”மனிதன் குரங்கிலிருந்து வந்தானா? அப்படியா அறிவியல் சொல்கிறது? இது ஒரு பொதுவான தப்பபிப்ராயம்.மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மனிதனே குரங்கு தான்.. மனிதன் சிம்பன்சியிலிருந்து வந்தானா, கொரில்லாவிலிருந்து வந்தானா என்றால் எதுவும் இல்லை. மனிதனும் சிம்பன்சியும் ஒரு பொது மூதாதையிடமிருந்து 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பரிணாமப் பாதையில் கிளைபிரிந்தனர்.. சிம்பன்சிகளும் மானுடமும் கிளைபிரிந்த பிறகு மூலக்கூறு கடிகாரம் இரு கிளைகளிலும் இயங்கிய வேகம் கணக்கிடப் பட்டுள்ளது. இதர பேரினக் குரங்குகளின் கிளைப்பிரிவுகளைக் காட்டிலும் சிம்பன்சி-மானுடக் கிளைகளில் அந்த வேகம் ஒரே சீரான தன்மை கொண்டதாக உள்ளது”
இது டார்வினிய அறிவியல். ஓரளவு நமக்கெல்லாம் தெரியும்.
”இந்தப் பார்வை தரும் உணர்வு மகத்தானது. இந்தப் பார்வையில் கிடைக்கும் உயிர் மதிப்பு ஆழமானது. ஒவ்வொரு சக மனிதனும், அவன் மிக மோசமான உங்கள் சித்தாந்த எதிரியாக இருக்கலாம் அல்லது அவனது மூக்கின் நீளம் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம் – ஆனால் அவன் அல்லது அவள் ஒரு பெரும் பரிணாமப் பாதையின் சொந்தக் காரர்.. எரிச்சலும் பொறாமையும் கொண்ட தேவன்களின் பிள்ளைகளாக இருப்பதைக் காட்டிலும், சிம்பன்சிகளின் பரிமாணப் பங்காளிகளாகவும், கொரில்லாக்களின் தாயாதிகளாகவும் இருப்பது மகத்தானது”.
இது? ’டார்வினிய ஆன்மிகம்’!
இப்படி ஒரு பெயரைக் கேட்டவுடன் உங்கள் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிகிறதா? அல்லது மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறதா? எப்படியானாலும், ஒரு வாசகராக உங்களைத் திகைக்க வைத்து, சிந்திக்க வைத்து, கற்றுத் தந்து, பிரமிக்க வைக்கும் எண்ணக் கீற்று இது என்று நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.
இணையத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுப்பு “நம்பக் கூடாத கடவுள்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு கட்டுரையின் சில வரிகளைத் தான் மேலே பார்த்தோம் (குரங்கு மனிதன் ஆகுமா?).
வெளியில் வேறுவேறு விதமாதத் தோன்றும் உயிர்வகைகள் அடிப்படையில் பரிணாமவியல் ரீதியாக பின்னிப் பிணைந்திருப்பது போலவே புத்தகத்தில் வேறுவேறு தலைப்புகளில் உள்ள பல கட்டுரைகளிலும் இயைந்து பல தொடர்புடைய சிந்தனை இழைகள் அறுபடாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன.
“இந்தியப் பண்பாட்டில் படைதோனுக்குக் கோயிலே கிடையாது, பிரம்மனுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு.. படைக்கும் தெய்வம் எளிய மனத்துக்குத் தேவையாக இருக்கலாம், ஆனால் பண்பட்டு விரியும் ஞானத் தேடல் கொண்ட மானுடத்துக்கு அல்ல. நடைவண்டியைப் பிடித்துக் கொண்டு பச்சைக் குழந்தை நடந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் பதின்ம வயதுப் பையன் நடந்தால்? தலையில் குட்டத் தான் தோன்றும். நான் படைப்போன் என்றான் பிரமன். அறிவுக் கடவுள் முருகன் குட்டினான்” (மூன்றாவது பாதை).
இப்போது டார்வினிய ஆன்மிகத்தின் இன்னொரு பரிமாணம் கிடைக்கிறது.
சரி, கலாசார உணர்வு இல்லாத ஒருவகை வறண்ட நாத்திகவாதம் போலும் என்று நீங்கள் எண்ணத் தொடங்கினால், அங்கே தவறு செய்கிறீர்கள்.
”அந்த இடம் ஒரு தேசத்தின் ஆதார தேசிய உணர்ச்சியுடன் தொடர்புடையது. இந்த தேசம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களிடமும் ஒரு ஆழமான பண்பாட்டு ஆன்மிக உணர்ச்சியுடன் இணைந்த ஒரு பெயர் ஸ்ரீராமன். ஆதிகவி வான்மீகிக்கு அவன் ஆதர்ச நாயகன். அகநானூற்றுக் கவி கடுவன் மள்ளனார்க்கும் சபரிக்கும் அவன் தெய்வம். குகனுக்கு சகோதரன். ஆனால் அவனையும் கூட கேள்விக்கு உட்படுத்தும் மரபு ஹிந்துக்களுடையது. எனவேதான் அவன் பாரதத்தின் தேசிய நாயகன். ராம ரசத்தைப் பருகுங்கள் என்று சிந்து நதிக்கரை சீக்கியரையும் பிபரே ராமரசம் என்று காவேரிக்கரை தென்னிந்தியரையும் இணைக்கும் பண்பாட்டு உன்னதம் ராமன்”
என்ற உணர்ச்சி பொங்கும் வரிகள் வேறொரு கட்டுரையில் தெறித்து விழுகின்றன (உண்மையான கரசேவை).
”கடவுளை நீங்கள் உணரத் தான் முடியும், அனுபவிக்கத் தான் முடியும். *நம்ப* முடியாது, நம்பவும் கூடாது”
என்று இந்து ஆன்மிகத்தின் சாரத்தை ஒரே வாக்கியத்தில் அழகாகச் சொல்லிச் செல்கிறது நூலுக்குப் பெயர் தந்திருக்கும் “நம்பக் கூடாத கடவுள்” கட்டுரை.
”உலகின் ஆதிமொழி தமிழா” என்ற கேள்வியை அறிவியல்பூர்வமாக எந்த மரபு வழிபாட்டுணர்வும் காழ்ப்புணர்வும் இன்றி மற்றொரு கட்டுரை ஆராய்கிறது. கறாரான அறிவியல் வரலாற்று ஆய்வு முடிவுகளைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் தொல்பழங்காலக் குடிகளுக்கிடையில் பண்பாட்டு உறவுகள் நிகழ்ந்து அதன் தொடர்ச்சிக்கான தடயங்களும் இருக்கக் கூடும் என்பதையும் சமநிலையுடன் இக்கட்டுரை கச்சிதமாக முன்வைக்கிறது. இதில் சு.கி.ஜெயகரன் என்ற நிலவியலாளர் எழுதியிருக்கும் ’குமரி நிலநீட்சி’ என்ற நூலில் இருந்து மேற்கோள்களை சான்றாதாரமாக அளித்திருக்கிறார் அரவிந்தன். அதைப் படித்து விட்டு, சு.கி.ஜெயகரன் எழுதியிருக்கும் ‘மணல்மேல் கட்டிய பாலம்’ என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வாங்கி வாசித்தேன் (காலச்சுவடு வெளியீடு).
லெமூரியா மற்றும் நிலவியல் தொடர்பான 2-3 கட்டுரைகள் தவிர்த்து அந்தத் தொகுப்பு எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ஆரிய திராவிட இனவாதத்தையும், சமணர்கள் கழுவேற்றத்தையும் நிறுவப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் போல எழுதிச் செல்கிறார் ஜெயகரன். அறிவுலகில் நெடுநாள் முன்பே நார்நாராகக் கிழிக்கப் பட்ட எரிக் வான் டானிக்கனின் “கடவுளரின் ரதங்கள்” நூல் குறித்து அதே வாதங்களை முன்வைத்து எழுதியிருக்கிறார், பரவாயில்லை. ஆனால் நடுவில் டானிக்கனின் வெள்ளை இனமேன்மைவாதத்தை சம்பந்தமே இல்லாமல் திருவள்ளுவரின் தாய்-தந்தையரான ஆதி பகவன் குறித்துக் கூறப்படும் தமிழகத் தொன்மக் கதையுடன் தொடர்பு படுத்துகிறார். ஆனால் இதே கலாசாரத்தில் மீனவர் வியாச மகரிஷியும், வேடுவர் வால்மீகி மகரிஷியும் பற்றிய தொன்மங்களை வசதியாக மறந்து/மறைத்து விடுகிறார். நடுநிலையாளர் என்று எண்ணியிருந்த சு.கி.ஜெயகரன் சில விஷயங்களில் மட்டும் முன்முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்பவராகவும், காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராகவும் வெளிவந்தார். ’மணல்மேல் கட்டிய பாலம்’ என்ற அந்தப் புத்தகத்தின் தலைப்புக்கேற்பவே அவர் பற்றிய பிம்பமும் உடைந்து போயிற்று.
