பாலைக் கழுகுகளும் பனிப்பிரதேசக் கழுகுகளும் [கவிதை]

புனிதமானதாகச் சொல்லிக்கொள்ளப்படும்
பூர்விக நிலத்துக்கு
இன்றும் பெரும் சண்டை நடக்கிறது என்றாலும்
அந்தப் பாலைக் கழுகுகளும்
பனிப்பிரதேசக் கழுகுகளும்
உண்மையில் இரட்டைக் குழந்தைகள்தான்

உலகம் முழுவதும் எச்சமிட்டுத் திரிந்தபோதிலும்
பாலைவனத்திலேயே கால் ஊன்றி நின்றது ஒன்று
பனிப்பிரதேசத்துக்கு
இடம்பெயர்ந்துவிட்டது இன்னொன்று

இரண்டுக்கும்
தோட்டம், துரவுகள், வயல்கள், காடுகள் என
வளமான நிலம் எதுவும் கண்ணில் பட்டிருக்காததால்
மாமிசமே உணவாகவும்
வேட்டையே வாழ்வாகவும் ஆக்கிக்கொண்டன

வெம்பாலையிலும் பனிப்பாலையிலும்
பயிற்சி பெற்ற கொலைவெறியுடன்
மிதவெப்ப வான்களிலும் தம்
கொடூரக் கண்களின் கூர்மையான சக்தியாலும்
மூர்க்கமான இறகுகளின் வலிமையாலும்
எதிர்ப்பின்றிப் பறக்கத் தொடங்கின

மிதவெப்பப் பகுதியில்
அன்பான ஆவினங்கள்
வண்ணமயமான மயில்கள்
சாந்தமான புறாக்கள்
மென்மையான மான்கள்
புத்திசாலியான காகங்கள்
வலிமையான பன்றிகள்
பொறுமையான கழுதைகள் என ஏராளம் இருந்தன

தற்காத்துக்குக் கொள்ளக்கூடத் தெரியாதவற்றை
தலைகால் புரியாமல் தாறுமாறாக
ஆரம்பத்தில் வேட்டையாடின
ஒன்றன் பின் ஒன்றாக வந்த
இரட்டைக் கழுகுகள்

மித வெப்ப உயிரினங்கள்
பகல் வேளைகளில்
எந்த மரத்தின் பின்னும் ஒளிந்து தப்பிக்க முடியவில்லை

இரவு வேளைகளில்
எந்தப் புல்வெளியிலும் படுத்துறங்க முடியவில்லை

தகிக்கும் மதிய நேரங்களில்
தாகம் தணிக்க பயந்து பயந்து போனபோதும்
புதர் மறையில் இருந்து பாய்ந்து தாக்கிக் கொன்றன

தப்பித்தலே வாழ்க்கையாகிப் போனது
உயிர் பயமே ஒரே உணர்வாகிப் போனது
அகால மரணமே அனைத்தின் விதியாகிப் போனது

இரட்டைக் கழுகுகள்
நாளடைவில் புதியதொரு
எளிமையான வழியைக் கண்டுகொண்டன
அதாவது அவற்றின் வேட்டைக்கலை
அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தன

ஓடி ஓடி சலித்துப் போனவை
உட்கார்ந்த இடத்திலிருந்தே
வேட்டையாடத் தீர்மானித்தன

ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் உயிர்க்கொலை
ஒரு சிறு ஆயுதமும் ஏந்தாமல் அழித்தொழிப்பு

மிதவெப்ப மண்டலத்து
அப்பாவிப் பறவைகள், விலங்குகளில் சிலவற்றை
தமது அந்நியமான கூடுகளுக்கு
அடர்ந்த காடுகளுக்குக் கொண்டு சென்று சிறைவைத்தன

சிறைப்பட்டவற்றுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட
ஒரே பாடம்
நயந்து பேசி இழுத்துக்கொண்டுவா
உன் மிச்சக் கூட்டத்தை

அவற்றுக்கு இடப்பட்ட
ஒரே உத்தரவு
நச்சியமாகப் பேசி அழைத்துக்கொண்டுவா
உன் எஞ்சிய கும்பலை

தினமும் ஐந்து நேரமும் அதையே
அடித்து அடித்து சொல்லிக் கொடுத்தன

ஆறு நாட்கள் அடிமைப்படுத்திவிட்டு
ஏழாவது நாளில் அவிழ்த்துவிட்டு அன்பு காட்டின

சொற்ப நிமிடமென்றாலும்
சுமை நீக்கப்படும் கணமே
சொர்க்கமாகிவிடுமல்லவா

ஒரு நாள் நீங்களும் கழுகாகிவிடலாம்
பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
சாந்தியும் சமாதானமும் உண்டாகப் போகிறது
அந்த மலைக்கு அப்பால் பொன்னுலகம் காத்திருக்கிறது
என்றெல்லாம் மூளைக்கறை செய்யப்பட்டன

பாலை மற்றும் பனிக் கழுகுகளின் குகைகளுக்கு அண்மையில்
ஆங்கோர் நல் மேய்ப்பன் வாழ்கிறான்
நீர்ப்பாய்ச்சலான நிலங்கள் இருக்கின்றன
தாகந்தீர்க்கும் ஊற்றுகள் இருக்கின்றன
கனிகள் எல்லாம் தாழ் கிளைகளில்
குலைகுலையாகத் தொங்குகின்றன
தானியங்கள் எல்லாம் தரைமுழுவதும்
கொட்டிக் கிடக்கின்றன
இலை தழைகள் எல்லாம்
ஏராளம் முளைத்து நிற்கின்றன
வியர்வை காயும் முன் கூலி தரப்பட்டுவிடும்
என்றெல்லாம் ஏய்ப்பு வசனங்கள் எழுதி வாசிக்கப்பட்டன

ஆவினங்களும்
அப்பாவிப் பறவையினங்களும் அதை நம்பின
ஆள் பிடிக்கும் பணி தொடங்கி
ஆண்டுகள் பலவாகிவிட்டன

மிதவெப்ப மண்டலத்துப் பசுஞ்சோலைகள் எல்லாம்
சிறைப்பிடிக்கப்பட்ட ஆவினங்களின் மூலம்
பனிக் கழுகுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன

மிதவெப்ப மண்டலத்து நீரோடைகள் எல்லாம்
பாலைக்கழுகுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன

சிறைப்பிடிக்கப்படாத
மிதவெப்ப விலங்குகளின் வழித்தடங்களில்
மின்சார முள்வேலிகள் முளைத்துவிட்டன

கழுகு உதிர்த்துப் போடும் இறகுகளைச்
எடுத்துச் செருகிக் கொள்ளும் புறாக்கள்
மெள்ள மெள்ளக் கழுகாகிவிடுமா?

இறகுகளை உதிர்க்கும் கழுகுகள்
வேட்டை மறந்து புறாவாகிவிடுமா?

பூர்விகப் பனிப்பாலைக்கு சென்று சேர்ந்திருக்கும்
புலம் பெயர்ந்த ஆவினங்கள் மேய
திறந்து கிடக்கின்றன முடிவற்ற புல்வெளிகள்

பாரம்பரியக் கழுத்து மணிகள் கிணுகிணுங்க
பயமின்றி உலவும் அவற்றின்
மென் வெப்ப மூச்சுக்காற்று
உறைந்துகிடக்கும் பனிநீரை உருக்கி
மிதவெப்ப நீரோடைகள் அங்கு பெருகுமா

பூர்விக வெம்பாலையில்
வம்புச் சண்டைக்கு போகத் தெரியாமல்
வந்த சண்டையையும் போடத்தெரியாமல்
வளைந்த கொம்புகள் கொண்ட கால்நடைகள்
வெப்பக்காற்றை உள்ளிழுத்து
வளிமண்டலத்தை குளிர்விக்குமா?

அதீத நிலங்கள் இரண்டிலும்
ஆவினங்களின் புல்வெளிகள் பெருகுமா?

மிதவெப்ப பூமி முழுவதும்
வெம் பாலையோ
பனிப்பாலையோ படர்ந்திடுமா?

இரட்டைக்கழுகுகள்
இங்கு தம் சண்டையை ஆரம்பிக்கும்போது
முழுவதும் தப்பியிருக்குமா
மென் விலங்குக் கூட்டங்கள்?

துரத்தியவை தமக்குள் மோதியும் அழிந்திருக்க
துரத்தியவற்றிடமிருந்து தப்பிக்க
உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிய ஊர்வனவற்றின்
முன்னங்கால்கள் சிறகுகளாவதுதானே பரிணாமம்

இங்கு ஒளி தோன்றியபோது
அங்கு இருள்தான் மண்டிக்கிடந்தது

இங்கு இருள் சூழும்போது
அங்கு ஒளி தோன்றிவிடுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *