பக்தி ஓர் எளிய அறிமுகம் – 3

சென்ற பகுதியில் நெஞ்சமே கோயில் என்று பார்த்தோம். அந்தக் கோயில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்கும் முன்பாக, என் வைகுண்ட ஏகாதசி அனுபவத்தைச் சொல்லிவிடுகிறேன்.

ranganatharஇரண்டு மாதங்களுக்கு முன்பு- அதாவது டிசம்பர் மாதம் கடைசியில் வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். என் நண்பர் கொடுத்த பச்சை கலர் அனுமதிச் சீட்டை எடுத்துக்கொண்டு பெருமாளை தரிசிக்கச் சென்றிருந்தேன். காலை பதினொரு மணி. கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். கோயில் நுழைவாயிலில் நீண்ட வரிசை. அந்த வரிசையில் நின்றால் அடுத்த நாள்தான் பெருமாளைச் சேவிக்க முடியும் என்று தோன்றியது. கையில் இருந்த பச்சை கலர் அனுமதி சீட்டை அங்கு இருந்த போலீஸ் அதிகாரியிடம் காண்பித்தேன். அவர் மனதில் என்ன தோன்றியதோ, அங்கு உள்ள தடுப்பை எனக்குத் திறந்துவிட்டார். அவர் திறந்துவிடுவதைப் பார்த்து அடுத்த போலீஸ்காரர் அடுத்த தடுப்பைத் திறந்துவிட இப்படியே பெருமாள் கர்ப்பகிரகம் அருகே, கடைசி பிரகாரம் வரை சென்றுவிட்டேன். பக்கத்தில் இருந்தவரிடம் விசாரித்ததில், “நேற்று சாயங்காலம் க்யூவில் நின்றேன் சார்,” என்றார். “ஆகா பெருமாளின் கருணையே கருணை என்று நினைத்துக்கொண்டேன். கடைசிச் சுற்றில் எல்லா வரிசையும் ஓர் இடத்தில் சங்கமிக்கும் இடத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. முன்னும் பின்னும் கூட்டம் இடித்துத் தள்ளியது. அங்கே இருந்தவர்களிடம் தள்ளாதீர்கள் என்று சொல்லிப்பார்த்தேன், ஆனால் யாரும் கேட்பதாக இல்லை. இந்த இடத்தில் நம் குணத்தை ஆராய வேண்டும். யாராவது நம்மைத் தள்ளினால் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம். ஓர் அளவுக்கு மேல் போனால் பொறுமை இல்லாமல் எரிச்சலில் நாமும் தள்ள ஆரம்பிப்போம். அரை மணி நேரம் இந்தத் தள்ளுமுள்ளுக்குப் பிறகு பெருமாளை தரிசித்துவிட்டு வீடு திரும்பினேன்.

* * * *

3_azhvarsசில வாரங்களுக்குப் பிறகு தற்செயலாக மீண்டும் முதலாழ்வார்கள் கதையைப் படித்தேன். அந்தக் கதை பலருக்குத் தெரியும் என்றாலும் இங்கே தருகிறேன்.

திருக்கோவிலூர் என்ற இடத்தில் நடந்த கதை. நல்ல மழை, காற்றுடன் கூடிய பின்மாலைப் பொழுது. நன்கு இருட்டிவிட்டது. மழைக்கு ஒதுங்க நினைத்த பொய்கையாழ்வார் மிருகண்ட முனிவர் ஆசிரமத்தில் உள்ள இடைகழியில் (ரேழி என்றும் சொல்லுவர். வீட்டின் அல்லது கோவிலின் நுழைவாயிலில் உள்ள நடைபாதையைக் குறிக்கும்.) ஒதுங்கினார். அங்கே சற்று ஓய்வெடுக்க நினைத்து, படுத்துக் கொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். “ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம்” என்று கூறி, பொய்கையாழ்வார் அவருக்கு இடம் கொடுத்தார். சற்று நேரம் கழித்து பேயாழ்வார் நனைந்துகொண்டு அங்கு வந்தார். “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்று கூறியபடியே மூவரும் நின்றனர். அப்போது அந்த இடத்தில் திடீரென்று ஒரு நெருக்கடி ஏற்பட்டது போல் உணர்ந்தார்கள். யார் இப்படி இவர்களைப் போட்டு நெருக்குகிறார்கள் என்று காண்பதற்காக முதலில் பொய்கையாழ்வார்

“வையம் தகளியா, வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் – ஆழி நீங்குகவே

என்று ஆரம்பித்து 100 பாடல்களைப் பாடினார்.

