பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்

bhagavad_gita_bharathiதமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில்  மகாகவி பாரதியின் மொழிபெயர்ப்பே மிகப் பரவலாக அறியப்பட்டதும்,  நவீன காலகட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக வந்ததும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். கச்சிதமான சொற்கட்டுகளுடன்  கீதை மூலநூலின் சுலோகங்களை கருத்துச் சேதாரமின்றி பாரதி நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார்.  இத்தகைய மொழிபெயர்ப்புக்கு செய்யுள் வடிவத்தை விட உரைநடையே  மிகப் பொருத்தமானதும் ஏற்றதுமாகும் என்ற  பாரதியின் தேர்வு மிகவும் சரியானது என்பதை இன்றைய வாசகர்கள் உணர முடியும்.  ஆனால், இந்த மொழிபெயர்ப்பின் உரைநடையானது, பாரதி வழக்கமாகக் கையாளும்  கட்டுரைகள், பத்திரிகைக் குறிப்புகளைப் போன்ற  நடையைக் கொண்டதல்ல. பொருளை மட்டுமல்லாமல், கீதையின் மூலத்திலுள்ள கவிதைச் செறிவையும் அழகையும் கூட எடுத்துக் காட்ட முயலும் ஒரு கவித்துவமான உரைநடையை அவர் இதில் கையாண்டிருக்கிறார்.

பாரதியார் பகவத்கீதை முழுவதும் ஏற்கனவே மின் நூல் வடிவில்  தமிழ்ஹிந்துவுில் வெளிவந்துள்ளது. 

கீதையின் வாசகங்களை பாராயணம் செய்வது,  வாசிக்கக் கேட்பது,   கேட்டதை மீண்டும் மனதில் மீட்டிப் பார்த்து தியானிப்பது – இவை கீதையைக் கற்கும் மாணவர்கள், கற்று முடித்தவர்கள், யோக சாதகர்கள், ஆன்மத் தேடல் கொண்டவர்கள் எனப் பல சாராரும்  எப்பொழுதுமே கைக் கொண்டு வந்துள்ள ஒரு முறையாகும்.   மூல சுலோகங்களை  நேரடியாக சம்ஸ்கிருதம் மூலம் பயின்றவர்கள் அவ்வாறே வாசித்து, கேட்டு தியானிப்பார்கள்.  அவ்வாறு பயிலாதவர்களும் கூட, தாங்கள் பயின்ற மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வாசித்தும், கேட்டும் இதனை மேற்கொள்ளலாம்.  காத்திருக்கும்போதோ,  பயணம் செய்யும் போதோ கூட கவனத்தைச் செலுத்தி இந்த ஒலிப்பதிவுகளைக் கேட்பதன் மூலம் கீதையின் உட்பொருளைச் சிந்திக்கலாம்.

அந்த நோக்கத்துடன் பாரதியாரின்  பகவத்கீதை மொழியாக்கத்தை எனது  குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். கூடிய வரையில் நிதானமாகவும், வாசகங்களின் பொருள் நன்கு வெளிப்படுமாறும் வாசிக்க முயன்றுள்ளேன்.  இன்று வைகுண்ட ஏகாதசி. அத்துடன்,  கீதா ஜெயந்தி (கீதை உலகுக்கு வெளிப்பட்ட நாள்) என்றும் சம்பிரதாயமாக இந்த தினத்தைக் கொண்டாடும் மரபு உள்ளது. இப்புனித நாளில்  இந்த ஒலிப்பதிவை  மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்.

18 அத்தியாயங்களும் தனித்தனி ஒலிக்கோவைகளாக உள்ளன.  அவற்றைத் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

ஒலிப்பதிவுகளுக்கான சுட்டி: https://soundcloud.com/jataayu-blore/sets/bharathiyar-bhagavad-gita

(பி.கு:  முதல் அத்தியாத்தில், தொடக்கத்தில் உள்ள தியான சுலோகங்களின் தமிழாக்கம் எனது).

4 Replies to “பாரதியார் பகவத்கீதை – ஒலி வடிவில்”

 1. ஸ்ரீ மத் பகவத்கீதை வேதாந்த ஆர்வலர்களுக்கும் சாதகர்களுக்கும் ஒரு அடிப்படையான நூல். தமிழ் கூறு நல்லுலகில் வேதாந்த மரபில் வந்த பாரதியின் பணிகள் அளப்பரியவை. அவரது மகத்தான நற்கொடை பகவத் கீதை உரை. அதனை படித்து உரையாக இணையத்தில் வெளியிடுவது நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு. கீதாச்சாரியானுடைய பரிபூரண கிருபாகடாக்ஷம் தங்கள் மீது இருக்கவேண்டும். ஒரு சின்னப்பரிந்துரை. இதனை வீடியோவாக இணையத்தில் ஏற்றுங்கள். புதியதாக வீடியோ எடுக்கவேண்டாம். ஸ்ரீ க்ருஷ்ணரின் புகைப்படங்களோடும் கீதையின் வரிகளோடும் வீடியோவாக மாற்றி யூடியூபில் ஏற்றினால் இன்னும் அனேக சாதகர்களை சென்றடையும்.
  சிவசிவ

 2. பாராட்டுக்குரிய நல்ல முயற்சி. இவ் வொலிப் பதிவை ஒலிவடிவேல் கேட்பது நல்லது. கேட்பவர் வேறு வேலையில் ஈடுபட்டாலும் தொடர்ந்து கேட்டுப் பலன் அடையலாம். வண்ணப் பட இணைப்புகள் கேட்போரின் கவனத்தைத் திசை திருப்பிவிடும். மீண்டும் வாழ்த்துகள்.

  எம்.டி.ஜெயபாலன்

 3. வணக்கம், ஆத்மார்த்தமான செயல்பாடு! நன்றி திரு ஜடாயு அவர்கள்!

  கண் மூடி தியான நிலையில் அமர்ந்து, கேட்டு உணர்தல் – கேட்போற்க்கு சிறப்பு!
  கீதையிலிருந்து பலமுறை, பலர், சொல்ல கேட்ட சில தூளிகள் இன்றே நிறைவு பேற்றிற்று. நிச்சயமாக படிக்கும் பிரதியையும் பெற வேண்டும் என்ற ஆவலை தூண்டிற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *