தமிழகத்தின் சனாதன பாட்டி ஔவையார்

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சங்ககாலத்திலிருந்து பல ஔவையார்கள் வாழ்ந்ததாக கருதுகிறார்கள். ஆனால் தமிழரின் சனாதன தர்ம மனமானது ஔவை எனும் கல்வியும் அனுபவமும் இறைஞானமும் கொண்ட ஒற்றை பெண்மணியாக அவளை உருவகித்தது. அவர் மூதாட்டி. சமுதாய ஏற்றதாழ்வுகளை விமர்சித்தவர். வீரத்தை பாராட்டும் அதே மனதுடன் அமைதிக்காக பாடுபடுபவர். பெண்களின் நல்வாழ்வுக்காக உழைத்தவர். அனைத்துக்கும் அடிப்படையாக விநாயகரின் ஒப்பற்ற பக்தை.

ஆத்திச்சூடி என்பது எவ்வித வேறுபாடும் இல்லாமல் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குழந்தை கல்விக்கான இலக்கியம். குறைந்த பட்சம் கடந்த ஆயிரமாண்டுகளாக இந்த மண்ணில் குழந்தைகள் அவர்கள் எந்த மதமெனினும் ஆத்திச்சூடி என்றே தம் மொழியறிவை ஆரம்பிக்கிறார்கள். அறஞ்செய விரும்பு எனும் அந்த சின்னவே சின்ன வரிக்குள் பெரும் சனாதன தர்மம் எனும் ஆலமரத்தின் விதைகள் குழந்தைகளின் மனங்களில் ஆழமாக விதைக்கப்பட்டுவிடுகின்றன.

விநாயகர் அகவல் குறைந்த பட்சம் கடந்த ஐநூறு ஆண்டுகளாக (அப்படித்தான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்) மிக உயர்ந்த ஞானத்தை தமிழ் சமுதாயத்துக்கு அளித்தபடி உள்ளது. தமிழ்நாட்டின் கடைகோடியில் இருப்பது குமரி மாவட்டம். இங்கே சமய வகுப்புகள் நடக்கின்றன. இங்குள்ள குழந்தைகள் -அதாவது சமய வகுப்புக்கு செல்லும் குழந்தைகள்- பெரும்பாலும் – எட்டு அல்லது பத்து வயதுக்குள் விநாயகர் அகவலை மனப்பாடம் செய்து தினசரி அல்லது குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒருமுறையாவது பாராயணம் செய்ய ஆரம்பித்துவிடும். அதிலுள்ள வரிகள்:

“இடைபிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி

குண்டலி அதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
காலாலெழுப்பும் கருத்தறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்
புரிஅட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தரிசனப்படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கருளி..”

எல்லாம் தெரிந்த வரிகள்தான். ஆனால் பொருள் அதி ஆழமானது. இந்த அளவுக்கான மறைஞானமென்பது எல்லா பண்பாடுகளிலும் உண்டு. எகிப்து முதல் மெசபடோமியா வரை சீனம் முதல் தென்னமெரிக்க ஷமான்கள் வரை . ஆனால் அந்த மறைஞானம் முழுக்க மறைக்கப்பட்டிருக்கும். அதை அடைய வாழ்க்கை முழுக்க அலைய வேண்டும். இந்த விநாயகர் அகவலின் வரிகளில் உள்ள ஆழமான பொருளை விடுங்கள், அந்த வரிகளின் வார்த்தைகளின் ஒரு துளி கிடைக்க நீங்கள் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ பிறந்தால் அலையாக அலைய வேண்டும். ஆனால் இங்கோ கொட்டி கிடக்க வைத்திருக்கிறாள் ஔவை.

பொதுவாக பேசும் போது சொல்வார்கள் – எல்லாரும் பைபிள் படிக்கலாம், குரான் படிக்கலாம், வேதம் படிக்க முடியுமா? என்னதான் புனிதநூலை படித்தாலும் நிறுவன மதத்தின் அடிமையாகத்தான் இருக்க வேண்டும். மெய்ஞானத்தேடல் என்றைக்குமே நிறுவன மதத்துக்கு கீழ்தான். இன்னும் சொன்னால் எதிரிதான். ஆனால் இங்கு நிறுவனம் இல்லை. வர்ண அமைப்பு கூட குருஜி கோல்வால்கர் சொன்னது போல ஒரு அமைப்பு – ஒரு ஏற்பாடு அவ்வளவுதான். அதுவும் மிகவும் நெகிழ்ச்சியும் நிறுவனப்படுத்தலின்மையும் கொண்ட அமைப்பு. ஆனால் நிறுவன மதங்களுக்கு எது கடும் எதிரியோ, அந்த மறைஞானத்தை இந்த அளவுக்கு ஜனநாயகப்படுத்திய பண்பாடு இப்புவியின் வரலாற்றில் நானறிய பிறிதொன்றில்லை.

ஔவைப் பாட்டி ஒரு ஆன்மிக பண்பாட்டு archetype.

  • சங்ககாலத்தின் ஔவை கள்ளை விரும்பி உண்பாள். அத்துடன் அமைதியை சாந்தத்தை விரும்புகிறவள். மூவேந்தரின் நட்பில், பகையின்மையில், இருபிறப்பாளரின் முத்தீயை காணும் வைதீக பெண்மணியும் கூட.
  • பாரிமகளிர் நல்வாழ்வுக்காக நடப்பவள் அடுத்து நாம் காணும் ஔவையார்.
  • ஆத்திச்சூடி தந்த ஔவையோ அத்துடன் சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் சூடாகக் கூறியவள். தனிப்பாடல்களில் கம்பரின் செருக்கை அழிப்பவளாக கிராமப்புற வழக்காடல்களில் அவள் வாழ்கிறாள்.
  • சுட்ட பழமா சுடாத பழமா என்று கேட்கும் மாடுமேய்க்கும் சிறுவனின் வழக்கு பேச்சில் தன்னை தோற்கும் ஔவை குழந்தைகளின் மொழி அறிவை கதை மூலம் செதுக்குகிறாள்.
  • விநாயகர் அகவலும் ஔவை குறளும் மறைஞான உச்சங்கள். அவற்றை அளித்தவள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் என்பதே நாம் வியப்பும் பெருமையும் கொள்ளத்தக்கது.

அப்படிப்பட்ட பெண்ஞானியை உருவாக்கும் கல்வி முறை இந்த மண்ணில் இருந்திருக்கிறது. வரலாறு தோறும் இருக்கும் இந்த குணங்கள் அனைத்தையும் இணைத்து அந்த மரபின் சாராம்சத்தை வடித்தெடுத்து ஒரு பாட்டியை – ஒவ்வொரு ஹிந்து குழந்தைக்குமான ஒரு பாட்டியை – உருவாக்கி அளித்திருக்கிறது நம் சனாதன தமிழ் பண்பாடு. எந்த வரலாற்று ஆராய்ச்சியாலும் அடைய முடியாத அதி யதார்த்த ஆளுமை நம் பண்பாடு உருவாக்கி அளித்த ஔவை பாட்டி. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி ஏதோ ஒரு கட்டத்தில் அவள் பேரக்குழந்தைகளுக்கு ஔவை பாட்டியின் வடிவமாக வேண்டும். கனிந்து வரும் அகவையில் ஔவை ஆதர்சமாகவும் ஆகிறாள்.

எனவே தமிழகத்தின் பொதுமனம் உருவாக்கிய ஔவை குறித்த சித்திரம் வரலாற்று அறிவின்மையால் அல்ல. மாறாக வரலாற்றின் குறுகிய எல்லைகளைத் தாண்டிய சனாதன தரிசனம் ஔவையாரின் வடிவம்.

பிள்ளையாரப்பா யாராச்சும் ஔவையார் பாட்டி ஆருக்குடா பொறந்தான்னு கேக்காம பாத்துக்கப்பா.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *