ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.
பிரிட்டிஷார் ஆட்சி வேண்டுமா?
1916 மே 25ல் சுதேசமித்திரனில் ‘சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை’ என்ற தலைப்பில் அவர் (பாரதியார்) எழுதியுள்ள கருத்து வருமாறு:
“பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என்ற முடிவுக்கு வந்து விட்டார். பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916ல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார்.1916 டிசம்பர் 26ம் தேதி சுதேசிமித்திரன் ஏட்டில் அவர் எழுதுகிறார்:
“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களுக்கும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம்.”
…. பாரதி 1906 முதல் 1908 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்றும் 1908 இல் புகலிடம் தேடிப் புதுவைக்குச் சென்றவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைய ஆரம்பித்து, பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்.
என்று வாலாசா வல்லவன் எழுதியிருக்கிறார். எல்லாவற்றிலும் திரிபுகளை செய்துவருகின்ற இவர் இதிலேயேயும் திரிபுகளை செய்திருக்கிறார் வாலாசா வல்லவன்.
“பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என்ற முடிவுக்கு வந்து விட்டார்” என்று சொல்லும் வாலாசா வல்லவன் அதை பாரதி ஏன் சொன்னார் என்பதை மறைத்துவிட்டார். அடுத்த பாராவில் பாரதி சொன்னதை ஏன் மறைக்க வேண்டும் வாலாசா வல்லவன்? அடுத்த பாராவில் பாரதி சொன்னதை வாலாசாவல்லவன் சொல்லியிருந்தால் பாரதியை எப்படி குற்றம்சாட்டுவது? அதனால் திரிபுவாதத்தையே தொழிலாக கொண்டராதலால் அடுத்த பாராவை மூடிமறைத்துவிட்டார்.
பாரதி ஏன் சொன்னார் என்பதை பாரதி அடுத்த பாராவிலேயே சொல்லியிருக்கிறார். பாரதி கூறுகிறார் :-
“பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்.”
என்று எழுதிய பாரதி அடுத்த பாராவில்,
”ஐரோப்பாவில் நடக்கும் யுத்த நெருக்கடியிலே நாம் உள்நாட்டுத் திருத்தங்களுக்கு மன்றாடுவதனால் நாம் ப்ரிடிஷ் ராஜாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய கடமை தவறிப் போகுமென்று சொல்லி நமது முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புவோரின் அர்த்தமில்லாத வார்த்தையைக் கருதி இக்காரியத்தை நிறுத்தி வைக்கலாகாது.”
என்று கூறுகிறார். இதற்கு அடுத்த பாராவில் பாரதி எழுதுகிறார் :-
“அயர்லாந்து, போலந்து என்ற தேசங்களின் திருஷ்டாந்தத்தைக் காட்டலாம்.”
என்று கட்டுரையை முடிக்கிறார் பாரதி.
1908 இல் புகலிடம் தேடிப் புதுவைக்குச் சென்றவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது என்றால் ”பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டும்” என்று பாரதி ஏன் 1916ல் எழுத வேண்டும்?
1914ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் 866 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சென்னை மாகாண ஆளுநர் லார்ட் பென்ட்லாண்ட் இந்த மாநாட்டிற்கு வருகை புரிந்திருந்தார். பூபேந்திரநாத் போஸ் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியமானவைகள். அதில் முதல் உலகப் போரில் பிரிடிஷ் அரசுக்கு ஆதரவாக இருப்பது என்பதும் ஒன்று. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பிரிட்டிஷ் அரசுக்கு எதிர்ப்பாக எதையும் செய்யாது ஆதரவாக இருப்பது என்பதை காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியதால், இத்தீர்மானத்தின் காரணமாக, பாரதி, நாம் அமைதியாக இருந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார். காங்கிரசின் தீர்மானத்தை சொல்லி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்பவர்களை நமது முன்னேற்றத்தை தடுக்க விரும்புபவர்கள் என்றும் அவர்கள் வார்த்தை அர்த்தமில்லாத வார்த்தை என்றும் சுயாட்சி கோரிக்கையை உடனே அனுப்ப வேண்டும் என்றும் பாரதி வலியுறுத்துகிறார்.
இதிலே எங்கே ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைந்திருக்கிறது? உண்மையிலேயே காங்கிரசின் தீர்மானத்தை ஏற்று அமைதியாக இருக்க வேண்டும் என்று பாரதி சொல்லியிருந்தால் அதுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைந்திருக்கிறது என்று நாம் முடிவு செய்யலாம். ஆனால் அவர் அமைதியாக இருக்க வேண்டாம், சுயாட்சி கோரிக்கையை போரின்போதும் அனுப்ப வேண்டும் என்று சொல்வது, பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைந்துவிடவில்லை என்பதைத்தானே காட்டுகிறது?
அதுமட்டுமல்ல முதல் உலகப்போரின்போது அயர்லாந்து, போலந்து நாடுகளை உதாரணம் காட்டுகிறார் பாரதி. காரணம், அயர்லாந்து மற்றும் போலந்து நாடுகள் தங்கள் விடுதலைக்காக போரின் சமயத்தின்போதும் விடுதலையை முயற்சி செய்து கொண்டிருந்தன. போர் நடப்பதால் விடுதலையை முயற்சியை அந்நாடுகள் கைவிடவில்லை என்பதால் அந்நாடுகளை பாரதி உதாரணமாக காட்டுகிறார் என்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைந்துவிடவில்லை என்பதைத்தானே காட்டுகிறது?
அடுத்து வாலாசாவல்லவன் அவர்களின் மற்றொரு குற்றச்சாட்டாக, ”பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்” என்று முடிவுரை எழுதிவிட்டார். அதற்கு வாலாசாவல்லவன் எடுத்துக்காட்டிய பாரதி வரிகள் இவை.
1916 டிசம்பர் 26ம் தேதி சுதேசிமித்திரன் ஏட்டில் அவர் எழுதுகிறார்:
“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களுக்கும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம்.”
அதாவது இந்திய மக்கள் ஓட்டுப்போட்டு ஒரு மஹாசபையை உருவாக்க வேண்டும். அந்த மஹாசபையானது ராஜ்யத்தில் வரவு-செலவு உள்பட எல்லா விவகாரங்களுக்கும் மேற்படி அமைப்பின் உறுப்பினர்கள் “இஷ்டப்படி” நடக்க வேண்டும் என்று பாரதி சொல்கிறார். அப்படியென்றால் ஆங்கிலேயர்களுக்கு என்ன வேலை? ஒன்றுமில்லை, அந்த மஹாசபையார் செய்வதை அமைதியாக அமர்ந்து வேடிக்கைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார் பாரதி. இதில் ”மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும்” என்ற வார்த்தை மிக முக்கியமானது. வலிமையான செய்தியை இந்த வார்த்தை சொல்கிறது. எங்கள் இஷ்டப்படி ஆட்சி செய்துகொள்கிறோம் என்ற செய்தி அதில் அடங்கியுள்ளது.
ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டுமென்றால் வரவு-செலவு என்பது மிக முக்கியம். பிரிட்டிஷார் ஆட்சி செய்வதே இந்த ”வரவு”க்காகத்தான். அதையே பாரதி மஹாசபையார் தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், மற்ற எல்லா விவகாரங்களும்கூட மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்று சொல்கிறார். இதில் எங்கே ஏகாதிபத்திய ஆதரவு இருக்கிறது?
பாரதியின் இந்த எடுத்துக்காட்டிலும் வாலாசாவல்லவன் ஒரு திரிபுவாத செயலை செய்திருக்கிறார். “எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம்” என்ற வார்த்தையோடு வாலாசா வல்லவன் முடித்திருக்கிறார். பாரதி இந்த வார்த்தையோடு முடித்திருக்கிறார் என்று படிப்பவர்கள் நம்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு வாலாசாவல்லவன் முடித்திருக்கிறார். ஆனால் பாரதி அந்த வார்த்தையோடு முடிக்கவில்லை. கடைசி வார்த்தையாக பாரதி சொல்கிறார் :-
”விடுதலை விண்ணப்பத்துக்கு நல்ல உத்தரவு கொடுக்கவேணும்” என்ற வார்த்தையோடு முடிக்கிறார் பாரதி. அதாவது முழு பாராவையும் இதனோடு சேர்த்து பார்க்கலாம்.
“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களுக்கும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம். விடுதலை விண்ணப்பத்துக்கு நல்ல உத்தரவு கொடுக்கவேணும்”
”ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” என்று சொல்கிற அதே பாரதி கடைசி வார்த்தையாக “விடுதலை விண்ணப்பத்துக்கு நல்ல உத்தரவு கொடுக்கவேணும்” அதாவது நாங்கள் ஆட்சி செய்வதற்கு எங்களுக்கு ’விடுதலை வேண்டும்’ என்று கேட்கிறார். இந்த கோரிக்கைக்கு ‘விடுதலை விண்ணப்பம்’ என்று எழுதிதான் பாரதி கடைசியில் முடிக்கிறார். விடுதலை விண்ணப்பம் என்றால் என்ன அர்த்தம் என்று எல்லோருக்குமே தெரியும். வாலாசா வல்லவனுக்கு தெரியாமல் இருப்பது வியப்புதான்.
”ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை” என்று பாரதி சொன்னது, அப்போதைய காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில்தான். ஏனென்றால் முதல் உலகப்போர் நடக்கிற சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது, பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில்தான் பாரதி இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ’நீங்கள் (பிரிட்டிஷார்) ஓரமாய் நின்று நாங்கள் (இந்தியர்கள்) ஆட்சி செய்வதை பாருங்கள் என்று பாரதி சொல்வது, ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?
”பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்” என்று எந்த அடிப்படையில் வாலாசா வல்லவன் கூறுகிறார்? 1916 முதல் 1921வரை பாரதி உயிருடன்தான் இருந்தார். இந்த 5வருடங்களில் பாரதி பிரிட்டிஷாரை எதிர்த்து எதையும் எழுதவில்லையா?
1916க்குப் பிறகும் 5வருடங்கள் வாழ்ந்த பாரதி ஸ்வராஜ்ஜியம் அல்லது சுயாட்சி பற்றி எழுதியிருக்கிறாரா என்று வாலாசா வல்லவன் ஏதாவது ஆய்வு செய்திருக்கிறாரா? ஆய்வு செய்திருந்தால் இப்படி பொய்யான செய்தியை எழுதியிருக்கமாட்டார். அவரைப்போல நாமும் இருக்க முடியாதே. நாம் என்ன பொய்யை எழுதும் திராவிடர் கழகத்துக்காரரா? அதனால் 1916க்குப் பிறகு பாரதி சுயாட்சி அல்லது ஸ்வராஜ்ஜியம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை பார்ப்போம்.
5-10-1918 அன்று ஸ்வராஜ்யம் என்ற தலைப்பில் சக்திதாசன் என்ற புனைபெயரில் பாரதி எழுதுகிறார் :-
”சென்னை ‘ஹிந்து’ பத்திரிகையின் லண்டன் நிருபர் எழுதிய கடிதமொன்றில் ‘அமெரிக்காவும், ஐர்லாந்தும், இந்தியாவும்” என்ற மகுடத்தின் கீழே ஒரு குறிப்பெழுதியிருக்கிறார். அதில் அமெரிக்கா ஸ்வாதீனமடைந்த திருநாளாகிய ஜூலை நாலாந்தேதி கொண்டாட்டங்கள் ஆங்கிலேயர்களாலேயே இங்கிலாந்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட செய்தியைக் குறித்துப் பேசுகிறார். (இங்கிலீஷ் ராஜ்யத்தை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெற்று (யுனைடெட் ஸ்டேட்ஸ்) அமெரிக்க ஐக்ய நாடுகள் 1776-ஆம் வருஷம் ஜூலை மாஸம் நாலாந் தேதியன்று விடுதலைக் கொடி நாட்டின. மேற்படி லண்டன் நிருபர் எழுதுகிறார்.
“இன்று ஜூலை நாலாந் தேதியன்று (ஆங்கிலேயராகிய) நாமெல்லோரும் நம்முடைய அமெரிக்க ஸகோதரருடன் கலந்து ஐக்யநாடுகளின் விடுதலையை ஆவலுடன் கொண்டாடுகிறோம்.’
இன்று ஆங்கிலேயர் சொல்லும் வார்த்தைகளையும், செய்யும் செய்கைகளையும் 142 வருஷங்களுக்கு முன்பு சொல்லியும், செய்துமிருப்பார்களாயின் தேசத் துரோகிகளென்னும், கலகக்காரரென்றும் சொல்லி மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும். இதனைப் பல ஆங்கிலேயர் இப்போது நினைத்திருக்கக் கூடமாட்டார்கள். அதே ஆங்கிலேயரில் சிலர் இக்காலத்தில் “விடுதலைபெற நியாயமாகப் போராடும்” வேறு சில ஜாதியார் விஷயத்தில் என்ன மாதிரியான வார்த்தை சொல்லுகிறார்கள்?
இங்கு ஒரு முக்கியமான பேதத்தை மேற்படி லண்டன் நிருபர் மறந்துவிட்டார். ஐக்ய நாடுகள் விடுதலைக்காகப் படை சேர்த்துப் போர் புரிந்து ப்ரான்ஸ் தேசத்தின் உதவியால் இங்கிலாந்தை வென்றன. ஐர்லாந்து கலகங்கள் செய்து விடுதலை பெற முயன்று வருகிறது.
இந்தியாவோ அப்படியில்லை. ஆங்கிலேயரிடமிருந்து ஸமாதானமாகவே ஸ்வராஜ்யம் சட்டத்துக்கிணங்கிய முறைகளால் பெற விரும்புகிறது.
“உபாயத்தால் சாதிக்கக்கூடிய கார்யத்தைப் பராக்கிரமத்தால் சாதிக்க முடியாது” என்று பஞ்சதந்திரம் கூறுகிறது. மேலும் நமக்கு ஆங்கிலேயர் சாமாதானமாகவே ராஜ்யம் கொடுத்து விடுவார்கள் என்று நினைப்பதற்குக் காலதேச வர்த்தமானங்கள் மிகவும் அனுகூலமாகவேயிருக்கின்றன.
எங்ஙனமெனில் மந்திரி மிஸ்டர் மான்டேகுவும், ராஜப்ரதிநிதி லார்டு செம்ஸ்போர்டும் சேர்ந்து தயார் செய்திருக்கும் சீர்திருத்த ஆலோசனைப் புஸ்தகத்தில் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். “இந்தியாவின் எதிர்கால நிலை டில்லி நகரத்திலேனும் ஸிம்லாவிலேனும் வைட்ஹாலிலேனும் நிச்சயிக்கப்படுவதன்று. ப்ரான்ஸ் தேசத்துப் போர்க் களங்களிலே நிச்சயிக்கப்படும்” என்கிறார்கள்,
இங்ஙனம் மந்திரியும் ராஜப்பிரதிநிதியும் கூறுவதன் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனினும், நேசக்கக்ஷியாருக்கு வெற்றி கிடைத்தால் நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க முடியுமென்று அவர்கள் சொல்வதாகவே நாம் பொருள் கொள்ள நேர்கிறது.
இதனிடையே இந்தியாவில் இந்து-மஹமதிய பேதங்களிருப்பதாகக் காட்டி அதினின்றும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் கொடுக்கத் தகாதென்று சொல்லும் ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் முதலிய வெளிநாட்டு, உள்நாட்டு துரோகிகள் எல்லார் வாயிலும் ஸ்ரீமான் ஸய்யது ஹசேன் இமாம்-நமது விசேஷ ஜனசபைக் கூட்டத்தின் அதிபதி-மண்ணைக் கொட்டிவிட்டார். “எல்லா வகுப்புகளும் இப்போது கொண்டிருக்கும் ஐக்ய புத்தியையும், எல்லார் நலமும் ஒன்றென்ற கருத்தையும் எதிர்க்க முடியாது” என்று அவர் சொல்லுகிர்.
மேலும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் மிகவும் அவசியமென்பதை விளக்கிக் காட்டும் பொருட்டாக நீதி நிபுண ஸய்யது ஹலேன் இமாம் ஸாஹப் சொல்லும் பின்வரும் வாக்கியங்களுக்கு ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் என்ன மறுமொழி சொல்லக் கூடும்? ஹஸேன் இமாம் கூறுகின்றார்:
“எல்லாவிதமான அன்னியாதிபத்தியங்களைக் காட்டிலும் ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தார் மீது செலுத்தும் அன்னியாதிபத்தியம் மிகக் கொடியது என்று மக்காலே சொன்னார். இது மக்காலே காலத்தில் எத்தனை உண்மையோ அத்தனை இக்காலத்திலும் உண்மையே. அவர் வார்த்தை மற்ற தேசங்களுக்கு எவ்வளவு பொருந்துமோ அத்தனை இந்தியாவுக்கும் பொருந்தும். அன்ய நுகத்தடியின் கஷ்டத்தை இந்தியா உணர்கின்றதென்பதை மறுத்தல் மூல ஸத்யங்களைப் பார்க்க மாட்டோமென்று கண்ணை மூடிக் கொள்வதேயாகும். இந்தியாவில் ப்ரிடிஷ் ராஜ்யத்தை ஆதரித்துப் பேசுவோர் இந்நாட்டிற்கு ப்ரிடிஷார் பரோபகார சிந்தனை கொண்டு மட்டும் வந்ததாகச் சொல்லுகிறார்கள். இந்நாட்டு ஜனங்கள் தமக்குத் தாமே தீங்கு செய்து கொள்ளாமல் காக்கும் பொருட்டாகவும், நம்மவரின் தர்ம நியாயத்தை உயர்த்தும் பொருட்டாகவும் லெளகிகச் செல்வம் ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டாகவும், இதுபோன்ற பல காரணங்களின் பொருட்டாகவும் அவர்கள் இங்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது; இவையெல்லாம் பக்ஷபாதிகள் வழக்கமாகச் சொல்லும் அரைமொழிச் சொற்களேயாம். உண்மையாதெனிலோ, ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுத்தப்பட்டது, இந்தியாவின் நன்மைக்காக அன்று. இந்தியாவினின்றும் பணத்தை ஏராளமாய்த் திரட்டிக்கொண்டு போய் ப்ரித்தானியாவுக்கு நன்மை செய்யும் பொருட்டாக ஏற்பட்டது. பொன்னாசையுடன் மண்ணாசையும் கலந்தது. பிறகு கம்பெனியாரிடமிருந்து அரசு மகுடத்தின் கீழே கொண்டு வரப்பட்ட பின் பொருளாசையும் அதிகார ஆவலும் ஆட்சி செய்வோருக்குக் குறைவுபடவில்லை. பேதம் யாதெனில், யதேச்சதிகாரத்தை இப்பொழுது ஒழுங்குப்படி நடத்துகிறார்கள். அந்தக் கொள்ளை சாஸ்த்ர தோரணையில் நடந்து வருகிறது!’ என்று நம்முடைய ஜனசபைத் தலைவர் சொல்லுகிறார். “இஃதெல்லாம் ஜனங்களுக்குத் தெரியும். இது அவர்கள் நெஞ்சை உறுத்துகிறது. எனவே பண்டைச் செயல்களுக்கெல்லாம் இப்போது (ஆங்கில அதிகாரிகள்) பரிகாரம் அல்லது ப்ராயச்சித்தம் செய்யவேண்டுமென்று ஜனங்கள் கேட்கிறார்கள்’ என்று கூறி ஸய்யது இமாம் முடிக்கிறார்.
இதுதான் விஷயம் முழுதும்.”
என்று ஸய்யது இமாம் கூறியதை எழுதிய பாரதி அடுத்து தன்னுடைய கருத்தாக கடைசி இரண்டு பாராவில் எழுதியிருப்பதுதான் மிக முக்கியம்.
அடுத்த பாராவில் பாரதி எழுதுகிறார் :-
”இவ்வித அதிகாரிகளின் கையினின்று நம்மை மீட்டு நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று மாட்சிமை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தியிடம் அழுத்தமாகப் ப்ரார்த்தனை செய்கிறோம்.
எங்களுக்கு உடனே ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று வணக்கத்துடனும் எங்களுடைய பரிபூரண ஜீவபலத்துடனும் ப்ரார்த்தனை செய்து கொள்ளுகிறோம்.”
”பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்” என்று கூசாமல் பொய்யை எழுதும் வாலாசா வல்லவன் இதற்கு என்ன கூறப்போகிறார்?
30-11-1920 அன்று ’சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் பாரதியார் எழுதிய கட்டுரையிலும் ஸ்வராஜ்ஜியம் பற்றி குறிப்பிடுகிறார் :-
”வடக்கே, ஸ்ரீகாசியினின்றும், தெற்கே தென்காசியினின்றும், இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத்தன. அவை யிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று ‘பஹிரங்கக் கடிதம்.” மற்றது. ஸாதாரணக் கடிதம். ஆனால் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக்கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப்பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையிலுள்ள வேறு சில நண்பர்கள் என்னிடம் நேராகவும் கேட்டனர். இந்த நண்பர்களுக்கெல்லாம் இங்கு பொதுவாக மறுமொழி யெழுதிவிடுதல் பொருந்துமென்றும், அவர்களுக்கு இஃது திருப்தி தருமென்றும் நினைக்கிறேன். இவர்களெல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வியின் சுருக்கம் பின்வருமாறு :-
‘ஒத்துழையாமை விஷயத்தில் உம்முடைய முடிவான கொள்கை யாது? சுதேசமித்திரன் பத்திரிகை ஒத்துழையாமையை பகிரங்கமாகவும் முடிவாகவும் எதிர்க்காவிடினும், அதில் உள்ளுர அபிமானமில்லாதது போல் காணப்படுகிறதே? அப்படியிருக்க, நெடுங்காலத்து தேசாபிமானியாகிய நீர் இந்த ஸமயத்தில் அப்பத்திரிகையில் வேலை செய்ய அமர்ந்தது நியாயமா?’ என்று கேட்கிறார்கள்.
இவர்களுக்கு நான் தெரிவிக்கும் உத்தரம் பின் வருமாறு. தென் இந்தியாவில் தேசீயக் கக்ஷிக்கு மூலபலமாக சுதேசமித்திரன் பத்திரிகையொன்று தான். ஆரம்பமுதல் இன்றுவரை, ஒரே நெறியாக, நிலை தவருமல் நின்று, வேலை செய்துகொண்டு வருகிறதென்ற செய்தியைத் தமிழ் நாட்டில் யாரும் அறியாதாரில்லை. ஸமீபத்தில் நடந்த கல்கத்தா விசேஷ காங்கிரஸ் தீர்மானங்களில் ஒன்றின் வியத்தில் மாத்திரம் பூரீமான் சுதேசமித்திரன் பத்திராதிபர், பெரும் பகுதியாரின் தீர்மானம் இப்போது கார்யத்தில் நிறைவேற்ற முடியா தென்று சொல்லும் ஸ்ரீயுத விபின சந்த்ரபாலர், சித்தரஞ்ஜனதாஸர் முதலிய பழுத்த தேசாபிமானத் தலைவர்களின் கொள்கையை ஆமோதிக்கிறார், ஒத்துழையாமையைத் தவிர தேச விடுதலைக் குச் சரித்திர பூர்வாங்கமான வேறு வழிகள் இருக்கின்றன. இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்ரமாகவும், தீர்வை மறுத்தல் முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும், அனுஷ்டித்தால், ஒருவேளை அன்ய ராஜாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதஞல் விளையக் கூடும்.
எனினும் இப்போது காண்பிக்கப்பட்டிருப்பதாகிய முதற் படியின் முறைகளால் அந்தப் பயன் எய்துவது ஸாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்டஸபை ஸ்தானங்களை பஹிஷ்காரம் செய்ய மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களை யெல்லாம் பிடித்துக்கொள்வதினின்றும் இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தி யோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படி செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன், அதனல் குறிப்பிட்ட பயனெய்திவிடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.
என்னுடைய சொந்த அபிப்பிராயப்படி, ஸ்வதேசியக் கொள்கைகளை மேன்மேலும் தெளிவாகவும், உறுதியாகவும், ஜனங்களுக்குள்ளே ப்ரசாரம் புரிவதும், ராஜரீகச் சதுரங்க விளையாட்டில், ஸமாதானமாகவே, எதிரி கலங்கும்படியானதோர் ஆட்டமாடி, ஸரியான ஸமயத்தில் ஸ்வராஜ்யத்தைக் கட்டியெடுத்துக் கொள்ள முயற்சி புரிவதுமே-சரித்திர ஸம்மதமான உபாயங்களாகும். இந்த முறையில் ஜனங்கள் சட்டத்தை யுடைக்கவும், அதிகாரிகள் யந்திர பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஜனங்களைச் சூறையாடுவதும் நேருமென்ற ஸம்சயத்துக் கிடமில்லாமலே வேலை செய்ய முடியும். ஏனைய முறைகள் நாட்டைக் குழப்பத்திலே கொண்டு சேர்க்கவும் கூடும். ராஜ வீதியிருக்கையிலே சந்து, பொந்துகளின் வழியாக ஏன் செல்ல வேண்டும்? குழப்பம் சிறிதேனும் நேராதபடிக்கே, நமக்கு ஸ்வராஜ்யம் கிடைக்கும்படி காலதேச வர்த்தமானங்களும், தெய்வ சக்தியும் நமக்கனுகூலமாக இருப்பது வெளிப்படையாகவும் நிச்சயமாகவும் தெரியும்போது, பல இந்தியருக்குப் பிராணச் சேதமும் மற்றப் பெருஞ்சேதங்களும் விளைக்கக் கூடிய குழப்ப வழியில் நாமேன் போக வேண்டும்? ஸ்ரீமான் காந்தியின் கூட்டத்தாரும் உண்மையாகவே தேச நலத்தை விரும்புகிறார்களாதலால், சுதேசமித்திரன் பத்திரிகை அவர்களே எவ்வகையிலும் புண்படுத்த மனமில்லாமல், ஸ்வ ஜனங்களென்ற அன்பு மிகுதியால் அவர்களே இயன்றவரை ஆதரித்துக் கொண்டும் வருகிறது. அபிப்ராய பேதமுடையவர்களும் தேசாபிமானிகளாக இருப்பாராயின், அவர்களை நாம் மிக மதிப்புடன் நடத்த வேண்டுமென்ற நியாயத்துக்கு இத் தருணத்தில், சுதேசமித்திரன் பத்திரிகை ஓரிலக்கிய மாகத் திகழ்ந்து வருகிறது. இங்ஙனம் பெருந்தன்மை பாராட்டும் பத்திரிகையைக் கூட மஹாத்மா காந்தியின் புதுமுறையை முற்றிலும் அனுஷ்டித்துத் தீர வேண்டுமென்ற கருத்துடைய என் நண்பர். சிலர் பொதுமையும், தீர்க்காலோசனையுமின்றிப் பல வழிகளிலே பழி கூறி வருவதைக் காணுமிடத்து எனக்கு மிகுந்த மன வருத்தமுண்டாகிறது. தேச பக்தர்களுக்குள்ளே முடிவான கொள்கைகளைப் பற்றியன்று: வெறுமே தற்கால அனுஷ்டானங்களைப் பற்றி அபிப்பிராய பேதமுண்டாகும் போது, உடனே பரஸ்பரம் ஸம்சயப்படுதலும் பழி துாற்றுதலும் மிகக் கொடிய வழக்கங்களென்று நான் நிச்சயமாகவே கூற வல்லேன். இந்த நிலைமை என் மனதில், சில வைஷ்ணவர்களுக்குள்ளே வடகலை, தென்கலைச் சண்டைகள் நடப்பதையும், வீடு வெள்ளை பூசுதல் விஷயமான ஒரபிப்பிராய பேதத்தைக் கொண்டு தமக்குள்ளே சண்டை செய்து பிரியும் மதிகெட்ட ஸ்திரீ புருஷரின் நடையையும் நினைப்புறுத்துகிறது.
இந்தக் குணத்தை நம்மவர் அறவே விட்டொழிதாலன்றித் தற்காலம் இந்தியா இருக்கும் நிலையில், நாம் விடுதலைக்காகப் பொது முயற்சி செய்வதில் பல இடுக்கண்கள் விளையக் கூடும். எடுத்ததற் கெல்லாம் ஜாதிப்ரஷ்டம் செய்யத் தீர்மானிக்கும் குணத்தை நாம் ராஜாங்க விஷயங்களில் செலுத்தினால், பெருங்கேடுகள் வந்து குறுக்கிடும். ‘உன்வழி உனக்கு: என்வழி எனக்கு: இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்றுபட்டிருக்கிறோம். எனவே நாம் பரஸ்பரம் இயன்றவரையிலெல்லாம் உதவி செய்து கொள்ளக் கடவோம். உதவி புரிதல் இயலாத இடத்தே வெறுமே இருப்போம். ஆனால் எக்காரணம் பற்றியும், நம்முள் பகைக்க வேனும், பழி கூற வேனும், ஸம்சயப்பட வேனும், வேறெவ்வகையிலும் இடுக்கண் புரியவேனும் ஒரு போதும் மாட்டோம்’ என்ற பரஸ்பர உணர்ச்சி தேசபக்தர்களுக்குள் எப்போதும் குன்றாதிருக்க வேண்டும்.
இவ்வித உணர்ச்சி நம்மவருள் பலப்பட்டு சுதேசமித்திரன் முதலிய மேன்மையார்ந்த கருவிகளைப் போற்றிக் கையாண்டு, நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலைடயேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிற தென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.”
என்று எழுதுகிறார் பாரதி. இதில் முக்கியமான அறிவுரையையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் பாரதி குறிப்பிடுகிறார் :-
“இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்றுபட்டிருக்கிறோம். எனவே நாம் பரஸ்பரம் இயன்றவரையிலெல்லாம் உதவி செய்து கொள்ளக் கடவோம். உதவி புரிதல் இயலாத இடத்தே வெறுமே இருப்போம். ஆனால் எக்காரணம் பற்றியும், நம்முள் பகைக்க வேனும், பழி கூற வேனும், ஸம்சயப்பட வேனும், வேறெவ்வகையிலும் இடுக்கண் புரியவேனும் ஒரு போதும் மாட்டோம்’ என்ற பரஸ்பர உணர்ச்சி தேசபக்தர்களுக்குள் எப்போதும் குன்றாதிருக்க வேண்டும்.
இவ்வித உணர்ச்சி நம்மவருள் பலப்பட்டு சுதேசமித்திரன் முதலிய மேன்மையார்ந்த கருவிகளைப் போற்றிக் கையாண்டு, நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலையேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிறதென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.”
இக்கட்டுரையில் “இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷயத்தில் நீயும் நானும் ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று கூறுகிற பாரதி, ” நம்மவரெல்லாரும் கூடி முயன்று, பாரதமாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலையேற்படுத்திக் கொடுக்கப்போகிற ஸுதினம்-நல்ல நாள்-எப்போது வரப் போகிறதென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்.” என்று எழுதுகிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன? இந்தியாவுக்கு ஸ்வராஜ்ஜியம் வேண்டும் என்பதை தொடர்ந்து பாரதி எழுதி வந்தார். குழந்தைகள் கூட ஸ்வராஜ்ஜியம் கேட்கத் தொடங்கியிருப்பதை பாரதி தன்னுடைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறார்.
3-12-1920ல் உலக விநோதங்கள் என்ற தலைப்பில் காளிதாஸன் என்ற புனைபெயரில் ஸ்வராஜ்யம் வேண்டும் என்ற உபதலைப்பில் பாரதி எழுதிய கட்டுரையில் எழுதுகிறார் :-
தேசீயக் கக்ஷித் தலைவராக இருந்து அரிய வேலை செய்த ஒரு வடநாட்டு வக்கீல், பின்னிட்டுப் பல வேறு காரணங்களைக் கருதி ஸர்க்கார் கக்ஷியுடன் பழகத் தொடங்கித் தம்முடைய ஸ்வதேசீய முயற்சிகளைச் சிறிது சிறிதாகத் தளரவிட்டு வந்தார்.
அன்பு மேலிட்டு, உயர்தர ப்ரிடிஷ் அதிகாரி யொருவர் அத்தலைவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தார். அத்தலைவருக்கு ஏறக்குறைய எட்டு வயதுள்ள பெண் குழந்தை யொன்றிருந்தது. அந்தக் குழந்தை தன் வீட்டில் தான் பிறந்து அறிவு தெரிந்த பிராய முதலாகவே ஸ்வராஜ்யத்தைப் பற்றி ஓயாமல் கேட்டுப் பழகியிருந்தபடியால் அதற்கு ஆங்கிலேயரிடமிருந்து நாம் ஸ்வராஜ்யமடைய வேண்டுமென்ற எண்ணம் பலமாக ஏற்பட்டிருந்தது. ஒருநாள், மேற்கூறிய ப்ரிடிஷ் அதிகாரி அத்தலைவரின் வீட்டுக்கு வந்திருந்தபோது, அக்குழந்தையிடம் வேடிக்கையாக ஸம்பாஷனை செய்யத் தொடங்கினர். அந்தக் குழந்தை மிகவும் ஸாமர்த்தியமாக மறுமொழி சொல்லிக் கொண்டு வந்தது. இந்தக் குழந்தைக்கு ஏதேனும் ஸம்மானம் கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ப்ரிடிஷ் அதிகாரி அதை நோக்கி:-“உனக்கென்ன வேண்டும்?” என்று கேட்டார். ஆங்கிலேயரிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டியது ஸ்வராஜ்யந்தானென்று பாடம் படித்து வைத்திருந்த அக்குழந்தை உடனே:-”ஸ்வராஜ்யம் வேண்டும்’’ என்று மறுமொழி சொல்லிற்றாம். அந்தக் காலம் முதல் மேற்படி தலைவரின் வீட்டுக்கு வருவதை அந்த ப்ரிடிஷ் அதிகாரி நிறுத்தி விட்டதாகக் கேள்விப்படுகிறேன்.
இக்கட்டுரையில் “ஸ்வராஜ்யம் வேண்டும்” என்று குழந்தைகூட சொல்வதாக தன்னுடைய கருத்தை இங்கு வலியுறுத்துகிறார் பாரதி. இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?
9-12-1920 அன்று உலக விநோதங்கள் என்ற தலைப்பில் காளிதாஸன் என்ற புனைபெயரில் பாரதி எழுதுகிறார் :-
…. கீழ்த்திசை நாகரிகத்துக்கு இந்தியாவே இலக்கியமாக விளங்குகிறது. எனவே உண்மையான கிழக்கு நாகரிகம் ஐரோப்பாவுக்கு வேண்டுமென்று கர்னல் வெட்ஜ் வுட் முதலியவர்கள் விரும்புவராயின் அதை இந்தியாவிலிருந்தே பெற முடியுமென்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தியா இப்போதிருக்கும் பராதீன நிலைமையிலே தனது பூர்விக நாகரிகத்தின் உயர்ந்த லக்ஷியங்களைத் தன் வாழ்விலே நிறைவேற்றிக் கொள்வதற்குமே திறமைகளையிழந்து நிற்கிறது. இந்தியா பராதீனமாக இருக்கும்வரை ஐரோப்பியரிற் பெரும்பகுதியார் இதைக் குரு நாடாக ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இந்த நிலையில், அவர்கள் தம்மிடமுள்ள குற்றங்களை நீக்கி நம்மிடமுள்ள குணங்களைப் பற்றிக் கொள்ளுதல் எதிர்பார்க்கத்தக்க விஷயமன்று. எனவே, கீழ்த்திசை நாகரிகம் இந்தியாவில் மறுபடி சுடர்விட்டெரிவதை ஐரோப்பியர் கண்டு தமது நாகரிகத்தினும் இது சிறந்ததென்றுணரும்படி செய்யவேண்டும். இதற்கு இந்தியா ஸ்வராஜ்யம் பெற்றாலன்றித் தகுந்த செளகர்யங்களேற்பட மாட்டா. எனவே, வெளியுலகத்து மனுஷ்யாபிமானிகள் இந்தியா ஸ்வராஜ்யம் பெறும்படி உழைப்பது நமக்கு நன்மையாவதுடன், நம்மைக் காட்டிலும் அவர்களுக்கே அதிக நன்மையாக முடியும்.”
இக்கட்டுரையில் “இந்தியா ஸ்வராஜ்யம் பெற்றாலன்றித் தகுந்த செளகர்யங்களேற்பட மாட்டா. எனவே, வெளியுலகத்து மனுஷ்யாபிமானிகள் இந்தியா ஸ்வராஜ்யம் பெறும்படி உழைப்பது நமக்கு நன்மையாவதுடன், நம்மைக் காட்டிலும் அவர்களுக்கே அதிக நன்மையாக முடியும்.” என்று பாரதி ஸ்வராஜ்யம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதற்கு வெளிநாடுகளில் வசிப்பவர்களும் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?
10-1-1921ல் ரஸத் திரட்டு என்ற தலைப்பில் காளிதாஸன் என்ற புனைபெயரில் பாரதி ”சமத்துவக் கொள்கையின் லோககுரு பாரதமாதா” என்ற உபதலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுவதாவது :-
”வெறும்மே ஐரோப்பிய வித்வான்கள் செய்வது போல் இவ்விஷயமாக நூல்களும் பத்திரிகை வியாசங்களும் ப்ரசுரிப்பதனாலும் உபந்யாஸங்கள் செய்வதாலும் அதிக பயனேற்படாது. தன் உபதேசப்படி தானே நடக்காத ஐரோப்பாவின் உபதேசங்களில் வெளியுலகத்தாருக்கு நம்பிக்கை பிறப்பு தெப்படி? எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெஞ்சில் வேதாந்தக் கொள்கை ஊறிக் கிடக்கிறது. இந்த வேதாந்தம் லெளகிகமான அனுஷ்டானத்தில் பரிபூரணமான ஸம்பூர்ணமான ஸமத்துவம் ஏற்படுத்தும் இயல்புடையது. ஆனால் நமக்கும் ஐரோப்பியரின் உறவாலேதான் இக்கொள்கையில் உறுதி ஏற்பட்டது. எனினும் ஐரோப்பியர் அதை நடத்திக் காட்டக்கூடிய அளவு தெளிவு பெற வில்லை. இக்கொள்கை அவர்களுக்குப் புதிது. புதிய கொள்கை உண்மையென்று நிச்சயப்பட்ட மாத்ரத்தில் அதை அனுஷ்டித்துத் தீர்க்க வேண்டுமென்பதில் இந்தியாவுக்குள்ள துணிவு ஐரோப்பாவுக்குக் கிடையாது. ஆனால் நாம் இக்கொள்கையை முற்றிலும் அனுஷ்டித்தல் அன்ய ராஜ்யத்தின் கீழே ஸாத்யப்படவில்லை. ஆதலால் நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும்வழி.
இக்கட்டுரையிலும்கூட “நமக்கு ஸ்வராஜ்யம் இன்றியமையாதது. இந்தியா ஸ்வராஜ்யம் பெறுவதே மனித உலகம் அழியாது காக்கும் வழி” என்று அடித்துக் கூறுகிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?
பாரதி இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதினார். 19-7-1921 அன்று ”ஐர்லாந்தும் இந்தியாவும்” என்ற தலைப்பில் காளிதாஸன் என்ற புனைபெயரில் பாரதி எழுதினார். அதில் :-
”….ஐர்லாந்தைச் சென்ற பல நூற்றாண்டுகளாக் மீட்டும் மீட்டும் போரில் அடக்கி, அதன் விடுதலை வேட்கையை மறுத்து வந்தீர்கள். ஐர்லாந்து மிகச் சிறிய நாடு. உண்மையில், இப்போதுகூட இங்கிலாந்தினலே ஜர்லாந்தைப் போரில் மடக்கிவிட முடியும்.
அப்படியிருந்தும், உலக முழுமையிலும் எழுச்சி பெற்றிருப்பதாகிய, பெரிதோர் தர்மக் கிளர்ச்சியை முன்னிட்டு, ஐர்லாந்துக்குக்கூட இனி ஸ்வராஜ்யமில்லை என்று மறுத்தல் இங்கிலாந்துக்கு ஸாத்யப்படாதென்று தீர்ந்து போய்விட்டது.
அப்படியிருக்க, 5000 வருஷங்களுக்கு முன்னே வேதாந்தப் பயிற்சி செய்தது; முப்பது கோடி ஜனங்களுடையது; இன்றைக்கும் ஜகதீச சந்திரர் முதலியவர்களின் மூலமாக உலகத்தாருக்கு நாகரிகப் பாதையிலே வழிகாட்டுவது; பூமண்டல சரித்திரத்திலே வீர்ய முதலிய ராஜ குணங்களில் நிகரற்றதாகிய இந்தியாவுக்கு விடுதலை எப்போது தரப் போகிறீர்கள்?
என்று இந்தியாவுக்கு விடுதலை எப்போது தரப் போகிறீர்கள்? என்று பாரதி கேட்கிறார். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லாமல் வேறு என்ன?
இறப்பதற்கு ஒரு மாத த்திற்கு முன்புகூட ஸ்வராஜ்யத்தைப் பற்றித்தான் அவர் நினைத்துக் கொண்டிருந்தார். 11-8-1921ம் ஆண்டு ’ஒரு கோடி ரூபாய்’ என்ற தலைப்பில் காளிதாஸன் என்ற புனைபெயரில் பாரதி எழுதுகிறார் :-
”…தொழில் புரிந்துவிட்டு வெற்றி அகப்படுமோ அகப்படாதோ என்று எவரும் மனம் புழுங்குதல் வேண்டா. பயனுடைய தொழிலென்று புத்தியாலே நிச்சயிக்கப்பட்ட தொழிலே, ஒருவேளை அது பயன் தராதோ என்ற பேதை ஸம்சயத்தால் நாம் நிறுத்தி வைத்தல் தகாது. தொழிலுக்குப் பயன் நிச்சயமாக உண்டு. கடவுள் பின்னொரு பகுதியிலே சொல்லுகிறார்:-“பார்த்தா, தொழிலுக்கு வெற்றி இந்த உலகத்தில் மிகவும் விரைவாகவே எய்தப்படும்” என்று. தவிரவும், “மகனே, நற்றொழில் புரிந்த எவனும் இவ்வுலகத்தில் தீ நெறி எய்துவதில்லை’ என்று பின்னே கடவுள் மற்றோரிடத்தில் விளக்கியிருக்கிறார்.
எனவே, வெற்றியைக் கடவுளின் ஆணையாகக் கண்டு, பயனைப்பற்றி யோசனையே புரியாமல், நம்மவர் ஸ்வராஜ்யத்துக்குரிய தொழில்களை இடைவிடாமல் செய்துகொண்டு வரக் கடவர்.
அதனை உடனே தொடங்கவும் கடவர். அதில் திரிகரணங்களை மீட்சியின்றி வீழ்த்தி விடவும் கடவர்.”
ஸ்வராஜ்யம், ஸ்வராஜ்யம், ஸ்வராஜ்யம் – எப்போதும் பாரதி நினைப்பில் அதுதான் ஊர்ந்துகொண்டிருந்தது. தன் வாழ்நாள் முழுவதும் ஸ்வராஜ்யம் பற்றி மட்டுமே அவர் நினைப்பாக இருந்து வந்திருக்கிறது.
”புரட்சியாளன் என்றால் கையில் ஆயுதம் எடுத்துப் போராடுவான் என்பது பொருளல்ல, புரட்சியாளன் எழுத்தினாலும் போராடுவான்” என்று காண்டேகர் சொல்கிறார். உண்மையில் அவர் எழுத்தினால் ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சாகும்வரை போராடியிருக்கிறார்.
ஆனால் திராவிடர் கழகத்துக்காரரான வாலாசா வல்லவன் அவர்களோ, ” …. பாரதி 1906 முதல் 1908 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்றும் 1908 இல் புகலிடம் தேடிப் புதுவைக்குச் சென்றவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைய ஆரம்பித்து, பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்” என்று எவ்வித ஆய்வும் செய்யாமல் – பாரதியின் எழுத்தை ஆராயாமல் பொய்யை மட்டுமே எழுதி, ஆய்வாளர் என்ற பட்டத்தை சூட்டிக்கொள்வது கேவலத்தின் உச்சம்.
(தொடரும்)
