நல்வாழ்வு வேண்டுவோம்!

தேவர்களே!
காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும்.
பூஜைக்குரியவர்களே!
கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும்.
உறுதியான அங்கங்களுடன் கூடிய நல் உடலுடன்
ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும்.
உலகிற்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும்.

– வேத சம்ஹிதை, உபநிஷத் சாந்தி மந்திரம் (“பத்ரம் கர்ணேபி:” என்று தொடங்கும்)

ஒளி பொங்கும் இந்த சூரிய மண்டலத்தை
நூறு கார்காலங்கள் காண்போம்
நூறு கார்காலங்கள் வாழ்வோம்
நூறு கார்காலங்கள் கூடி மகிழ்ந்திருப்போம்
நூறு கார்காலங்கள் ஆனந்தமடைவோம்
நூறு கார்காலங்கள் (நல்லதைக்) கேட்போம்
நூறு கார்காலங்கள் (நல்லதைப்) பேசுவோம்
நூறு கார்காலங்கள் புதிதாய்ப் பிறப்போம்
நூறு கார்காலங்கள் வெல்லப் படாதிருப்போம்.

(இங்கு கவித்துவமாக “கார்காலங்கள்” என்று சொல்லப்பட்டது ஆண்டுகளைக் குறித்தது)

– வேத சம்ஹிதை சாந்தி மந்திரம் (“பச்’யேம ச’ரத: ச’தம்” என்று தொடங்கும்)

தேவி!
கல்விமான்களாகவும், புகழ் தேடுபவர்களாகவும், செல்வமுடையவர்களாகவும்
எம்மை ஆக்குவாய்.
வடிவழகு அருள்வாய் வெற்றி அருள்வாய் கீர்த்தி அருள்வாய்
(தீமைகளாகிய) எங்கள் பகைவர்களை நாசம் செய்வாய்.

– அர்கலா ஸ்தோத்ரம், தேவி மகாத்மியம், மார்க்கண்டேய புராணம்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.

(மலர்மிசை ஏகினான் – மனமாகிய மலர்மீது அமர்ந்த இறைவன்; மாணடி – பெருமை பொருந்திய திருவடி; நிலமிசை : மண்மீது; நீடு : நீண்டகாலம்)

– திருக்குறள் 1.3

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை(வு) இலை
கண்ணில் நல்லஃ(து) உறும் கழுமல வள நகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

(வைகலும் எண்ணில் – தினந்தோறும் நினைந்து வழிபட்டால்; நல்லஃது உறும் – எப்பொழுதும் நல்லவையே தோன்றும்; கழுமல வளநகர் – திருக்கழுமலம் என்ற வளம் பொருந்திய ஊர்; பெண்ணின் நல்லாள்: உமாதேவி; பெருந்தகை – பெரியோனாகிய சிவபிரான்)

– திருஞானசம்பந்தர் தேவாரம் (திருமுறை 3.24.1)

கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினியன கண்டோம்,
தொண்டீர்! எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்,
வண்டார் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப்
பரந்து திரிகின் றனவே.

(தொண்டீர் – தொண்டர்களே; எல்லீரும் – நீங்கள் எல்லோரும்; வண்டார் தண்ணந் துழாயன்: வண்டுகள் அலங்கரிக்கும் குளிர்ச்சியான துளசி மாலை அணிந்தவன்)

– நம்மாழ்வார் திருவாய்மொழி 5.2.2 (நாலாயிர திவ்யப் பிரபந்தம்)

சித்தத்திலே நின்று சேர்வதுணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்,
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே.

மாறுதலின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்,
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.

– மகாகவி பாரதி (“வையம் முழுதும்” என்ற பாடல்)

One Reply to “நல்வாழ்வு வேண்டுவோம்!”

  1. மகாகவி பாரதியின் வாக்குகள் ஒவ்வொன்றும் அருள்வாக்கு.. எத்தனை அழகாய் பாடினான்.. நம் முன்னோர்கள் எத்தனை நல்லவிதமாய் வாழ்வாங்கு வாழவும் பிறரை வெறுக்காமல் வாழ்வும் நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். வாழ்வாங்கு வாழ்ந்து வானுறைந்த நமது முன்னோர்களின் வழி சென்றாலே நல்ல வண்ணம் வாழலாம் இந்த மண்ணில்

    ஸ்ரீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *