[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 24-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

கைதிகளின் எண்ணிக்கையை, அவர்கள் எந்த அளவுக்கு மலிந்திருந்தார்கள் என்பதிலிருந்து உணரலாம், அவர்கள், நபர் ஒருவர் இரண்டு திராம் முதல் பத்து திராம் வரை விலைவைத்து விற்கப்பட்டனர். அவர்கள் பின்னர் கஜினிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, நெடுந்தொலைவுப் பட்டணங்களிலிருந்து அடிமை வணிகர்கள் வந்து இவர்களை வாங்கிச் சென்றனர்… அழகியோர், கறுப்பர், செல்வர், ஏழையர் எனற வேறுபாடின்றி, அகப்பட்டோரெல்லாம் அடிமைகளாக்கப்பட்டனர்.

கி.பி.1202-இல் குத்புதீன், களிஞ்சரைக் கைப்பற்றியபோது, கோயில்கள் அனைத்தும் மசூதிகளாக மாற்றப்பட்டு உருவ வழிபாடு பூண்டோடழிக்கப்பட்டது, ஐம்பதாயிரம் ஆடவர் அடிமைத்தளையில் பிணைக்கப்பட்டனர், சமவெளி முற்றுமே இந்து அடிமைத்தனமெனும் இருளில் மூழ்கியது.

புனிதப்போரில் கைப்பற்றப்பட்ட இந்துக்களுக்கு அடிமைத்தனமே கதியாயிருந்ததது. போர் நிகழாத காலங்களிலும் இந்துக்களை இழிவுபடுத்தக் கையாளப்பட்ட கொடுமையான வழிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அலாவுதீனின் ஆட்சிக்காலத்தில் 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சில பகுதிகளில் இந்துக்கள் சுல்தானுக்கு மிகத்தொந்தரவு கொடுத்தனர். எனவே, இந்துக்களைக் கிளர்ச்சி செய்ய முனையுமளவுக்குத் தழைத்தெழவிடாத வகையில் வரிகளால் ஒடுக்க அவர் முனைந்தார்.

குதிரைகளையும் ஆயுதங்களையும் வைத்துக்கொள்ளவோ, உயர்ந்த துணிமணிகள் அணியவோ, உயர்தர வாழ்கை வசதிகளைத் துய்க்கவோ, இயலாதவாறு இந்துக்கள் சுரண்டப்பட்டனர்.

 

ஜிஸியா வரியைப் பற்றி டாக்டர் டைடஸ் கூறுகிறார்:

“சுல்தான்கள், பேரரசர்கள், மன்னர்கள் எனப் பலவகைப்பட்ட ஆட்சிகளிலும், இந்துக்களிடம் ஜிஸியா வரி வசூலிக்கப்பட்டதில் மட்டும் மாற்றமில்லை. வரிவதிப்பு ஆளுவோர்களின் வசூல் திறமையைப் பொருத்து அமைந்தது. இறுதியாக, அக்பரின் அறிவார்ந்த ஆட்சயில்தான் (கி.பி.1665) மொகலாயப் பேரரசு முழுவதிலும் (முஸ்லீம் ஆட்சியின் அடிப்படைக் கொள்கையாக எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நிலவிய) இவ்வரி நீக்கப்பட்டது.”

 

இவ்வரியைப் பற்றி லேன்பூலே கூறுவதாவது:

“இந்துக்களுக்கு நிலத்தின் விளைச்சலில் பாதி வரியாக விதிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து எருமைகள், ஆடுகள் கறவைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வைகள் விதிக்கப்பட்டன. ஏழை, செல்வர் வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு இவ்வளவு, கால்நடை ஒன்றுக்கு இவ்வளவு என்று வரிவிதிக்கப்பட்டது. வரிவசூல் அலுவலர்கள் கையூட்டு பெற்றுச் சலுகை காட்டினால், பணிநீக்கத்துடன், தடியடி, குறடு, கிடுக்கிச்சட்டம், தளையிடல், சிறை முதலான கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். புதிய விதிகள் மிகக் கடுமையாகச் செயல்படுத்தப்பட்டன, ஒரு அலுவலர், 20 இந்துக்களிடமிருந்து, கட்டிவைத்து அடித்தல் போன்ற முறைகளில் வரி வசூலிக்கப் பணிக்கப்பட்டார். இந்துக்களின் வீடுகளில் தங்கம், வெள்ளியேதும் வைத்துக்கொள்வதிற்கில்லை என்பதுடன், வெற்றிலை பாக்கு போன்ற மலிவான இன்பங்களுக்குக் கூட வழியில்லை. அரசின் உள்ளூர் (இந்து) அலுவலர்கள் வறுமையிலேயே வாழ்ந்தனர், அவர்களது மனைவியர் முஸ்லீம் வீடுகளில் பணிப்பெண்டிராகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள், பிளேக் என்னும் கொள்ளை நோயைவிடக் கடுமையாய்க் கருதப்பட்டனர். அரசுப்பணியாளராக நேர்வது மரணத்தைவிடக் கொடுமையான இழிவாய்க் கருப்பட்டது, அத்தகையோருக்கு இந்துக்கள் எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.

 

இவ்வாணை பற்றி அக்கால வரலாற்றாசிரியர் கூறுகிறார்:

“சட்டங்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. சௌக்கிதார்கள், குத்கள், முகாதிம்கள் போன்ற பணியாளர்கள் குதிரையில் செல்லவோ, ஆயுதம் தரிக்கவோ, வெற்றிலை போடவோ, நல்ல துணியணியவோ இயலா நிலையிலிருந்தனர்… இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்கவும் அனுமதிக்கப்படவில்லை… அடியுதைகள், தளைகள், கிடுக்கிச் சட்டங்களில் பிணித்தல் போன்ற முறைகளில் வரிவசூல் செய்யப்பட்டது.,

இக்கொடுமைகளெல்லாம் பேராசை, பிறழ்ந்த அறநெறியுணர்வு காரணமாகச் செய்யப்பட்டன என்பதற்கில்லை. மாறாக, இஸ்லாமிய ஆட்சியின் அடிப்படை வழிமுறைகளாக இவை நிலவிவந்தன. சுல்தான் அலாவுதீன் ஒருமுறை, முஸ்லீம் சட்டநெறிகளின் கீழ், இந்துக்களின் நிலையென்னவெனத் தெளிவுறுத்துமாறு கேட்டபோது, காஜி விடுத்த பதில் இதனையுணர்த்துகிறது. காஜியின் விளக்கமாவது, அவர்கள் திறை செலுத்தக்கடமைப்பட்டவர்கள், வரி வசூல் அலுவலர் வெள்ளி வேண்டுமெனக் கேட்டால், மறுபேச்சின்றி பணிவும், மரியாதையும் காட்டித் தங்கம் கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை. அலுவலர்கள் அவர்களது வாயில் குப்பையைப் போடவிரும்பினால் மறு பேச்சின்றி வாயைத் திற்ந்து அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் செலுத்தும் திறையைப் பணிந்து உவந்து செலுத்துகின்றனர் என்பதற்கு அடையாளமாக இக்குப்பையை வாயில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் புகழை உயர்த்தலே கடமையென்றும், அதையெதிர்க்க முனைவதில் பயனில்லையென்றும் அவர்கள் உணரவேண்டும். அவர்களை இழிவானவர்கள் எனக்கூறி அவர்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருங்கள் எனக் கடவுளே கட்டளையிடுகிறார். இந்துக்களை இழிநிலையில் நடத்துதல் நமது சமயக் கடமை, ஏனெனில் இறைத்தூதருக்கு அவர்கள் உறுதியான எதிரிகள், அவர்களைக் கொலை செய்யவும், கொள்ளையடிக்வும் அடிமைப்படுத்தவும் தூதர் கட்டளையிட்டுள்ளார். அவர்களை இஸ்லாத்துக்கு மாற்றுங்கள்; மறுத்தால் கொலை செய்தோ, அடிமைப்படுத்தியோ, அவர்களது செல்வங்களையும் சொத்துக்களையும் கவர்ந்து கொள்ளுங்கள் எனத் தூதர் கூறியுள்ளார். இந்துக்கள் மீது ஜிஸியா வரி விதிப்பதற்கு இஸ்லாமியச் சட்ட வல்லுநர்களில் பேரரறிஞரான ஹனிபாவே அனுமதியளித்துள்ளார். மற்ற சட்ட நெறியாளர்களோ, இஸ்லாமா, சாலா என்ற இரண்டிலொன்றுதான் இந்துக்களுக்கான தேர்வாகமுடியும் என்று கூறியுள்ளனர்.

கஜினி முகமதுவின் படையெடுப்புக்கும் அகமதுஷா அப்தலியின் படையெடுப்புக்கும் இடைப்பட்ட 762 ஆண்டுக்கால நிலை இதுதான்.’’

