சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்

மானஸ சஞ்சர ரே என்ற இனிய எளிய கர்நாடக இசைப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். இதனை இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற மகான். காயதி வனமாலி, பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி, சர்வம் பிரம்மமயம் ரேரே .. என்று பக்தியையும், ஞானத்தையும் எளிய சொற்களில், மெட்டுகளில் எடுத்துச் சொல்லும் பல கீர்த்தனைகளை அவர் புனைந்துள்ளார். அவற்றில் ‘பரமஹம்ஸ’ அல்லது ‘ஹம்ஸ’ என்ற அவரது முத்திரையும் இருக்கும். 17-ம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்ததாகக் கருதப் படுகிறது. பல்வேறு ஐதிகங்கள், அற்புதக் கதைகள் அவரைக் குறித்துக் கூறப் படுகின்றன. கரூரை அடுத்த நெரூரில் அவரது சமாதி உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அவரது மஹா சமாதி தினத்தன்று ஆராதனை விழா பக்தர்களால் சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.

sadasiva-book-117ம் நூற்றாண்டு என்பது மிகப் பழங்காலம் அல்ல. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ் மண்ணில், மூன்று நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு மகான் பற்றிய ஆதாரபூர்வமான், நம்பகத்திற்குரிய வரலாற்றை எழுதுவது என்பது கூட அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் வாழ்ந்த தாயுமானவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோரைக் குறித்தும் புராண சாயலில் ஆவணப் படுத்தப் பட்ட சரிதங்களே நம்மிடம் உள்ளன. அவற்றிலிருந்து தான் இவர்களது வாழ்க்கை வரலாறுகளைக் கட்டமைக்க வேண்டியுள்ளது.

சதாசிவ பிரம்மேந்திரரைப் பொறுத்த வரையில் சில அடிப்படைத் தகவல்கள்   சரியாகவே கிடைத்துள்ளன.   அவரது  தாய் தந்தையர் சோமசுந்தர அவதானி மற்றும் பார்வதி.  அவரது 15வது வயதில் மீனாட்சி என்ற 7 வயது பெண்ணை  பாலிய விவாகத்தில் மணக்கிறார்.  அந்தப் பெண் பருவமடைந்ததும்,  குடும்ப வாழ்க்கை தொடங்கும்  நேரத்தில், அதனை வெறுத்து  துறவு  பூண்டு  வீட்டைவிட்டு வெளியேறி  ஞானத் தேடலுடன் அலைகிறார்.  ஆனால் இதன் பிறகு  நடந்ததாகக் கூறப் படும்  வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில், அவர் ஒருவரா பலரா, அவர் வாழ்ந்த காலகட்டம் என்ன, அவர் இயற்றியதாகக் கூறப் படும் நூல்களின் தன்மை, அவரது ஆன்மிக சாதனைகள், நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவை பற்றி பல புகைமூட்டமான, பல முரண்பாடுகள் கொண்ட கருத்துக்கள் உள்ளன. இந்தப் புகைமூட்டத்தை விலக்கி அந்த மகானின் வரலாற்றைத் துலக்கும் முகமாக அண்மையில் ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தின் முக்கிய அம்சம் சதாசிவர் பற்றி வழங்கும் அனைத்து செய்திகளையும், ஐதிகங்களையும் ஓரிடத்தில் தொகுத்திருப்பது. பிறகு அவற்றை தர்க்கபூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்த முயல்வது.

உதாரணமாக, சதாசிவரை சந்தித்தவர்கள் என்பதாக தாயுமானவர், பஜனை சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் கும்பகோணம் மடாதிபதியுமாக இருந்த ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி, சிவபக்தரான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள், அரசர்கள் விஜயரகுநாத தொண்டைமான், ஷாஜி, சரபோஜி என்று பலபேர் பல சம்பிரதாய செவிவழிச் செய்திகளில் குறிப்பிடப் படுகின்றனர். தாயுமானர் தனது குருவாகக் குறிப்பிடும் மௌனகுரு என்பவர் சதாசிவ பிரம்மேந்திரராக இருக்கக் கூடுமோ என்று ஒரு கருத்தும் உள்ளது. திருவிசைநல்லூரில் ஸ்ரீதர வேங்கடேசர் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் “ஜய துங்க தரங்கே கங்கே” என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப் பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது. சித்தராகத் திரிந்துவந்த அவர் ஒரு முஸ்லிம் மன்னன் (அல்லது படைத்தளபதி) வீட்டுக்குள் நுழைய, அவன் அவரது கையை வெட்ட அதிலிருந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் சரீர போதம் இன்றி அவர் நடந்து சென்றார் என்றும் ஒரு செய்தி பின்னாளில் அவரைக் குறித்து எழுதப் பட்ட சதாசிவ அஷ்டகம் என்ற துதிப்பாடலில் இடம் பெறுகிறது.

சம்பிரதாய செய்திகள் தவிர்த்து கறாரான வரலாற்று ஆவணங்கள் என்று கொண்டால், சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் (1712-18) அவரது அமைச்சரான மல்லாரி பண்டிட் என்பவர் எழுதிய ஒரு கடிதம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தக் கடிதத்தில் தான் சதாசிவ பிரம்மேந்திரரை சந்தித்தகாகவும், மன்னருக்கு மகன் பிறக்க அருளவேண்டும் என்று தான் வேண்டிக் கொண்டதாகவும், சதாசிவ பிரம்மேந்திரர் ஆசிர்வதித்து “ஆத்மவித்யா விலாசம்” என்ற நூலை அளித்ததாகவும் அமைச்சர் மல்லாரி பண்டிட் குறிப்பிடுகிறார். இந்தக் கடிதத்தின் மூல வடிவம் தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப் படுகிறதாம். வேறு சில ஓலைச் சுவடிகளும், ஆவணங்களும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கை வரலாற்றைக் கட்டமைக்க உதவி புரிகின்றன.

sadasiva-brahmendra-samadhi

சில ஐதிகச் செய்திகளை மற்ற வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நூலாசிரியர் நிராகரிக்கிறார். உதாரணமாக, தாயுமானவரின் குருவாக சதாசிவ பிரம்மேந்திரர் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு இரண்டு சான்றுகளை நூல் அளிக்கிறது – 1. மவுனகுரு நந்தி, திருமூலர் மரபில் வந்தவர்; நவநாத சித்தர்களுடன் தொடர்புடையவர் என்று குறிப்பிடும் தாயுமானவர் பாடல் அகச்சான்றுகள். இவை சதாசிவர் பற்றிய மற்ற எந்த செய்தியுடனும் பொருந்தவில்லை. 2. 1685ல் மௌனகுரு தேசிகர் என்ற தருமபுர ஆதினத்தார் திருச்சி சாரமாமுனிவர் மடத்தில் தங்கியது, தாயுமானவரை சந்தித்தது. அவரே தாயுமானவரின் குருவாக இருக்கலாம் என்ற தமிழறிஞர் கருத்துக்கள். இவற்றை வைத்து. தாயுமானவர் காலத்தில் சதாசிவர் பிறந்திருக்கவில்லை அல்லது மிகச் சிறுவனாக இருந்திருப்பார் என்று நூலாசிரியர் முடிவு செய்கிறார். இது போன்று ஒவ்வொரு ஐதிகச் செய்தியும் நூலில் அலசப் படுகிறது.

அனைத்து ஐதிகச் செய்திகளையும் திருப்திப் படுத்த வேண்டும் என்றால், சதாசிவர் வாழ்ந்த காலம் 200 ஆண்டுகளைத் தாண்டுகிறது என்று நூலாசிரியர் கணக்கிடுகிறார். ஒரு வரலாற்று மனிதர் இவ்வளவு நீண்டகாலம் வாழ்ந்திருப்பது சாத்தியமே அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.

சதாசிவர் குறித்த பல செய்திகளையும் நான்கு சட்டகங்களுக்குள் வகைப்படுத்துகிறார் –

1. அத்வைத பண்டிதராக இருந்தவர், பரமசிவேந்திர சரஸ்வதி என்ற கும்பகோணம் மடாதிபதியின் சீடர். சில அத்வைத நூல்களை எழுதியவர்.
2. ஸ்ரீதர வேங்கடேசர் காலத்தவர். பல சமய, தத்துவ வாதவிவாதங்களில் ஈடுபட்டவர். கர்நாடக இசைக் கீர்த்தனைகளை இயற்றியவர்
3. விஜரகுநாத தொண்டைமானின் சமகாலத்தவர். வேறுசில அத்வைத நூல்களை எழுதியவர்
4. அவதூதராகவும் சித்தராகவும் வாழ்ந்தவர். திருச்சி, தஞ்சை, கும்பகோணம், புதுக்கோட்டை பகுதிகளில் தன்னிச்சைப் படி உலவிக் கொண்டு சாதாரண மக்களுடன் பழகியவர். அற்புதங்கள் நிகழ்த்தியவர்.

இந்த அத்தனை செய்திகளையும் சமன்வயப் படுத்தி, நூலின் இறுதியில் சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்க்கைக் கால அட்டவணை ஒன்றை நூல் அளிக்கிறது. பிறந்த ஆண்டு 1680 என்று நிர்ணயிக்கப் பட்டு, அவரது ஒவ்வொரு வயதிலும் நடைபெற்ற அவரது வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் அந்த ஆண்டின் மற்ற முக்கிய அரசியல், வரலாற்று சம்பவங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. 1755ம் ஆண்டு 75 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம் என்றும், அல்லது 1781ல் 101 வயதில் மஹாசமாதி அடைந்திருக்கலாம் என்றும் இரு சாத்தியங்களை நூலாசிரியர் அளிக்கிறார்.

அதிசயக் கதைகளில் பொதிந்துள்ள சரித்திர உண்மைகள்” என்று தலைப்பிட்ட அத்தியாயத்தில் அற்புதங்கள் பற்றிய கதைகளுக்கு சமூக வரலாற்று அடிப்படையில் விளக்கங்கள் தர நூலாசிரியர் முயன்றிருக்கிறார். உதாரணமாக,

  • அறுவடை நேரத்தில் வயல்களில் நெற்கட்டுகளின் மீது அவர் படுத்திருந்தது – இது நவாபின் படைவீரர்கள் அடாவடியாக பயிர்களை கொள்ளையடிப்பதிலிருந்து பாதுகாப்பதற்காக இருக்கலாம்.
  • உடலை மணல்மூடி தியானத்தில் லயித்திருந்தபோது அவரது தலை மண்வெட்டியால் வெட்டப் பட்டு ரத்தம் வந்தது – நவாப் படைகளிடருந்து தப்பிக்கவும், நதிக்கரைகளைப் பாதுகாக்கவும் முயன்றபோது படைகளால் தாக்கப் பட்டிருக்கலாம்.
  • ஆற்றங்கரைகளில் மண்ணைத் தலையணையாக வைத்துப் படுத்திருந்தது பார்த்து ஊர்மக்கள் கேலிபேசியது – நவாப் படைவீரர்கள் இரவில் வந்து கரைகளை உடைத்து நீரைத் திருப்பிவிடுவதைத் தடுப்பதற்காக இருக்கலாம்.
  • குழந்தைகளை திருச்சியிலிருந்து மதுரைக்கு திருவிழா காண அழைத்துச் சென்று, அவர்களுக்கு மிட்டாய் வரவழைத்துத் தந்தது – பஞ்சகாலத்தில் தஞ்சைப் பகுதிகளில் நவாபின் அதிகாரிகள் மற்றும் ஐரோப்பியர் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தோ, சல்லிக்காசுகு வாங்கியோ கப்பலில் ஏற்றி கடத்தியதற்கு ஆதாரம் உள்ளது. குழந்தைகளைத் தப்பிக்க வைத்துக் காப்பாற்றுவதற்காக இந்த மகான் இவ்விதம் செய்திருக்கலாம்.

இதற்கு வலுசேர்க்கும் முகமாக, சோழமண்டலத்தில் 17ம் நூற்றாண்டில் அடிமைகளாக ஏற்றுமதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்பும் நூலில் உள்ளது (பக். 41). 1659 முதல் 1661 வரையிலான வருடங்களில் 8000 முதல் 10000 பேரும், 1694 – 1696 காலகட்டத்தில் 3800 பேரும் இவ்வாறு ஏற்றுமதி செய்யப் பட்டார்களாம்! 17ம் நூற்றாண்டு பஞ்சம், சந்தாசாகிப், ஷாஜி, சரபோஜி காலத்திய போர்கள், ஐரோப்பியர்கள் தஞ்சை மண்ணில் வேரூன்றுவது பற்றிய சில தொடர்புடைய விவரணங்களும் நூலில் ஆங்காங்கே தரப்படுகின்றன.

ஆத்மவித்யா விலாசம் என்ற நூலில், முற்றும் துறந்த அவதூதரான தனது இயல்பைப் பற்றி தானே விவரிக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் “வர்ணாஸ்ரமங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்தவன் நான். சாஸ்திரங்களில் விலக்கப்படுபவை பற்றிய விதிகளையும் உதறித் தள்ளியவன்” (சுலோகம் 57) என்றும் குறிப்பிடுவதிலிருந்து, அவர் ஏழை,எளிய மக்களுடன் கலந்து உறவாடியவர், அனைத்தும் கடந்த ஞானியாக இருந்தும் மக்களின் துயரம் கண்டு உருகியவர் என்னும் கருத்து மேலும் உறுதிப் படுகிறது.

சதாசிவ பிரம்மேந்திரரின் உருவம் சித்தரிக்கப் படும் பல விதங்கள், நெரூர் சமாதிக் கோயிலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், சம்பந்தப் பட்ட இடங்களின் புகைப்படங்கள் என்று மேலும் சில பயனுள்ள தகவல்களும் நூலில் கோர்க்கப் பட்டுள்ளன.

sadasiva-book-2நூலாசிரியர்களில் ஒருவரான மறைந்த கரூர் நாகராஜன் பிரம்மேந்திரரின் பரம பக்தர் என்றும், மற்றொருவரான வேதபிரகாஷ் ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சியாளர் என்றும் நூலின் பின்னட்டை தெரிவிக்கிறது. எந்தவித கல்விப் புலமும், வரலாற்று ஆய்வு பட்டயங்களும், சான்றிதழ்களும் இல்லாத இவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டு இதனை நூலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். கரூர் நாகராஜன் மகானின் மீது கொண்ட ஆத்மார்த்தமான பக்தியாலும், வேதபிரகாஷ் இந்துப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆன்மிக நோக்கில் பல செய்திகளையும் கலந்து கட்டி எந்தவித வரலாற்றுப் பிரக்ஞையும் இன்றி எழுதப் படுவதைக் கண்டு மனம் நொந்து, இவற்றில் ஒரு முறைமையைக் கொண்டுவரவேண்டும் என்ற உந்துதலுடனும், ஆய்வுகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. நூல் வெளிவரும் முன்பே கரூர் நாகராஜன் மறைந்து விட்டார். அவரது உள்ளக் கிடக்கையை பூர்த்தி செய்து அவர் விருப்பப் படியே நூலைத் தமிழில் கொணர்ந்திருப்பதாக வேதபிரகாஷ் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நட்புணர்வும், அர்ப்பணிப்பும் பெரிதும் போற்றத் தக்கவை.

