வேத கலாசாரத்தில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் சந்தியாவந்தனம் மற்றும் நடுப்பகல் வேளையில் மாத்யாஹ்னிகம் ஆகிய தினசரி கிரியைகளை தொன்றுதொட்டு பின்பற்றி வருகின்றனர். இந்த கிரியைகளின் போது எழுந்து நின்று கூறப்படும் (உபஸ்தானம்) மூன்று வழிபாட்டு மந்திரங்களின் தமிழாக்கமும் விளக்கங்களும் இப்பதிவில் காணலாம்.
(1)
மித்திரன்
அனைத்தும் காக்கும் தேவன்
போற்றத்தக்கதும் சத்தியமானதும்
கேட்போர் மனம் கவர்வதுமான
அவனது கீர்த்தியையும் பெருமையையும்
தியானிக்கிறேன்.
மித்திரன்
அனைத்தும் அறிந்து
மக்களை நடாத்துகிறான்
பூமியையும் விண்ணையும் தாங்குகிறான்
மித்திரன்
உயிர்களனைத்தையும்
கண்கொட்டாமல்
பார்த்து கொண்டிருக்கிறான்
அழியாத பலன் பெறல் வேண்டி
நெய்நிறை அவியை
அவனுக்கு அளிப்போம்.
மித்திரனே ஆதித்யனே
உன்னை முறையுடன்
தொழவிழையும் மானிடனுக்கு
முழுமையான அறப்பயன் கூடிடுக
அவன் நோய்ப்பட்டு அழிவுறான்
அவனைப் பாவம் அணுகாது
அருகிலும் தொலைவிலும்.
– காலை நேர சந்தியாவந்தன உபஸ்தான மந்திரம் (“மித்ரஸ்ய சர்ஷணீத்4ருத:”)
மித்ரன் ஒளியையும் உறவையும் நட்பையும் வளர்க்கும் வேத தெய்வத்தின் பெயர். சூர்ய தேவனுடைய கண்ணாக இந்தத் தெய்வத்தின் சக்தி கருதப்படுகிறது. மித்ரன் என்பது சூரியனின் நாமங்களில் முதலாக வருவது. மித்ரா-வருண என வருணனுடன் இணைத்து இரட்டை தெய்வமாகவும் வேதம் இக்கடவுளைப் போற்றுகின்றது.
இந்தியப் பண்பாடு மட்டுமின்றி, பண்டைய பாரசீகப் பண்பாட்டிலும் ஜராதுஷ்ட்ர மதத்திலும் மித்ர என்ற இதே பெயருடன் இக்கடவுளை வழிபட்டனர்.
பண்டைய கிரேக்க, ரோமானிய கலாசாரங்களில் Mithras என்பது இத்தெய்வத்தின் பெயர். குளிர்காலத்தில், டிசம்பர்-25ம் நாள் இந்த தெய்வத்திற்குரிய விழாவாக Mithra Day என்ற பெயரில் கிரேக்கர், ரோமானியர் மற்றும் ஐரோப்பாவின் பண்டைய பாகனிய மாந்தர் அனைவராலும் கொண்டாடப் பட்டது. இம்மக்களில் கணிசமானவர்களைக் கொன்றொழித்து, எஞ்சியவர்களை மதமாற்றி, இக்கலாசாரங்களையும் அழித்தொழித்த கிறிஸ்தவம், பின்பு மித்ர தேவனின் இந்தப் பண்டிகையை (வழக்கம்போல) வெட்கமின்றித் திருடி, உருமாற்றி, கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாட ஆரம்பித்தது. மற்றபடி இந்த நாளுக்கும், ஏசு எனப்படும் கிறிஸ்தவ மத ஸ்தாபகருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
(2)
சத்தியத்தின் ஒளியினாலும்
கண்ணுக்குப் புலனாகும் ஒளியினாலும்
அமரரையும் மனிதரையும்
தத்தம் தொழில்களில் புகுத்தி
பொன்மயமான தேரில்
சுற்றி வருகிறான்
ஸவித்ரு தேவன்.
உலகங்களையெல்லாம்
நன்கு பார்வையிட்டுக் கொண்டு
சஞ்சரிக்கிறான்.
இருளை விழுங்கிக்கொண்டு உதிக்கும்
உயர்சோதியை
தேவர்களைத் தன்னொளியால் காக்கும்
சூரிய தேவனைக்
காண்கின்ற நாம்
ஆன்மச் சுடரொளியையே
அடைந்தவர்களாவோம்.
அனைத்தும் அறிகின்ற சூரிய தேவனை
கிரணங்களாகிய குதிரைகள்
உலகோர் காண்பதற்காக
உயரே தாங்கிச் செல்கின்றன.
மித்திரனுக்கும் வருணனுக்கும் அக்னிக்கும்
கண்ணென விளங்கும்
வண்ணமயமான தேவன்
எழுகிறான்.
அசைவனவற்றுக்கும் அசையாதவற்றுக்கும்
ஆன்மாவான அவன்
தேவருலகையும் பூமியையும் விண்வெளியையும்
வியாபிக்கிறான்.
கிழக்கிலே பரிசுத்தமாய்க் கிளம்பி
தேவர்களுக்கும் நலம் தரும்
உலகின் விழியை
நூறு கார்காலங்கள் காண்போம்
நூறு கார்காலங்கள் வாழ்வோம்
நூறு கார்காலங்கள் கூடி மகிழ்ந்திருப்போம்
நூறு கார்காலங்கள் ஆனந்தமடைவோம்
நூறு கார்காலங்கள் (நல்லதைக்) கேட்போம்
நூறு கார்காலங்கள் (நல்லதைப்) பேசுவோம்
நூறு கார்காலங்கள் புதிதாய்ப் பிறப்போம்
நூறு கார்காலங்கள் வெல்லப் படாதிருப்போம்
இவ்வாறே சூரியனைக் கண்டுவாழ
ஆசைப்படுகிறோம்.
பெருங்கடலின் நீர்த்திவலைகளின் மத்தியிலிருந்து
வைகறையில் எத்திக்கிலும் சுடரொளிபடர எழுந்தோன்
விரும்பியதனைத்தும் அளிப்போன்
செவ்விழியோன்
அனைத்தையும் காண்போன்
தன் முழுமனதுடன்
என்னைப் புனிதமாக்கிடுக.
– ‘ஆஸத்யேன ரஜஸா’ என்று தொடங்கும் யஜுர்வேத சூரிய உபாசனை மந்திரம். நடுப்பகல் நேரத்து (மாத்யாஹ்னிகம்) சந்தியாவந்தனத்தில் உபஸ்தான மந்திரமாகக் கூறப்படுகிறது.
(3)
இந்த என் வேண்டுதலைக் கேட்டருள்வீர்
வருணனே
எம்மை இப்போதே இன்புறச் செய்வீர்
உம்மைத் தொழுது
பாதுகாப்பைக் கோருகின்றேன்.
வேதமொழிகளால் வணங்கி
அதற்காகவே உம்மைச் சரணடைகிறேன்
வேள்வி செய்வோன் அவி கொண்டு வந்து
அதனையே கோருகிறான்.
புகழ்மிக்க வருணனே
புறக்கணிக்காமல் என் வேண்டுதலை
இப்பொழுதே ஏற்றுக் கொள்ளும்
எமது ஆயுளைக் குறைத்து விடாதீர்.
தெய்வங்களுக்கு ஏதேனும் வஞ்சனைகள்
மனிதர்களாகிய யாம்
அறியாமையினால் செய்திருப்பின்
உமது தர்மத்தின் இயக்கத்தை
ஏதேனும் சிதைத்திருப்பின்
வருணனே
அப்பாவத்திற்காக
எம்மைத் துன்புறுத்தாது காத்தருள்வீர்.
சூதாடிகளைப் போன்றோர்
நல்லோர் நாடாத இடத்தில்
அநியாயமாக என்மீது சுமத்திய பழிகளையும்
உண்மையாக அறிந்து செய்த பாவங்களையும்
செய்தும் அறியாதவற்றையும்
அவையனைத்தையும்
வலியின்றிச் சிதறிப்போகுமாறு
அழித்திடுவீர்
வருணனே
யாம் என்றென்றும் இருந்திட வேண்டும்
உமக்கு அன்புடையோராய்.
– “இமம் மே வருண” என்று தொடங்கும் மாலைநேர சந்தியாவந்தன உபஸ்தான மந்திரம்
வருணன் என்ற சொல்லுக்கு தன்னுள் இழுத்து அடக்கிக் கொள்பவன் (The Withholder) என்பது பொருள். ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இந்தத் திருப்பெயர் வருமிடத்தில் (வருணோ வாருணோ வ்ருக்ஷ:) அதற்கு ஸ்ரீசங்கரர் தனது கதிர்களைத் தன்னுள் இழுத்து அடக்கிக் கொண்டு மாலையில் அஸ்தமிக்கும் சூரியன் வருணன் என்று உரை கூறுகிறார் (ஸ்வரஶ்மீனாம் ஸம்வரணாத் ஸாயம் க³த: ஸூர்யோ வருண:). ‘இமம் மே வருண’ என்ற வேத மந்திரத்தையும் அதற்குச் சான்றாக அளிக்கிறார். வேத இலக்கியத்தில் வருணன் என்பது தொடக்கத்தில் அஸ்தமன சூரியனையே குறித்து, பின்பு நீர்நிலைகளின், கடலின் தெய்வத்தைக் குறிப்பதாக ஆயிற்று என்று கொள்ள இடமிருக்கிறது.
‘இமம் மே வருண’ என்ற இந்தப் புகழ்பெற்ற மந்திரம் தினந்தோறும் சாயங்கால சந்தியாவந்தனத்தில் உபஸ்தான (வேண்டுதல்) மந்திரமாக மேற்கு நோக்கி நின்று சூரியனைத் தொழுது கூறப்படுவது. அதன் இடையில் வரும் ஒரு பகுதி (தத்வாயாமி ப்ரஹ்மணா..) அனைத்து வைதிக சடங்குகளிலும் கலசத்திலும் கும்பத்திலும் வருணனை ஆவாகனம் செய்யுமுகமாகக் கூறப்படுகிறது.
இந்த மந்திரத்திற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. விஸ்வாமித்ரர் கௌசிகராகக் கடுந்தவம் புரிந்துவரும் காலத்தில் ஸுனக்ஷேபன் என்ற சிறுவன் அவரிடம் வந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறான். ஹரிச்சந்திரனுடைய ராஜ்யத்தில் மழைபொழியாது தண்டிக்கும் வருண தேவனைத் திருப்தி செய்யும் பொருட்டு நடக்கும் வேள்வியில் நரபலி கொடுப்பதற்காக அவனைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதால் அச்சமுற்று அவன் முனிவரைத் தேடி வருகிறான். கௌசிகர் அவனிடம் மனமிரங்கி இந்த மந்திரத்தை உபதேசிக்கிறார். அந்த மந்திரத்தினால் சிறுவன் வருணனைத் துதிக்க, வருணன் மனமிரங்கி மழைவரம் அருள்கிறான். சிறுவன் விடுவிக்கப் படுகிறான். மன்னனின் வேள்வியும் நிறைவுறுகிறது. இந்தக் கதை மகாபாரதத்தில் வருகிறது.
வருணனுடைய தியான ரூபத்தில் முறைதவறுபவர்களைத் தண்டிப்பதற்கான பாசக்கயிறும், சங்கும், கலசமும், மலரும் தாங்கி, அன்னங்கள் பூட்டிய தேரில் அவர் உலகனத்தையும் கண்காணிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது சூரியனின் தியான ரூபத்தை ஒத்துள்ளது என்பது கவனத்திற்குரியது.
ஜடாயு வேத மந்திரங்களையும் உபநிஷதங்களையும் தொடர்ந்து மொழியாக்கம் செய்து விளக்கக் குறிப்புகளுடன் எழுதி வருகிறார். இது தொடர்பான அவரது அனைத்து பதிவுகளையும் இங்குகாணலாம்.
You are doing a yeoman service by translating sandhyavana mandirams for those who may not be that versed in Samskritham, would be highly obliged that the tamil being used be bit simplified to those who are not that conversant with todays written tamil as compared to thos who have read some 30 to 40 years ago.
Very nicely explained.
மித்திரனுக்கு காயத்ரி மந்திரம் உள்ளதா? இருப்பின்அறிய விரும்புகின்றேன்