இமயத்தின் மடியில் – 1

ருள் பிரிந்துகொண்டிருக்கும், சற்று அதிகமாக குளிர் தாக்கிக் கொண்டிருக்கும் அந்த விடிகாலைப்பொழுதில்  ரிஷிகேஷிலிருந்து துவங்கியது அந்தப் பயணம்.   சிறிய மலைச்சாலையில் செல்லும்போது மெல்லிய வெளிச்சத்தில் கடலாய் பரந்திருக்கும் கங்கையும் லக்‌ஷமண் ஜுலா பாலமும் தெரிகிறது. முந்திய நாள் மாலையில் ஹரித்வாரில் பார்த்த  அழகான கங்கா ஆர்த்தி காட்சி இன்னும் மனதில் நிறைந்திருக்க  அந்த வேனில்(Van)  பத்ரிநாத்திற்குப்  பயணப்பட்டிருக்கும் அனைவரும் ஏதோ பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.  குறுகிய கொண்டை வளைவுகள் நிறைந்த பாதையில் 3 மணி நேரப்  பயணத்தில் 70 மைல் சென்ற பின் நின்ற இடம் தேவபிராயக் என்ற சின்னஞ்சிறிய மலைகிராமம். மைல்கல் 2700 அடி உயரம் எனபதைச் சொல்லுகிறது.  அங்கிருந்து  மலையின் கிழே பிரம்மாண்டமான இரண்டு  நதிகள் இணையும்  ரம்மியமான காட்சி அந்தக் காலை வெய்யிலில் பளீரென்று தெரிகிறது. உடனே அருகில் போக மனம் துடிக்கிறது.  அலக்நந்தா நதியும்  பாகீரதி நதியும்  ஒரே நதியாக இணைந்து  “கங்கை”யாவது இந்த இடத்தில்தான். கங்கோத்திரியில் கங்கை உற்பத்தியானாலும் கங்கையாக அழைக்கபடுவது இங்கிருந்துதான். கடல் கரும்பச்சை நிறத்தில் பாகீரதியும்,  இளம் செம்மண் நிறத்தில்  சீறிப்பாயும் அலக்நந்தாவும்,  நிறங்கள் துல்லியமாக வேறுபட்டும், இணைந்தபின் இரண்டுமில்லாத ஒரு புதிய வண்ணத்தில் கங்கையாக ஒடுவதும் கண்கொள்ளாக் காட்சி. அரைமணி பயணத்திற்குப் பின்னர்  நதிக்கு  அருகிலிருக்கும் பாதைக்குச் செல்லுகிறது வேன்.  சரிவான மண்பாதைக்குப் பின்  சில படிகளை தொடர்ந்து சரியாக பராமரிக்கப் படாத பாதையின் முடிவில் மிகச் சிறிதாக ஒரு மேடை. பயப்படுபவர்களும்,  ரத்த அழுத்தம் அதிகமிருப்பவர்களும் குளிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும்,  துணிந்து குளிக்க விரும்புபவர்கள் தங்கள் பொறுப்பில் செய்யலாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.  காங்கிரீட் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சங்கலியைப்  பிடித்த வண்ணம் இரண்டு நதி மாதாக்களும் சேருமிடத்தில் துவங்கிய  அந்தக் குளியல் முதல் நிமிடப்  பயம்  விலகியபின்   சந்தோஷமான, வாழ்நாள் முழுவதும் நினைத்தாலே  உடல் சிலிர்க்கும் ஒரு இனிய அனுபவம். சில அடிகள் காலை நகர்த்தினாலே இரண்டு நதிகளின் வெவ்வேறு வேகங்களை உணர முடிகிறது.  மறு கரையில் அழகிய படிகளுடனும் துறையுடனும்  தெரியும் ஒருகாவி வண்ணக் கோவில். ரகுநாத்ஜி கோவில் என்றார்கள். அதிலிருந்து எழும் மணி ஓசை துல்லியமாகக்  கேட்கிறது. நதியிலிருந்தே அந்தக் கோவிலை நோக்கி  வணங்கிப்  பிரார்த்தித்த பின் பயணத்தைத்  தொடர்கிறோம்.  நாள் முழுவதும் நீண்ட பயணம்.  இமயமலைத்தொடரின் ஒரு பகுதியான நர- நாராயணபர்வதங்களின் மடியில் இருக்கிறது பத்ரிநாதர் கோவில். 108 திவ்விய தேசங்களில் ஒன்றான இதை அங்கு 7-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர்  நிறுவினார் எனகிறது வரலாறு.  இமயமலைச்சாரலில் இருக்கும் 4 முக்கியக்  கோவில்களில் (கங்கோத்ரி,யமுனோத்ரி,  கேதார் என்ற சார் தாம்) ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கோவில் ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே (மே முதல் நவம்பர் வரை)  திறக்கப்பட்டிருக்கும்.  ஒவவொரு ஆண்டும் திறக்கும் மூடும் நாட்கள் நிர்ணயிக்கப்பட்டபின் அறிவிக்கப்படுகிறது. 11000 அடிஉயரத்திலிருக்கும் இந்தக் கோவிலுக்குத்தான் இப்போது போய்க் கொண்டிருக்கிறோம்.  மாறி மாறி சாலையின் இரண்டு பக்கங்களிலும் வளைந்து நம் கூடவே வரும் அலக்நந்தா நதியையை ரசித்துக் கொண்டிருக்கும் நமக்கு  சட்டென்று தாக்கும் குளிர் மலையின் உயரத்தைச்  சொல்லுகிறது.  வேனிலிருந்து இறங்கியவுடன் சட்டென்று சென்று நம் கண்ணில் படுவது  பளிச்சிடும் நீலகண்ட் பனிச்சிகரம் தான். நாம் கற்பனை செய்ததிருந்தற்கு முற்றிலும் மாறாக  மிக குறைவான உயரத்தில் கண்ணை உறுத்தும் அழுத்தமான பல வண்ணங்களிடப்பட்ட  நீளமான கட்டிடமாக இருக்கிறது கோவில்.  அதன் முன்னே ஒரு சிறிய பாலம், அடியில்  பாய்ந்து செல்லும் அலக்நந்தா.

பாலத்திற்குள் நுழையும் முன் பக்கவாட்டில் தப்த்குண்ட்,சூரியகுண்ட்என்ற இரண்டு வெந்நீர் சுனைகள்.   பனிச் சிகரங்கள் நிறைந்த மலைகளின் மடியில் இயற்கை தந்திருக்கும்  ஆச்சரியம் இது. ஆவி பறக்க கொதிக்கும் நீர், ஊற்றாக வந்துகொண்டேயிருக்கிறது.  (55oc) குளிருக்கு இதமாக இருந்தாலும்,  அதிக நேரம் குளிக்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள். சோப்பு, எண்ணை பயன்படுத்தி இந்தப் புனித நீரைப் பாழ் செய்யாதீர்கள் என்ற அறிவிப்பையும், ஆனால் அதன் கீழேயே அதைப் பயன்படுத்தபவர்களையும் பார்க்க நேர்ந்தது. ஏன் தான்  நம் நாட்டில் மட்டும்  எல்லாப் பகுதியிலும் இப்படிப் பட்ட மனிதர்கள்  தவறாமல் இருக்கிறார்களோ.?

பாலத்தினைக் கடந்து  போய்ப் பல படிகள் ஏறிப்போனால் கோவிலின்  நுழைவாசல்.  கடந்து உள்ளே செல்லும் வழியில் இரு புறமும் சாய்ந்துகொள்ளும் வசதியான  நாற்காலிகளில் ஸ்வெட்டர், கோட், குல்லாய் அணிந்து அமர்ந்திருந்த  நான்கு பேர் ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கூர்ந்து கவனித்ததில் அது விஷ்ணு சகஸ்ரநாமம் எனப் புரிகிறது. கணிரென்ற எம்எஸ் அம்மாவின் குரலில்,   ராகத்தில் மட்டுமே கேட்டுப் பழகிவிட்ட நமக்கு அது வித்தியாசமாகவும் பக்திக்குள்ள கம்பீரத்துடன் இல்லாது போலவும்  தோன்றுகிறது. ஒரு மண்டபத்தைக் கடந்து உள்ளே சன்னதியில் மிகச் சிறிய  அளவில் மூலவர் மூர்த்தி,  பத்ரிநாராயணர். மூன்று அல்லது நாலு அடி உயரம் தானிருக்கும். மிக அபூர்வமான கறுப்பு சாளகிராமத்தில் செதுக்கப்பட்டது. பெருமாள் பத்மாஸானத்தில்  தியானத்திலிருக்கிறார். இது இப்படி சிலைவடிவிலேயே ஆதிசங்கருக்கு அலக்நந்தாவில் நீராடும்போது கிடைத்ததாகவும் அதை தப்தகுண்ட் அருகே ஒரு குகையில் நிறுவி அவர் பூஜை செய்ததாகவும் பின்னர் மனார்கள் எழுப்பிய இந்த கோவிலில் எழுந்தருளியிருப்பதாகவும்  ஸ்தலபுராணம். கர்ப்பகிரஹத்தில், நர நாரயாணர், மண்டியிட்ட நிலையில் நாரதர், கருடர், குபேரர் வெள்ளியில் ஒரு பிள்ளையார் எல்லாம்.  சற்று சிரமப்பட்டால் தான் எல்லோரையும் தரிசிக்கமுடியும். நடக்கும் பூஜையை வெளியே தர்ஷன் மண்டபத்திலிருக்கும் ஒருவர்  மைக்கில் ஹிந்தியில் விளக்கிச்  சொல்கிறார். அது கார்வாலி கலந்த ஹிந்தியாக இருப்பதால் புரிந்து கொள்வது  சற்றுச் சிரமமாகயிருக்கிறது.  சிறிய பிரகாரம் சுற்றிவரும்போது சனனதிக்குத்  தங்கக் கூரையிடப்பட்டிருப்பது தெரிகிறது.

ர்ப்பகிரஹத்தில் பூஜை செய்பவர் நம்பூதிரி. பிரம்மச்சாரி. 8ம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் துவக்கியதிலிருந்து பல நூறாண்டுகளாகத்  தொடரும் சம்பிராதயம் இது. கார்வார் மன்னரும் திருவனந்தபுரம் மன்னரும் தேர்ந்த்தெடுக்கும் இவரை ராவல் மஹாராஜ் என அழைக்கிறார்கள். உத்திரப் பிரதேச, உத்திராஞ்சல் மாநிலங்களின் அரசு மரியாதைகளை  பெறும் அந்தஸ்த்திலிருக்கும் இவருக்கு மட்டும்தான்  இங்கு பூஜை செய்யும் உரிமை.

திருவனந்தபுர மற்றும் கார்வால் மன்னர்களால்  தேர்ந்தெடுக்கப்படுபவர் இவர். பாரதத்தின் தென் கோடியிலிருந்து வரும் ஒருவருக்கு அதன் வடகோடியிலிருக்கும் இந்த முக்கியமான கோவிலில் இத்தகைய உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதின் மூலம் நமது முன்னோர்கள் பக்தியினால் இப்படி தேசத்தை இணைத்திருப்பது இந்தியர்களுக்குப் பெருமை தரும் ஒரு விஷயம்.

கோவிலின் கீழே  முன்பு குகையாகயிருந்து இபோது ஒரு  அறையாக மாற்றப்பட்டிருக்கும் இடத்தில் வசிக்கும் இவர் கோவில் திறந்திருக்கும் 6 மாத காலத்திற்கு நதியை தாண்டிப் போகக்கூடாது. தங்குமிடத்திலிருந்து தினசரி பூஜைக்கு வரும் போது ராஜக்களைப்போல விசேஷமான ஆடைகளில் சகல மரியாதையுடனும் அழைத்துவரப்படுகிறார். அவர் வரும் போது யாராவது  குறுக்கே நடப்பது கூட அவமரியாதையாக கருதப்படுகிறது. பூஜை இல்லாத நேரங்களில்  வேஷ்டி, குர்த்தா  தொப்பி அணிந்திருக்கும் அவரை எளிதாகச் சந்தித்துப் பேசமுடிகிறது.  ஆங்கிலம், ஹிந்தி,  மலையாளம், கன்னடம் தெரிந்திருக்கிறது.  காலை 4.30,  மணிக்கு இவர் செய்யும் அபிஷகத்துடன் பூஜை துவங்குகிறது. கேரள சம்பிரதாயப்படி சம்ஸ்கிரதத்தில் தான் பூஜை. பிரசாதமாக சர்க்கரையில் செய்யப்பட்ட சிறு பொரி உருண்டைகளும், பாதம் பருப்பும் தரப்படுகிறது. நாம் அர்ச்சனைத் தட்டுகள் தர முடியாது. சன்னதியில் குபேரர் காலடியில் வைத்து எடுத்த காசுகள் வீட்டிலிருந்தால் செல்வம் பெருகும் எனபதால் பலர் காசுகளை வைக்கக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். பலகாசுகளை ஒரு சின்ன டப்பா அல்லது கிண்ணத்தில் கொடுத்தால் ஏற்க மறுக்கிறார்க்ள். உடன் வந்த நண்பர்  துணியில்  கட்டங்களுக்கிடையே ஒவ்வொரு காசுகள் வைத்துத்   தைத்த  ஒரு பட்டு துணியைக் கொண்டு வந்திருந்தார்.   குபேரருக்கு அதைச் சார்த்திப் பெற்று பின் அதை  வெட்டிப்  பலருக்கும் கொடுத்தார். மாற்றி யோசித்த இந்த  மனிதரை  பயணத்தில் வந்த பலரும் பாராட்டினர்.

கோவிலுக்கு முன்னே உள்ள ஒரே தெரு முழுவதும் கடைகள். இந்தியாவின்  அனைத்து மொழிகளிலும்  (பலவற்றில் பிழைகளுடன்) எழுதபட்ட போர்டுகளுடன்  உணவுச் சாலைகள்.   அடர்ந்த தாடி மறைக்குமளவிற்கு உத்திராட்ச மாலைகள் பல அணிந்து, எதிரே வரும் ஒரு சாமியார் நமக்கு விஸிட்டிங் கார்டு தருகிறார். கார்டைப் பார்த்த பின்தான் புரிகிறது அவர் சாமியார் இல்லை என்பது. ருத்திராட்சம்,  ஸ்படிகம் வாங்க உதவும் கன்ஸல்ட்டண்ட்டாம்.  “கடைக்காரர்கள் ஏமாற்றுவார்கள் நான் அவைகள் பற்றி  நன்கு அறிந்தவன் நான் வாங்கிக்கொடுக்கிறேன்” .     தொடர்ந்து  சந்தித்த பல கன்ஸல்ட்டண்ட்களிடம் பேசியதில் தெரிந்த விஷயம். கடைக்காரர்கள் தங்கள் எஜெண்ட்களுக்குத் தந்திருக்கும் பெயர் கன்ஸல்ட்டண்ட்.

மாலை  துவங்கிய உடனேயே இருள் பரவத் தொடங்கி விடுகிறது.   பயணிகளின்  இரைச்சல்  அடங்கியிருப்பதால்  ஓடும் அலக்நந்தா நதியின் ஒசை தெளிவாகக் கேட்கிறது.  மெல்லப் பரவும்  மெல்லிய வெண்பனி மேகங்களின் இடையே  மங்கிய விளக்கொளியில்  கனவுக் காட்சியாகத் தெரிகிறது  கதவுகள் மூடப்பட்ட  பத்ரிநாதரின் கோவில்.

படங்கள்: வி.ரமணன்.

(தொடரும்)

4 Replies to “இமயத்தின் மடியில் – 1”

  1. ரமணன்

    நேரில் போய் தரிசித்த உண்ர்வை அளித்தது உங்கள் கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  2. மிகவும் அருமையான பயணக் கட்டுரை. நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல் ஒரு உணர்வு.
    // நமது முன்னோர்கள் பக்தியினால் இப்படி தேசத்தை இணைத்திருப்பது இந்தியர்களுக்குப் பெருமை தரும் ஒரு விஷயம்.//
    உண்மை உண்மை உண்மை உரக்கக் கூற வேண்டிய உண்மை. ஆரியம் திராவிடம் கூறும் பிரித்தாலும் மாயைகளிடம் உரக்கக் கூற வேண்டிய உண்மை.

  3. பத்ரிநாத்க்கு அழைத்து சென்ற புண்ணியம் தமிழ்ஹிந்து விற்கு. நன்றி. நாமே பயணம் செய்த உணர்வை தரும் அருமையான நடையில் அழகாக எழதுகிறார் ரமணன். படங்களும் அருமை . இதுபோன்ற கட்டுரைகளை தொடர்வது வெளியிடுங்கள் .
    ஜெயேந்திரன்

  4. ஆறு வருடங்களுக்கு முன் பத்திரிநாதனையும் கேதாரநாதனையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பத்திரிநாத்தில் திரு ராவல் மஹராஜ் அவர்களையும் கண்டேன். அவருக்குத் தமிழ் தெரிய வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் என்னுடன் வந்த நண்பர் அவருக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் நாங்கள் கோவையிலிருந்து வருவதைக் குறிப்பிட்டார், மஹராஜ் மலையாள சாயலில் தமிழில் உரையாடினார். நெடிதுயர்ந் மலைவீழ் அருவிகள் அருவிகள் கங்காதரனையும் மலையுச்சியில் நிலவு சந்திரசேகரனையும் புறக்கண்ணுக்க்த் தோற்றுவித்து அகக்கண்ணில் நிறைவித்தன. அக்காட்சிகள் இன்றும் நினைக்க இன்பளிக்கின்றன. நீலகண்ட் சிகரக் காட்சி சிவத்தையே கண்டது போன்றது.

    என் தந்தையாரின் குருநாதர் பழநி சாதுசுவாமிகளுக்கு அவருடைய குருநாதர் பத்ரிநாத் , கேதாரநாத் அருகில் சத்திய நாராயணம் என்னும் தலத்தில்தான் சந்நியாச தீட்சை அளித்ததாகவும் நாதஜோதி முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள் அந்த சத்தியநாராயணத்தைத் தான் தம்முடைய ஸ்ரீசத்யநாராயணம் என்ற பிருந்தாவன சாரங்கா இராகக் கீர்த்தனையில் பாடியுள்ளதாகவும் கூறக் கேட்டுள்ளேன். இதனைப் பற்றிய விவரம் அன்பர்கள் அறிவார்களெனின் பகிர்ந்து கொள வேண்டுகின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *