யோகத்துக்கு முதல் தேவையாக, அடிப்படையாக வேத, சாத்திரங்களில் பற்றும், தெய்வ நம்பிக்கையும் அவசியம். ஏனெனில், வேத சாத்திரங்கள் தர்மத்தை உபதேசிக்கின்றன. தர்மத்தை எடுத்துச் சொல்லி மனிதனுக்கு வழிகாட்டுகின்றன. தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இல்லாத மனிதன் மிருகத்தைப் போல புலன்களின் ஊடாக இன்பத்தை தேடி அலைகிறான். தன்னுடைய சுகத்துக்காக எந்த தவறையும் செய்ய துணிந்து விடுகிறான். கோபதாபங்களாலும், தொடர்ந்த வேட்கையாலும் மனித உடல் வலுவிழக்கிறது. ஆசை, உலகப் பற்று, கோபம் ஆகியவற்றால் மனதும் வலுவிழக்கிறது. ஆக அதர்மத்தின் வழி நடக்கும் மனிதன் மனதாலும் உடலாலும் வலுவிழந்து விடுகிறான். அதனால்தான் உடலுக்கும், மனதுக்கும் அமைதி அளித்து மனிதனை தெய்வத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும் வகையில் தர்ம சிந்தனையும், தெய்வ நம்பிக்கையும், ஈடுபாடும், வேத சாத்திர புராணங்களில் பற்றும் வலியுறுத்தப் படுகிறது.
இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தில் யோகம் என்பது நான்கு பிரிவுகளாகவும், ஒவ்வொரு பிரிவிலும் எட்டு அங்கங்களை கொண்டதாகவும் பார்த்தோம். அந்த எட்டு அங்கங்களை இந்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம். அஷ்டாங்க யோக முறையில் ஐந்து பகுதிகள் – அங்கங்கள் பகிரங்கமாக அதாவது உடலை கட்டுப் படுத்துவதும், மூன்று பகுதிகள் அந்தரங்கமாக உள்ளத்தை – மனதை கட்டுப்படுத்தக் கூடிய பயிற்சியுமாக பிரித்து கூறுவர். அதாவது யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம் ஆகியவை பகிரங்கமாகவும் – வெளிப்படையாக உடலை கட்டுப்படுத்தவும்; தியானம், தாரணை, சமாதி ஆகியவை மனதை கட்டுப்படுத்தவும் என பிரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் மிகச் சுருக்கமாக காண்போம்.
யமம் என்பது அஹிம்சை; வாய்மை; பொறாமையின்மை; மனதாலும், சொல்லாலும், செயலாலும் காமத்தை தவிர்த்தல்; இன்ப துன்பத்தில் சமபாவனை; தவம்; கருணை; உணவில் கட்டுப்பாடு; எளிமை; தூய்மை ஆகிய பத்து விதங்களாக கடைபிடிக்கப் படவேண்டியதாகும். அதேபோல் நியமம் என்பது விரதம் இருத்தல் போன்ற செயல்களால் இயற்றும் தவம்; கிடைத்ததை கொண்டு மகிழ்தல்; ஆன்மீகத்தில் ஈடுபாடு; தானம்; கடவுளை மனதார வணங்குதல்; சித்தாந்தங்களை கற்று கேட்டு தெளிவை அடைதல்; தீய வழிகளில் ஈடுபாட்டை நீக்குதல்; மனதை நல்ல வகையில் சிந்திக்க பயிற்றுதல்; குருவிடம் உபதேசம் பெற்று மந்திரங்களை உருவேற்றுதல்; தான் கொண்ட மார்க்கத்தில் சொன்னபடி யாக ஹோமங்கள் செய்தல் ஆகிய பத்து விதமான செயல்களாகும். ஒரு யோகிக்கு யமம், நியமம் ஆகியவை இரண்டு கண்களைப் போன்றவை. அவைதான் அடிப்படை. மனதும் உடலும் சுத்தமாக இருந்தால்தான் யோகத்தில் முன்னேற முடியும்.
அடுத்து மூன்றாவதாக ஆசனம் என்பது எண்ணத்தை சுத்தப்படுத்தி சரியான பாதையில் செலுத்துவதற்காக மேற்கொள்ளுவதாகும். ஆசனம் என்பது உடலை வளைத்து ஒவ்வொரு நிலையில் நிறுத்துதல் ஆகும். யோகாசனங்கள் எத்தனை இருக்கிறது தெரியுமா? உலகில் எத்தனை வகையான ஜீவராசிகள் இருக்கிறதோ அத்தனை இருக்கிறதாம். சுமார் 84, 00, 000 இருக்ககூடும் என்று சொல்லப்படுகிறது. அதில் சுமார் 1600 ஆசனங்கள் சிறந்தவை என்றும், அதிலும் பத்மாசனம் முதலான 32 ஆசனங்கள் மிகவும் உயர்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது. ஆசனப் பயிற்சியை குருவிடமிருந்தே கற்க வேண்டும். சரியானபடி பயில வில்லை என்றால் தீய விளைவுகள் ஏற்படக் கூடும்.
நான்காவதாக பிராணாயாமம் என்பது மூச்சு பயிற்சி என்பது அனைவரும் அறிந்ததே. மூச்சை உள்ளே இழுத்து (பூரகம்), உள்ளே மூச்சை நிறுத்தி (கும்பகம்), மூக்கை மூடி மற்றொரு மூக்கின் வழியாக வெளியேற்றுதல் (ரேசகம்) ஆகிய பயிற்சிகள் அடங்கியதே பிராணாயாமம். இதில் மூச்சை உள்ளே இழுத்தல், நிறுத்துதல், வெளியேற்றுதல் ஆகியவற்றுக்குரிய கால அவகாசத்தை மெதுவாக அதிகப்படுத்தி பயிற்சி செய்வர். பிராணாயாமத்தால் உடலில் நாடிகள் சுத்தம் அடைகின்றன. இதயம் வலுவடைகிறது. கப, வாத, பித்தங்களில் ஏற்படும் மாறுபாட்டை பிராணாயாமம் சரி செய்கிறது – அதனால் நோய்கள் நீங்குகின்றன. மனதும் அமைதி அடைகிறது.
பிராணாயாமம் செய்பவர் சரியான இடத்தை தேர்வு செய்தல் அவசியம். அந்த இடம் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கக் கூடாது – சென்று சேர்வதற்குள் அவசரம், அமைதியின்மை, மனஅழுத்தம் ஆகியவை ஏற்படாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற இடமாகவோ, அதே நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகவோ இருக்கக் கூடாது – சிந்தனை சிதறக்கூடும். பிராணாயாமம் பயிலும் யோகி மூன்று மணிநேரத்துக்கு மேல் உண்ணாமல் இருத்தல் ஆகாது – சாத்வீகமான இயற்கை உணவுகளையே உண்ண வேண்டும் – அதுவும் குறைவாக அரை வயிறு உண்ணவேண்டும் ஆகிய பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அஷ்டாங்க யோகத்தில் ஐந்தாவதாக ப்ரத்யாஹாரம் என்பது சுருக்கமாக இப்படி சொல்லலாம்: கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய பொறி ஐந்தினையும், பார்த்தல், கேட்டால், நுகர்தல், சுவைத்தல், தொட்டு உணர்தல் ஆகிய புலன் ஐந்தினையும் கட்டுப்படுத்துதல் ஆகும். ஆசனங்களும் பிரணாயாமமும் கைவரப் பெற்றால், பொறிகளை அடக்குவது எளிதாகும். ஓயாமல் மனதுக்கு செய்திகளை கொண்டு சென்று அலை அலையாக எண்ணங்களை ஓடச் செய்யும் பொறிகளை அவற்றின் புலன்களிலிருந்து எழுத்து பிடித்தால்தான் அடுத்த நிலையில் மனதை அடக்க முடியும்.
உதாரணமாக ஒருவர் மிகவும் ரசித்தது பாடல் ஒன்றை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை கடந்து வண்டி ஒன்று செல்கிறது. இப்போது இன்னொருவர் வந்து இங்கே வண்டி ஒன்று சென்றதை பார்த்தீர்களா? என்று கேட்கும்போது இல்லையே, பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன் – கவனிக்கவில்லை என்று அவர் சொல்லக் கூடும். கண் பார்த்துக் கொண்டிருந்தாலும், மனதுக்கு செய்தி எதுவும் கிட்டவில்லை. அது போல, எல்லா புலன்களையுமே மனது செய்தி அனுப்புவதிலிருந்து தடுத்து விடவேண்டும். இது சாதாரணமாக செய்ய முடியாது என்பதால் ஒரு தெய்வ உருவத்தை மனதில் நினைத்து அதையே தியானித்து மற்ற புலன்களை மறக்க வைக்க வேண்டும்.
இப்போது நாம் பார்த்த இந்த அஷ்டாங்க யோகத்தின் ஐந்து அங்கங்களும் வெளிப்படையாக செய்யக்கூடியவை – உடலை பதப்படுத்தக் கூடியவை. இந்த ஐந்து முறைகளால் உடலின் சக்தியை அதிகப்படுத்தி, நீண்ட ஆயுள் பெற்று உலக இன்பத்தை மிகச்சிறந்த முறையில் துய்த்து இன்புறலாம் என்பது உண்மைதான். ஆனால் யோகத்தின் உச்ச கட்ட பலனான மோக்ஷத்தை, காலத்தை வென்று பிறப்பு இறப்புகள் அற்ற, நீடித்த ஆனந்த நிலையை அடைவதற்கு இவை மட்டும் போதாது. அதற்கு தர்மத்தின் வழி நடத்தல், வேத, சாத்திர, புராணங்களில் உறுதியான நம்பிக்கையும் ஈடுபாடு ஆகியவை அடிப்படையாக தேவை. அதன் பிறகு இந்த ஐந்து முறைகளை கடைபிடித்தால் மனதும் உடலும் ஒரு தயார் நிலைக்கு வரும். இதற்கு மேல், மனதை அடக்கி ஞானத்தை பெறும் பெரிய சாதனை இருக்கிறது. இதில் நம்பிக்கை கொண்டு முயற்சிப்பவரை சாதகர் என்றும், அவர் அடையும் நிலை சாதனை என்றும் முடிவில் அவர் யோகி என்றும் பெயர் பெறுகிறார்.
அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது அங்கமான ப்ரதியாஹாரத்தில் புலன்களை அடக்கியபின், தாரணை தொடங்குகிறது. ஓயாத அலையாக எழும் எண்ணங்களை ஒரு புள்ளியில் தரிக்க செய்வதே ஆறாவது பகுதியான தாரணை. அதற்கு ஏதுவாக தெய்வத்தின் படமோ, உருத்திராட்சம் போன்ற சின்னங்களையோ மனதில் நிறுத்தி அதையே சிந்திப்பதே தாரணை ஆகும். மனதை ஒருமுகப் படுத்துவதே தாரணையின் நோக்கம். தாரணையில் மனதை செலுத்துவதற்கு ஆசனங்களும் இதற்கு முன் சொல்லப்பட்ட மற்ற ஐந்து யோக முறைகளும் அவசியம்.
ஏழாவது அங்கமான தியானத்தை ஒரு தனி செயலாக சொல்வதை விட, அதை ஒரு நிலை என்று சொல்லலாம். தாரணையில் மனம் ஒருமுகப்பட்டாலும் அது ஒரு தனி செயலாக உட்கார்ந்து செய்ய வேண்டியது. தியானம் என்பது என்ன செயல் செய்து கொண்டு இருந்தாலும், உதாரணமாக நடக்கும் போதும், பிரயாணம் செய்யும்போதும், இறைவனுக்கு பூசை செய்து கொண்டிருந்தாலும், இதர வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் தியானிக்க முடியும். தாரணையின் முடிவில் மனம் தன் எண்ணங்களை துறந்து மோன நிலைக்கு செல்வதே தியானம்.
இதன் அடுத்த நிலைதான் சமாதி என்கிற மனத்திற்குரிய விடுதலை. சமாதி நிலையில் மனது சுத்தமாக எண்ணங்களை துறந்து விடுகிறது. உடல் உணர்ச்சிகளை துறந்து விடுகிறது. ஆன்மா அமைதியை எட்டுகிறது. இந்த நிலையைஅடைய முடிந்த யோகியால், செய்ய முடியாத சாதனைகள் இல்லை, அவரால் இந்த உலகிலேயே நல்ல தார்மீக முறையில் மிக அதிகமான இன்பத்தை அடைய முடியும். இவ்வுலக வாழ்வை துறந்து பிறப்பு – இறப்பு அற்ற பேரின்ப விடுதலைக்கும் முயற்சிக்க முடியும்.
(தொடரும்)
[முகப்பு படம் உதவி: (C) “Mahesh Khanna” – https://www.flickr.com/photos/maheshkhanna/]
மிக நல்ல முயற்சி. நன்றிகள்.
சுவாமி விவேகானந்தரின் “ராஜ யோகம்” யம நியமங்கள் பற்றி படிக்க நல்ல ஒரு புத்தகம்.
குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு பிரம்மச்சரியம் மிகவும் இன்றியமையாதது என்ற சுவாமிஜியின் அறிவுரை மிக முக்கியமானது.
மிகவும் பயனுள்ள செய்தி, பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி