ஹிமாசலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றான நயனாதேவி ஆலயத்தில் சிராவண (ஆவணி) மாத சிறப்பு பூஜைக்காக குழுமியிருந்த பக்தர்கள் மத்தியில் நிலச்சரிவு பற்றிய வதந்தி காரணமாக தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டு 130க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். தமிழ்இந்து.காம் சார்பாக உயிரிழந்த பக்தர்களின் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
இந்துக் கோயில்களில் பெருமளவில் கூட்டம் கூடுகையில் ஒழுங்குமுறை கெட்டு, கூட்டம் பீதியடைந்து சிதறி, இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவது வேதனையும், வருத்தமும் தரும் விஷயம். கடந்த காலங்களில் கும்பமேளா, மகாமகம், சபரிமலை மகரவிளக்கு ஆகிய சமய நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்துள்ள்ளன. சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகம், அங்கு கூடும் பக்தர்கள், காவல்துறையினர், பல கோயில்களுக்கு பொறுப்பாளர்களாக உள்ள மாநில அரசுத்துறையினர் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இத்தகைய சோகசம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருக்க வழிசெய்ய வேண்டும்.
தன்னார்வ நிறுவனங்கள், சேவை அமைப்புகள் ஆகியவை கோயிலுக்கு வரும் பக்தர்களிடையில் அமைதி காத்தல், சீராக வரிசை ஒழுங்கைக் கடைப்பிடித்தல் இவைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விபத்து நடந்த மறுநாளே கோயிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் பெருகியது மக்களின் மன உறுதியையும், சிரத்தையையும் காட்டுகிறது, இது பாராட்டுக்குரியது. ஆனால், நடந்த விபத்தை மறந்து விடாமல், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவேண்டிய பொறுப்பையும் உணர்ந்து இந்து சமுதாயம் செயல்பட வேண்டும்.