அறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்

loganathan_organ_donarமீபத்தில் சென்ன்னையில் லோகநாதன் என்பவர் விபத்தில் மரணம் அடைந்தவுடன் அவரது இருதயம். கண் ஆகிய உடல் பாகங்கள் தானமாக அளிக்கப் பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தப் பட்டுள்ளன. தானம் கொடுக்க ஒத்துக் கொண்ட லோகநாதனின் தாயார் போற்றுதலுக்குரியவர். அவரது பாகங்களை உடனடியாக சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு விரைவாக எடுத்துச் சென்ற டிராஃபிக் போலீசாரும் டிரைவரும் பாராட்டுக்குரியவர்கள். சந்தேகம் இல்லை. மிகவும் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம், மனித நேயத்தை சில நிமிடங்களுக்காவது உணர்த்திய ஒரு சம்பவம். பாராட்டுக்கள். மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்ட நோயாளி பிழைத்து வாழ பிரார்த்தனைகள்.

இவை போன்ற விபத்து ஒன்றில் இறக்கும் ஒருவரது இருதயத்தை இன்னொருவருக்கு பொருத்துவது குறித்தான ஒரு சுவாரசியமான அருமையான திரைப்படம் 21 கிராம்ஸ். 21 கிராம்ஸ், பேபல், அமோரஸ் பெரொஸ் என்று பட்டாம் பூச்சி விளைவை வைத்து எடுக்கப் பட்ட முத்தொடர் சினிமாக்கள் அவை. பார்த்திராதவர்கள் அவசியம் 3 படங்களையுமே காணவும். அதில் 21 கிராம்ஸின் கதையை மட்டுமே வைத்து மலையாளத்தில் ஒரு டஜன் படங்கள் எடுத்து விட்டார்கள். இந்தியாவின் நெரிசலான குண்டு குழிகள் நிறைந்த சாலைகளின் வழியாக ஒரு இருதயத்தை குறைந்த பட்ச நேரத்தில் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வது ஒரு சாகசம் தான். பாராட்டப் பட வேண்டிய உயிர் காக்கும் சாகச நிகழ்வுதான் சந்தேகமேயில்லை. ஆனால் அந்த சாகசம் தேவையா என்பதே என் கேள்வி.

ஏன் சாலை வழியாக இந்த அதி முக்கியமான உயிர் காக்கும் மாற்று இருதயம் எடுத்துச் செல்லப் பட வேண்டும்?

ஏன் அரசாங்க மருத்துவமனைகளிலும் பிற உயர் தர மருத்துவ மனைகளிலும் உயிர் காக்கும் ஏர் ஆம்புலன்ஸ்கள் எனப்படும் ஹெலிக்காப்ட்டர் ஆம்புலன்ஸ்கள் உபயோகப் படுத்தப் படுவதில்லை?

அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் பிரசாரங்களுக்கு நவீன ஹெலிக்காப்டர்களை தாராளமாக பயன் படுத்திக் கொள்ளும் பொழுது மக்களின் உயிர் காக்க ஒரு சில ஹெலிக்காப்டர்கள் ஏன் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பயன் படுத்தப் படுவதில்லை?

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் கொல்லப் படுவது சாலை விபத்துகளில் தான். பெரும்பாலும் விபத்து நடக்கும் இடங்களில் இருந்து அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் செல்ல நேரம் ஆகும் காரணத்தினாலேயே பெரும்பான்மையான விபத்துக்குள்ளான மக்கள் கொல்லப் படுகிறார்கள். இறக்க நேருகிறது. ஏன் சாலை விபத்துகளில் அடிபடுபவர்கள் உடனடியாக வான் வழியாக மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லும் வசதி அறிமுகப் படுத்தப் படவில்லை?

heart_transplant_surgery_adventure_1

பிற நாடுகளில் சிக்கலான இடங்களில் விபத்துக்குள்ளாகும் மக்களை சாலை வழியாக ஆம்புலன்ஸை உடனடியாக அனுப்ப முடியாத நிலையில் வான்வழியாகவே அவர்களை மருத்துவமனைகளுக்கு உடனடி சிகிச்சைக்குக் கொண்டு செல்கிறார்கள். நான் ஒரு முறை சாண்ட்டா க்ரூஸ் செல்லும் சி ஏ 17 மலைச் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு விட்டது. அந்த மலைச்சாலையில் ஏற்கனவே அதிக நெரிசல் இருந்தது. அங்கிருந்து பாதிக்கப் பட்டவர்களை சாலை வழியாக உடனடியாக அகற்றுவது முடியாததாக இருந்தது. உடனடியாக சில நிமிடங்களில் ஒரு ஹெலிக்காப்ட்டர் ஆம்புலன்ஸ் எங்கிருந்தோ பறந்து வந்தது. காரில் அடிபட்டிருந்த பயணிகள் உடனடியாக அங்கிருந்து மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்கள். அவர்கள் அனேகமாக பிழைத்திருப்பார்கள். இதை அங்கு ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருந்த நான் பார்த்திருக்கிறேன்.

அமெரிக்க மருத்துவ மனைகளில் ஹெலிப்பாடுகள் உண்டு. தயார் நிலையில் ஹெலிக்காப்டர்களும் உண்டு. ஜெயலலிதாவின் பிரசாரத்திற்காக பஸ் ஸ்டாண்ட் இல்லாத குக்கிராமங்களிலும் கூட ஹெலி பாடுகள் அமைக்கப் பட்டன. ஜெயலலிதா அரசின் ஒரே சாதனை ஊர் ஊருக்கு ஹெலிப்பாடுகள் அமைத்ததாக மட்டுமே இருக்கும். அப்படி ஒரு அரசியல்வாதியின் தேர்தல் பிரசாரத்திற்காக ஊர் ஊருக்கு ஹெலிப்பாடுகள் அமைக்க முடிந்த அரசாங்கத்தினால் ஏன் மாவட்டத் தலைநகர்களில் இருக்கும் மருத்துவமனைகளில் எல்லாம் ஒரு ஹெலிக்காப்டரையும் ஹெலிப்பாடையும் நிறுவ முடியவில்லை?

சென்னையில் அன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து அடையாறுக்கு சில நிமிடங்களில் எந்தவிதமான பதட்டமும் இன்றி வான் வழியாக ஒரு ஹெலிக்காப்ட்டர் மூலமாக லோகநாதனின் இருதயத்தைக் கொண்டு சென்றிருக்கலாமே?

தேவையில்லாமல் ஏன் இவ்வளவு சிரமப் பட்டு இவ்வளவு ரிஸ்க் எடுத்து சாலை வழியாகக் கொண்டு செல்வானேன்? ஏன் நமது அதிகாரிகளும் அரசாங்கமும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிக்க மறுக்கிறார்கள்?

இவை போன்ற உயிர் இழந்த சில நிமிடங்களுக்குள் இருதயம் போன்ற பாகங்களைக் கொண்டு செல்ல எல்லா நேரங்களிலும் நகரத்தின் நெரிசலான ட்ராஃபிக்கை நிறுத்துவது என்பது கடவுளால் கூட முடியாத காரியம். வான்வழியாகக் கொண்டு செல்லதே பாதுகாப்பானதும் விரைவானதாகவும் இருக்க முடியும். இவை போன்ற விபத்துகளும் உயிர் காக்கும் சிகிச்சைகளும் தினம் தோறும் நிகழ்பவைதான். இவற்றுக்கான தேவைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

ஆகவே தமிழ் நாட்டின் மாண்பு மிகு அம்மா ஓசிக்கு இட்லி, தோசை, பிரியாணி போடுவதுடன் தனக்கு வைத்திருப்பது போன்ற சில பல ஹெலிக்காப்ட்டர்களை அப்பாவி மக்களின் உயிர் காக்கவும் வாங்கிக் பயன் படுத்த வேண்டும். செய்வார்களா? செய்வார்களா?

இதை அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சில நகரங்களிலாவது பயன் படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்த்தன் அவர்களுக்கும் நான் பரிந்துரைக்கிறேன்.

சாகசம் செய்து உயிர் காப்பதை விட சமயோதிடமாக யோசித்து உயிர் காப்பதே சிறந்தது. அரசாங்கம் செய்யும் வீண் செலவுகளை ஒப்பிடும் பொழுது இந்த ஹெலிக்காப்டர்களுக்கு ஆகும் செலவு ஒரு பொருட்டாக இருக்கப் போவதில்லை. ஆகவே சாகசங்களை விளையாட்டில் மட்டும் வைத்துக் கொண்டு மனித உயிர் காக்க புத்திசாலித்தனாக செயல் பட வேண்டும் அரசாங்கங்கள். இதை நடைமுறைக்குக் கொணர்வதில் சிக்கல்கள் இருக்கும் என்றால் அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டு பிடித்து பயன் படுத்த வேண்டும். சாலைப் போக்குவரத்தை நிறுத்தி அதி வேகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டி சாகசம் செய்வது உயிர் காக்கும் தீர்வு அல்ல.

(ச. திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

4 Replies to “அறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்”

  1. புத்திசாலித்தனமாகச் சிந்திந்தால் அரசியல் லாபம் பார்க்க முடியாதே!

  2. ஹெலிகாப்டர் லோடை இப்போது இருக்கும் கட்டடங்களில் எத்தனைக் கட்டடம் தாங்கும்? ஹெலிகாப்டர் எடை மட்டும் அல்ல, ஏறும்போதும், இறங்கும்போதும் ஏற்படும் உந்துதல் சக்தியையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

    ஆடிக் காத்து வராமலே
    ஆடி அடங்கும் கட்டடங்களை
    வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

    எல்லாமே ..
    பில்டிங் ஸ்ட்ராங்கு …
    பௌண்டேஷன்தான் வீக்கு ..

  3. அற்புதமான யோசனை. இதெல்லாம் அம்மா தி.மு.க காரர்களுக்கோ நமது அரசு அதிகாரிகளுக்கோ வந்தால்தான் ஆச்சர்யம் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *