வாழ்க்கையானது அறிவின் வளர்ச்சியில் தொடர்ந்து பயணிக்கிறது. கிடைத்த அறிவை நம்பிக்கையாக்கி நாம் பயணத்தைத் தொடருகிறோம். இந்த நம்பிக்கைகள் நமது அறிவின் வேறு வடிவங்கள் மட்டுமே. பயணத்தின் பல கட்டங்களில் நாம் சுமந்து செல்லும் பல நம்பிக்கைகள் ஏற்கப்படுவதும், மறுக்கப்படுவதும் நடக்கின்றன. இதற்கிடையில் நமது நம்பிக்கைகளைக் காப்பாற்றிக்கொள்வது பல நேரங்களில் நமது பயணத்தைப் பலனுள்ளதாக்குகிறது. பல நேரங்களில் பயணத்தையே நாசம் செய்துவிடுகிறது. பயணம் அழிந்த பின் பயணி ஏது?
இந்தப் பயணத்தைக் கட்டிக் காக்க அமைப்புகளை உருவாக்கிக்கொள்ளுகிறோம். இந்த அமைப்புகளும் நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அவை பயணத்திற்குப் பலம் அளிப்பதைத் தாண்டி, தங்களை தற்காத்துக்கொள்ளவும், பயம்-எதிர்பார்ப்பு எனும் இரட்டைக் குழிகளுக்குள் குதிரையோட்டம் செய்யும்போது, அடக்குமுறையும் சுதந்திரமின்மையும் உருவாகின்றன.
இந்த நிலை அனைத்து தத்துவங்களுக்கும், கொள்கைகளுக்கும், ஏன் மதங்களுக்கும்கூடப் பொருந்தும். இந்த துர்பாக்கியம் நிகழும் அதே காலங்களிலேயே, அடக்குமுறை-சுதந்திரமற்ற தன்மைக்கு முரணாக திறந்த மன நிலையோடு உரையாடலை நிகழ்த்துகிற, சுதந்திரத்தை அச்சாகக் கொண்டிருக்கிற தத்துவங்களும், கொள்கைகளும், மதங்களும் இயக்கத்தைத் தொடருகின்றன. இந்த எதிர் எதிர் முரண்களால் வாழ்க்கையே நிகழ்கிறது. எதிரான இந்த முரண்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை ஏது? பயணம் ஏது?
ஆனால், அந்த முரண்கள் நமது வாழ்க்கையை அலைக்கழிக்கும்போது, அவற்றைத் தீர்க்க நாம் துடிக்கும்போது, நாம் இந்த எதிரெதிர் முரண்களில் ஏதேனும் ஒன்றின் பக்கம் சாய்வோமெனில், அந்த சக்திக்குப் பலத்தை அதிகரித்து மற்றொரு சக்திக்குப் பலவீனத்தைத் தந்துவிடுகிறோம். முரண்பட்ட சக்திகளால் தொடர்ந்து ஓடும் வாழ்க்கைச் சக்கரம் அந்த சக்திகளில் சமநிலை பாதிக்கப்படும்போது எதிரெதிர் திசையில் ஓடும் சுழற்காற்றில் அகப்பட்ட தோணியாக சின்னாபின்னமாகிறது. எனவே, இந்த முரண்களைச் சரி செய்ய நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அவற்றைச் சரி செய்ய, சமநிலை உருவாக்க, நமது வாழ்க்கைச் சக்கரத்தைச் சீராய் செலுத்த இந்த முரண்களைக் குறித்த புரிதல் உதவுகிறது. புரிதலால் அறிவுக்களஞ்சியம் பூரணமாகிறது. முரண்பாடுகளின் சீர்குலைவால் தற்காலத்தில் அழிந்துகொண்டிருக்கிற இந்த அறிவுக்களஞ்சியத்தில், எஞ்சி இருக்கும் இந்த அறிவு இப்போது இந்து மதம் என்று அறியப்படுகிறது.
முழுமையாக தன்னைத் திறந்துவைத்துக்கொண்டு, அறிவின்மூலமும், மெய்யுணர்வின் மூலமும் சமநிலையைக் கொணர ஞானமடைந்த ஒவ்வொரு இந்துவும் முயல்கிறான். நடைமுறையில் அவனுக்கு மாற்று மதங்கள் என்ற ஒன்றே பிடிபடுவதில்லை. அதனால்தான் இஸ்லாமியராக ஒரு மசூதியில் வாழ்ந்த ஷீரடி பாபாவை தெய்வமெனப் போற்றுகிறான். அகப்பயணத்தினால் ஞானத்தைப் பெற்ற அஸிஸி நகரைச் சேர்ந்த ஃப்ரான்ஸிஸ்மீதும் அவனுக்கு அன்பு பீறிடுகிறது. தனது கோயிலுக்கு சமமான புனிதத்தை தர்க்காக்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் பெற்றுள்ளன எனப் புரிந்துகொண்டு அவற்றையும் அவன் புனிதத் தலங்களாகவே மதிக்கிறான். ஏனெனில், எங்கும் நிறைந்திருக்கும் உண்மை பூமியிலும் இருக்கிறது. எனவே, பூமாதேவியும் அவனுக்குக் கடவுள்தான். பூமியில் எழும் வழிபடு தலங்களும் கடவுள்தான். அனைத்துமே இறை எனும்போது இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ளுவதால் முரண்பாடுகள் தீர்ந்துபோய்விடும் என நம்புகிறான்.
அவனைப் பொருத்தவரை, முரண்கள் என்பன மோதி அழிப்பதால் மட்டுமே தீர்க்கப்படுபவை அல்ல, மாறாக மோதி அழிப்பது தொடர்ந்து தீராப்பகையையே வளர்க்கிறது. அதற்குப் பதிலாக காருண்யம் சகஜ பாவத்தை உருவாக்கி ஒத்துழைப்பை சாத்தியமாக்குகிறது. எனவே, தங்களது கடவுளைத் தவிர வேறு கடவுள் எதுவும் இல்லை, தங்களது புனித நூலைத் தவிர வேறு எதுவும் உண்மையைச் சொல்லுவது இல்லை, தங்களது நபியைத் தவிர வேறு யாரும் சிறந்த உண்மையைச் சொல்லிவிடமுடியாது என்று சொல்லி வன்முறையையும், அடக்குமுறையையும் வாழ்க்கையாகக் கொண்டிருக்கிற ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும், அவனுக்கு அன்பர்கள் கிடைக்கிறார்கள். இந்த சனாதன தர்மத்தை அழித்துவிடத் துடித்தவர்களிடையேயும்கூட உரையாடலின் மூலமும், சிரத்தையான செயல்களின் மூலமும் மனிதம் மலருகிறது.
இலங்கையில் தேராவாத பௌத்தம் இனவெறியாக மாறித் தமிழர்களைக் கொன்றுபோடுகிறது. ஆனால், அங்கிருக்கும் ஒரு துறவியை இந்துமதம் அன்பினால் கவருகிறது. இலங்கையிலிருந்து ஒரு புத்த பிக்கு இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்தார். மாதா அம்ருதானந்த மயியைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை சந்திக்க விரும்பி அவரது ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தார். அந்த சமயம் இலங்கையில் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு உதவ சென்றிருந்தார் அம்மா. திரும்பி வந்ததும் அவரது ஆஸ்ரம உறுப்பினர்கள் அம்மாவின் சேவையை படம்பிடித்து வந்திருந்தனர். சேவையினால் பலன் பெற்றவர்களில் சிங்கள மொழி பேசியவர்களும் இருந்தனர். அதை மொழிபெயர்க்க ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த புத்த பிக்குவிடம் வேண்டினர். அவரும் ஒப்புக்கொண்டார்.
அதில் 2005ம் ஆண்டு அம்மா இலங்கையில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இருந்த சிங்களவர்களையும், விடுதலைப்புலிகளையும்கூட சந்தித்து தனது அன்பையும், ஆசிகளையும் வழங்கிய தகவல் இருந்தது. ஆழிப்பேரலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுதல் இயலவே இயலாது என்ற நிலையில் இருந்த இடங்களுக்குக்கூடச் சென்று அனைவரையும் அரவனைத்து ஆசிகள் அளித்து தேவையான உதவிகளை வழங்கினார், அம்மா.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு துறவி பக்கத்து நாடான இலங்கையில் வாழும் மக்களின் துயரம் துடைக்கச் சென்றதைப் பார்த்த தேராவாதத் துறவிக்குக் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. ஊருக்குச் செல்லுமுன் மீண்டும் ஒரு முறை அம்மாவின் தரிசனம் பெற்றார்.
அவர் கூறியதாவது:
“நான் சார்ந்துள்ள பவுத்த மத வழக்கப்படி பிற பெண்டிரைத் தொடுதல் கூடாது. ஆனால் அம்மாவின் தரிசனத்திற்காக ஒரு நோயாளி மருத்துவரை அணுகும் முறையில்தான் அம்மாவின் தரிசனமும், ஆசியும் பெற்று அம்மா ஒரு உயர்ந்த துறவி என்பதையும் அறிந்தேன்.
“அம்மாவை சந்திக்கும் முன்னர் பிறரைத் தொடாத, மக்களிடமிருந்து விலகிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன். இப்போது உலகத்தாருடன் கலந்து அவர்களுக்காக வாழும் தியாக வாழ்க்கையை மேற்கொள்ளப்போகிறேன்” எனக் கூறிச் சென்றார்.
பவுத்த தேரவாத இன கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு பவுத்த பிக்குவின் மனதையே மாற்றிவிட்டது அம்மாவின் அன்பு என்றால் அது மிகை இல்லை.
அன்பைப் போதிக்கும், அகிம்சையை உயர்தர்மமாக முன்வைக்கும் பௌத்த தர்மத்தைச் சேர்ந்தவர் ஒருவருக்கு, இந்து தர்மத்தின்மீது அன்பு ஏற்படுவது ஆச்சரியம் இல்லை. ஆனால், தனது மதத்தைத் தவிர மற்றவை திருத்தப்படவேண்டியவை அல்லது அழிக்கப்படவேண்டியவை என்று சொல்லும் இஸ்லாமிய, கம்யூனிஸ, கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களையும்கூட ஹிந்து தர்மத்தின் ஞானம் கவருகிறது. திருத்துகிறது. உயர்த்துகிறது.
இங்கனம் இந்து தர்மத்தால் கவரப்பெற்ற கிருத்துவ கன்னியாஸ்த்ரீ ஒருவர் மாதா அம்ருதானந்த மயியுடனான தனது அனுபவங்களைச் சொல்லி, அவை மாத்ருவாணி இதழில் (My Date with a Guru by Joanne Marrow, USA. Published in: Matruvani, February 2009, Vol:20-No.6:) வெளிவந்தன. அந்த அனுபவங்களையும் இங்கே அப்படியே தருகிறோம்.
“குழந்தையாக மூன்று வயதிலேயே தியானம் செய்தது எனது நினைவுக்கு வருகிறது. என் தந்தையின் பச்சை நிற மெத்தை நாற்காலியில் சும்மா உட்கார்ந்திருந்தேன். ‘வெட்டியாக இல்லாமல், போய் விளையாடு’ என்றார் என் தாயார். நான் வெட்டியாக இல்லை, ஏதோ செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை அவரிடம் விளக்க என்னிடம் அப்போது வார்த்தைகள் இல்லை.
பக்தியமனான கத்தோலிக்கப் பெண்ணாக வளர்ந்த நான், தினமும் சர்ச்சுக்குச் சென்று பிரார்த்தனை செய்வேன். சர்ச்சினுடைய சிறுவர் பாடகர் குழு உறுப்பினராகத் திருமணங்களிலும், ஈமச்சடங்குகளிலும் பாடியிருக்கிறேன். ஈமச் சடங்குகளுக்கான க்ரிகேரியன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த சிறு பிராயத்தில், பாதிரியார்களும், கன்னியாஸ்த்ரீகளுமே முழுமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. முழுமையான வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விரும்பாது, மேரிக்னோல் மிஷனரி ஸிஸ்டர்ஸ் (Maryknoll Missionary Sisters)ல் சேர்ந்தபோது எனக்கு 19 வயது. டான்ஸானியா நாட்டில் ஒரு மதப்பிரச்சாரகராக வாழ்வதே எனது நோக்கமாக அப்போது இருந்தது.
அந்தக் கன்னியாஸ்ரமத்தில் தியானம் செய்வதைக் கற்றேன். ஒரு கன்யாஸ்த்ரீயாக எனது வாழ்க்கை இறையியல் கல்வியிலும், பிரார்த்தனையிலும், மடத்தின் அன்றாட வேலைகளைச் செய்வதிலும் கழிந்தது. நாங்கள் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். ஒரு நாளில் ஒரே ஒரு மணிநேரம் மட்டுமே பேச நாங்கள் அப்போது அனுமதிக்கப்பட்டோம். வெளியுலகத்தோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. தொலைக்காட்சி கிடையாது. வானொலி கிடையாது. செய்தித்தாள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. 1964ல் இருந்து 1966வரை.
மதப்பிரச்சாரகர்களாகப் பல வெளிநாடுகளுக்கு நாங்கள் செல்லவேண்டும் என்பதால் பல நாட்டுக் கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கப்பட்டோம். உலகிலுள்ள மதங்களைக் குறித்து எங்களது நூலகத்தில் பல புத்தகக் கட்டுகள் இருந்தன. கடுமையான சட்டங்கள் எப்போதாவது தளர்த்தப்படுமாயின், தூங்கப் போவதற்குப் பதிலாக இரவில் நெடுநேரம் படித்துக்கொண்டிருந்தேன். அந்த படிப்பினால் ஹிந்து மதத்தின் மீது எனக்கு ஒரு ரகசிய ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த மதத்தில் பலவிதமான ஆண் பெண் தெய்வங்கள் வழிபடப்பட்டனர். அது என்னைக் கவர்ந்தது. நமக்குப் பிடித்தமான ஒன்றில் லயித்து, அதனோடு ஒரு உறவை வளர்க்கும் ஆர்வமானது அடிப்படையான மனித இயல்பு. என்னைக் கவர்ந்தாள் காளி.
மண்டையோட்டு மாலையணிந்து, பெரிய நாக்கை துருத்திக்கொண்டு இருக்கும் அவள் உக்கிரமான குணமுடையவள். தன்னுடைய பல கைகளில், ஒரு கையில் வாளையும், மறுகையில் வெட்டியெடுக்கப்பட்ட மனிதத் தலையையும் வைத்திருந்தாள். அதுவரை நான் அறிந்த மந்தமான பெண் தெய்வங்களிடமிருந்து அவள் முற்றிலும் வேறுபட்டுத் தெரிந்தாள். எனக்குள்ளும் இருக்கும் இந்த வலிமையான பெண்மையின் சாராம்சத்தை அறிந்துகொள்ளவும், அதைக் கண்டு அச்சமில்லாதிருக்கவும் விரும்பினேன். எனக்குள் இருக்கும் இந்த உக்கிரமான வலிமையின் அடையாளத்தோடு நட்பு கொள்ள விரும்பினேன்.
21ம் வயதில் கன்னியாஸ்ரமத்தில் இருந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. எங்களையெல்லாம் கவனித்துக்கொண்டவர் அப்போது என்னிடம், ‘ஆன்மீக வாழ்க்கையை வாழ உனக்கு மடம் என்ற அமைப்புத் தேவையில்லை’ என்றார். அதன் பின்னால் கழிந்த 40 வருடங்களில், உளவியலில் ஒரு பி.எச்.டி பட்டம் பெற்றேன். பௌத்தம், சனாதன தர்மம், பெண்ணியல் ஆன்மிகம், இயற்கை சார்ந்த ஆன்மிகம், மாறுபட்ட மன ப்ரக்ஞைகள் குறித்த அனுபவங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தேன். தியானம், யோகா, தாய்ச்-சி போன்றவற்றை தினமும் பயின்றேன். பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், உளவியல் ஆலோசகராகவும் இவற்றை நான் கற்பித்தும் வந்தேன். கிருத்துவ மதத்தை முற்றிலும் கைகழுவினேன்.
ஒரு மாணவியால் அவ்வளவு தூரம்தான் போகமுடியும், குரு இல்லாவிட்டால். உளவியலிலும், ஆன்மிக ஆய்வுகளிலும் நிபுணியான எனக்கு அந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் பல சக அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர்களில் எவரும் குருவாகவோ, முக்திபெற்றவராகவோ தெரியவில்லை. ஆசியாவைச் சேர்ந்த பல குருமார்கள் வடக்குக் கலிஃபோர்னியா வழியாகச் செல்லும்போது, அவர்களுடைய சத்சங்கத்தை நாடினேன். வெறும் சராசரி மனிதர்களாகத் தெரிந்த அவர்கள் என்னைக் கவரவில்லை. அவர்களில் சிலர் தங்களுடைய பெண் சீடர்களைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் என்று பின்னால் கேள்விப்பட்டேன். இந்த அனுபவங்கள் ஆன்மிகப் பாதையானது தனியாகச் செல்லவேண்டிய, தனியாகப் பயிலவேண்டிய ஒன்று என்ற எண்ணத்தை என் மனத்தில் உறுதி செய்தன. இருப்பினும், ஒரு குரு இருந்தால்… ஒருவேளை…?
அந்த எண்ணமும் இருந்தது. அப்போதுதான் ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது, ‘தேவியின் மகள்கள்: இந்தியப் பெண் புனிதர்கள்’ (Daughters of the Godess: the Women Saints of India. Linda Johnson, 1994). இந்தியாவைச் சேர்ந்த ஆறு ஆன்மிக ஆசிரியைகளைப் பற்றியது அந்த நூல். ‘இவர்களில் ஒருவரை குருவாக நான் தேர்ந்தெடுத்தால், அது யாராக இருக்கக்கூடும்?’ என்று என்னை நான் கேட்டுக்கொண்டேன். அம்மாவையே என் மனம் தேர்ந்தது. ஆனந்தமும், அன்பும் அடிப்படையான உண்மைகள் என்று அவர் சொல்லுவது என்னுடைய இயல்பின் ஆழத்தைத் தொட்டிருக்கக்கூடும். இருப்பினும், நான் அந்த ஆர்வத்தைத் தொடரவில்லை. இத்தனைக்கும் அந்தப் புத்தகத்திலேயே ஸான் ராமோன் (San Ramon) ஆசிரமத்தின் முகவரி இருந்தது.
ஜூன் 1997ல் என்னுடைய தோழி ஒருவர் என்னிடம் கேட்டார், “ஒரு அருமையான பெண்மணியால் தழுவப்படுவது குறித்து என்ன நினைக்கிறாய்?”
சிரித்தேன். நல்ல யோசனைதான் என்றேன். அவர் அப்போது என்னிடம் உறுதியான குரலில் சொன்னார், “உனக்குத் தெரியுமா, அந்த அருமையான பெண்மணி காளிதான்.”
அடுத்த நிமிடமே அந்தத் தோழியின் காரில் இருந்தேன். ஸான் ராமோனில் உள்ள அம்மாவின் ஆசிரமத்திற்கு அந்தத் தோழியும், மேலும் சில நண்பர்களுடனும் பயணித்தோம். அந்தக் குழுவில் இருந்த ஒரு ஜோடி அம்மாவுடைய தேவி பாவத்தின் இறுதியில் அவரது ஆசிகளோடு திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். மதிய வேளையில் போய்ச் சேர்ந்த நாங்கள், ஆசிரமத்துத் தோட்டத்தில் உலாவினோம். அங்கே மென்மையான கோதுமை நிற குன்றுகளால் சூழப்பட்ட பெரிய குளக்கரையில் ஓய்வெடுத்தோம். இளஞ்சிவப்பு அல்லி மலர்களின் ஊடே நிகழ்ந்த அன்னங்களின் நீச்சல் கண்ணைக் கவர்ந்தது. தரிசனச் சீட்டு பெறுவதற்கான சனத்திரள் வரிசையில் கலந்துகொள்ளும் நேரம் விரைவில் வந்தது.
கோயிலுக்குள் நுழைந்தோம். அங்கே உட்கார நாற்காலிகள் எதுவும் இல்லை. நான்கு அடுக்குகளாகத் தரையில் வைக்கப்பட்டிருந்த அழகானப் பித்தளைப் பாத்திரங்களில் சாம்பிராணி மணம் எழுந்தது. விரைவிலேயே அந்த மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அவர்கள் எனக்குப் புரியாத ஒரு திருப்பாடலைப் பாடினார்கள். சாம்பிராணிப் புகையைவிட மக்களின் எதிர்பார்ப்பு காற்றில் அதிகமாய் பரவியது.
அங்கே இருந்தவர்கள் பலதரப்பட்டவர்கள். பல இனங்களும், பல வயதினரும் அங்கே குழுமியிருந்தனர். பலர் வெள்ளை நிற சட்டைகளும், சேலைகளும், கால்சட்டைகளும் அணிந்திருந்தனர். பலர் முறைப்படியான ஆடைகளும், பலர் சாதாரணமான ஆடைகளும் அணிந்திருந்தனர். திடீரென்று ஒரு அமைதி. அம்மா. பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்த அம்மாவை வைதீக முறையில் வரவேற்றனர். அவரை நான் கண்டேன்: அதிக உயரமில்லாத, கருத்த, பிரகாசமான அந்தப் பெண் ஒளிமயமான சிரிப்போடு மண்டபத்தின் முன் நடந்து வந்தார். ஒரு குழந்தை மகிழ்ச்சியோடு கூவியது: “அம்மா, மம்மா !”.
எல்லாரும் சிரித்தனர். அவர்களுடைய உணர்வுகளையே அந்தக் குழவியின் மழலை அழைப்பும் வெளிப்படுத்தியது போலும். பாதையின் மருங்கில் இருந்தவர்கள் நீட்டிய கரங்களைத் தொட்டவாறே அம்மா முன்பக்கம் சென்றார். ஒரு சமயச் சடங்கிற்குப் பின்னால், தியானம். அதன் பின் அம்மா பேசியதை ஒரு துறவி மொழிபெயர்த்தார். தியானம் செய்யவேண்டும் என்று எங்களை வலியுறுத்திய அம்மா, “நீங்கள் எல்லாரும் சிம்னி விளக்கின் உள்ளே இருக்கும் தீபங்கள். சிம்னி விளக்கின் கண்ணாடியில் கொஞ்சம் கொஞ்சமாக புகைக் கரி பட்டு பட்டு, தீபம் தெரியாத அளவு கருத்துவிடுகிறது. கறைபட்ட மேற்பரப்பைச் சுத்தம் செய்ய தியானம் ஒரு வழி” என்றார். அது எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகத் தெரிந்தது.
அடுத்து எங்கள் உடலினுள் உள்ள நுணுக்கமான சக்தி அமைப்புகள் தூய்மை பெறுவதற்காக, எங்கள் உடலைச் சுற்றி தீபாரதனை செய்தோம். அம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட தீர்த்தம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அம்மா அந்த அறையில் இருந்து அகன்றார். நாற்காலிகள் போடப்பட்டு, அம்மா பட்டாடை அணிந்த உருவோடு தரிசனம் தரப்போகிறார். தரிசனச் சீட்டில் உள்ள எண்ணின் அடிப்படையில் வரிசையானது ஒழுங்கு செய்யப்படும். நாங்களும் வெளியே வந்தோம்.
அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறும்போது அனுபவித்தறியாத அமைதியையும், உள்ளார்ந்த நிலையையும் உணர்ந்தேன். அந்த சுகமான சூழல் எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு சிறிய கிராமம் போல இருந்தது. பழகிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் முகமன் செய்தனர், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன, எங்கும் மகிழ்ச்சி குறித்த ஒரு புரிதல் நிலவியது. இங்கே எல்லாரும் கொண்டாட்டத்தோடு இருந்தார்கள். சுகமான தளர் நிலையில் திரிந்தார்கள். கத்தோலிக்க சர்ச்சில் இருப்பதைப் போன்ற வழக்கமாக்கப்பட்ட இறுக்கமோ, விறைப்பான அமைதியோ இங்கே இல்லை. எங்களுடைய சிறிய குழு திறந்த வெளியில் நடந்துபோய் உணவுச் சாலையை அடைந்தது. இந்திய உணவுகளை ரசித்து உண்டோம். அட்டகாசமான தேநீர்.
கோயிலுக்குத் திரும்பியபோது, மேடையின் மீது செம்மையும் தங்க நிறமும் கொண்ட பட்டாடையணிந்து, கிரீடத்துடன் அம்மா ஒரு நாற்காலியில் வீற்றிருந்தார். தரிசனத்திற்காகச் சென்றவர்கள் அம்மாவினை வணங்கினர். அன்போடு அணைக்கப்பட்டார்கள். குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக அணைத்துக்கொண்டார் அம்மா. அங்கிருந்து எழுந்து செல்ல திரும்புபவர்கள் முகத்தில் திருப்தியான ஒரு புன்னகை இருந்தது. சிலர் தியான உணர்வுடன் இருந்தனர். சிலர் லேசாக விசும்பி அழுதனர். தரிசன வரிசையில் இல்லாதவர்கள் தியானம் செய்துகொண்டோ, பாட்டுப் பாடிக்கொண்டோ, அல்லது தங்களுக்குள் அமைதியாக உரையாடிக்கொண்டோ இருந்தனர். ஒரு பெரிய குழு இந்திய கீதங்களைப் பாடிக்கொண்டிருந்தது. ஒரு முழுமையான இசைக்குழு தபலா, ஆர்மோனியம், ஜால்ரா உள்ளிட்ட இசைக்கருவிகளோடு அந்த பஜனையில் ஈடுபட்டது. வேறு ஒரு பக்கத்தில் அம்மாவினை நினைவூட்டும் பொருட்கள், மாலைகள், புத்தகங்கள், கேசட்டுகள், ஊதுபத்திகள் போன்ற பூஜைப் பொருட்களை விநியோகிக்கும் கடை இருந்தது.
அப்போது இரவு மணி 11. என்னுடைய தரிசனச் சீட்டு எண் மிகப் பெரியது. நான் அமைதியாக அந்த சூழலைப் பருகிக்கொண்டிருந்தேன். அம்மாவின் சில படங்களை வாங்கினேன். அவற்றில் ஒரு கிளிக்கு அம்மா உணவூட்டும் படமும் இருந்தது (முன்பொருமுறை என்னிடம் ஒரு கிளி வளர்ந்தது). வெளியே மெதுவாக நடந்து போய் நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியாக இரவு 2.30 மணிக்கு எனது முறை வந்தது. குளிர்ச்சியான அந்த இரவில் என்முறை வந்தபோது ஒரு கதகதப்பான அணைப்பைத் தவிர வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. அம்மாவின் மார்பில் தலை சாய்த்தபோது, அம்மா கிசுகிசுப்பாய் சொன்னார்:“மகளே, மகளே, என் மகளே.”
ஒரு அதிர்வு உடலெங்கும் ஓடியது. வார்த்தையில்லாத ஆனந்தம். எனது சுயமும், தன்னுணர்வும் கரைந்தன. புனிதமும், களியுவகையும், அமைதியும். இதை அனுபவிக்கும்போதே, அனுபவிப்பவர் இல்லாத நிலை. எனது அடையாளங்களே அங்கு இல்லை. என் உண்மையான இயல்போடு முற்றிலும் ஒன்றியிருந்தேன். என்னை மென்மையாக விலக்கிய அம்மா, என் கண்களை ஆழமாய் பார்த்தார். அவரது பார்வை, “இப்போது உனக்கே தெரிந்தது” என்றது. பிரமிப்போடு மலைத்திருந்தேன். யாரோ ஒருவர் என்னை அங்கேயிருந்த ஒரு நாற்காலிக்கு இட்டுச் சென்றார். ஏறத்தாழ 45 நிமிடங்கள் அந்த உணர்வு அகலாது நான் அப்படியே அமர்ந்திருந்தேன். என்னைச் சுற்றிப் பொங்கும் சுறுசுறுப்பு குறித்து சட்டை செய்யாது அமர்ந்திருந்தேன். மெதுவாக எண்ணங்கள் என் மனத்தில் மீண்டும் எழ ஆரம்பித்தன. எனது சுயம் மீண்டெழுவதைக் கவனித்தேன். வழக்கமான ப்ரக்ஞை நிலைக்கு நான் மீள்வதைக் கண்டேன். அந்த உயர்வான மனநிலை மறைந்து போவதற்குள் அதை பிடித்துக்கொண்டுவிட துடித்தேன்.
“இந்தப் பெண்மணி என்னை என்ன செய்துவிட்டாள்?”
இவர் அசாதாரணமானவர்.
இவர் முக்தி பெற்றவர்.
என்னை மேலும் உற்று கவனித்தபோது, ஒரு சூறாவளியாய் எனது சக்தி மையங்களூடே சீறிப் பறந்து, கர்மவினைகளைச் சிதறச் செய்திருக்கிறார் அம்மா எனப் புரிந்துகொண்டேன். எனது மன-உடல் அமைப்பு ஒரு ஒழுங்கிற்குச் சமன் செய்யப்பட்டுச் செயல்பட்டது. அங்கேயே இருந்து தியானித்தவாறே, தூக்கச் சோர்வோடு இருந்தேன். அதுவரை ஏறத்தாழ 20 மணி நேரங்கள் தூங்காமல் இருந்ததால், இப்போது தூக்கம் கண்ணைச் சுழற்றியது. அங்கே இருந்த பால்கனிக்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளோடு தரையில் படுத்துத் தூங்கிவிட்டேன்.
காலை 4.30 மணிக்கு மகிழ்ச்சி பொங்கும் சுறுசுறுப்புடன் அம்மாவை வலம் வந்த மனிதத் திரள் என்னை எழுப்பியது. கலகலவென்று சிரித்துக்கொண்டும், ரோஜா இதழ்களை அவர்கள்மேல் விளையாட்டுப்போலத் தூவியவாறும் அம்மா இருந்தார். எங்களது கார் போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த அதிகாலைச் சாலையில் 450 மைல்கள் பயணித்து, க்ராஸ் வேலி (Grass Valley)யை வந்தடைந்தது.
ஒரு மாதம் கழித்து அந்த கிராமத்தில் என் புதிய வீட்டிற்குக் குடிபுகுந்தேன். வீட்டை அலங்காரம் செய்து முடித்த பின்னர் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அம்மாவின் படத்தை நான் வைத்திருப்பதைக் கவனித்தேன். எப்போதும் கையில் ஏந்திச் செல்லும் சாவிக் கொத்திலும் அம்மாவின் படம். அன்றிலிருந்து ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் அம்மா வருகை தரும்போதெல்லாம் நானும் தரிசனம் நாடினேன். ஆனால், அவை எனது முதல் அனுபவம் போல ஆழமானதாக இல்லை. என்னுடைய சக்தி அமைப்புக்களில் சில சமன்பாடுகளை உருவாக்கி, என்னைச் அம்மா சரிசெய்துவருகிறார் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால், நேரடியான தரிசனங்களில் நான் இதுவரை அம்மாவுடன் உரையாடியதே இல்லை. தரிசனங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவரது உடலைத் தீண்டியதில்லை. அவரைக் காண வருகிற பக்தகோடிகளின் திரளில் நானும் ஒருத்தி. அவ்வளவுதான். அப்படியே சென்று கொண்டிருந்த என் வாழ்வில் 2002ம் ஆண்டின் ஒரு இலையுதிர்க்காலத்தில் எனது சிறுநீரகத்தை புற்றுநோய் ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது.
மூன்றாம் நிலையில் இருந்த அந்த புற்றுநோயால் என்னுடைய ஒரு சிறுநீரகம் 6.5 பவுண்டு எடையுள்ளதாக மாறியிருந்தது. நான் மோசமான நிலையில் இருந்தேன். எட்டு மணி நேர அறுவை சிகிச்சையினைத் தாண்டி வாழும் வாய்ப்பு குறைவு என்று சொன்னார்கள். ஆனால், எனது கனவில் அம்மா தோன்றி, எல்லாம் சரியாகிவிடும் என்றார். அறுவை சிகிச்சையின்போது எனது இதயம் நின்றுவிட்டது. ஒரு வெள்ளை நிறச் சுரங்கப் பாதையினுள் இழுக்கப்படுவதுபோல ஒரு தோற்றம். ஒருவிதமான விழிப்பு நிலை ஏற்பட்டது. அந்த வெள்ளைக் குழற்பாதையின் முடிவில் என் இறந்துபோன தந்தையைக் கண்டேன். அவரோடு சேரப்போவதற்கு முன்பாக நின்றுவிட்டேன். அந்த அறுவை சிகிச்சையின் பின்னால் பல நாட்கள் மிகுந்த துன்பத்திற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடையத் தொடங்கினேன்.
ஜூலை 2004ம் ஆண்டு, அம்மாவின் பயணம் சிகாகோவின் புறநகர்களிலும் தொட்டது. அங்கே வாழ்ந்துவந்த எனது சகோதரி அம்மாவின் ஆசிகளை அனுபவிக்கவேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். வீட்டிலிருந்து ஐந்து நிமிடப் பயணத்திலேயே அம்மா தங்கி இருக்கும் விடுதி இருந்தது தெரியவந்தது. சிகாகோவிற்குப் பறந்து சென்ற நான் எனது சகோதரியை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றேன். அன்று அதிகாலைக் கனவில் தோன்றிய அம்மா, “இந்தக் கூட்டத்தில் இருந்து விலகி இங்கே வந்து, குளித்து, கொஞ்சம் ஓய்வெடுக்க ஆசைப்படுகிறேன்” என்றார். நான் கண்விழித்தபோது எனது சகோதரி தன்வீட்டு குளியல் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தார். என்னைப் பார்த்து, “வேறொன்றுமில்லை. திடீரென்று எனக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் வந்தது. இப்போது அம்மா இங்கே வந்து குளிக்க வேண்டும் என்று சொன்னால்…?” என்றார். அன்று மாலையிலும், நாங்கள் இருவரும் அம்மாவின் தரிசனத்தைப் பெற்றோம்.
1997ம் ஆண்டு எனக்குக் கிட்டிய அந்த முதல் அனுபவத்தில் இருந்து, அம்மா என்னுடன் இருப்பதை உணர்கிறேன். புன்னகை சிந்தும் அவரது முகம் எனது வீட்டின் ஒவ்வொரு அறையிலிருந்தும் என்னைப் பார்க்கிறது. தியானிக்கும்போதும், ஜபம் செய்யும்போதும், நான் அம்மாவின் சமீபத்தில் இருப்பதாகக் கற்பிதம் செய்துகொள்கிறேன். இப்போது எனக்கு இருப்பது நான்காம் நிலை சிறுநீரகப் புற்றுநோய். இதைச் சரி செய்ய எந்த வைத்தியமும் கிடையாது. குத்துமதிப்பான மருந்துகளால் சரி செய்யும் முயற்சிகள் நடந்துவருகின்றன. கடைசியாக எனக்குக் கிடைத்த தரிசனத்தின்போது எனக்காக பிரார்த்தனை செய்வேன் என்று அம்மா சொன்னார்.
அவர் எனது ஆன்மீகத் தாய். ஆறுதலும், அமைதியும் தரும் ஊற்று. எனக்குப் புரியாத பல வழிகளில், அவருடைய பக்தர்களுடனும், இந்தப் பிரபஞ்சத்தினுடனும், அந்த மகா ரகசியத்துடனும், அவரோடும் இணைந்திருக்கும் பரந்துவிரிந்த சக்தியின் வலைப் பின்னலில் நானும் ஒரு பகுதி.
அம்மாவின் அன்பை நேரடியாய்ப் பார்த்தவன் நான். ஜாதி மத பேதமின்றி அனைவரையும் தனது குழந்தைகளாய் அனைவரையும் அன்பு செலுத்த போதிக்கும் அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி அவர்கள். மாய மந்திரங்கள் செய்வதில்லை. உலகை நேசிக்கும் ஒரு எளிய ஜீவன் அம்மா. அவருடனான அனுபவங்களை இங்கு பதித்திருக்கும் தமிழ் இந்துவுக்கு வாழ்த்துக்கள்.
பனித்துளி narrated what Hinduism is all about in a very subtle way. Hinduism is not against Muslims or Christians. In fact Hinduism doesn’t belong to Hindus alone or for that matter only for India but for the entire universe. Looks like everyone understands what Hindutva means except BJP. பனித்துளி, பனி-சூறாவலியாகவோ, பனி-சுனாமியாகவோ, பெருகி, அகிலமெல்லாம் இந்து சமுத்ரமாகட்டும்.
good keep writing more and more in this topic and also several others also