிய மொழியில் ஹரிவர விப்ரா பப்ருவாஹனர் யுத்தாவை எழுதினார்.

  • 14, 15ஆம் நூற்றாண்டுகள் – துளு மொழியில் முதல் காவியம்/புத்தகம் என்று கருதப்படும் துளு மஹாபாரதோ அருணப்ஜாவால் இயற்றப்பட்டது. காலம் எனக்கு துல்லியமாகத் தெரியவில்லை.

  • பதினைந்தாம் நூற்றாண்டு (1430 வாக்கில்) – விஜயநகர அரசர்களின் ஆதரவு பெற்ற குமார வியாசரால் கன்னடத்தின் தலை சிறந்த மஹாபாரதமாகப் புகழப்படும் கர்நாட பாரத கதாமஞ்சரி இயற்றப்பட்டது. பீமன் துரியோதனனை வதைப்பதோடு இந்த முயற்சி நிறைவு பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக கவிஞர் லக்‌ஷ்மீசா “ஜைமினி பாரதம்” எழுதினார் (அஸ்வமேத பர்வம்). ஜைமினி பாரதத்தின் காலம் பதினாறாம் நூற்றாண்டாக இருக்கலாம், எனக்கு சரியாகத் தெரியவில்லை.

  • பதினைந்தாம் நூற்றாண்டு – ஒரிய மொழியில் சரளதாஸர் தன் சரளபாரதத்தை எழுதினார்.

  • பதினாறாம் நூற்றாண்டு – கொங்கணி இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் கிருஷ்ணராஜ் ஷாமா கொங்கணியில் மொழிபெயர்த்தார். இவர் ராமாயணத்தையும் மொழிபெயர்த்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை.

  • பதினேழாம் நூற்றாண்டு (1620-1640)- மராத்தியில் ராமாயணத்தை மொழிபெயர்த்த சன்த் ஏக்நாத்தின் பேரரான முக்டேஷ்வர் ஓவி-பாரதத்தை எழுதினார்.

  • பதினெட்டாம் நூற்றாண்டு – மராத்தியில் மோரோபந்த் ஆர்ய பாரதத்தை இயற்றினார்.

  • பதினெட்டாம் நூற்றாண்டு – மணிபுரியில் அங்கொம் கோபி  பாரதத்தை மொழிபெயர்த்தார். இவர் ராமாயணத்தையும் மொழிபெயர்த்தாகத் தெரிகிறது.

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் மலையாளத்தில் கொடுங்காளூர் குஞ்சிக்குட்டன் தம்புரான்  மொழிபெயத்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளிலேயே இதை அவர் முடித்தது பெரும் சாதனையாக மலையாள இலக்கியத்தில் கொண்டாடபபடுகிறது.1952-இல் ராம்தாரி சிங் “தின்கர்” தன் புகழ் பெற்ற ராஷ்மிரதி என்ற காவியத்தை ஹிந்தியில் எழுதினார். தின்கரின் ரசிகர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயியும் ஒருவர் என்பது தமிழ் ஹிந்து வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

mahabharata_manuscript

கிளைக்கதைகள்:

மறுவாசிப்புகள் (கிளைக்கதைகள் உட்பட):

abhimanyu-in-mahabharata

தமிழில் மறுவாசிப்புகள்:

  • எஸ். ராமகிருஷ்ணனின் நாவல் – உபபாண்டவம்

  • இந்திரா பார்த்தசாரதியின் நாவல் – கிருஷ்ணா கிருஷ்ணா

  • ஈழ எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் – கதாகாலம்

  • எம்.வி. வெங்கட்ராமின் நாவல் – நித்யகன்னி

  • எம்.வி. வெங்கட்ராமின் “மஹாபாரதப் பெண்கள்”

  • பி.எஸ். ராமையாவின் நாடகம் – தேரோட்டி மகன்

  • ஜெயமோகன் நாடகம் – பதுமை

  • ஜெயமோகன் நாடகம் – வடக்கு முகம் பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6 (பீஷ்மர்-அம்பை உறவு)

  • பாலகுமாரன் குறுநாவல் – பெண்ணாசை (பீஷ்மர் கதையை ஜாதியை வைத்து மறு வாசிப்பு செய்திருக்கிறார்)

  • பாலகுமாரன் குறுநாவல் – தனிமைத் தவம் (கீசக வதம்)

  • பாலகுமாரன் குறுநாவல் – கடவுள் வீடு (விதுரனின் கதை)

  • பாலகுமாரன் குறுநாவல் – கிருஷ்ண அர்ஜுனன் (கிருஷ்ணன் ஒரு கந்தர்வனின் தலையை தன காலடியில் வீழ்த்துவதாக சபதம் செய்ய அவனைக் காப்பாற்றுவதாக அர்ஜுனன் வாக்கு கொடுத்துவிட்டு கிருஷ்ணனோடு போர் புரிவதாக கதை)

  • ஜெயமோகன் சிறுகதை – களம்

  • ஜெயமோகன் சிறுகதை – நதிக்கரையில்

  • ஜெயமோகன் சிறுகதை – அதர்வம் (திரௌபதி பிறக்க செய்யப்பட்ட யாகம்)

  • ஜெயமோகன் சிறுகதை – திசைகளின் நடுவே (சார்வாகன்)

  • ஜெயமோகன் சிறுகதை – பத்ம வியூகம் (அபிமன்யுவும் அவன் கொன்ற பிருஹத்பலனும் மீண்டும் பிறப்பதாக கதை)

  • ஜெயமோகன் சிறுகதை – விரித்த கரங்களில்

  • ஜெயமோகன் சிறுகதை – இறுதி விஷம் (ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. எரிந்துகொண்டிருக்கும் பாம்புகளை மனிதனின் கிரியா சக்தியாக உருவகிக்கிறார்.)

  • ராமச்சந்திரன் உஷா சிறுகதை – “அவள் பத்தினி ஆனாள்” (காந்தாரி கண்ணை கட்டிக்கொண்டது எதற்கு என்று யோசிக்கிறார்)

  • என் சிறுகதை – துரோண கீதை

  • என் சிறுகதை இன்னொன்று – கிருஷ்ணனைப் பிடிக்காதவன்

  • ஜெயமோகன் கட்டுரைகள்: தருமன், மகாபாரதம் – கேள்வி பதில், மகாபாரதப் போர் முறைகள், மகாபாரதம் – ராமாயணம் ஒப்பீடு

  • ஜெயமோகன் கட்டுரைகள்: பகவத்கீதை – பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6

  • எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரை:  “மகாபாரதத்தைப் படிப்பது எப்படி?

  • எஸ்.ரா. பரிந்துரைக்கும் புத்தகங்களில் சிலவற்றை நான் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. இவை:

    • Mahabharata with commentary of Nilakantha (Gopal Narayan & Co, Bombay)

    • டாக்டர் பி. லாலின் கவிதை நடை மொழிபெயர்ப்பு

    • Gender and Narrative in the Mahabharata, Brodbeck & B. Black (ed): Routledge

    • Reflections and Variations on the Mahabharatha – T.R.S. Sharma, Sahitya Academy

    • Great Golden Sacrifice of the Mahabharata – Maggi Lidchi Grassi

    • Rethinking the Mahabharata: A Reader’s Guide to the Education fo the Dharma King by Alf Hiltebeitel

    • The Questionable Historiciy of the Mahabharata by S.S.N. Murthy

  • ஜெயமோகன் தி.ஜானகிராமன் ஒரு கதை எழுதி இருப்பதாகவும், கதையின் பேர் நினைவில்லை என்றும் ஒரு சமயம் சொன்னார். ஜரா என்ற வேடன் அம்பால் முடிவுறும் ஸ்ரீகிருஷ்ணனின் இறுதி கணங்கள் குறித்து பாலகுமாரன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார் என்று ஜடாயு குறிப்பிட்டிருந்தார். பாலகுமாரன் கர்ணன் பற்றியும் ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார், பேர் மறந்துவிட்டது. நினைவிருப்பவர்கள் சொல்லுங்கள்!

  • இன்று (ஜனவரி 1, 2014) ஜெயமோகன் தளத்தில் பாரதத்தை மறுவாசிப்பு செய்து பல நாவல்களாக எழுதப் போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. முதல் நாவலின் – வெண்முரசு – முதல் அத்தியாயம் இங்கே. அவருக்கு வாழ்த்துக்கள்!

மகாபாரத திரைப்படங்கள்:

mayabazaar12

  • அபிமன்யு (1948) ஏ. காசிலிங்கம் இயக்கி எம்.எஸ். குமரேசன் (அபிமன்யு), நரசிம்ம பாரதி (கிருஷ்ணன்), எம்ஜிஆர் (அர்ஜுனன்) நடித்தது. இதற்கு கருணாநிதிதான் வசனம் எழுதினாராம், ஆனால் ஏ.எஸ்.ஏ. சாமி வசனம் என்றுதான் டைட்டில். சுப்பையா நாயுடு இசை. நாயுடுவுக்கு ஒரு சிச்சுவேஷனுக்கு மெட்டு சரியாக வரவில்லையாம். அங்கே அப்போது ஆஃபீஸ் பாயாக வேலை பார்த்த எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட மெட்டு நாயுடு பேரில் வெளிவந்ததாம். எம்எஸ்வியின் முதல் பாட்டு! – புது வசந்தமாமே வாழ்விலே

  • மாயா பஜார்(1957) – தமிழ்+தெலுகு

  • நர்த்தனசாலா (1963) – தெலுகு. என்.டி. ராமாராவ், எஸ்.வி. ரங்காராவ் சாவித்திரி நடித்த படம் – கீசக வதம் கதை. கீசகனாக ரங்காராவின் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் புகழப்பட்டது.

  • கர்ணன் (1964) – சிவாஜி கணேசன் நடித்து பி.ஆர். பந்துலு இயக்கியது.

  • பப்ருவாஹனா (1964) – தெலுகு. என்.டி. ராமாரவ் நடித்தது.

  • பாண்டவ வனவாசம் (1965) – தெலுகு

  • வீர அபிமன்யு (1965) – புகழ் பெற்ற பார்த்தேன் சிரித்தேன் பாட்டு இந்தப் படத்தில்தான். ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா, நாகேஷ் நடித்தது.

  • ஸ்ரீகிருஷ்ண பாண்டவீயம் (1966) – தெலுகு. என்.டி. ராமாராவ் இயக்கி நடித்தது.

  • பாலபாரதம் (1972) – தெலுகு

  • தான வீர சூர கர்ணா (1977) –  தெலுகு. என்.டி. ராமாராவ் இயக்கி நடித்தது.

  • குருக்ஷேத்ரமு (1977)- தெலுகு. கிருஷ்ணா, ஷோபன் பாபு நடித்தது.

  • பப்ருவாஹனா (1977) – கன்னடம். ராஜ்குமார் நடித்தது.

  • கல்யுக் (1981) – ஹிந்தி. ஷ்யாம் பெனகல் இயக்கத்தில் சஷி கபூர், ரேகா, அனந்த் நாக் நடித்தது

  • தளபதி (1988) – மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அர்விந்த் ஸ்வாமி நடித்தது.

நாடகம்:

mahabharata_img

தெருக்கூத்துக்கள்:

  • ஆரவல்லி நாடகம்

  • தர்ம புத்திர நாடகம்

  • அல்லி நாடகம்

  • சுபத்திரை கல்யாணம்

  • 17ஆம் 18ஆம் நாள் போர்

  • கர்ண நாடகம்

இன்னும் பல “நாட்டார்” கதைகளின் மூலம் எது என்று கூட எனக்குத் தெரியவில்லை. உதாரணமாக சசிரேகா பரிணயம் (மாயாபஜார் என்று திரைப்படமாக வந்தது – இது இந்தோநேசியா வரை பரவி இருக்கிறதாம்), கடோத்கஜன் மகனான பார்பாரிகாவின் கதை, அரவான் கூவாகம் கூத்தாண்டவரான விதம், அல்லிக்கும் பவளக்கொடிக்கும் சித்ராங்கதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், அல்லியின் மகன் புலந்திரன் கதை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தொலைந்து போன புத்தகங்களும் நிறைய உண்டு.  பல்லவர் காலத்திலும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் பாரதம் தமிழ்ப்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது. எனக்கு விவரங்கள் தெரியவில்லை.

பாரதத்தைப் பற்றி எழுத, பேச, விவாதிக்க இன்னும் எத்தனையோ இருக்கிறது. கட்டுரையின் நீளம் அதிகரித்துக் கொண்டே போவதால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.

40 Replies to “மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்”

  1. திரு ஆர் வி அவர்களுக்கு நமது பணிவான நன்றிகளும், பாராட்டுக்களும். இவ்வளவு விஷயங்களை தொகுத்தளித்தமைக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

  2. சில உதிரி நாடகங்களால் மட்டும் ஆனதல்ல தெருக்கூத்து. முழு மகாபாரதமும் கதை சொல்லலாகவும், கூத்தாகவும், சடங்குகளாகவும் ஒரு மாத கால அளவுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பாரதக்கூத்தாக நிகழ்த்தப்படுகிறது. கோடைகாலத்தில் நிகழும் அத்தனை கிராமங்களிலும் நிகழும் பாரதக்கூத்தினை கணக்கில் கொண்டால் வருடம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாரதக்கூத்தில் பங்கேற்கிறார்கள். இந்த பாரதக்கூத்து மரபினை தமிழில் அறிவுநம்பி, மு.ராமசாமி ஆகியோரும் ஆங்கிலத்தில் Richard Frasca, Alf Hiltebeitel, Hanne De Bruin மற்றும் என்னால் ஆராய்ச்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தமரபினைப் பற்றி பல ஆவணப்படங்களும் வெளிவந்துள்ளன. அவற்றில் சஷிகாந்த் இயக்கிய ‘கேளாய் திரௌபதி’, ‘நினைவின் நகரம்’ ஆகியன பாரதக்கூத்து மரபின் எல்லா அம்சங்களையும் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளையோ, ஆராய்ச்சியாளர்களையோ குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாரதக்கூத்து முழு மகாபாரதத்தையும் நிகழ்த்துவது என்பதைச் சொல்வது அவசியமாகும்.
    ந.முத்துசாமியின் நாடகங்களும் கட்டுரைகளும் இந்தக் கட்டுரையில் முக்கியமான விடுபடல்கள்.
    நல்லாப்பிள்ளை பாரதம் இரண்டு பாகங்களாக இரா.சீனிவாசனால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. பதிப்பு முகவரி: இரா.சீனிவாசன், 12, புதுத்தெரு விநாயகபுரம், அம்பத்தூர், சென்னை 600053

  3. அருமையான, ஆக்கபூர்வமான தகவல்களுடன் கூடிய பதிவு. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

  4. பாரதியின் பாஞ்சாலி சபதம் பட்டியலில் இல்லையே.

  5. எனக்குத் தெரிந்து புத்தகங்கள் பட்டியலில் ஒரு முக்கிய புத்தகம் விடு பட்டிருக்கிறது.
    ஸ்ரீ அஹோபில மடம் நடத்தும் ஸ்ரீ ந்ருசிம்ஹா பிரியா என்னும் மாதப் பத்திரிக்கையில் 80, 90 களில் மூல மகாபாரதத்திலிருந்து மொழிபெயர்ப்பு வந்தது.இதை வித்வான்கள் திருக்கள்ளம் நரசிம்ஹ ராகவாச்சாரியார் மற்றும் புரிசை கிருஷ்ணமாச்சாரியார் மொழி பெயர்த்தனர். இது பல பாகங்களாக இன்றும் நரசிம்ஹப்பிரியா அலுவகத்தில் கிடைக்கிறது.