 

இவ்வாறு இந்திய தேசத்தின் மீது நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகளைக் குறிப்பிடுகிற அம்பேத்கர் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கூறுகிறார்:

‘‘படையெடுப்புகளின் பல்வேறு விளைவுகளுக்கிடையே முக்கியமானது, தற்போது பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று கோரப்படும் பகுதிகளின் வாழ்க்கைநிலை, பண்பாடு ஆகியவை பெருமளவில் மாற்றப்பட்டுள்ளமையே என்று கருதுகிறேன். எனவே, இப்பகுதிகளுக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்குமிடையே ஒருமைப்பாடு சிதைந்துவிட்டது என்பதோடன்றி வெறுப்புணர்வே மிகுந்துள்ளதெனலாம்.

படையெடுப்புளின் முதல் விளைவு, வடஇந்தியாவுக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்குமிடையிலான ஒருமைப்பாட்டின் சிதைவே. வட இந்தியாவை வென்றபின் கஜினிமுகமது அதை இந்தியாவிலிருந்து பிரித்துக் கஜினியிலிருந்து ஆட்சி செய்தார்.

கோரிமுகமது வட இந்தியாவை வென்றபோது அதை இந்தியாவோடு இணைத்து முதலில் லாகூரிலிருந்தும் பின்னர் டெல்லியிலிருந்தும் ஆட்சிசெய்தார். அக்பரின் அண்ணனான ஹக்கீம், வட இந்தியாவிலிருந்து காந்தாரத்தையும் காபூலையும் பிரித்து ஆட்சிசெய்தார், அக்பர் அவற்றை மீட்டும் வட இந்தியாவுடன் இணைத்தார், அவை மீண்டும் 1738-இல் நாதிர்ஷாவினால் பறிக்கப்பட்டன.

சீக்கியர்களின் எழுச்சி மட்டும் நிகழாதிருந்தால் அப்போதே வட இந்தியா தனித்துப் பிரிந்திருக்கும். எனவே, வடஇந்தியா, அடிக்கடி கழற்றிமாட்டப்படும் புகைவண்டியின் சரக்குப்பெட்டி போலவே இருந்து வந்துள்ளது. இதைப்போன்றே, அல்சாஸ்-லொரைன் பகுதி ஆரம்பத்தில் ஸ்விட்சர்லாந்து தாழ்நாடுகள் இவற்றோடு ஜெர்மனியின் பகுதியாய் கி.பி.1680 வரை விளங்கியது. 680-இல் ஃபிரான்சு வென்று அதனைத் தனது பகுதியாக்கிக் கொண்டது. மீண்டும் ஜெர்மனி 1871-இல் அதைவென்று தமது நாட்டுடன் சேர்த்துக் கொண்டது. 1918-இல் மீண்டும் அது பிரிக்கப்பட்டு ஃபிரான்சுடன் சேர்க்கப்பட்டது. 1940-இல் அது ஃபிரான்சிலிருந்து பிரிக்கப்பட்டு, ஜெர்மனியுடன் சேர்க்கப்பட்டது.

படையெடுப்பாளர்கள் கடைப்பிடித்த ஆட்சிமுறைகள் பல பின்விளைவுகளை இங்கு விட்டுச்சென்றுள்ளன. இவ்விளைவுகளில் ஒன்றே இந்து, முஸ்லீம்களுக்கிடையே நிலவும் கசப்புணர்வு; ஒரு நூற்றாண்டுகால, இணைந்த அரசியல் வாழ்க்கைக்குப் பின்னரும், தணியவோ, மறக்கவே இயலாத அளவுக்கு இக்கசப்புணர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது.

படையெடுப்புகளின் போதெல்லாம் நடைபெற்ற கோயில்களை இடித்தல், கட்டாய மதமாற்றம், சொத்துக்களைச் சூறையாடி மக்களைக் கொன்று குவித்தல், ஆண் பெண் குழந்தைகளை அடிமைப்படுத்திப் பலவகையில் இழிவு செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் தலைமுறை தலைமுறையாய் நினைவில் நிற்பதன் வாயிலாகக் கர்வடைந்துள்ள முஸ்லீம்களுக்கும் அவமான உணர்வில் மூழ்கிய இந்துக்களுக்குமிடையே நல்லுணர்வு நிகழ வாய்ப்பேதும் இல்லையன்றோ? இதுவுமன்றி இந்தியாவின் வடமேற்கு மூலைதான் பல கொடூர நிகழ்ச்சிகளுக்குக் களமாய் விளங்கியது, முஸ்லீம் கொள்ளையர் கூட்டத்தினர் இப்பகுதியில் அலையலையாய் வந்து குவிவர், பின்னர் நாட்டின் பிறபகுதிகளுக்கு வெவ்வேறு திசைகளில் செல்லுவர். இப்படையினர் சிறுசிறு எண்ணிக்கையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சென்றடைந்தனர். காலப்போக்கில் இந்தியாவின் தூரப்பகுதிகளிலிருந்து அவர்கள் பின்வாங்கவும் செய்தனர். நெடுங்காலம் நிலவிய அவர்களது ஆட்சியின்போது இங்கு நிலவிய ஆரியப் பண்பாட்டின் மீது, இஸ்லாமியப் பண்பாடு ஆழமாகப் பதிக்கப்பெற்றதன் விளைவாய் இந்தியாவின் வடமேற்கு மூலையில், பிறபகுதிகளினின்றும் சமய, அரசியல் நோக்குகளில் முற்றிலும் மாறுபட்ட சமுதாயம் உருவாகியது.

முஸ்லீம் படையினர் இந்தியா வரும்போது இந்துக்களுக்கு எதிரான முழக்கங்களோடுதான் வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பு முழக்கங்கள் முழங்கி கோயில்களுக்குத் தீவைப்பதுடன் திரும்பிவிடவில்லை. அப்படிப் போயிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்படிப்பட்ட எதிர்மறை விளைவுகளுடன் அவர்கள் திருப்தியடைந்து விடவில்லை. அதற்கு மேலாக இஸ்லாத்தை இம்மண்ணில் விதைத்துவிட்டுத்தான் சென்றனர். அதன் வளர்ச்சி, ஓங்கியுயர்ந்த தேக்குத்தோப்பு போன்று மாபெரும் அளவில் நிகழ்ந்தது, அத்தோப்பு வட இந்தியாவில்தான் மிக அடர்த்தியாய்ப் பெருகியது. தொடர்ந்துவந்த படையெடுப்பாளர்கள் அதற்கு நல்ல உரமும் நீரும் இட்டு அதனைத் தழைத்தோங்கிடச் செய்தனர். இவ்வளர்ச்சியோடு ஒப்பிடும்போது பௌத்தமும் இந்து சமயமும் வெறும் புதர்களெனக் கிடந்தன. சீக்கியர் எழுச்சி என்னும் கோடரிகூட இப்பெருந்தோப்பைப் பெரிதும் பாதித்துவிடவில்லை.”

இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் இஸ்லாத்தை இம்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றதன் காரணமாக அவர்களின் மனங்களில் முழுமையாக- மனநிறைவாக- இந்திய தேசத்தைத் தங்கள் தாய்நாடாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முஸ்லீம்கள் முழுமையான இஸ்லாமிய அரசு இந்தியாவில் உருவானால் மட்டுமே இந்திய தேசத்தைத் தங்கள் சொந்த தேசமாகக் கருதுவார்கள். இஸ்லாமிய அரசு உருவாக வேண்டுமானால் இந்தியாவில் முழுவீச்சுடன் மதம்மாற்றினால் மட்டுமே அது சாத்தியப்படும். இன்றைய சூழ்நிலையில் மதமாற்றத்தின் மூலமாக மட்டுமே இந்தியாவை மறுபடியும் அடிமைப்படுத்த முடியும். ஆனால் அம்பேத்கரின் எண்ணமோ மீண்டும் இந்தியா அடிமைப்படக்கூடாது என்பதாகும். மீண்டும் இந்தியச் சுதந்திரத்தைக் காக்க, கடைசிச் சொட்டு இரத்தம் உள்ளவரை போராடுவோம் என்பதே அம்பேத்கரின் அறைகூவல்.

 

இதோ அந்த அறைகூவல்:

‘‘என்னை மிகவும் கலக்கமடையச் செய்யும் நிலைமை எதுவென்றால் இந்தியா இதற்குமுன் ஒரே ஒரு தடவை மட்டுமே தன் சுதந்திரத்தை இழக்கவில்லை. இந்திய மக்களே செய்த துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தாலும் இந்தியா தன் சுதந்திரத்தைப் பல தடவை இழந்தது.

முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தபோது சிந்துவின் மன்னன் தாகிரின் படைத் தளபதிகள் முகம்மது பின் காசிமின் கையாட்களிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு தங்களுடைய அரசருக்காகப் போரிட மறுத்தனர்.

ஜெயச்சந்திரன், முகம்மது கோரியை இந்தியா மீது படையெடுத்து வந்து பிருதிவிராஜனுக்கு எதிராகப் போரிடுமாறு அழைத்தான். அவனுடைய உதவியையும், சோலங்கி மன்னர்களின் உதவியையும் அளிப்பதாகக் கோரிக்கு உறுதி கூறினான்.

சிவாஜி இந்துக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது மற்ற மராட்டியத் தலைவர்களும் இராசபுத்திர அரசர்களும் முகலாயப் பேரரசின் பக்கம் நின்று சிவாஜிக்கு எதிராகப் போரிட்டனர்.

பிரிட்டிஷார் சீக்கிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டபோது, சீக்கியர்களின் தலைமைத் தளபதி செயல்படாமல் வாளாவிருந்தார். சீக்கிய அரசைக் காத்திட அவர் உதவவில்லை. 1857-இல் இந்தியாவின் பெரும்பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதந்திரப் போராட்டம் நடந்தபோது சீக்கியர்கள் ஏதும்செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். … வரலாறு திரும்புமா…?

சாதிகள், மதங்கள் முதலான பழைய பகைச் சக்திகளுடன் தற்போது வெவ்வேறான மற்றும் எதிரெதிரான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் பல உருவாகியிருப்பது மேலும் கவலைகொள்ளச் செய்கிறது… நாட்டின் நலனைவிடத் தங்கள் தங்கள் கட்சியின் நலனை இக்கட்சிகள் முன்னிறுத்தாதவாறு இந்திய மக்கள் மனத்திட்பத்துடன் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டின் சுதந்திரம் இரண்டாவது முறையாக இடருக்குள்ளாகிவிடும். மீண்டும் மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடக்கூடும். கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை நம்முடைய சுதந்திரத்தைக் காத்திடுவோம் என்று நாம் உறுதி பூணுவோம்.’’

1949 நவம்பர் 25ம் தேதி அன்று அரசியல் சட்டம் குறித்து நடந்த மூன்றாவது சுற்று விவாதத்திற்குப் பதிலளித்து அம்பேத்கர் இவ்வாறு பேசினார்.

அம்பேத்கரின் இந்த அறைகூவல் இந்திய தேசியத்திற்கானஅறைகூவல்.

இந்திய தேசியம் மறுபடியும் சிதைந்துவிடக்கூடாது என்ற பேரார்வத்தினால்– தேசிய உணர்வினால் உந்தப்பட்டு எழுந்த அறைகூவல்.

இஸ்லாத்தில் மாறியிருந்தால் நாடே சின்னாபின்னமாகியிருக்கும் என்று அம்பேத்கர் கூறியிருந்த வார்த்தைகளோடு இதை இணைத்துப் பார்த்தால் அம்பேத்கர் மதமாற்றத்திற்கு ஏன் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

(தொடரும்…)

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி 21,22-ஆம் பகுதிகளில் இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம், அதனால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இந்தியாவின் பாதுகாப்பு, இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்கான கீழ்ப்படியாமைக் குணம் ஆகியவை குறித்து அம்பேத்கர் தீவிரமாக முன்வைக்கும் கருத்துகளைப் பார்த்தோம். பாகம் 23-இல் முஸ்லீம் அரசர்கள் தங்கள் படையெடுப்பால் எவ்வாறு  புறச்சமயிகள், கோயில்கள், கலாசாரத்தை அழித்தொழித்தார்கள் என்று பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23

6 Replies to “[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்”

 1. மனித மலத்தை மனிதர் சுமக்க வேண்டும் என்ற வழக்கத்தை முகமதியர்கள் ஆரம்பித்ததும் இந்தக் காலத்தில்தான். அதற்கு முன்பு இந்தியாவில் இந்தக் கொடூரப் பழக்கம் கிடையாது.

  .

 2. உங்கள் தளத்தில் தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட்ப்ரெஸ் டெம்ப்ளேட்டின் பெயர் நேருவியன் டெம்ப்ளேட்டா ?

  உங்கள் தளத்தில் மறுமொழி இட்டபின்னர், வேர்ட்ப்ரஸ் எச்சரிக்கை விடுக்கிறது:

  You are posting comments too quickly; slow down.