[பூமியையே விளக்காக்கி, கடல் நீரை நெய்யாக்கி, சூரியனைச் சுடராக்கி, திருமாலுக்கு விளக்கேற்றினால் உலகே ஒளிமயமாகி, துன்பக் கடல் நீங்கும்.]

பொய்கையாழ்வாரைத் தொடர்ந்து பூதத்தாழ்வார்,

“அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா – நான் உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

என்று இவரும் 100 பாடல்களைப் பாடினார்.

[அன்பை அகலாக்கி, பொங்கி வருகின்ற ஆர்வத்தை நெய்யாக்கி, நல்ல சிந்தனையைக் கொண்ட மனதைத் திரியாக்கி, நாரணற்கு சுடர் விளக்கேற்றினேன்.]

இவர் பாடி முடித்தபின் மூன்று ஆழ்வார்களுக்கும் பெருமாள் காட்சி கொடுத்தார். அந்தத் தரிசனத்தின் பரவசத்தால் பேயாழ்வார்,

திருக் கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்; – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று”

[திருமகளைக் கண்டேன்; பொன்னையொத்த மேனியைக் கண்டேன்; சூரியனின் ஒளி வெள்ளத்தைக் கண்டேன்; போர்க்களத்தில் பொன் போன்ற நெருப்பைக் கக்குகிற சக்ராயுதம் கண்டேன்; வலம்புரி சங்கு கண்டேன் கடல் வண்ணம் கொண்ட பெருமாளிடத்தில்.]

என்று இவரும் தன் பங்கிற்கு 100 பாடல்களைப் பாடினார்.

mudhal_azhwar_moovar

இன்று பஸ்ஸிலும் ரயிலிலும் கூட நாம் மற்றவர்களுக்கு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இடம் கொடுக்க மறுக்கிறோம். நான் சென்று வந்த வைகுண்ட ஏகாதசி பற்றிய அனுபவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், நமக்கும் ஆழ்வார்களுக்கும் உள்ள வித்தியாசம் சுலபமாகப் புரியும். இந்தக் கதையைப் படித்த பின் எனக்கு பல விஷயங்கள் புரிந்தது.

துய்மையான மனிதாபிமானம் மிக்க மனங்கள் கூடும்போது, அவர்களுடைய நெருக்கத்தை விரும்பி, பெருமாள் வருகிறார். அன்பு, ஆர்வத்துடன், பக்திக்கு தூய்மையான நல்ல மனம் (இன்பு உருகு சிந்தை) மிக அவசியம் என்பதை ஆழ்வார் பாடலில் பார்க்கலாம்.

பக்தனுடைய சம்பந்தம் பெருமாளுடைய சம்பந்தத்தை விட பெருமை வாய்ந்தது. அதைப் பற்றி உயர்வாக பல ஆழ்வார் பாடல்களில் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் கூட்டம் இருக்கும்போது நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை, வீட்டில் படித்ததைக் கோயில் வரிசையில் மறந்துவிடுவதுடன், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறோம்.

சஞ்சயன், திருதராஷ்டிரன் இருவரும் நல்ல நண்பர்கள். ஒரே குருவிடம் பாடம் கற்றவர்கள். மஹாபாரதப் போரை- அப்போது கண்ணன் வாயிலாகச் சொல்லப்படும் கீதையை- முழுவதும் கண்முன்னே நடப்பது போல திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் சொல்லிக்கொண்டே வருகிறான். பக்தி பற்றி சஞ்சயன் ஆழ்ந்து சொன்ன கருத்துகளைக் கேட்ட திருதராஷ்டிரன், “நானும் நீயும் ஒரே குருவிடம் தான் பாடம் கற்றோம், ஆனால் உனக்கு மட்டும் எல்லாம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. எனக்கு அவை எல்லாம் புரிவதில்லை. உனக்கு மட்டும் நம் குரு ஏதாவது விசேஷமாக வகுப்பு எடுத்தாரா?” என்று கேட்க, “பாடங்களைக் கேட்கும்போது மனதைத் தூய்மையாகவும் தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமலும் வைத்திருந்தேன்,” என்று பதில் சொன்னான் சஞ்சயன்.

ஆக பக்திக்கு மனம் சுத்தமாக இருக்க வேண்டும். இடம் சுத்தமாக இருந்தால் தான் அதில் பெருமாள் குடிகொள்வார்.

ganga_rishikeshதண்ணீருக்குக் குணம் கிடையாது என்று சொல்லுவார்கள். மனம் தண்ணீரைப் போல தூய்மையாக இருக்க வேண்டும். தண்ணீரைச் சுத்தப்படுத்த தேத்தாங்கொட்டை என்று ஒரு வித கொட்டையைப் போட்டு தெளிய வைப்பார்கள். நாமும் அன்பு என்ற தேத்தாங்கொட்டையைப் போட்டு மனதைத் தெளிய வைக்க வேண்டும்.

ஒரு குரு, பல புனிதமான இடங்களுக்குச் சென்று நீராடி வரலாம் என்று தன் சிஷ்யர்களை அழைக்கிறார். ஒரு சிஷ்யன், “குளிக்க ஏன் இவ்வளவு தூரம் போக வேண்டும்?” என்கிறான். அதற்கு அந்த குரு, “அதனால் நம் பாவங்கள் தொலைந்து, புனிதமடைவோம்” என்றார்.

எல்லோரும் கிளம்பினார்கள். எல்லாப் புண்ணிய நதிகளிலும் நீராடினார்கள். குருவிற்கு தினமும் சிஷ்யர்கள்தான் சாப்பாடு சமைத்துப் போடுவார்கள். ஒரு நாள் குரு பசியோடு இருக்க ஒரு சிஷ்யன் குருவிற்கு சாப்பாடு பரிமாறினான். குருவிற்கு பயங்கர கோபம். “ஏன் உணவு இவ்வளவு மோசமான வாசனையுடன் இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அந்த சிஷ்யன், “ஐயா இன்று புனிதமான காய்கறிகளைக் கொண்டு தான் சமையல் பண்ணியிருக்கிறேன்,” என்கிறான். “புனிதமான காய்கறிகளா?” என்று குரு புரியாமல் கேட்க, சிஷ்யன் “நாம் ஊரிலிரிந்து கொண்டு வந்த காய்கறிகளை, நாம் குளிக்கும் எல்லா புண்ணிய நதிகளிலும் குளிப்பாட்டினேன்,” என்றான்.

நாமும் சில சமயம் அந்தக் காய்கறிகளைப் போலத் தான் இருக்கிறோம்.

வீட்டில் குளிப்பதற்கும், புண்ணிய நதிகளில் குளிப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. மனம் சுத்தமாக இருந்தால்தான் அந்த வித்தியாசத்தை அறிய இயலும்.

தண்ணீர் என்றவுடன் எனக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது

குளத்தில் தண்ணீர் இருக்கிறது. சிலர் அதை வாட்டர் (water) என்கிறார்கள். சிலர் அதை ஜலம் என்கிறார்கள். மற்றொருவர் பானி என்கிறார். ஆனால் இவர்கள் என்ன சொன்னாலும் அந்தப் பொருள் மாறுவதில்லை; அவை ஒன்றையே குறிக்கிறது. பெருமாளும் அதைப் போலத்தான்.

பல்வேறு மக்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். பல பெயர்களில் அழைத்தாலும் அவை எல்லாம் ஒன்றே என்று நம்ப வேண்டும். மதம் என்றல் வழி. ஒவ்வொரு மதமும் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்லும் வழி. ஆனால் இன்றைய மதங்களுக்கு இருக்கும் கவலை மனிதனை எப்படி வாழவைப்பது என்பதல்ல, கடவுளை எப்படி வாழவைப்பது என்பது தான்!

பக்திக்கு மதம் கிடையாது.

ஒருவன் தன் புது செருப்பை கடித்துக்கொண்டு இருந்தான். வழியில் போன ஒருவர் ஏன் கடிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன், “அது என் காலைக் கடிக்கிறது. அதனால் அதை பழிக்குப் பழி வாங்குகிறேன்,” என்றான். இன்று நடக்கும் பல மதக் கலவரங்கள் இது போன்றவை தான்.

என் அப்பா திருச்சியில் முதன்மை மேலாளராகப் பணிபுரிந்த போது, அதே அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக ஒருவர் வேலை செய்துவந்தார். பெரியார் கட்சிக்காரர்; என் அப்பாவைக் கண்டால் ஏனோ அவருக்குப் பிடிக்காது. அப்பாவையும், அவர் நெற்றியில் இட்டுக்கொள்ளும் நாமத்தையும் கேலியும் கிண்டலும் செய்வார். ஸெராக்ஸ் எடுத்துக்கொண்டு வருவது போன்ற சின்ன வேலைகள் கொடுத்தால்கூட இழுத்தடிப்பார். எங்கள் அப்பாவிடம் ஏன் அவரை பற்றி நீங்கள் புகார் கொடுக்க கூடாது என்று கேட்டாலும் தனக்கு இதிலெல்லாம் வருத்தமில்லை என்று சொல்லிவிடுவார். அல்லது சின்ன புன்னகைதான் பதில். எங்கள் வீட்டு விஷேசம் ஒன்றிற்கு அவரையும் எங்கள் அப்பா அழைத்திருந்தார். சாப்பிட உட்கார்ந்த நேரத்தில் முக்கியமாக அவரைத் தன் பக்கத்தில் கூப்பிட்டு உட்காரச் சொல்லி அவருடன் சாப்பிட்டார். அலுவலகத்திலிருந்து வந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். சில நாள்கள் கழித்து, அவர் என் அப்பாவிடம் வந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு என் அப்பாவின் பரம பக்தராகிவிட்டார்.

அன்புக்கு வெறுப்பின் அடையாளம் தெரியாது. பக்திக்கு அன்பு மிக அவசியம். பிறரை நிந்திக்கக் கூடாது என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் ஒரு முக்கியமான குணம்.

(தொடரும்…)

10 Replies to “பக்தி ஓர் எளிய அறிமுகம் – 3”

  1. பக்திக்கு அன்பு மிக அவசியம்……………../////////////

    வெல் செட் !!

  2. Vivekananda said ” PURITY PATIENCE AND PERSEVERANCE ARE THE THREE ESSENTIALS TO SUCESS- ABOVE ALL LOVE.
    HOW LOVE CHANGES ONE IS SEEN IN YOUR FATHER’ S ACTION.
    VALLUVAR ALSO SAID THE SAME THING IN ” INNA SEIDHARAI ORUTHAL…”
    AS YOU RIGHTLY POINTED OUT WE DO NOT REMEMBER WHAT WE READ OR DO NOT HAVE ENOUGH PATIENCE.

  3. Venkat
    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

    This is a great principle. But we should know when and where to draw the line between மன்னித்தல் and தண்டித்தல். தண்டித்தல் doesnt mean to kill the other person. But the act of ours should deter the other person from repeating the same act towards us.

    In Mahabharatha too, I would quote two instances:
    1. When Sisubala’s mother extracted a promise from Sri Krishna he shouldnt kill him, Krishna said he will wait for only 100 abuses. Once it crossed the limit, He did kill Sisubala.
    2. When Sri Krishna went to mediate between Pandavas and Kauravas, He wil reduce Pandava’s expectation from Kingtom to 5 villages to 5 houses. But Duryodhana will reject and will say not even a needle head space for Pandavas. Sri Krishna will feel enough of this and will go for Kurukshetra war.

    திருடனையும் ஏமாற்றுபவனையும் ஒரு தடவை மன்னித்து விடலாம். ஆனால் அவர்கள் மீண்டும் அதே தப்பை செய்யும் போது, நாம் மன்னிக்க வேண்டியதில்லை.

    My thought may be contrary to the core of this article. But my experience in this regard made me state this. Hope I am not mistaken.

  4. Dear Desikan,
    Is it not considered as selfish when some one waiting for one day before and you are going and having Darshan with green ticket. I am not saying you should also wait like that…but somehow I felt bad about guys who are waiting for a long time. This is just a thought…may be I could have done the same….think and write about it.

    No offence.
    Regards,
    Raj

  5. In the same lines of Raj… I was about to tell the same thing. When some one is waiting near the main queue for 1 day and if some one is coming directly with the green card, is it fair from the view of the person who is waiting for a long time. I feel the stampede which you have mentioned are all happening because of the fact that people who came late are coming and joining with the people who are waiting in the queue for a long time. I am not blaming you, i am just telling the fact from the others people’s perspective. May be in older days these kind of things wont happen and thats the reason people are patience enough as there is no green ticket at that time for watching God. These days we have special darshan, double special darshan and this indirectly invokes the sense of non commitment to wait and watch practice.

    Please pardon me if i have told anything wrong.

    Thanks,
    Ram

  6. ஐயா,

    பக்தீ என்றாலே அது வைஷ்ணவம் மட்டுமா? சைவத்தில் பக்தி இல்லையா? மூன்று பதிவுகளில் சைவம் என்கிறா மேட்டரே இல்லையே ஐயா. ஒருவேளை சைவம் என்றாஅல் வெஜ் என்று மட்டும்தான் அர்த்தமா ஐயாமாரே. நாசமாப் போன மாணிக்கவாஅசகரும் திருஞானசம்பந்தரும் இந்த பக்திய பத்தி எளிமையா எதுவும் சொல்லலியா? ஆழ்வார்கள் சொன்னது மட்டும் போதுமா? இப்படி நிறாஇய கரப்பான்கள் கேட்டு எங்கள் தளத்தில் (விசிட்: கரப்பான்பூச்சி.காம்) தொல்லை செய்கிறான்(ள்)கள். கொஞ்சம் கரிசனம் செய்யுங்கோ.

  7. எப்படி கரப்பான் பூச்சிக்கு இம்சை செய்ய மட்டும் தான் தெரியும் – அதற்க்கு தெரிந்ததை மட்டும் தான் செய்யுமோ – ஆசிரியரும் தனுக்கு தெரிந்ததை மட்டும் எழுதி இருக்கிறார் – தனக்கு தெரியாதில் தலை இடுவதில்லை

  8. //அன்புக்கு வெறுப்பின் அடையாளம் தெரியாது. பக்திக்கு அன்பு மிக அவசியம். பிறரை நிந்திக்கக் கூடாது என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் ஒரு முக்கியமான குணம்.// ஹாய் தேசிகன், இந்த காலத்திற்கு ஏற்ற முக்கியமான கருத்து சொல்லியிருக்கீங்க.இதெ எத்தனை பேரு புரிஞ்சுப்பாங்க. படிக்க நல்லாயிருக்கு தேசிகன்.

  9. அன்பே இறைவனாக இருக்கும் பொழுது அந்த அன்பு இல்லாமல் பக்தி இல்லை..
    இதையே திருமூலரு தன் திருமந்திரத்தில்

    “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே..”

    என்று பாடியிருக்கிறார்.

    உண்மையான பக்தன் கடவுளிடம் மட்டும் அன்பு வைக்காமல் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு வைப்பான். அந்த அன்பிலேயே இறைவனைக் காண்பான்.

    திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *