மதுரையில் திருமங்கலம் தாலுக்காவில் பேரையூரைச் சேர்ந்த சுப்புலாபுரம் என்னும் இடத்தில் ஒரு விசேஷம் உண்டு. ஆயுள்வைத்தியத்தில் சிறந்து விளங்கிய வழியில் வந்தவரான திரு ப.ச. இராமலிங்க ரெட்டியாருக்கும், ஆவுடையம்மை என்பாருக்கும் மூன்றாவது மகவாய் வாய்த்தவர் நித்தியானந்தம்மையார். (13 -3- 1909). பின்னாளில் சாது நித்தியானந்தம்மையார் என்று அறியப்பட்டவர். சிறுவயது முதற்கொண்டே பக்தியில் சிறந்தவர். மணவாழ்க்கையில் கணவரை மரணம் பிரித்துவிட்டது. எதிர்பாராதவிதமாக வாழ்க்கை ஸ்தம்பிக்கும் தருணத்தில் தாம் மிகவும் விரும்பியும் தமக்கு அதுகால் கிடையாமல் போன கல்வியைத் தொடக்கமுதல் நன்கு பெறவேண்டும் என்ற ஊக்கம் எழுந்தது.
சகோதரரின் உதவியால் அரிச்சுவடி தொடங்கிப் பயிலத் தொடங்கினார். ஆர்வமும், இறையருளும் அபாரமாய் சித்திக்கவே வெகுவிரைவில் முன்னேறி கோவிலூர் பரம்பரையில் வேதாந்த சாஸ்திரம் பயின்றவரான உயர்திரு அண்ணாமலை ஐயா அவர்களிடம் வேதாந்தக் கல்வியின் தமிழ் ஆணிநூலாகிய நாநாஜீவவாதக் கட்டளை என்னும் நூலைக் கற்கத் தொடங்கினார். பின்பு ஸ்ரீசுப்பையா என்பவரிடம் ஸ்ரீகீதாசாரத் தாலாட்டு என்னும் நூலை முறைப்படிப் பாடம் கேட்டார். பின்னர் அப்பக்கரை ஆதீனம் ஸ்ரீமத் முத்துச்சுவாமி என்பவரிடமும், சின்னாரெட்டிபட்டி ஸ்ரீலஸ்ரீ ரெங்கசாமி ரெட்டியாரிடமும் சாஸ்திரங்களைக் கற்றார். பிறகு சாது சண்முகாநந்த சுவாமிகளைக் குருவாக ஏற்று முறைப்படி கைவல்யம், விசாரசந்த்ரோதயம், விசாரசாகரம், பாலபோதம், பிரஹ்மானந்த யுக்திரத்னாகரம், பகவத்கீதை, இலக்ஷண கிரந்தங்கள் ஆகியவற்றைப் பாடம் கேட்டுக் கல்வியிலும் உணர்விலும் மிக்கு விளங்கினார்.
தியானத்தில் நன்கு ஆழத்தொடங்கிய அம்மையார் சந்நியாசமும் ஏற்று சாது நித்தியானந்தம்மாள் என்று ஆனார். மதுரை, உசிலம்பட்டி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பல இடங்களுக்கும் சென்று பல பக்தர்களுக்கும் தமது உரைகளால் ஞானத்தை வழங்கினார். பின் ஒரு சமயம் மௌனவிரதத்தில் ஆழ்ந்தார். அதுகால் தாம் கற்றும், உற்றும் உணர்ந்த பெரும் வேதாந்த ஞானத்தைச் சாதாரண மக்களும் இடர்ப்படாமல் அடையவேண்டி மிக எளியமுறையில் இரண்டு நூல்களை இயற்றினார். வேதாந்த அரும்கருத்துகளையும், பதங்களையும் எளிமையாக விளக்கும் நூலாக வேதாந்த சாஸ்திர சங்கிரகம் என்னும் நூலையும், வேதாந்தம் தொடர்பான பல ஞானிகளுடைய பொன்மொழிகள் பாடல்கள் மற்றும் தாமே பாடிய பல பாடல்கள் ஆகியவற்றைத் தொகுத்து வேதாந்த சாஸ்திர பலதிரட்டுப் பாடல் என்னும் நூலையும் இயற்றினார்.
மிக உயர்ந்த தெளிவு இவர் இயற்றிய நூலில் தெரியவருகிறது. ஓர் உதாரணம் காட்டுவோம் –
ஆவரண சக்தி யாரை மறைக்கும்? எதனால் நீங்கும்? – என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டு அதற்கு விடையாக அவர் சொல்வது அற்புதம்.!
‘ஆவரண சக்தியானது தத்துவ ஞானியையும், ஈசுவரனையும் தவிர மற்றைச் சீவருக்கெல்லாம் சரீரத்திரயம், சிதாபாசன், சாக்ஷி சைதந்நியம் என்னுமிவைகளின் ஒன்றற்கொன்றுள்ள பேதந்தெரிய வொட்டாமல் மறைக்கும்.
இதனால் மறைபட்ட சீவர் இருபத்தொன்பது தத்துவங்களையும் (தூல சரீர தத்துவம் 6, சூட்சும சரீர தத்துவம் 20, அவித்தை, ஜீவன், பிரஹ்மம் ஆக 3) ஒருமைப்பாடாக நானென்றபிமானிப்பர். இந்த அபிமானத்தை, அகங்காரக் கிரந்தியென்றும், சம்சாரபந்தமென்றும் சொல்லப்படும். சற்குரு கடாக்ஷத்தினாலே இந்த ஆவரணம் நீங்கி, இருபத்தொன்பது தத்துவங்களின் ஒன்றற்கொன்றுள்ள பேதந் தெரிகின்றதே முத்தி.’
இந்த அம்மையாரைப் பற்றிப் படிக்கும்போது எனக்கு வரும் வியப்பு அதிகம்.
கல்வியையே வாழ்க்கையில் எப்பொழுது தொடங்குகிறார்? கல்வியில் சிறந்து, வேதாந்தம் தொடங்கி நன்கு பயின்று அதில் தியானத்தில் ஆழ்ந்து, பின் பல ஆசிரியர்களிடம் நூல்களை முறைப்படப் பயின்று தாம் அதில் நன்கு திடம் பெற்று மிக எளிய முறையில் அரிய கருத்துகளைத் திரட்டி சாதாரண மக்கள் நோகாவண்ணம் கற்கத் தருவாரேயானால்… நீங்களே இந்த அம்மையாரின் சிறப்பை ஊகித்துக் கொள்ளுங்கள்.
எந்தக் காலம்? நமது இருபதாம் நூற்றாண்டு தான்!
தமிழில் வேதாந்தம் என்ற கல்வியின் தொன்மையும், தொடர்ச்சியும், பரவலும் அபாரம்.
சாது நித்தியானந்தம்மாள் இயற்றிய வேதாந்த சாஸ்திர பலதிரட்டுப் பாடல் (1958) நூலை இங்கே வாசிக்கலாம்.
வேதாந்த சாஸ்திர சங்கிரகம் (1955) நூலை இங்கே வாசிக்கலாம்.
கோவிலூர் மடம் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அத்வைத வேதாந்த மடமாகும். இதனுடன் இணைந்த கோவிலூர் ஆண்டவர் நூலகம் தமிழ் வேதாந்த நூல்களை சிறப்பாகப் பாதுகாத்து வருவதுடன், தற்போது அச்சில் இல்லாமல் போல நூல்கள் பலவற்றையும் ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்றியுள்ளது.
நாநாசீவவாதக் கட்டளை, ஞானவாசிட்டம் (யோக வாசிஷ்டம் தமிழ் வடிவம்), கைவல்ய நவநீதம், வித்யாரண்யரின் பஞ்சதசீ மற்றும் சங்கரரின் விவேக சூடாமணி, ஆன்மபோதம் ஆகியவையும் இவற்றில் அடக்கம். இந்த நூல்களை இங்கே வாசிக்கலாம்.
அம்மா இயற்றிய நுல்களின் பாடல்களை வெளியிடலாம்.பயனுள்ளதாக இருக்கும்.
வேதாந்த வழி மேல்வருணத்தாரிலும் ஆண்களுக்கும் துறவிகளுக்குமே ஆக ஒரு சிலருக்கு மட்டுமே உரியது என்று ஒரு கருத்து உள்ளது! அதை யாரும் கைக்கொாள்ளலாம் அதன்வழி எளிதாக ஞானமும் மோக்ஷமும் அடையலாம் என்பதை சாது நித்யானந்தம்மாள் வாழ்வு நமக்கு சுட்டுகிறது! அருமையான கட்டுரையை வரைந்த ஶ்ரீ ரங்கம் மோகனரங்கம் அவர்களுக்கும் அதை வெளியிட்ட தமிழ் ஹிந்துவுக்கும் பாராட்டுக்கள்!
அம்மையாரின் சமாதி எங்குள்ளது என்று பகிரவும்.
அம்மையார் சமாதி T.கல்லுப்பட்டி,அருகே உள்ள வன்னிவேலம்பட்டி சுப்புலாபுரத்தில் உள்ளது.
அம்மையார் சமாதி T.கல்லுப்பட்டி,அருகே உள்ள வன்னிவேலம்பட்டி சுப்புலாபுரத்தில் உள்ளது.