கடவுள், மனிதன், கடைசி யுத்தம்


கடவுள், மனிதன், கடைசி யுத்தம்

நீ பொறுப்பற்ற சுட்டிக்குழந்தை
என்று தெரிந்தும் இந்த அழகான உலகத்தை
உன்னிடம் கொடுத்தேன்.

இரவினில் கூட
நீ பாதை தவறி விடக்கூடாதென்று
நிலவு விளக்கை
வானக்கூரையின் மூலையில்
பதித்துவைத்தேன்

இன்னொரு நிலவை
நீ உதைத்து விளையாட
உன் கைகளில் கொடுத்தேன்

நீ நிலவை உடைத்து
திசைக்கொன்றாய் எறிந்தாய்.
அவைகளை நட்சத்திரங்களாய் மாற்றி
உன் வன்முறையை ஒவ்வொரு முறையும்
நினைவுபடுத்திக்கொண்டிருந்தேன்.

விடியலின் வருடலை
நீ இழந்துவிடக்கூடாதென்று
உன் துயிலெழுப்ப சன்னலுக்கு
இராகங்களோடு பறவைகளை அனுப்பிவைத்தேன்.
நீ அவைகளின் வார்த்தைகளைப் பறித்து
ஊமைகளாய் அனுப்பிவைத்தாய்.

மௌனத்தின் குரலைச்சொல்ல
உன் வாசலுக்கு மெல்ல நடக்கும்
நதிகளை அனுப்பி வைத்தேன்.
நீ அணைகள் எழுப்பி அவைகளுக்கு கால்விலங்கிட்டாய்.

சுதந்திரத்தின் சுகத்தினை
உணர்த்த சிறகு விரித்த பறவைகளை
உன் கூரைகளுக்கு அனுப்பி வைத்தேன்.
நீ அவைகளின் சிறகுகளை முறித்து சிறையிலடைத்தாய்.

உன் உதடுகளில் பூக்கட்டுமென்று,
ஓராயிரம் பூக்கள் பாதையெங்கும் பெய்துவைத்தேன்.
ஆனால், புன்னகை ஏந்த வேண்டிய
உன் உதடுகளில் பொறிச்சொற்கள்.
மலர்கள் ஏந்த வேண்டிய கரங்களில் ஆயுதங்கள்.

நீ எப்பொழுதாவது,
தீப்பொறிகளில் உன்னைக் கழுவி
தூய்மையாய் திரும்புவாய் என்றிருந்தேன்.
ஆனால், உப்புக்கடலில் விழுந்த ஒரு நீர்த்துளி போல்
நீ என்றென்றுமாய் தொலைந்து போனாய்.

என் சிருஷ்டி திசைக்கொன்றாய்
ஊதிய பஞ்சாய் வலியால் கதறியது.
யானை மிதித்த பூவாய்
அதன் மூச்சு திணறியது.

பூக்களின் மென்மையறியாத உனக்கு
பூந்தோட்டப் பரிசெதற்கு?

ஒழுங்காய் வைத்து
விளையாடத்தெரியாத உனக்கு உலகெதற்கு?
நான் திருப்பிக்கேட்டேன் என் உலகத்தினை.

பாதிக்கலவியில் புறம் தள்ளப்பட்டவனாய்
நீ வெகுண்டெழுந்தாய்.

உன் கோபத்தில்
திசை மாறி நடந்தன சில நதிகள்.

நீ குதித்தெழும்பியதில் வானக்கூரையின்
சில நட்சத்திரங்கள் உதிர்ந்தன.

என் முன்னூறு பரம்பரைகளையும்
நீ அசிங்கமாய் வைதாய்.
தொடையிலும் மாரிலும் தட்டி என்னைச்
சண்டைக்கழைத்தாய்.

வேறு வழியில்லாமல் கிழடு தட்டிய
என் குதிரைகளை இரதத்தில் பூட்டினேன்.
சோம்பேறிகளாய் மாறிப்போயிருந்த அவைகளுக்கு
நிலவின் கிழக்கு மூலைத்தோட்டத்தின்
காயகல்ப மரத்தின்
இலைகளைப் பறித்து உணவளித்தேன்.

அதன் கிளைகளில் ஒன்றை ஒடித்து
இரதத்தின் அச்சாணியைப் பொறுத்தினேன்.

அம்பு ஒன்றை மறந்துவிடாமல்
தோள்களில் சொருகிக்கொண்டேன்.
– சத்தியமாய் உன் முழங்காலுக்குக் கீழ்
எய்வதற்கு மட்டுமே.
என்ன இருந்தாலும் நீ என்
அன்பான குழந்தை அல்லவா?

யுத்த களத்திற்கு நீ
வெகு தாமதமாகவே வந்தாய்.
அந்நேரம், என் குதிரைகள்
குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தன.

நீ மிரட்டி அடிமைப்படுத்தி வைத்திருந்த மிருகங்கள்
எதையோ கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு வந்தன.

ன்னை அத்தனை தூரத்தில் பார்ப்பது
எனக்கு சந்தோஷமாயிருந்தது.
உன்னோடு ஏதாவது பேசவேண்டும் போல
எனக்குத் தோன்றியது.

நீ உன் அடிமை விலங்குகளிடம்
எதையோ சொல்லிக்கொண்டிருந்தாய்.
அவைகள் இரும்பு உருண்டை போன்ற ஒன்றை
அந்த இயந்திரத்திற்குள் பொறுத்தின.

எனக்கு உன்னை இன்னும் அருகில்
பார்க்க வேண்டும் என்ற
ஆவல் தோன்றியது.
நான் உன்னை நோக்கி வந்துகொண்டிருந்தேன்.

நீ நேரத்தை அதற்கு மேலும்
வீண் செய்ய விரும்பாதவனாய்
இயந்திரத்தில் எதையோ வேகமாய் அழுத்தினாய்.

டொம்

அதுதான் நான் கடைசியாய்க் கேட்ட சத்தம்.
என் மீது விழுந்தது
என்னவென்று தெரியாமலேயே
நான் கருகி இறந்து போனேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *