சிவனுக்கான திருவீடு

சிவபெருமானை எழுந்தருளச் செய்ய கோபுரங்களும், விமானங்களும், மாடங்களும் கொண்ட மாபெரும் கோயில்களோ அல்லது பூஜா மண்டபங்களோ அத்தியாவசியமா என்ன? அவனை என்றும் இருத்தி வழிபடுவதற்கு உரிய உன்னதமான திருவீடு எது? மகான்களும் அருளாளர்களும் தெளிவாகவே அதைக் கூறுகிறார்கள்.

(1)

உள்ளவர் சிவாலயம் செய்வார்
நானென்ன செய்வேன் ஏழை ஐயா
என் காலே கம்பம் தேகமே கோயில்
சிரமே பொன்னின் கலசமையா
கூடலசங்கம தேவா கேளையா
நிற்பவைகளுக்கு அழிவுண்டு
நடப்பவைகளுக்கு அழிவில்லை.

– பசவண்ணர்

(2)

முடியினில் கங்கை தண்ணிலவு
கரத்திலும் தாளிலும் மெல்லுடல் அரவங்கள்
இடப்பாகத்தில் கருணையின் ஈரம் ததும்பும் இமயமலைமகள்
உடலெங்கும் சந்தனம்
இவ்வளவு கடுங்ககுளிரைத் தாங்கும் சக்தி
உமக்கு எப்படிக் கிடைக்கும்
கனகசபாநாதரே
நிராசையில் கொதிக்கும் என் மனதில்
நித்தியவாசம் செய்ய
உம்மால் ஆகாது எனில்?

– அப்பைய தீஷிதர் (ஆத்மார்ப்பண ஸ்துதி)

(3)

நீர் இங்குமங்கும் போகவேண்டாம் மலைவாசியே
என்னிடத்திலேயே வாசம் செய்யும்.
ஓ ஆதிவேடனே
என் மனக்கானகத்தின் எல்லைக்குள்ளேயே
மோகம் பொறாமை எனப்
பல கர்வம் பிடித்த மிருகங்களுண்டு.
அவற்றைக் கொன்று
உம் வேட்டை விநோதங்களில் பிரியமாக மகிழ்ந்திரும்.

– ஆதிசங்கரர், சிவானந்தலஹரி 43

(4)

ஊக்கமெனும் தூணில் நிலைத்ததும்
உறுதியான குணங்களெனும் கயிறுகள் கட்டியதும்
உடன் எடுத்துச்செல்லும்படியானதும்
வண்ணமயமாக தாமரைகளால் அழகுற்றதும்
நாள்தோறும் நல்வழியை நாடுவதும்
குற்றமற்றதும்
ஒளிவீசும் துணிபோர்த்தியதுமான
என் மனக் கூடாரத்தில்
மன்மதனின் பகைவனே
உன் கணங்கள் சேவிக்க
சக்தியுடன் வந்தடைந்திடுக
நிறைந்தோனே தலைவனே
வெல்க.

– ஆதிசங்கரர், சிவானந்தலஹரி 68

மேற்கூறிய இரண்டு பாடல்களில், இரண்டு எதிரெதிரான மனப்பாங்குகளை ஆசாரியார் கூறியிருக்கிறார். விலங்குகளைப் போன்ற குணங்களைக் கொண்டு ஆசையும் மோகமும் புதர்போல மண்டிய கானகம் போன்ற மனமானாலும் சரி, உறுதியும் சிரத்தையும் பக்தியும் கொண்ட தூய்மையான சாத்வீக மனமானாலும் சரி, திடமாக பக்தி செய்தால் இரண்டிலும் ஈசன் எழுந்தருள்வான் என்பது இதன் மூலம் உணரப்படுகிறது.

(4)

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

– திருமூலர், திருமந்திரம் 7.11.1

(காளா – கதிர்வீசுகின்ற. கலா என்பது களா என்றாகிக் காளா என நீண்டது).

தெளிந்த ஞானிகளுக்கு அவர்களது இதயமே சிவலிங்கம் எழுந்தருளியிருக்கும் கருவறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே சிவலிங்கத்தின் நேர்நோக்கு வாயிலாயும், உயிரே சிவலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.

(5)

சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும்
என் சிந்தையுள்ளும்
உறைவான், உயர்மதிற் கூடலின் ஆய்ந்த
ஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கு என்கொலாம்
புகுந்து எய்தியதே.

– மாணிக்கவாசகர், திருக்கோவையார் 2.2

இங்கு சிற்றம்பலமும், சிந்தையும், தமிழும், இசையும் சிவன் உறையும் இடங்களாகக் கூறப்பட்டன.

(சிறைவான் – காவலுடைய, புனல் – நீர்மிகுந்த, உறைவான் – தங்குபவன்; கூடலின் – மதுரையில்; ஒண் – ஒளிபொருந்திய; துறைவாய் – துறைகளிடத்தே; ஏழிசைச் சூழல் – சப்த ஸ்வரங்கள்; தடவரை – பெரிய மலைபோன்ற; தோட்கு – தோளுக்கு; என்கொலாம் – என்னவாயிற்று)

காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில்லைச்சிற்றம்பலமாகிய நல்ல இடத்தும் எனது நெஞ்சமாகிய தீய இடத்தும் ஒப்பத் தங்குகின்றவன் எமது சிவபெருமான். அத்தகைய பெருமை கொண்டவனது நகரமாகிய உயர்ந்த மதிலையுடைய கூடலில் (மதுரையில்) புலவர்கள் ஆராய்ந்த ஒளிபொருந்திய இனிய தமிழின் துறைகளிடத்து நுழைந்தாயோ? அல்லது ஏழு ஸ்வரங்களும் கூடிய இசையின் சூழலில் புகுந்தாயோ? மலைபோன்ற உனது தோள்கள் மெலிந்தது ஏனோ? தலைவனே, உனது துயருக்குக் காரணம் தான் என்ன?

பாங்கன் வினாதல் – தலைவி தன்னை எண்ணிக் காத்திருப்பதை நினையாமல் காலம்தாழ்ந்து வந்த தலைவனை நோக்கி, தலைவனின் தோழனாகிய பாங்கன் கேட்பது என்ற வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

மூலப்பாடல்கள்:

(1)
உள்ளவரு ஶிவாலய மாடு3வரு
நானேனு மாட3லி ப3ட3வனய்யா
என்ன காலே கம்ப3, தே3ஹவே தே3கு3ல
ஶிரவே ஹொன்ன களஸவய்யா
கூட3லஸங்க3மதே3வா கேளய்யா
ஸ்தா2வரக்களிவுண்டு ஜங்க3மக்களிவில்ல.

(2)
மௌலௌ க³ங்கா³ ஶஶாங்கௌ கரசரணதலே ஶீதலாங்கா³ பு⁴ஜங்கா³:
வாமே பா⁴கே³ த³யார்த்³ரா ஹிமகி³ரிது³ஹிதா சந்த³னம்ʼ ஸர்வகா³த்ரே ।
இத்த²ம்ʼ ஶீதம்ʼ ப்ரபூ⁴தம்ʼ தவ கனகஸபா⁴நாத² ஸோடு⁴ம்ʼ க்வ ஶக்தி:
சித்தே நிர்வேத³தப்தே யதி³ ப⁴வதி ந தே நித்யவாஸோ மதீ³யே ॥

(3)
மா க³ச்ச² த்வமிதஸ்ததோ கி³ரிஶ போ⁴ மய்யேவ வாஸம்ʼ குரு
ஸ்வாமிந்நாதி³கிராத மாமகமன꞉காந்தாரஸீமாந்தரே ।
வர்தந்தே ப³ஹுஶோ ம்ருʼகா³ மத³ஜுஷோ மாத்ஸர்யமோஹாத³ய-
ஸ்தான் ஹத்வா ம்ருʼக³யாவினோத³ருசிதாலாப⁴ம்ʼ ச ஸம்ப்ராப்ஸ்யஸி ॥

(4)
த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம்ʼ த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம்ʼ ஸக³மனாம்ʼ
விசித்ராம்ʼ பத்³மாட்⁴யாம்ʼ ப்ரதிதி³வஸஸன்மார்க³க⁴டிதாம் ।
ஸ்மராரே மச்சேத꞉ஸ்பு²டபடகுடீம்ʼ ப்ராப்ய விஶதா³ம்ʼ
ஜய ஸ்வாமின் ஶக்த்யா ஸஹ ஶிவக³ணை꞉ ஸேவித விபோ⁴ ॥

2 Replies to “சிவனுக்கான திருவீடு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *