தன்வினை தன்னைச் சுடும்

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்ற பழமொழியை நமது முன்னோர் தெரியாமல் சொல்லவில்லை. அதிகார பலமும் பணபலமும் இருக்கும்போது ஆடாத ஆட்டம் ஆடினால் என்ன ஆகும் என்பதற்கு பல சான்றுகள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்தப் பட்டியலில் விரைவில் சேர உள்ளது சன் தொலைக்காட்சிக் குழுமம்.

sun tvஇந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் குழுமம் பிரமாண்டமானது. உலக அளவில் ஸ்டார் குழுமம் கோலோச்சுவது போல, இந்தியாவின் தென் மாநிலங்களில் மாபெரும் ஊடக சக்தியாக கோலோச்சி வருவது சன் குழுமம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 33 தொலைக்காட்சி சேனல்களை நடத்திவரும் சன் குழுமம், தமிழகத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் சுமங்கலி கேபிள் விஷன் என்னும் எம்.எஸ்.ஓ.வையும் நடத்துகிறது. இதனை நடத்தும் நிறுவனம் கல் கேபிள்ஸ்.  இது தவிர, 42 பண்பலை (எஃப்.எம்.) வானொலிகள், தினகரன் நாளிதழ், தமிழ்முரசு மாலை இதழ், குங்குமம் வார இதழ் உள்ளிட்ட பத்திரிகைகளுடன் சன் குழுமம் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஊடக சக்தியாக வளர்ந்துள்ளது. ரூ. 600 கோடி விற்றுமுதலைக் கொண்ட சன் டி.வி.யை இந்தியாவில் மட்டும் 9.5 கோடி பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.

திமுகவின் முன்னணித் தலைவராகவும் கருணாநிதியின் நம்பகமான துணைவராகவும் இருந்த அவரது மருமகன் முரசொலி மாறனின் புதல்வர்களால் நடத்தப்படுவது சன் குழுமம். 1990-களில் ’பூமாலை’ என்ற வீடியோ கேசட் ஒளிபரப்பில் துவங்கிய இந்நிறுவனத்தின் பயணம், 1993-இல் சன் டி.வியாக மாற்றம் பெற்றது. தமிழில் துவக்கப்பட்ட முதல் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை  இதுவே. தொலைக்காட்சி சேனல்களில் சுமார் 10 ஆண்டுகளுக்கு சன் டிவி. தனிக்காடு ராஜாவாக வலம் வந்தது. இப்போது தமிழில் கிட்டத்தட்ட 40 தொலைக்காட்சி சேனல்கள் இருப்பினும், சன் டி.வி. தான் வர்த்தகத்திலும், பார்வையாளர் தர வரிசையிலும் (ரேட்டிங்) முதலிடத்தில் உள்ளது. 2011 டிசம்பரில் சன் டிவியின் உச்சபட்ச தெளிவு (ஹை டெஃபனிஷன்) அலைவரிசைகளும் துவக்கப்பட்டன.

இந்த வளர்ச்சிக்கு முரசொலி மாறனின் அரசியல் தொடர்புகள் வெகுவாக உதவின. ஆரம்பத்தில் திமுகவின் ஊதுகுழலாக இருந்த சன் டி.வி, பிற்பாடு தனது நிலைப்பாட்டை வர்த்தக ரீதியாக மாற்றிக்கொண்டாலும் திமுக சார்பானதாகவே இருந்து வருகிறது. இடைக்காலத்தில் மு.க.அழகிரி- மாறன் சகோதரர்கள் மோதலின்போது மட்டும் (2007 மே- 2008  டிசம்பர்) சன் டி.வி. திசையற்ற கப்பல் போலத் தடுமாறியது. இந்தக் காலத்தில் தான் சன் டி.வி. தற்போது சந்தித்து வரும் பல சிக்கல்களுக்கு வித்திடப்பட்டது.

மத்தியில் தொலைதொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது சகோதரர் கலாநிதி மாறனின் தொழில் சாம்ராஜ்யத்துக்கு உதவியாக பல விதிமீறல்களில் ஈடுபட்டார். அதில் ஒன்றுதான் ஏர்செல்- மேக்ஸிஸ் ஊழல் வழக்கு.

அது என்ன ஏர்செல்மேக்ஸிஸ் வழக்கு?
Sivasankaran
ஏர்டெல் நிறுவனர் சிவசங்கரன்

கடந்த 2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைதொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும் உரிமம் கேட்டு விண்ணப்பித்தன. உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைதொடர்பு நிறுவனங்களிடம்  அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பின் முதற்கட்ட விசாரணையில், தொலைதொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் தயாநிதி   ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்தது தெரியவந்தது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி,  ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லாமல் போனது.  இந்த நிர்பந்த நெருக்கடியின் விளைவாக,  ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்னர்தான், ( 2006, மார்ச் மாதத்திற்குப் பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின.

இதற்கு பிரதி உபகாரமாக, ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும்,  ஸ்பெக்ட்ரம் கைமாறியதும்,  மேக்சிஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் சுமார் ரூ. 600 கோடி முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீடு என்ன காரணத்தால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது முக்கியமான கேள்வி. இதையடுத்து சி.பி.ஐ. தொடர்ந்து பல மாதங்களாக தயாநிதி தொடர்பான விவரத்தை சேகரித்து வந்தது. அவருக்கு நெருங்கிய தொலைதொடர்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களும் தயாநிதி காலம் தாழ்த்திய விஷயத்தை ஒப்புக்கொண்டனர். இந்த அடிப்படையில் தயாநிதி மாறன் மீதும் சன் டி.வி. மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது.

தவிர, ஏர்செல்லின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்ட்த்தில், அமலாக்கத் துறையின் வழக்கும் சன் குழுமம் மீது பாய்ந்தது.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம்:
எஸ்.குருமூர்த்தி
எஸ்.குருமூர்த்தி

இவையல்லாது, தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, 300 இணைப்புகளுடன் கூடிய தொலைபேசி இணைப்பகத்தை அமைத்ததும் தெரியவந்தது. பொதுத்துறையைச் சார்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு 300 இணைப்புகளை பெற்று, அதை பூமிக்கடியில் குழாய்களை பதித்துக் கொண்டுசென்று,  சன் குழுமத் தொலைக்காட்சிகளுக்கு சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. பிரபல கணக்குத் தணிக்கையாளரும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளருமான எஸ்.குருமூர்த்தியின் முயற்சியால் இந்த ஊழல் அம்பலமானது. இதுதொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இவை மட்டுமல்ல, திமுக ஆதரவுடன் அதிகார பலத்துடன் சன் குழுமம் இயங்கியபோது பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்ப முடியாமல் முடக்கப்பட்டன. தமிழகத்தின் எம்.எஸ்.ஓ.க்கள் சுமங்கலி கேபிள் விஷனுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை இறுக்கமாக நிலவியது. சன் குழுமத்தைப் பகைத்துக் கொண்டு யாரும் சேனல் ஒளிபரப்பில் இயங்க முடியாது என்ற நிலையே சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் காணப்பட்டது.

திமுக குடும்பத்தில் ஏற்பட்ட உச்சகட்டக் குழப்பத்தை அடுத்து அப்போதைய முதல்வர் மு.க.வே சன் குழுமத்தின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த  ‘அரசு கேபிள்’ என்ற எம்.எஸ்.ஓ. அமைப்பை உருவாக்க முனைந்தார். பிற்பாடு,  ‘கண்கள் பனித்த – நெஞ்சம் இனித்த’ உறவுகளின் மறுகூடலுக்குப் பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டாலும், பிறகு வந்த அதிமுக அரசு அதைக் கைவிடாமல் தொடர்ந்தது. அதன் விளைவாகவே எம்.எஸ்.ஓ.க்களின் மீதான சன் குழுமத்தின் கட்டுப்பாடு நீங்கியது.

இதனிடையே, மத்தியிலும் ஆட்சி மாறியவுடன் காட்சிகள் மாறின. முந்தைய மன்மோகன் சிங் அரசில் சன் குழுமம் மீது வேறு வழியின்றி வழக்குகள் பதியப்பட்டாலும், முழுமையான ஆர்வத்துடன் அந்த வழக்குகள் நடத்தப்படவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானவுடன் அந்த நிலை மாறியது. சன் குழுமத்தின் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகள் வேகம் பெற்றன. அதன் விளைவாகவே, தற்போது சன் குழுமம் முடக்கப்படும் அபாயநிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

இறுதிக்கட்டத்தில் சன் டி.வி.:
மாறன் சகோதரர்கள்
மாறன் சகோதரர்கள்

சன் டி.வி. குழுமத்திற்கு மலேசியாவின் மேக்சிஸ் லஞ்சம் அளித்தது குறித்த விசாரணையில்,  கலாநிதி மாறன்,  தயாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமான சன் டி.வி. குழுமத்தின் ரூ. 743 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கிவைக்க மத்திய அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 2-இல் உத்தரவிட்டது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்களை முடக்க மத்திய அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை எடுத்தது. இதை எதிர்த்து சன் குழுமம் நீதிமன்றம் சென்றுள்ளது.

அதையடுத்து, சன் குழும தொலைக்காட்சிகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் விண்ணப்பித்தபோது, பாதுகாப்பு தொடர்பான அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது  (ஜூன் 9, 2015).

சன் குழுமம் நடத்தும்  33 தொலைக்காட்சிகளின் உரிமங்களையும் 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக் கோரி, மத்திய செய்தி,  ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் சன் குழுமம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை விதிகளின்படி, தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கான அனுமதியளிப்பதற்கு முன், அதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் பின்னணியை விசாரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க வேண்டும்.

இதேபோல, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி ஆதாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். இதில் திருப்திகரமான பதிலை அளித்தால் மட்டுமே, விண்ணப்பங்களை பரிசீலித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இது தொடர்பாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது.

அப்போது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் இருக்கும் குற்றவியல் வழக்குகளை சுட்டிக்காட்டி,  பாதுகாப்பு தொடர்பான  அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

நன்றி : மதி/ தினமணி- 20.06.2015
நன்றி : மதி/ தினமணி- 20.06.2015

முன்னதாக, சன் குழுமத்துக்குச் சொந்தமான 42  பண்பலை வானொலிகளின் உரிமங்களைப் புதுப்பிக்கக் கோரும் விவகாரத்திலும் இதேபோன்ற முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்தது. அதை திருத்தி அமைக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சரும்,  செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அருண் ஜேட்லி கடிதம் எழுதியபோதும் அந்த முடிவு மாற்றப்படவில்லை.

பண்பலை உரிமங்களைப் புதுப்பிக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சன் குழுமம் வழக்குத் தொடுத்துள்ளது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரையிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதேபோல, ஓராண்டுக்குள் மத்திய உள்துறை அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கல் கேபிள் நிறுவனத்துக்கு சென்னையிலும் (12.06.2014), கோவையிலும் (07.03.2013) எம்.எஸ்.ஓ.வாக இயங்க வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியின் காலம் முடிவடைந்தும், சன் குழுமம் விதிமுறைப்படி செயல்படாததால், அவற்றின் உரிமத்தையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது (20.08.2014). இது தொடர்பாகவும் சன் குழுமம் மேல் முறையீட்டு வழக்கை நடத்தி வருகிறது.

இவ்வாறாக, பலமுனைகளிலும் முன்வினைப் பயன்களைச் சந்தித்துவரும் சன் குழுமம், தனது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி போல பாஜக கூட்டணி அரசை விலைபேச முடியாததால், மாறன் சகோதரர்கள் தத்தளிக்கின்றனர். ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பது மீண்டும் மெய்யப்படப் போகிறது.

