நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

நான் ஏன் தலித்தும் அல்ல… இதுதான் புத்தகத்தின் தலைப்பு என்பதாலும் தன்னுடைய அனைத்து சிந்தனைகளிலும் (கட்டுரைகளிலும்) மைய இழையாக இந்த உணர்வே இருப்பதாக நூலாசிரியர் தர்மராஜ் சொல்வதாலும் முதலில் அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

தலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. அது நியாயமானதும் தவிர்க்க முடியாததும்கூட. ஏனென்றால் ‘இந்து என்பது ஒரு பொது அடையாளம் கிடையாது’ என்ற அரசியல் நிலைப்பாட்டுக்கு என்னவெல்லாம் காரணங்கள் சொல்லப்படுமோ அதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தலித் என்பதும் வலிந்து திணிக்கப்படும் அடையாளமே. ஏனென்றால், மேல் சாதி இந்துக்களுக்கும் கீழ் சாதி இந்துக்களுக்கும் இடையே மட்டுமல்ல தலித் என்று சொல்லப்படும் சாதிகளுக்கு இடையேயும் சம பந்தியோ, கலப்புத் திருமணமோ, பொது வாழ்விடமோ, வேலைப் பரிமாற்றமோ எதுவும் இருப்பதில்லை. எனவே, ஒரு தலித்தைப் பார்த்து, ‘நீ இந்து அல்ல’ என்று புதிய எஜமானர்கள் சொன்னால் ‘நான் தலித்தும் அல்லதானே’ என்றுதான் பதில் கேள்வி கேட்பார். அதே நியாயமான கேள்வியையே தர்மராஜும் வேறு கோணத்தில் கேட்கிறார். ஆனால், ‘தலித்’களின் மீது வன்முறையும் அவமானப்படுத்தல்களும் இன்னபிற ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் துயரத்தில் பங்கெடுக்கவும் அந்தப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்ளவும் விரும்பித் தன்னை தலித் என்று உரக்க முன்வைக்க அவருடைய இன்னொரு மனம் உந்துகிறது. ஆக, அவர் தன்னை தலித்தாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாமலேயே தலித்தாக அடையாளப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இதை அவர் பிளவுண்ட நிலையாக, ஒன்றுக்கொன்று முரணான அடையாளங்களைச் சுமந்து செல்ல நிர்பந்திக்கப்பட்ட நிலையாகச் சொல்கிறார். உண்மையில் இதில் குழப்பத்துக்கோ குற்ற உணர்ச்சிக்கோ இடமே இல்லை.

naan_en_dalitum_alla_book_coverதானொரு தலித் அல்ல என்பதை சுய ஜாதி (பள்ளர்) அபிமானத்தினால் சொல்லவில்லை; இந்து என்ற பெரும் அடையாளத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அதனால் தலித் என்பதை மறுக்கவும் இல்லை. தலித் என்பது ஒருவித மதமாக இருக்கிறது; அது உரையாடலுக்கு இடமளிப்பதாக இல்லை என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லி தலித் என்ற அடையாளத்தை நிராகரிக்கிறார். இதற்காக அவர் சொல்லும் அனைத்துக் காரணங்களும் மிகவும் நியாயமானவையே.

‘நீ ஏன் தலித்தும் இல்லை என்று கேட்டால் நான் இப்படித்தான் பதில் சொல்வேன்: அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். ‘நான்’ என்பதை யோசிப்பதற்கு அதற்கு அவகாசமோ அவசியமோ இருக்கவில்லை. சொல்லப்போனால், அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார்.

இது முழுக்கவும் நியாயமான வாதமே.

ஆனால், தலித்துக்கு அநீதி இழைக்கப்படும்போது அதற்காகக் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது; அதுவும் தலித்தாக அடையாளப்படுத்திக்கொண்டு அதைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று குற்ற உணார்ச்சி மேலிட அங்கலாய்த்துக்கொள்கிறார். இதில் அங்கலாய்க்கவோ குற்ற உணர்ச்சிகொள்ளவோ எதுவுமே இல்லை. ஓர் அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும்போது அந்த அநீதிக்கு ஆட்படுத்தப்பட்டவருடன் நமக்கு வேறு வகை நெருக்கம் இருந்தால் அது சார்ந்தும் சீற்றம் கொள்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? ஒரு தலித்துக்கு குரல் கொடுக்க நேரும்போது தலித்தாகக் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறதே… என்னவொரு சபிக்கப்பட்ட நிலை என்று எதற்காகக் குறைபட்டுக்கொள்ளவேண்டும். எதற்காக அதை வலிந்து திணித்துக்கொள்ளும் அடையாளமாகச் சொல்லவேண்டும்.

ஒருவேளை தலித் என்பதால் யாருக்கேனும் ஏதேனும் சலுகை செய்தால் அப்போது வேண்டுமானால் குற்ற உணர்ச்சி கொள்ளலாம். தலித் அல்ல என்று நூறு காரணங்களை மூளை சொன்னாலும் கடைசியில் குழு மனப்பான்மை உணர்வுடன் முறைகேடான செயலைச் செய்துவிட்டோமே என்ற வருத்தம் வந்தால் அது நியாயம். உண்மையில் நான் தலித்தா… தலித் அல்லாதவனா என்ற குழப்பம் அங்குதான் வரவேண்டும். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிவருவதை உற்சாகத்துடன் வீராப்புடன் அல்லவா செய்யவேண்டும். நாயக்கன் கொட்டாய் வன்முறையைக் கண்டித்துப் பேசுகிறாயா… நீ தலித் என்பதால்தான் அப்படிப் பேசுகிறாய் என்று யாரேனும் சொன்னால், ‘ஆமாம்… நாம் தலித் என்பதால்தான் கோபம் அதிகமாக வருகிறது’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?

இந்த நவீன, விஞ்ஞான நாகரிக உலகிலும் இந்தவகைக் கொடுமைகள் நீடிப்பது குறித்துத்தான் வருத்தப்படவேண்டுமே தவிர அதற்காக எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டிவருவதை அதுவும் சகோதரனுக்கு இழைக்கப்படும் அநீதியாக அதை எதிர்க்கும்போது எந்த தயக்கமும் கொள்ளத் தேவையே இல்லை. சாதாரண நாட்களில் நான் உன்னிடமிருந்து விலகி என் பணிகளை கவனித்துக் கொள்வேன். நீ நோயுறும் நேரத்தில் உன் அருகில் வந்து நின்று கவனித்துக்கொள்வேன் என்பது ஒன்றுக்கொன்று முரணான விஷயங்கள் அல்ல. எனவே, நான் ஏன் தலித்தும் அல்ல என்று தலித் லாபியைச் சீண்டும் தலைப்பைவிட நான் தலித்துதான்…. அதே நேரம் தலித் மட்டுமே அல்ல என்றோ நான் தலித்தும் கூட… என்றோதான் சொல்லியிருக்கவேண்டும். அதாவது, எல்லா நேரமும் தலித் அரசியல் சட்டகத்துக்குள் மட்டுமே இருந்து செயல்படமாட்டேன். தலித் என்ற சட்டகம் என் உடல் அல்ல. சட்டை மட்டுமே. ஆனால், என் அம்மணத்தை மறைக்கவும் தூசி வெப்பத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவும் சட்டை என்று சொல்வதுதான் சரி.

மேலும் தலித் என்ற அடையாளப்படுத்தல் சார்ந்தே சலுகைகளும் ஒதுக்கீடுகளும் செய்து தரப்பட்டிருக்கும்போது அதை முழுவதுமாக அனுபவிக்கும் ஒருவர் அந்த அடையாளத்தை மட்டும் பாரமாக ஏன் கருதவேண்டும். பிற சாதியைச் சேர்ந்த ஒருவர் தன்னை தலித்தாக உணர்வுரீதியாக அடையாளப்படுத்த விரும்பினால், சாதி சமூகம் அவருக்குத் தந்திருக்கும் அனைத்து சலுகைகளையும் அதிகாரங்களையும் துறந்துவிட்டு வரவேண்டும் என்று மிகவும் சரியாகச் சொல்லும் தர்மராஜ் அந்த நியாயத்தைத் தனக்கும் சொல்லிக் கொள்வது நல்லது.

உண்மையில் தலித் என்ற அடையாளத்தை மறுப்பதும் தலித்தாக அடையாளப்படுத்திக்கொள்ள நேர்வதும் தர்மராஜ் சொல்லியிருப்பதுபோல் ஒன்றை ஒன்று மறுதலிக்கும் அம்சங்களே அல்ல. தனித்தனியான நிகழ்வுகளுக்கான தனித்தனியான எதிர்வினைகளே. மேலும் உண்மை மற்றும் நேர்மையில் இப்படியான மயக்கங்களுக்கு இடமில்லை. அரசியல் கணக்குகள் போடுபவருக்கே இது சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, சாதி வெறிக் கொலைகளை ஒரு தலித்தாக வன்மையாக அவர் வெளிப்படையாகவே கண்டிக்க முடியும். அதே நேரம் திருமாவளவன் தலித்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது அல்லது தலித்களுக்கு அதீத நன்மை தரும் முறையற்ற செயலைச் செய்யும்போது தர்மராஜ் பொது அடையாளத்தில் நின்றுகொண்டு விமர்சிக்கவும் முடியும். இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றை ஒன்று மறுதலிப்பவை அல்ல. ஒன்றை ஒன்று செழுமைப்படுத்துபவையே. இரண்டுக்கும் அடிநாதமாக இருப்பது தலித் நலன், விடுதலை வேட்கை மற்றும் சத்திய வேட்கை மட்டுமே. அரசியல் மற்றும் பொருளாதாரக் கணக்குகள் போடும் மனங்களுக்குத்தான் தடுமாற்றம் வரும். தலித்தாக இளவரசன் கொலையைக் கண்டித்திருக்கிறோம். அது சரிதான். திருமா செய்வதை விமர்சிப்பது நம்மை தலித் அல்ல என்று ஆக்கிவிடுமே. சில ஆதாயங்களை அதனால் இழக்க நேருமே… நாம் தலித் அரசியலைப் பேசுவதா… தலித் அறத்தைப் பேசுவதா என்ற குழப்பம் அரசியல் மனதுக்குத்தான் வரும். ஏனென்றால், தலித் நலன் என்ற உயரிய லட்சியம் மனதில் இருந்தால் உரிமைக்குரலும் சுய சாதி விமர்சனமும் பொது அடையாள வேட்கையும் இயல்பாகவே நிகழும். அரசியல், லௌகீகக் கணக்குகள் மனதில் இருந்தால்தான் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் குழப்பமானதாகவும் தோன்றும். தர்மராஜின் அரசியல் குழப்பங்கள், அவருடைய அறிவுஜீவிச் சிந்தனைகளின் குறைபாடாகத்தான் இருக்கும்; லௌகீகக் கணக்குக் கூட்டல்களாக இருக்காது என்று நம்பவே விரும்புகிறேன்.

இந்த அடிப்படையில் பார்த்தால் புத்தகத்தின் தலைப்பு நான் தலித் மட்டுமே அல்ல என்று இருப்பதுதான் நியாயம். தலித்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது நான் தலித்தாக குரல் கொடுப்பேன். தலித்கள் தவறு செய்தால் பொது அறம் சார்ந்து அதையும் விமர்சிப்பேன் என்பதுதான் நேர்மையான குரல். அந்த வகையில் நான் தலித் அரசியல்வாதி அல்ல; நேர்மையான தலித் அறிவு ஜீவி என்றுதான் சொல்லியிருக்கவேண்டும். ஏனென்றால், தர்மராஜ் பிறப்பால் பள்ளர். தலித்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படும்போது ஒரு தலித்தாக தன்னை உணர்கிறார். இந்து சமயத்தை மறுதலிக்கிறார். ஆனால், நாட்டார் வழிபாடுகள், சடங்குகள் மீது கரிசனம் கொண்டவராகவே இருக்கிறார். தமிழ் அடையாளங்கள் மீதும் ஓரளவு அக்கறை கொண்டவராகவே இருக்கிறார் (ஜே.என்.யு.வில் இருந்தபோது தீபாவளி, பரதநாட்டியம் போன்றவற்றை ஓரங்கட்டிவிட்டு பொங்கல், தமிழர் கலைகள் என செயல்பட்டுவந்திருக்கிறார்). அயோத்திதாசரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் தன்னை பூர்வ பௌத்தராக அடையாளப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார். அப்படியாகத் தன்னை அனைத்து அடையாளங்களுடனும் இணைத்துக்கொள்பவராகவே இருக்கிறார். அதாவது எல்லாமாகவும் இருக்கிறார். ஆனால், தலைப்பிலோ நான் எதுவுமே அல்ல என்ற தொனி வரும்வகையில் நான் தலித்தும் அல்ல என்று சொல்லியிருக்கிறார். I am either Pallar Or Dalith Or Tamil. But actually I am Poorva buddhan இதுதான் அவருடைய நிலை. ஆனால், அவரோ. I am neither Pallar Nor Dalith Nor Tamil என்ற அர்த்தம் வரும் வகையில் தலைப்பை வைத்திருக்கிறார். இது முற்றிலும் தவறான அடையாளப்படுத்தல்.

தலித்தாக இருக்கும்படி சபிக்கப்படுவது தொடர்பான குழப்பம் அடிப்படையில் மனதின் வேறு தளத்தில் இருந்திருக்கக்கூடும். எனது தலித் நண்பர் ஒருவர் என்னிடம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் தலித்களின் பொற்காலத்தில் வாழ்கிறார். பிறருக்கு எத்தனை முட்டினாலும் திறக்காமல் கருங்கல் சுவராக இருக்கும் பலதும் தலித்களுக்கு எளிதில் நுழையும் கதவாக ஆகிவிட்டிருக்கும் காலம் இது. அவருடைய வாழ்க்கையிலும் தலித் என்பதால் சில அவமானங்கள் அடைய நேர்ந்திருக்கும் என்றாலும் தலித் என்பதால் அவருக்குக் கிடைத்த நன்மைகள் அதைவிட அதிகமே. அவருடைய முன்னோர்களுக்குக் கிடைத்திராத ஒரு நற்பேறு அது. ஆனால், இன்றும் சாதிக் கொடூரத்தின் கிணற்றுக்குள் விழுந்து கிடப்பவர்கள் ஏராளம். கடந்த காலத்தில் தலித்கள் இந்திய சமூகத்தின் ஆகக் கடைசி தட்டில் இருந்து துயரம் அனுபவித்தவர்களே.

ஆக என் சொந்த அனுபவங்கள் அடிப்படையில் நான் இன்றைய சமூகத்தின் செல்லப்பிள்ளை. ஆனால், இவை எல்லாமே இந்த சமூகம் செய்த நேற்றைய தவறுகளுக்கான பிராயசித்தமாக எனக்குக் கிடைத்தவையே. என் அப்பாவை அடித்தவர்கள் எனக்கு ஆரஞ்சுப் பழத்தை உரித்து உரித்து ஊட்டுகிறார்கள். இன்று நான் ஆரோக்கியமானவன். ஆனால், தீவிர கவனிப்பு எனக்குத் தரப்படுகிறது. இன்று நான் பணக்காரன்… ஆனால், ஏழையாக நடித்தாக வேண்டியிருக்கிறது. எனக்கு இன்று சில சலுகைகள் தரப்படுகின்றன. அவை என்னைக் கூனிக் குறுக வைக்கின்றன. அந்தச் சலுகைகள் எனக்கு உவப்பாக இருந்தாலும் அவை சலுகை என்ற முத்திரையுடன் தரப்படுவதால் எனக்குள் கூனிக் குறுகுகிறேன். 90 மதிப்பெண் பெற்ற மேல் சாதிக்காரனுக்குக் கிடைக்காத இடம் 80 மதிப்பெண் பெற்ற எனக்குக் கிடைக்கிறது. அந்த வேலையும் பதவியும் பள்ளி இடமும் எனக்குத் தேவைதான். ஆனால் அது எனக்கு சலுகையாகத் தரப்படுவது பிடிக்கவில்லை. பள்ளிகளில் கற்றுத் தரப்படும் படங்கள், தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வி பதில்கள் எல்லாமே எனக்கு அந்நியமானதாக இருக்கின்றன. அதில் என்னால் 80 மதிப்பெண்தான் எடுக்க முடிந்தது. அந்தப் பாடங்கள் என் வாழ்க்கை மற்றும் சூழல் சார்ந்ததாக இருந்தால் நான் 90 மதிப்பெண்கள் பெற்றிருப்பேன். அப்போது நான் சலுகை மூலமாக அல்லாமல் கவுரவமாகவே அந்தப் பதவியை எட்டியிருப்பேன். ஆக, சலுகை அல்ல… தேர்வுகளில் கொண்டுவர வேண்டிய மாற்றமே மிகவும் அவசியம்  என்று சொன்னான். இதுதான் நியாயமான குழப்பம்.

dalit_water

நல்ல செல்வச் செழிப்பில் இருந்த அவனுக்கு தாழ்த்தப்பட்டவன் என்ற முத்திரையுடன் இலவச புத்தகங்கள் கொடுக்கப்பட்டபோது அதை ஒருவித அவமானப்படுத்தலாகவே பார்த்தான். சலுகைகள் எனக்குத் தேவையே… ஆனால், அதற்காக என்னை இழிந்தவனாகச் சித்திரிப்பதில் உடன்பாடில்லை என்று சொன்னான். உண்மையில் இது பொருட்படுத்தப்படவேண்டிய உணர்வுதான். இன்றைய நிலையில் தலித் என்ற அடையாளம் அப்படியான மிகைத்தன்மையைக் கொண்டதாகவே இருக்கிறது. தீண்டப்படாதவர்கள் எல்லாரும் இரவானால் கையில் தட்டேந்தி பிச்சை எடுத்தபடி அலைந்தவர்களாகவே அம்பேத்கர் சொல்கிறார். எங்கோ ஒரு தலித் சமூகம் அறுவடைக்காலத்தில் களத்து மேட்டில் சூடடிக்கும் மாடுகள் தின்று கழித்த சாணத்தில்  இருக்கும் நெல்மணிகளை அலசி எடுத்துச் செல்லும்படி நிர்பந்திக்கப்பட்டிருப்பதைச் சொல்லி தலித்கள் எல்லாருமே அப்படியான நிலையில் இருந்ததாகச் சொல்கிறார். இப்படி தலித் என்ற பெருந்திரளுக்கு வெவ்வேறு இடங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தலித் என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார்.

இது எப்படி என்றால் ஒரு மருத்துவமனைக்குச் செல்லும் நபர் அங்கு இருக்கும் 100 நோயாளிகளின் நோய்கள் அனைத்தையும் ஒரே நபருடைய நோயாகச் சொல்லி சிகிச்சை தரச் சொல்வதைப் போன்றது. தலித் என்ற பிரிவுக்குள் இருந்த பல சாதிகள் நில உடமையாளர்களாகவும் குத்தகைதாரர்களாகவும் தலை நிமிர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து மாட்டுச் சாணியில் இருந்து எடுத்த நெல்மணிகளைக் கழுவி எடுத்த சமூகத்தோடு இணைத்துச் சொன்னால் வருத்தமாகத்தான் இருக்கும். அப்படிச் சொல்லிக் கிடைக்கும் சலுகையை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருக்கும். ஆனால், அதைச் சொல்லி இழிவுபடுத்தினால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கமாட்டார்கள். இது சிக்கலான நிலைதான்.

சாதி ஆணவக் கொலை பற்றிய கட்டுரையில் சாதி வீட்டுப் பெண்கள் (‘மேல்’ சாதிப் பெண்களை அப்படிக் குறிப்பிடுகிறார்) தலித் ஆண்களை விரும்புவதை, இறுக்கமான ஆணாதிக்கத்தளைகளில் இருந்து விடுதலை பெற எடுக்கும் முயற்சியாகச் சொல்கிறார். குறிப்பாக, கிராமத்தை விட்டு தப்பிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய இலக்காக இருப்பதாகவும் ஏற்கெனவே கிராமத்து வாழ்க்கையில் பெரும் வேதனையில் இருக்கும் தலித் ஆண்களை சக ஓட்டக்காரராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நகரத்தை நோக்கி இடம்பெயர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். சாதி வீட்டுக்காரர்கள் அனைவரும் தமது வீட்டுப் பெண்களை மாமனுக்குக் கட்டிக் கொடுக்கத் தேவைப்படும் பிராய்லர் கோழிகளாக வளர்ப்பதாகவும் எல்லைதாண்டிச் சொல்கிறார். கொஞ்சம் மேல் நிலை அடையும் தலித் ஆண்கள் தலித் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை என்று ராஜ் கௌதமன் நேர் பேச்சிலோ கட்டுரையிலோ சொன்னதாக ஞாபகம். எல்லா தலித் ஆண்களுக்குமே அவர்களைவிட மேல் சாதிப் பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பு என்பது சொந்த சாதிப் பெண்கள் மீதான தாழ்வான மனப்பான்மைதான் காரணமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையைப் படித்தபோது ஏற்பட்டது.

நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். ஆதிக்கம் செலுத்த விரும்பும் தரப்பு அப்படிப் பார்க்கும்போது அடங்க மறுக்கும் தரப்பும் அப்படிப் பார்ப்பதில் தவறில்லைதான். ஆனால், இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் ஓரளவுக்கு சுமுகமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டிருப்பதையும் சமூக ஆய்வாளர்கள் கணக்கில் கொண்டாகவேண்டும். ஏனெனில் அதுவே நடைமுறையில் அதிகம். நூலாசிரியரின் தாத்தா-பாட்டிகூட அப்படியான சாதி கடந்த திருமணம் செய்துகொண்டவர்கள்தான்!

மேலும் இந்தக் கட்டுரையில் தர்மராஜ் கிராமத்தை தலித்களின் கொடும் கனவாகச் சித்திரிக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், கிராமத்தை விட்டு ஓடுவதில் தலித்களுக்கு இணையாகவே பிராமணர்களும் இன்ன பிற மேல் சாதியினரும் துடிப்புடனே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் கிராமம் என்பது சலிப்பூட்டும் இடமாகவே மாறிவிட்டிருக்கிறது. உண்மையில் மேல் சாதியினர் புதிய அதிகார மையங்களையும் பொருளாதார வாய்ப்புகளையும் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கும் நிலையில் தலித்களும் இடைநிலை சாதியினரும் கிராமங்களைத் தமது கோட்டையாக வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால், தலித்களும் நகரங்களை நோக்கி நகர்ந்து குப்பங்களை உருவாக்கிக்கொண்டு முறை சாரா தொழிலாளியாக நகரத்தின் விளிம்பில் ஒட்டிக்கொள்வதில் பெரிய விடுதலை எதுவும் இல்லை ( அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் கண்ணியமான வேலை பெறும் தலித்களின் எண்ணிக்கை பத்து சதவிகிதம்கூட இருக்காது. தலித்களில் பெரும்பாலானவர்கள் இன்றும் கிராமத்தில்தான் இருக்கிறார்கள்).

நகரத்தில் கிராமத்தைப்போல் சாதி அடையாளம் நெருக்கடி மிகுந்ததாக இருக்காது. குலத்தொழிலைச் செய்தாகவேண்டிய நிர்பந்தம் கிடையாது. அடிமட்ட வேலைகளில் எந்த வேலையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இவையெல்லாம் நகரம் தரும் விடுதலை என்றாலும் அது உண்மையில் விரும்பத்தகுந்த ஒன்றல்ல. கிராமங்களை உயர் சாதியினர் கை விட்டுச் சென்றிருக்கும் நிலையில் தலித்களும் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் விவசாயத்தையும் சிறு தொழில்களையும் முன்னெடுத்து தங்கள் வாழ்க்கையை தற்சார்புடையதாக ஆக்கிக்கொண்டிருக்கவேண்டும். நேற்றைய நிலவுடமைச் சமுதாயத்தில் காலாக இருந்தவர்கள் இன்றைய நவீன சமுதாயத்தின் வாலாக மாறி இருப்பதை வெற்றி என்றோ விடுதலை என்றோ நிச்சயம் சொல்லவே முடியாது. இன்று எந்த தலித்துக்கும் அக்ரஹாரத்தில் நுழையவோ ஏன் அக்ரஹார வீட்டை விலைக்கு வாங்குவதிலோ கூட எந்தத் தடையும் இல்லை. நில உடமையாளராக ஆக எந்தத் தடையும் இல்லை. தலித் அரசியல்வாதிகளும் தலித் பொருளாதாரச் சிந்தனையாளர்களும் கிராமங்களில் என்னென்ன தொழில்களைத்தொடங்கி தலித்களை மேல் நிலைக்குக் கொண்டுவரமுடியுமோ அதைச் செய்வது மிக மிக எளிது. ஆனால், அதை யாரும் செய்திருக்கவில்லை.

இந்த இடத்தில்தான் கிராமத்தை நரகமாகச் சித்திரிக்கும் சிந்தனைகளின் பிழை வெளிப்படுகிறது. நேற்றைய நில உடமைச் சமுதாயத்தில் கிராமம் கடைநிலை சாதியினருக்கு உரிய வசதிகளைத் தராமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு தலித்களுக்கு அது கைவிடப்பட்ட சொர்க்கமாகக் கிடைத்திருக்கிறது. அக்ரஹாரத்தில் ஒரு வீடு… குடும்பத்துக்குத் தேவையான நெல், கீரை, காய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்துகொள்ளும்படியாக ஒரு ஏக்கர் நிலம்… ஆடு, மாடு, கோழி, பன்றி என வளர்த்துக்கொள்ள சிறு பண்ணைகள் (விவசாயத்துக்குத் தேவையான இயற்கை உரங்கள் இவற்றில் இருந்தே கிடைக்கும்), வயலின் கரையோரமாக வேம்பு, மா, கருவேப்பிலை என மரங்கள் என சுய சார்பு நிறைந்த எளிய வாழ்க்கையை கவுரவமாக அவர்களால் முன்னெடுக்க முடியும். அப்படியாக வண்ணார், சக்கிலியர், தோட்டி, வெட்டியான் என விவசாயம் சாராத தலித்களின் அடுத்த கட்ட நகர்வு என்பது தன்னிறைவு பெற்ற விவசாயியாக ஆவதாக ஆகியிருந்தால் அதுவே உண்மையான விடுதலையாக இருந்திருக்கும். ஆனால், கிராமத்தை விட்டு நகருக்கு இடம்பெயர்ந்தவர்கள் இன்று சென்னை போன்ற பெரு நகரத்தின்  கூவக்கரைகளில் குடிசைகள் போட்டுக்கொண்டு மூட்டை தூக்குதல், வீட்டு வேலைகள், கை வண்டி இழுத்தல், வாகன பழுது நீக்குதல் என எடுபிடிப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இதில் பொருளாதார தற்சார்பும் இல்லை. சமூக கவுரவமும் இல்லை. கிராமத்து நரகத்தில் இருந்து நகரத்து நரகத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்; கிராமத்தை சொர்க்கமாக்கிக் கொள்ளும் அனைத்து வாய்ப்புகளையும் மறுதலித்துவிட்டு!

dalitstreetsweepersகிராமங்கள் மீதான வெறுப்பு பண்டிட் நேருவுக்கு இருந்ததில் வியப்பில்லை. மேல் தட்டு மனநிலை கொண்டவர்களுக்கும் நவீன தொழில் மய மோகம் கொண்டவர்களுக்கும் மேற்கத்திய கார்ப்பரேட்டிஸ தாசர்களுக்கும் விவசாயமென்பது கைவிடப்படவேண்டிய தொழிலே. விஷயம் என்னவென்றால் தலித் போராளிகளும் அதை வழிமொழிபவர்களாகவே இருக்கிறார்கள். கடந்த காலத்தில் கிராமங்கள் ஆதிக்க சாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தால் இன்றைய கிராமத்தையும் வெறுக்கிறார்கள். விவசாயம் நசிந்துபோன தொழிலாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் அதற்கு அவர்தான் முதலும் கடைசியுமான காரணம். ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் விவசாயத்தை தற்சார்புக்கான வேலையாகப் பார்க்கவேண்டுமே தவிர வியாபாரமாகப் பார்க்கக்கூடாது. வேதி உரங்களை நாடிச் செல்லக் கூடாது. வயலிலேயே சிறு குட்டை அல்லது கிணறு ஒன்றைத் தோண்டிக்கொண்டு பாதி நிலத்தில் நெல் அல்லது கோதுமை, மீதியில் கீரை, தக்காளி, மிளகாய், வெங்காயம், வெண்டை என வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். குறு விவசாயிகள் விவசாயத்தை தமது குடும்பத்து உணவுத் தேவைக்கான வேலையாக மட்டுமே பார்க்கவேண்டும். முழுவதிலும் நெல் அல்லது வேறு பணப்பயிரைப் போட்டு அதை விற்க முடியாமல் திணறி உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது.

இது எப்படியென்றால் சமைக்க முடிந்த  குடும்பத்தினர் அனைவருமே சரவண பவன் நடத்த முற்படுவதைப் போன்றது. ஹோட்டல்கள் எல்லாம் பெரு முதலாளிகளுக்கானது. ஒவ்வொரு வீட்டினரும் தமக்கான உணவைத் தாமே சமைத்துக்கொண்டால் போதும். விற்பனைக்கு செய்து அனுப்பத் தேவையில்லை. அதுபோல்தான் குறு விவசாயிகள் தமது தேவைக்கு வேண்டியதை தாமே உற்பத்தி செய்துகொண்டால் போதும். அவர்கள் ஒருபோதும் அதை வியாபாரமாகச் செய்ய வேண்டியதில்லை. இப்படிச் செய்தால் எந்த விவசாயிக்கும் நஷ்டம் வராது. தற்கொலை செய்துகொள்ளவேண்டிய தேவை வராது. தற்சார்புடன் விவசாயத்தை கவுரவமாகச் செய்துவிட முடியும். அந்த வகையில் ஏராளமான நிலம் இருக்கும் கிராமங்கள் தலித்களின் சொர்க்க பூமியாக முடியும். அவர்கள் முழுக்க முழுக்க விவசாயத்தில் ஈடுபடலாம். பெரு விவசாயிகள் மட்டுமே தானிய விற்பனையில் ஈடுபட்டால் போதும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வயலிலும் குட்டைகள், சிறு கிணறுகள் வெட்டிக் கொண்டு மழைக்கால நீரைச் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். சொட்டு நீர்பாசன வசதியை எளிதில் செய்து கொள்ளலாம் (வறண்ட பூமியான ராமநாதபுரத்தில் சீக்கிய விவசாயிகள் இதைச் செய்து வருகிறார்கள்). மாடுகளிடமிருந்து கிடைக்கும் பாலை அமுல் இந்தியா போல் கூட்டுறவு மூலம் விற்றுக் கொள்ளலாம். நகரங்கள் இன்று மேல் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே அங்கு வந்து அவர்களுடன் மோதுவதைவிட தலித்கள் கிராமத்தில் தனிக்காட்டு ராஜாவாக வாழ முடியும். அரசுப் பணி மற்றும் பெரிய தனியார் நிறுவன வேலைகளில் சேர முடிந்த பிற தலித்கள் கிராமப்புறங்களில் நிலங்களை வாங்கி சக தலித்களுக்கு அதைக் கொடுத்து தன்னிறைவுடன் வாழ வழி செய்துதரவேண்டும். இந்து நிறுவனங்கள், இஸ்லாமிய – கிறிஸ்தவ நிறுவனங்கள், அரசு திட்டங்கள் என அனைத்தையும் பயன்படுத்தி தலித்களை பொருளாதாரச் தற்சார்புடன் வாழ வழி செய்து தரலாம். இதற்கு கிராமம் பற்றிய பார்வை மாறவேண்டும். சிங்கங்களும் புலிகளும் வெளியேறிவிட்ட காடு மானுக்கும் முயலுக்கும் சொர்க்கம்தானே… எதற்காக அவை சிங்கம் சென்றிருக்கும் புது இடத்துக்குச் சென்று அங்கும் இரையாகவேண்டும்?

(தொடரும்)

4 Replies to “நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1”

 1. அருமையான கட்டுரை.தீண்டாமையை எந்தவிதத்திலும் ஞாயப்படுத்தாமல் கவனமாக எழுதப்பட்டுள்ளது.பாராட்டுக்கள்.சற்று முன்னேற்றம் பெற்ற தலீத் தங்களை தலீத் ஆக அடையாளம் காண விரும்புவதில்லை.பிற சாதி இந்து பெண்களையேவிரும்புகின்றாா்கள் என்பதெல்லாம் உண்மையே.

 2. இப்படி நீண்ட கட்டுரைத்தொடராக ஒரு நூலுக்கு மதிப்புரை. எப்படி படிக்க முடியும்? நூல் மதிப்புரை இவ்வளவு நீளமாகவா போடுவார்கள்? கொஞ்சம்தான் படித்தேன். தொடக்கத்திலேயே ஒன்றை வெளிப்படுத்திவிட்டதால், அது இக்கட்டுரைத்தொடரை an exercise in futility என்றாக்கி விடுகிறது.

  அது என்ன? கட்டுரையின் சொற்கள்:

  //தானொரு தலித் அல்ல என்பதை சுய ஜாதி (பள்ளர்)//

  ஆம், தருமராஜ் ஒரு பள்ளர்.

  முதலில் ஒன்றை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். தலித் என்ற அடையாளம் தற்போது பெரிதும் புழங்கும் சொல். இதைத்திணித்தோர் மராட்டி தலித்துக்கள். அம்பேத்கர் மட்டுமன்று அவரைவிட பெரிய மராட்டி தலித்து தலைவர்களின் மனோ ஆதிக்கம் அங்கே அம்மக்களிடம் பரவ, அவர்களுள் இந்து எதிர்ப்பாளர்கள் பவூத்த மதத்துக்கு மாற, அவர்கள் காந்தி தந்த ஹரிஜன் என்ற சொல்லிவிட்டுவிட்டு, தலித்து என்ற ‘ஒடுக்கப்பட்டவர்கள்; என்ற பொருள்படும் மராட்டிச்சொல்லை கையாளத் தொடங்கி தங்களை இந்து என்ற வளையத்து அப்பாற்பட்டவர்களாகக் காட்டிக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி ஆதிதிராவிடர் என்ற சொல்லை அறிமுகப்படுத்தி இம்மக்களில் உள்ள அனைத்து பிரிவுகளையும் இணைத்து அரசுத் தொடர்பான புள்ளியியல் கணிப்புக்கு (சாதிச் சான்றிதழ் வழங்குதல் போன்று) பயன்படுத்தினர்.

  இச்சொல் அருமையான சொல். இதைவிட்டு ஏன் தலித்து?

  அது கிடக்க.

  டாகடர் கிருஸ்ணசாமியும் திருமாவளவனும் தங்கள்தங்கள் பிரிவுகளுக்காக தனித்தனி கட்சிகள் நடாத்தி வருகின்றனர். முன்னவர் பள்ளருக்காக, பின்னவர் பறையர்களுக்காக. அருந்ததியர்களுக்காகவும் தனிக்கட்சி தற்போது உண்டு. முன்னவர் சொன்னார்: எங்கள் ஜாதிக்கு ஆதி திராவிடர் என்ற குடைச்சொல் தேவையில்லை. நாங்கள் தேவேந்திர குல வேளாளர்கள். பள்ளர்களைத் தவிர ஏராளம் இருக்கும் பல தலித்து ஜாதிகளோடு தங்களை இணைத்துக்காட்ட‌ விரும்பவில்லை இப்பள்ளர்கள்.

  எவருக்குமே தான் தலித்து; அல்லது ஆதி திராவிடர் என்ற சொல்லால் இழிவுணர்வு வருகிறது என்று மனக்கலக்கம் இல்லை. பள்ளர்களுக்கு மட்டுமே வரும். தர்மராஜ பள்ளர். எனவே அம்மனப்பிரச்சினை அவருக்கு.

  விமர்சகருக்கு இது தெரியவில்லை. அப்பாவி விமர்சகர் இவர். யார் சொன்னாலும் நம்பிறார்.

  நூலை எழுத தருமராஜிக்கு தகுதியே இல்லை. தான் ஆதிதிராவிடன் இல்லை. ஏனென்றால், ஆதிதிராவிடர்கள் என்போர் எமக்கு ஈடாக மாட்டார் என உயர்ஜாதித்திமிர் கொண்ட ஒருவர் எப்படி தலித்து மனநிலை பற்றிய நூலெழுத முடியும்?

  உன்னால் ஃபீல் பண்ணமுடியலேன்னா போ. பறையன், சக்கிலியன், புலையன், சாம்பவன், வள்ளுவன் பண்ணிக்கொள்வான். அவன் எவனுக்கும் இந்த உயர்ஜாதித்திமிர் இல்லை. அவர் கேட்பதெல்லாம் வலிய வந்து அவமானப்படுத்தாதீர்கள் என்பதுதான். “எங்கள் பரம்பரை ஆண்ட பரம்பரை; பேண்ட பரம்பரை” என்று சொல்லி யான் கேட்டதிலலை. பள்ளர் மட்டும்தான் நாங்கள் பள்ளர்கள் அல்ல. தேவேந்திர குல வேளாளர் எனப்பேரை மாற்றிக்கொண்டார்! ஒரு சிலரைத் தவிர எல்லாரும் சிலுவைதான். விமர்சகர் போய்ப்பார்த்துக்கொள்ளலாம். ஏ சி ரூமில் உட்கார்ந்து சோஷியாலஜி படிக்க முடியாது விமர்சகர் சார். களப்பணியே கண்ணைத்திறக்கும்.

  உயர்ஜாதி என்ற உணர்வு வேண்டும். நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என்று சொல்லிக்கொண்டே, இட ஒதுக்கீடு பெற தலித்து என்ற அடையாளம் வேண்டும்; கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை. 🙁

  He hates to be a dalit! He has feeling of superiority ! அப்புறமென்ன? ஐயராத்துப்பொணணிடம் போய் என்னைக்காதலி…I am high, high and higher than you!! எனலாம். 🙂

  It is a perverted and despicable mindset to deny one’s own birth however low or high it may be.

  Dharmaraj should understand this.

 3. முகம்மதியப் படையெடுப்பில் கடவுள் நம்பிக்கையை காப்பாற்றிட ஜிஸ்யா வரி, இல்லை என்றால் மதம் மாறு என மிரட்டலால் பல சிறு நில சொந்தக்காரர்களும், தொழிலாளிகளும் பாதிப்படைய ஜாதிகள் வக்கிரமடைந்தது.
  மற்றொரு முழு பொய் மதமான கிறிஸ்துவமோ, காசு பாரிக்க வங்காள விவசாயிகளை கஞ்சா பயிரிடச் சொல்ல, கிறிஸ்துவர் செய்த மனித முற்சி பஞ்சத்தால் 3ல் ஒருவர் என மக்கள் இனப் படுகொலை, பெரும்பாலும் வனவாசிகளே பாதிப்பு.
  வங்காளத்தில் பாதிரிகள் செய்த இனப் படுகொலையை பெருயளவாக்கி – விளை பொருட்களை சர்ச்சுகள் மூலம் பிடுங்கி புதிதாய அதற்காகவே அமைத்த ரயிலில் கடற்கரை துறைமுகம் அனுப்பி, லண்டனுக்கு கடத்தினர். 2 ஆண்டு தொடர் பஞத்தில் விளைபொருட்களை சர்ச்சும் கிறிஸ்துவ வெள்ளையனும் கடத்திட சர்ச் ஏற்படுத்திய பஞ்சத்தில் மெட்ராஸ் சமஸ்தானத்தில் 2கோடீக்கும் அதிகமானோர் சாவு, பெரும்பாலோர் வனவாசிகள்.
  இந்திய மக்களை பிரிவினை வளர்த்து மதம் மாற்ற சர்ச் தூண்டல்கள், அமெரிக்காவின் ஆதரவு பணபலத்தை “உடையும் இந்தியா” மிக அழகாக ஆதாரத்தோடு காட்டியது.
  பைபிளின் அடிப்படை, அன்னியர்களான எபிரேயர்கள் வந்தேறிகளாய் இஸ்ரேலின் மண்ணின் மைந்தர்களை இனப்படுகொலை செய்து ஆக்கிரமித்தலே, இத தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் எனும் அருவருப்பான கதைகள்.
  அமெரிக்க வலையில் விழுந்தோரினை அரவணைத்து பாரதப் பாரம்பரியத்தில் இணைக்க வேண்டும்.

 4. “நான் ஏன் தலித்தும் அல்ல?” இனி நான் தலித்தும் அல்ல…….

  மனித நாகரிக வளர்ச்சியை மேற்கோளாக வைத்து பல்வேறு ஆய்வுகள் காலங்கலமாக வரையறுக்கப்பட்ட வந்து கொண்டிருக்கின்றது.இவ்வாய்வுகள் அடுத்தடுத்த நிலைப்பாட்டினை எட்டியும் வந்துள்ளன.அவை சமுக தற்காலிக ஓழுங்கு முறை கேடுகளை (social disorganization) மையப்படுத்தி பல காரணிகளாக பிரிக்கப்பட்டு சாதி, சமய, பொருளாதார இன வேற்றுமை குறித்த ஆய்வுகளாக நம்மிடம் விரவிக்கிடந்தாலும், காரல்மார்க்ஸ் எழுதிய பொருளாதார ஆய்வுகளும் டாக்டர் அம்பேத்கர் எழுதிய சாதியம் குறித்த ஆய்வுகள் மட்டுமே உலகின் சிறந்த மேற்கோளாக சிவப்பு கோடிட்டு கட்டப்பட்டுள்ளது

  அதன் அடிப்படையில் இந்திய தத்துவங்களை திறனாய்வு செய்யும்பொழுது அம்பேத்கரிய,காந்திய, பெரியாரிய அரசியல் சிந்தனைகள் மட்டுமே மேற்கோளாக காட்டப்பட்டு வருகின்றது.ஆனால் இன்றைய சூழலில் காந்தியமும்,பெரியாரியமும் வீழ்த்தப்பட்ட தருவாய்க்கு தள்ளப்பட்டதற்கு காரணமாக அதன் கொள்கையாளர்களே.அவ்வகையில் அம்பேத்கரிய அரசியல் சிந்தனையை இன்றும் நிராகரிக்க முடியாமல் இந்திய சூழல் அமைந்த வண்ணம் இருக்கின்றது அதற்கும் காரணம் ஆய்வியல் எழுத்தாளர்கள் மற்றும் கொள்கை வாதிகளே.

  இவ்வகை கட்டுடைக்க முடியாத டாக்டர் அம்பேத்கரின் ஆய்வுகளை 60 ஆண்டுகள் கழித்து ஆய்வின் முறையில் இருந்து விலகாமல் அதவாது OPEN/ ENDED QUESTIONS முறையை வைத்து கட்டுடைத்துள்ளது டி.தர்மராஜ் எழுதிய “நான் ஏன் தலித்தும் அல்ல ? ” என்ற நூல். அவ்வகையில் இந்நூல் தமிழ் நிலபரப்பில் இருந்து அம்பேத்காரியத்தை மிக வலுவாக கூர்தீட்டியே இருக்கின்றது, காலச்சூழலுக்கு ஏற்ப எழுத்து வடிவில் அடிபணியாத மகத்துவதை மேலோங்கி எழச்செய்து, மறுதாக்குதல் என்ற கேள்வி சாட்டையை புதுவடிவில் பின்னி, ஆதிக்க ஆய்வுகளிடம் சுழற்றி அவை பரப்பிய காய்ந்த தோலை உரிகின்றது.

  இந்தியாவின் தலைசிறந்த இயக்குனரான சத்யஜித்ரே ஆற்றிய திரைமொழி களப்பணியை “பூவுக்கே தெரியாமல் தேனை ,மட்டும் எடுத்து செல்லும் தேனீக்களை போல” ரேவின் படைப்புகள் அமையும் என்று உலகளாவிய திரை ஆளுமைகள் பழமொழி ஒன்றை எடுத்துரைப்பர்.அவை போல டி.தர்மராஜ் எழுதிய ஏழு நூல் படைப்பும்.எந்த ஒரு முரனையும் கேள்வியாக எழுப்பும் விதம் ஆய்வு எழுத்தர்களுக்கும் சிதைவை தராமல் மெருகூட்டவே உதவியாக அமைகின்றது.எதார்த்த படைப்பையும் உலகத்தரம் என்ற அளவுகோலில் வைத்து பார்க்கும் விதம் தமிழ் இலக்கியங்களை செழிப்படையவே செய்கின்றது.அவற்றுள் “நான் ஏன் தலித்தும் அல்ல ? ” என்ற நூல் பத்துக்கட்டுரைகளில் 300 பக்கங்களை சுமக்கின்றது.முரனுக்கு முரணாக நிற்கும் சமுகங்களிடம் கேள்விக் கேட்டு பொது தளத்தில் நின்று உறவு முறைகளை புதுபிக்க வைக்கின்றது.

  எழுத்து அரசியல் – நவீன தமிழ்ச்சூழலில் தலித் :

  டி.தர்மராஜ் எழுதிய “நான் ஏன் தலித்தும் அல்ல ? ”என்ற நூலில் எழுத்து அரசியல் – நவீன தமிழ்ச்சூழலில் தலித் என்ற பகுதியில் இன்றைய நடைமுறை இலக்கிய நிலையை தெளிவுறச் செய்வது எனது நோக்கமாக அமைகிறது.1982 ஆம் ஆண்டு தலித் பந்தர்ஸ் ஆப் இந்தியா என்ற அரசியல் அமைப்பு மராத்தியில் இருந்து தமிழ் நாட்டில் காலூண்றிய போது தமிழ் இலக்கிய வட்டத்தில் தலித் இலக்கியமும் வேர் பதித்தது.

  மராத்திய தலித் இலக்கியம் அழுகை, ஒப்பாரி ஓலம் நிறைந்த வண்ணமே இருந்தன அதுவே தலித் இலக்கியம் என்று மராத்திய தலித் எழுத்தர்களால் முன்மொழியப்பட்டது ஆனால் தலித் பந்தர்ஸ் ஆப் இந்தியா என்ற அரசியல் இயக்கத்தையும், தலித் இலக்கியத்தையும் நிறுவிய மலைச்சாமி அவர்களால் தமிழ்ச்சூழலில் தலித் இலக்கியம் ஓர் எழுச்சியின் அடையாளமாக விதைக்கப்பட்டு வந்து அதற்கு சிறந்த அச்சாரமாக பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் தங்கராஜ், பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களை தமிழ் மண்ணுக்கு எழுத்து வடிவில் அறிமுகம் செய்தார் அவை விடுதலையின் எழுத்துகளாக தமிழ் சமூகத்தில் எல்லையற்று பரவ ஆரம்பித்து. ஒடுக்கப்பட்ட பட்டியலின் மக்களுக்கு போர் முறை செயலாக்கம் போல சென்றடைந்து. எழுத்தாளர் தங்கராஜ் எழுச்சியின் அடையாளம் என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக “பாட்டாளி முழக்கம்” என்ற நாளிதழில் “அஞ்ச நெஞ்சன்” பாலா சுந்தரராசு என்ற கதை வசன தொடரை எழுதி வீரிய வரலாற்றை மக்களிடம் அன்று பரப்பினர் என்பது தனி சிறப்பு. தேக்கம்பட்டி பாலா சுந்தரராசு அவர்களே டாக்டர் அம்பேத்கரை தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்து முதல் சாதி ஓழிப்பு மாநாடு நடத்தியவர்.

  எழுத்தாளர் தங்கராஜ் அவர்களை தொடர்ந்து தமிழ் மொழி ஆய்வுகளை முன்னெடுத்த முனைவர் கா.நெடுஞ்செழியன் எழுதிய “ஆசிவகமும் அய்யனாரும்” இன்றும் உலக அரங்கில் ஹிந்து மதத்திற்கு எதிராக ஆக்ஸ்போர்டு ஆய்வார்கள் நிறுத்தும் மிக முக்கிய கோட்பாடு, சாகித்ய அகாதமி விருது பெற்ற வழக்கறிஞர் டி.செல்வராஜ், எழுத்தாளர் பூமணி ஆகியோர் வேறு வடிவம் தந்து தங்களின் எழுத்துகளால் மராத்திய தலித் இலக்கியங்களிடம் இருந்து மாறுபட்டு இருந்தாலும் “இட ஒதுக்கீட்டில் மாட்டிக் கொள்ளாத” தமிழருக்கான தலித் இலக்கியங்கள் என்று வாசகர் வட்டங்களில் பரப்பப்பட்டு வந்தது.

  இப்படி இருக்கமான தன்மை கொண்ட தலித் இலக்கியம் 1989ஆம் ஆண்டிற்கு பிறகு அதன் வீரியத்தை இலக்க தொண்டு நிறுவங்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தது. தெரிந்தோ தெரியாமலோ மராத்திய நிலபரப்பு தலித் இலக்கியத்தை உள்வாங்க ஆரம்பிக்கின்றது.அதில் தாழ்வு மனப்பான்மையும்,ஆதிக்க சாதிகளின் இழிச்சாதி பேச்சுக்களும் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.அதில் தோழர் ஆதவன் தீட்சயா, எழுத்தாளர் இமயம்,கவிஞர் சுகிர்தராணி எழுத்துகள் மட்டுமே அவ்வகை ஓப்பாறி சொல்லாடல்களில் இருந்து மாறுபட்டு நின்றது.

  “நமக்கான அரசியல், நமக்கான அதிகாரம்” “பேசினால் பேசு,அடித்தால் அடி” என்ற தலித் அரசியலிலிருந்து 1989ஆம் ஆண்டிற்கு பிறகு விடுபட்டு திராவிடத்தின் விஸ்வாச கிளைகளாக செயல்படவே ஆரம்பித்தனர்.இவ்வகை தலித் அரசியலும், இலக்கியமும் திராவிடத்தோடு இணைந்தமையால் உட்சாதி கட்டுக்கள் வழுபெற ஆரம்பித்து தலித் கலைவிழாவில் 75 சாதிகள் புறக்கணிக்கப்பட்டது, திராவிட குணதிசியன் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்து, தன்னை மற்றவர்கள் புகழாரம் செய்ய விருது வழங்கும் விழாகள் நடத்தப்பட்டது, நிறுவனரின் புகைப்படம் மறைக்கப்பட்டது,தலித் சவுத் இந்தியன் எழுத்தர்கள் பட்டியிலில் உட்சாதி பிரிவீனைகள் மேலோங்கியது,மொழி பெயர்ப்பு நூல்களிலும் உட்சாதி அடையாளமே பொரிக்கப்பட்டது, ஒட்டுமொத்த உட்சாதி மனோபாவம் கூர்திட்டப்பட்டு அரசியல் என்னும் காய்நகர்வில் ஒட்டுமொத்த 76 பட்டியல் சாதிகளும் பலிவாங்கப்பட்டது.

  உட்சாதியாக மாற்றப்பட்ட தலித் இலக்கியம் அதன் தன்மையை புதுப்பித்துக்கொள்ள மறந்தால் பாசிஸ்டுகள் இத்தளங்களுக்குள் வரவைக்கப்பட்டனர். அதன் காரணம் அயோத்திதாஸ பண்டிதர் போன்ற தேசிய சிந்தனையாளர்களை பட்டியல் சாதியில் இருக்கும் மாற்று உட்சாதியிணர்கள் முன்மொழிய ஆரம்பித்ததுமே. தலித் அரசியல் 1982இல் தேசிய கட்சிகளோடு கூட்டணியில் எடுத்த நிலைபாட்டினை 1989க்கு பிறகு திராவிடத்தொடு கூட்டு வைத்து துவர்ந்து போய் ஏறத்தாழ 20 வருடங்களுக்கு பிறகு தனி அங்கம் வகித்து ஒட்டுமொத்த பட்டியல் சாதியின் ஆதரவு இல்லாததால் மாற்று அரசியல் என்ற பெயரில் தோல்வியை மட்டுமே வெளிக்கொணர்ந்தன. அவை பட்டியல் சாதி இனத்தவரின் அரசியல் அர்பணிப்பு உணர்வுககளை சிதறடித்தது இதற்கு தலைமையின் முடிவும் அதன் செயல்பாட்டளர்களே காரணமானார்கள்.

  இவ்வகை தாழ்வு மனப்பான்மை அரசியல் மற்றும் இலக்கியங்களில் தொடர்ந்து முன்மொழியப்பட்டதன் விளைவு இடைச்சாதி தோழமைகள் தங்கள் சாதிகளை விட பட்டியல் சாதிகளுக்கே சாதி கொடுமைகள் நடக்கின்றது,கௌரவ கொலை நடக்கின்றது என்று தங்களின் படைப்புகளின் வழியாக பரைசாற்றி தங்களை ஆதிக்க சாதியினராகவே வெளிப்படுத்தினர். பட்டியல் சாதிக்கட்டுக்குள் தங்களை நிறுவி அனைத்து சாதியின் உளவியல் அறிந்து பல சாதியக்கொலைக்கு காரணமாகவும் இருந்தனர்.

  இப்படிப்பட்ட நிலையில் தலித் அரசியலும், இலக்கியமும் வளர்ச்சியடையாமல் வருமை கொண்டு முட்டுச்சந்தில் ஆதரவு கேட்டு நிற்கும் நேரத்தில் டி.தர்மராஜ் எழுதிய “நான் ஏன் தலித்தும் அல்ல ? ” என்ற நூலின் வழியாக ஒட்டுமொத்த பட்டியல் சாதியையும் அதன் பழமைவாத சிந்தணையோட்டத்தில் இருந்து மீட்டெடுத்து சாதியற்ற பேத நிலையில் என்ற பொதுத்தளத்தில் மனிதனுக்கு மனிதன் என்ற மானுட போட்டியை துவக்கி வைக்கின்றது.தலித் அரசியலில் உருவாக வேண்டிய மாற்று சிந்தனை மற்றும் புதுப்பிக்க படவேண்டிய தலைமைகளை அடையாளப் படுத்துகின்றது . பாசிசமை கொண்டு எழுதப்பட்ட வெண்முரசு சொந்தக்காரர்களை தன்னிடம் சரணடைய வைக்கின்றது.

  ஒரு தலித் படைப்பு இந்த வடிவத்தில் தான் இருக்கவேண்டும், இவ்வகை கருத்தாக்கத்தை தான் மேலோங்கி சொல்லவேண்டும் என்ற26 ஆண்டு காலமாக வடிவத்தை தனது ஒவ்வொரு கட்டுரைகளிலும் செதில் செதிலாக உடைத்தெறிந்து இனி அரசியலில் மிகவும் தேறியவர்களால் மட்டுமே பட்டியல் சாதியை வழிநடத்த முடியும் என்பதை மிக திவரமாக தனது எழுத்துகளில் அம்பை வைத்து பரப்புகின்றார். ஒட்டுமொத்தத்தில் டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த அறிவாயுத யுத்தத்தை,“நான் ஏன் தலித்தும் அல்ல?” என்ற நூலின் வழியாக அறிவுத்தள யுத்தமாக மாற்றி தலித் என்ற வார்த்தையில் நடக்கும் அரசியலையும் அதனால் சோர்வு அடைந்த இலக்கியத்தை மெருகேற்றி புதுமை என்னும் ”விடுதலையை முன்மொழிகின்றார் இனி நான் தலித்தும் அல்ல……. என்ற பதிலை உலக தரத்திற்கு ஏற்ப நூல் ஆசிரியர் டி.தர்மராஜ் சொல்லிய விதம் சிவப்பு கம்பளத்தை விரித்து பட்டியல் இனத்தவரை தலைமைத்துவம் மேலோங்கிவர்களாக கம்பீரமாக நட நடக்க வைகின்றார் நூல் ஆசிரியர் டி.தர்மராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *