ஓடிப் போனானா பாரதி? – 07

இவரா அப்பாவி?

இது வரையில் வெளிவந்துள்ள எல்லா ஆய்வுகளின்படியும் முரப்பாக்கம் சீனிவாசன் அவருடைய வாக்குமூலத்தில் ‘இந்தப் பத்திரிகைக்கு எப்போதுமே பாரதிதான் ஆசிரியராக இருந்து வந்திருக்கிறார். நான் இந்தியா பத்திரிகையின் கரெஸ்பான்டன்ஸ் வேலை பார்த்து வந்தேன்,’ என்பது. அதாவது, சீனிவாசன் ‘இந்தியா’ பத்திரிகையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தவர். அவருக்குப் பத்திரிகை நடத்தும் அளவுக்கு சக்தி கிடையாது. அவர் ஓர் ஏழை. மெட்ரிகுலேஷன் தேறி, ரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் மாதம் 15 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார். எஸ்.என். திருமலாசாரி, சீனிவாசனுடைய பள்ளித் தோழர். அவர், தன்னுடைய பத்திரிகையில் வந்து வேலை செய்யுமாறு அழைத்த காரணத்தால், இரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் பார்த்து வந்த உத்தியோகத்தை விட்டுவிட்டு, ‘இந்தியா’ பத்திரிகையில் பணிக்கு வந்து அமர்ந்தார்.

சீனிவாசன் சொல்கிறார்: ‘1906ஆம் வருஷம் மே மாதத்தில் ‘இந்தியா’ என்னும் பத்திரிகையை (எஸ் என் திருமலாசாரி) ஏற்படுத்தினார். இவருக்குத் தன்னுடைய சொந்த ஊருக்குப் போகவேண்டியிருந்த படியால் அந்தப் பத்திரிகையை என் பேருக்கு மாற்றி வைத்தார். பிறகு அவர் ஊருக்குச் சென்றார்.’

மேற்படிப் பத்தியில் சீனிவாசன் குறிப்பிடுவது மே மாதம் முப்பத்தோராம் தேதி, 1907ஆம் வருடம் பாரதியை ஆசிரியராகவும், சீனிவாசனை உரிமையாளராகவும் செய்யப்பட்ட பதிவைப் பற்றியாகத்தான் இருக்க முடியும். (இந்த விவரங்களுக்குப் பகுதி 3 பார்க்கவும்.) ஏனெனில், அதற்கு அடுத்த பத்தியில் பின்வருமாறு சொல்கிறார்:

‘1907ஆம் வருஷம் நவம்பர் மாதம் எம்.பி. திருமலாசாரியார் பம்பாய் செல்ல எண்ணம் கொண்டிருப்பதாகவும், ஆகையால் பத்திரிகையை என்னிடத்திலேயே ஒப்புவித்துப் போவதாகவும், ஸி. சுப்பிரமணிய பாரதி பத்திராசிரியராக இருப்பார் என்றும் என்னிடம் சொன்னார். பம்பாயிலிருந்து எம்.பி. திருமலாசாரி நான் பத்திரிகைச் சட்டத்தின்படி போலீஸ் கமிஷனரிடம் ‘டிக்ளரேஷன் எழுதிக் கையெழுத்துச் செய்யவேண்டும் என்று எழுதினார். நான் அவ்வாறே எழுதி வைத்தேன். ஸி. சுப்பிரமணிய பாரதி பத்திரிகாசிரியராக ரூபாய் 50 மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். நான் கரஸ்பாண்டென்ஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பேப்பர், காலத்தில் அனுப்பப் படுவதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன்.’

இதுவரைதான் பொதுவாக எல்லா ஆய்வாளர்களும் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்கள். யாருமே சீனிவாசன் கொடுத்த வாக்குமூலத்தின் முழு வடிவத்தைத் தந்ததில்லை. இது வரையில் சொல்லப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, சீனிவாசனுக்கு ஒன்றுமே தெரியாது என்றும், அவருடைய நண்பர் எஸ்.என். திருமாலாசாரியார் அவரை நம்ப வைத்து, அவருடைய பெயருக்குப் பத்திரிகையைப் பதிவு செய்ய வைத்து, அவருக்கு ‘ஒன்றுமே தெரியாத நிலையில் இருக்கும் போது,’ இப்படிச் சும்மா ஒளஒளாக்காட்டிக்கு அவரைப் பொறுப்பேற்கச் சொல்லிவிட்டு, அவரை நன்றாக ஏமாற்றிவிட்டார் என்பதும் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. (இந்தக் கட்டத்திலும், ஏமாற்றியதாகவே இருந்தாலும், அது இரண்டு திருமலாசாரியார்களின் அளவில் நிற்கும் ஒன்றே ஒழிய, பாரதி சம்பந்தப்பட்டதில்லை என்பது தெளிவு.) இருந்த போதிலும் இந்த வாக்குமூலத்தில் சில வினோதங்கள் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது:

  1. எஸ் என் திருமலாசாரியார் சொந்த ஊருக்குப் போன காரணத்தால், ‘இடைக்கால உரிமையாளராக’ (அப்படி ஒரு பதவி சட்டப்படி இருந்ததில்லை என்றாலும், வாக்குமூலம் சொல்வதன்படி இது ஓர் இடைக்கால ஏற்பாடு என்பது போன்ற தோற்றமே கிடைக்கிறது) சீனிவாசன் பதிவு செய்யப்பட்டார்.
  2. அடுத்ததாக எஸ் என் திருமலாசாரியார் சென்னைக்குத் திரும்பி வந்தார். அப்படி வந்த போதிலும், பத்திரிகை மீண்டும் அவர் பெயருக்கு ‘உரிமையாளர்’ என்ற விதத்தில் மாற்றப்படவில்லை. இப்போது ‘உரிமையாளர்’ என்று பதிவுபெற்றவர் எஸ் என் திருமலாசாரியாரின் ஒன்றுவிட்ட சகோதரரான எம் பி திருமலாசாரியார். (பகுதி 3ல் தரப்பட்டுள்ள காலவாரி உரிமையாளர், ஆசிரியர் பதிவுப் பட்டியலைப் பார்க்கவும். இந்த மாற்றம் 1907ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதியே என்கிறார் சீனிவாசன். செய்யப்பட்டிருக்கும் பதிவின்படி, உரிமையாளரே ஆசிரியர். அதாவது எம் பி திருமலாசாரியாரே ஆசிரியர்.)
  3. அடுத்த சில மாதங்களில் எம் பி திருமலாசாரியார் பம்பாய்க்குப் போனார். ஆகையினாலே, உரிமையாளர் பொறுப்பை மு. சீனிவாசன் ஏற்றார். அப்போதும், ஸி. சுப்பிரமணிய பாரதிதான் ஆசிரியர் என்று சீனிவாசனுக்குச் சொல்லப்பட்டது. ஆனாலும், ஆசிரியர் என்ற பதவியில் சி. சுப்பிரமணிய பாரதி பதிவுசெய்யப்படவிலலை. பிறகு, எம் பி டி ஆச்சாரியா, பம்பாயிலிருந்து கடிதம் எழுதி, போலீஸ் கமிஷனரிடம் டிக்ளரேஷன் கொடுக்கச் சொன்னார். வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத சீனிவாசர் போய் அப்படியே செய்தார்.

இங்கே ஒரு பொய் வெளிப்படுகிறது. ஒன்றல்ல, இரண்டு. பத்திரிகை உரிமையாளர் அல்லது ஆசிரியர் வெளியூருக்குச் செல்லவே கூடாது என்று சட்டம் இருந்ததா? ஏன் பத்திரிகை ஆசிரியர் வெளியூருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அதன் உரிமையாளர் பெயர் மாற்றிப் பதிவு செய்யப்பட வேண்டும்? அவசியமே இல்லையே! சம காலத்திலும் சரி, அதற்கு முன்னாலும் சரி, இப்படி மற்ற பத்திரிகை ஆசிரியர்கள் வெளியூர்களுக்குச் சென்ற போது இப்படி மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லையே! எடுத்துக்காட்டாக, ஹிந்து பத்திரிகையின் அப்போதைய ஆசிரியரான (பின்னாளில் சுதேசமித்திரனைத் தொடங்கிய) ஜீ. சுப்பிரமணிய ஐயர் 1897 மார்ச் மாதத்தில் வெளியூர் என்ன, வெளிநாட்டுக்கே சென்றார். ஹிந்து சொல்கிறது: “And the opportunity came to the Editor of The Hindu to present his case before such a Royal Commission, when G. Subramania Aiyer was invited to London on March 19, 1897, to give evidence before the Royal commission on Indian Expenditure presided over by Lord Welby.” (A Hundred Years of the The Hindu, An Editor in London, Page 104) இதன் பின்னர், ‘இந்தியா’ பத்திரிகையின் சீனிவாசன் கைது செய்யப்பட்ட போது, இதே ஜீ. சுப்பிரமணிய ஐயரும் கைது செய்யப்பட்டார் அல்லவா, அப்போது அவர் எங்கே இருந்தார்? குற்றாலத்தில் அல்லவா? அவர் வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யவில்லையே!

சரி. அதுதான் அப்படி இருக்கட்டும். இப்போது இரண்டாவது பொய்க்கு வருவோம். பாரதியே ஆசிரியராக இருப்பார் என்று சீனிவாசனுக்குச் ‘சொல்லப்பட்டது.’ எம் பி டி ஆசாரியா பம்பாய்க்குப் போன காரணத்தால், பத்திரிகையை நவம்பர் 1907ல் தன் பெயருக்குப் பதிந்துகொண்டார். அங்கே போய் உட்கார்ந்துகொண்டு, ‘போய் உன் பெயரை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துப் பதிந்துகொள்,’ என்று அவர் சொன்ன காரணத்தால் அப்படியே அந்த வார்த்தையை நிறைவேற்றினார். சரி. அப்படியானால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? பத்திரிகை உரிமையாளராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டிருக்க வேண்டும். ஆசிரியராக பாரதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். என்ன செய்தார்? பகுதி 3ல் உள்ள பட்டியலை மீண்டும் ஒருமுறை பாருங்கள். இந்த நவம்பர் 1907 பதிவின்படி, சீனிவாசனே உரிமையாளர். அவரே ஆசிரியர். உரிமையாளராகப் பதிவு செய்யச் சொன்னது எம் பி திருமலாச்சாரியார். சரி. ஆசிரியராக அவரை அவரே பதிவு செய்துகொள்ளும்படி, சீனிவாசனுக்கு யார் சொன்னார்கள்? பிறகு ஏன் அப்படிப் பதிவு செய்துகொண்டார்?

நான் மேலே குறிப்பிட்டிருப்பது போல், இதுவரையில் இந்தத் தலைப்பில் ஆய்ந்தவர்கள் எல்லோரும் சீனிவாசனுடைய வாக்குமூலத்தை ஊன்றிப் படிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சீனி. விசுவநாதன் வெளியிட்டிருக்கும் ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ (தொகுதி 3) இந்த வாக்குமூலத்தின் முழு வடிவத்தைத் தந்திருக்கிறது. இந்த வாக்குமூலத்தில் ஒரு மிக முக்கியமான பகுதி எப்படி இத்தனை நாள், இவ்வளவு தேர்ந்த ஆய்வாளர்களின் கண்களில் படாமல் போனது என்ற வியப்பே மேலிடுகிறது. முரப்பாக்கம் சீனிவாசன் தன் வாக்குமூலத்தில் சொல்கிறார்:

நான் பேப்பர் நடத்துவதற்காகப் பணம் கடன் வாங்கி இருப்பதையும், பத்திரிகை நடத்துவதில் உள்ள மற்ற கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லிப் பேப்பரை என் மானேஜ்மென்ட்டை விட்டு நீக்கிவிட வேண்டும் என்று எஸ் என் திருமலாச்சாரியைக் கேட்டுக்கொண்டேன்.

ஆனால், அவர் முதலில் சம்மதித்த போதிலும், பிறகு மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் பேப்பர் நடத்துவதற்காக வாங்கின கடனைக் கொடுத்து என்னைக் கடன் ஹிம்சையை விட்டு நீக்க வேண்டும் என்று எஸ் என் திருமலாசாரியைக் கேட்டுக் கொண்டேன். எம் பி திருமலாச்சாரி பிந்தித் தருவதாகச் சொன்னார். நான் கொடுத்த டிக்ளரேஷனைத் தள்ளிவிடும்படியாகக் கேட்டு அதைத் தள்ளுபடி பண்ணிக் கெண்டேன். பிறகு இந்தப் பத்திரிகையை எம் பி திருமலாச்சாரி பேருக்கு அவர் பணம் கொடுத்துக் கடனைத் தீர்த்தாலும் தீர்க்காவிட்டாலும் பத்திரிகையை எம் பி திருமலாச்சாரி பேருக்கு மாற்றி வைக்கச் சம்மதித்தேன்.’

இது பெரிய திகைப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. சீனிவாசனுடைய வக்கீல்களில் ஒருவரான ஏ எஸ் கெளடெல் செப்டம்பர் 1908ல் அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “He is not a journalist and had no control of the Editor’s Department. His duties were to assist generally and superintend the printing. He was throughout acting under others. He has no means and had no stake in the paper; but was paid a small salary for his services,” என்று குறிப்பிடுகிறார். He had no stakes in the paper என்ற வாக்கியத்தைக் கவனிக்கவும்.

‘நான் ஏழை. எனக்கு ஒரு பத்திரிகை வைத்து நடத்துவதற்கான பணமும் சாமர்த்தியமும் கிடையாது,’ என்று தொடங்கும் சீனிவாசனின் வாக்குமூலம், திடுமென மேற்படித் திருப்பத்தை எடுக்கிறது. அவர் சொல்லியிருக்கும்படி, சீனிவாசன்,

  1. பத்திரிகை நடத்தக் கடன் வாங்கியிருந்தார்.
  2. பத்திரிகை நடத்துவது சிரமமான ஒன்றாக இருந்தது.
  3. மேற்படிக் காரணங்களால், ‘இந்தியா’ பத்திரிகையின் பொறுப்பிலிருந்து, தான் விலகிக் கொள்ள விரும்பினார்.
  4. தான் பத்திரிகைக்காக வாங்கயிருக்கும் கடனை அடைத்து, தன்னைப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு தன்னுடைய பள்ளிநாள் நண்பனான எஸ் என் திருமலாசாரியைக் கேட்டுக்கொண்டார். வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘பத்திரிகை நடத்துவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. ஆகவே, பத்திரிகையில் நான் கடன் வாங்கிப் போட்டிருக்கும் பணத்தைக் கொடுத்துவிடு. நான் விலகிக் கொள்கிறேன்.’
  5. இந்த ஏற்பாட்டுக்கு ஆரம்பத்தில் சம்மதித்த எஸ் என் திருமலாசாரி, பின்னால் மறுத்துவிட்டார். எம் பி திருமலாசாரி, சிறிது காலம் கழித்து (பணத்தைத்) திருப்பித் தருவதாகச் சொன்னார்.
  6. பெரும் ‘அழுத்தங்களால்’ பாதிக்கப்பட்ட சீனிவாசன், ‘நீ பணத்தைத் திருப்பித் தந்தாலும் சரி; தராவிட்டாலும் சரி. என்னை விட்டால் போதும்,’ என்று பத்திரிகையை எம் பி திருமலாசாரி பேருக்கு மாற்றித் தந்துவிட்டார்..
  7. வேடிக்கை என்னவென்றால், அப்படி விலகிக் கொண்ட சீனிவாசன், அதே பத்திரிகையில் ‘குமாஸ்தா’ வேலைக்கு, முப்பது ரூபாய் சம்பளத்தில் – ஆண்டுக்கு மூன்று ரூபாய் சம்பள உயர்வில் – சேருகிறார். பத்திரிகை நடத்துவதுதான் சிரமமான காரியமாயிற்றே! பிறகு ஏன் அங்கேயே ‘குமாஸ்தா’ உத்தியோகத்திலாவது இருந்து கஷ்டப்பட வேண்டும்?

இந்த வாக்குமூலம் ஒன்றைத் தெளிவாக்குகிறது. பரவலாக நம்பப்படுவது போல் சீனிவாசன் ஒரு குமாஸ்தா உத்தியோகம் பார்த்துக்கொண்டும், முதலாளிகள் சொன்னபடியினால், ‘வேறு வழியில்லாமல்’ தன்னை உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பதிவு செய்துகொண்டவர் அல்லர். அவர் ‘இந்தியா’ பத்திரிகையை நடத்துவதற்குப் பணம் முதலீடு செய்திருக்கிறார். அது சொந்தப் பணமாகவும் இருந்திருக்கலாம்; வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருப்பது போல், கடன் வாங்கிய பணமாகவும் இருந்திருக்கலாம். ஆனால், வாக்கு மூலங்களில் இப்படிப்பட்ட நேரங்களில் இரக்கத்தைத் தூண்டுவதற்காக ‘கடன் வாங்கியதாக‘ இப்படி ஒரு வேடம் புனையப்படுவது எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.