ஆனால் அரவிந்தனிடத்தில் இத்தகைய சறுக்கல்களையும், காழ்ப்புணர்வுகளையும் சல்லடை போட்டுத் தேடினாலும் காண முடியாது. அவரது வாதங்கள் எப்போதும் ஒரு பிரசினையின் எல்லாப் பக்கங்களையும் எடுத்துரைப்பதாகவே இருக்கும். சதிக்கோட்பாடுகள் (conspiracy theories) பற்றிய இரண்டு சுவாரஸ்யமான கட்டுரைகள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். “உலகை ஆள ஒரு சிறு கும்பல் சதி செய்கிறது” என்பதை வைத்து எப்படி “பிறர்” மீது வெறுப்பு பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். ஆர்.எஸ்.எஸ்ஸைக் குறிவைத்து இந்து விரோதிகள் உருவாக்கிப் பரப்பிய வதந்திகளைப் பற்றிக் கூறுவதோடு, ஏசுசபை பற்றி கத்தோலிக்க சர்ச் உருவாக்கிய ஒரு வதந்தியையும் எப்படி ஒருசில இந்துத்துவர்களே நம்பி தங்கள் பிரசாரத்தில் பயன்படுத்தினர் என்பதையும் பதிவு செய்கிறார். இந்த நடுநிலைமை தான், இத்தகைய ஆய்வுநோக்கு தான் உண்மையில் இந்துத்துவ அறிவியக்கத்திற்கு பலம் சேர்க்கிறது. இந்த வகையில் அரவிந்தன் இந்துத்துவ சிந்தனையாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவுமே திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
கஜினிமுகமதுவின் படையெடுப்புகளையும், ராஜராஜ சோழனின் படையெடுப்புகளையும் ஒப்பிடும்போதும் சரி, தன் அண்ணன் ஔரங்கசீப்பால் இஸ்லாமிய விரோதி என்று குற்றம் சாட்டப் பட்டுக் கொல்லப் பட்ட தாரா சுகோவின் தரப்பை முன்வைக்கும்போதும் சரி, மார்க்சியப் பார்வையையும் சீனாவின் “பொன்னுலக சுரங்கங்களையும்” விமர்சிக்கும்போதும் சரி, வரலாற்றில் அடிமை முறையை முதலில் ஒழித்தது யார் என்று ஆராயும்போதும் சரி – இதே நடுநிலை நோக்கையும், அதிகூர்மையான வாதங்களையும் நாம் கண்டுணரலாம்.
தொன்மம், மதம், அறிவியல், சமூகம், சூழலியல், மானுடநேயம், பிரபஞ்சம் அளாவிய நோக்கு என்று பல தளங்களில் விரிந்து செல்லும் சிந்தனை இழைகளை இத்தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் நீங்கள் பார்க்கலாம். பேசுபொருட்களின் வீச்சில் மட்டுமல்ல, ஆழத்திலும் இக்கட்டுரைகள் சளைத்தவை அல்ல. ஒவ்வொரு கட்டுரைக்குப் பின்னும் அதற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய சான்றுகளின் பட்டியலே இதற்குச் சான்று.
இன்றைக்கு தமிழகத்தின் முக்கிய சிந்தனையாளர்களில் வைத்து எண்ணத் தக்கவர் அ.நீ. அரவிந்தனின் தீவிர ஆய்வு நோக்கும், தொடர்புடைய துறைகளில் அவரது தேர்ந்த புலமையும் அவரைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் நன்கறிந்தது. ஒரு மூன்று பக்கக் கட்டுரைக்குக் கூட அவர் அமைக்கும் பரந்துபட்ட களமும், தரும் உழைப்பும் அசாதாரணமானவை. எனது நெருங்கிய நண்பர் என்பதற்காகச் சொல்லவில்லை, அரவிந்தனின் எழுத்துக்களைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருமே அதனை மனப்பூர்வமாக உணரமுடியும்.
இந்தத் தொகுப்புக்கு “ஹிந்துத்துவ சிந்தனைகள்” என்று பதிப்பகத்தார் பெயர் சூட்டியுள்ளனர். ஃப்ராக்டல்கள் (fractals) பற்றிய அறிவியலும், அம்பேத்கரின் சாதிய நிராகரிப்புப் பார்வையும், காலனிய சக்திகளின் காடழிப்புச் செயல்களின் பின்னுள்ள வர்த்தக அரசியலை அம்பலப் படுத்துவதும், பெண் அறிவியலாளர்கள் பற்றிய சித்தரிப்பும் எல்லாம் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தத்தில் தான் சரியாகப் பொருந்துகின்றன என்று அவர்கள் கருதியிருப்பதாகத் தெரிகிறது. வாழ்க! அவர்கள் எண்ணம் உண்மையிலேயே சரியானது, பாராட்டுக்குரியது. இந்துத்துவம் ஒரு குறுகிய சமூக, அரசியல் சித்தாந்தம் அல்ல, மாறாக உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்று அரவணைக்கும் மானுடநேய நோக்கு என்பதை இந்தப் பெயரே சொல்லிவிடுகிறது. இந்துத்துவ சிந்தனையாளரான தீனதயாள் உபாத்யாயா உருவாக்கிய “ஒருங்கிணைந்த மனிதநேயம்” (integral humanism) என்ற கருத்தாக்கத்துடன் இயைவதாகவும் இது உள்ளது.
அதே சமயம், இந்த அற்புதமான நூலுக்கு ”இந்துத்துவ முத்திரை” குத்தியிருப்பதால், பெயரைப் பார்த்தே முகம் சுளித்து எதிர் தரப்பாளர்களும், நடுநிலைப் பாவனைக்காரர்களும் புத்தகத்தைத் தள்ளி வைக்கக் கூடும். அப்படித் தள்ளி வைப்பவர்கள் ஒரு மாபெரும் சிந்தனைக் களஞ்சியத்திற்குள் நுழையும் வாய்ப்பைத் தாங்களே வலிய இழக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்தோ! அவர்களுக்காகப் பரிதாபப் படுகிறேன்.
இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் கிழக்குப் பதிப்பகத்துக்குப் பாராட்டுக்கள்.
நம்பக் கூடாத கடவுள் – ஹிந்துத்துவ சிந்தனைகள்
பக்கங்கள் 160
விலை: ரூ. 90
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600018.இந்தப் புத்தகத்தை இணையம் மூலம் இங்கே வாங்கலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிழக்குப் பதிப்பக அரங்கில் கிடைக்கும்.
பி.கு 1:
இனிய, எளிய நடையில் ”ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்” என்ற புத்தகத்தையும் அ.நீ எழுதியிருக்கிறார். கிழக்குப் பதிப்பகத்தின் ஒரு பிரிவான மினிமேக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகம் பற்றிய விவரங்கள் இங்கே.
பி.கு 2:
அரவிந்தன் நீலகண்டன், ராஜீவ் மல்ஹோத்ரா இருவரும் இணைந்து எழுதியிருக்கும் BREAKING INDIA: Western Interventions in Dravidian and Dalit Faultlines என்ற விரிவான நூல் இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. சமகால தமிழக அரசியல்,சமூக ஆய்வில் ஒரு புதிய, திருப்புமுனையான பார்வையை இந்த நூல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நூல் விரைவில் தமிழிலும் வெளிவரும்.
நம்பக்கூடாத கடவுள் தலைப்பே மிக வித்தியாசமாக இருக்கிறது. மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களின் எழுத்துக்களையும் நீண்ட நாட்களாக இத்தளதத்தில் காண இயலவில்லை. ஆனால் தற்போது ஒரு சீரிய எழுத்தாளரின் சிறப்பான புதிய புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்யும் வகையில் கட்டுரை வரைந்திருப்பதைக் கண்ட போது மகிழ்வைத் தருகிறது.
அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் புத்தகம் வித்தியாசமான… இருபக்க சிந்தனையும் உடையதாய் அற்புதமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நாமும் புத்தகத்தினை மிக ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்..
“சொல்லும் சொல்லை சரதமாக
சொல்லி செம்மை காத்திடுவான்
அல்லும் பகலும் மிக உழைத்தே
அரிய கட்டுரைகள் தந்திடுவான்
பல்லவரும் போற்றும் அரவிந்த
புகழ் நீலகண்டன் தந்தநன்நூல்
வல்லான் ஜடாயு அறிமுகம் தந்தான்
வளர் பணியாற்றி நீவீர் வாழி வாழி”
நமக்குக் கிடைத்திருக்கிற மிகச் சிறந்த சிந்த்னையாளர், ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன். அவரது சிந்திக்கும் ஆற்றலையும், ஆழ்ந்த படிப்பையும், சிந்தித்தவற்றையும், படித்தவற்றையும் கோவையாகவும். தெளிவாகவும், சுவையாகவும் பதிவு செய்யும் திறமையினையும் பத்தாண்டுகளுக்கும் முன்பே கண்டுகொண்டு, தொடர்ந்து அவருக்குப் பாராட்டு மின்னஞ்சல்கள் அனுப்பி வந்திருக்கிறேன். அவரது படிப்படியான, சீரான, நியாயமான வளர்ச்சியினைத் தொலைவிலிருந்து அவதானித்து மகிழ்ந்து வந்துள்ளேன். வயதில் மிகவும் இளையவர் என்பதை முதன்முதலில், அதாவது பத்தாண்டுகளுக்கு முன் கேள்வியுற்றபோது, உடனே திகைப்பும் பின் இரட்டிப்பு மகிழ்ச்சியும் ஏற்பட்டன.
பொதுவாக, ஹிந்துத்துவச் சார்பினர் என்றாலே ஒரு கட்டத்திற்குமேல் வளராத நம்பிக்கைகளையும் சிந்தனைகளையும் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்பவர்கள் என்கிற அபிப்ராயம் இருந்துவருகிறது. அதனைத் தகர்த்தெறிப்பவர்களுள் குறிப்ப்பிடத் தககவர், நம் செல்வன் அரவிந்தன்.
நமது மறைகளில் உட்பொருளாகவும் உபநிடதங்களில் ஓரளவு வெளிப்பபடையாகவும், திருமந்திரம் உள்ளிட்ட சித்தர் வாக்குகளில் மறைபொருளாகவும் உள்ள உண்மைகளை அரவிந்தன் இன்றைய வாசகரின் ரசனைக்கும் புரிதலுக்கும் ஏறபத் தருகிறார்.
இறைவனை உணரவும் அனுபவிக்கவும்தான் இயலும் என்பதும் ஒரு படிநிலைதான். நடை வண்டிக்கு அடுத்த படிநிலைதான் அது. அதற்கு அப்பால் செல்ல முடிந்தவர்களுக்கு இறைச் சக்தியை எங்கும், விரும்பிய எல்லா வடிவங்களிலும் நேரில், ஆம், நேரில்தான், தரிசிக்கவும் இயலும். இது வெறும் பேச்சல்ல.
அரவிந்தனின் பல்துறைக் கட்டுரைகளின் தொகுப்பு கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. அநேகமாக அவை யாவும் நான் முன்னரே படித்தவையாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் மொத்தமாகப் படிக்கையில் வாசிப்பு அனுபவம் இன்னும் சுகமாக இருக்கும்.
நூலை அறிமுகம் செய்துள்ள ஸ்ரீ ஜடாயுவுக்கு நன்றி.
ஸ்ரீ ஜடாயு,
பதிப்பாளர்கள் ஹிந்துத்துவச் சிந்தனைகள் என்று பிரகடனம் செய்துள்ளமைக்காகக் கவலைப்பட வேண்டாம். பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும் உள்ளடக்கி ஒருமை காண்பதே ஹிந்துத்துவக் கண்ணோட்டம் என்பது நீங்கள் அறிந்ததுதானே! ஒருவகையில் அவ்வாறான பிரகடனம் ஹிந்துத்துவக் கண்ணோட்டம் உள்ள அனைவருக்கும் பெருமை தருவதாகவும் மற்றவர்களுக்கு என்னதான் சொல்லப்பட்டுள்ளது என்கிற ஆர்வத்தை ஊட்டுவதாகவுமே இருக்கும். மேலும், நூலின் தலைப்பும், அதனைத் தொடர்ந்து வருகிற பிரகடனமும் பார்க்கிறவர்களுக்கெல்லாம் நூலைப் படிக்க வேண்டும் என்கிற தூண்டுதலையே தரும்.
ஸ்ரீ அரவிநதனுகு நிறைய வயது இருக்கிறது. இது எனக்கு மிகுந்த நிம்மதியும் மன நிறைவும் தருகிற விஷயம். மேலும் மேலும் நமது சமுதாயத்திற்குத் தேவையானவற்றை அள்ளித் தந்துகொண்டிருப்பதற்கான அவகாசம் அவருக்கு உள்ளது. எனினும், எஞ்சியிருக்கிற எனது ஆயுளிலிருந்து மேலும் ஒரு பத்தாண்டுகளை அவருக்கு மனப் பூர்வமாக அளிக்கிறேன்.
-மலர்மன்னன்
அன்புள்ள சர்மா அவர்களுக்கு, தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
// அநேகமாக அவை யாவும் நான் முன்னரே படித்தவையாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் மொத்தமாகப் படிக்கையில் வாசிப்பு அனுபவம் இன்னும் சுகமாக இருக்கும். //
அன்புள்ள மலர்மன்னன், இவற்றை நீங்கள் படிக்க வாய்ப்பிருந்திருக்காது என்று நினைக்கீறேன்.. இவை பழைய கட்டுரைகள் அல்ல. 2010 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடர்ச்சியாக தமிழ்பேப்பர் தளத்தில் எழுதியவை.
// பதிப்பாளர்கள் ஹிந்துத்துவச் சிந்தனைகள் என்று பிரகடனம் செய்துள்ளமைக்காகக் கவலைப்பட வேண்டாம்.//
நான் கவலைப் படவில்லை, வாழ்த்து தானே சொல்லியிருக்கிறேன் :)) !
//அதே சமயம், இந்த அற்புதமான நூலுக்கு ”இந்துத்துவ முத்திரை” குத்தியிருப்பதால், பெயரைப் பார்த்தே முகம் சுளித்து எதிர் தரப்பாளர்களும், நடுநிலைப் பாவனைக்காரர்களும் புத்தகத்தைத் தள்ளி வைக்கக் கூடும். – ஸ்ரீ ஜடாயு//
இப்படி நீங்கள் எழுதியிருப்பதால்தான் அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது.
-மல்ர்மன்னன்
புத்தக அறிமுகம் ஆவலைத் தூண்டுகிறது. நீலகண்டனின் கருத்துகளோடு நான் சில சமயம் வேறுபடுகிறேன், ஆனால் அவர் முக்கியமான சிந்தனையாளர் என்பதில் சந்தேகமே கிடையாது. கட்டாயமாகப் படிக்க வேண்டும். நன்றி ஜடாயு!
விஜயவாணி தளத்தில் ஸ்ரீமதி ராதா ராஜன் மற்றும் ஸ்ரீ தமிழ்செல்வன் இவர்களின் பதிவுகளை படித்ததில் தமிழ் ஹிந்து தளம் அறிமுகமானது. இந்த தளத்தின் மூலம் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது. கருத்து வேறுபாடுகள் ஸஹஜம் என்றாலும் நான் வாசித்த ஸ்ரீ அ.நீ அவர்களின் பதிவுகளில் முக்யமாக கவனித்தவை பதிவுகளின் பின் தொக்கி நிற்கும் அவர் உழைப்பு மற்றும் மிக முக்யமாக கத்தி முனையில் நிற்பது போன்றும் அறவே காழ்ப்பு இல்லாததுமான அவரின் நடுநிலை கருத்துகள். குமரி நில மீட்சி மற்றும் சீனா சம்பந்தமாக அவர் பதிவுகளை படித்துள்ளேன். கடவுள் சம்பந்தமான பதிவு தலைப்பால் குழப்பம் தருகிறது. படித்தால் குழப்பம் அகலலாம். நூல் அறிமுகத்திற்கு நன்றி ஸ்ரீ ஜடாயு.
திரு.ஜடாயு,
நூல் அறிமுகத்திற்கு நன்றி.
இந்த கட்டுரையில் நான் ரசித்த வரிகள்.
“படைக்கும் தெய்வம் எளிய மனத்துக்குத் தேவையாக இருக்கலாம், ஆனால் பண்பட்டு விரியும் ஞானத் தேடல் கொண்ட மானுடத்துக்கு அல்ல. “
என்னைப் பொருத்தவரை, உலகில் பெரும்பாலானோர் எளிய மனத்தில்தான்
தன் தேடல்களை ஆரம்பிப்பவர்கள். கொஞ்சம் பண்பட்டாலும் அவர்களுக்கு
சில பிடிப்புகள் தேவைப்படும். மிக மிக சிலரே பண்பட்டு, இயற்கையுடன்
நேரடியாக எந்தவித பாரம்பரிய கட்டமைப்பிலிருந்தும் விலகி தங்கள்
தேடல்களை நடத்துபவர்கள்.
சாதாரண மனிதனுக்கு, எளிய மனதுக்கு இந்த தேவை இருக்கிறது என்பதை
திரு.அரவிந்தன் விளக்கியிருப்பார் என்றே நம்புகிறேன்.
அவர் கூறுவதை நான் சில அத்வைத தத்துவ புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். L.K.G படிக்கும் குழந்தைக்கும் P.H.d படித்தவருக்கும்
வித்தியாசம் இருந்துதான் தீரும். முற்றிய வைராக்கியம் பெற்ற வெகு
சில உத்தம அதிகாரம் (தகுதி) படைத்த, ஞான தேடலின் உச்சானிக்
கொம்பில் இருக்கும் ஒருவருக்கு பூஜையோ, புனஸ்காரமோ, தெய்வ
வழிபாடோ அவசியம் இல்லை என்பது மட்டுமல்லாமல் அது கூடவே
கூடாது என்று அறிவுறுத்துவது நம் பாரம்பரியம். ஆனால் இது இலட்சத்தில்
ஒருவருக்கோ அல்லது கோடியில் ஒருவருக்கோ மட்டுமே சாத்தியம்.
இருந்தும் சாதாரண மக்களுக்கும் இந்த சிந்தனையின் முழு பரிமாணத்தையும்
வழங்கியே வந்துள்ளது நம் பாரம்பரியம்.
மேலும், கொஞ்சம் உலக அனுபவம் பெற்றவர் நேரடியாக “Richard
Dawkins”ஐயோ அல்லது “Christopher Hitchens”ஐயோ படித்தால்
அவர் அப்பட்டமான நாத்திகராக மாறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
ஆனால் நம் பாரம்பரிய நூல்களை ஒரளவு கற்றபின் மேற்கூறிய
நூல்களை படித்தால் சிறிய அதிர்ச்சிகள் ஏற்பட்டாலும் “Macro Level
Understanding” இருப்பதால் சுதாரித்து கொள்ள முடியும். நான் என்
அளவில் கண்கூடாக கண்டது இது.
அடுத்து, இந்த தலைப்பை கண்டவுடன் எனக்கு சில சிந்தனைகள்
தோன்றின. நாத்திகவாதம் போல தோன்றும் இவை இந்த கட்டுரைக்கு
ஆதரவாகத்தான் இருக்கும். “நம்பக்கூடாத கடவுள்” என்னும் தலைப்பு
அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் நடைமுறை எதார்த்தம் அதுதான்.
நான் படித்த வரை வரலாறு முழுவதும் உலகெங்கிலும் ரத்தமே பீறிட்டு
மனிதத்தை சிதைத்துள்ளன. நம் ஹிந்து தெய்வங்களானாலும் சரி,
ஆப்பிரகாமிய தெய்வங்களானாலும் சரி, இந்த மாபெரும் ரத்த
வேள்விகளை நிறுத்தியதேயில்லை. எளியோர்களை காப்பாற்றியதே
இல்லை.
– வட இந்தியாவில் கடந்த 1000 ஆண்டுகளாக ஹிந்துக்கள் சிந்திய
இரத்தத்தையும், அடைந்த அவமானங்களையும், ஆயிரக்கணக்கானவர்கள்
கொன்று குவிக்கப்பட்ட போதும், ஒரு முறையும் எந்த கடவுளும் வந்து
எளியோர்களை காப்பாற்ற வில்லை.
-காஷ்மீரில் இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் விரட்டியடிக்கப்பட்ட
போதும் எந்த கடவுளும் உதவிக்கு வர வில்லை.
-இந்திய்-பாகிஸ்தான் பிரிவினையின் போதும் 10 இலட்சம் மக்கள்
கொல்லப்பட்ட போதும், அவர்களின் அல்லாவும் வரவில்லை. நம்
சிவனோ நாராயணனோ வரவில்லை.
-ஜெருசெலத்தை அடைய கிறிஸ்தவர்கள் க்ருசேட் நடத்தியபோது
கொல்லப்பட்ட அப்பாவிகளைக் காப்பாற்ற ஒரு தெய்வமும் வர வில்லை.
-கத்தோலிக்கர்களுக்கும் Protestantsம் இடையில், ஷியாக்களுக்கும்
ஸுன்னிகளுக்கும் இடையில் என்று இன்று வரை தொடரும்
அட்டூழியங்களிலிருந்து அப்பாவிகளை காப்பாற்ற அவர்களின் அல்லாவோ
Fatherஓ வரவில்லை.
என்னைப்பொருத்தவரை இனிமேலும் ஒரு தெய்வமும் நேரடியாக
வரப்போவதில்லை. திரு.அரவிந்தன் வழிமொழியும் பரிணாம வளர்ச்சி
கோட்பாட்டின் படி Survival of the Fittestன் படிதான் எதுவும் நடக்கப்
போகிறது. என்ன! ஒரே ஒரு வித்தியாசம், விலங்குகளை பொறுத்தவரை
உடல் பலம், சுற்றுச்சூழலுடன் ஒருங்கினைந்து வாழும் திறன் என்பது
மட்டுமே Fittest என்னும் விளக்கத்துக்குள் வரும்.
மனிதர்களை பொருத்தவரை புத்திபலமும் சில இனங்களை காப்பாற்றும்.
700 கோடிகளாக மாறிவிட்ட உலக மக்கள் தொகைக்கு தேவையான
இயற்கை வளங்கள் கண்டிப்பாக இல்லை. சில இனங்கள்தான் இயற்கை
வளங்களை அடையும் இந்த போட்டியில் ஜெயிக்க போகின்றன. மற்றவை
அழியத்தான் போகின்றன.
திரு பாலாஜி அவர்களே
//
என்னைப்பொருத்தவரை இனிமேலும் ஒரு தெய்வமும் நேரடியாக
வரப்போவதில்லை. திரு.அரவிந்தன் வழிமொழியும் பரிணாம வளர்ச்சி
கோட்பாட்டின் படி Survival of the Fittestன் படிதான் எதுவும் நடக்கப்
போகிறது. என்ன! ஒரே ஒரு வித்தியாசம், விலங்குகளை பொறுத்தவரை
உடல் பலம், சுற்றுச்சூழலுடன் ஒருங்கினைந்து வாழும் திறன் என்பது
மட்டுமே Fittest என்னும் விளக்கத்துக்குள் வரும்.
மனிதர்களை பொருத்தவரை புத்திபலமும் சில இனங்களை காப்பாற்றும்.
700 கோடிகளாக மாறிவிட்ட உலக மக்கள் தொகைக்கு தேவையான
இயற்கை வளங்கள் கண்டிப்பாக இல்லை. சில இனங்கள்தான் இயற்கை
வளங்களை அடையும் இந்த போட்டியில் ஜெயிக்க போகின்றன. மற்றவை
அழியத்தான் போகின்றன.
//
எனக்கு தெரிந்த வரை – totally probabilistic events தான் ஜெயிக்கும் – யார் fiitest என்பது ஒரு பொருட்டே அல்ல – முஹம்மதின் பிறப்பு ஒரு probabilistic event தான் – அது உலகை இன்றைக்கு என்ன செய்திருக்கிறது பாருங்கள்
இந்த உலகில் மாபெரும் மாற்றங்கள் இப்படியாக random probabilistic events மூலமாக தான் நடந்துள்ளன
புத்தகத்தை படிக்க ஆவலாக உள்ளது. அருமையான புத்தக மதிப்புரை வளர்க உமது சேவை
மணிவண்ணன்
புதுவை
கடவுளை உணர்வதும் அனுபவிப்பதும் தாம் அடிப்படைத் தேவைகள். அவற்றை அடைந்தபின், நம்புவது அல்லது நம்பாதது என்னும் பேச்சுக்களுக்கு இடமேயில்லை.
கட்டுரையாளரும் அறிமுகம் செய்தவரும் பாராட்டுக்களுக்குரியோர். பணி தொடர இறை அருளுடன் வாசகர்கள் உதவட்டும்.