எப்படிப் பாடினரோ தொடரின் மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம்.
சங்கீத விற்பன்னரும், தாளக்கட்டுகளில் தலை சிறந்தவரும், சாக்ஷாத் காமாட்சி அன்னையுடன் நேரடியாகப் பேசக்கூடியவர் என்று புகழப்பட்டவருமான ஸ்யாமா சாஸ்திரிகள் உள்ளத்தில் அன்று ஒரு சிறு கலக்கம். அதுவரை அவர் பாடியெதெல்லாம் அன்னையின் அருட்கருணையைக் கருதித்தான். அரசர்கள் கொடுப்பதாகச் சொன்ன சன்மானங்களைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை. பங்காரு காமாட்சியின் நித்தியப் பூஜை, உணர்வுகள் பெருக்கெடுக்கும் போதெல்லாம் அவளைப் போற்றிப் பாடுவது என்று சென்றுகொண்டிருந்த அவர் வாழ்க்கையில் தஞ்சையின் தலைசிறந்த வித்வான்கள் பலர் குழப்பத்தை உண்டுபண்ணிவிட்டனர்.
திருவிளையாடல் புராணத்தில் வரும் ஹேமநாத பாகவதரின் கதை நமக்கெல்லாம் தெரிந்ததே. கர்வத்தோடு பாண்டிய நாட்டிற்கு வந்து, அங்குள்ள பாடகர்களை வென்று அவர்களை அடிமையாக்கிக்கொள்ள ஹேமநாதர் முனைந்ததும், பக்திப்பாடல்கள் பாடும் பாணபத்திரர் அவருடன் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இறைவனே விறகுவெட்டியாக வந்து ஹேமநாதரின் கர்வத்தைப் போக்கியதுமான அந்தத் திருவிளையாடலைப் போன்ற ஒரு சம்பவம் ஸ்யாமா சாஸ்திரிகள் வாழ்விலும் நடந்தது. பொப்பிலி என்ற ஊரிலிருந்து தமிழக யாத்திரை செய்த கேசவய்யா என்ற பாடகர் பல சமஸ்தானங்களுக்குச் சென்று அங்குள்ள பாடகர்களை வென்று அவர்களின் தம்பூராவைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை பாடவிடாமல் செய்து வந்தார். சிறந்த பல வித்வான்கள் தஞ்சையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு வந்த அவரை எதிர்க்க பல வித்வான்கள் தயங்கினார். வெற்றிக்கொடி பறக்கக் காட்சியளித்த அவரது தம்புராவும் அவரது வித்வத்தும் பாடகர்களைப் பயமுறுத்தின. அவரை எதிர்க்கச் சரியானவர் ஸ்யாமா சாஸ்திரிகள்தான் என்று முடிவு செய்த அவர்கள், அவரைச் சந்தித்து தஞ்சையின் மானத்தைக் காக்க கேசவய்யாவுடன் போட்டியிடுமாறு வற்புறுத்தினர். அரசர்கள் சம்பந்தம் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தாலும், தஞ்சையின் மானத்தைக் காக்க அந்தப் போட்டிக்கு ஒத்துக்கொண்டார் ஸ்யாமா சாஸ்திரிகள்.
அவர்கள் சென்றதும், பூஜைக்காக காமாட்சியின் முன் அமர்ந்த சாஸ்திரிகள் உள்ளக்கிடக்கை அபூர்வமான சிந்தாமணி ராக க்ருதியாக உருவெடுத்தது.
தேவீப்ரோவ ஸமய(மி)தே அதிவேகமே வச்சி
நா வெதலு தீர்சி கருணிஞ்சவே ஸங்கரீ காமாக்ஷி
தாயே, இதுதான் (என்னை) காக்கத் தருணம்
அதிவேகமாக வந்து (காப்பாயாக)
எனது வேதனைகளைத் தீர்த்து கருணைசெய்வாய்
என்று தொடங்கி,
லோகஜனனீ நாபை தய லேதா
நீ தாஸுடுகாதா ஸ்ரீகாஞ்சி விஹாரிணி கல்யாணி
ஏகாம்ரேஸ்வருனி ப்ரியபாமாயை (யு)ன்ன
நீகேமம்மா எந்தோ பாரமா வினுமா நா தல்லீ
உலகையீன்றவளே என் மீது தயை இல்லையா
(நான்) உன் தாஸன் அல்லவா காஞ்சியில் உறைபவளே, கல்யாணி
ஏகாம்பரரின் ப்ரியமான இல்லாளே
உனக்கு அவ்வளவு சுமைகளா, என் (குறையைக்) கேள்
என்றெல்லாம் இறைஞ்சினார். மறுநாள் போட்டியில் யார் வெற்றிபெற்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
எம்.எஸ். அவர்களின் குரலில் அந்த சாகித்யத்தை இங்கே கேட்கலாம்
அவருடைய சமகாலத்தவர்களான தியாகராஜர் போலவோ, முத்துஸ்வாமி தீக்ஷிதர் போலவோ ஸ்யாமா சாஸ்திரிகள் அதிகம் பிரயாணம் செய்தவரில்லை. பங்காரு காமாட்சியை விட்டுப் பிரியாமல் இருக்கவேண்டும் என்ற அவாவும், அம்பிகைக்குச் செய்யவேண்டிய நித்தியப் பூஜைக் கடமைகளுமே அவரை பயணங்களிலிருந்து நிறுத்தியிருக்கவேண்டும். அப்படியும் சிற்சில சமயங்களில் தஞ்சையை விட்டு பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்தது. ஒருமுறை புதுக்கோட்டை சென்று அங்கு ப்ருஹந்நாயகியை வழிபட்டுக்கொண்டிருந்த சமயம், யாரோ ஒருவர் அவரிடம் மதுரை சென்று அங்கு மீனாக்ஷியைப் பற்றி பாடும்படி வற்புறுத்தினார். இறைவியின் கட்டளையாக அதைக் கருதிய ஸ்யாமா சாஸ்திரிகள், மதுரை சென்று அன்னை மீனாக்ஷியின் மீது நவரத்ன மாலிகா க்ருதிகளை இயற்றினார். அங்குள்ள ஆலய அதிகாரிகளுக்கும் பட்டர்களுக்கும் அவருடைய இசை ஞானத்தை அறியாதவர்கள். யாரோ ஒரு பக்தர் பாடுகிறார் என்றெண்ணி சும்மா இருந்துவிட்டனர். நவரத்ன மாலிகா க்ருதிகளில் ஒன்றான ‘மாயம்மா’ என்ற ஆஹிரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை மனமுருகப் பாடினார் சாஸ்திரிகள்.
மாயம்மா யனிநே பிலசிதே
மாட்லாட ராதா நாதோ அம்பா
“அம்மா என்று நான் அழைக்கிறேனே. பேசக்கூடாதா என்னுடன்”
என்று ஆரம்பித்து
ஸரஸிஜ பவ ஹரிஹரநுத ஸு–லலித
நீ பத பங்கஜமுல
ஸ்திர(ம)னி நம்மிதி நம்மிதி நம்மிதினி
(பிரம்மாவாகிய) கமலத்தின் உறைவோனும், ஹரியும் ஹரனும் போற்றும் லலிதாம்பிகையே
உன் பாதகமலங்களையே உறுதியாக நம்பினேன், நம்பினேன், நம்பினேனே
உன்னையே நம்பியிருக்கும் என்மீது கருணை காட்டுவாயாக என்ற பொருளில் பாடினார். மும்முறை ‘நம்பினேன்’ என்று சொல்வதின் மூலம் அம்பிகையின்மேல் அவர் வைத்த அசையாத நம்பிக்கை புலப்படுகிறது. உள்ளத்தை உருக்கும் அப்பாடலைக் கேட்டு அங்கிருப்போர் மட்டுமல்ல அம்பிகையே மனமுருகியிருக்க வேண்டும். அப்போது ஆலய பட்டர்களுள் ஒருவருக்குச் சந்நதம் வந்து, சாஸ்திரிகளுக்கு உரிய மரியாதைகளை செய்யுமாறு அவர்வாய் மொழியால் உத்தரவு பிறந்ததாகவும் அதன் பின் ஆலய மரியாதைகளைச் செய்வித்து ஸ்யாமா சாஸ்திரிகள் கௌரவிக்கப்பட்டதாகவும் கூறுவர்.
இந்தக் கீர்த்தனையை நித்யஸ்ரீ அவர்களின் குரலில் இங்கு கேட்கலாம்.
சாஸ்திரிகளின் கீர்த்தனைகள் பக்திச் சுவை நிரம்பியவை. சக்தி உபாசகரான அவரின் பெரும்பாலான கீர்த்தனைகள் அம்பாளைக் குறித்தே, அதிலும் அவரின் பூஜ்ய தேவதையான பங்காரு காமாட்சியைக் குறித்தே அமைந்தவை. பாவத்தோடு அமைந்த அக்கீர்த்தனைகள் அம்பிகையிடம் பேசுவதுபோல் அமைந்து, அவளில் அருட்கருணையை வேண்டுபவை. அம்பாளின் முன் த்யான நிலையில் அமர்ந்தபோது அவருடைய உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடியவையே அவருடைய சாகித்யங்கள். முத்துஸ்வாமி தீட்சதருக்கு ஸ்ரீவித்யா உபாசனையை அளித்தவரும் அவரே. அவருடைய இயற்பெயரான வேங்கடசுப்பிரமணியம் என்பது மறைந்து செல்லப்பெயரான ஸ்யாமக்ருஷ்ணன் என்ற பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. அப்பெயரையே தனது கீர்த்தனைகளின் முத்திரையாகவும் அவர் பயன்படுத்தினார். இது ஒருபுறம் இருந்தாலும், அவரது கீர்த்தனைகள் நுட்பமான தாளக் கணக்குடன் அமைந்தவை. குறிப்பாக, மிஸ்ர சாபு தாளத்தை அவர் அசாதாரணமான முறையில் கையாண்டிருக்கிறார். இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது.
அதிகம் பயன்படுத்தப்படாத அபூர்வ ராகங்களில் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார் சாஸ்திரிகள். கலகடா ராகத்தில் பார்வதி நினு என்ற கீர்த்தனை அவற்றில் ஒன்று. அதில்
கீர்வாணவந்திதபதஸாரஸ
ஸங்கீதலோலேஸுகுணஜாலேஜாலமேலேகாமாக்ஷி
தேவர்கள் தொழும் திருவடியினளே, சங்கீதப் ப்ரியே, நற்குணங்கள் பொருந்தியவளே, (எனைக்காக்க) தாமதம் ஏனோ காமாக்ஷி என்று அன்னையைப் பலவாறு துதிக்கிறார். திஸ்ர நடையிலுள்ள ஆதிதாளத்தில் அமைந்த பாடல் இது.
இந்தப் பாடலை அம்பிகாபுரம் சிவராமன் அவர்கள் குரலில் இங்கு கேட்கலாம்.
அதே போன்று, கௌளிபந்து ராகத்தில் தமிழில் அமைந்த ‘தருணமிதம்மா’ என்ற கீர்த்தனை. என் வாக்கில் உன் நாமத்தைத் தவிர வேறொன்றுமில்லையே. உன்னையே சரணம் என்று நம்பிய என்னைக் காப்பாயாக என்ற பொருளில் அமைந்துள்ளது.
ஆதிசக்தியென்றுபேரெடுத்தாயே
அகிலமும்வர்திக்கஅவதரித்தாயே
சாதகம்போலுன்னைசரணம்புகுந்தேனென்னை
ஆதரிக்கப்பின்னையாருண்டுசொல்லன்னையே
இதில் வரும் அருமையான உவமை மழை நீரைத் தேடியலையும் சாதகப் பறவையாக சாஸ்திரிகள் தம்மை உருவகிப்பது. சாதகப் பறவை மழை நீரை மட்டுமே உண்டு வாழ்வது என்று சொல்லப்படுகிறது. அதுபோன்று அன்னையைத் தவிர வேறு யாரிடமும் சரணடைந்ததில்லை, என்னை ஆதரிக்க வேறு யாருள்ளார் என்று கேட்கிறார் சாஸ்திரிகள்.
சிக்கில் குருசரண் குரலில் இந்தக் கீர்த்தனையை இங்கு கேட்கலாம்.
நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த ஸ்வரஜதியை, செவ்விசை வடிவமாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அவற்றிலுள்ள ஜதி ப்ரயோகங்களை நீக்கி அருமையான ஸ்வரஜதிகளை அவர் இயற்றியிருக்கிறார். அவற்றில் முக்கியமானவை, ரத்ன த்ரயம் என்று அழைக்கப்படும் தோடி ராகம்-ஆதி தாளத்தில் அமைந்த ‘ராவே ஹிமகிரி’, பைரவி ராகம் மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த ‘காமாக்ஷி அம்பா’, யதுகுலகாம்போதி – சாபுதாளத்தில் ‘காமாக்ஷி நீ பாதயுகமே’ ஆகியவை. பிரபலமான பைரவி ராக ஸ்வரஜதியில் எட்டு சரணங்கள் உள்ளன. ஒவ்வொரு சரணமும் ஆரோகண ஸ்வர வரிசையில் அமைந்துள்ளன. அதாவது முதல் சரணம் ‘ஸ’ வில், இரண்டாவது சரணம் ‘ரி’ யில் என்ற முறையில் ஆரம்பித்து எட்டாவது சரணம் மேல்ஸ்தாயி ‘ஸ’ வில் ஆரம்பிக்கிறது. இந்தப் பாடல் அமைந்துள்ள தாளக்கட்டுகளை விவரிக்க ஆரம்பித்தால் அதுவே பல பக்கங்கள் நீண்டுவிடும்.
செம்மங்குடி அவர்களின் குரலில் அந்த ஸ்வர ஜதி இங்கே.
வித்தியாசமான முறையில் தாளங்களை கீர்த்தனைகளை அவர் அமைக்கும் முறைக்கு இரு உதாரணங்களைக் கூறலாம். சாதாரணமாக 3+4 (தகிட தகதிமி) என்ற முறையில் சாபு தாளங்களை அமைப்பதற்குப் பதிலாக ‘விலோம சாபு’ என்ற அமைப்பில் 4+3 ஆக (தகதிமி தகிட) பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ‘மரிவேரே கதி’ என்ற ஆனந்தபைரவி ராகப் பாடல் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு.
டி.எம். கிருஷ்ணாவின் குரலில் அந்த சாகித்யம்
தவிர, அவரது சில கீர்த்தனைகளை இருவிதமான தாளங்களில் பாடும்படியாக அமைத்துள்ளார். உதாரணமாக ‘சங்கரி சங்குரு’ என்ற சாவேரி ராக சாகித்யத்தை ரூபக தாளத்திலும் பாடலாம் ஆதி தாளத்தைக் கொண்டும் (திஸ்ர நடை) சாகித்யத்தின் அழகு கெடாமல் பாடலாம்.
மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் குரலில் அப்பாடல்
இது போன்ற புதிய தாளமுறைகளைக் கையாண்ட சாஸ்திரிகளை ‘தாளப்ரஸ்தார ஸ்யாமா சாஸ்திரிகள்’ என்று அழைப்பதில் வியப்பென்ன?
சங்கீத மும்மூர்த்திகளில் ஸ்யாமா சாஸ்திரிகளின் சாகித்யங்கள் கதலிப் பழத்திற்கு உவமையாகக் கொள்ளப்படுகின்றன. அவற்றை அனுபவிப்பது த்யாகராஜரின் கீர்த்தனைகளைப் (திராட்சை) போல அவ்வளவு எளிதில்லை. அதே சமயம் முத்துஸ்வாமி தீட்சதரின் கீர்த்தனைகளைப் போல் (தேங்காய்) கடினமுமில்லை. வாழைப்பழத்தின் தோலை உரிக்கும் முயற்சியைக் கொண்டே சாஸ்திரிகளின் சாகித்யச் சுவைகளை அனைவரும் அறியலாம். ராக லட்சணங்களும் தாளக்கட்டுகளின் அழகும் எல்லாவற்றிற்கும் மேலாக பக்தி ரசமும் நிரம்பிய இவரது க்ருதிகளை அனுபவிக்க இந்த முயற்சி கூட எடுக்கமாட்டோமா நாம்?
Very useful. what a land is this our Motherland! How many
noble sons and daughters she begot!
பொப்பிலி கேசவையாவை வெல்ல நினைத்து அவர் காமாட்சி மீது பாடியது , அவரது ஒரே தமிழ்ப் பாடலான ” தருணம் இதம்மா , என்னை ரட்சிக்க”
https://www.youtube.com/watch?v=dmhdHhw9Oi4
எங்களுக்கு இவ்வாறுதான் எங்கள் வீட்டில் சொல்லுவார்கள்.
https://www.carnaticcorner.com/articles/ekaraga_krithis.htm
சியாமா சாஸ்திரிகளின் கவித்துவம் பக்தி பற்றிய இக்கட்டுரை போற்றத் தக்கது. நாம் யாரும் அதிகம் அறியாத சாஸ்திரிகளின் பன்முகங்களை பாங்காக எடுத்துக் காட்டுகிறது.
எந்தரோ மகானு பாவுலு அந்தரிகி வந்தனமு – எத்தனை சத்தியமான சொற்கள்.
https://www.thehindu.com/todays-paper/tp-national/article1253106.ece
Read this.
//எந்தரோ மகானு பாவுலு அந்தரிகி வந்தனமு – எத்தனை சத்தியமான சொற்கள்.//
உங்களுக்கு மட்டுமே புரிந்தால் மட்டும் போதுமா? புரியப்போய் சத்தியான சொற்கள் என்கிறீர்கள். இல்லாவிட்டால், அவை வெறும் எழுத்துக்கள் ஒரு புரியா மொழியில்.
//இதனால், தேர்ந்த சங்கீத வித்வான்களால் மட்டுமே அவரது கீர்த்தனைகளை அனுபவிக்கவும் பாடவும் முடிகிறது.//
Honest statement ! Wikipedia reiterates this here:
//He did not have many disciples to propagate his compositions, nor was the printing press an easy convenience during his time. More importantly, the scholarly nature of his compositions was not appealing to the layperson, they needed to be studied to be savoured//
//மதுரை சென்று அன்னை மீனாக்ஷியின் மீது நவரத்ன மாலிகா க்ருதிகளை இயற்றினார். அங்குள்ள ஆலய அதிகாரிகளுக்கும் பட்டர்களுக்கும் அவருடைய இசை ஞானத்தை அறியாதவர்கள். யாரோ ஒரு பக்தர் பாடுகிறார் என்றெண்ணி சும்மா இருந்துவிட்டனர்//
Notable statement. //ஆலய அதிகாரிகளும் பட்டர்களும்//
சாஸ்திரிகள் வாழ்ந்த காலம் 1762-1827. அப்போது இந்துமதம் சிறப்பாக இருந்தது. அந்நியமதங்களோ, பிராமண எதிர்ப்பாளர்களோ பிறக்கவில்லை. ஆயினும் சியாமா சாஸ்திரிகள் பாடியதை எவரும் கேட்கக் கூடவில்லை. அவரின் ஞானத்தையும் அறிய இயலவில்லை. காரணம், தன் இசைக்கு அவர் தேர்ந்தெடுத்த அந்நிய மொழியே. தமிழிலேயே மதுரையில் பாடவில்லை என்பது திண்ணம்.
பாடியிருந்தால், மதுரையில் அவரைப்பற்றிப் பேச்சு பரவியிருக்கும். மக்கள் குழமியிருப்பார்கள். மீனாட்சியைப்பற்றி இவ்வளவு அழகான கீர்த்தனைகளா? அதுவும் இப்படிப்பட்ட இனிமையான குரலிலா? என பட்டிதொட்டியெல்லாம் இவர் புகழ் பரவியிருக்கும். இவர் காலத்திற்குப்பிறகு இவரின் கீர்த்தனைகள் அம்மன் கோயில்களை அலங்கரித்திருக்கும். ஆனால் அவை இன்று இசைப்பண்டிதர்கள் சிலாகித்துக்கொள்ள மட்டுமே பயன்படுகின்றன. சமஸ்கிரிதமும் தெலுங்கும் மக்கள் கூட்டத்தை விரட்டிவிடும். ஆலய அதிகாரிகளும் பட்டர்களுமே இவர் பாடல்களைக்கேட்க வில்லையென்னும் போது பாமரமக்களைப்பற்றி என்ன சொல்வது?.கட்டுரையாசிரியர் கிருஸ்ணன் கூட //இவரது க்ருதிகளை அனுபவிக்க இந்த முயற்சி கூட எடுக்கமாட்டோமா நாம்? // என்று ஆதங்கப்படுகிறார்.
இப்படி மக்கள் ஏங்கக்கூடாது என்று கருதிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழையே தேர்ந்தெடுத்து பாடினர்.
திரு. ரமேஷ் ஶ்ரீனிவாசன்,
ஸ்யாமா சாஸ்திரிகளின் வாழ்க்கை வரலாறு பற்றி இசை ஆராய்ச்சியாளர் திரு சாம்பமூர்த்தி எழுதிய புத்தகத்திலும் மற்றும் பல குறிப்புகளிலும் ‘தேவி ப்ரோவ’ கீர்த்தனையே கேசவய்யாவின் போட்டி சம்பவத்தில் பாடப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதையே இங்கு பின்பற்றியிருக்கிறேன்.
மேலும், ‘தருணமிதம்மா’ தவிர . ‘என்னேரமும்’ என்ற புன்னாகவராளிக் கீர்த்தனையும் தமிழில் சாஸ்திரிகளால் இயற்றப்பட்டது.