முந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2
ஜய ஜய மஹாவீரா!
– மகாவீர வைபவம்(1)
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! ” என்று பெரியாழ்வார் போற்றிப் பாடியதுபோல் இங்கே ரகு வீரனை “ஹே மஹா வீரா! உனக்கு என்றுமே வெற்றி!” என்று தேசிகன் வாழ்த்துகிறார். இந்த காவியத்திற்கு மகாவீர வைபவம் என்று பெயர் வர இந்த முதல் வரியே காரணம் என்றும் சொல்வர்.
ராமனின் வீரம் எண்ணிப் பார்ப்பதற்கு அரியது. அவன் வீரத்தின் வெளிப்பாடு “நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி!” என்று விஸ்வாமித்திரர் தசரதனிடம் பாதினாறு வயது நிரம்பாத பாலகனான ராமனை – கரிய செம்மலை – தா! என்று கேட்பதில் தொடங்குகிறது. அதன் பிறகு அவன்முன் ஒவ்வொரு முறை ஒவ்வொரு சவால் வந்த போதும் எப்போதும் ராமனுக்கு வெற்றியே!
இருபத்தியொரு தலைமுறை க்ஷத்ரீய மன்னர்களை அழித்து வந்த பெரும் வீரன் பரசுராமன் ராமனிடம் தோற்றுப் போகிறான். தாடகை, கரன், தூஷணன் போன்ற அரக்கர்கள், வாலி, பிறகு இலங்கையில் ராவணனின் பெரும் பேரரசு ஆகிய அனைத்தும் ராமனின் வில்லுக்கு பதில் சொல்ல முடியாமல் வீழ்ந்து போகிறார்கள்.
இதில் ஒரு தவறான அர்த்தம் வந்துவிடக் கூடும். அதாவது போரில் வெற்றி பெறுவது மட்டுமே வீரம் என்று இதை படிப்பவர்கள் தவறான முடிவுக்கு வரக்கூடும். அப்படி அல்ல – எண்ணிய காரியத்தை எத்தனை சோதனைகள் வந்தாலும் தாங்கி, சோர்வின்றி தொடர்ந்து, பொறுமையாக இருந்து, துணிவுடன் செய்து முடிப்பதே வீரம் என்று எந்த காலத்துக்கும் ஏற்ற ஒரு கருத்தை ராமாயணம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
தாடகை பெண் என்று தயங்கினாலும் விஸ்வாமித்திரன் சொல்கேட்டு ராமன் அவளை கொல்கிறான். வாலி வதத்தின் போது, தன் குறிக்கோள் வாலியை கொல்வது மட்டுமே என்று கொண்டு அதற்கான உபாயத்தை கடைபிடிக்கிறான். இலங்கையில் மாயப்போரில் ஒவ்வொரு அரக்கர் முன், ஒவ்வொரு ராமனாக தானும் மாயையை பயன்படுத்தி வெற்றி கொள்கிறான். இதிலெல்லாம் தவறு கண்டு விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் அதை செய்து கொண்டு இருக்கட்டும். இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ராமனின் செயல் முனைப்பு, அதில் காட்டும் வேகம், துணிவு ஆகியவை தான்! இதுவே மற்ற பெரும் வீரர்களிடமிருந்து மஹா வீரனாக ராமனை தனித்து காட்டுகிறது.
மஹாதீ⁴ர தௌ⁴ரெயா! – மகாவீர வைபவம்(2)
மஹாதீ⁴ர – மிகுந்த தைரியத்தை உடையவன், தௌ⁴ரெயா! – துணிச்சல் மிகுந்த வீரர்களுள் முதன்மையானவன்! ராமன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத துணிவுடைய பெரும் வீரன். துணிவு என்பது மனச்சோர்வு ஏற்படும் காலத்திலும் அதற்கு இடம் கொடுக்காது சிறிதளவும் பின்வாங்காது இருத்தலே ஆகும்.
உடலில் எத்தனை வலிவு இருந்தாலும் மனதில் அடிபட்டால் தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை அவரது பிள்ளை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். பெரும் வீராதி வீரனாக இருந்தாலும் மனச்சோர்வு அடையும் போது உடலும் தளர்ந்து போய் விடுகிறது.
சிதை பெரிதா? சிந்தை பெரிதா என்றதற்கு ஒரு பெரியவர் சொன்னார் – “சிதை உயிரற்ற சடலத்தைத் தான் எரிக்கிறது. சிந்தையோ (கவலையோ) உயிருள்ள உடலையும் எரித்து விடுகிறது. ” ஆக உள்ளம் கலங்கினால் எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் தோல்வி அடைய வேண்டியதுதான்.
உள்ளத்து உறுதியில் ராவணனும் சளைத்தவன் அல்ல. தான் நாடு நகரம் அனைத்தும் அழிந்த போதும், தம்பிகள், தான் சொந்த பிள்ளைகள் என்று உறவுகளையெல்லாம் பறிகொடுத்த போதும் பின் வாங்கவில்லை. அவனுக்கிருந்த துநிவினாலும், ஊக்கத்தினாலும்தான் வெல்ல முடியாத லங்கேச்வரனாக, மனிதர், வானவர், அரக்கர் என்று அனைவரையும் ஆண்டான்.
அத்தகைய ராவணன், ராமனை ‘தம்மந்யே ராகவம் வீரம் நாராயணம் அநாமயம்!‘ என்று இந்த ரகு வீரன் – ராமன், உண்மையில் அந்த நாராயணனே என்று அறிவேன் என்று சொல்கிறான். ‘பௌருஷே ச அப்ரதி த்வந்த்வ‘ என்றபடி ராமன் முன் வைத்த காலை பின் வைப்பதே இல்லை.
ராமனின், துன்பத்திலும் கலங்காத மன உறுதிக்கு, மிகப் பிரசித்தமாக இந்த கம்ப ராமாயண பாடலை சொல்லுவர்:
இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? – யார்க்கும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!
– கம்பராமாயணம், கைகேயி சூழ்ச்சிப் படலம்
கைகேயி பரதன் நாடாள நீ காட்டுக்கு போ என்று சொல்ல, அன்று அலர்ந்த செந்தாமரையையும் வெல்லுமாறு ராமனின் முகம் சிறிதும் வாட்டமின்றி இருந்தது. சுகுமாரனாக அரண்மனையில் வளர்ந்து அரச போகம் அனுபவித்த பிள்ளை, காட்டுக்கு போ என்று சொல்லும்போது சிறிதும் கலங்காமல் இருந்தானே! அவன் மஹா தீரன் தான்!
மஹா வீர வைபவம் கேட்டு ரசிக்க! (நன்றி: சுந்தர் கிடாம்பி அவர்கள்)
ஸ்ரீராமபிரானைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் படித்துக்கொண்டே இருக்கலாம். அத்தனை ரம்மியமான சரித்திரம் அவனுடையது. இங்கே எனக்கு இன்னொரு கம்பராமாயணப் பாடலும் நினைவுக்கு வருகிறது:
மெய்த்திருப் பதம் மேவென்ற போதினும்
இத்திருத் துறந்து ஏகென்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தா மரையினை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்
“அயோத்தியின் சக்ரவர்த்தி நீதான்” என்ற போதும், “இல்லை, நீ காட்டுக்குப் போ” என்று சொன்னபோதும் ஸ்ரீராமனின் முகம் எவ்வாறு சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை ஒன்று எப்போதும் மலர்ந்ததாகவே இருக்கிறதோ அதேபோல விகசித்தே இருந்ததாம்!
ஆஹா! உதாரணபுருஷன் என்றால் இவனல்லவா! எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பம் தருவது ராமகாதை!
Dear sk sir, Raguveera gathyam( appeared along with mahaveera vaibahvam) redered by the pandit is excellent and give mental solace Thank u for ur holy service. I am thanking srinivasan and GRK Raju ,our rly friends who guided me to here this holy verse Ram