[பாகம் -25] தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் நண்பர்களல்ல – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 25-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பாகிஸ்தானில் நடந்த கொடுமைகள், மானிடர்கள் கண்டிராத கொடூரங்கள்; சொல்ல முடியாத துன்ப துயரங்கள் நடந்தேறியது. கோடிக்கணக்கான மக்கள் தான் வாழ்ந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பல இலட்சம் மக்கள் பதைக்கப் பதைக்க கொலை செய்யப்பட்டனர். சிறுவர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டனர். மானபங்கப்படுத்தப்பட்டனர். தெருக்களிலெல்லாம் மண்டை ஓடுகளும், சிதைக்கப்பட்ட உடல்களும், கருகிய உடல்களும் சிதறிக்கிடந்தன. குற்றுயிராகக் கிடந்த ஆண்களின், சிறுவர்களின், பெண்களின் துன்ப ஓலங்கள் வீதிகளில் எதிரொலித்தன.

பாகிஸ்தானில் இருந்த தீண்டப்படாத வகுப்பு மக்களும் இந்துக்களாக இருந்த காரணத்தினால் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.

தீண்டப்படாத வகுப்பினர் ஜின்னாவை அவர்களுடைய மீட்பராகக் கருத வேண்டும் என்றும், இஸ்லாமியர்களுடன் இணக்கமாக இருக்க விரும்புவதை மிகத் தெளிவாகப் புலப்படுத்தும் தன்மையில் ஒரு பேட்ஜ் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறிவந்த பாகிஸ்தான் சட்டம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த, தீண்டப்படாத வகுப்பைச் சார்ந்தவரான ஜோகேந்திரநாத் மண்டல் கண்ட இனிய கனவுகள் இப்படுகொலைகளால் இடிந்து நொறுங்கின. பாகிஸ்தானில் தீண்டப்படாத வகுப்பினருக்கு ஏற்படும் கொடூரங்களால் அவர் மிகவும் வேதனைப்பட்டார். பின்பு அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தானில் நடந்தவை அம்பேத்கரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஏனென்றால் இஸ்லாமியர்கள் தீண்டப்படாதவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் கொடுமைக்கு உள்ளாக்குவர் என்று அவர் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. பிரிவினை நடப்பதற்கு இரண்டு மாதத்திற்குமுன், அதாவது 1947, ஜூன், 2-ஆம் தேதி ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அம்பேத்கர் பதில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
 

அக்கடிதத்தில் அம்பேத்கர் கூறியிருந்ததாவது:

“….வங்காளப் பிரிவினை பற்றிய எனது கருத்துகளை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். தாழ்த்தப்பட்ட இன மக்களைத் தனியான, சுயேட்சையான பிரிவினராக ஏற்றுக்கொள்ள ஆங்கிலேயர்கள் மறுத்திருக்கிறார்கள் என்பதை எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். பிரிவினையைத் திணிக்கவும் முடியாது.

தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு ஒரே வழி, ஒன்றுபட்ட வங்காளமாக இருந்தாலும் சரி, பிளவுபட்ட வங்காளமாக இருந்தாலும் சரி, தங்களின் பாதுகாப்பிற்காகப் போராடுவதுதான். இந்துக்களைவிட தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் ஒன்றும் பெரிய நண்பர்களல்ல என்பது எனது கருத்து.

தாழ்த்தப்பட்ட இன மக்கள் தங்களின் சொந்த சூழ்நிலை காரணமாக, இந்துக்களின் வங்காளத்திலோ முஸ்லீம்களின் வங்காளத்திலோ சிறுபான்மையினராக வாழ நேரிட்டால் அவர்கள் தங்களை எதிர்நோக்கும் ஒவ்வொரு அவசரக் கட்டத்திலும் தங்களது பாதுகாப்பிற்காகப் போராட வேண்டியதுதான் அவர்களுக்கு உள்ள ஒரே வழி.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்களின் அடிப்படையில், கிழக்கு வங்காளத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட இன மக்கள் பிரிவினை ஏற்படுமானால், தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் நிறைவேறி பயிரிடுவதற்கு அதிக நிலம் கிடைக்கும்போது, கிழக்கு வங்காளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட இன மக்கள் மேற்கு வங்காளத்திற்கு இடம் பெயர விருப்பம் தெரிவிப்பார்களேயானால், கிழக்கு வங்காளத்திலுள்ள தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு மேற்கு வங்காளத்தில் சிறிது இடம் ஒதுக்கித்தர இசைய வேண்டும் என்று இந்துக்களிடம் நான் கூறியிருக்கிறேன். ஆனாலும் இவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை.

இதற்கிடையில், நீங்கள் லீக்குடன் இணைந்து பாடுபட்டு அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு அரசியல் பாதுகாப்பு கொடுப்பதில் ஈவ்லாக்கில் உள்ள இந்துக்களின் கண்ணோட்டம் பற்றிய விஷயத்தில் நான் உங்களைப் போல அவ்வளவு நம்பிக்கையில்லாதவனாக இல்லை. பண்பட்ட உள்ளம் எங்கும் இருக்க முடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்றால், அனேகமாக நாம் விரும்புகிற எல்லாப் பாதுகாப்புகளையும் கொடுக்க அவர்கள் இசைவார்கள். தனித்தொகுதிகள் விஷயத்தில் மட்டும் சில மாற்றங்கள் செய்ய அவர்கள் வலியுறுத்துவார்கள். ஆனாலும் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு தனித்தொகுதிகள் கொடுக்க முஸ்லீம் லீக் தயாராக இருக்கும். ஏனென்றால் தங்கள் இனத்திற்குத் தனித்தொகுதிகள் வேண்டுமென்று அவர்களே விரும்புகிறார்கள். கிழக்கு வங்காள தாழ்த்தப்பட்ட இன மக்களைப் பொருத்தவரையிலும் இது சாதகமான விஷயம்தான் என்பதில் ஐயமே இல்லை.

முஸ்லீம் லீக்கின் முன் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகளை உங்களுக்குத் தெரிவிக்கும்படி என்னிடம் கேட்டிருந்தீர்கள். நான் என்னுடைய கோரிக்கை மனுவில் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படுத்தியிருக்கிறேன். அவை அச்சடிக்கப்பட்டு, சிறுபான்மையினர் குழு உறுப்பினரிடையே சுற்றுக்கு விடப்பட்டிருக்கின்றன. உங்கள் தகவலுக்காக அதன் பிரதி ஒன்றை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். என்னுடைய கணிப்பில், மேற்கு வங்காளம் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் நமது பாதுகாப்பிற்காக நாம் விரும்பும் அனைத்தும் அந்தக் கோரிக்கை மனுவில் இடம்பெற்றுள்ளன. முஸ்லீம் லீக்கோடு பேச்சுவார்த்தை நடத்தும் போது இந்தக் கோரிக்கை மனுவை நீங்கள் பெரிதும் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். மேற்கு வங்காளத்திலுள்ள நமது மக்களுக்கு, அங்குள்ள விசேட சூழ்நிலைகள் காரணமாக ஏதாவது புதிய பாதுகாப்புகள் சேர்க்கப்பட வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் அவ்வாறே நீங்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.’’

இதுதான் அம்பேத்கரின் எண்ணமாக இருந்தது. இந்த எண்ணம் வர ஜோகேந்திரநாத் மண்டலும் ஒரு காரணம். ஏனென்றால் இஸ்லாமியர்களைப் பற்றி நல்லவிதமாகவே அம்பேத்கருக்கு அவர் சொல்லியிருந்தார். இஸ்லாமியர்கள் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி சொல்லியிருந்தார். அதனாலேயே அம்பேத்கர் இஸ்லாமியரை நம்பினார். ஆனாலும் அம்பேத்கருக்குள் ஓர் எண்ணம் இருந்தது. ‘இந்துக்களைவிட தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் ஒன்றும் பெரிய நண்பர்களல்ல என்பது எனது கருத்து’ என்று வெளிப்படையாக அம்பேத்கர் ஜோகேந்திரநாத் மண்டலுக்குக் கூறத் தயங்கவில்லை.

அம்பேத்கரின் இந்த கருத்து பாகிஸ்தான் பிரிவினையின்போது உண்மையிலேயே பலித்துவிட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு இஸ்லாமியர்கள் நண்பர்களல்ல என்பதை இஸ்லாமியர்களே நிரூபித்துவிட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் தாக்கப்படுவது குறித்து அம்பேத்கர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அம்பேத்கரின் தேசிய உணர்வை நாம் புரிந்துகொள்வது மட்டுமல்ல, மதமாற்றம் எதற்காக என்பது பற்றியும் அவர் கூறியுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை.

1947, நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, அம்பேத்கரின் மதமாற்றம் எதை நோக்கியது என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதோ அந்த அறிக்கை…

‘‘இந்தியாவுடன் இணைவதை எதிர்க்கும் நிஜாமுக்கு எவ்வித ஆதரவும் கிடையாது. இந்தியாவின் எதிரியாக இருக்கும் ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த எவரும் அந்த இனத்திற்கு அவப்பெயரை தேடிக் கொடுத்துவிடக்கூடாதென்ற கவலை எனக்கிருக்கிறது” என்றார்.

பாகிஸ்தானிலுள்ள அவரது ஆதரவாளர்களின் நிலை பற்றிக் கேட்டபோது, முஸ்லீம் லீக்கும் அதன் தலைவரும் அவர்களுக்குத் தேவைப்பட்டபோது மட்டும் தாழ்த்தப்பட்ட இனத்தவரை ஆதரிக்கிறார்கள் என்றார். அவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவர்களும்கூட பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும் என்று யோசனை கூறினார்.

இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அமைப்பு ரீதியாக நன்கு திரட்டப்பட்டிருக்கிறார்கள். எனவே இன்றுள்ள அரசின் மேல் தங்கள் செல்வாக்கைச் செலுத்த அவர்கள் தவறமாட்டார்கள் என்று அம்பேத்கர் உணருகிறார்.

 

அம்பேத்கர் கூறுகிறார்…

“பாகிஸ்தானிலும் மற்றும் ஹைதராபாத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எனக்கு ஏராளமான முறையீடுகள் வந்துள்ளன. பாகிஸ்தானிலும் ஹைதராபாத்திலும் அவர்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் காரணமாக அவர்கள் அனுபவித்துவரும் இன்னல்களிலிருந்து மீட்க நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று அவர்கள் கேட்டுள்ளார்கள்.

பாகிஸ்தானில் அவர்கள் இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பலவந்தமாக இஸ்லாமிற்கு மாற்றப்படுகிறார்கள். ஹைதராபாத்தில், அங்குள்ள முஸ்லீம் மக்கட்தொகையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அவர்கள் பலவந்தமாக முஸ்லீம்களாக மாற்றப்படுகிறார்கள். மேலும், ஹைதராபாத்தில் ஒரு பொறுப்புள்ள அரசு அமைய வேண்டும் என்றும் ஹைதராபாத், இந்தியக் கூட்டாட்சியுடன் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நடைபெறும் இயக்கங்களில் ஹைதராபாத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொள்ள இயலாத அளவுக்கு அவர்கள் உள்ளத்தில் பய உணர்வை ஏற்படுத்துவதற்காக அங்குள்ள தீண்டத்தகாதவர்களின் வீடுகளை எரித்து, இட்டிஹாட்-உல்-முஸ்லீமின் (Ittihadul Muslimeen) என்னும் அமைப்பு தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வருகிறது.

என்னால் செய்ய முடிந்ததெல்லாம், இந்தியாவுக்கு வரும்படி அவர்களை அழைப்பதுதான். ஏனென்றால், இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமையும் பாகிஸ்தானில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. இந்தியாவில், நாட்டின் எல்லாம் பகுதிகளிலும் ஜாதி இந்துக்களால் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானில் அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகிறபோது, இந்துஸ்தானத்தில் அவர்கள் கட்டாய அரசியல் மாற்றம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாகக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உறுப்பினர்களாக மறுத்தால் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கை நாசமடைகிறது.

அனேக நிகழ்வுகளில், குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில், தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு இழைக்கப்படும் கோரக் கொடுமை அவர்களை உயிரோடு எரிக்கும் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதேபோல் மேற்கு பஞ்சாபிலிருந்து கிழக்கு பஞ்சாபிற்கு இடம் பெயர்ந்திருக்கும் சீக்கியர்களும் ஜாட்டுகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் கொடுமையும் அநீதியும் இதே போன்று மிகவும் தாளமுடியாத அளவிற்கு இருக்கிறது. ஜாதி இந்துக்களின் கையில் முழுமையாக இருக்கும் நிர்வாகம், அவர்களுக்குச் சிறிதளவுகூட உதவிகரமாக இல்லை.

இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட இன மக்களின் எதிர்காலம் இருண்டதாக இருந்தாலும்கூட இன்றைக்குப் பாகிஸ்தானில் அடைபட்டுக்கிடக்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் எல்லாம் இந்தியாவிற்கு வந்துவிடுங்கள் என்றுதான் கூறுவேன். காங்கிரஸ் கட்சி, புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குத் தேவையான அரசியல் பாதுகாப்புகளை எதற்கும் பயன்படாத அளவிற்குப் பலவீனமடையச் செய்துவிட்டன. இருந்தபோதிலும் நமது எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால் நாம் அமைப்பு ரீதியாக நன்கு திரட்டப்பட்டால் இன்றைய அரசின்மீது நமது செல்வாக்கைச் செலுத்த முடியும்.

பாகிஸ்தானிலோ அல்லது ஹைதராபாத்திலோ இருக்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீம் லீக்கின் மீது நம்பிக்கை வைப்பது அவர்களுக்குப் பெருங்கேட்டைத்தான் விளைவிக்கும்.

இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாகப் பாவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவை முஸ்லீம்கள் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் ஆதரவைத் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குத் தருவதே இல்லை. எப்போதுமே ஜின்னா இரட்டை வேடம் போட்டு வருகிறார். அவருக்குத் தேவைப்படும்போது தாழ்த்தப்பட்ட இன மக்கள் தனிப்பிரிவினர் என்று மிக அழுத்தமாகச் சொல்லுவார். அவருக்குத் தேவைப்படாதபோது அவர்கள் இந்துக்கள் என்று அதே அழுத்தத்தோடு கூறுவார். முஸ்லீம்களும் முஸ்லீம் லீக்கும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முஸ்லீம்களை ஆளும் வர்க்கமாக்கிவிட வேண்டும் என்னும் வெறியில் இருப்பதால் தாழ்த்தப்பட்ட இன மக்களின் கோரிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவே மாட்டார்கள். இதை நான் எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.

மதமாற்றத்தைப் பொருத்தவரையில் தங்கள்மீது வன்முறை மூலம் திணிக்கப்படுகின்ற கடைசிப் புகலிடமாகத்தான் தாழ்த்தப் பட்ட மக்கள் அதைப் பார்க்க வேண்டும். நிர்ப்பந்தம் மூலமோ அல்லது வன்முறை மூலமோ மதமாற்றம் செய்யப்பட்டவர்கூட, தாங்கள் மீளமுடியாத வகையில் அந்த மதத்திற்கு இழுக்கப்பட்டு விட்டதாகக் கருதக்கூடாது என்று அவர்களுக்குக் கூறுவேன். அவர்கள் மீண்டும் தங்கள் மதத்திற்குத் திரும்ப விரும்பினால், அவர்கள் வரவேற்கப்பட்டு, மதமாற்றத்திற்கு முன்னால் எவ்வாறு நடத்தப்பட்டார்களோ அதே முறையில் சகோதரத்துவத்துடன் நடத்தப்படுவார்கள் என்று உறுதி கூற விரும்புகிறேன்.

ஹைதராபாத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட இன மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிஜாமையும் இட்டிஹட்-உல்-முஸ்லீமினையும் ஆதரிக்கக்கூடாது.

என்னதான் அநீதியையும் கொடுமையையும் இந்துக்கள் நமக்கு இழைத்தாலும் அது நமது கவனத்தைத் திருப்பக்கூடாது. நமது கடமையிலிருந்து நாம் விலகிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. இந்தியாவோடு இணைவதை எதிர்க்கும் நிஜாமுக்கு நமது ஆதரவு கிடையாது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர் தனது சொந்த நலனுக்கு எதிராகவே செயல்படுகிறார். தனது சொந்த பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க இட்டிஹட்-உல்-முஸ்லீமினை நம்பியிருப்பதைவிட, இந்தியாவிலுள்ள 90 சதவீத இந்துக்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் உத்திரவாதம் கிடைக்குமானால் அது மிகவும் பத்திரமாக இருக்கும் என்பதை அவர் உணரவில்லை.

இந்தியாவின் எதிரியாக இருக்கும் ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த எவரும் அந்த இனத்திற்கு அவப்பெயரை தேடிக்கொடுத்துவிடக்கூடாது என்ற கவலை எனக்கிருக்கிறது.’’

அம்பேத்கரின் இந்த அறிக்கையைப் படிக்கும்போது அவருடைய தேசிய உணர்வை, தேச பக்தியை, நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

(தொடரும்…)

  

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி 21,22-ஆம் பகுதிகளில் இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம், அதனால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இந்தியாவின் பாதுகாப்பு, இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்கான கீழ்ப்படியாமைக் குணம் ஆகியவை குறித்து அம்பேத்கர் தீவிரமாக முன்வைக்கும் கருத்துகளைப் பார்த்தோம். பாகம் 23-இல் முஸ்லீம் அரசர்கள் தங்கள் படையெடுப்பால் எவ்வாறு புறச்சமயிகள், கோயில்கள், கலாசாரத்தை அழித்தொழித்தார்கள் என்று பார்த்தோம். பாகம் 24-இல் ஷரியா சட்டத்தின்மூலம் எவ்வாறு இந்துக்கள் அடிமைகளாக்கப்பட்டும், வன்கொடுமை, கொலை என்று எண்ணிப்பார்க்கமுடியாத இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்று பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *