பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா? – 2

bharathiபாரதியாருக்குத் தமிழ்ப்பற்று இருந்ததா? உண்மையிலேயே பாரதிக்கு தமிழ்ப்பற்று கொஞ்சமாக இருந்ததா? அதிகமாக இருந்ததா?

என்னைப் பொறுத்தவரையில் பாரதிக்குத் தமிழ்ப்பற்று இல்லை.
பாரதிக்கு தமிழ்ப்பற்று இல்லை. இல்லை
பாரதிக்கு தமிழ்ப்பற்று இல்லை. இல்லவே இல்லை.

பின் பாரதிக்கு தமிழ்மேல் என்னதான் இருந்தது?

பாரதிக்கு தமிழ்மேல் பற்றல்ல. வெறியே இருந்தது எனலாம். நமக்கெல்லாம் தமிழ்மீது பற்றுதான் இருக்கும். பாரதிக்கோ தமிழ்தான் என் உயிர் என்ற வெறி இருந்தது.

பாரதி தனது நண்பர் பரலி.சு. நெல்லையப்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடித்தில் பாரதி கூறுகிறார்:

தம்பி – நான் ஏது செய்வேனடா; தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.

இதைவிடத் தமிழ் வெறி வேறு யாருக்கு இருக்கும்?

***

தமிழ்நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையில் பாரதி எழுதுகிறார்:

…மேலும் அதே பத்திரிக்கையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கும் மேலே இங்கிலீஷ் மகுடமொன்று சூட்டியிருக்கிறது.

‘ருஷியாவின் நிலைமை’
‘The Situation in Russia’

‘தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்’
‘The vernaculars as media of instruction’

ஆஹா! நான் மாற்றி எழுதுகிறேன். தமிழை முதலாவது போட்டு, இங்கிலீஷைப் பின்னே போட்டேன். அந்தப் பத்திரிக்கையில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு, தமிழைக் கீழே போட்டிருக்கிறது. ‘அமெரிக்கா ஸ்திரீ’ பார்த்தாயா? என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை எழுதுகிறது….

என்று குறிப்பிடுகிறார். தமிழ் வார்த்தைகள் கீழே போட்டிருப்பதைக் கூட பாரதியால் தாங்க முடியவில்லை என்னும் பொழுது அவருக்கு உயிர் தமிழா? ஆரியமா?

***

தமிழ்நாட்டில் தேசீயக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது தேசீயம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ்நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்.

பக்கம் 301-302 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்

பாரதி தேசியக்கல்வியை தமிழிலேயே கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறபோது அவரது உயிர் தமிழா? ஆரியமா?

***

இதே கட்டுரையில் பாரதி கூறுகிறார்:

பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக.

bharathiar1இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இந்தியாவின் ஐக்கியத்தை முன்னிட்டே பாரதி வடமொழிக்கு ஆதரவு கொடுக்கிறார். ஏனென்றால் வடமொழியின் கலப்பு எல்லா மாநில மொழிகளிலும் இருக்கிறது என்பதால்தான்.

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது: தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக என்று கூறுகிறார். பாரதியாரின் எண்ணம் ஆரியமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்? வடமொழி தலைமை பெற்று தமிழ் அதற்கு கீழே செயலாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் பாரதி வடமொழிக்கும் மேலாகத் தலைமை பெற்று இருக்க வேண்டும் என்றல்லவா கூறுகிறார். இங்கு இந்த ‘தலைமை’ என்பதை கவனிக்க வேண்டும். வடமொழிக்கு மேலாக ‘தலைமை’ என்பதை – என்பதை உணரவேண்டும்.

தலைமைக்கு கீழ்தான் எல்லாம் வரவேண்டும். தலைமைப் பதவியை பாரதி தமிழுக்கு அல்லவா வழங்கியிருக்கிறான். அப்படியிருக்கும்போது பாரதிக்கு உயிர் ஆரியமா? தமிழா?

***

தேசீயக் கல்வி (2) என்னும் கட்டுரையில் பாரதி கூறுகிறார்:

தமிழ்நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே தனிக்கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?

பக்கம் 327 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்

தேசீயக் கல்வி தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்று சொன்ன பாரதிக்கு உயிர் ஆரியமா? தமிழா?

***

தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களுக்கும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள். ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும். பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால், அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாக கற்பிக்கப்படுவதுமின்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும், ஸ்லேட், பென்சில் என்று சொல்லக்கூடாது என்று பாரதி கூறுகிறார்

பக்கம் 327 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்

ஆரம்ப விளம்பரங்கள் கூட தமிழிலேயே வெளியிட வேண்டும் என்று சொன்ன பாரதியின் உயிர் தமிழா? ஆரியமா?

***

பாரதி கூறுகிறார்:

1800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாய்க்கப் பெற்றிருந்த நாகரீக நாட்டிலே, இவ்வளவு உயர்வு கொண்டிருந்த பெரியோர்களின் சந்ததியிலே, இவர்கள் நடையிலும் செய்கைகளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கிறோம் என்பது அரிய மகிழ்ச்சியுண்டாகிறது

பாரதி வடமொழி பாஷையைப் பேசும் பெருங்குடியில் பிறந்ததற்கு மகிழ்ச்சியுண்டாகிறது என்று சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.

தமிழ் மட்டுமல்ல, தமிழ்க் குடியில் பிறந்ததற்கு அரிய மகிழ்ச்சியுண்டாகிறது என்ற சொன்ன பாரதியின் உயிர் தமிழா? ஆரியமா?

பக்கம் 426 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்.

***

பாரதி சில பண்டிதர்களுக்கு கூறுகிறார்:

பந்தாடும்போதும், சீட்டாடும்போதும், ஆசாரத்திருத்த ஸபைகளிலும், வர்ணாச்ரம ஸபைகளிலும், எங்கும் எப்போதும் இந்தப் பண்டிதர்கள் இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால் உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை இவர்கள் தமிழெழுதக் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதை, காவியம், விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும்

பக்கம் 267 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்.

ஆங்கிலத்தில் எழுதும் பண்டிதர் தமிழிலேயே எழுத வேண்டும் என்று சொன்ன பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா?

பெரியார் வேலைக்காரிகளுடன் பேசும்போதுகூட ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார் என்பதுடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்.

***

டிசம்பர் மாதம். எல்லா சபைகளிலும் இசைக் கச்சேரிகள் நடக்கும். நடந்து கொண்டிருக்கின்றன. சரி இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது தெரிகிறது. பாரதியாருக்கும் இதில் சம்பந்தம் உண்டு.

சில பாடல்களை மட்டுமே தொடர்ந்து எல்லா கச்சேரிகளிலும் பாடுகிறார்கள். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காது போலும் என்று கூறிவிட்டு, பாரதி கூறுகிறார்:

புதிய புதிய கீர்த்தனங்கள் வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுகளில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும்.

பக்கம் 277 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்.

வடமொழியும், தெலுங்கும் பெரும்பான்மை கொண்ட கச்சேரிகளில் தமிழ் இடம்பெற வேண்டும் என்று சொல்கிற பாரதிக்கு உயிர் ஆரியமா? தமிழா?

***

அறிவியல் கூட தமிழிலேயே கற்றுத் தரப்பட வேண்டும் என்ற குரல் பாரதியின் குரல் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாரதி கூறுகிறார்:

பௌதிக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளிய தமிழ்நடையில் பிள்ளைகளுக்கு மிகவும் ஸுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். இயன்ற இடத்தில் எல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும்…

இப்படிச் சொல்கிற பாரதி சிலவற்றிற்குத் தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் ஸம்ஸ்கிருத பதங்களை வழங்கலாம்’ என்கிறார்

பக்கம் 311 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்.

இங்கு தமிழ் அகப்படாவிட்டால் மட்டுமே ஸம்ஸ்கிருதம் என்பதை பாரதி தெளிவாகக் கையாள்கிறார்.

தமிழில் அறிவியல் என்று சொன்ன பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா?

***

அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். கான்பரென்ஸ் என்றும் மீட்டிங் என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுதவற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே!

பக்கம் 324 / பாரதியார் கட்டுரைகள் / வர்த்தமானன் பதிப்பகம்.

எத்தனை வேதனையோடு பாரதி கூறுகின்றார். தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நிறுவ வேண்டும் என்பதுதானே அவருடைய எழுத்தில் வெளிப்படுகிறது.

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் கொண்டுவர வேண்டும் என்று சொன்ன பாரதியின் உயிர் தமிழா? ஆரியமா?

***

பாரதியின் உயிர் தமிழா? ஆரியமா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இன்னும் பாரதியின் அளவுகடந்த தமிழ்ப்பற்றை சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்தும் சொல்வேன்.

12 Replies to “பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா? – 2”

 1. Even today you are talking of Tamil.But to further development of Tamil as a scientific language or universal language(assuming it as an objective) We should have done all reseach work in Tamil.Even today we study medicine and all science in English which has absorbed Latin.French,Greek Italian roots and words.
  Tamils brag and don’t absorb even Sanskrit words telling they are Brahmin’s words.They show antipathy to”vada Mozi”.This type of elitism is ok if Tamils only occupy the world or all knowledge and research is in Tamil.Bur alas!!! There is only bragging with non-context connotation and spraying emotions to motivate the uneducated for votes and political ends.
  “Same Barathiayar has called us as “Vaaicholil veeraradi”
  Instead of propagating elitism and Dravidian Aryan divide.We should adopt all language words specially sanscrit words to purify Tamil as Language.
  Also Brahmins are ridiculed for using Sanskrit words in their daily parlance. Why?
  Despite Barathiyars outpourings we require fundamental change in attitude.
  How can Tamil New year,s day changed? De jure may not be de facto/ We cannot bring in cultural revolution as Mao did in China.
  when such issues remain pulling the language down Tamil cannot become a widely acclaimed language adopted by many. Non-acceptance of Sanscrit words and Even paryers in Sanskrit words is a sort of “ethnic cleansing”or”Oppression” of a section of people of Tamils.

 2. I think the Tamisl are paronoid about their language. Tamil is a great language and i am proud to be a Tamilian. But, language is only a tool for communication and Tamil fails in this regard for modern usage, in day to day activities, in science, Medicine etc.( eg; Perunthu for bus, ridiculus names for computers, etc). Anyhow, who decided these names? Computers, cars etc did not exist in old days. It is easy to call a bus a bus than Perunthu.

 3. கணினி என்று கூகுள் தேடுபெட்டியில் இட்டுத் தேடிப்பாருங்கள். 853,000 பக்கங்களைச் சுட்டுகின்றது. பேருந்து என்பதும் பெரு வழக்காக உள்ளது.
  ஆங்கிலத்திலும் automobile என்று அவ்வளவாகச் சொல்வதில்லை, car என்கிறார்கள். கார் என்றால் வண்டி அவ்வளவுதான் (carriage). வண்டி என்னும் சொல்லும் பெரு வழக்குதான். “வண்டிலே ஏறுங்க” என்பது பேச்சுவழக்கு. ஆனால் automobile என்பதும் அகராதி, கலைக்களஞ்சியம்
  ஆகிய நூல்களிலும், வேறுப்ல கட்டுரைகளிலும் வழங்கும் சொல்.
  உங்களுக்கு ridiculuous ஆக இருக்கலாம், எத்தனையோ பேருக்கு பொருத்தமான சொல்லாக இருக்கின்றது.
  கோயில் வழிபாடு, இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்வுகள், அரசு நிர்வாகம், அறமன்றங்கள், பள்ளிகள்என்று ஏறத்தாழா எல்லா இடங்களிலும், தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் உள்ளது. இதெல்லாம் நேர்மையாக எண்ணிப்பார்க்கும் எவருக்கும் தெளிவாகத் தெரிவது.

 4. தமிழ் உயர வேண்டும் எனில், நல்ல தமிழில் பேசவும் எழுதவும் மக்கள் துணிய வேண்டும்.

  ஆனால், தமிழ் மொழியை யூரோப்பிய மொழியான ஆங்கிலேயத்திற்கு ஏற்றாற்போல நடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது திராவிடர் கழக கட்சிகள். (தமிழ் புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டிற்கு இணையாகக் கொண்டு செல்லும் முயற்சிகூட இதன் தொடர்ச்சிதான்.)

  திராவிட கழகங்களின் டிவி சேனல்கள் அனைத்திலும் தமிழை ஆங்கிலேயர் பேசுவது போலப் பேசுவதுகூட இந்த காரணத்திற்குத்தான்.

  ஸன் டிவி, ராஜ் டிவி மட்டும் அல்ல. களிஞ்சார் (kalingar) டிவியும் அப்படித்தான் இருக்கிறது.

  இவர்களுடைய பேச்சுத்தான் நவீனமான நாகரீகமான பேச்சு என்று நினைத்து குழந்தைகள் அதைப் பின்பற்றவேண்டும், ஆங்கிலேயர்கள் போலத் தமிழ் பேசவேண்டும் என்பது இவர்களது நோக்கம்.

  நல்ல தமிழை மக்கள் தொலைக்காட்சியிலும், தூர்தர்ஷனின் பொதிகையிலும் மட்டுமே கேட்கமுடிகிறது.

 5. இணையத்தில் அறிமுகம் ,அறியாத புதுமுகம்,ஆனாலும் மகிழ்ச்சியே நானும் ஒரு தமிழ்முகம்
  தமிழிலே எழுத, தமிழிலே பேச, தமிழ் தேசம், தமிழ்தான் ஸ்வாசம்,நான் த‌மிழ் செந்தமிழ்நேச‌ன் என்பெய‌ர் த‌மிழ்த்தேனீ
  ம‌னதால் இணைவோம், த‌மிழால் இணைவோம்,
  ம‌னித‌ம் காப்போம்,உலகம் காப்போம்

  “மௌன‌ம் உண‌ர்த்தாத‌ பொருளை வார்த்தை உண‌ர்த்தாது”
  அன்புட‌ன்
  த‌மிழ்த்தேனீ

 6. Dear Mr Selva
  Sorry if I have caused any offence.
  I am not against Tamil being used in a wider day to day usage, IF APPROPRIATE. Ok, I am wrong about Perunthu. But I am sure that words like computers, autorickshaw,motor,cinema and number of other commonly used words have no equivalent words in Tamil.( modern gadgets did not exist in the olden days) Even if there are few words, they are hardly used by the common man. All we can do is TRANSALTE THE ENGLISH WORDS INTO A NEW TAMIL WORD, WHICH DEFEATS THE PURPOSE. Ruled by the British for 200 years had resulted the Tamil and other Indian languages becoming isolated and NOT modern and scientific. Curse of the time.We missed the boat. I love Tamil poems,the Tamil tradition, rich culture , arts and music and I will be first one to defend them. Anyhow, who made this DMK mob as the sole defender of Tamil? Who gave them the right to change the Tamil newyear’s date?
  Regards

 7. பாரதிக்கு வக்காலத்து வாங்குவதுபோல எழுதி இருக்கும் கட்டுரை சூரியனுக்கே வெளிச்சம் காட்டுவது போல இருக்கிறது. தங்களது தலைவர்களின் அறிவிலித்தனங்களை பற்றி தெரிய ஆரம்பித்து விட்டதால் பாரதி ஆரியனா தமிழனா என்ற கேலிக்கூத்தான விவாதத்தில் இறங்கியுள்ளனர்.

  பாரதி தமிழனில்லை, பாரதிக்கு தமிழ் மீது பற்றில்லை எனில், தமிழ் நாட்டில் ஒரு பயலும் தமிழனில்லை, தமிழ் பற்றாளனும் இல்லை…

 8. பாரதி தமிழ் கவிஞன் இல்லை
  தமிழ் நாட்டில் அவதரித்த உலக கவிஞன்
  அவன் பார்வை உலக பார்வை
  தமிழ் மொழி மட்டுமல்லாது பல இந்திய மொழிகளும்
  உலக மொழிகளும் கற்றவன்
  அதனால்தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் உயர்ந்த மொழி அரிது என்று பாட முடிந்தது.
  அதனால்தான் தமிழ் மொழி இன்பத்தேன் என்று எழுத முடிந்தது
  அவன் தமிழுக்காக வாழ்ந்து அதற்காகவே உயிர் துறந்தவன்
  இக்கால கவிஞர்களைபோல் அவன் வயிறு வளர்க்க தமிழை பயன்படுத்தவில்லை
  இன்று தமிழால் கோடிகளை குவித்த விளம்பர பிரியர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்?
  தமிழ் பிழைக்குமா அல்லது செத்துவிடுமா என்று பட்டிமன்றம் நடத்த விளம்பரம் செய்ய காசு, பேசுவதற்கு காசு என அதை வைத்து வியாபாரம் அல்லவோ நடக்கிறது?
  அவன் எழுதி வைத்தவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பேசப்படும்,விவாதிக்கப்படும், சிந்திக்கப்படும்
  அவனை பற்றி குறை கூற எந்த கொம்பனுக்கும் அருகதை கிடையாது.
  அவனை விமரிசித்து எழுதி சுய விளம்பரம் தேடிக்கொண்டார்கள்..இன்று அவன் இயற்றிய பாடல்களை பாடி பாடகர்கள் ஆயிரம் ஆயிரமாக பணம் பணம் பண்ணிவிட்டார்கள்.. அவர்களில் யாராவது தமிழ் மொழியை வளர்க்க ஒரு பைசா செலவு செய்திருப்பார்களா? அவனை போல் வறுமையில் வாழ்தவன் கிடையாது,நாட்டுப்பற்று மிக்கவன் கிடையாது, தன்மானம் மிக்கவன் கிடையாது, அனைத்து எல்லைகளையும் தாண்டி உண்மையான பரம்பொருளை உணர்ந்தவன் கிடையாது.
  தமிழை பற்றி எழுதியவன் தமிழனை பற்றி அன்றே எழுதிவிட்டு போனான்.
  என்ன தெரியுமா?
  நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறனின்றி வஞ்சனை செய்வாரடீ?
  இன்று தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாடிக்கொண்டும், வஞ்சம் தீர்த்து கொண்டு இருப்பதை உலகே அறியும்.தலைவன் எவ்வழி தொண்டர்களும் அவ்வாறே.
  ஊமை ஜனங்கலடீ என்றான்
  ஆம் இன்று மக்கள் அவ்வாறுதானே இருக்கிறார்கள்.
  வாய் சொல்லில் வீரரடி என்றான்
  இன்று இங்கு என்ன நடக்கிறது. எல்லோரும் வீராவேசமாக பேசுவதை தவிர எந்த பிரச்சினைகள் தீர்ந்தது? எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன.
  இன்னும் வரும்

 9. பாரதியின் மொழிப்பற்றை விளக்க வல்ல கட்டுரை… நன்றாக உள்ளது. பாரதி பற்றிய பொய்ப்பிரசாரங்களை உடைக்கவும் அவரது தூய சிந்தனைகளை வெளிப்படுத்தவும் இவ்வாறான கட்டுரைகள் அவசியம்…

 10. பாரதி சொன்னதாக மேற்கோள் உள்ளதில் வட மொழி எழுத்துகள் உள்ளன .

  ஸ்லாபமஹா பாஷைகள்… பாரதி இப்படி தான் எழுதினாரா ? இல்லை பதிப்பில் பிழை உள்ளதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *