சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
தொடர்ச்சி..
கற்றுக்கொள்! ஆனால் அடிமையைப்போல பின்பற்றி நடிக்காதே:
அவ்வாறாயின் மேல்நாட்டினரிடமிருந்து கற்றுக்கொள்ளத் தக்கது நமக்கு ஒன்றுமேயில்லையா? இப்பொழுது பெற்றுள்ளவைகளைவிட மேலானவற்றை அடைய நாம் முயலுவதும் உழைப்பதும் தேவையில்லையா? நாம் முழுமை அடைந்துவிட்டோமா? நமது சமூகம் யாதொரு குறையுமின்றி முற்றிலும் மாசற்றதாய் உள்ளதா? இல்லை, இல்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளன. நாம் சாகுமளவும் முன்னைக்காட்டிலும் மிக உயர்ந்த, புதிய பொருள்கள் பெறக் கட்டாயம் பாடுபட வேண்டும். பாடுபடுவதே மனித வாழ்க்கையின் பயன். “வாழுமளவும் நான் கற்கிறேன்” என்று சொல்வார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதுகிற மனிதனோ, சமூகமோ மரணத்தின் வாய்க்குள் முன்னரே புகுந்துவிட்டதாக அறிந்துகொள்ளுங்கள். ஆம்! மேல்நாட்டவரிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உள்ளன. ஆனால் அஞ்ச வேண்டுவனவும் உள்ளன.
அற்ப அறிவுள்ள ஒருவன் ஸ்ரீ ராமகிருஷ்ணரது முன்னிலையில் ஹிந்து சாஸ்திரங்களை எப்பொழுதும் குறைகூறுவது வழக்கம். அவன் ஒருநாள் பகவத் கீதையைப் புகழலானான். அதைக் கேட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணர், “யாரோ ஓர் ஐரோப்பியப் பண்டிதர் கீதையைப் புகழ்ந்துள்ளார் போலும்! அதனால் இவனும் அந்த மாதிரியே புகழ்கிறான்” என்றார்.
ஓ! பாரதநாடே, உன்னை பயமுறுத்தும் இன்னல் இதுவே. மேல்நாட்டாரைப் பின்பற்றி நடிக்கும் மயக்கத்தில் நீ மூழ்கியிருக்கிறாய். ஆதலால் எது நல்லது எது தீது என்பதை நீ ஆராய்ச்சியாலோ, பகுத்தறிவாலோ, விவேகத்தாலோ அல்லது சாஸ்திரங்களின் அபிப்ராயத்தைக் கொண்டோ தீர்மானிக்கப் போவதில்லை. வெள்ளையர் புகழ்கிற, விரும்புகிற எந்த ஒரு கருத்தும் அல்லது பழக்க வழக்கமுறையும் நல்லனவாகின்றன. அவர்கள் வெறுக்கிற, இகழ்கிற விஷயங்கள் எவையானாலும் அவை தீயனவாகின்றன. அந்தோ! இதைக்காட்டிலும், அறிவீனத்தை நிரூபிக்கக்கூடிய மிகத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்?
அவர்களுக்கு உணவு ஆவது நமக்கு நஞ்சு ஆகலாம்:
நமது இயல்புக்குத் தக்கபடி நாம் வளர்ந்து முன்னேற வேண்டும். அந்நிய நாட்டுச் சமூகங்கள் நம்மீது ஒட்டவைத்திருக்கும் முறைகளின் வழியில் நாம் செயல்பட முயலுவது வீண் ஆகும். அது நடவாது நம்மைத் திரித்து, மாற்றிச் சித்திரவதை செய்து பிற தேசங்களின் உருவில் ஆக்க முடியாது. இங்ஙனம் அருளிய ஈசனை நாம் போற்றுவோமாக. இதனால் பிற இனத்தவரின் சமூக ஏற்பாடுகளை நான் கண்டிக்கவில்லை. அவை அவர்களுக்கு நல்லது; நமக்கல்ல. அவர்களுக்கு அமுதம் ஆவது நமக்கு நஞ்சு ஆகலாம். நாம் கற்கவேண்டிய முதற்பாடம் இது. இவர்களின் சாஸ்திர ஆராய்ச்சிகளுக்கும் சமூக ஏற்பாடுகளுக்கும் அவர்களது பரம்பரையான கொள்கைகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் தற்கால நிலையை அடைந்திருக்கின்றனர். நமக்கு நம்முடைய புராதன அனுஷ்டான முறை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கர்மபலன் பின்னணியாக இருக்கிறது. நாம் நமது இயற்கைக்கு ஒத்த முறையில்தான் வளர்ந்து முன்னேற வேண்டும். நமது பாட்டையில்தான் நம்மால் ஓடமுடியும்.
இருவிதமான நாகரிகங்கள்:
சமூக வாழ்க்கையை நிர்மாணிப்பதற்காக உலகத்தில் இருவித முயற்சிகள் செய்யப்பட்டன. ஒரு முயற்சி சமயத்தை ஆதாரமாகக் கொண்டும், மற்றது சமூகத் தேவையை அடிப்படையாகக் கொண்டும் நிறுவப்பட்டன. ஒன்று ஆன்மிகத்தின் அடிப்படையிலும் மற்றொன்று உலகாயத வாதத்தின் அஸ்திவாரத்தின் மீதும் எழுப்பப்பட்டன. ஒன்று மானசீகத் தத்துவத்தின் அடிப்படையிலும் மற்றது பிரத்தியட்ச வாதத்தின் அடிப்படையிலும் கட்டப்பட்டன. ஒன்று இந்தச் சிறிய உலகிலுள்ள சிருஷ்டியைத் தாண்டித் தன் பார்வையைச் செலுத்துகிறது. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர மறு உலகிலும் வாழ்க்கையைத் துவக்குவதற்குத் துணிவுடனிருக்கிறது. இரண்டாவது இவ்வுலகத்துலுள்ள விஷயங்களில் நிலைகொண்டு இங்கு உறுதியான ஆதாரத்தைக் காண வேண்டுமென எதிர்பார்க்கிறது.
ஒவ்வொன்றிற்கும் அதனதற்கு இசைந்த பாணி உண்டு. சமய ரீதியாக, உள்நோக்கி வினவுகின்ற பாரதத்துக்கும், விஞ்ஞான ரீதியான, வெளியில் நோக்குகின்ற மேல்நாட்டுக்கும் தனித்தனி பாணியில் மரபுகள் அமையும். சமூக முன்னேற்றத்தின் மூலம் ஆன்மிகத் தத்துவத்தின் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் மேலைநாடு பெற விரும்புகிறது. கீழ்த்திசை நாடு ஆன்மிகத் தத்துவத்தின் மூலம் சமூக சக்தியின் ஒவ்வொரு அம்சத்தையும் பெற விரும்புகிறது. ஆகவேதான், பாரதத்தின் சமயத்தை முதலில் நசுக்கி அகற்றினால் ஒழிய, சீர்திருத்தத்துக்கு வேறு வழியில்லை என்று நவீனச் சீர்திருத்தவாதிகள் கருதினார்கள். அவர்கள் முயன்று தோல்வியுற்றார்கள். ஏன்? ஏனெனில் தமது சொந்த சமயத்தைப் பற்றி அவர்களில் எவரும் ஆராயவில்லை. சமயங்கள் அனைத்துக்கும் தாயானவளைப் புரிந்துகொள்ளத் தேவையான பயிற்சியை எவரும் பெறவில்லை.
ஹிந்து சமூகத்தை முன்னேற்றுவதற்காக அதனுடைய சமயத்தை அழிப்பது தேவையில்லை என நான் ஆதாரபூர்வமாகக் கூறுகிறேன். சமூகம் இன்றுள்ள இழிநிலை சமயத்தின் காரணமாக ஏற்பட்டதில்லை; சமூக நன்மைக்காகச் சமயமானது எந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமோ அந்த முறையில் பயன்படுத்தப்படாமையே இழிவுக்குக் காரணம்.
இணக்கம் தேவைதான், ஆனால் பாரதம் ஐரோப்பாவாக ஒருபோதும் ஆக முடியாது! பாரதத்திலுள்ள சமூக ஏற்பாடுகளைப் புதிதாக மாற்றி இணக்கமுண்டாக வேண்டுமென்று புதிய சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. கடந்த முக்கால் நூற்றாண்டாகப் பாரதம் சீர்திருத்தச் சங்கங்களாலும் சீர்திருத்தவாதிகளாலும் நிறைந்து பொங்கி வருகிறது. ஆனால் அந்தோ! அவர்கள் ஒவ்வொருவரும் தோற்றுப்போனது நிரூபணமாகி விட்டது. இவர்களுக்கு இரகசியம் தெரியாது. கற்க வேண்டிய மகத்தான படிப்பினையை அவர்கள் கற்கவில்லை. அவர்கள் தமது அவசரத்தில் சமூகத்தில் காணப்படும் குறைகளுக்கெல்லாம் பொறுப்பைச் சமயத்தின் மீது சுமத்தினார்கள். ஒரு கதையில் ஒருவன் தனது நண்பனின் நெற்றியில் உட்கார்ந்திருந்த கொசுவைக் கொல்லவிரும்பிக் கொடுத்த பலமான அடியில் கொசுவுடன் நண்பனும் இறக்கத்தக்க நிலை ஏற்பட்டதாம். அதுபோலத்தான் இவர்கள் நிலையும். ஆனால் இந்த விஷயத்தில் அதிர்ஷ்டவசமாக, அந்தச் சீர்திருத்தவாதிகள் அசைக்கமுடியாத கற்பாறை மீதுதான் மோதிக்கொண்டார்கள். மோதிக்கொண்ட அதிர்ச்சி வேகத்தில் அடியோடு நசுக்குண்டு மறைந்தார்கள். தவறான வழியில் முயற்சி நடத்தித் தோற்றுப்போன அந்த உயர்ந்த தன்னலமற்ற ஆத்மாக்களைப் பாராட்டுகிறேன். சீர்திருத்தவாதியின் ஆவேச மனோவேகம் மின்சார அதிர்ச்சி போல ஆகி, தூங்குகிற இந்த பிரம்மாண்டமான சமூகத்தை எழுப்ப அவசியமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் நிர்மாணிப்பவர்களாக இராமல், தகர்க்கிறவர்களாக இருந்தனர். ஆகவே அவர்களே அழிந்துபோகும் தன்மையினராதலால் மடிந்தனர்.
அவர்களை நாம் ஆசீர்வதிப்போம். அத்துடன் அவர்களது அனுபவத்தின் மூலம் இலாபமடைவோம். வளர்ச்சி எல்லாமே உள்ளுக்குள்ளேயிருந்து வெளியே வருகிற வளர்ச்சிதான் என்ற பாடத்தை அவர்கள் கற்கவில்லை. உயிர்கள் வளர்ச்சி அடைவதற்கு முன் உள்ளே சுருங்குகின்றன. எல்லாப் பரிணாம வளர்ச்சிகளும் அதற்குமுன் ஏற்பட்ட உள்சுருக்கத்தின் வெளித்தோற்றம்தான். விதையானது தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்ச பூதங்களிலிருந்து ஜீவரசத்தை உறிஞ்சி ஜீரணிக்க முடியும். ஆனால் தனது இயல்புக்குத் தகுந்த மரத்தையே அது வளர்க்கிறது. ஹிந்து இனம் மறைந்து போக வேண்டும்; இந்த நாட்டைப் புதிய ஓர் இனம் பிடித்துக் கொள்ள வேண்டும்; அப்படி ஒருக்காலும் ஏற்பட முடியாது. அப்படி நிகழ்ந்தாலொழிய கிழக்கிலோ மேற்கிலோ நீ எவ்வளவு முயன்றாலும் பாரதம் ஐரோப்பாவாக ஒருநாளும் மாற முடியாது.
மற்ற தேசங்களிலிருந்து நாம் கற்கவேண்டிய ஏராளமான பாடங்கள் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல படிப்பினைகளை நாம் கற்க வேண்டும். ஆனால் நமது தற்காலச் சீர்திருத்த இயக்கங்கள் பலவும் ஆலோசியாமல் மேல்நாட்டுவழித் துறைகளையும் வேலைமுறைகளையும் பின்பற்றி வெறும் பிரதிபிம்பமாக இருக்கின்றன. நிச்சயமாகவே பாரதத்துக்கு அவை பொருந்தமாட்டா. ஆகவேதான் நமது தற்காலச் சீர்திருத்த இயக்கங்களெல்லாம் பலனற்றுப் போயின. மக்கள் என்ற ரீதியிலே சரித்திரபூர்வமாக நாம் தேடிப் பெற்றுள்ள குணப்பண்பை நாம் காக்க முயல வேண்டும்.
மாறாத மையப்புள்ளியைச் சுற்றி மாறுகின்ற வெளிவடிவங்கள்:
ஓவ்வொரு காரியத்திலும் அத்தியாவசியமானவற்றுக்கும் தேவையில்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தியாவசியமானவை எல்லாம் நிரந்தரமானவை. தேவையில்லாதவற்றுக்குச் சில காலத்துக்குத்தான் மதிப்பு இருக்கும்.
ஜாதிகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. சடங்குகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. வெளி அமைப்புகளும் அவ்வாறேதான். மூலதத்துவம் அதன் சாரம் மாறுவதில்லை. நமது சமயத்தை நாம் வேதங்களில் படிக்கவேண்டும். வேதம் விதிவிலக்கு. அது ஒருபோதும் மாறாது. மற்ற ஒவ்வொரு புத்தகமும் மாறவேண்டும். வேதங்கள் அநாதியாதலால் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஸ்மிருதிகளுக்கு முடிவு உண்டு. காலம் உருண்டோட ஓட, ஸ்மிருதிகள் மேலும் மேலும் இல்லாமற் போய்விடும். ரிஷிகள் வருவார்கள். அவர்கள் சமூகத்தை மாற்றி முன்னைவிட நல்ல பாதைகளில் செலுத்துவார்கள். காலத்தின் தேவைக்குத் தக்க கடமைகளிலும் தகுந்த பாதைகளிலும் செலுத்துவார்கள். அப்படி இல்லையேல் சமூகம் உயிர் வாழ்வது இயலாது.
இந்த நாட்டில் கடந்த காலத்தில் பெரிய காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதைவிடப் பெரிய காரியங்களை எதிர்காலத்தில் செய்வதற்கு இடமிருக்கிறது. நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கிற இடத்திலேயே தேங்கிநிற்க முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள் என்பது திண்ணம். நாம் ஒரு இடத்தில் தேங்கி நின்றால் அது சாவுக்கு அறிகுறி. ஒன்று, நாம் முன்செல்ல வேண்டும்; அல்லது பின்செல்ல வேண்டும். ஒன்று நாம் முன்னேற வேண்டும்; அல்லது தாழ்வுற வேண்டும். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான செயல்கள் செய்தார்கள். நாம் இன்னும் அதிகமான பலம் பெற்று அவர்கள் செய்த காரியங்களைவிட உயர்ந்த காரியங்களைச் செய்ய வேண்டும். பெருத்த சாதனைகளைத் தாண்டி அணிவகுத்துச் செல்ல வேண்டும். நாம் எங்ஙனம் பின்சென்று நம்மைத் தாழ்த்திக்கொள்ள முடியும்? அது இயலாது. அப்படி நிகழக் கூடாது. பின்செல்வது தேசியத் தாழ்வுக்கும் சாவுக்கும் வழியாகும். ஆகவே நாம் முன்னால் சென்று, முன்னை விட மகத்தான செயல்களைச் செய்வோமாக. இதுதான் நான் உங்களுக்குக் கூற வேண்டியது.
காலத்தால் மதிப்பு பெற்ற பாரதநாட்டுச் சமூக அமைப்பு முறைகள்:
நமது ஜாதிகளும், நமது சமூக அமைப்பு முறைகளும், வெளிப்பார்வைக்கு நமது சமயத்துடன் இணைந்திருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. தேசம் என்ற ரீதியிலே நம்மைப் பாதுகாக்க இந்தச் சமூக ஸ்தாபனங்கள் தேவைப்பட்டு வந்துள்ளன. தற்காப்புக்கான தேவை இல்லாதொழியும்போது அவை இயற்கையான மரணத்தை அடையும்.
ஆனால் வயது முதிர்ச்சியடைய அடைய காலத்தால் மதிப்புப் பெற்ற இத்தகைய பாரத நாட்டு ஸ்தாபனங்களைப் பற்றி முன்பிருந்ததைவிட நல்ல தெளிவு கொள்கிறேன். அவற்றில் பலவும் உபயோகமற்றவை, தகுதியற்றவை என நான் எண்ணிய காலம் உண்டு. ஆனால் வயது முதிர்ச்சி பெறப்பெற அவற்றில் எந்த ஒன்றையும் திட்டுவதற்கு அதிகமான தயக்கமும் அதைரியமும் அடைகிறேன். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் பல நூற்றாண்டு அனுபவங்களின் வடிவம் ஆகும். நேற்றுப் பிறந்த ஒரு குழந்தை, நாளை மறுதினம் விதிப்பயனால் சாகப் போவது, என்னிடம் வந்து எனது திட்டங்கள் அனைத்தையும் மாற்றிக்கொள்ளச் சொல்லுகிறது. அந்தக் குழந்தையின் யோசனையைக் கேட்டு எனது சுற்றுப்புறச் சூழ்நிலையை அதனுடைய கருத்துப்படியே மாற்றிக்கொள்வேனாயின் நான்தான் முட்டாளே தவிர, வேறு எவருமில்லை.
வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வருகிற ஆலோசனைகள் இது போன்றதேயாகும். அந்த மேதாவிகளிடம், “உங்களுக்காக நீங்களே சாசுவதமான சமூகத்தை நிர்மாணித்துக் கொண்ட பிறகு நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்போம். உங்களால் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தாற்போல் ஒரு கருத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை. சண்டையிட்டுத் தோற்கிறீர்கள். வசந்த காலத்தில் தோன்றும் விட்டில் பூச்சிகளைப் போலப் பிறந்து, அவற்றைப் போலவே ஐந்து நிமிடங்களில் மடிகிறீர்கள். நீர்க் குமிழிகளைப் போல மேலே வந்து, அது போலவே வெடித்துப் போகிறீர்கள். முதன் முதலில் எங்களுடையதைப் போன்று சாசுவதமான ஒரு சமூகத்தை நிறுவுங்கள். பற்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வலிமை குன்றாமல் வாழக்கூடிய சட்டங்களையும் ஸ்தாபனங்களையும் முதலில் அமையுங்கள். அதன் பிறகுதான் இந்த விஷயத்தைக் குறித்து உங்களிடம் பேசுவதற்கான தக்க தருணம் வரும். நண்பனே, அதுவரை நீ மயக்க நிலையிலுள்ள சிறு குழந்தைதான்” என்று கூறுங்கள்.
மனிதகுல திட்டத்துக்கான நமது திட்டமும் அதன் நிறைவேற்றமும்:
தற்காலிகமான சமூகச் சீர்திருத்தத்தைப் பிரசாரம் பண்ணுகிறவன் அல்ல நான். அல்லது சிறு சிறு குறைகளை நீக்கவும் நான் முயன்று கொண்டிருக்கவில்லை. “முன்னே செல். மனித குல முன்னேற்றத்துக்கான திட்டத்தை நமது மூதாதையர்கள் மிக உத்தமமான முறையிலே வகுத்து வைத்துள்ளார்கள். நடைமுறையில் அதனை நிறைவேற்றுவதற்காக வேலை செய்து அதனைப் பூரணமாக்கு” என்று மட்டும் நான் கூறுகிறேன். “மனிதன் ஏகப் பொருளாவான்; அவனோடு தெய்வீக இயல்பு கூடப் பிறந்ததாகும் என்ற வேதாந்தக் கருத்துகளை நீங்கள் நன்றாக அநுபவித்து உணர்ந்து வேலை செய்யுங்கள்” என்று மட்டும் கூறுகிறேன்.
நமது பண்டைய சட்ட நிர்மாணகர்கள், ஜாதிகளை உடைப்பவர்களாகவும் இருந்தனர். ஆயினும் அவர்கள் நமது தற்காலச் சீர்திருத்தக்காரர்களைப்போல இருக்கவில்லை. ஜாதியை உடைப்பது என்றால் ஒரு நகரத்திலுள்ள எல்லா மக்களும் ஒன்றாக உட்கார்ந்து மாட்டிறைச்சியும் மது பானமும் பருக வேண்டும்; எல்லா முட்டாள்களும் பைத்தியக்காரர்களும் எந்த இடத்திலாவது தாம் தேர்ந்தெடுக்கும் யாரையாவது திருமணம் செய்துகொண்டு நாடு முழுவதையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக ஆக்கவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. ஒருநாட்டின் நல்வளம், அந்த நாட்டு விதவைகளுக்கு எத்தனை கணவன்மார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படவேண்டும் என்றும் அவர்கள் நம்பவில்லை. மேற்கூறிய செயல்முறைகளால் வளமுற்ற நாட்டை இனிமேல்தான் நாம் காணவேண்டும்.
(தொடரும்..)
ஜாதியத்தைப் பற்றிய தெளிவான பார்வை; முன்னோர்களின் சிந்தனையைப் பற்றிய ஆழ்ந்த, அறிவார்ந்த, கருத்தோட்டம்; பொருத்தமற்றவற்றைக் copy செய்து தாமும் வீணாய்ப் போய், நம்மையும் வீணாக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சிந்தனையாளர்களின் போக்கு, என்று எல்லாக் கோணங்களிலும் இந்தியாவையே சிந்தித்துள்ள இந்த மஹானின் சொற்களை அக்ஷரம் மாறாமல் இந்தியர்கள், இந்திய அரசு, கேட்டால், பின்பற்றினால், நம் நிலை எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்..!