  6. ஸ்வாமி சித்பவானந்தரின் பாரதம் சிறுவர்களுக்கானது. எளிமையானது.

  7. சுவாமி சித்பவானந்தரும் ஒரு சுருக்கம் கொடுத்துள்ளார்

  8. இப்போது மீண்டும் வந்து படித்ததில் பிரபல இயக்குநர் ஆன ஜி.வி. ஐயர் அவர்களின் மஹாபாரதத் திரைப்படம் பற்றிய குறிப்பே இல்லை என்பதைக் கண்டு கொண்டேன். அதில் தான் திரெளபதி ஜீவாத்மாவாகவும், பஞ்ச பாண்டவர்கள் பஞ்ச இந்திரியங்களாகவும் சித்திரிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு மனம், ஒரு ஆத்மா இவற்றின் வெளிப்பாடே திரெளபதி ஐவரை மணந்ததற்கான காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும். திரைப்படம் முழுக்க முழுக்க சம்ஸ்கிருதத்தில் (ஆங்கில சப் டைட்டில்களோடு) வந்ததாலோ என்னமோ, அதிகம் விளம்பரம் ஆகவில்லை. என்றாலும் படம் எடுக்கப்பட்டிருந்த விதம் நன்றாகவே இருந்தது. பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

  9. மஹாபாரதத்தின் கதாபாத்திரங்களைக் குறித்துப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. நல்லதொரு சேமிக்கப்பட வேண்டிய பதிவு. மஹாபாரதம் குறித்து எத்தனை பேசினாலும் அலுக்காத ஒன்றும் கூட.

  10. //////ம.வீ. ராமானுஜாசாரியாரின் கும்பகோணம் பதிப்பு – மறுபதிப்பு வரப் போகிறது. பாரதத்தில் விருப்பம் உள்ளவர்கள் இந்த முயற்சியை கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும், புத்தகத்தைப் படிக்கிறீர்களோ இல்லையோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்! //////

    குறைந்த பிரதிகளே அச்சிடப் போவதாக பதிப்பாளர் கூறியுள்ளார். ஆதலால் வெளிவரட்டும். வாங்கிக் கொள்ளலாம் என்று தயவு செய்து தள்ளிப் போடாதீர்கள். தீர்ந்தால் கிடைப்பது மிகவும் கடினம். உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இது போன்ற முன்பதிவுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதன் பின் நிறைய உழைப்பு உள்ளது. நிறைய நேரம் செலவு செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கடராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  11. //பாலகுமாரன் // மேலும் சில (பகுதி 1)

    என்னுயிர் தோழி (கிருஷ்ண பிறப்பு) கண்டிப்பாக படிக்க வேண்டியது
    துளசி

  12. திரு.ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு பதிவுகள், முழுமஹாபாரதப் பதிவுகளைக் கடந்து செல்லும் போது, அப்படிக் கடந்து செல்லும் முழுமஹாபாரதப் பதிவுகளின் பட்டியலைச் சுட்டிக்காட்ட https://mahabharatham.arasan.info/search/label/வெண்முரசு என்ற லிங்கில் ஒரு முயற்சி நடைபெறுகிறது.

    வெண்முரசின் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் வாசகர்கள், அசல் மகாபாரதத்தில் அந்த வரலாறு எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்ற அறிய விரும்பினால், மேற்கண்ட லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

  13. தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது

  14. அருமையானக் கட்டுரை. ஆர்.வி.எத்தனை விவரங்களை தொகுத்துக் கொடுத்திருக்கிறார். பாராட்டுக்கள் – ஆதிரை.

  15. தமிழ் நாட்டார் மரபில் மீள்கூறப்படும் மகாபாரதக் கதைகளை அ.கா.பெருமாளின் ‘அர்ஜுனனின் தமிழ்க் காதலிகள்’ நூலில் இருந்தும் அறியலாம்.

  16. மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி!

    எம்டிஎம், நீங்கள் இந்தப் பதிவை மதித்து பதில் எழுதியது மகிழ்ச்சி! நான் வட மாவட்டத்து கிராமங்களில் வளர்ந்தவர். இங்கே குறிப்பிட்ட கூத்துகளில் சிலவற்றை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான் வளர்ந்த சுற்று வட்டாரத்தில் (செங்கல்பட்டு மாவட்டம்) பாரதக் கதையை முழுதாக நடித்ததில்லை. பதினெட்டாம் நாள் போரே முக்கியமானதாக இருந்தது. ரிச்சர்ட் ஃப்ராஸ்காவின் ஆவணங்களிலும் சில பகுதிகளை நடிப்பார்கள் என்று சொல்லி இருப்பதாகத்தான் நினைவு. படித்து பல வருஷம் ஆகிவிட்டதால் சரியாக நினைவு கூர முடியவில்லை. மேலும் ஃப்ராஸ்காவின் புத்தகம் எழுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன், கடந்த முப்பது வருஷங்களில் இன்னும் எத்தனை மாற்றங்களோ தெரியாது. என்னை விட தெருக்கூத்து பற்றி அதிகம் தெரிந்த நீங்கள் பாரதம் முழுதாக நடிக்கப்படுகிறது என்று சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான், ஆனால் என் நினைவு, வாசிப்பு, அனுபவம் வேறாக இருக்கிறது என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

    கிருஷ்ணமூர்த்தி, ஆரம்பப் புள்ளிகளிலேயே பாஞ்சாலி சபதம் குறிப்பிடப்படுகிற்தே!

    விவசாயி/துளசி, என்னுயிர்த்தோழியை நானும் படித்திருக்கிறேன். விட்டுப்போய்விட்டது.

    ஜி.வி. ஐயரின் திரைப்படம், சித்பவானந்தர் மற்றும் நரசிம்மப்ரியா முயற்சிகள் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. மேல்விவரங்கள் தந்தால் இந்தப் பதிவிலேயோ அல்லது இரண்டாம் பாகமாகவோ சேர்த்து விடுகிறேன்.

  17. Peter brooks mahabaratham is one of the kind expressed from the western understanding may be it also give a good perception of the epic. can be referred here ? 🙂

  18. அன்புள்ள எம்டிம், ந. முத்துசாமியின் படைப்புகளில் படுகளம் மட்டுமே நான் கேள்விப்பட்டிருப்பது. விட்டுப்போய்விட்டது. வேறு ஏதாவது நினைவிருந்தாலும் சொல்லுங்கள்…

  19. அன்புள்ள ஆர்வி, வணக்கம். ஆவணப்படுத்தும் உங்கள் முயற்சி முக்கியமானது. கிருஷ்ணன் – வேடன் தொடர்பான பாலகுமாரனின் சிறுகதை இந்தியா டுடே இதழில் வெளிவந்தது. கதையின் பெயர் விடாது பெய்த மழை. மகாபாரதக் களத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழிலேயே எழுதப்பட்ட இன்னொரு நாவல் ‘கிருஷ்ணன் என்றொரு மானுடன்’ சமீபத்தில்தான் வெளிவந்தது. ஆசிரியர் ஜீவகாருண்யன். இந்த வார திண்ணை இணைய இதழில் இதற்கொரு அறிமுகக்கட்டுரையை வளவ.துரையன் எழுதியிருக்கிறார்.
    அன்புடன்
    பாவண்ணன்

  20. தொடர்ந்து பயணத்தில் இருப்பதால் விரிவாக எதிர்வினை ஆற்ற இயலவில்லை. சிறப்பான கட்டுரைக்கு நன்றி. இந்துத்துவ சிந்தனை கொண்டதுதான் இந்த தளம். ஆனால் இந்துத்துவத்துக்கு எதிர் எண்ணம் கருத்தியல் கொண்டவர்களின் கருத்துகளுக்கும் ஆக்கங்களுக்கும் இந்த தளம் இடமும் மதிப்பும் கொடுத்து உரையாடவில்லை எனில் அது தன் இந்துத்துவ தன்மையை இழந்துவிடும். ஆர்.வி. திரு.முத்துகுமாரசாமி போன்றவர்களின் எதிர்வினைகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்த தளத்தின் இன்றியமையாத தேவைகள்.

  21. விட்டுப்போன இன்னும் இரண்டு காவியங்கள்:
    பாரவியின் கிராதார்ஜுனீயம் (ஆறாம் நூற்றாண்டு?) – https://en.wikipedia.org/wiki/Kirātārjunīya
    மாக எழுதிய சிசுபால வதம் (ஏழாம் நூற்றாண்டு?) – https://en.wikipedia.org/wiki/Shishupala_Vadha

    பாவண்ணன், அ.நீ, உங்கள் பாராட்டுகளுக்கும் மேல் விவரங்களுக்கும் நன்றி!

    ஸ்ரீதர் நாராயணன், பரம்பதம் நாடகத்தை ரசித்துப் படித்தேன்.

    ஹரி வெங்கட், அ.கா. பெருமாளின் புத்தகத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி!

  22. vellore maavattaththil 5 varusam dinasari thodarnthu mahabharatham pesugiravargal undu; adiyen thiruchirappalliyil 18 days sevasangam girls schoolil vhp rbvs manianjee koandu mahaabhradha thodar sorpozivu yerpaadu ceithullen; 044 24321008 thodarbu koandu mahabharadha ceithigalai theriyaatha ceithigalai kandippaga therinthu kollalaam

  23. ஓம் ஸ்ரீ முருகன் துணை

    அன்புள்ள நண்பர் திரு ஆர் .வி வணக்கம்,

    மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல் பார்த்தேன் -நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நன்றி.

    சுவாமி சித்பவானந்தரின்-மகாபாரதம் -மிக மிக எளியத் தமிழ், பக்தி நிரம்பியது. இதையும் பட்டியலில் சேர்க்கவும்.

    கவிஞர் வாலியின் -பாண்டவர் பூமியும் போற்றுவதற்கு உரியது அதையும் பட்டியலில் சேர்க்கவும்.

    உங்கள் வலைதளத்தின் ரசிகன் நான்.

    ராமன் மனித குலத்தின் மாபெரும் குல விளக்கு எனக்கு பிடித்த படைப்பு, உங்கள் பணி சிறக்க வாத்துக்கள்
    நன்றி
    வாழ்க வளமுடன்

    அன்புள்ள
    ஆர்.மாணிக்கவேல்

  24. இந்தத் தொகுப்பு மிக நல்ல முயற்சி ஆர்வி.
    ஒரு தகவல் மட்டும். எம்.டி. வாசுதேவன் நாயரின் மலையாள நாவல் – ரண்டாமூழம் தமிழிலும் ‘இரண்டாம் இடம்’என்ற பெயரில் குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.சரளமான ஓட்டத்துடன் கூடிய ஆக்கம்.

  25. மிக அற்புதமான கட்டுரை, ஆச்சர்ய ஸ்ரீ மத்வரின் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் , மாத்வர்களால் மகாபாரதமகவே கருதப்படுகிறது
    தயவு செய்து இதையும் பட்டியலில் இணைக்கவும்.

  26. மீண்டும் மீண்டும் பலவாறாக எழுதிபார்க்கும் அமைப்பையும், வசதியையும், உள்ளடக்கத்தையும் கொண்டது பாரதம். இதில் கூறப்பட்டுள்ளதில் பெரும்பாலனவற்றை படித்ததில்லை என்பதில் கொஞ்சம் வருத்தம்தான். தி.ஜா ராமாயணத்தை வைத்து ஒரு கதை எழுதியிருக்கின்றார், பாரதத்தை வைத்துமா? அவரது முழுத்தொகுதியிலும் தேடிப்பார்த்துவிட்டேன், கண்ணில் படவில்லை. ஆர்.வி ஒரு மகாபாரத்ப்பிரியர் என்று தெரியும், அவர் ஒரு பாரத வெறியர் என்று தெரிந்துகொண்டேன். கொஞ்சம் பொறாமையும் சேர்ந்தே.

  27. கண்ணதாசன் மகாதேவி திரைப்படத்தில் அபிமன்யுவின் மரணத்தை பற்றி ஒரு அற்புதமான பாடல் எழுதியிருப்பார், அதைகேட்டால் கண்ணதாசன் முழு பாரதத்தையும் அவர் மொழியில் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் நமக்கு வரும்.அதே போல் மகாகவி பாரதியாரும் முழு பாரதத்தையும் எழுதியிருக்கலாம்.

  28. other tamil bharatam works (by)
    Aranganaatha kavirayar Bharatham (Aranganaatha kavirayar)
    Athiparuvathaadi Paruvam (Ambalathuaaduvamayaar)
    Bharata Saaravenba (Perumal swami)
    Bharata venba (Bharata venba paadiya perunthevanaar)
    Mahaavindam (perundevanaar)

  29. பட்டியலுக்கு நன்றி .
    ஆனால் சில நேரங்களில் “மறு வாசிப்பு ” என்று சொல்லபடுவது மூல நூலின் மூலக்கருத்துக்கு 180 டிக்ரீ எதிராக மட்டுமே போகும் ஒரு வித வக்கிரம் என்பது நவீன கால நியாயமாக உள்ளது.
    உதாரணம் த்ரௌபதி பஞ்ச பாண்டவரை தவிர கர்ணன், மற்றும் கிருஷ்ணரையும் விரும்பியதாக உள்ள ஒரு ஆங்கில “மறு வாசிப்பு “[ ஸ்ரீமதி சித்ரா பனெர்ஜி என்று நினைக்கிறேன்]
    IPR [ INTELLECTUAL PROPERTY RIGHTS] என்பதன் படி தனது கற்பனையில் உதித்த கதைகளை கவனமாக காப்பாற்றும் நவீன எழுத்தாளர்கள் , தன் ஒரு நாவலை வேறொருவர் “மீள் வாசிப்பு” செய்து கதையை முற்றிலும் மாற்றினால் என் செய்வர் என்பது ஒரு பெரும் கேள்வி.
    ராமாயணம் , பாரதம் இவை முறையே வால்மீகி மற்றும் வியாசர் மட்டும் எழுதியது அல்ல என்ற வாதம் பலருக்கு மிக உதவுகிறது.
    சாய்

  30. Dear Sir

    PK.Balakrishnan’s Ini njan Urangatte novel available in tamil. i would like buy that book. is it possible to share with me who tranlslate, which publication, where is it available??

    thanks
    bala
    Mobile 9843389185
    chemsubbu@gmail.com

  31. Dear Writer,

    Please add the authors who has written Bashyams on Mahabharatha, namingly “Sri Madhwacharya’s Mahabharatha bashya and tatparya nirnaya”

  32. RV,

    மன்னிக்கவும். நான் லேட் விசிட்டர்…

    வலைத்தளம் தந்திருக்கும் கொடை உங்கள் தளம்.
    அற்புதமான பணி உங்களுடையது.
    அதுவும் இந்த தொகுப்பு அபாரம்…
    புதையல்களை தேடித்தேடி எடுத்துத் தருகிறீர்கள்… மிக்க நன்றி.

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

    -காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *