பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கை தத்துவம்

பக்தியும், ஞானமும் ஒருவனின் இரண்டு கண்களைப் போன்றது. ஒன்று இல்லாமல் மற்றொன்றின் உதவியால் காட்சிகளை முழுமையாகக் காண முடியாது. 

ஆகவே, ஒரு கண் இன்றி, மற்றொரு கண்ணின் மூலம் மட்டும் காட்சிகளைக் காண முயற்சிப்பது, கண்கள் இரண்டு இருந்தும், ஒரு கண் குருடனாய் வாழ விரும்பும் விவேகமற்ற ஒருவனின் விளையாட்டைப் போன்றது அவனது அந்த அறியாமை நிலை எனலாம். 

அதுப்போன்று பக்தி இன்றி, ஞானத்தை மட்டும் அடைய முயற்சிப்பதும், ஞானம் இன்றி பக்தியை மட்டும் செய்து வருவதும் மிகப்பெரிய அறியாமை என்றே கூறலாம்.

ஞான மார்க்கமும், பக்தி மார்க்கமும் ஒன்றுக் கொன்று பொருத்தமில்லாதது என்று பலரும் பல விதமாகக் கூறக் கேட்டிருக்கிறோம்.

இது அறிவிலிகளின் அறியாமைகள்தானே தவிர, அவர்களது அனுபவமற்ற அஞ்ஞான கருத்துக்களுக்கு ஆட்சேபனை கூறுவதினால், அவசியமற்ற மன உழைச்சல் உள்ளாகக்கூடும் என்பதினால், அவைகளைத் தவிர்ப்பது நலம்.

பக்தி என்பது ஞானத்திற்கான முதல் படி ஆகும். ஒருவனை ஞானத்தில் கொண்டு சேர்க்காத பக்தி பயனற்ற பக்தி என்றுதான் கூற வேண்டும்.

ஒருவனது ‘பக்தி’ சகுண பக்தியாக இருக்கும் பொழுது, அதாவது, உருவங்களை வழிபடுகின்ற பொழுது, அவனிடம் இறைவன் வேறு, நான் வேறு என்ற இருமைகளுடன் கூடிய ‘துவைத புத்தி’ என்பது இருக்கத்தான் செய்யும். 

அதே ‘பக்தி’ நாளடைவில் இறைவன் மட்டுமே இருக்கிறான் என்ற நிர்குண பக்தியாக (உருவமற்ற நிலை) மாறும் பொழுது, பக்தனுக்கும், பகவானுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து, அங்கு ஏகத்துவம் (ஒன்றே) உண்டாகி விடுகின்றது.

பக்தி மார்க்கத்தில் பக்தனும், பகவானும் என இருவரும் இருப்பது உண்மைதான். ஆனால், ஆழமான பக்தியின் வெளிப்பாடு, அந்த பக்தனையும், பகவானையும் உள்ளத்தால் ஒருங்கிணைத்து விடுகிறது. 

பகவானை சரணடைந்த பக்தன் ஒருபொழுதும் பகவானிடமிருந்து பிரிந்து, தனியாக இருக்க முடியாது.

உலகறிந்த அத்வைதிகளான சுகர், மதுசூதன சரஸ்வதி, சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மிகச் சிறந்த மகான்கள் மகத்தான பக்திமான்களாகத் திகழ்ந்தனர்.

அவ்வாறே, தற்பொழுது நம்மிடையே வாழ்ந்து வந்த மகான்களில் இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ரமண மஹரிஷி, வள்ளலார் மற்றும் பெரியவா என்கின்ற சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் போன்றவர்களும் பக்தியில் சற்றும் இளைத்தவர்கள் அல்ல. அதேசமயம் ஞானத்தில் மிக, உயர்ந்தநிலையில் உள்ளவர்களாகவும் இருந்தார்கள். 

அதுப்போன்றே, மறுபக்கம் தாயுமானவர், அருணகிரிநாதர், மணிவாசகப்பெருமான் போன்ற மிகச் சிறந்த பக்திமான்கள்கூட, இருமைகளற்ற ஒன்றேயான அத்வைதத்தை சிந்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு அதைப் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்கள்.

அத்வைதம் என்றால் ஒன்றைத்தவிர வேறு இல்லை என்பதுதான். 

அப்படியென்றால் யார் யாருக்கு உபதேசம் செய்வது? 

ஸர்வம் பிரம்மமே என்றிருக்கையில் உபதேசிப்பவர் யார்? உபதேசம் பெறுவது யார்? 

ஆகவே, ஞானமார்க்கத்தை உபதேசிப்பவர்கள் பக்தியைக்குறித்து பேசக்கூடாது என்பது போன்ற ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்கள் எல்லாமே, அவர்களது அறியாமையினால் உண்டாவதுதான் என்கிறார்கள் அந்த பரமசைதன்யத்தை தன்னில் தானாய் தன் உள்ளத்தில் உணர்ந்துக் கொண்ட உத்தமர்கள்.

மேலும், பகவத்கீதையை படிக்கும் பொழுதும் அல்லது யோகவாசிஷ்டத்தில் வசிஷ்டர் இராம பிரானுக்கு வழங்கும் உபதேசங்களை கேட்கும் பொழுதும், அவ்வாறே, பகவான் ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதூதகீதை, தாயுமானவரின் பக்தி பாடல்கள், அத்துடன் ஆதி சங்கரரின் விவேக சூடாமணி என எதைக்கற்றாலும், கேட்டாலும் இந்தப் படைப்புக்கள் எல்லாமே அந்த ஏக இறைவனை அறிவதற்குத் தடையாக உள்ள மனதின் ‘மாயை’ திரையைக் கிழித்து, அதற்குப் பின்னால் உள்ள அந்த உன்னத உத்தமனை உணர வைக்கின்ற உயர் ஞானப்பாதைக்கு அந்த சாதகனை அழைத்துச் சென்று, அவனுக்கு அத்வைத ஞானத்தை ஊட்டுகின்ற உன்னதமான படைப்புகள் என்றால் அது மிகையாகாது.

இதுபோன்ற படைப்புக்கள் அனைத்தும் ஒருவனை அறியாமையிலிருந்து விடுபட வைக்க மஹான்களின் கருணையினால் கிடைக்கப்பெற்றவைகள். அத்தகைய மஹான்கள் அனைவரும் அனுபவத்தின் கொடுமுடியை தொட்டவர்கள். 

ஆகவே, அவர்களது நேரடி அனுபவத்தின் வாயிலாகவே ஞானத்தை உபதேசிப்பவர்கள் என்பதினால், அவர்கள் பக்தி செய்து அடைந்த அனுபவங்கள் ஞானத்திற்கு பொருந்தாதவை என்று பேதமை புத்தியுடன் புலம்பிக் கொண்டிருப்பவர்களை எண்ணிப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.

நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் எனத் திட்டவட்டமாகப் பார்க்கப் பழக வேண்டும். 

அதற்கு வாழ்க்கைத் தத்துவம், அல்லது வாழ்க்கையின் நியதி என்ன? என்பதை அவசியம் ஆராய வேண்டும். 

அதை ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்தான் அது நமக்கு ஏற்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதினால், அவர்களது அரிய கருத்துக்கள் கொண்ட அள்ள, அள்ள குறையாத பொக்கிஷத்தை உங்களோடு பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். 

அந்த வகையிலே, தமது சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே சன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி, அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, சனாதன தர்மத்தை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டி, பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் மடங்களை ஸ்தாபித்து, நம்முடைய ஸனாதன தர்மத்தைக் காக்கும் பொறுப்பை அனைவரிடமும் தந்து, தனது 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்கள் அருளிய இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப் போன்ற மிகச்சுலபமாகப் பலரும் பின்பற்றக்கூடிய படிப்பனைக் கொண்ட சான்றிதழ் வேறு இருக்க முடியுமா? 

எனவே, நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் நம்மை எப்படி வாழ வைக்கும். அத்தகைய வாழ்க்கை என்பது என்ன?, அவ்வாறு வாழும் முறை யாது?, அதனால் நமக்கு நிகழும் பலன்கள் யாது?, என எல்லாவற்றையும் எளிய தத்துவங்களாக இந்த “பஜ கோவிந்தம்” என்ற காவியத்தில் எளிமைப்படுத்தித் தந்துள்ளார் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள். 

அதில் தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து, அவைகளை அயராது சரியாக நாம் நம் வாழ்க்கையில் பின் பற்றினோமானால், நம் வாழ்க்கை முறை மிகச்சீரும் சிறப்புமாக அமைந்து, அனைத்து மேன்மைகளும் பொருந்திய ஆற்றலும், அமைதியும் அமைந்து நம்மை ‘ஜீவன்முக்தன்’ என்ற உன்னத நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

2 Replies to “பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கை தத்துவம்”

  1. தமிழர்களுக்கும் வைதீக வேதத்திற்கும் தொடர்பே இல்லை, இந்திய ஞானமரபுக்கும் தமிழனுக்கும் தொடர்பே கிடையாது என்பது திராவிட கோஷ்டிகளின் புலம்பல் அதை இப்பொழுது அர்ச்சகர் விவகாரத்திலும் பாட ஆரம்பித்துவிட்டன‌

    உண்மையில் அவைகளுக்கு தமிழ் இலக்கியம் முழுக்க தெரியுமா என்றால் தெரியாது, அவர்களாக சில குறளை படித்து வள்ளுவன் இந்து இல்லை என்பது மீதி குறளை மறைப்பது

    அவர்களாக சில புறநானூற்று பாடலை சொல்வது மீதியினை மறைப்பது, அவர்களுக்கு தெரிந்த கவிஞன் பாரதிதாசன் எனும் புலவனும் அவனின் தமிழ்வெறி வரியும், மற்றபடி பாரதியும் தெரியாது சங்க புலவனும் தெரியாது

    அவ்வையார் தெரிந்தாலும் அவர் பாடிய முருகனையும் பிள்ளையாரையும் பார்த்து கண்ணை மூடுவார்கள், இளங்கோவினை பார்த்தாலும் அவன் சொன்ன இயக்கி, இந்திரவிழா எல்லாம் பார்த்து முகத்தை பொத்தி கொள்வார்கள்

    மூவேந்தர் என்பார்கள் மூவேந்தரும் இந்துக்கள் இந்து ஆலயம் கட்டினார்கள் என்பதை மறைப்பார்கள், பல்லவன் கலை என்பார்கள் அக்கலையில் கோவிலும் இந்துமத சிற்பங்களும் எழும்பின என்பதை சொல்லமாட்டார்கள், அவ்வளவு திருட்டுதனம்

    இதை தொடங்கி வைத்தவர் அண்ணாதுரை “தமிழன் எங்காவது வேள்வி செய்தானா?” என அறிஞர்களிடம் கேட்காமல் எங்கோ மாடுமேய்த்த பாமரனிடம் கேட்டு தன் பகுத்தறிவினை நிரூபித்தவர் அவர்

    தமிழர்கள் அந்தணர் எனும் பிராமணர்களை அவர்கள் குலத்தை அப்படியே ஆலய பணிக்கு நியமித்ததும் அதை செய்ய அவர்களுக்கு எவ்வளவோ விஷயங்களை தானம் செய்து வாழ வழி செய்வதும் சங்க பாடல்களில் இருக்கின்றன‌

    ஆலயத்தில் அவர்களை வேதம் ஓதி அர்ச்சனை செய்ய வழிசெய்த மூவேந்தர்கள், அவர்கள்

    தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.

    நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார்

    இந்த பதிற்றுபத்து சொல்லும் வரியினை பாருங்கள், சேரன் பார்ப்பனரை கேட்டு யாகம் செய்த காட்சியினை சொல்லும்.

    பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)

    பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74)

    பாண்டியருக்கும் இக்காட்சி உண்டு

    பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் என்பது வரலாறு

    சிலப்பதிகாரம் என்ன சொல்கின்றது?

    “”பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின்.”

    சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான்

    அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்

    அதியமான் வாழ்வு பற்றி புற நானூறு இப்படி சொல்கின்றது

    அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப்பெய்தினர் (புறம்.99)

    வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.

    சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.

    பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்

    தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.

    மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.

    பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.

    குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம் செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.

    சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்.

    இதோ சங்க கால புலவன் முதுகுடுமி பெருவழுதியி எழுதிய பாடல்

    “நல் பனுவல், நால் வேதத்து
    அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை
    நெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்
    வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
    யூபம் நட்ட வியன் களம் பல கொல்?”

    அதாவது “வேத‌ நூல் சொன்னபடி வேதவிதிப்படி நெய்யும் சமித்தும் பொரியும் இட்டு நீ செய்த புகழ்மிக்க போற்றற்கரிய பெரும் யாகங்களை செய்த யாகசாலையில் நீ நிறுத்தி வைத்த தூண்களின் தொகை அதிகமா? ”

    இதில் தூண்களின் எண்ணிக்கை அல்ல விஷயம், தமிழன் நெய்யிட்டு யாகம் செய்திருக்கின்றான் என்பதுதான் கவனிக்கதக்கது

    அடுத்தபாடல்

    “எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
    வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்
    அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்”

    இது கல்லணை கட்டிய கரிகாலனை பற்றி கருங்குழல் ஆதனார் பாடிய பாடல், பொருள் என்னவென்றால் “வட்ட வடிவமாக செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில்,கருட சயனம் என்கிற வேள்வித் தூணை நட்டு வேள்விகள் பல செய்து அறிவுடையாளனாக விளங்கிய வேந்தனே”

    ஆக கரிகாலன் வேள்வி செய்திருக்கின்றான், வேள்வி தூணை நட்டிருகின்றான்.

    அடுத்து ஒரு வாழ்வு தத்துவ பாடல்.

    “வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
    ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
    முத்தீப் புரையக் காண்தக இருந்த
    கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
    யான்அறி அளவையோ இதுவே”

    அதாவது, நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.

    ஆம் இங்கும் யாகம் பற்றி சொல்லபடுகின்றது

    மூவேந்தர் கூடிய இடத்தில் அவ்வையார் சொன்ன பாடல் இது.

    “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
    நான்மறை முதல்வர் சுற்ற மாக
    மன்ன ரேவல் செய்ய மன்னிய
    வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே ” – புறம் 26

    இதன் பொருள் தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு,
    நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை உடைய வேந்தனே.

    இதோ கோவூர் கிழார் எனும் புலவனின் வரிகள்

    “மறவர் மலிந்த தன்
    கேள்வி மலிந்த வேள்வி தூணத்து” – புறம் 400

    அதாவது போர் மறவர்கள் மிகுந்த படைக்கலத்தையும், கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன் என்று சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

    “கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
    அருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகை”
    – புறம் 362

    இதன் பொருள் பலநூல்களை படித்து வேள்வி செய்யும் அந்தணர்க்கு நீரைவார்த்து தானம் வழங்கும் பெருந்தகை.

    இன்னும் எவ்வளவோ உண்டு, ஆம் தமிழரின் இலக்கியமெல்லாம் அவன் அந்தணர்களை ஆதரித்த கதைகளும் அவர்கள் மன்னனுக்காக வேள்வி செய்த வரிகளும் எங்கும் நிறைந்திருக்கின்றன‌

    அது குறளில் உண்டு, புற நானூற்றில் உண்டு இன்னும் பல இடங்களில் உண்டு, அதை ஆதாரத்துடன் சொல்ல முடியும்
    இங்கு வேதம் கொண்டாடபட்டது அது ஒலிக்க ஒலிக்க தமிழகம் உச்சத்தில் இருந்தது அதன் பொற்காலத்தில் இருந்தது

    ஆம், ஆலயங்களிலும் யாகங்களிலும் அந்தணர்கள் வேதம் ஓத ஓத, அதை இம்மன்னர்கள் ஆதரிக்க ஆதரிக்கத்தான் இத்தமிழகம் வாழ்வாங்கு வாழ்ந்தது

    அதில் காலவோட்டத்தில் வஞ்சக கும்பல் கைவைத்தபின்பே சரிந்தது தமிழக பெருமையும் பாரம்பரியமும்.

    தமிழகம் எக்காலமும் அந்தணருக்கும் வேதங்களுக்கும் தனி மரியாதை கொடுத்த பூமி, அது தொடரத்தான் வேண்டும்

    தமிழக வரலாற்றில் கொடுங்காலம் 13ம் நூற்றாண்டில் ஆப்கானியர் திருவரங்கம் மதுரை உள்ளிட்ட ஆலயங்களை ஆக்கிரமித்திருந்த காலம்

    அந்நேரம் இன்றைய தமிழக அரசினைபோலத்தான் மிக கொடுமையான அறிவிப்புக்களையெல்லாம் சுல்தான் விட்டுகொண்டிருந்தார்

    பிராமணர் பூஜை செய்தால்தான் மழைவருமா, ஆப்கானியர் அந்த சிலையினை உடைத்தால் மழை வராதா என்ற எகத்தாளமெல்லாம் உண்டு

    கல்யானை செய்து வைத்த தமிழனுக்கு நிஜயானை தெரிந்திருந்தால் நம்மிடம் ஏன் தோற்பான் என்றெல்லாம் வார்த்தைகள் வந்தன‌

    இன்னும் ஏகபட்ட கொடுமைகள் உண்டு

    இந்துக்களையும் இந்து ஆலயங்களையும் அவர்கள் படுத்தியபாடு கொஞ்சமல்ல, உலகின் கண்ணீர் ரத்த வரலாற்றில் அதுவும் ஒன்று

    40 ஆண்டுக்கும் மேல் மதுரை ஆலயம் பாழ்பட்டு கிடந்தது

    அந்நேரம்தான் காஞ்சியில் இருந்த கம்பண்ண உடையார் எனும் நாயக்க மன்னனிடம் அன்னை மீனாட்சியே சென்று மதுரையினை மீட்க உத்தரவிட்டாள்

    மிக சிறுபடையுடன் அவன் சுல்தானை வென்று மதுரையினை மீட்டது இன்றுவரை ஆச்சரியம், அதன் பின் ஆகம விதிபடி பூஜைகள் நடக்க ஆலயம் செழித்தது

    ஆட்சியாளர் ஆயிரம் செய்யட்டும் ஆனால் தெய்வங்களுக்கு பொறுமை உண்டு, சரியான காலத்தில் சரியான ஆட்கள் மூலம் அவை தங்கள் ஆலயத்தை மீட்டெடுக்கும்

    காசி வரலாறு முதல் சமணம், புத்தம், ஆப்கானியர் வரலாறு என தமிழக ஆலய பக்கங்களில் எங்கு புரட்டினாலும் காணும் காட்சி இது இதற்கு எந்த அரசனும் அரசும் தப்பவே முடியாது

  2. கிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான்

    அந்த அடிமைகள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான்.
    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் அவன்.

    ஆடுமாடு மேய்ப்பவர்கள அறிவிலிகள் கீழாவனவர்கள் என சமூகம் ஒதுக்கிய அக்காலத்தில் அவர்களுக்காக அரசையே நிர்மாணம் செய்து வாழ்வாங்கு வாழவைத்தவன்

    ஆக பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே

    பூனூல் எல்லாம் போட்டதாக தகவல் இல்லை, அதனால் திராவிட போராளிகளுக்கும் அவனை கொண்டாடுவதில் சிக்கல் இல்லை.

    திராவிடம் என்றால் கடவுள் இல்லை என மட்டும்தான் சொல்லமுடியும் என்பது சுத்த பைத்தியகாரத்தனம்.
    தாழ்த்தபட்ட சாதிக்காக போராடிய போராளி எனும் வகையில் இந்த போராளிகள் எல்லாம் தாரளமாக கோகுலாஷ்டமி கொண்டாடலாம்.

    எந்த கட்சிக்காரனும், எந்த போராளியும் எதிர்க்கவே முடியாத அவதாரம் கண்ணன். அவரின் சிறப்பு அதுதான்.

    ஆஷ்துரை உள்ளிட்ட வெள்ளைகாரனுக்கு கொடி பிடிப்பவனெல்லாம், இன்னும் யார் யாரையெல்லாமோ போராளி, அடிதட்டு மக்களை உயர்த்த வந்தவன் என புலம்பும் கோஷ்டிகளெல்லாம் பாரத மரபின் அதி உன்னத சமூக போராளி பிறந்த நாளில் கள்ள அமைதி காக்கின்றார்கள் அல்லவா?

    இதுதான் வெள்ளையனும் அவன் அடிபொடி மிஷினரிகளும் சொல்லிகொடுத்த “சமூக நீதி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *