“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மாதம் மாறியது ஏன்?” தொடரின் 11ம் பாகம்
இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம். வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி இந்த பாகத்தில் பார்ப்போம்.
முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10
ஒரு மதம் மனிதர்களுக்கு வழங்க வேண்டிய ஆன்மீக தர்மத்தையோ அல்லது சமூக, சமய வழிபாட்டு ஒற்றுமையையோ இந்து மதம் இன்றைக்கு இருக்கிற நிலையில் தீண்டத்தகாதவர்களுக்கு அளிக்கவில்லை என்று தீண்டத்தகாதவர்களிடையே யுள்ள சிந்தனையாளர்கள் வட்டாரம் நம்புகிறது.
இரண்டாவதாக, ஓரிடத்திலிருந்து பிடுங்கி மற்றோரிடத்தில் நாற்று நடுவதைப்போல மனிதப் பண்பை முற்றிலுமாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்று தாழ்த்தப்பட்ட வகுப்பிலுள்ள சிந்தனையாளர் பிரிவு கருதுகிறது.
இது ஒரு கடினமான நடவடிக்கை. இதனை சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்க வேண்டும். முறைப்படுத்தி நிறைவேற்ற இதற்குக் காலம் நீடிக்கும்.
மூன்றாவதாகக், காலப்போக்கில் இந்துசமயம் தன்னையே சீர்திருத்திக்கொள்ளும். அது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக ஆகும் என்று தீண்டத்தகாதவர்கள் இந்த விஷயத்தில் அவர்களுக்கு மிகுந்த சந்தேகங்கள் இருந்தாலும்கூட – எண்ணினார்கள். ஆகவே இந்த இடைக்காலத்தில், இத்தனையாண்டுக் காலமாக இந்துமதத்தின் இயல்பான கொடுமைகள், அடக்குமுறைகள், அநீதிகள் ஆகியவற்றினால் தீண்டத்தகாதவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை அவர்கள் தாங்கிக் கொள்கிற அளவு போதுமான அரசியல் பாதுகாப்புகள் கிடைத்தால், தீண்டத்தகாதவர்கள் இருக்கிற இடத்திலேயே தொடர்ந்து இருக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், இந்தியா முழு சுதந்திரம் அடைந்து அதில் பெரும்பான்மை இந்துக்கள் அடாதவழிகளில் அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டால், இப்பொழுது இருப்பதைவிட அதிகமாகத் தாங்கள் இன்னலுற வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையை இந்துக்கள் அங்கீகரிக்க மறுத்தால், தீண்டத்தகாதவர்கள் விரும்புகிற அரசியல் பாதுகாப்புக்களை அவர்களுக்குத் தர மறுத்தால், வேறு ஏதாவதொரு மதத்திற்குத் தீண்டத்தகாதவர்கள் மாறுவது அவசர அவசியப் பிரச்சினையாக எழும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
நான்காவதாக, இந்துமதத்தைவிட்டு வெளியேறுவதாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையேயுள்ள அறிவுஜீவிகள் ஒப்புக்கொண்டாலும், அவர்கள் எந்த மதத்தைத் தழுவுவது என்பதில் ஒட்டுமொத்த உடன்பாடு கொண்டிருப்பதாகக்கூற முடியாது. அதில் இன்னமும் எந்த முடிவும் ஏற்படவில்லை.
கிறுத்துவத்துக்கு வராதே என்ற கிறுத்துவர்கள்
கடைசியாக, (ரெவ. லிவிங்ஸ்டன் யோசனை கூறியிருப்பதுபோல்) ஆயத்தப் பயிற்சி ஏதும் இல்லாமலேயே ஐந்துகோடித் தீண்டத்தகாதவர்களைத் தங்கள் மதத்தில் இணைத்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் அனுமதிக்கலாமா என்ற பிரச்சினையைப் பொறுத்தவரை, அந்த எதிர்ப்பை எழுப்புகிறவர்கள் உண்மையான மதமாற்ற வரலாற்றில் தீண்டத்தகாதவர்களின் மதமாற்றம் மட்டும்தான் ஒரே நிகழ்வாக இருக்கும் என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள் என்று கூற விரும்புகிறேன்.
இன்றைக்கு கிறிஸ்தவர்களிடையேயும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களிடையேயும் மதம் என்பது பரம்பரையாக ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒன்றுதான். ஒரு கிறிஸ்தவர் தன் தந்தையின் சொத்துக்களையும் அதோடு கூட தந்தையின் மதத்தையும் பாரம்பரியமாகப் பெறுகிறார். கிறிஸ்தவ மதத்தோடு பிற மதங்களை ஒப்பிட்டு அவற்றின் ஆன்மீகக் கொள்கைகளுக்கேற்ப தனது முடிவை அவர் எப்போதுமே எடுப்பதில்லை.
வரலாற்று பூர்வமாகவே, கிறிஸ்துவ மதமாற்றமானது பெரும் எண்ணிக்கையிலேயே நடைபெற்றிருக்கின்றது. அத்தைகய மதமாற்றங்கள் ஆன்மீகக் கொள்கைகளை உணர்ந்ததன் அடிப்படையில் நிகழவில்லை.
தீண்டத்தகாதவர்கள் மதம் மாறுவார்களேயானால், வெவ்வேறு மதங்களின் ஆன்மீகக் கொள்கைகள், சமூகப் பார்வைகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு ஆராய்ந்த பின்னர்தான் மதமாற்றம் நிகழும். எனவே, தீண்டத்தகாதவர்களின் மதமாற்றம் ஏதோ வியாபார ரீதியில் நடைபெறுகிறது என்று யாரும் எள்ளளவும் ஐயப்படத் தேவையில்லை. அப்படி இல்லாமல் தீண்டத்தகாதவர்களின் மதமாற்றத்தினால் அவர்களுக்கு ஆன்மீக மற்றும் சமூக குணாம்சங்களைத் தவிர வேறு ஏதாவது நன்மைகள் கிட்டுமானால் அவை தற்செயலானவையாக இருக்குமே தவிர திட்டமிடப்பட்டதல்ல’’ என்று கூறினார்.
அம்பேத்கர் எந்த மதத்தில் மாறுவது என்பது பற்றி யோசிக்கையில் அவர் முன் இருந்த மதங்கள் சீக்கியம், பௌத்தம், இஸ்லாம், கிறித்துவம் ஆகியவைதாம்.
முதன்மையான தேர்வு சீக்கியமே
ஆனால், அம்பேத்கரின் உள்ளத்தில் மதமாற்றம் முடிவான உடன் அவர் தேர்ந்தெடுத்தது சீக்கிய சமயமே என்பது பலருக்கு வியப்பளிக்க கூடிய செய்தியாகும்.
ஆம். அவர் முதலில் தேர்ந்தெடுத்தது சீக்கிய சமயத்தைத்தான்.
1935 அக்டோபர் 26ல் நாசிக் முற்போக்கு இந்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களுடன் அம்பேத்கரிடம் ஒரு நேர்காணல் நடத்தினர். அப்போது அம்பேத்கர் புத்தசமயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. அரிசன சமுதாயம் முழுமையும் வலிமையானதொரு சமுதாயத்துடன் ஒன்றறக் கலந்து இணைய வேண்டுமென்று விரும்புகிறேன். ஆரிய சமாஜத்துடன் இணைவதில்லை என முடிவு செய்துள்ளோம். சீக்கிய சமயத்தில் சேருவது பற்றிக் கருதிப் பார்க்க விரும்புகிறோம் என்று அவர்களிடத்தில் கூறினார்.
இயோலா மதமாற்ற அறிவிப்புக்குப்பின் அம்பேத்கருக்கு பல சமயத்தவர் தந்தி அனுப்பினர். சீக்கிய மதத்தவர்களுக்குரிய பொற்கோயிலின் செயற்குழுத் துணைத்தலைவர் சர்தார் தலிப்சிங் தோபியா அவர்களும் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார்.
அதில் ‘சீக்கிய மதம் ஒரேயொரு கடவுள்தான் உண்டென்று நம்புகிறது. இம்மதத்தில் எல்லோரும் ஒருவருக் கொருவர் சமமான மரியாதை கொடுத்து நடந்துகொள்வார்கள்’ என்று தெரிவித் திருந்தார்.
அம்பேத்கர் அவருக்குப் பதில் எழுதுகையில் ‘ நான் சீக்கிய மதத்தைப் பற்றிச் சிந்தித்து வருகிறேன்’ என்று குறிப்பிட்டார்.
அவர் சீக்கிய மதத்தினர் நடந்திய ஒரு குர்பானி பஜன் பிகழ்ச்சிக்கு 13-1-1936 அன்று வந்திருந்தார். மேலும் அவர் 1936 ஏப்ரல் மாத நடுவில் சீக்கிய மிஷன் மகாநாட்டிலும் கலந்துகொண்டார்.
அமிர்தசரசில் ஏப்ரல் 13, 14 அன்று நடைபெற்ற சீக்கிய மிஷன் மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சீக்கியர்களிடையே நிலவும் சமத்துவக் கோட்பாட்டைப் பாராட்டி, தாம் இந்து சமயத்திலிருந்து விலகுவதாய்த் தீர்மானித்து விட்டபோதிலும், எங்கு சேர்வதென முடிவு செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.
1936 சனவரி 13ம்நாள் இரவு டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் சோலங்கியும் சீக்கியர்களின் பஜனையில் கலந்துகொண்டனர். அங்கு சீக்கியச் சமயத்தலைவர்கள் அம்பேத்கர் சீக்கிய மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டினர்.
நாசிக்கில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமர்த்தப்பட்ட ஒரு தூதுக்குழுவினர் அம்பேத்கரைத் தீண்டாமையை நடப்பிலிருந்து அகற்றிடத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் தாங்கள் போராடப் போவதாக உறுதிகூறினார்கள். அத்தூதுக் குழுவின் தலைவரான ஆர்.யு. நிரதான் தங்களுடைய முயற்சி கட்டாயம் வெற்றிபெறும் என்று கூறி அம்பேத்கரின் மதமாற்ற முடிவினை மாற்றிட முயன்றார்.
அப்போது அம்பேத்கர் ‘ ‘சமூகத்திற்கு மதம் இன்றியமையாத தன்று என்று சிலர் நினைக்கின்றனர். அக்கருத்து எனக்கு உடன்பாடானதன்று. வாழ்க்கைக்கும் சமூக நடைமுறைக்கும் மதத்தின் அடிப்படைகள் கட்டாயம் தேவை என்று கருதுகின்றேன். இந்துச் சமூக அமைப்பின் அடித்தளமாக மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிற தருமம்தான் இருக்கிறது. அவ்வாறிருக்க தற்போது அந்த ஸ்மிருதியை அடித்தளமாகக் கொண்டிருக்கிற மத அமைப்பை மாற்றி அவ்விடத்தில் நல்லதோர் அடித்தளத்தை அமைக்காதவரையில் இந்துச் சமூகத்தில் இருக்கின்ற சமத்துவம் அற்ற நிலையை அகற்றிட முடியாது என்றே எண்ணுகின்றேன். அத்தகைய நல்ல அடித்தளத்தின் மீது இந்துச் சமூகம் தன்னை மறுசீரமைப்பு செய்துகொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கில்லை’ என்று அக்குழுவினரிடம் விளக்கினார்.
இந்து மதத்திற்கான பாலம் திறந்திருக்கட்டும்
ஐந்தாண்டுக் காலத்திற்குள் மதமாற்றம் மேற்கொள்ளப்படும் என்று அம்பேத்கர் அப்போது சொன்னார். இதற்கிடையில் சாதி இந்துக்கள் அவர்களுடைய ஆக்கப்பூர்வமான செயல்களின் விளைவுகள் மூலம் அவருக்கு நம்பிக்கையூட்டினால் மதமாற்ற முடிவினை மறு ஆய்வு செய்வேன் என்றும் அம்பேத்கர் கூறினார். அவருடைய வகுப்பு மக்களைச் செல்வாக்குமிக்க ஏதாவதொரு வகுப்புடன் இணைத்திட விரும்புவதாகவும், சீக்கிய மதத்தைத் தழுவிட எண்ணங்கொண்டு இருப்பதாகவும் அவர் மேலும் விளக்கினார்.
1936ம் ஆண்டு அம்பேத்கர் அவருடைய மகனையும், அவருடைய அண்ணன் மகனையும் அமிர்தசரஸில் இருந்த குருத்துவாரா மந்திருக்கு அனுப்பி வைத்தார். அவர்களைச் சீக்கியர்கள் நம்பிக்கையுடன் வரவேற்றனர். குருத்துவாராவில் அவர்கள் சீக்கியரின் இனிமையான விருந்தோம்பலில் ஒன்றரை மாதகாலம் இருந்தனர்.
சமயமாற்ற நோக்கில் எந்த சமயத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து டாக்டர் அம்பேத்கர் பல்வேறு மாநிலங்களிலுள்ள தமது உடன் பணியாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தி வந்தார். அம்பேத்கர் சீக்கிய சமயத்தைத் தழுவலாம் என்று முடிவு செய்திருந்தார்.
ஆனால், டாக்டர் அம்பேத்கரின் நண்பர்களுடன் உடன் பணியாளர்களும், அவர் சீக்கிய சமயத்தில் இணைதல் குறித்து, இந்து சமயத் தலைவர்களின் ஆதரவை நாட வேண்டும் என்று கருதுகின்றனர். ஏனெனில், சீக்கிய சமயம் புறச்சமயமல்ல என்று இந்து சபைத் தலைவர்கள் கருதுகின்றனர். இந்து சமயத்திலிருந்தே சீக்கிய சமயம் தோன்றியது. மேலும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. சீக்கியர்களும் இந்து மகாசபையில் உறுப்பினராய்ச் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதன் காரணமாய், இந்து மகாசபையின் செய்தித் தொடர்பாளரான டாக்டர் மூஞ்சே பம்பாய்க்கு அழைக்கப் பட்டார். 1936 ஜூன் 18 இரவு ஏழரை மணிக்கு டாக்டர் அம்பேத்கர் தமது நண்பர் இருவர் முன்னிலையில், ராஜகிருகத்தில் டாக்டர் மூஞ்சேயுடன் உரையாடினார்.