சில விதங்களில் நூலை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. திரட்டப் பட்ட தகவல்களைத் தொகுத்தளித்திருக்கும் விதம் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். அத்தியாயங்கள் பகுக்கப் பட்ட விதம் கோர்வையாக இல்லை. நூலின் இறுதியில் ஆசிரியர் கூற வரும் முடிபுகள் என்ன என்பது தெளிவாக விளக்கப் படாததால் வாசகர்கள் அதனை ஊகித்து உணர வேண்டியிருக்கிறது. பக்தர்களும் ஆன்மிக எழுத்தாளர்களும் செய்யும் கணிப்புகள் அதி ஊகங்கள் குறித்து சலிப்புடன் ஆரம்பத்தில் குறிப்பிடும் ஆசிரியர் தானே சில இடங்களில் அதைச் செய்து விடுகிறார் – உதாரணமாக, சித்தராகத் திரிந்த சதாசிவர் கட்டாயம் மற்ற சித்தர்கள் போன்று தமிழில் பாடல்கள் புனைந்திருக்க வேண்டும் என்றும், அவை கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களால் அழிக்கப் பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். சிவப்பிரகாசரின் ’ஏசுமத நிராகரணம்’ நூலுக்கு அந்த கதி ஏற்பட்டிருக்கிறதே என்பது சற்றே பொருந்துகிற சரியான வாதமாக இருந்தாலும், ஆதாரங்கள் இன்றி இத்தகைய ஊகங்கள் முன்வைக்கப் படுவது மிகவும் தவறான முன்னுதாரணம். இதே போல சதாசிவரின் இரட்டை இஸ்லாமிய சீடர்களாகக் கருதப்படும் தஞ்சை “மஸ்தான் சகோதரர்கள்” பற்றிய ஐதிகம் இஸ்லாமிய மதமாற்றத்தைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே புனையப் பட்டது என்ற நிலைப்பாட்டுக்கும் ஆதாரம் தரப்படவில்லை. சமூகக் கட்டுப்பாடுகளை உதறிவிட்ட அத்வைதியான சதாசிவ பிரம்மேந்திரர் உண்மையிலேயே முஸ்லிம்களை சீடர்களாக ஏற்றுக் கொண்டிருந்திருக்கவும் சாத்தியம் உள்ளது. அதை முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. மேலும் சூஃபிகளையும் தர்கா வழிபாடுகளையும் பற்றி அடிப்படைவாதிகளான வகாபி இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டையே தானும் எதிரொலித்து நூலாசிரியர் எழுதியிருக்கிறார். இது இந்து சமூக நலப் பார்வையில் சரியானதல்ல என்பதோடு, ஒரு ஆய்வு நூலில் இத்தகைய அரசியல் ரீதியான கருத்துக்களையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கலாம்.

நூலின் மொழி பல இடங்களில் இயந்திரத்தனமான மொழிபெயர்ப்புச் சாயலில் உள்ளது; அதனைச் செம்மைப் படுத்தியிருக்கலாம். கடைசி அத்தியாமாக உள்ள ”சம்பந்தப் பட்ட இடங்களின் புகைப்படங்கள்” அனைத்தும் தபால் தலை அளவிலேயே உள்ளன. வாசகர்கள் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் வழக்கமான புகைப்படங்களின் அளவில் அவற்றைக் கொடுத்திருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. ஏனைய இந்துப் பெரியோர்களது ஆதாரபூர்வ வாழ்க்கை வரலாறுகளையும் இத்தகைய ஆய்வு நோக்கில் ஆவணப் படுத்தும் முயற்சிகள் ஊக்குவிக்கப் படவேண்டும். நமது வரலாற்றுக் கல்வி அமைப்புகள் செய்யவேண்டிய இத்தகு பணிகளை, தாங்களாகவே முன்வந்து முனைப்புடன் செய்யும் தனிப்பட்ட ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மையங்களுக்கும் இந்து சமுதாயம் உண்மையிலேயே கடமைப் பட்டுள்ளது.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்: வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல்
வேத பிரகாஷ் & கரூர் நாகராஜன்

பக்கங்கள்: 112
விலை: ரூ. 50

வெளியீடு:

பாரதிய இதிஹாஸ சங்கலன சமிதி
25 (பழைய எண்:9), வெங்கடாசல தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600033.

பிரதிகள் கிடைக்குமிடம்:
என்.கோபி, 112 (பழைய எண்:145/1), லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை – 600033.

17 Replies to “சதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்”

  1. Pingback: Indli.com
  2. முற்றிலும் மாறுபட்ட செய்திகளைத் தாங்கி வந்திருக்கும் நூல். வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. படித்தபின்னரே கருத்துக் கூற இயலும். மொத்தத்தில் விமரிசனம் புத்தகம் வாங்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  3. அற்புதமான விமர்சனம்.

  4. Sri Ved Prakash is a real scholar with a bent of mind in research. He
    has again proved it. Sri Sadasiva Brahmendra was a great saint, more,
    a Siddha Purusha, which cannot be doubted. As rightly pointed out by
    the author, in most of the cases, the truth, for some reason, conceals
    itself. Myth takes prominence over History. There are only a few, who
    could worry about and delving into the depth of reality. I have
    experienced a lot in my own research work. When I wanted to find out
    and establish of the real birth place of Sri Tyagaraja, many chided,
    ridiculed and insulted me with the useless argument that why should we
    bother about the birthplace, whichever be that, setting aside the
    greatness of the concerned person. We never set aside the greatness or
    contributions of the individual. But for the sake of reality, history,
    we engage in researching about the birthplace or so. Sri Ved Prakash
    has taken pains to recast history, setting aside all myths, though
    mentioning about them too. It is another feather in his cap. My
    compliments to him. For my part, I believe what H.H. Sri Kanchi
    Paramacharya said to me, at different times. He, once speaking about
    Brahmendra said that he came to Tiruvisalur (Tiruvisanallur) to study
    with Mahabhashyam Gopalakrishna Sastri and few others, performed
    miracles, but believed ‘Brahmaiva Satyam’. After wandering in many
    places, took eternal rest at various places, simultaneously. We regard
    Nerur and Manamadurai as two among the centres, where he is believed
    to have shed his mortal coil. His Holiness asked my guru, to tune at
    least few wonderful songs of Brahmendra, and my guru composed music
    for all the available songs of the saint. We carry on that tradition.

  5. சதாசிவ ப்ரமேந்திரா புதுக்கோட்டை அரச வம்சத்தினருக்கு மணலில் எழுதி மந்திரோபதேசம் செய்தார் அந்த மணல் இன்றளவும் அங்கே பூஜிக்கப்படுகிறது

  6. சதாசிவர் தன்னிலை மறந்து தியானிக்கையில் மணல்மேடால் அவர் மூடபட்டார் ஆற்று வெள்ளதில் அவர் அடித்து செல்ல பட்ட போது ஒரு மனிதர் அதை வெட்ட முற்பட அதிலிருந்து ரத்தம் வந்தது அதன் பிறகு தான் உள்ளே யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது இது விஷயமாக காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் படித்தால் இது குறித்த உண்மை விளங்கும்

  7. ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 57 வது பீடாதிபதிகள் ஆவர். இவரது சமாதி ஸ்தலம் திருவெண்காட்டில் மணிகர்ணிகை நதிக்கரையோரம் அமைந்துள்ளது. சதாசிவ பிரம்மேந்த்ரர் காமகோடி பீடத்தின் குருபரம்பரை பற்றி குருரத்னமாலிகா என்ற நூலையும் இயற்றியுள்ளார். பிரம்மேந்த்ரர் பிறந்த வீடு திருவிசைநல்லூரில் காமகோடி பீடத்தின் பராமரிப்பில் உள்ளது.

    ஆரூரன்

  8. i have come to know that the official records of PUKKOTTAI SAMASTHANAM contain the date of samadhi of PUJYASRI SADASIVA BRAHMENDRAL at Nerur (Karur). The siva temple and the samadhi of Sadasiva Brahmendral is under HR& CE Pudukkottai Devasthanams and Pudukkottai King has offered lands to the Samadhi of Sri Brahmendral. I am told that these details are available in Pudukkottai Devasthanam records. So the existance and date of samadhi of Sri Sadasiva Brahmendral is available with authenticity. His erudity and scholarship of hindu philosophy, sanskrit and carnatic music can well be assessed and understood from his keerthanas and literary works. Mahan Sadasiva Brahmendral entering in jeeva samadhi at Nerur is recorded in the Pudukkottai Samasthanam records. He is still blessing his disciples and bhaktas from his Jeeva Samadhi. Also he is well known to people of Karnataka, especially musicians like Kadri Gopalnath and politicians. They have heard about his blessings and very often visiting his samadhi at Nerur to offer their prayers. Let us pray and offer our namaskaras to the MAHAN and be blessed by HIM.

    Sundara RAman.S, Srirangam.

  9. பிரம்மேந்திரரைப் பற்றி பல தகவல்கள் உள்ளன.
    அவர் திகம்பரராக இருந்தவர் என்று சொல்வாரும் உண்டு.

    தஞ்சையில் ஆதீஸ்வரர் சன்னதிக்கு சென்றதாவும், அங்கே ஆதிபகவன் திகம்பரர் எனவும், அன்று முதல் அவரும் முற்றும் துறந்தவராய் மாறினார் என்றும் கூறுவர்.

  10. Nice information.
    I heard that the Theppam of Mariamman Temple at Thanjavur is designed from Adheeswar Temple of Thanjavur

  11. I want to tell onething , saint sadashiva is living in this twenty first century with human body . i got this message from a siddha vidyarthi from courtallam

  12. சென்னையில் தற்போது புத்தகம் எங்கே கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *