“என் யாழின் நரம்புகளை இறுக்கியும், தளர்த்தியுமே என் வாழ்நாள் முழுதும் கழிந்துவிட்டது. நான் பாட வந்த பாட்டை இன்னும் பாடவில்லையே!”
தாகூரின் அங்கலாய்ப்பு நமக்குத்தான் பொருந்தி வருகிறது. அவர் என்னதான் சாதிக்கவில்லை? எனக்கென்னமோ இருபது வயதில் அவர் எழுதிய ‘தோட்டக்காரன்,’ நோபல் பரிசு கீதாஞ்சலியைக் காட்டிலும் அழகாகவே தெரிகிறான். என் சித்தம், குடிசை வீடாயிருப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ? அவருடைய அதிருப்தி, அவருக்கு நியாயம், நமக்குப் பாடம். பொருள்மயமான வாழ்வில், நிறைவே செல்வம். படைப்பாளிக்கோ, திருப்தி சாவு.
எந்தச் சூழ்நிலையிலும், நம்மால் என்ன பெரிதாய்க் கிழித்துவிட முடிகிறது? பள்ளியில் படிக்கும்போது, ஆங்கிலத்தில் ஒரு கவிதை உண்டு. அது, ஏறத்தாழ இப்படிப் போகும்:
என்ன வாழ்க்கை இந்த வாழ்க்கை?
எப்போதும் என்னமோ பொறுப்புகள்
எதையும் நின்று பார்க்க
எப்போதும் நேரமில்லை…
நம்மில் பலருக்குச் சூரியோதயம் தெரியாது. கடலோரம்; கரையில் மரங்கள் – ஆமாம், இன்னும் உள்ளன! எத்தனையோ பறவைகளுக்கும், என்னென்னவோ உயிரினங்களுக்கும் புகலிடம். அதிகாலையில், சூரிய உதயத்திற்கு முன்னால், எங்கிருந்தோ கொஞ்சம் வெளிச்சம் வருகிறது. இதை, தென்னிந்தியக் காடுகளில், பல ஆட்கொல்லிப் புலிகள், சிறுத்தைகளை வேட்டையாடிய கென்னத் ஆண்டர்சன், ‘பொய் வைகறை,’ என்பார். திடீரென்று கிளையெங்கும் கிறீச்சல்கள். இருளின் வக்கிரக் கிண்டல் போன்ற இந்தப் பொய்க்காலை அனாவசியமாகப் பறவைகளை எழுப்பிவிட்டு மறைந்த பின்பு, மறுபடியும் மரக்கிளையில் துளிக்கால்களைப் பற்றவும், சிறகெங்கும் சிறுதுயிற் படலம். எப்போழுது இருள் பிரிகிறது? ஒளி என்பது வருகிறது? இரவு என்பது காலையாகிறது? சொல்லவே முடியாது. வைகறைக் கணத்தைக் குறிக்க முடியாமல், அதிகாலைப் புலர்வின் அற்புத அழகை விவரிக்கவொண்ணாமல், தோற்றுத் தோற்றுத் தோத்திரம் செய்கின்றன வேதங்கள்! நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன்!
ஓர முள்ளுக் காட்டுக்குள்ள ஒத்தக் குயில் கூவயிலெ
நெட்டுக்குக் கெழக்குப் பக்கம் செவக்கும் பொழுது
நிமிசம் நிமிசமா விடியும்!
சின்னப் பறவைகள்; எப்போதும் ஆபத்தான வாழ்க்கை; மிகச்சிறிய நெஞ்சம்; அதனுள்ளே விடுதலை என்னும் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்; அது, எந்த இசையிலும் வாய்க்காத, எல்லா இசைக்கும் ஆசானாக விளங்கும் சுருதி கோஷங்களாய்ப் பொத்துக்கொண்டு வருகிறது; வெளியே கொட்டக் கொட்ட, உள்ளே பொக்கிஷம் கொழித்துக் கொண்டே போகிறது. இது, எல்லா உயிர்களுக்கும், உயிரில் உணர்வுக்கும் காரணமான கதிரவனுக்குத் தெரியும். எனவே, நான் கவனித்தவரையில், பறவைகளின் பரவச கீதங்களே பகலவனை எழுப்புகின்றன. அவற்றின் குரல் கேட்டே, அவன் கடலில் ஒரு தங்கப் பாதையை விரித்து, அதை உடனேயே வெள்ளியாய் உருக்கிவிட்டுக் கடலை விட்டுத் திகிரியாகத் திமிறி எழுகிறான். மனிதர்கள், உறங்கத் துடிக்கிறார்கள்; பறவைகள், விழிக்க ஆர்வமாயிருக்கின்றன.. அந்த ஆர்வத்தின் பலனே ஆதவன்.
உதயத்தில், நகரம் சோம்பல் முறித்துக் கொள்கிறது; வெளிச்சத்தில் களைப்பு அம்பலமாகிறது; சலிப்பும்தான். கிராமத்தில் அப்படியில்லை. புலரும் பொழுது, தினமும் கொண்டாடப்படுகிறது. ஓர் ஒட்டுமொத்தமான குதூகலத்தைக் கூரையேறியோ, கூடை மீதிருந்தோ கொக்கரக்கோ பறைசாற்றுகிறது. குடிசையின் குச்சு வாசலிலிருந்து, குனிந்து வருகிறது ஜீவன். எல்லையற்ற அண்டத்தில் பொட்டு வைத்ததுபோல் பொலிந்துவரும் சூரியனைத் தொட்டுக் கும்பிடுவதுபோல் தொழுகிறது. சாயங்காலம் விளக்குவைத்தாலும், மின்சார விளக்கைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறது. வணக்கம் தொலைந்துபோன நகரில், இது பேதைமையாகப்படும். அன்று. வெளிச்சம், உயிரின் விளக்கம். உணர்வுக்கு உந்துதல். வாழும் முனைப்புக்கு நெம்புகோல். கன்னத்தில் போட்டுக் கொண்டது எடிசன் கண்டுபிடித்த டங்ஸ்டன் விளக்கையல்ல. ஆதவனுக்கும் ஒளிவழங்கும் ஒரு மாபெரும் சக்தியை.
அதிகாலையின் அன்புக் கரங்களில்
அலைந்த காற்று உறங்குகிறது
இரவெல்லாம் அழுது அரற்றிக்
களைத்துறங்கும் குழந்தைபோல்
என்கிறார் சரோஜினி நாயுடு. ஆம், அதிகாலைக் காற்றில் ஒரு களைப்பு தெரியத்தான் செய்கிறது. அது தொட்ட செடிகொடிமரங்களில், தியானம் கலைந்த ஸ்தம்பிதம் தெரிகிறது. கோடையிலும், அதிகாலையில் புழுதிச்சாலையில் கால்வைத்தால் இளம்பெண்ணின் ஸ்பரிசம் போல் தண்மை தண்டுவடத்தில் கிசுகிசுக்கின்றது. மனிதர்கள் விழித்துக் கொண்டபின்பு, பறவைகள் பாட்டை நிறுத்தி விடுகின்றன. அவற்றின் ஓசை, ஒன்று நமக்குக் காதில் விழாது; இல்லையேல், தொந்திரவு. அவை பாடுவது வெளிச்சத்துக்காக. நாம் படுவது இருட்டுக்காக. அவ்வளவுதான் வித்தியாசம்.
எதற்குமே நேரமில்லை என்பதைப் பற்றிப் பேசவந்து, நேரம் போனதே தெரியாமல், பறவை, பாட்டு என்று திரிந்து கொண்டிருக்கிறேனே!
காலத்தைப் புரிந்து கொண்டால், நேரம் கிடைக்கும்! காலம் தொகை, நேரம் துளி. காலம் முழுமை, நேரம் பின்னம். காலத்தில், பகுதி கிடையாது. அது, பத்தி பிரிக்க முடியாத பரவசப்பாட்டு; வார்த்தை கூடக் கேட்கிறது, ஆனால் இல்லை. போன, நடக்கின்ற, வரப்போகின்ற எல்லாவற்றையும் ஏற்கனவே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு எதுவுமே இல்லாததுபோல் இருக்கும் எமகாதகன் காலம். தானிருப்பது தானறியாத, ஆள்தன்மை இல்லாத அதிசயம் காலம். காலம் பொய் என்பது, சாமிக்குப் பூச்சாண்டி காட்டுகிற வேலை. கிலிக்கேவல். எல்லா இருப்புக்கும் ஆதாரமாகவும், எதிலும் சேதாரத்திற்குக் காரணமாகவும், எதனுடைய முடிவுக்கும் முகமனாகவும், மீண்டுமொரு துவக்கத்திற்கு ஏதுவாகும் உள்ள, இல்லாதிருக்கும் மர்மம் காலம்.
காலமும் தூரமும் என்று, இன்றும் என்னைக் கதிகலங்க வைக்கும் கணக்கு ஞாபகம் வருகிறது. மூணு, ஒண்ணுங் கீழ பதினாலு மனிதர்கள் என்றெல்லாம் எனக்கு விடைவரும். அதில் என்ன தவறு என்று புரியாமல் நானும், இதை எப்படித்தான் புரியவைப்பது என்று என் தந்தையும் விழிப்போம்.
கைப்பிடியில் அடங்கும் சிசுவாய் இருந்தேன். இன்று, பெல்டு பூமத்தியரேகை போல் ஆகிவிட்டது. இரண்டும் நானேதான் என்றாலும், வெவ்வேறு நான்கள். இரண்டு விதமான வடிவங்கள். இடைப்பட்ட தொலைவே வயது.
இதோ பூமி. அதோ சந்திரன். இடையிலே வெட்டவெளி. எனவே, தொலைவு தோன்றுகிறது. வெளி என்பது இல்லாமல் மொத்தமும் சடமாக இருந்தாலும், இது அது இங்கே அங்கே என்ற உணர்வு ஏற்படாத போதும், காலம் எங்கே?
பிரேமா மாமி பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு அந்தத் தாயைச் சந்திக்கிறேன். என்னைப் பார்த்ததில், அத்தனை வருடங்களும் அவர் கைகளில் பாத்திரம் போலவே உருள்கின்றன. ஞாபகங்களை மீட்கலாமே அன்றி, அவை ஒருபோதும் நிகழ்வுகளாக மீளா என்ற நிதர்சனம் நேர்கிறது. அதே கணத்தில், இன்றைய தனது வாழ்க்கை, இழந்துவிட்ட பொழுதுகள் இழைத்துவிட்ட தண்டனை போல் தோன்றி மருண்டு போகிறது மனது. மெளனம். குழாயிலிருந்து நீர்கூட ஒலியின்றி விழுதாய் விழுகிறது. பாத்திரங்களோடு, மாமியின் கண்களும் பனித்துப் பளிச்சிடுகின்றன. நான் பாடுகிறேன்.
இதுவொரு காலம் அதுவொரு காலம்
அடியில் மணலாய்க் கரைகிறதே அதுதான் உண்மைக் காலம்
நினைவும் கனவும் புகையென நீளும்
நெஞ்சில் எங்கோ கனல்கிறதே அதுதான் உண்மையில் வாழும்…
எத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ
அத்தனை முறையும் எழுந்தோம்!
அதைநாம் ஏனோ மறந்தோம்
அதனால் நிம்மதி இழந்தோம்
எத்தனை பெற்றோம் எத்தனை விற்றோம்
என்பதில் ஏதும் இல்லை! இங்கு
ஏதும் மீதம் இல்லை, இதை
இதயம் மறந்தால் தொல்லை!
காயம் வலிக்கும் காலம் நடக்கும் ஒரு
மாலைப் பொழுதில் நினைக்கும் போது
மனதினில் எல்லாம் இனிக்கும் சின்ன
மலராய் நம் முகம் சிரிக்கும்!
எனவே, காலம் என்பது தொலைவுதானோ என்று தோன்றுகிறது. கடலைக் கடக்க முடியாது. நாம் கடக்க முயல்வது எங்கிருக்கிறோமோ அங்கிருந்து இன்னொரு புள்ளிக்கு என்ற நினைவோடு நடந்தால், இலக்கை அடைகிறோமோ இல்லையோ, தொலைவில் தொலைந்து போகமட்டோம்.
தூங்கிவிட்டால் காலமில்லை.. காலம் என்பதைத் தொல்லையாகக் கருதினால், தூக்கம் அதற்குத் தீர்வில்லை, சிறிய இடைவேளைதான். கனவில் காலம் வேறு விதமாக இருக்கிறது. முப்பது நொடிகளுக்குமேல் எந்தக் கனவும் கிடையாது என்கிறது விஞ்ஞானம். ஆ! காதலும், கலவியும், கடலிற் பயணமும், காரிருள் நடுவே கானகத் திகிலும், வேதனையின் பல விதங்களும் வலிகளும், விரைந்தும் வண்டியைத் தவற விடுவதும், ஆளும் இடமும் அப்படியே மாறி அதிசயம் கண்டதாய் அகமகிழ்வதும், நாளும் இரவும் நடந்து களைப்பதும், நல்ல விருந்தும் நரகற் கூளமும், கள்ளக் காதலும் கடுகு வெட்கமும், ககன வெளியில் மிதந்து பறப்பதும், உள்ளம் உலுக்கித் துரத்தும் பேய்களும், ஒருபெரும் வாழ்வே உருண்டு முடிவதும், முப்பது நொடிகளில் முடிந்து போவதா? செப்பிடு வித்தையா? சித்தப் பிரமையா?
எது எப்படியோ, சித்தத்தில் ஒடுங்கிய மனது, சற்றே குமிழ்க்கும்போது தோன்றும் தோற்றமே கனவு. நினைவே வெறும் தோற்றமெனில், கனவுக்கு என்ன பெரிய தூதரக அந்தஸ்து வேண்டிக் கிடக்கிறது? ஆனாலும், சுமையான தலை சுகமான தலையணையில் பதியும்போது, மனது உடனே கனவைத்தானே விழைகிறது! முப்பது நொடியோ மூக்குப் பொடியோ போகட்டும். கனவை விட்டு விடுவோம். ஆழ்ந்த உறக்கத்தில் காலமுண்டோ? இல்லையே! ஏன்? ஆண், பெண், மளிகைக் கடன், மேலதிகாரித் தொந்திரவு, பஸ் நெரிசல், மனைவிக்குச் சொன்னபோய்யின் பாரம், எதுவுமே இல்லையே! ஏனெனில், அங்கே ஆளே இல்லையே! தான் இருக்கிறோம் என்ற உணர்வு ஆள்தொலைந்த ஆழ்துயிலில் அறவே இல்லையே! எனவே, பிரக்ஞை இருந்தால்தான் காலம் என்பது உணரப்படுகிறது. பசுவுக்குத் தன் உயரம் இத்தனை, எடை இவ்வளவு, இனிமேல் வாக்கிங் போயே ஆகவேண்டும் என்பதெல்லாம் கிடையாது. ஏனென்றால், தானிருக்கிறோம், தான் பசு, என்பது பசுவுக்குத் தெரியாது. உணர்வு நின்றுபோன ‘கோமா’விலும் காலமில்லை. எனவே, பிரக்ஞையே காலம் என்றும் தோன்றுகிறது.
ஒரே உலகத்தில் வெவ்வேறு விதமான காலங்கள். காலையில் எழுந்து பல்துலக்கி, முகம்கழுவிக்கொண்டு, கனடாவில் இருக்கும் அக்காவைத் தொலை பேசியில் அழைத்தால், அவள் அப்போதுதான் வேலை முடிந்து வீடு திரும்பியிருக்கிறாள். இங்கே பகல், அங்கே ராத்திரி, நடுவில் எங்கோ மத்தியானம், இன்னும் நம் பொழுதிலிருந்து அறவே வேறுபடும் மாறுபட்ட பலப்பல பொழுதுகள். ஆக, பூமியின் சுழற்சியினால், ஒரே உலகத்தில் பல ரீதியான கால பேதங்கள் தோன்றுகின்றன. அட, ஒரே ஊரில் கூட நைட் ட்யூடிக் காரனுக்கும் நமக்கும் எவ்வளவு வேறுபாடுகள்? நாம் அலுவலக்த்தில் மல்லாடும் போது அவன் குளிக்கப் போகிறான்! வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தால், போய் வருகிறேன் என்று கிளம்புகிறான்.
பூமியின் நேரமும், நிலவின் நேரமும், இன்னும் வேறு கிரகங்களின் நேரங்களும் வேறல்லவா? சுழற்சி, நகர்வு, அளவு, இடம் இவை போன்றவை பகுக்க முடியாத காலத்தை வகுக்கக் கூடிய நேரமாக மாற்றி விடுகின்றன.
எனவே, காலம் என்பது,
தொலைவு
சித்தம் அல்லது பிரக்ஞை
நேரமாகும்போது எல்லார்க்கும் ஒன்றே. ஏழையோ, பணக்காரனோ, அச்சரப்பாக்கமோ, ஆப்பிரிக்காவோ, ஆணோ, பெண்ணோ, எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். ஒரு பயலுக்கும் ஒரு நொடி கூடவோ குறைச்சலோ இல்லை. இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் முரண்மயமான உலகில் சமதர்மம் சரியாக இருக்கிறது! கள்ளச் சந்தையில், ஒரு பத்து நிமிடங்கள் கறுப்புப் பணத்திற்குக் கிடைக்குமானால், கோடி ரூபாய் கொடுக்கலாமே! கிடைக்காதே! வாங்கமுடியாத வஸ்துவல்லவா! அந்தநாள் வருவதில்லை; அம்புகள் திரும்புவதில்லை. வந்த அலை மீளாது.
சென்ற கணம் திரும்பவே திரும்பாது.
நாட்டுக்கு நாடு மாறுபடக் கூடும்.
வீட்டுக்குள்ளேயே ‘ட்யூடி’ ஆளுக்கு ஆள் மாற்றும்.
கனவில் காலம் வேறே. ஆழ்துயிலில், அதுபோல் வேறு ஆளுணர்வற்ற நிலைகளில், காலம் அறியப்படுவதில்லை.
பிரபஞ்சத்தில், கோளுக்குக் கோள் மாறுபடுகிறது காலம்.
சடம், அசைவு, சுழற்சி, அதனால் விளையும் தொலைவு என்பன போன்றவற்றால்தான் காலத்தில், நேரம் என்னும் பகுப்பு ஏற்படுகிறது. அளவை, அலகு என்பவையெல்லாம் இவற்றால்தானே! பகல் என்கிறோம், இரவு என்கிறோம். சூரியனுக்கு உதயமேது, அஸ்தமனம் ஏது. பலனேதும் பாராத தவமென்னும் என்னும் தபனம் போல் சதா தகித்துக்கொண்டே இருக்கிறதே!
எண்ணங்களெல்லாம் ஒருங்கே குவிந்து, உணர்வு ஒன்றும் முனையில், ஏதும் நினைப்பற்ற முழு உணர்வில், ஏது காலம்? என்ன நேரம்? எனவே, உடம்பு, மனது, புத்தி, சித்தம் வரைக்கும் காலம், நேரமாக ஆளுகிறது. அவற்றின் பின்னாலோ, அல்லது அவற்றின் மூலமாகவோ விளங்கும் ஆன்மா என்கின்ற உண்மையில், காலம் என்பது இல்லை. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் அங்கே இல்லை. நேரமென்னும் நிகழ்வற்ற காலம், அகத்தியன் இடையில் பாம்பாக, கட்டுப் படுத்துவதுபோல், நெளிந்து நெகிழ்ந்து கொண்டிருக்கிறது!
first of all change the sanskrit ohm in your banner then you can say tamil hindu,
// first of all change the sanskrit ohm in your banner then you can say tamil hindu, //
மிஸ்டர் பித்தன், ஏன் மாற்ற வேண்டும்?
ஓம் என்பது மொழியும், காலமும், இடமும் எல்லாம் கடந்த பரம்பொருளைக் குறிக்கும் குறியீடாக உலகெங்கும் உள்ள இந்துக்கள் கருதுகிறார்கள். அது ஒரு வெறும் எழுத்து அல்ல – மொழிக்குள் சிறைப்படுத்தப் பட.
இங்கு பேனரில் உள்ள ஓம் என்பது ஓ + ம் என்ற இரண்டு சம்ஸ்கிருத எழுத்துக்கள் கொண்டு எழுதப் படவில்லை. அது ஒரு விசேஷமான சிறப்பு எழுத்து. அந்த எழுத்தின் குறியீட்டிற்கே தத்துவார்த்தமான விளக்கம் உள்ளது. உலகெங்கும் இந்துக்கள் இதனை புனித குறியீடாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்ஹிந்து.காம் –
இந்துக்களுக்காக தமிழில் ஒரு தளம்
தமிழில் இந்து தர்மம் பற்றிய ஒரு தளம்
இந்துத் தமிழர்களின் கலாசாரம், கலைகள், சமூக பிரசினைகள் பற்றிப் பேச ஒரு தளம்
.. இப்படி பல சாத்தியங்களை அந்தப் பெயர் தன்னளவில் அளிக்கிறது.
“தமிழ்” என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே மற்ற மொழிகளைக் காறி உமிழ்ந்து காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்று சில வெறியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் தமிழ் என்கிற முத்திரையை மொழிவெறி, இனவெறி சார்ந்து அல்ல – மாறாக கலாசார, பண்பாட்டுப் பெருமிதம் என்ற அளவிலே இந்தத் தளம் முன்னிறுத்தி வந்திருப்பதாக நான் கருதுகிறேன். இதில் வரும் கட்டுரைகளும் அந்த அடிப்படையிலேயே உள்ளன.
மிகவும் அற்புதமான கட்டுரை … ஆழ்ந்த கருத்து. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
மிக நன்றாய் வந்ந்திருக்கிறது. படிக்க படிக்க இனிமையாய் இருக்கிறது. ஒரு குறிக்கோளுடன் இல்லாமல் மனதில் தோன்றியதை இயல்பாய் எழுதும்போது அது பெறும் வீச்ச்சு அதிகம். அதைத்தான் உங்கள் கட்டுரை காட்டுகிறது.. வாழ்த்துக்கள்
Dear Krishna and Bharathaputhran!
Thank you for your feedback. Typing this from Jageshwar. Couldnt get Tamil font.
Love,
Ramanan