டிசம்பர் 1 திருநெல்வேலியிலிருந்து சீர்காழிக்கு புறப்பட்டேன். மறுநாள் கார்த்திகையில் கார்த்திகை நாள் !
டிசம்பர் 2 அதிகாலை இரண்டரை மணிக்கு சீர்காழியில் இறங்கிய போது ஸ்டேஷனில் யாரும் இல்லை. எங்கும் பலத்த மழை. நாய் ஒன்று அதன் பக்கத்தில் போர்த்திக்கொண்டு இன்னொருவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.
கொஞ்சம் நேரம் கழித்து ஒருவர் அங்கே வர அவரிடம் திருநகரிக்கு போக வேண்டும் எங்காவது ஆட்டோ இருந்தா அனுப்புங்க என்றேன்.
பத்து நிமிஷத்தில் முதியவர் பாதி நனைந்திருந்தர் “நீங்க தான் ஆட்டோ கேட்டதா ?” என்றார்.
“ஆமாம்… திருநகரிக்கு போகவேண்டும்”
மழை மேலும் அடித்தது. அட்டோவை முழுவதும் மூடி இருட்டாக்கினார். உள்ளே பீடி வாசனை அடித்தது. வயல், இருட்டு, மழை ஆட்டோ வெளிச்சத்தில் என்னைப் பத்திரமாக திருநகரிக்கு அழைத்துச் சென்றார்.
“என் நம்பர் எழுதிக்கோங்க இரவு ஆட்டோ யாரும் வரமாட்டாங்க, என்னை கூப்பிடுங்க நானே வரேன்” என்றார்.
காலை 3.30 மணிக்கு அட்டோ சத்தம் கேட்டு ஸ்ரீ எம்பார் ராமானுஜம் அவர்கள் கதவை திறந்து ”வாங்கோ வாங்கோ..!” என்று அழைத்தது,
“… வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து”
என்று காதில் ஒலித்தது.
காலை முதல் மாலை வரை திருமங்கை ஆழ்வாரை அனுபவித்தேன்.
மாலை மீண்டும் நல்ல மழை. கோயில் மண்டபத்தில் ஸ்ரீ எம்பார் ராமானுஜன் என்னை ஒரு பெண்ணிடம் அறிமுகம் செய்து வைத்தார். சிரித்த முகம்.
“என்ன செய்யறீங்க ?”
“தமிழ் ஆசிரியராக இருக்கேன்”
“என்ன கிளாஸுக்கு ?”
“ பத்தவது, 12 வதுக்கு பாடம் எடுக்கிறேன்”
“என்ன படிச்சிருக்கீங்க”
“எம்.பில் தமிழ். திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் வைணவ நெறி என்ற தலைப்பில் எம்.பில் செய்தேன்”
அதைப் பற்றி கேட்க அவர் பல ஆழ்வார்கள் பற்றியும் திவ்ய பிரபந்தங்கள் பற்றியும் கூறி அசத்தினார்.
“அப்பா அம்மா என்ன செய்யறாங்க?”
“அம்மா இல்லை.. தாத்தா பாட்டி வீட்டில் தான் இருக்கேன்”
“என்ன சம்பளம்… “
“…”
“வெளியூருக்குச் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும்… ஆனால் இங்கேயே இருக்கிறேன்.. ஆழ்வார் இங்கே தான் இருக்கிறார் இல்லையா ?”
அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன். நல்ல மழை. நனைந்துகொண்டு நடக்க ஆரம்பித்த போது “சாமி…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் தான்.
”நனைகிறீர்களே..இந்தாங்க” என்று என் கையில் தன்னுடைய குடையை வலுக்கட்டாயமாக என்னிடம் கொடுத்துவிட்டு நனைந்துகொண்டு ஒரே ஓட்டமாக ஓடினாள்…”
“சிறிது தூரம் சென்று வீட்டில் ஒதுங்கிய போது அவளிடம் சென்று,
“தமிழ் ஆசிரியரா அல்லது பீ.டி மாஸ்டரா இப்படி ஓட்டமா ஓடறீங்க.. .. . உங்க புடவை பூரா நனைந்துவிட்டது பாருங்க”
“நீங்க நனையக் கூடாது சாமி… எங்களுக்கு மழையில நனைந்து பழக்கம்… ” என்றாள்.
வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், திவ்யபிரபந்தங்கள் எல்லாம் படித்திருக்கலாம். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ பால பாடம் மிக எளிமையானது – “ஒருவர் படும் கஷ்டங்களைப் பார்த்து யார் மனம் கசிந்து அதைக் களைய முற்படுவாரோ அவரே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் ஆவார்”.
மாறனேர் நம்பி, ஸ்ரீசைதன்ய மகா பிரபு போன்றவர்களின் வாழ்க்கையில் இதைப் பார்க்கலாம்.
”திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் வைணவ நெறி” என்ற தலைப்பில் எழுதத் தகுதியானவர் அவரே என்று நினைத்துக்கொண்டேன்.
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர கோஷ்டி பிரசாதம் வாங்கிக்கொண்டு, அன்று இரவு உறையூருக்கு புறப்பட்டேன்.
மறுநாள் கார்த்திகையில் ரோகிணி “வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம் விதையாகும் இதுவென்று” என்று வேதாந்த தேசிகன் புகழும் திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்.
கொள்ளிடத்தில் நீராடிவிட்டு உறையூருக்குச் சென்ற சமயம் திருப்பாணாழ்வார் வீதி புறப்பாட்டில் இருந்தார். கோயிலுக்குள் வந்த போது திருப்பாணாழ்வாருக்கு பத்து நிமிடம் ஆலவட்ட கைங்கரியம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
ஆழ்வார் சன்னதிக்குள் வரும் சமயம் கூட்டமாக இருந்தது. அப்போது ஒரு பெண்மணி “சாமி இங்கே வாங்க ஆழ்வார் நல்லா தெரிவார்” என்று தான் நின்று கொண்டு இருந்த மேடு மாதிரி இடத்தை எனக்கு தந்தாள்.
அவள் சொன்னது போலவே ஆழ்வார் ”காட்டவே கண்ட பாதம் கமல நல்லாடை உந்தி| ” சிரித்துக்கொண்டு காட்சி கொடுத்தார்.
மீண்டும் என்னிடம் வந்து “சாமி உடனே இங்கே வாங்க” என்று என் கையை பிடித்து இழுக்காமல் என்னை இன்னொரு இடத்துக்கு இழுத்துக்கொண்டு சென்றாள்.
மீண்டும் அங்கே ஆழ்வார் ”வாட்டமில் கண்கள் மேனியாக” என்னைப் பார்த்து சிரித்தார்.
கோஷ்டி பிரசாதம் எல்லாம் முடிந்த பின் என்னிடம் வந்து
“சாமி நல்லா சேவிச்சீங்களா ?” என்றாள்
”பிரமதமா சேவித்தேன்.. ஆனா நீங்க இருந்த இடத்தை எனக்குத் தந்துவிட்டீர்களே ?”
“அட பரவாயில்லீங்க … இதுல என்ன இருக்கு .. எனக்கு சந்தோஷம்” என்றாள்.
”எல்லா இடமும் நல்லா தெரிந்திருக்கே.. “
“வருஷா வருஷம் வந்துவிடுவேன்… ” என்று மீண்டும் சிரித்தாள்.
“படம் எடுத்தீங்களே நல்லா வந்திருக்கா சாமி”
காண்பித்தேன்…
”சூப்பரா இருக்கு என் தம்பி நம்பர் தாரேன் அதுக்கு அனுப்ப முடியுமா ? .. என் மொபைலில் படம் எல்லாம் தெரியாது “
”சாமி நான் சமாஸ்ரயணம் எல்லாம் பண்ணிக்கொண்டேன்”
“அட..”
“எனக்கு வைஷ்ணவத்தில் எல்லாம் நிறைய ஈடுபாடு… உங்களை மாதிரி மஞ்ச திருமண் போட்ட ஒரு வீட்டில அந்த அம்மா எல்லாம் எனக்கு ரொம்ப பழக்கம்”
“எங்கே இருக்கீங்க ?”
“கீரணூர் பக்கம் கிராமம்”
“என்ன செய்யறீங்க ?”
”படிச்சுட்டு சும்மாதான் இருக்கேன்..”
“என்ன படிச்சிறீக்கீங்க ?”
“எம்.பில் எக்கனாமிக்ஸ் படிச்சிருக்கேன்… தம்பி எல்லாம் நல்ல நிலமைக்கு வந்த பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று இருந்தேன்… ஆனா அதுக்குள்ள வயசாயிடுத்து” என்று மீண்டும் சிரித்துக்கொண்டே “ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க.. கோயில் கைங்கரியம் கூட செய்வேன்… ”
“எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்றேன்”
அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும் போது
“என் நட்சத்திரமும் கார்த்திகையில் ரோகிணி தான்” ஆழ்வார் நட்சத்திரம் தான் என்றாள். . சிரிப்பு மாறாமல்.
அடுத்த பால பாடம் “பேராசையும் கபடமும் இல்லாமல் இருக்க வேண்டும்”
ஸ்ரீவைஷ்ணவம் – ஒர் வாழ்க்கை நெறி.
*****
(சுஜாதா தேசிகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது. பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும் அவர் எடுத்தவை)
அவ்விரு பெண்களுக்கும் உங்களுக்கும் ஒரு தண்டன் சமர்ப்பிகின்றேன்.
அடியேன் பரகால தாசன்
அடியேன் ராமானுஜ தாசன்
ஆா்க்கும் ஈமின் அவனனிவன் என்றன்மின்
யாதும் ஊரே யாவரும் கேளீா்
ஊருணி நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு
பகுத்தண்டு பல்லுயிர் ஒம்புதல் நுலோர்
தொகுத்தவற்றில் எல்லாம் தலை
புல்லரித்துப் போனேன்.. இத்தகைய பெண்மணிகளை எதிர்கால பாரதம் உருவாக்குமா என்பது என் ஐயம். கம்ப்யூட்டர்கள், இண்டெர்னெட், மொபைல் ஃபோன்கள், டிவி ஸீரியல்கள், வாட்ஸ் அப்கள், ஃபேஸ் புக் பகிர்வுகள், லெக்கின்ஸீகள், 150 சிசி பைக்குகளின் அணுக்கமான பின்ஸீட்டுகள், பெரு நகரங்களின் ப்ஃபுகள் என்று மாறும் உலகத்தில் இந்தப் பெண்மணிகள் அதிசய வளர்ப்புகளே.. பூர்வ புண்ணியம்… பல்லாண்டு அவர்கள் வாழ்க!
Vaishnav jan to tene kahiye je
PeeD paraayi jaaNe re
Par-dukhkhe upkaar kare toye
Man abhimaan na aaNe re (Vaishnava)
One who is a Vaishnav (Devotee of Vishnu)
Knows the pain of others
Does good to others
without letting pride enter his mind.
Above Song by NArasimha Mehta