மார்கழி வைகறையின் அந்த நான்கு மணி இருட்டில், ஊருக்கு நடுவிலிருந்த தெப்பத்தின் சுற்றுச் சுவரின் மேலிருந்து, ஒருவர் பின் ஒருவராக, உடல் குளிர்ந்த நீரைத் தொடப்போகும் அந்தக் கணத்தின் சிலிர்ப்பை நினைத்து “ஓ”-வென்று கத்திக்கொண்டு “தொப்…தொப்”-பென்று குதித்தார்கள் அந்தச் சிறுவர்கள். எல்லோரும் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு படிப்பவர்கள். வெங்குடு என்கிற வெங்கடேஷ், மெதுவாய் ஒவ்வொரு படியாய் இறங்கி, ஆறாம் படியில் தண்ணீர் பாதம் தொட்டவுடன், காலைப் பின்னிக்கிழுத்தான். “இதுக்குத்தான், டபக்குன்னு குதிச்சறணும்றது” – தண்ணீருக்குள்ளிருந்து ”அப்புடு” தண்ணீரை அள்ளி வீசினான். படியில் உட்கார்ந்து துண்டு வைத்து முதுகு துடைத்துக் கொண்டிருந்த சீனிக் கோனார், “சீக்கிரம் குளிச்சட்டு, வாங்கடா” என்றார்.
“இன்னிக்கு என்ன பிரசாதம்டா இருக்கும்?” என்று கேட்டான் தாமு. “ஏன், உனக்கு சக்கரைப் பொங்கலோட புளியோதரையும் வேணுமா?” என்று சிரித்தான் ரகு. ”கும்பா”-வக் கேளுங்கடா, கரெக்டா சொல்லுவான்”; கும்பா என்கிற குமாரு படியிலிருந்து கொஞ்சம் தள்ளி, தன்ணீருக்குள்ளிருந்த சிறு பாறையில் நின்றுகொண்டிருந்தான். அங்கிருந்து தெப்பத்தின் மையத்திலிருந்த கல் மண்டபத்திற்கு போக ஐந்து நிமிடம் நீந்த வேண்டும். தெப்பத்தின் உள்ளேயே வடக்குப்பக்க ஓரத்தில் நல்ல தண்ணீர்க் கிணறு இருந்தது. அது சதுரவடிவ தெப்பம். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி தெற்கு மூலையில் உடைக்கப்பட்ட சுவர் இடைவெளியில் வெளியில் வந்து கால்வாயில் இணைந்து, ஊர் எல்லை ஓடைக்குப் போகும். கிழக்கிலிருக்கும் சின்னத் தெப்பத்தில் நீர் நிரம்பினால் இதில் விழுமாறு கால்வாய் இருந்தது. தெப்பத்தின் வடக்குப் பகுதியில் காளி கோவில். கிழக்குப் பக்கம் பெருமாள் கோவில். தென்கிழக்கு மூலையில் பிள்ளையார் கோவில். மேற்குப் பகுதியில் கிருஷ்ணன் கோவில். எல்லைக் காவல் கருப்பண்ணசாமி கோவில் ஊர்க் கடைசியில் கிழக்கில். கொஞ்சம் பெரிதான ஒரே ஊர்தான் என்றாலும், இரண்டாய்ப் பிரித்து, ஓடைப்பட்டி, மேலைப்பட்டி என்று பெயரிட்டிருந்தார்கள். இரண்டுக்கும் ஒரு தெருவின் இடைவெளிதான்.
கிருஷ்ணன் கோவில் இரண்டு ஊர்களிலும் இருந்தது. எல்லா சனிக்கிழமை மாலைகளிலும் பஜனை நடக்கும். சர்க்கரைப் பொங்கலும், சுண்டலும் பிரசாதமாய் கிடைக்கும். கோவில் மேடைகளில் ஒருவர் பாரதமோ, பாகவதமோ வாசிக்க சுற்றி உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது புரட்டாசிகளில் சுந்தரகாண்ட வாசிப்பும் நடப்பதுண்டு. மார்கழிகளின் போது, முழு மாதமும், வைகறையில் பஜனையோடு ஊர்வலம் இருக்கும். மேலப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் பூஜை முடித்து, அங்கிருந்து பஜனைப் பாடல்களோடு துவங்கும் கீர்த்தன் குழு, நேராக தார் ரோடின் வழியாகவே மேலைப்பட்டி எல்லை வரை சென்று, அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து, பின் தெரு வழியாக வந்து, வழியில் சிறு சிறு கோவில்களிலெல்லாம் நின்று பூஜை முடித்து, மறுபடியும் பாடிக்கொண்டே, சன்னதி தெருவைத் தாண்டி ஓடைப்பட்டியில் நுழைந்து, கடைசி வரை சென்று, பெருமாள் கோவிலில் பூஜை முடித்து, தெப்பத்தின் பக்கப் பாதை வழியாகவே வந்து ஓடைப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் சின்ன பூஜை முடித்து, முத்தியாலம்மன் கோவில் தாண்டி, மறுபடியும் மேலைப்பட்டி கிருஷ்ணன் கோவில் வந்துசேரும்போது வெளிச்சம் வந்திருக்கும். பல்லாண்டும், பாவையும் பாடி மறுபடி ஆராதனை முடித்து ப்ரசாத விநியோகம். சிறுவர்கள் கூட்டம் அதிகமிருக்கும். பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு முடிந்திருக்கும்.
அப்போது நான் பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் இருந்தேன். பள்ளியில் என் பெயர் வெங்கடேஷ் என்றாலும், என் முழுப் பெயர் “கணேஷ் விஜய வெங்கடேஷ்” என்று அப்பா சொல்லியிருக்கிறார். வீட்டில் எல்லோரும் விஜயா என்றுதான் கூப்பிடுவார்கள். மார்கழியின் விடிகாலை பஜனைகள் என்ன காரணத்தினாலோ எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு மிருதங்கம் போன்ற வாத்தியம், ஒரு கஞ்சிரா, மூன்று நான்கு கர்த்தால்கள் இவைதான் பஜனைக் குழுவின் வாத்திய உபகரணங்கள். பாடல்களோடு, கிராமத்தின் அமைதியான பனி கவியும் அந்தத் தெருக்களில் நண்பர்களோடு சுற்றி வந்தது இன்னும் பசுமையாய் மனதில். அவ்வயதிற்கே உரிய விளையாட்டுத் தனங்களும்…
மேலைப்பட்டியில், கடைசி வீட்டிற்குப் பக்கத்தில் போகும்போது, நண்பர்களின் கர்த்தால் சத்தம் உயரும்; வாயால் பாடல் பாடிக்கொண்டிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வார்கள். அவர்கள் எதற்குச் சிரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அது சீனிவாச மாமாவின் வீடு. மாமாவின் பெண் ஹேமலதா என்னோடுதான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது. கும்பா, குபேந்திரன் காதில் கிசுகிசுத்தான் “உனக்குத் தெரியுமா, நேத்து பள்ளிக்கூடத்துல, மத்தியானம் சாப்பிடும்போது, ரெண்டு பேரும் சாப்பாட்டு தூக்கை மாத்திக்கிட்டாங்க”. குபேந்திரன் பாடலைத் தவறவிட்டு, கோவில் மாமாவின் முறைப்பை வாங்கிக் கொள்வான்.
மார்கழியின் வைகறைகளில், கிராமத்தின் காற்றே, கிராமச் சூழலே மாறிப்போனது போல இருக்கும். நாள் முழுதும் வழக்கம்போல் வேலைகள் நடந்தாலும், எப்போதையும் விட உற்சாகமாய் நடக்கும். கோவில்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெறும். ப்ரசாதம் வழக்கமான சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல்… என்றாலும், அவற்றின் ருசியும் மணமும் வெகுவாகக் கூடியிருக்கும். ப்ரசாத விநியோக வரிசையில் கும்பாவை இரண்டு மூன்று முறை பார்க்கலாம். கோவில் மாமா “எத்தனை தடவைடா வரிசையில வருவ?” சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு, கொஞ்சம் அதிகம் வைத்து “வீட்டுக்கு கொண்டு போடா” என்பார்.
ஹேமலதா மட்டுமல்ல, வகுப்பிலிருக்கும் எல்லா பெண் நண்பர்களும் மார்கழியில் கூடுதல் அழகாகி விடுவார்கள். நட்பு கூட இன்னும் அழகாகி விட்டது போல்தான் இருக்கும். நான், லதா, ராணி, திருமலை, ஜீவா இன்னும் சிலர் சைக்கிளில்தான் ஓடைப்பட்டியிலிருந்து, சென்னம்பட்டிக்கு பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தோம். அதிக பேருந்துகளும், மனித நடமாட்டமும் இல்லாத அந்த வெற்றுத் தார்ச்சாலை…எங்கள் பயணங்களை எங்களோடு சேர்ந்து கொண்டாடியது என்றுதான் நினைக்கிறேன். மதிய உணவு இடைவேளையின் போது, எங்கள் நண்பர்கள் குழு, வகுப்புத் தோழி நாகேஸ்வரியின் வீட்டிற்குச் செல்வோம். சிலசமயம் மதிய உணவை அவர்கள் வீட்டிற்கே கொண்டுசென்று சேர்ந்து சாப்பிட்டதுண்டு. நாகேஸ்வரியின் வீடு, சென்னம்பட்டியிலேயே பள்ளிக்கு எதிரிலேயே இருந்தது. எட்டு வீடுகள் எதிர் எதிராய், ஒரே உள்ளில் இருக்கும். நாகேஸ்வரியின் வீடு இடதுவரிசையில் கடைசி. எல்லா வீடுகளின் முன்னாலும் கோலம் போட்டு கலர் பொடிகளால் வண்ணமாக்கியிருப்பார்கள்.
எனது மார்கழியின் அன்பிற்கு, இன்னுமொரு காரணம் பெரியப்பா வீட்டிலிருந்த “பொட்டுத் தாத்தா”. பொட்டுத் தாத்தாவின் பெயர்கூட எனக்குத் தெரியாது. பெரியப்பா புரட்டாசி மாதம் முழுதும் விரதமிருப்பவர். புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டுப் பூஜை அறையில் பெரிய பூஜை நடக்கும். கடைசி சனிக்கிழமையில் ஊர் முழுதும் அழைப்பார். மகா ப்ரசாதம் உண்டு. பஞ்சாமிர்தத்தை அவரே தயாரிப்பார். உண்மையிலேயே அமிர்தமாயிருக்கும். பொட்டுத் தாத்தா புத்தகங்கள் படிப்பவர். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் புத்தகங்கள் அவரிடமிருந்தது. ராமகிருஷ்ண விஜயத்தின் கிட்டத்தட்ட நாலைந்து வருட தொகுப்புகள் இருந்தன. தாத்தாவைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் புத்தகங்களைத்தான் கொடுத்து படிக்கச் சொல்லுவார். என் வாசிப்புப் பழக்கத்திற்கு முக்கிய காரணம் வெங்கடாஜலபதி பெரியப்பாவும், பொட்டுத் தாத்தாவும் தான் என்று நினைக்கிறேன்.
*****
ஒன்பதாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் திருமங்கலம் பி.கே.என் பள்ளியில் விடுதியில் இருந்ததால் மார்கழிகள் விசேசமில்லாமல் சென்றன. பதினொன்றாம் வகுப்பிற்கு, அம்மா திருமங்கலத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்தார். தம்பிகளும் பி.கே.என்னில் சேர்ந்திருந்தனர். அம்மாவுக்கும், செங்கப்படைக்கு வேலைக்குச் செல்வதற்கு வசதியாக இருந்தது. பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகள் படித்த இரு வருடங்களும் மார்கழிகள் மிக ரம்யமாய் கழிந்தன. மம்சாபுரம், கணபதி நகர், புது நகர் என்று வீடு மாற்றிக்கொண்டே இருந்த போதிலும், மார்கழியின் வைகறைகள் வனப்பின் அனுபவங்களுக்குக் குறைவில்லை.
உடன்படித்த நாராயண மூர்த்தி நல்ல தோழன். கணபதி நகர் முகப்பில் சிறிய ராமர் கோவில் ஒன்றிருந்தது. அங்கு பூஜை செய்யும், கோவிலை கவனித்துக் கொள்ளும் பட்டர் இளம் வயது. ஆனால் பூஜைகளை விஸ்தாரமாக சிரத்தையுடன் செய்வார். மார்கழி விடிகாலை பூஜைகள் நீண்ட நேரம் எடுக்கும். அவசரமே பட மாட்டார். ”சிற்றஞ்சிறு காலே”-வை இரண்டு முறை பாடுவார். வீட்டிலிருந்து கோவில் ஒரு கிமீ இருக்கும். குளித்து முடித்து கிளம்பி சைக்கிளில் செல்வேன். பூஜை முடித்து வர இரண்டு மணி நேரமாகும். வழக்கமாய் வரும் பல பெரியவர்கள் தோழமையுடன் ஸ்நேகமானார்கள். பாட்டிகள், தாத்தாக்கள், அப்பா வயதிலுள்ளவர்கள்… கோவிலுக்கென்று ஒரு பஜனை மண்டலி இருந்தது. முன்னிரவு நேரங்களில் கோவிலுக்கு அருகிலேயே பஜனை நடக்கும். பாடல் நடக்கும்போது, கோவில் பட்டர் பாடுபவர்களுக்கு உடன் வராமல், தனியாக மிருதங்கத்தை வாசித்துக் கொண்டிருப்பார். பாடும் பாட்டி முகம் சுளித்தாலும், கண்டுகொள்ள மாட்டார். அப்போது சர்கம் படத்தில் வந்த “ராக சுதா ரஸ”-வை ஒரு முறை, பஜனையில் பாட முயற்சித்தேன். ராஜம் பாட்டி சிரித்துக்கொண்டே, “சினிமாவில் வர்ற மாதிரி பாடக் கூடாது; அத இப்படிப் பாடணும்” என்று சொல்லிக் கொடுத்தார்.
*****
அதன்பின் கோவை வேளாண் பல்கலையில் நான்கு வருடங்கள் தோட்டக்கலைப் படிப்பு. படிப்பு முடித்தபின் முதல் வேலை, ஓசூரில் ஒரு கொய்மலர்ப் பண்ணையில். பணிக்குச் சேர்ந்தபோது, நண்பர்களுடன் செந்தில் நகரில் தங்கியிருந்தேன். செந்தில் நகர் முகப்பில் விநாயகர் கோவில் ஒன்றுண்டு. கோவிலில் பூஜை செய்யும் விஜயராகவன் பக்கத்தில் காரப்பள்ளியிலிருந்து வருவார். வீட்டில், மார்கழிகளின் போது, விடிகாலை ஐந்து மணிக்கு, பூஜை அறையில் பாடும்போது, நண்பர்கள் விழித்துக் கொள்வார்கள். யாரும் ஏதும் சொன்னதில்லை என்றாலும், அவர்களைத் தொந்தரவு செய்திருக்கிறோம் என்று இப்போது தோன்றுகிறது.
செந்தில் நகரில் இருந்தபோதுதான் திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பின், செந்தில் நகரிலேயே, மற்றொரு வீடு பார்த்து கோவையிலிருந்து மல்லிகாவை அழைத்து வந்தபின் மார்கழிகள் இன்னும் விசேஷமாகின; இன்னும் அழகாகின. மல்லிகாவின் ப்ரசாதத் தயாரிப்புகளால் இன்னும் சுவையாகின. மார்கழிக்கான ஏற்பாடுகள், டிசம்பர் முதல் வாரத்திலேயே துவங்கி விடும். பாடல்கள், மந்திர உச்சரிப்புகள் என்று முழு மார்கழியும் கொண்டாட்டமாகக் கழியும். ஆழ்வார்களின் பாசுரங்கள் அப்போதுதான் மனதுக்கு நெருக்கமாகி புரிய ஆரம்பித்தன. பல்லாண்டின் இனிப்பு தெரிய ஆரம்பித்தது.
*****
2006-ல் மும்பை பன்வெல் அருகே பென்னில் மற்றொரு கொய்மலர்ப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்து அங்கு குடிபெயர்ந்தோம். பென்- வருடம் முழுதும், கணேஷ் சதுர்த்திக்காய் விநாயகர் சிலைகள் செய்யும் ஒரு சிறு நகரம். அங்கிருந்து வெளிநாடுகளுக்கு விநாயகர் சிலைகள் ஏற்றுமதியாகும். அங்கு தெப்பக் குளம் நடுவிலிருந்த சாய் கோவில் மிகப் பிரசித்தம். வேறு வகையான ஆரத்திப் பாடல்களும், வழிபாட்டுச் சடங்குகளும் எனக்கு அறிமுகமான வருடங்கள். மார்கழி விடிகாலைகளில் வீட்டில் பூஜை முடித்தபின் வண்டியை எடுத்துக்கொண்டு எல்லாக் கோவில்களுக்கும் ஒரு சுற்று செல்வது வழக்கம். எங்கு, என்ன ப்ரசாதம் கிடைக்கும் என்பது மனதில் பதிந்திருந்தது. அம்பே மாதாஜி கோவில், சிவன் கோவில்…அம்பே மா-வின் கோவிலில் விடிகாலை ஆரத்தி மனதை உருக்கும். இயல் எல்.கே.ஜி-யிலிருந்து நான்காம் வகுப்பு வரை அங்குதான் படித்தது.
*****
இதோ இந்த 2017 மார்கழி. கென்யா வந்தபின்னான, ஏழாவது மார்கழி. நம் ஊரின் வைகறை மணம், கோலங்கள், கோவில்கள், இசை இன்னும் சிலவற்றை இழந்திருந்தாலும், நானே அச்சூழலை உருவாக்கிக்கித்தான் கொள்கிறேன். விடுமுறை நாட்களில், பண்ணை அருகில் நகரிலிருக்கும், கோவில்களுக்குச் செல்கிறேன். இங்கும் மார்கழியின் அப்பேரன்பு என்மேல் கவிந்து ஆசீர்வதிக்கத்தான் செய்கிறது.
சொல்வனத்தில் வெ.சுரேஷ் முன்பு, டாமி-ன் ‘A History of the World in Six glasses’ புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆறு வகையான பானங்களின் வழியே உலக வரலாற்றைத் தொட்டெடுக்கும் முயற்சி. இதுவரையிலான என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது, நிகழ்வுகள் அனைத்தையும் மார்கழி வழியே மையமாய் வைத்து தொட்டெடுத்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது.
”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு…” – பெரியப்பா இந்த வரியைப் பாடும்போது அவர் குரல் தழுதழுக்கும். கண்கள் ஈரமாகும். அந்தச் சின்ன வயதில் அது எனக்குப் புரியவில்லை. இப்போது தெளிவாய் உணர்ந்திருக்கிறேன்.
“அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு…”
*****
அழகிய நெகிழ்ச்சியான பதிவு.
Concluding lines brought Tears, indeed.
Pallaandu Valga.
anbudan,
srinivasan. .v
Sweet reminisense of your old thoughts,
மார்கழி மாதத்திற்கே தனி மகத்துவம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். அம்மாதத்தில் இறை உணர்வு எங்கும் மேலோங்கி விடும். அதுவும் கிராம, சிறு நகரச் சூழல்களில் அதைத் தெளிவாக உணரலாம். இது அனுபவித்தவர்களுக்கே புரியும். பொருள் புரியாவிட்டாலும் சிறு வயதில் கற்கும் இந்த தெய்வீகப் பாடல்களின் தாக்கம் என்றும் இருக்கும்.சிறு வயதில் மார்கழி பஜனை கோஷ்டியில் வீதி பஜனை செய்தவன் என்ற முறையில் இக்கட்டுரை மனதைத் தொட்டது.