எது எப்படியோ, பணம் முதலீடு செய்த அந்த உரிமையினாலேயே அவர் தன்னை ‘உரிமையாளராக’ப் பதிவு செய்துகொண்டிருக்கிறார். என்ன காரணத்தாலோ, அவரிடத்தில் யாரும் சொல்லாத போதிலும் – அதற்கு முந்தைய கால கட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு – உரிமையாளரே ஆசிரியர் என்று பதிவு செய்துகொண்டிருக்கிறார்.

எனவே, நடந்தது முழுக்க முழுக்க பத்திரிகை உரிமையாளர்களுக்கு இடையே நடந்த ஒன்று. இந்த நடவடிக்கைகளுக்கும் பாரதிக்கும் சம்பந்தம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சூழ்நிலைச் சாட்சியங்களின் அடிப்படையில் (on the basis of circumstantial evidence) ‘பாரதிக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்றே எழுத முடியும். ஆனால் என் நேர்மை உணர்வினால் உந்தப்பட்டு ‘தொடர்பிருந்திருக்க வாய்ப்பில்லை’ என்று எழுதியிருக்கிறேன். வழக்கு பதியப்பட்ட எந்த ஒருவரும் செய்வது போலவே சீனிவாசனுடைய வக்கீலும், ‘இவர் ஓர் அப்பாவி,’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இவரைத் தப்புவிக்க முயன்றிருக்கிறார் என்பது வெளிப்படை.

இந்தக் குற்றச்சாட்டில் அடுத்த கட்டம், சீனிவாசனுக்குச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வந்தபோது ‘இந்தியா’ பத்திரிகையில் ‘இந்தியா கேஸ்’ என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கம். இந்தத் தலையங்கத்தை பாரதியைத் தவிர வேறு யாரும் எழுதியிருக்க முடியாது என்பது உண்மையே. இந்த உண்மையை நடையே சொல்லிவிடுகிறது.

பாரதியின் இந்தத் தலையங்கம் என்ன சொல்கிறது? அது ஒரு புறம் இருக்க, பாண்டிச்சேரிக்குப் போனதைப் பற்றி பாரதியின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்க முடியும்?

4 Replies to “ஓடிப் போனானா பாரதி? – 07”

  1. பாரதியின் தலையங்கத்தைப் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

    கட்டுரை அருமையாகப் போகிறது. தங்களின் அற்புதப் பணி தொடர வாழ்த்துக்கள்.

    நன்றி, அன்புடன்

    ப.இரா.ஹரன்.

  2. அருமையாகப் போகிறது. ஒரு துப்பறியும் நாவல் போல இருக்கிறது உங்களது வர்ணனை. பாரதி குற்றவாளியல்ல என ஒரு தேர்ந்த வக்கீலும்கூட இப்படி வாதாடுவாரா எனத் தெரியவில்லை. அவ்வளவு அருமையாக‌த் தரவுகளைச் சேர்த்து சேர்த்து எழுதி இதை ஒரு மறுக்க முடியாத ஆவணமாக ஆக்கியிருக்கிறீர்கள்.

    பாரதியின் உண்மையான வாசகர்கள் நிச்சயம் மகிழ்வார்கள்.

    வணக்கங்கள் பல. பாரதியின் தலையங்கத்திற்காக காத்திருக்கிறேன்.

    ஜெயக்குமார்

  3. துல்லியமான ஆய்வுக்கட்டுரை! தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது!!

    அன்புடன்,
    ரங்கா

  4. கடந்த சில வாரங்களாக உடல் நிலை காரணமாகவும், வீட்டில் நிகழ்நத் ஒரு துக்கத்தின் காரணமாகவும் வலையகத்தின் பக்கம் அதிகமாக வரமுடியவில்லை. பாராட்டியவர்கள் எல்லோருக்கும் நன்றி.

    விமர்சனங்களையும் வரவேற்கிறேன். இவற்றில் பொருத்தமற்றதாக ஏதும் தென்பட்டால் வெளிப்படுத்தத் தயங்கவேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *