அச்சுதனும், அம்பிகையும்

நம் இதிகாச புராணங்கள், ஆலயங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது விஷ்ணுவிற்கும், அம்பிகைக்கும் இடையேயான பல அரிய ஒற்றுமைகள் தெரிய வருகின்றன.

ஒன்று மிக நெருங்கிய உறவு – அவன் அண்ணன்; இவள் தங்கை. இருவர்தம் நிறமும் ஒன்றே; இருவரும் கருமை வண்ணம் படைத்தவர்களே (சியாமளன் கண்ணன், சியாமளா சக்தி). சங்கும், சக்கரமும் விஷ்ணுவிற்கும், துர்கைக்கும் பொதுவான ஆயுதங்கள். அவன் விஷ்ணு; இவள் விஷ்ணுமாயை. அணி மணிகள் அணிவதிலும் இருவருக்கும் போட்டி.

அச்சுதனுடைய நீண்ட நெடிய நயனங்களை பக்தி நூல்களும், இதிகாசங்களும் வாய் கொள்ளாமல் வர்ணிக்கின்றன. ராமாயணத்தில் ராமன் ‘விசாலாக்ஷன்’ எனும் அடைமொழியோடு சுட்டப்படுவதைப் பல இடங்களிலும் காண்கிறோம். தேவிக்கும் மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, நீலாயதாட்சி என்று பல நாமங்கள்.

இருவரும் மன்னர் குலங்களில் அவதரித்தார்கள். ஸ்ரீராமன் தசரதரின் புத்ர காமேஷ்டியின் பயன் என்றால், தேவி மலயத்வஜ பாண்டிய மன்னனின் வேள்வியில் தோன்றியவள்.

அடர்ந்த வனங்களில் முனிவர்கள்தம் குடில்களில் அவதரிக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. மாலவன் தத்தாத்ரேயனாகவும், கபில வாசுதேவனாகவும், வாமன மூர்த்தியாகவும்,
பரசுராமனாகவும் தோன்றினான். அம்பிகை மாதங்கியாகவும், காத்யாயனியாகவும் தோன்றினாள்.

அண்ணனுக்கு ஆவணியில் ‘ஜன்மாஷ்டமி’ ; தங்கைக்குப் புரட்டாசியில் ‘துர்காஷ்டமி’.

கண்ணனை பாலகிருஷ்ணனாக வழிபடுவதில் சுவை அதிகம்; அம்பிகையையும் பாலையாக வழிபடும் நெறி சாக்தத்தில் நிலவி வருகிறது. (வாலை வழிபாட்டைத் திருமந்திரத்திலும்
காணலாம்).

அசுர சக்திகளை அழிப்பதிலும் இருவரும் ஈடு இணையற்றவர்கள்.

இவள் கதம்பவன வாசினி; அவன் மது வனத்தில் கதம்பமர நிழலில் லீலைகள் புரிந்தவன்.

அச்சுதன் கோலோச்சுமிடம் ‘சுவேத துவீபம்’; அம்பிகை கொலுவிருக்குமிடம் ‘மணித்வீபம்’.

அவன் உத்தரையின் கருவிலிருந்த சிசுவைக் காத்தான்; இவளோ திருக்கருகாவூர் திருத்தலத்தில் கர்பரட்சாம்பிகையாக அருள்பாலித்து அனு தினமும் பல்லாயிரம் சிசுக்களைக் காத்துவருகிறாள்.

அறத்தை நிலைநாட்ட யுகம்தோறும் அவதரிப்பவன் அண்ணன்; அறம் வளர்த்த நாயகியாக ஐயாற்றில் விளங்குபவள் தங்கை.
அவன் கோபாலன் என்றால், இவள் கோமதி.
அவன் கோவிந்தன் என்றால், இவள் கோவிந்த ரூபிணி.

இவளுடைய காதணி தாடங்கம் என்றால், அவனுக்கு மகர குண்டலம். இரண்டுமே புகழ் பெற்றவை.

அவன் வடவேங்கடத்தில் தொடை மீது கரம் வைத்து நிற்கிறான்;
இவளும் தென் குமரியில் அதே கோலத்தில் காட்சி தருகிறாள்.

கடவுளர் பலருக்கும் ஆயிரம் நாமங்கள் கொண்ட வழிபாட்டுத் துதிகள் இருப்பினும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமமும், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமமும் தொன்றுதொட்டு இன்றுவரை ஆன்மிக உலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கின்றன.

வைகானஸ ஆகமம் விஷ்ணு ஆலயங்களில் துர்கைக்கும் சந்நிதி அமைக்கச் சொல்கிறது. ஸ்ரீரங்க விமானத்தின் காவல் தெய்வங்கள் கணபதியும், துர்கையும் தான். திருக்கோவலூர் ஆயனின் ஆலயத்தில் துர்கா தேவிக்கும் கோஷ்டம் அமைந்துள்ளது. காஞ்சி காமாட்சி தேவியின் ஆலயத்தினுள் கள்வனாருக்கும் ஒரு சிறு சந்நிதி; இவர் ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்றவர்.

கேரளத்தில் இவ்விருவரையும் சேர்த்து ‘அம்மே! நாராயணா!’ எனப் போற்றி வழிபடுவர். நெல்லை மாவட்டத்திலுள்ள ‘சீவலப்பேரி’ (ஸ்ரீ வல்லப பாண்டியன் ஏரி) எனும் ஊரிலுள்ள ஆலயத்தின் கருவறையினுள் விஷ்ணுவும், துர்கையும் சேர்ந்தே பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளனர்.

மங்கலமனைத்திற்கும் மங்கலம் சேர்ப்பவன் மாலவன் (‘மங்கலாநாம் ச மங்கலம்’). அனைத்து மங்கலங்களின் உருவாகவும் திகழ்பவள் தேவி (‘ஸர்வ மங்கல மாங்கல்யே’); நஞ்சுண்ட கண்டனையும் காத்தது அவளது மனைமங்கலமே அன்றோ!

இவ்விருவரும் தீவிரவாத இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகினைக் காப்பராக !!

3 Replies to “அச்சுதனும், அம்பிகையும்”

  1. Dear Sri Dev,

    Beautiful comparison. Really thrilled to read this. Great work. Thanks for such a wonderful comparison.

    Regards,
    Satish

  2. இதை இப்போது நவராத்ரி ஆரம்பிக்கும் சமயத்தில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது, இறைவனின் திருவருளே!

  3. நல்ல கட்டுரை. இலலிதா சகஸ்ரநாமம் அம்பிகையைக் ‘கோவிந்த ரூபிணீ’ (267) என்று கூறுவது அறியத்தக்கது. கோவிந்தராகிய விஷ்ணு ரூபமாக இருப்பவள் என்ப்து இந்த நாமத்துக்குப் பொருள். சிவபரம்பொருளின் திருவருள் பெண்வடிவில் சத்தியாகவும் ஆண்வடிவில் திருமாலாகவும் உளது என்ச் சைவம் கொள்கிறது. “அரியலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார். அபிராமி பட்டர், அம்பிகையை, ‘ தரங்கக் கடலுள் வெங்கD பணியணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே’ எனத் திருமாலாகப் பாடுவது அறியத்தக்கது. இதனால் அம்பிகையும் திருமாலும் வேறல்லர் என்பது பெறப்படும். சத்தியும் சிவமும் பிரிக்க முடியாத அத்துவசம்பந்தம் உடையவர் எனச் சைவம் கூறும் . எனவே சைவர்கள் சிவனுக்குத் திருமாலும் ஒரு சத்தி என்று கொண்டு, சிவன் திருக்கோவிலில் திருமாலுக்கும் ஒரு சந்நிதி அமைத்துக் கொண்டாடுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *