உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

ரிக்வேதம் – முதல் மண்டலம், 113வது சூக்தம் (ரிஷி: குத்ச ஆங்கிரசர்)

வந்தது ஒளிகளிற் சிறந்த இவ்வொளி
பிறந்தது எங்கும் பரவும் பிரகாசம்
செங்கதிர்த் தேவன் எழ
வெளிச்சென்ற ராத்ரி
உஷைக்குப் பிறப்பிடம் ஈன்றாள்.

தன் வெண்மகவுடன் வந்தாள் சுடர்ப்பெண்
கரியவள் தன் இல்லத்தை அவளுக்களித்தாள்
ஒன்றான இவ்வுறவுகள்
நிறம் மாறி
ஒருவரையொருவர் தொடர்கின்றனர்
அழிவற்று.

முடிவற்றது
ஒன்றேயானது
சகோதரிகளின் பாதை
மாறிமாறி அதில் பயணிக்கின்றனர்
இந்தத் தேவியர்
இரு நிறமும் ஒரு மனமும் கொண்ட
பகலும் இரவும்
முறைதவறுவதில்லை
மோதிக் கொள்வதுமில்லை.

இன்னொலிசேர் சோதித் தலைவியைக்
காண்கின்றன எம் கண்கள்
கதவுகளைத் திறந்தாள்
பொலிவுடன்
உலகை சிலிர்க்கச் செய்து
செல்வங்களைக் காட்டினாள்
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.

உறக்கத்தில் சுருண்டு கிடந்தோரை
சுகவாழ்விற்கென
வேள்விக்கென
பொருள் தேடலுக்கென
எழுந்தோடச் செய்தாள்
சிறிதே கண்டோர் பெரிதாய்க் காண
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.

வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.

யுவதி வெண்துகிலினள் வான்மகள்
மண்மீது காணும் செல்வங்களின் தலைவி
இதோ வருகிறாள் உஷை
மங்கல நல்லொளியினளே
இந்தக் காலையில்
எமக்காகத் துலங்குக.

கடந்து சென்ற காலைகளின்
வழிச்செல்பவள்
இனிவரும் முடிவற்ற காலைகளின்
முதல்வி
உஷை
உயிருள்ளவை அனைத்தையும்
உந்திச் செலுத்துகிறாள்
மரித்தவற்றையும் உணர்விக்கிறாள்.

உஷையே
நீயே அக்னி சுடரத் தூண்டுவித்தவள்
கதிரோனின் கண்வழி உலகைப் புலப்படுத்தியவள்
வேள்வி செய்யவேண்டி மானுடரை எழுப்பியவள்
தெய்வீக நற்செயல்கள் புரிபவள்.

எத்தனை காலமாக
எழுகிறார்கள் உஷைகள்?
நமக்கு இன்னொளி தர
இன்னும் எத்தனை காலம்
எழுவார்கள்?
கடந்து சென்ற வைகறைகளுக்காக ஏங்கி
வரப்போகும் வைகறைகளுடன்
மகிழ்ச்சியாகச் செல்கிறாள்
உஷை.

போய்விட்டனர்
முன்னாள்களில்
உஷையின் உதயம் கண்ட மானிடர்
நாம்
இன்று வாழும் நாம்
அவளது நல்லொளி காண்கிறோம்
வரும் நாள்களில் அவளைக் காண
நமது பின்னோர் வருகிறார்கள்.

எதிர்ப்போரைத் துரத்துபவள்
பிரபஞ்சலயத்தில் தோன்றியவள்
பிரபஞ்சலயத்தைக் காப்பவள்
உவகையூட்டுபவள்
இன்னொலிகளை விழிப்புறச் செய்பவள்
சுமங்கலி
தேவர் விரும்பும் வேள்வியை ஏந்திவருபவள்
பெரும்புகழ் கொண்ட உஷை
இன்று எமக்காக உதித்திடுக.

[பிரபஞ்சலயம் – மாறும் இயற்கையின் மாறாத ஒழுங்காக வேத இலக்கியம் குறிப்பிடும் ‘ரிதம்’]

உஷை
முற்காலங்களில்
இடையறாது உதித்தாள்
செல்வம்சேர் தேவி
இன்றும் தன் ஒளி காட்டுகிறாள்
வரும் நாள்களிலும் உதிப்பாள்
தன்னாற்றலால் இயங்குகிறாள்
அந்த அமுதப் பெண்
அழிவற்று.

வான் விளிம்புகளைத் தன்னொளியால்
சுடர்வித்தாள்
தேவி தன் கருந்திரையை
வீசிஎறிந்து விட்டாள்
உஷையின்
செம்பரிகள் பூட்டிய தேர் கண்டு
உலகம் விழித்தெழுகிறது.

உயிர்வளர்க்கும் செல்வங்கள் ஏந்தி
உணர்வளித்து
அற்புத எழிலொளி பரப்பி
கடந்து சென்ற பல வைகறைகளின் இறுதியாக
வரப்போகும் ஒளிமிகு வைகறைகளின் முதலாக
இன்று உஷை எழுந்தாள்.

எழுவீர்
வந்தது மீண்டும் வாழ்வும் உயிரும்
சென்றது இருள்
தோன்றுகிறது ஒளி
கதிரவனுக்காக
வழிதிறந்தாள் உஷை
நம் ஆயுளும் உணவும் செழிக்கும் இனி.

நல்மொழி கொண்டு துதிகள் சமைத்து
துலங்கும் வைகறையைப் புகழ்ந்து பாடி
எழுகிறான் கவி
உஷையே! செல்வி!
உன்னைத் துதிப்பவர்க்காக
உதித்திடுக
ஆயுளும் மக்கட்பேறும்
அளித்திடுக.

பசுக்கள் தரும் கோமதி அவள்
புரவிகளும் வீரர்களும் தருவோள்
அவிதரும் மானிடர்க்கு ஒளிர்வோள்
உஷை
சோமரசம் பிழிவோன்
காற்றொலி போல் முழங்கும்
துதிகளின் முடிவில்
இவையனைத்தும் பெறுக.

தேவர்தம் அன்னையே
அதிதியின் புகழ்வடிவே
வேள்வியின் பேரொளியே
ஒளிர்க
எமது துதிகளைப் பெருமைப் படுத்துக
எழுக
வளமனத்தும் சேர்ப்பவளே
எம்மை மக்களில் முதல்வோராக்குக.

வேண்டிப் போற்றுவோர்க்கு
மங்கலம் தரும்
வைகறைகள் ஏந்தி வரும் செல்வம்
மித்திரனும் வருணனும் அதிதியும்
கடலும் புவியும் வானும்
எமக்குக் காத்து அளித்திடுக.

*****

மாறிமாறித் தோன்றும் இரவும் பகலும் இயற்கையின் முடிவில்லா அதிசயங்கள். உலகின் எல்லா மானுட மனங்களையும் வசீகரித்தவை, ஆட்கொண்டவை இவை. உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் வைகறையையும் அந்தியையும் இரவையும் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். இயற்கைச் சக்திகளை பல்வேறு தேவ சொரூபங்களாக மெய்யுணர்வில் கண்டு அவற்றுடன் ஒன்றுபட்ட வேத ரிஷிகளும் அழகும் தெய்வீகமும் ததும்பும் மொழியில் இவற்றைப் பாடியுள்ளனர்.

அக்னியையும் வருணனையும் இந்திரனையும் சூரியனையும் புருஷர்களாகக் கண்டது வேத ரிஷியின் கவியுள்ளம். இரவை ராத்ரி என்றும், வைகறையை உஷை என்றும், அந்திப் பொழுதை சந்தியா என்றும் பெண்மையாகவே கண்டு போற்றியது. மூலப் பிரகிருதியாக நின்றிலங்கும் இயற்கையின் முடிவற்ற விளையாட்டுதான் மனிதரையும் தேவரையும் உயிர்களனைத்தையும் இருளிலிருந்து ஒளியை நோக்கி இட்டுவருகிறது. விழிகளைத் திறக்கிறது, எழுப்புகிறது, இயக்கத்தில் ஆழ்த்துகிறது. பிறகு, ஒவ்வொரு நாளும் ஓய்வுற்றுக் களைப்பெய்தும் உயிர்களுக்கு இருளென்னும் போர்வை போர்த்தி மீண்டும் ஓய்விலும் ஆழ்த்துகிறது. இந்த இரண்டையும் செய்யும் மகாசக்தியின் பேரியல்பை பெண்மையின் சோதிமுகமாக புன்முறுவலாக, பெண்மையின் தீண்டலாக ஸ்பரிசமாக, பெண்ணின் பால்பொழியும் கருணையாகக் கண்டானே ஆதி வேத ரிஷி! அவன் பெரும் ஞானி மட்டுமல்ல, பெருங்கவிஞனும் கூட.

வேத இலக்கியத்தின் இந்த கவி-ஞான தரிசனம் இந்தியப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகவே நமது கூட்டு நனவியில் உறைந்துள்ள ஒன்று. மிக இயல்பாக இந்தியாவில் பல்வேறு சிந்தனை இழைகளிலும் கலை இலக்கியங்களிலும் அது வெளிப்படுகிறதுல்; அது வேதரிஷியின் காலடித் தடம் என்பதை நாம் அறிவது கூட இல்லை. அதனால்தான், திராவிடப் “பகுத்தறிவு”ப் பாசறையில் வளர்ந்த பாரதிதாசனிடம் கூட,

நீலவான் ஆடைக்குள் முகம் மறைத்தே
நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை

என்று தன்னையறிமையாமல் பாடல் வெளிப்பட்டு விடுகிறது. வைகறைப் பெண்ணே, தைமகளே, சித்திரைச் செல்வி என்றெல்லாம் கவிதை எழுதும் போது, இவைகள் ஏன் கட்டிளங்காளைகளாக இருக்கக் கூடாது என்ற பகுத்தறிவுக் கேள்வி எல்லாம் மறைந்து விடுகிறது. சித்தாந்தம் கற்பித்த காழ்ப்பையும் வெறுப்பையும் இயற்கையும் கவிதையும் கொஞ்ச நேரத்துக்குக் கரைத்துத் தள்ளி விடுகிறது. நல்ல விஷயம்தான்.

வைகறையின் தேவியான உஷையைக் குறித்த பல ரிக்வேத சூக்தங்களில் ஒன்று மேற்கண்டது. இரவைக் குறித்த ராத்ரி சூக்தம் என்ற பாடலுடன் இணைத்துப் படிக்கையில் இதன் கவித்துவத்தை முழுமையாக உணர்ந்து அனுபவிக்க முடியும். ராத்ரி சூக்தம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன்.

ஸ்ரீஅரவிந்தர் அவரது தத்துவார்த்த நோக்கில் உஷையை ஆன்ம விழிப்பின் குறியீடாகக் காண்கிறார். Secret of the Veda நூலில் அவர் கூறுகிறார்-

“Ushas, the medium of the awakening, the activity and the growth of the other gods; she is the first condition of the Vedic realisation. By her increasing illumination the whole nature of man is clarified; through her [mankind] arrives at the Truth, through her he enjoys [Truth’s] beatitude.”

ஞானத் தேடலின் பாதையில் சத்தியத்தின் முதல் கீற்றுகள் ஆன்ம சாதகனுக்குப் புலப்படும் தருணத்தையே பொற்றேரில் புன்முறுவல் பூத்து வரும் உஷை குறிப்பதாக அவர் கருதுகிறார். ஸ்ரீஅரவிந்தர் இயற்றிய தத்துவக் காவியமான ‘சாவித்ரி’ என்ற நீள்கதைப் பாடலில், The Symbol Dawn என்ற முதல் அத்தியாயத்தில் அவர் பாடிச் செல்வது உஷை குறித்த வேதக் கவிதைகளின் நீட்சியே ஆகும்.

வேத இலக்கியத்தில் ஆழ்ந்து தோய்ந்தவர் மகாகவி பாரதி.  ஒளியும் இருளும் குறித்த வேதப் படிமங்களை தமது கவிதைகளில் பற்பல இடங்களில் பாரதி மிக அழகாக எடுத்தாண்டுள்ளார்.

காலை இளவெயிலின் காட்சி – அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி
நீல விசும்பினிடை இரவில் – சுடர்
நேமியனைத்தும் அவள் ஆட்சி

என்ற பாடலில் நாம் கேட்பது வேத ரிஷியின் குரலையே.

புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதியினை
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன்.
நாலு புறத்தும் உயிர் நாதங்கள் ஓங்கிடவும்
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன்..

என்ற குயில் பாட்டின் காலை வர்ணனையும் இவ்வகைப் பட்டதே.

சீரடியால் பழவேத முனிவர் போற்றும்
செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய்

என்றும்,

இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
எண்ணில்லாது இடையிடையே எழுதல் காண்பாய்
உமை கவிதை செய்கின்றாள்! எழுந்து நின்றே
உரைத்திடுவோம் பல்லாண்டு வாழ்க! என்றே.

என்றும் பாஞ்சாலி சபதத்தில் வரும் மாலை வர்ணனையில் அழகுறப் பாடுகிறார்.

வசன கவிதைகளில், மிகத் தெளிவாக உயிரோட்டம் கொண்ட கவித்துவ மொழியில் பாரதி வேத இலக்கிய உருவகங்களை அற்புதமாக எடுத்தாள்கிறார். உதாரணமாக, ஞாயிறு என்ற கவிதையின் இப்பகுதி –

வைகறையின் செம்மை இனிது.
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.
உஷையை நாங்கள் தொழுகின்றோம்.
அவள் திரு.
அவள் விழிப்புத் தருகிறாள். தெளிவு தருகின்றாள்.
உயிர் தருகின்றாள். ஊக்கம் தருகின்றாள்.
அழகு தருகின்றாள். கவிதை தருகின்றாள்.
அவள் வாழ்க.
அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது.
அவள் அமுதம்.
அவள் இறப்பதில்லை. வலிமையுடன் கலக்கின்றாள்.
வலிமை தான் அழகுடன் கலக்கும். இனிமை மிகவும் பெரிது.
வடமேருவிலே பலவாகத் தொடர்ந்து வருவாள். வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.
அவளுடைய நகைப்புக்கள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள், அன்பு மிகுதியால்.
ஒன்று பலவினும் இனிதன்றோ?
வைகறை நன்று. அதனை வாழ்த்துகின்றோம்.

பாரதியை அடுத்து வந்த தமிழ் நவீன கவிதையின் பிதாமகர் ந.பிச்சமூர்த்தியும் இப்படிமங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒளியின் அழைப்பு என்ற பிச்சமூர்த்தியின் பிரபலமான கவிதை, நிராசையின், தோல்வியின் குறியீடுகளுடன் தொடங்குகிறது– பரந்து விரிந்த மரத்தடியில், ரத்தம் செத்த சோனிக் கழுகு. வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்தையும் இழந்த கழுகு சுற்றிப் பார்க்கிறது, எங்கும் அதற்கு பொய்மையும் போலித்தனமும் இருளுமே தெரிகின்றன.

சூழவும் எவ்வளவு பெரிய, பழைய முதிய இருட்டு!
பழமை என்ற பிரமையில் அரையொளியில்,
பொய்களின் பிணங்கள் எப்படி உயிருடன் நடிக்கின்றன!
அறிவின் சுயேச்சையை
அமுக்குப் பிசாசுகள் எப்படி சிறைப்படுத்தி விட்டன..

ஆனால், அந்தக் கவிதை அதோடு நின்று விடவில்லை. மேலே செல்கிறது.

பரவாயில்லை விடேன் –
சோனியானாலென்ன?
போர் என்ற சங்கு முழங்குகிறது.
அழகின் சிரிப்பு அண்டமாய்ப் பிறந்திருக்கிறது.
அகண்ட ஒளி அனாதியாய் மலர்ந்திருக்கிறது.
அழகும் அத்யாத்மமும் அழைக்கின்றன.
ஜீவா! விழியை உயர்த்து.
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு
ஒளியை நாடு.
கழுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்.
சூழ்வின் இருள் என்ன செய்யும்?

என்று முடிகிறது. நாள்தோறும் உதிக்கும் வைகறை ஒளியை மாறாத சத்தியத்தின், நம்பிக்கையின் அடையாளமாகக் கண்ட ரிக்வேதப் பாடலின் நீட்சிதான் இது. வெங்கட் சாமிநாதன் பிச்சமூர்த்தியை ‘ஒரு ரிக்வேத ரிஷி போன்றவர்’ என்றே ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

நவீனத் தமிழிலக்கியத்தின் மகத்தான சாதனை ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்“.  நமது காவிய மரபின் அழகை பூரணமாக உள்வாங்கி, பற்பல தளங்களில் விரிந்து செல்லும் இந்த நாவலில், பல இடங்களில் வைகறைச் சித்தரிப்பு வருகிறது. அவை எல்லாவற்றிலும் வேத ரிஷியின் குரலின் எதிரொலியை நாம் கேட்க முடியும்.

குறிப்பாக ஓர் இடத்தில் வரும் அற்புதமான வைகறை வர்ணனையின் ஒரு பகுதியைப் பார்க்கலாம் (ஸ்ரீபாதம்- 24வது அத்தியாயம்). உஷை குறித்த வேத கவிதை உருவகத்தை முழுமையாக உள்வாங்கி, அதன் மரபார்ந்த தன்மையைச் சிறிதும் சிதைக்காமல், அதே சமயம் முற்றிலும் புதுப் புதுப் படிம வெளிகளுக்கு ஜெயமோகன் எப்படி எடுத்துச் செல்கிறார் என்பதை இதில் கவனிக்கலாம்  –

“உஷை நீலமேக வாசலை ஒலியின்றி திறந்தாள். கலவி முடிந்த மஞ்சம் போல வானம். துகில்ச்சுருள்களாக வெண்மேகங்கள் சிதறிக் கிடந்தன. மயக்கத்திலிருந்து புன்னகையுடன் விழித்துக் கொண்ட பிரபை ஒருகணம் எதையோ எண்ணி புன்னகை புரிந்தாள். அப்புன்னகை பட்டு மலையுச்சிகள் மிளிர்ந்தன. பின்பு நாணியவளாக பரபரத்து எழுந்து, மேகத்துகிலால் உடலை மறைத்தபடி விரைந்தாள். மேற்குவானின் வாசல் திறந்து படிகளை ஏறியபிறகு, துகிலை இழுப்பவளின் பாவனையில் திரும்பிப் பார்த்தாள். ஒருகணம் உஷையின் கண்களும் அவள் கண்களும் சந்தித்தன. பிரபை வெட்கமும் பெருமிதமும் தோன்றச் சிரித்தாள். கருமேகங்களிலான கதவை நகைத்தபடி சாத்திக் கொண்டாள்..

.. உஷை பொன்னிறப் பாதங்களை மெல்ல எடுத்து ஹரிததுங்காவின் நெற்றிமீது வைத்தாள். ஹரிததுங்காவின் உடம்பு முழுக்கப் புதுப்புது வெள்ளியருவிகள் ஜ்வாலைபோலக் கிளம்பின. உஷை பொன்னிறக் கூந்தல் மெல்ல ஒளிர, வெட்கிச் சிவந்த முகத்தை வெளிக்காட்டினாள். மாருதர்களின் இறகுகள் பொன்னிறம் பெற்றன. உஷை வருவதற்காக வானப்பரப்பின் சென்னிறமான பாதை விரிந்தது.

உஷை வெளிவந்தாள். அவள் உடலின் ஒளிபட்ட மேற்குவானம் பொற்கடலாக மாறியது. அவள் பொன்னாலான ஏழடுக்கு மாளிகை கிழக்குச் சரிவில் துலக்கம் பெற்றது. பொன்னிறமான ஏழு பசுக்களினால் இழுக்கப் படும் அவளுடைய செவ்வொளித் தேர் வந்து நின்றது. உஷை நான்கு கரங்களில் நீலநிறமான கரும்பு வில்லும், வெண்ணிறமான மலர்ந்த தாமரையும், மஞ்சள் நிறமான முற்றிய நெற்கதிரும் ஏந்தி, வலது கீழ்க்கரத்தால் உலகை ஆசிர்வதித்தபடி அதில் வீற்றிருந்து பயணத்தைத் தொடங்கினாள். உலகில் எங்கும் அப்போது ஒரு துளி இருள் கூட மிஞ்சியிருக்கவில்லை.

உஷையின் ரதச் சக்கரங்கள் உருண்ட பாதையில் செம்மையான ஒளி தேங்கிக் கிடந்தது. அவள் உடைநுனி வருடிய மலைச்சரிவுகள் சிவந்தன. அவள் விரல்கள் தொட்ட மலர்கள் மலர்ந்தெழுந்தன. மீன்கள் பொன்னிற ஒளியுடன் ஆழங்களிலிருந்து மேலெழுந்து வந்து அவளைப் பார்த்தன. பொன்னிறச் சுடராக உடல்மாறிய புழுக்களும் பூச்சிகளும் ஆனந்தத்தால் அவளை வாழ்த்தின. உஷையின் பார்வை பட்ட இடங்களில் பொன்னிறம் பொலிந்தது. தானிய மணிகள் முதிர்ந்து குலுங்கின. பாம்பும் வௌவாலும் கூகையும் அவள் பார்வை படாத மூலைகளை நோக்கி விரைந்தன. வானும் பூமியும் அவள் வசீகரத்தால் கட்டுண்டன. அவள் அழகே பூமியின் அழகு என ஆயிற்று.

வான்சரிவில் உஷையின் தேர் இறங்கியது. கீழே மல்லாந்து படுத்திருந்த விராட வடிவம் கொண்ட புருஷனைப் பார்த்தாள். அவள் கன்னம் வெட்கத்தால் சிவந்தது. விராட புருஷன் அவளை நோக்கிப் புன்னகைத்தான். அவன் பார்வை அவள் பார்வையைச் சந்தித்தது. ஆயிரம் கோடிப் பார்வைகள் அனுதினம் சந்தித்துக் கொள்கின்றன. அவற்றில் ஒருசில பார்வைகளின் போதுதான் தேவருலகில் ஒரு பாரிஜாதப் பூ மலர்கிறது.

“நீ யார்” என்று அவன் கேட்டான். அ

“தேஜஸின் மகளும் அக்னியின் தங்கையுமாகிய நான் உஷை. என் சோதரி ராத்ரிதேவி. என் அன்னை சாவித்ரி” என்றாள் உஷை.

அவன் சிரித்தபடி, “எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அழகு வடிவமாக மாற்றும் பேரழகி நீ. உன் பாதம் என் மார்பு மீது பட்டதனால் நானும் பேரழகனானேன்” என்றான்.

அவள் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு தனக்குள் சிரித்தாள். தேவருலகில் ஒரு தூய இசை ஒலித்து அடங்கியது.”

வேத ரிஷி பெற்றெடுத்த சிறு பெண் எத்தனையோ கோடிக் கண்கள் கண்டுகளித்த பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து மீண்டும் புத்திளமை கொண்ட பேரழகியாக மாறும் அதிசயம் இங்கு நடக்கிறது. தொட்டதை எல்லாம் அழகாக்குவது உஷை மட்டுமல்ல, ஜெயமோகனின் எழுத்தும்தான்.

வைகறையின் அழகுகளை என்றென்றும் கண்ணாரக் காண்போம். அன்பும் அமைதியும் இன்பமும் வேண்டி வாழ்வோம்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

6 Replies to “உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்”

  1. வைகறையின் அழகை அழகு ததும்பும் வேத ரிஷி வாக்கியத்திலிருந்து… பாரதி வரையும்… அதற்கு அப்பாலும் எடுத்துக் காட்டிய தங்களின் பேரறிவின் திறன் கண்டு நயந்து வியந்து நிற்கிறோம்…

    தங்களுக்கும் மற்றும் தமிழ்ஹிந்து உறவுகள் அனைவருக்கும் இனிய நந்தன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  2. வேத மந்திரங்களை நற்றமிழில் நன்கு தந்த ஜடாயு , நீவிர் வாழ்க பல்லாண்டு, நும் பணி மேலும் சிறக்கட்டும்.

    இப்பணியை நீங்கள் தொடர எல்லாம் வல்லான் உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வான்.

  3. திரு . ஜடாயு அவர்களின் கட்டுரையும் மொழி பெயர்ப்பும் மிக அருமை. அன்னாரின் இப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். நந்தன ஆண்டு இனிதே தொடங்கியுள்ளது.
    –பணிவரையன்

  4. dear brother, very very nice and useful message many many thanks for you and tamil hindu. continue your sewa.god bless you.

  5. உஷையின் எட்டிப் பார்ப்பில் தொடங்கியுள்ள நந்தனத் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் உலகுக்கு இது போல எண்ணில்லாத கட்டுரைகளின் மூலம் வேத விஞ்ஞானத்தைத் தந்து உயர்த்தட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *