நிலவின் முகத்தைக் காணவேண்டும் என்று தான் மானுட மனங்கள் பொதுவாக ஆசைப்படுகின்றன. “நிலவே முகம் காட்டு” என்கிறார் ஒருவர். “நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை” என்கிறார் இன்னொருவர். மெல்லிதயங்களும் நெகிழும் உள்ளங்களும் எழுப்பும் குரல்கள் இவை. ஆனால், உன் முகத்தைக் காட்டமாட்டாயா, நான் பார்க்கவேண்டும் என்று சூரியனை நோக்கி இறைஞ்சும் கவிமனம் இதனின்றும் முற்றிலும் வேறுபட்டது. பாரதியார் தனது பாடலொன்றில் அவ்வாறு வேண்டுகிறார்.
‘காலை வேளையில், கடற்கரையில், சூரியன் மேகங்களால் மூடப்பட்டிருக்க, முகம் காட்டும்படி அவனை வேண்டிப் பாடிய பாடல்கள் இவை’ என்று ஒரு சம்பிரதாயமான குறிப்பு ‘பாரதியார் கவிதைகள்’ நூலில் கொடுக்கப் பட்டுள்ளது. இது மிக மேலோட்டமான ஒரு குறிப்பு. மற்றபடி அப்பாடலில் வேதாந்தக் கருத்துகள் அழகுற அமைந்து வருவது முதல் வாசிப்பிலேயே தெரியவருகிறது.
உண்மையில் சூரியனை முகம் காட்ட இறைஞ்சும் அந்தக் கம்பீரமான குரல் மிகவும் புராதனமானது. வேத ரிஷியின் குரல் அது. அதன் நீண்டகால ஒத்திசைவு அதிர்வுகளில் ஒன்றே பாரதியின் கவிதை. இதை உணர்த்துவது போலவே அந்தப் பாடல் “சுருதியின் கண் முனிவரும்” என்று தொடங்குகிறது.
ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம்ʼ முக²ம் |
தத் த்வம்ʼ பூஷன் அபாவ்ருʼணு ஸத்யத⁴ர்மாய த்³ருʼஷ்டயே ||
பொன்மயமான மூடிக்குள்
மறைந்துள்ளது
சத்தியத்தின் முகம்
பேணி வளர்ப்போனே
சத்திய இயல்பினர் காண
அதைத் திறந்திடுக.
— ஈசாவாஸ்ய உபநிஷதம், 15
பேணி வளர்ப்போன் (பூஷன்) என்பது சூரிய தேவனுடைய பெயர்களில் ஒன்று. கிரணங்கள் சூரிய மண்டலத்தின் அகமாகிய அதன் உள்ளொளியை மறைத்துக் கொண்டிருக்கும் பொன்மூடியாக இங்கு உருவகிக்கப் பட்டுள்ளன. இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்வது என்பது ஆன்மீகப் பயணத்தில் ஒரு படிநிலை. அதன்வழிக் காணும் பொன்மயமான ஒளி என்பது யோக, தியான, பக்தி சாதனைளாலும் நாம ரூபங்களின் துணையாலும் அடையப்படும் இன்பத்தையும் வசீகரத்தையும் குறிக்கிறது. ஆனால் அதுவே இறுதி உண்மை அல்ல. பிரம்மம் என்ற இறுதிப் பேருண்மை அந்த ஒளிக்கும் அப்பால் உள்ளது என்பதே இந்த மந்திரத்தின் உட்பொருள். இருள் எங்ஙனம் ஆரம்பத்தில் ஒரு திரையாகின்றதோ, அதற்கு அடுத்த நிலையில் அவ்வாறு ஒளியும் ஒரு திரையாகின்றது. சத்தியத்தின் முகம் இந்தத் திரைகள் அனைத்துக்கும் அப்பால் உள்ளது.
பிரம்மத்தை அறிபவன் பிரம்மமாகவே ஆகிறான் என்கிறது முண்டக உபநிஷதம். சத்தியத்தைத் தேடுபவனுக்கு, உபாசிப்பவனுக்கு சத்தியமே அவனது இயல்பாகிறது. சத்திய இயல்பினர் (சத்யதர்மா) என்ற சொல் அதனைக் குறித்து நின்றது.
இனி பாரதியாரின் பாடல்:
சூரிய தரிசனம்
சுருதியின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப் புலவோர் பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமை யென்றேத்தும்
பெற்றி கண்டு உனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
(சுருதி – வேதம்; தூமொழி – தூய மொழி; பெற்றி – தன்மை; பரிதி, பானு – சூரியனின் திருப்பெயர்கள்; வாண்முகம் – ஒளியுடைய முகம்)
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாதவார் கடல் இன்னொலியோடு
நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன்;
காதம் ஆயிரம் ஓர் கணத்துள்ளே
கடுகி ஓடும் கதிரினம் பாடி
ஆதவா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
(காதம் – தொலைவுக்கான அளவு; கடுகி – விரைந்து; கதிரினம் – கிரணங்கள்; ஆதவன் – சூரியன்)