மனந்திறந்த அவ்வுரையாடலில் டாக்டர் அம்பேத்கர் சிக்கல்கள் யாவையும் பற்றித் தெளிவுறுத்தினார். மறுநாள் டாக்டர் அம்பேத்கரது கருத்துக்களின் தொகுப்பு ஓர் அறிக்கையாக டாக்டர் மூஞ்சேவிடம் அளிக்கப்பட்டது. டாக்டர் மூஞ்சே அந்த அறிக்கையின் நகலை இந்துத் தலைவர்களுக்கு அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பினார். அந்த அறிக்கைக்கு ஒப்புதல் தந்து கடிதம் எழுதியவர்களில் டாக்டர் எம். ஆர். ஜெயகர், சேத்விகல் கிஷோர் நிர்லா, சர். சி. விசயராகவாச்சாரியார், ராஜா நரேந்திரநாத் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அறிக்கைக்கு இந்துமகாசபையின் ஒப்புதலைத் தெரிவித்தார்கள்.
டாக்டர் அம்பேத்கர் அளித்த அந்த அறிக்கை :
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே ஆதரவு பெற்று வரும் சமயமாற்றம் இயக்கம் குறித்து இந்துக்கள் அக்கறை கொள்ளாதிருக்க முடியாது. இந்துக்களின் நிலையிலிருந்து கருதினால், ஒடுக்கப்பட்ட மக்கள் சமயமாற்றம் செய்வதைக் கைவிடுமாறு ஊக்குவித்தலே உகந்ததாகும். அது இயலாதெனில், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்துக்கள் அக்கறை காட்ட வேண்டும். ஏனெனில் இது இந்நாட்டின் எதிர்காலத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை விளைவிக்கக்கூடியதாய் இருக்கும்.
இந்துக்களின் ஆதரவோடு மதம் மாறலாம்
அவர்களை இந்துசமயத்திலேயே இருந்துவிடுமாறு இசைவிக்க இயலவில்லையென்றால், அவர்கள் இந்துக்களுக்கோ, இந்நாட்டிற்கோ பெரிதும் தீங்கு விளைவிக்காததொரு சமயத்திற்கு மாறுவதற்கு இந்துக்கள் வழிநடத்தி உதவ வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களே தனியொரு புதிய சமயத்தைத் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பு இல்லை. பெரும்பாலும் இப்போதுள்ள சமயங்களில் ஒன்றைத்தான் அவர்கள் தழுவக்கூடும். எவ்வாறாயினும் இந்தக் கருத்தோட்டத்தின் அடிப்படையிலேயே இந்துக்கள் செயல்படலாம். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எந்தச் சமயத்தைத் தழுவ வாய்ப்பு மிகுதி என்பதே முதல் வினா. எதில் சேர்ந்தால் அவர்களுக்கு நலன்கள் மிகுதியோ அச்சமயத்தில்தான் அவர்கள் சேருவார்கள் என்பது தெளிவு.
ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தேர்ந்தெடுக்கக்கூடிய சமயங்கள் மூன்று. அவை.
1) இஸ்லாம்
2) கிறித்துவம்
3) சீக்கியம்
ஆள் பலமும், அம்பு பலமும்
இவற்றுள் ஒடுக்கப்பட்ட மக்களின் தேவைகள் அனைத்தையும் அளிக்கக்கூடியது இஸ்லாம். நிதிவளத்தைக் கருதினால் இஸ்லாம் சமயத்தில் அது ஏராளமாக உண்டு. சமுதாய நோக்கில் கருதினால் அது நாடு முழுவதும் பரந்து விரவியுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். எனவே சமயம் மாறிவரும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் நலன்களை அவர்கள் பேண முடியும்.
தேவையான உதவிகள் செய்ய இயலும். அரசியல் நோக்கில் கருதினால், இஸ்லாமியருக்கு உள்ள உரிமைகள் யாவும் சமயம் மாறும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கும் கிடைக்கும். சமயம் மாறுவதால் சட்டமன்றங்களில் இடம்பெறும் உரிமையானது பணிகளில் உரிமை போன்று ஏற்கனவே உள்ள உரிமைகள் எதிலும் இழப்பு நேராது.
கிறித்துவ சமயமும் இதே அளவுக்குக் கவர்ச்சியானதாய்த் தோன்றுகிறது. இந்தியக் கிறித்துவர்கள் எண்ணிக்கையில் குறைவானவராயிருப்பதால் அவர்களிடமிருந்து நிதிவளம் கிடைக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற கிறித்துவ நாடுகளிலிருந்து ஏராளமான பொருளுதவி கிடைக்க வாய்ப்புண்டு.
ஒடுக்கப்பட்ட வகுப்பினர் கிறித்துவ சமயத்தைத் தழுவினால் அந்நாடுகள் ஏராளமான நிதியை வாரி வழங்கத் தயாராகவுள்ளன. சமூக நோக்கில் கருதினால், இந்தியக் கிறித்துவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாயிருப்பதால் போதிய ஆதரவை அவர்கள் தர இயலாது என்றாலும், கிறித்துவ சமயத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு உண்டு. அரசியல் நோக்கில், இஸ்லாத்தில் சேருவதால் கிடைக்கும் உரிமைகள் யாவம் கிறித்துவத்திலும் கிடைக்கும்.
முஸ்லீம்களைப் போன்றே கிறித்துவர்களுக்கும் சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடுகள், பணி உரிமைகள் ஆகியன அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இஸ்லாத்துடனும், கிறித்துவத்துடனும் ஒப்பிடும்போது சீக்கியத்தில் கவர்ச்சிகள் அவ்வளவாக இல்லை.
எண்ணிக்கையில் குறைவாக 40 லட்சம் மக்களே கொண்ட சீக்கிய சமூகத்தினர் நிதியுதவியேதும் செய்துவிட இயலாது. சீக்கியர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தில்தான் வாழ்கின்றனர். ஆதலின் நாடெங்கிலும் வாழும் பெரும்பாலான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு அவர்களிடமிருந்து சமுதாய ஆதரவு ஏதும் கிடைப்பதற்கில்லை. அரசியல் நோக்கில், இஸ்லாத்துடனும், கிறித்துவத்துடனும் ஒப்பிடுகையில் பெரியதொரு பின்னடைவும் உண்டு. சட்டமன்ற இட ஒதுக்கீடு, பணியிட உரிமை ஆகியவை சீக்கியர்களுக்குப் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே உண்டு.
நமது அடுத்த கேள்வி, ‘ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம் ஆகிய மூன்று சமயங்களில் எதில் சேருதல், இந்துக்களின் கண்ணோட்டத்தில் மிக உயர்ந்ததாய் இருக்கும்?’ என்பதாகும். சீக்கியமே என்பதே தெளிவான விடையாகும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.
ஏன் வேண்டாம் இஸ்லாமும், கிறுத்துவமும்
சமயமாற்றத்தினால், நாட்டுக்கு என்ன விளைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்துக்கோ கிறித்துவத்திற்கோ மாறுவார்களெனில் நாட்டுநலன்கள் பெரிதும் பாதிக்கப்படும். அவர்கள் இஸ்லாத்தில் சேருவார்களெனில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இரு மடங்காகிவிடும். இஸ்லாமியர்கள் மேலாதிக்கம் பெருகிவிடுமோ எனும் அச்சம் மெய்யாகிவிடும்.
அவர்கள் கிறித்துவத்திற்கு மாறுவார்களெனில் கிறித்துவர்களின் எண்ணிக்கை ஐந்தாறு கோடிக்கு மேல் பெருகிவிடும். அது நாட்டையாளும் பிரிட்டானியர்களுக்கு நாட்டின்மீதும் மேலும் பிடிப்பை மிகுதியாக்கவே உதவும்.
மாறாக, அவர்கள் சீக்கிய சமயத்தைத் தழுவினால், இந்நாட்டின் வருங்கால நலன்களுக்குத் தீங்கு ஏதும் நிகழாது. நாட்டின் வருங்கால நலன்களுக்கு உதவியாகவே இருப்பார்கள். அவர்கள் இந்திய தேசியத்திலிருந்து விலகிவிடமாட்டார்கள்.
மாறாக நாட்டின் அரசியல் முன்னேற்றத்துக்கு உதவியாக இருப்பார்கள். எனவே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பிற சமயத்திற்கு மாறுவதென்று முடிவு செய்தால் சீக்கியசமயத்திற்கு மாறுவதே நாட்டின் நலன்களுக்கு உகந்ததாகும்.
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் சீக்கிய சமயத்திற்கு மாறுவதுதான் இந்துக்களுக்கு உகந்ததெனில், சீக்கிய சமயத்திற்கும், இஸ்லாமிய, கிறித்துவ சமயங்களுக்கும் ஒப்பான உயர்நிலை பெறுவதற்குச் செயல்பட இந்துக்கள் தயாராயுள்ளனரா என்பது மூன்றாவது கேள்வி.
அப்படித் தயாராயிருக்கிறார்களெனில் சீக்கிய சமயத்தில் சேருவதில் உள்ள பின்னடைவுகளை நீக்க அவர்கள் தயாராயிருக்க வேண்டும் என்பது தெளிவு.
பின்னடைவுகளும் பெரிதல்ல
சீக்கிய சமயத்தில் சேருவதிலுள்ள பின்னடைவுகள், பொருளாதார, சமூக, அரசியல் என மூவகையானவை.
சீக்கியத்தின் சமூகப் பொருளாதார, அரசியல் பின்னடைவுகளை நீக்குவதில் அவர்கள் நிச்சயமாய் உதவ முடியும். இவற்றுள் மிக அவசரமாய், உடனடியாய் நீக்கப்பட வேண்டியது அரசியல் பின்னடைவுதான். ஏனெனில் சீக்கிய சமயத்தில் சேருவதற்குப் பெருந்தடைக் கல்லாயிருப்பது அதுவே. நல்லவேளையாக அரசியல் பின்னடைவுக்குத் தீர்வு காணல் ஓர் எளிய செயல்தான். செய்ய வேண்டுவதெல்லாம் பஞ்சாப் தவிரப் பிற மாநிலத்திற்கான தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், சீக்கியர் என்பவர் ஒடுக்கப்பட்ட வகுப்பினரிலிருந்து சீக்கிய சமயத்திற்கு மாறியவர் என்பதைச் சேர்த்து விடுவோமாயின், சீக்கியர்களாக மாறும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்களுக்கும், அவர்கள் மாறாமலேயிருந்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய அரசியல் உரிமைகள் யாவும் கிடைக்கும்.
வகுப்புவாரி ஒதுக்கீட்டில், பல்வேறு வகுப்புகளின் பங்கீடு பற்றிப் பலதரப்பு மக்களிடையேயும் ஒப்பந்தம் ஒன்று காணப்பட்டால் ஒப்பந்தத்திற்கேற்பப் பங்கீடுகளை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டதாகும்.
ஒடுக்கப்பட்ட மக்களோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்துக்கள் முன்வருவார்களெனில் இம்மாற்றத்தை எளிதில் செய்துவிட முடியும். இதற்குப் பூனா ஒப்பந்தத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. இதற்கென இட ஒதுக்கீட்டையும் கூடுதல் செய்ய வேண்டியதில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கான மொத்த ஒதுக்கீட்டில் மாறுதல் ஏதுமிராது. சீக்கியரல்லாத ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் சீக்கியச் சமயத்தைத் தழுவி சமமான தகுதிநிலையில் போட்டியிடலாம் என்பதொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட வேண்டும். சீக்கியர்களாக மாறும் ஒடுக்கப்பட்ட மக்களின் நின்னடைவை நீக்குவதொன்றே இம்மாற்றத்தின் நோக்கமாகும்.
இந்த ஆலோசனையை எதிர்க்க முனையும் இந்துக்கள் பின்வரும் வினாக்களுக்கு விடையளித்தாக வேண்டும் :
1. பூனா ஒப்பந்தத்தின்படி ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை இந்துக்கள் திரும்பப்பெற இயலாது. அவர்கள் முஸ்லீம்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ மாறினால் இவ்விடங்கள் முஸ்லீம்களுக்கோ கிறித்துவர்களுக்கோதான் போகுமென்பதுடன் முஸ்லீம்கள் அல்லது கிறித்துவர்களது மக்கள்தொகை கூடும். இதன் விளைவாக சட்டமன்றங்களில் அச்சமயத்தவர்களுக்கான ஒதுக்கீடு கூட்டப்பட வேண்டுமெனும் கோரிக்கையும் எழும். ஆக இந்த ஒதுக்கீடுகள் பிற சமயத்துக்குத்தான் போய்விடும் எனில், இவை சீக்கியருக்குப் போவதில் இந்துக்களுககு என்ன தடையிருக்க முடியும்?
2. அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் உள்ள உரிமைகள் எவையும் இஸ்லாத்துகோ, கிறித்துவத்துக்கோ மாறுவதால் பறிபோகாது எனில், சீக்கியராய் மாறும் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் ஏன் தமது அரசியல் உரிமைகளை இழக்க வேண்டும். இது, இஸ்லாத்துக்கோ, கிறித்துவத்துக்கோ மாறுவதை ஊக்குவித்து, சீக்கியத்துக்கு மாறுவதைத் தண்டிப்பதாகாதா?
இது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைக் கிறித்துவத்துக்கோ, இஸ்லாத்துக்கோ விரட்டும் செயலாகும். இதை அனுமதிப்பது இந்துக்களின் நலன்களுக்கு உகந்ததாகுமா?
3. இப்போதைய நிலையிலேயே கூட சீக்கிய சமயத்திற்கு மாறும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தமது அரசியல் உரிமைகளை இழந்துவிடமாட்டார்கள். ஏனென்றால் சட்டமன்றங்களில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் பூனா ஒப்பந்தத்தின்படி, இவ்வுரிமைகளைப் பெற அவர்கள் இந்து சமயத்தைத்தான் பின்பற்ற வேண்டுமென்ற நிபந்தனை ஏதுமில்லை. அவர்களுக்கான ஒதுக்கீடுகள் அவர்கள் குறிப்பிட்ட வகுப்பினராகவோ, இனத்தவராகவோ இருப்பதன் அடிப்படையிலேயே கிடைத்தவை. ஆனால் சீக்கியர்களிடையே இந்துக்களின் மீது பகையுணர்வு தோன்ற ஏன் இடம் கொடுக்க வேண்டும்?
4. பல்வேறு மாநிலங்களின் பல்வேறு அரசியல் உரிமை களுக்கான தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சீக்கியர் களையும் சேர்க்கலாமென்பது கடுமையான முன்மொழிவு அன்று. மாறாக அத்தகையதொரு ஒப்பிசைவை வழங்கத் தவறுவதே விசித்திரமான நிலைமையாகும்.
அரசியல் உரிமைகளுக்காக பஞ்சாபில் சீக்கியர்களுக்கு ஒப்பிசைவு வழங்கப்படும்போது இதே ஒப்பிசைவைப் பிற மாநிலங்களிலும் ஏன் வழங்கலாகாது?
பஞ்சாபில் வாழும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் சீக்கிய சமயத்திற்கு மாறுவதால் தமது அரசியல் உரிமைகளை இழக்கமாட்டார்கள் என்றால் பிற மாநிலங்களில் வாழும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு மட்டும் இவ்வுரிமை ஏன் மறுக்கப்பட வேண்டும்?
இவ்வாறு அந்த அறிக்கையில் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் படிக்கும்போது மதமாற்றம் நிகழும்போதுகூட நாட்டின் நலனை முதன்மையானதாகக் கருதிய அம்பேத்கர் பாரத நாட்டின் உண்மையான உயர்ந்த சிறந்த குடிமகன் அல்லவா?
உடன்பட மறுத்தவர்களும், உற்சாக மூட்டியவர்களும்
இந்த அறிக்கைக்கு காந்தி, ராஜாஜி, மாளவியா போன்றோர் சீக்கிய மதத்தில் இணைவதை எதிர்த்து அறிக்கைவிட்டனர்.
அதற்குப் பதிலாக 1936, ஆகஸ்ட் 15ம் தேதி ஜனதா எனும் மராத்தி இதழில் அம்பேத்கர் அறிக்கைவிட்டார்.
அதில் ‘‘…தீண்டப்படாத மக்கள் சீக்கிய சமயத்தைத் தழுவுதல் குறித்துத் தீவிரமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் எனில், தீண்டப்படாத மக்களின் இச்செயல்பாடு சாத்தான் தன்மை வாய்ந்ததுதான் என்பது குறித்து இந்துக்கள்தான் தமக்குள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். இந்து சமயத்தின் வருங்காலத்தில் அக்கறை கொண்டுள்ள இந்து மக்கள்தான் மாபெரும் பார்ப்பனரான இராசகோபாலாச்சாரி, சீக்கிய மதத்திற்கு மாற்றம் பெறுதலை சாத்தான் தன்மை வாய்ந்தது என்று கூறுகையில், அவர் தமது அறிவு, உணர்வுகளையெல்லாம் துறந்துதான் பேசினாரா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
… தீண்டப்படாத மக்கள் சீக்கிய சமயத்தைத் தழுவுவதை சங்கராச்சாரியார், டாக்டர் குற்றக்கொடி போன்ற முன்னணி இந்துத் தலைவர்கள் ஆதரிக்கின்றனர். உண்மையில், தீண்டப்படாத மக்கள் சீக்கிய சமயத்தைத் தழுவலாம் எனும் கருத்தை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தவர்களும், என்னை இதன்பால் ஊக்குவித்து ஈடுபடுத்தியவர்களும் இத்தகைய இந்து சமயத் தலைவர்கள்தாம். இந்துப் பண்பாடு, நாகரிகம் ஆகியவை குறித்து எனக்கிருந்த பொறுப்புணர்வு காரணமாகவே நானும் இக்கருத்தால் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக் கொண்டேன். செய்தித்தாள்களில் வெளிவந்த கடிதப் போக்குவரத்து குறித்த எனது கருத்துக்களைப் படித்த பின்னர், தீண்டப்படாத மக்கள் சீக்கிய சமயத்திற்கு மாறுதல் குறித்து திரு.காந்தி, திரு.எம்.சி. ராஜா, திரு. இராசகோபாலாச்சாரி ஆகியோர் கடைபிடிக்கும் கொள்கை இந்து சமுதாயத்தின் எதிர்கால நலன்களுக்கு உகந்ததா என்பதை இந்துக்கள் தமது விருப்பத்தின்படி முடிவு செய்து கொள்ளலாம்.’’ என்று குறிப்பிட்டார்.
நன்மை பொங்கும் நேரத்தில் நாசமானதே தாழி
அதன்பிறகு அம்பேத்கர் அவருடைய தொண்டர்களடங்கிய ஒரு குழுவினரைச் சீக்கிய சமய நெறிகளைக் கற்பதற்காக வேண்டி அமிர்தசரசில் இருந்த சீக்கிய மத நிறுவனத்திற்கு 1936 செப்டம்பர் 18ம் நாள் அனுப்பினார்.
அக்குழுவினரிலிருந்த 13 பேர்களில் கற்றறிந்த அறிஞர் எவரும் இல்லை. அம்பேத்கரின் கோட்பாடுகளை உய்த்துணர்ந்தவர் யாருமில்லை.
அக்காலகட்டத்தில் அம்பேத்கர் சீக்கிய மத அமைப்புகளுடனும் அதன் தலைவர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். அதன்காரணமாக சீக்கியச் சமயத்தைப் பற்றி கற்க அமிர்தசரசு சென்ற பயிற்சிக் குழுவினர் ஆர்வமிகுதியினால் சீக்கிய மதத்திலேயே சேர்ந்துவிட்டனர். ஆனால் அம்பேத்கரின் நோக்கம் அதுவன்று. அவர்கள் பம்பாய் வந்து சேர்ந்தபோது அவர்களை எவரும் விருப்பமுடன் வரவேற்கவில்லை.
அதனால், சீக்கிய மத அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் அம்பேத்கருக்கும் இடையே உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. அதனால் இருதரப்பினரும் அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி விலகிச் சென்றுவிட்டனர்.
மதம் மாறுவதில் சீக்கிய சமயத்திற்கு இடமில்லை என்பது தெளிவானவுடன் அம்பேத்கர் முன் இருந்த இஸங்கள்:
– கிறித்துவம்
– இஸ்லாமியம்
– கம்யூனிசம்
– பௌத்தம்
இதில் கிறித்துவ மதத்தைப் பற்றி அம்பேத்கர் என்ன முடிவெடுத்தார் என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.
(அம்பேத்கரைத் தொடர்வோம்….)
வெங்கடேசன் சார், நீங்கள் செய்துவரும் இந்த அருமையான தொண்டிற்கு இந்து சமூகம் உங்களுக்கு என்ன கைமாறு செய்யமுடியும் என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. ஒன்றை மட்டும் சொல்கிறேன், இறைவன் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான். தருமம் உங்களை நிச்சயம் காக்கும். தொடரட்டும் உங்கள் மேன்மையான பணி.
நன்றி,
பாலாஜி.
அவர் ஆரிய சமாஜம் வேண்டாம் என முடிவு செய்யக் காரணம் என்ன?
//- கம்யூனிசம்// இதென்ன மதமா?
கட்டுரையாளரின் கருத்துக்கள் யாவும் உண்மையெனும் பட்சத்தில், டாக்டர் அம்பேத்கரின் தேசப்பற்று பிரகாசிக்கிறது.
அதே நேரத்தில், ஹிந்து சமயத்தில் புகுந்திருந்த நடைமுறை ஏற்றத் தாழ்வுகளே மத மாற்றச்சிந்தனைக்கு அடிகோலின என்றும் தெரிகிறது. முன்னணி ஹிந்துத் தலைவர்களின் அறிவுரைப்படியே சீக்கியத்துக்கு மாற யோசனை செய்வதாக அவரே குறிப்பிடுவது, ஹிந்து சமயத்தின்மேல் அவருக்கிருந்த பிரிக்க முடியாத பிணைப்பைக் காட்டுகிறது.
இவற்றுக்கும் மேலாக, ‘கிறிஸ்துவ அல்லது இஸ்லாமிய சமயங்களுள் ஏதோ ஒன்றுக்கு மாறுவது இந்திய தேசிய நீரோட்டத்திலிருந்தும் ஹிந்துக் கலாச்சாரத்திலிருந்தும் தம்மை/தங்களைப் பிரித்துவிடும்’ என்னும் அவரின் உயர்ந்த ஆதங்கத்தை நினைக்கும்போது, சுவாமி விவேகானந்தர் கூறிய “ஒருவன் மதம் மாறுவதால், ‘மதம் ஒருவனை இழக்கிறது’ என்பதைவிட ‘எதிரியின் எண்ணிக்கை ஒன்று அதிகரிக்கிறது’ ” என்ற கருத்தை நேர்க்கிறது.
தவிர, தற்போதைய மத மாற்றங்களுக்கும் அம்பேத்கரின் சிந்தனைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. அண்ணல் அம்பேத்கரின் நிலைப்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது, ‘ஹிந்து சமயம் தவறானது’ என்றுணர்ந்து மதம் மாற விரும்பியதாகவும் அமையவில்லை.
உலகாயத ரீதியாகச் சிந்தித்து எடுக்கப்படுகிற முடிவு என்னும் அடிப்படையில் உதித்த கருத்து அது எனப் புரிகிறது. இம்முடிவுக்கும் ஒருவரின் ஆன்மீக உயர்வுக்கு வழி கோலுவதற்கும் நிறைந்த இடைவெளி இருப்பது வெள்ளிடை மலை.
இக்கருத்துக்கள் இத்தொடரின் 11-ஆம் பாகத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு பதிவு செய்யப்பட்டவை.