இது ஒருவகையில் ஓர் ஊடக சாம்ராஜ்யத்தின் பரிதாபகரமான வீழ்ச்சி. இதிலிருந்து கற்றுக்கொள்ள மற்ற ஊடக சாம்ராஜ்யச் சக்கரவர்த்திகளுக்கும்  அனுபவ பாடங்கள் பல உண்டு.

குறள்நெறி:

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

(திருக்குறள்- 377)

பொருள்: பொருள் ஈட்டுபவன் அறநெறி சார்ந்த சான்றோர் நெறியில் வாழ்வை அமைத்துக்கொள்ளாவிட்டால், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அதனை அனுபவிக்க முடியாமல் போகும்.

.

15 Replies to “தன்வினை தன்னைச் சுடும்”

  1. பத்திரிகை தர்மம் அடிப்படையில் தமிழ் ஹிந்து அதன் பாரம்பரிய தன்மையை இந்தச் செய்தி மூலமாக வெளிபடுத்தியுள்ளது என்று தான் எண்ணவேண்டியுள்ளது. மக்களுக்கு முழு விளக்கமாக செய்தி கொடுத்ததற்கு நன்றி

  2. ஓட்டப்பம் வீட்டை சுடும். லஞ்சம், வூழல் அதிகார துஷ்பிரயோகம் என்ற நஞ்சு
    தடவிய ஓட்டப்பம் சன் டிவி என்ற வீட்டைச் சுடுகிறது

  3. சில சமயங்களில் திரு அருண் ஜெட்லி அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் புதிராகவும் UPA அமைச்சர் போன்றும் உள்ளன. நீங்கள் விளக்குவீர்களா?
    சன் குழுமம் வளர்ச்சி அதன் பூமாலை 20 காசெட்கள் (ஒரு மாதத்திற்கு விற்ற காலத்திலிருந்து) அறிவேன். தெய்வம் நின்று கொல்லும்.

  4. கேடி சகோதரர்களை அவ்வளவு எளிதாக எடை போடாதீர்கள்…பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இது எங்கு போகின்றதென்று…மக்கள் திருந்தாத வரை இவர்கள் கொட்டம் அடங்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது…

  5. Thanks for such an informative article. I pray for the complete demise of the Corrupt Sun group and the DMK. I am hoping and praying that all involved, especially the Maran brothers, put away in jail for a very long time with all their assets confiscated.

  6. வரவேற்கதக்கது, மேலும் விரைவு படுத்தி,தக்க தண்டனை கொடுக்க வேண்டும்,,,,,காலம் தளத்தினால் தப்பித்து விடுவார்கள்,,ஒரு ஏழையாக அரசியலில் நுழைவது தவறில்லை ஆனால் ஏமாற்றி கொள்ளை அடிப்பது உலக பணக்காரர் வரிசையில் வருவது ஆபத்தானது,,,,,,விசமிகள் தண்டனை கொடுக்கவேண்டும்,,,சிங்கம் வெல்க,,

  7. தன்வினை தன்னை சுடும் எனும் குறள்பாவின் கர்மபலன் எப்போது இந்த ஜெ. கட்சி தலைவி அவர்களின் சகாக்களுக்கு பாடம் புகட்டுமோ? இந்த குறள் தவறன தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளையும் தவறு செய்யும் அரசியல் ஊழல்வாதிகளையும் விட்டுவைக்காது என்பதை எப்போது புரிந்து செயல் படுவோர்களோ

  8. ஒன்றும் ஆகாது . அருண் ஜெட்லி காப்பாற்றி விடுவார். அதையும் மீறி தடை வந்தாலும் , நீதி மன்றம் தடைக்கு தடை விதித்து விடும் , அவ்வளவுதான் . வழக்கு போய்க்கொண்டே இருக்கும்

  9. As long as Arun jaitely is there inthe cabinet corrpts can rejoice and breathe free .Nothing will happen to Choran-sorry-Maran brothers with the corrupt judiciary .

  10. சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது .கனிமொழி பிரச்சாரம் செய்ததும், ராஜா, தயாநிதிமாறன் ஆகியோருக்கு பாராளுமன்ற வேட்பாளர் டிக்கெட் கொடுத்ததும் திமுகவின் படுதோல்விக்கு வழிவகுத்தது. 2016- சட்டசபை தேர்தலிலும் ஜே தலைமையிலான அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. சென்ற 2014- பாராளுமன்ற தேர்தலில் 216 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தது.

    இந்த சட்டசபை தேர்தலிலும் கனிமொழி, ராஜா பிரச்சாரம், ஏற்கனவே தோற்ற பாராளுமன்ற வேட்பாளர்களுக்கு சட்டசபையில் டிக்கெட் கொடுத்தால், திமுக டைட்டானிக் கப்பல் கதை ஆகிவிடும். திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தாவது பெறவேண்டும் என்றால், ராஜா, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரையும் ஒரு 3 மாதங்களுக்கு வனவாசம் அனுப்பி வைத்தால் தான் டெபாசிட்டை திரும்ப பெறமுடியும் . இல்லை என்றால் திமுக பல தொகுதிகளில் இம்முறை டெபாசிட் இழப்பது உறுதி.

    இந்திரா காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தது ஒன்றே போதும், திமுகவை கழுவில் ஏற்ற மக்கள் தயாராக இருக்கிறார்கள். எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் இந்தமுறை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் எம் எல் ஏ க்கள் கிடைக்கும் .பல கட்சிகளுக்கு எம் எல் ஏக்களே இருக்க மாட்டார்கள்.

    தமிழனுக்கு திமுகவினர் செய்த துரோகங்கள்
    1.காவிரியில் கூடுதல் அணைக்கட்டு கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததில் ஆரம்பித்து ,

    2.கச்சத்தீவு இலங்கைக்கு தானம் செய்ததில் தொடர்ந்து,

    3.மீத்தேன், வாயு எடுக்க அனுமதி

    4. கெயில்,

    5.இலங்கை தமிழர் படுகொலை ,

    6.சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு மோசடியாக ஆதரவு ,

    என்று பட்டியல் போட்டால் இரண்டு புஸ்தகமே எழுதலாம். மக்கள் மனதில் இப்போது இதை எல்லாம் மறைக்க முடியாதபடி பதிந்துள்ளன. பார்லிமென்ட் தேர்தல் போலவே இந்த தேர்தல் முடிவுகளும் அமைந்தால் எவ்வித ஆச்சரியமும் இல்லை . சீமான், பாமக , விஜயகாந்த், பாஜக, ஜி கே வாசன் ஆகிய கட்சிகள் கொஞ்சம் இடங்களை பிடித்து, திமுகவுக்கு ஒரே ஒரு இடம் கூட இல்லாத நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

  11. டூ ஜி வழக்கில் தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு வந்துவிட்டால், திமுக காணாமல் போய்விடும். பி எஸ் என் எல் வழக்கு, ஏர் செல் மாக்சிஸ் ,வழக்கு, என்று வரிசையாக அணிவகுத்துவரும் வழக்குகள் , திமுகவுக்கு நிச்சயம் வலுவை சேர்க்காது . தமிழகத்தில் புதிய மாற்றம் வர உள்ளது .

  12. 2016 பொதுத்தேர்தலில் தி.மு.க. காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளதன் மூலம் அதன் தோல்வி உறுதியாகிவிட்டது.இன்னும் திரு கருணாநிதி அவர்கள்
    தி.மு.க. வின் தோல்விக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமொ அவை அனைத்தையும் திரு கருணாநிதி அவர்களே செய்தால் தமிழகம் அவருக்கு நன்றி உள்ளதாக இருக்கும்.

  13. ஆசை வெட்கம் அறியாது. ஆசைக்கு அளவில்லை.

  14. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், இன்னமும் சில அறுவர் அணி தேர்தல் அறிக்கையிலும் மாநில அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CPS- CONTRIBUTORY PROVIDENT FUND SCHEME- நீக்கப்பட்டு பழைய பென்ஷன் முறையை கொண்டுவருவோம் என்று வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்து போய்விட்டதால், தேர்தல் அறிக்கை என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் சொல்வோம் , ஏமாந்தவன் யாராவது இருந்தால் ஒட்டு கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இவர்கள் இப்படி சொல்லியுள்ளனர்.

    முதல் கேள்வி CPS- முறை அமலுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன – 2006 – 2011 காலக்கட்டத்தில் CPS- முறையை மாற்ற திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் கூட்டணிக் கட்சியான இத்தாலி காங்கிரஸ் கட்சி பத்தாண்டுக் காலத்தில் இந்த CPS- பென்ஷன் திட்டத்தை நாடு முழுவதுமே சிறிது சிறிதாக அமல்செய்து விட்டது.

    தாங்கள் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்து அமல் செய்த திட்டங்களை , தாங்கள் ஆட்சியில் இருந்த போதே நீக்காதவர்கள், இப்போது எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு , நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் CPS- முறையை நீக்குவோம் என்று சொல்வது வெறும் பித்தலாட்டம் தான். அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், கூட்டணிகள், ஆகியவை இவற்றை நம்ப மாட்டார்கள்.

    அரசியல் கட்சிகளிடம் பெட்டி வாங்கும் யாராவது சில சங்க பிரதிநிதிகள் வேண்டுமானால் , இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை தங்கள் வலைத்தளங்கள் மூலம் செய்தாலும் , அது எடுபடாது- ஏனெனில் அவ்வளவும் பொய்களே என்பதை எல்லோரும் அறிவார்கள். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இத்தகைய பொய்ப்பிரச்சாரங்களை நம்பும் அளவுக்கு மூடர்கள் அல்ல.

    கள்ளு சாராயக் கடைகளை திறந்தவர்கள் இளைய சமுதாயத்தை 44 – ஆண்டுகளில் இடையில் ஏழு ஆண்டுகள் தவிர – குடிப்பழக்கத்துக்கு ஆளாக்கி தமிழனை சாக்கடை ஓரம் மயங்கி விழ செய்து, ஒன்றுக்கும் உதவாதவனாக மாற்றிய கட்சியினர் ஆட்சிக்கு மீண்டும் வந்து, முதல் கையெழுத்தில் சாராயத்தை ஒழிப்போம் என்பதை யாரும் நம்பமாட்டார்கள் ஏனெனில் கழக முக்கியப் பிரமுகர்களும் அவர்களின் குடும்பங்களும் தான் சாராய ஆலைகளை நடத்தி வருகின்றனர்.
    மீடியாவை தாங்கள் நிறைய வைத்திருப்பதால், மக்களை ஏமாற்றி ஒட்டுவாங்கிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டார்கள் சென்ற 2011-தேர்தலில். மக்கள் இவர்களிடம் ஏமாறவில்லை.

    தமிழனுக்கு பாதிப்பு ஏற்படுத்திய:-

    1. காவிரியில் கூடுதல் அணைகட்டியது( 1968),
    ௨. கச்ச தீவை தாரை வார்த்தது ( 1974- 75)
    3. சில்லறை வாணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனுமதித்து பார்லிமெண்டில் ஓட்டுப்போட்டது.
    4. கள்ளுமற்றும் சாராயத்தை தமிழனுக்கு 1971-72 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தியது.
    5. காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தாமதம் செய்தது.
    6. பெரியாறு அணைக்கட்டு விவகாரத்தில் தமிழக நலன்களை கவனிக்காதது.
    7. இலங்கை தமிழர்கள் தலையில்கொத்து எறிகுண்டுகளை வீசி லட்சக்கணக்கானோரை கொன்றது- மற்றும் ஆயிரக்கணக்கானோரை உடல் ஊனமுற்றவராக ஆக்கியது.
    8. உலகப்புகழ் டூ ஜி ஊழலில் சாதனை புரிந்து, உலகெங்கும் தமிழினத்துக்கு தலைக்குனிவை உண்டாக்கியது
    9. பி எஸ் என் எல் திருட்டு இணைப்புக்கள்
    10. ஏர்செல் மாக்சிஸ் வழக்கு
    11. டாட்டாவையே மிரட்டியது
    12. கலைஞர் டி வி 214- கோடி வழக்கு
    13. மத்திய அரசினால் தமிழில் மலிவு விலையில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்க வழங்கப்பட்ட அரசு மானியத்தை பயன்படுத்தாமல் , பல ஆண்டுகள் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பி , தமிழினத்துக்கும், தமிழ் மொழிக்கும் துரோகம் செய்தது.-
    14. மத்திய அரசில் மந்திரிகளாக இருந்துகொண்டே, 2011-2013 ஆகிய மூன்று ஆண்டுகள் காலக்கட்டத்தில் , மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் ரேஷன் அரிசி, சர்க்கரை, மண் எண்ணெய், பாமாயில் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் அளவை அதாவது ஒதுக்கீட்டு அளவை குறைத்தது –

    15.மீத்தேன் வாயு பிரச்சினை

    16. கெயில் குழாய் பதிப்பு பிரச்சினை
    மேலே கூறியவை எல்லாமே திமுகவினரின் ஆட்சிக்காலத்தில் தான் நடந்தது. இவை அனைத்துமே தமிழனுக்கு தலைக்குனிவையும், சிரமங்களையும் தந்தவையே ஆகும்.
    பட்டியலை வெளியிட 10 ஜி பி இடம் வேண்டும்.
    அதிமுகவினரின் ஊழல்களை பற்றி திமுகவினர் பேசும்போது, பொதுமக்கள் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள்.

    இந்திரா காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த போதே, அது தங்கள் தலையில் தாங்களே கொள்ளி வைத்துக் கொண்டதற்கு சமம்.

    மீண்டும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என்ற சூழல் உருவானதற்கு நிலப்பறி- நிலக்கரி- பஞ்ச பூத ஊழல் சர்வாதிகார சுயநல கூட்டணியான திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணியே காரணம்.

    போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற சொலவடைக்கு ஏற்ப மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை பற்றி தேர்தல் அறிக்கையில் புலம்பல்கள் வேறு. இவை எல்லாமே இவர்களை மூழ்க அடிக்கப்போகும் விஷயங்கள் என்பதை உணர முடியாதபடி விதி இவர்களை தடுக்கிறது. திருந்துவார்களா ?

    முக்கிய ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி பல்வேறு நீதிமன்றங்களில் காலம் ஓட்டிவரும் ஊழல் கதாநாயகர் மற்றும் கதா நாயகிகளை தேர்தல் பிரச்சாரத்தில் தலையை காட்டாமல் தற்காலிகமாக ஓரங்கட்டி ஒதுக்கி வைப்பது , ராஜ தந்திரம். அது கூட இவர்களிடம் இல்லாமல் போனது விதியை தவிர ஒன்றுமே இல்லை.

    ராமன் எந்த என்ஜினீயரிங் காலேஜில் படித்தான் என்பது மேமாதம் 19- ஆம் தேதி வியாழக்கிழமை மத்தியானம் 4 மணிக்கு தெரிந்துவிடும்.

  15. சட்டத்தின் கரங்கள் மிகவும் மெதுவாக மெதுவாக செயல்படுகின்றன. எனக்கு தயாநிிதி மாறன் தண்டிக்கப்படுவாா் என்ற நம்பிக்கையில்லை. பணம் என்ன செய்யாது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *