இந்த உலகம் பாரதப் பண்பாட்டின் உள்ளொளிக்கு எத்தனை கடன் பட்டிருக்கிறது என்பது பெரிதாக வெளியே தெரியாத ஒரு விஷயம் . ஆனால் அமெரிக்காவின் சுதந்திர விருப்பத்தை பாராட்டுபவர்களும், ஐரோப்பிய புத்தெழுச்சியின் கலை, இலக்கியப் படைப்புக்களைக் கண்டு ஆனந்தமடைபவர்களும் அதன் பின்னால் பாரத ஞானமரபின் வழிநடத்துதல் இருப்பதை அறிவார்களா?
இன்றைக்கு சுயமதவெறி உலகையே காயப்படுத்தி அழித்துவிட மிரட்டி வரும் போது, ஒரு மேற்கத்திய மதக் கல்வி நிறுவனம் பகவத் கீதையை தனது பாடத்திட்டத்தில் கட்டாய பாடமாக அறிவித்திருக்கிறது. இதில் முக்கியமானதொரு வரலாற்று தொடர்ச்சி இருக்கிறது. அதனை சிறிது நாம் இங்கே காணலாம்.
பகவத் கீதையை மேற்கில் கொண்டுபோனவர்கள் தொடக்க கால மேற்கத்திய இந்தியவியலாளர்களே. பாரதிய வேதாந்த நூல்கள் பிரான்ஸில் பெரும் தாக்கத்தை விளைவித்தன. அவை அப்போது சமஸ்கிருத வடிவில் செல்லவில்லை; பாரசீக மொழியில் இருந்தன. மொகலாய இளவரசரும் சமஸ்கிருத அறிஞரும் வேதாந்தத்தில் தோய்ந்தவருமான தாரா ஷுகோ செய்த மொழி பெயர்ப்புகளே அவை. தாரா ஷுகோவின் அந்த மொழி பெயர்ப்புக்களும் வெறும் அறிவு ஆர்வத்தால் அல்ல, மாறாக அவருக்கு கிடைத்த ஆன்மிக அனுபவங்களினால் செய்யப்பட்டவை ஆகும். உதாரணமாக யோகவாசிஷ்டத்தை அவர் மொழி பெயர்த்தது கனவினில் ஸ்ரீ ராமர் வந்து அவரது வாயில் இனிப்பை கொடுத்து அவரை மொழி பெயர்க்க உத்தரவிட்ட காரணத்தால் நிகழ்ந்தது.
இவ்வாறாக உலகின் பெரும் பண்பாடுகளை இணைக்கும் ஆன்மிக பாலங்களாக வேதாந்த இலக்கியங்கள் திகழ்ந்தன. அவற்றில் பகவத் கீதை மானுடகுலத்துக்கு கிடைத்த முக்கியமான ஆன்மிக பொக்கிஷமாக விளங்குகிறது. இந்தியாவில் ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் வைசிராய் வாரன் ஹேஸ்டிங்கின் காலத்தில் தான் சார்லஸ் வில்கின்ஸ் (Charles Wilkins) எனும் இந்தியவியலாளரால் ஆங்கிலத்தில் பகவத் கீதை முதன்முதலாக மொழி பெயர்க்கப்பட்டது.
பகவத் கீதையின் செழுமை மேற்கத்திய இலக்கிய-கலை புத்தெழுச்சியின் பல முக்கிய ஆளுமைகளை வழி நடத்தியுள்ளது. புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரும், ஓவியருமான வில்லியம் பிளேக் (1757-1827) வில்கின்ஸின் பகவத் கீதை மொழி பெயர்ப்பினைப் படித்திருந்தார். அவரது “Bard’s Song” எனும் கவிதை பகவத் கீதையின் முக்குணங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான வர்ண அமைப்பு, ஸ்வதர்மம் ஆகியவற்றையே மூலமாகக் கொண்டு அமைந்திருந்தது. வில்லியம் பிளேக் தாந்திரீக பிரம்ம ஞானவாதியான ஸ்வீடன்பர்க்கினை தனது ஆன்மிக குருவாகவே (spiritual perceptor) கருதினார். ஸ்வீடன்பர்க் குறித்து எழுதிய கட்டுரையில் அந்தணர்களின் ஆதர்ச சமுக வடிவமைப்பு குறித்தும் எழுதினார். இதில் சார்ல்ஸ் வில்கின்ஸின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு பற்றியும் குறிப்பிடுகிறார் பிளேக்.
அவ்வாறே நவீன இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் மில்டனின் கவிதைகள் சிலவற்றி லும் பகவத் கீதையின் தாக்கத்தைக் கண்டறிகின்றனர். கோல்ட்ரிஜ்ஜின் (1772-1834) பல கவிதைகளிலும், அவரது வெளியிடப்படாத எழுத்துக்களிலும் பகவத்கீதையின் தாக்கம் மிகத் தெளிவாகவே இருப்பதாக ஆரய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கோல்ட்ரிஜ்ஜும் பகவத் கீதையின் வில்கின்ஸ் மொழிபெயர்ப்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
மேற்கத்திய மதப்பிரச்சாரகர்களுக்கோ பகவத் கீதையின் இந்த ஆன்மிக ஒளியானது பிரச்சனைகளையும் உண்டாக்கியது என்பதையும் சொல்லவேண்டும். உதாரணமாக பார்குவார் என்கிற மதப்பிரச்சாரகர் பகவத் கீதையே கிறிஸ்தவ மத தாக்கத்தினால் ஏற்பட்டது என்றும் கிருஷ்ண பக்தியே கிறிஸ்தவத்தின் திரிந்த விளைவுதான் என்றும் ஒரு கருத்தினைப் பரப்பினார். மதம் சார்ந்த கண்ணோட்டம் கொண்ட மேற்கத்திய இந்தியவியலாளர்கள் சிலரும் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தனர். ஆனால், கிமு ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தோ-கிரேக்க விஷ்ணு பக்தனால் எழுப்பப்பட்ட “ஹிலியோடரஸ் தூண்” என்றழைக்கப் பட்ட கருட ஸ்தம்பம் “பாகவத தர்மத்தின் பழமை கிறிஸ்தவத்துக்கும் முந்தையது” என ஐயந்திரிபறத் தெளிவாக்கியதை அடுத்து ஆதாரமற்ற இந்த பிரச்சாரம் வலுவிழந்தது.
மாக்ஸ் முல்லர் போன்ற இந்தியவியலாளர்கள் பகவத் கீதையை மிகவும் பாராட்டினர் என்றாலும், அத்தகையப் பாராட்டுக்களும் ஏக-இறைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. தம்முடைய மதமே உண்மையானதும் ஆதியானதும் என்றும், அதன் ஒரு சிதைந்த நிலையே இந்தியாவில் உள்ளது என்றும், ஆதி உண்மை மதத்தைச் சார்ந்து எஞ்சி நிற்கும் இலக்கியமே பகவத் கீதை என்றும் அவர்களால் பகவத் கீதை கருதப்பட்டது.
மத அடிப்படையில் இறையியல் அறிவு சார்ந்து, பகவத் கீதையினை மதப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக படித்த இந்தியவியலாள அறிஞர்களுக்கும், அதன் உள்ளொளியை ஆன்மிகம் சார்ந்த கலைவடிவில் அறிந்து கொண்டவர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை மேலே கூறிய பகுதியில் நாம் தெரிந்து கொள்ள முடியும். மதக்கோட்பாட்டு வரையறையை நிராகரித்து, பகவத் கீதையின் பிரபஞ்சம் தழுவிய ஆன்மநேய ஒருமைப்பார்வையைத் தழுவிக்கொண்டவர்களாக அமெரிக்க ஆழ்நிலை அறிவியக்க தத்துவ அறிஞர்களையே கூறவேண்டும்.
“என் தினத்தை உன்னதமாக்கியது பகவத் கீதை. நூல்களில் முதல் நூல் அது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் மகோன்னதம் நம்மிடம் உரையாடுவது போன்றதோர் மகத்துவம் அது – அதில் அற்பமானதென எதுவுமே இல்லை. ஆனால் மகா விசாலமானதும் அமைதி ததும்புவதும், சீரானதுமானதோர் ஆதி பேரறிவு மற்றோர் யுகத்திலிருந்து நாம் இன்று எதிர் நோக்கும் அதே கேள்விகளை உள்ளார்ந்து அறிந்து பதிலளித்துள்ளதாக அது அமைகிறது.” அமெரிக்காவின் மிகச்சிறந்த தத்துவ மேதையான ரால்ப் வால்டோ எமர்ஸன் (1803-1882) பகவத் கீதையை குறித்து எழுதிய வார்த்தைகள் இவை.
எமர்ஸனின் வேதாந்த நிலைபாட்டைக் காட்டும் கவிதையாகக் கருதப்படும் ‘பிரம்மா’ பாரதத்தின் முதல் சுதந்திர யுத்தம் நடைபெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் எழுதப்பட்டது. அக்கவிதையில் எமர்ஸன் எழுதினார்:
செவ்வீரன் கொல்வதாக நினைக்கின்றானெனில்
கொல்லப்படுவதாக கொலையுண்டவன் நினைத்து மாள்வானெனில்
இருவரும் அறியார்
நுண்ணார்ந்த மார்க்கங்களை அமைத்து
நான் அவை ஊடே செல்வதை செயல்படுவதை .
பகவத் கீதை எமர்ஸனின் தத்துவச் சிந்தனைகளில் ஒரு முக்கிய இடத்தை வகித்தது. அமெரிக்கப் பண்பாட்டின் திறந்த தன்மை மற்றும் அதில் காணப்படும் மானுடநேயத்தன்மைகளுக்கு எமர்ஸனுக்கே அமெரிக்கா நன்றி சொல்லவேண்டும். இவ்விதத்தில் அமெரிக்காவின் முற்போக்கு மானுடநேய சிந்தனைக்கும் பகவத் கீதைக்குமான உறவு மிகவும் ஆழமானது, நூற்றாண்டுகள் தாண்டியது.
மற்றொரு முக்கியமான அமெரிக்க சிந்தனையாளரான ஹென்றி டேவிட் தோரோ தமது இளமையில் எமர்ஸனின் சிந்தனைகளால் தாக்கம் பெற்றவர். பகவத் கீதையை ஆழ்ந்து பயின்றது மட்டுமல்லாமல் தமது வாழ்க்கையை அதன் ஒளியில் அமைத்து வேதாந்தத்தை செயல்முறைப்படுத்தவும் செய்தார் தோரோ.
“ஒவ்வொரு காலையிலும் என் சித்தம் பகவத் கீதையின் மகோன்னத பிரபஞ்ச தத்துவத்தில் மூழ்கி எழுகிறது. பகவத் கீதை ஓர் ஆதி யுகத்தில் தெய்வங்களின் காலத்தில் எழுதப்பட்டது. ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் நம் நவீன பிரச்சனைகளும் இலக்கியமும் அற்பமாக தெரிகின்றன” என அவர் எழுதினார்.
இன்று நியூஜெர்ஸியில் உள்ள ஸெட்டான் ஹால் பல்கலைக்கழகம் எனும் கத்தோலிக்க மதப் பல்கலைக்கழகம் பகவத் கீதையை தன்னுடைய மையப் பாடத்திட்டத்தில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் படிக்கவேண்டிய பாடங்களில் ஒன்றாக அறிவித்துளது. இப்பல்கலைக்கழகத்தின் முதலாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத்கீதை வைக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்ட நிர்ணயக்குழுவில் உள்ள அமர் எனும் பேராசிரியர் பகவத் கீதை குறித்து பரிந்துரைத்தார்.
இந்த மையப்பாடத்திட்டத்தில் வேதங்களை வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது; என்றாலும் அவை கடினமாக இருக்கும் என்பதால் பகவத் கீதை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பேரா.அமரைப் பொறுத்தவரையில் பைபிள் பல ஆன்மிக வழிகளில் ஒரு வழி மட்டுமே என்பதால் மாணவர்கள் ஏனைய பழமையான ஆன்மிக இலக்கியங்களையும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதால் பகவத் கீதையை அவர் பரிந்துரைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இங்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள பகவத் கீதை மொழிபெயர்ப்பு ஸ்டீவன் மிட்ச்சேல் என்பவருடையது. மேலும் பகவத் கீதையைக் கற்பிப்பவர்கள் எவரும் இந்திய பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் அல்லர்.
இந்தச் சிறிய குறைபாடுகளுக்கு அப்பாலும், பகவத் கீதை வகுப்புகள் மாணவர்களைக் கவர்கிறது என்பது சந்தோஷமான செய்தி. ஒரு மதம் சார்ந்த கல்வி நிறுவனம் மத வரையறைகளுக்கு அப்பாலான ஆன்மிக நூல்களைத் தமது மாணவர்களுக்கு எடுத்துச்செல்வது மிகவும் நல்ல விஷயமே ஆகும். மானுடம் முழுமைக்குமான ஒரு ஆன்மிக ஒருமைப்பாட்டை உருவாக்க அது வழிகோலும் என நம்புவோம். தம் மதமே உயர்ந்தது அல்லது எனது நூல் மட்டுமே உண்மை என்பது போன்ற நிலைபாடுகளினால் மானுடம் மிகவும் காயப்பட்டுவிட்ட இந்த வேளையில் பகவத் கீதையின் ஆன்மநேய ஒருமைப்பாடு உலகை ஒரு குடும்பமாக அன்பினால் ஒருங்கிணைக்கட்டும்.
துணைபுரிந்த நூல்கள்:
- தாரா ஷுகோ, மஜ்மா-உல்-பக்ரைன் பக்.25-26 (லக்பத் ராய், Sarmad His life and Rubais, 1978 பக்.12)
- சுவாமி ததாகதானந்தர், Light from the Orient, 2005 பக்..55-60
- காத்ரைன் ராபின்ஸன், Interpretations of the Bhagavad-Gita and Images of the Hindu Tradition: The Song of the Lord, 2006 பக்.77
- George Joseph, Gita study to be mandatory at Seton Hall University in New York, நவம்பர் 2008
பி.கு: இந்தக் கட்டுரையின் ஒரு வடிவம் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (ஜூன்-2009) இதழிலும் வெளிவந்துள்ளது.