  .

 3. இப்படி முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் மத்தியில் உள்ள உறவை கெடுத்து நீங்கள் சாதித்த சாதனை என்ன ? எத்தனை கலவரங்களை உருவாக்கியுலீர்கள் இன்னும் எத்தனை உருவாக்க ஆசை ? சாதிக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு அத பாருங்க இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவார்

 4. அன்புள்ள அன்சாரி,

  அம்பேத்காரின் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் சொல்ல ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அப்படி ஒன்றும் இல்லாதபோது , வீண் வார்த்தைகளை உபயோகித்து , மழுப்பாதீர்கள். இஸ்லாத்தில் பெண்ணுக்கு சொத்தில் பங்கு கொடுக்கும்போது ஆணுக்கு சமமாக கொடுக்கப்படவில்லை என்பது உண்மை. பெண்கள் பள்ளிகளில் விஷவாயு செலுத்தும், மற்றும் குடிநீரில் விஷம் கலக்கும் தாலிபானிய, மற்றும் அல்காயிதா விஷக்கிருமிகளின் நடவடிக்கைகளை கண்டித்து, மிதவாத இஸ்லாமிய நண்பர்கள் வாய் மூடி மௌனம் சாதிப்பது என்ன காரணத்திற்காக?

  உண்மையிலேயே , ஆணுக்கு பெண் சமம் என்று நீங்கள் ஏற்றுச்செயல்படாதவரை, உங்கள் மீது அம்பேத்கார் சொன்ன குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று தெளிவாக தெரிகிறது.அதனை பொய்யாக்க வேண்டும் என்றால், ஆணுக்கு சமமாக பெண்ணுக்கும் சொத்துரிமை என்று உங்கள் சட்டத்தை திருத்துங்கள்.

  பெண்கள் ஆணுக்கு சமமாக கல்விபயிலுவதை தடுக்கும் தாலிபானிய, அல்காயிதா விஷமிகளை கண்டித்து அறிக்கை விடுங்கள்.

  ஆண்கள் மசூதிகளில் வழிபடுவதைப்போலவே, பெண்களும் மசூதிகளில் வழிபட ஏற்பாடு செய்யுங்கள்.

  பெண்கள் மதகுருமார்களாக , ஆண்களுக்கு சமமாக பயிற்சி அளித்து, தொழுகைக்கு தலைமை ஏற்க ஏற்பாடு செய்யுங்கள்.

  இவற்றை எல்லாம் செய்தால் தான், உங்கள் பிற்போக்கு ஒழியும். அதன் பின்னரே ஒரு நாகரீகமான நிலையை நீங்கள் பெறமுடியும்.

  பெண்களுக்கு நீங்கள் இழைக்கும்கொடுமைகளை கைவிடாவிட்டால், உலகில் உள்ள எல்லா பெண்களும் சேர்ந்து உங்களை விரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 5. மரியாதைக்குரிய அன்சாரி அவர்களுக்கு, தங்களுடைய கருத்து முதலில் பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற மனிதர்கள். முகமதிய மதத்தின் பிரதிநிதி என்று சொல்லி கொள்ளும் அரசியல் கட்சியின் தலைமை பதவிக்கு வந்தால் முகமதியர்களை விட அதிகம் மகிழ்ச்சி அடைவது ஹிந்துகளே

 6. இவ்வளவு தொழில் நுட்பம் வந்த பிறகும் சமத்துவம் பேசும் அரசியல்வாதிகள் பல நூற்றாண்டுகளாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ள சமுதாய மக்களை அந்த வேதனையில் இருந்து மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது ஒவ்வொரு அரசியல்வாதியும் வெட்கி தலைகுனிய வேண்டிய விசயம். அறிவியல் பேசும்!!!! கம்யூனிஸ்டுகளும் திராவிட ரேஸிஸ்ட்டுகளும் இதற்காக என்ன நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

  பல ஆயிரம் கோடி சொத்து வைத்து உள்ளதாக கூறப்படும் கம்யூனிஸ பரிவார்கள் இது வரை என்ன மாதிரியான ஆராய்சிகள் செய்து உள்ளன.இதில் இருந்து விடுவிக்க போலி போராட்டங்களை தவிர ஆக்கபூர்வமாக என்ன செய்து உள்ளன.
  இந்த கட்டுரையை படிக்கும் தோழர்கள் விவரித்தால் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *