ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்

விறுவிறுப்பான த்ரில்லர்

படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை. பாலஸ்தீனியத் தீவீரவாதியின் மூளையாகச் செயல்படும் ஒருவரை அவரது வீட்டுத் தொலைபேசியிலேயே குண்டு வைத்துக் கொல்லத் திட்டமிடும் பொழுது, தவறுதலாகத் தொலைபேசியைத் தீவீரவாதியின் மகள் எடுத்துவிட, ‘ரிமோட்டை அழுத்திவிடாதே, வெடித்துவிட வேண்டாம்’ என்று பதறிக்கொண்டு காரில் இருக்கும் தன் கூட்டாளிகளை நோக்கி அந்த வயதான ஒற்றர் கார்ல் ஓடும்பொழுது நாமும் நெஞ்சு படபடக்கக் கூடவே ஓடுகிறோம். இலக்கைத் தவிர வேறு ஒரு சிறு புழுவுக்குக் கூட ஆபத்து வந்துவிடக் கூடாது, அநாவசியமாகக் கொலை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஆனால் மாறாக அரபுத் தீவீரவாதிகளோ விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி எதிர்ப்படும் அப்பாவிகளையும் கொல்லக் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. (இதை நாம் அண்மையில் மும்பை பயங்கரச் செயலிலும் கண்டோம்). இரண்டு இனத்தவருக்கும் உள்ள வேறுபாடுகளை இயக்குனர் இதுபோன்ற காட்சிகள் மூலம் அழுத்தமாக உணர வைக்கிறார். பின்னர் அந்தச் சிறுமி பத்திரமாக வீட்டைவிட்டு வெளியேறியபின், மீண்டும் அழைத்து, இந்தமுறை எதிரியை மட்டும் குண்டுவெடிக்கச் செய்து கொல்லும் இடம் திகிலின் உச்சக் கட்டம். அது போலவே தீவீரவாதியின் தலைவர் சலாமேயைக் கொல்லச் செல்லும்பொழுது அவனுடன் வரும் பாதுகாப்புப் படையினரையும் சுட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து குழுவினரிடம் பலத்த ஆலோசனை நிலவுகிறது. அவர்கள் நம்மைத் தாக்கினால் மட்டுமே சுடவேண்டும் என்கிறார் அவ்னெர். சலாமேயை மழையின் ஊடே துரத்தும் இடம் அற்புதம். அவனைக் கொலை செய்யவிடாமல் தடுத்து விடுபவர்கள் இஸ்ரேலின் நண்பனான அமெரிக்காவின் சிஐஏ ஆட்கள்.

தீவிரவாதிகளை அரசியல் காரணங்களுக்காக அமெரிக்க சிஐஏவும், ரஷ்ய கேஜிபியும் பாதுகாக்கின்றன. உலக அரசியல் சதுரங்கத்தில் தீவிரவாதிகளுக்குத் தீனி போட்டு வளர்ப்பது அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறார். கேஜிபியினால் பாதுகாக்கப்படும் தீவீரவாதியைத் தீர்த்துக்கட்டும் இடத்தில் அவ்னெர் குழுவினர் காட்டும் மனிதாபிமானம் அவர்கள்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது. கொல்லப்பட வேண்டியது தீவீரவாதிகள் மட்டுமே என்பதில் மிக உறுதியாக உள்ளனர்.

படத்தில் பாலஸ்தீனியர்களின் விளக்கங்களும் தீவீரவாதத்துக்கு அவர்களது சப்பைக்கட்டுகளும் பல இடங்களில் வைக்கப் படுகின்றன. அவ்னெர் ஒரு தீவிரவாதியைப் பேட்டி காண்பது போல் நடிக்கும் காட்சியில் அவனும் அவனது மனனவியும் மிகவும் ஆக்ரோஷமாக இஸ்ரேலுக்கு எதிரான தங்களது வாதங்களை, நிருபர் வேடத்தில் வரும் அவ்னெரிடமே வைக்கின்றனர். பொறுமையாக அவன் கேட்டுக் கொள்கிறான். ஏதென்ஸில் அவன் தங்கும் அதே இடத்தில் பாலஸ்தீன கொரில்லாக்களும் தங்க நேர்ந்துவிட, இவர்கள் மொஸாட் படையினர் என்பதை அறியாத பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டும், யூதர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று மிகுந்த கொந்தளிப்புடன் அவ்னெரிடமே வாதிடுகின்றனர். இதுபோல் பல இடங்களில் பாலஸ்தீனியர்களின் தீவிரவாதத்துக்கான நியாயங்களும் வைக்கப்படுகின்றன.

என்னதான் ஸ்பீல்பெர்க் அமைதிவாதம் பேசினாலும், பழி வாங்குதல் தவறு என்று தன் பாத்திரங்கள் மூலம் கூறினாலும், காட்சி அமைப்புகளின் தீவீரத்திலும், இஸ்ரேலியத் தடகள வீரர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் தத்ரூபமான காட்சிகளின் மூலமும், கோல்டா மேயர், மொஸாட் தலைவர், அவ்னெரின் அம்மா போன்றவர்களின் வசனங்கள் மூலமும் இஸ்ரேல் பக்கம் உள்ள நியாயத்தை தெள்ளத் தெளிவாகப் பார்வையாளர்களுக்குக் காட்டி விடுகிறார். அந்த விஷயத்தில் தனது இனத்தினருக்கு எவ்விதக் குறையையும் வைத்து விடவில்லை. சாய்வுநிலை எடுக்காத ஒரு பார்வையாளருக்கு இந்தப் படம் இஸ்ரேல் தரப்பு நியாயத்தை மிகுந்த உக்கிரத்துடன் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

இரும்புப் பெண்மணி கோல்டா மேயர்

படத்தின் முக்கியமான காட்சியாக நான் கருதியது இது. இஸ்ரேலே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. தனது வீட்டில் கூட்டப்படும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் கோல்டா மேயர் அழுத்தமாக அதே நேரத்தில் குமுறும் கொந்தளிப்புடனும் கோபத்துடனும் தீர்மானமாகப் பேசும் வசனங்கள்தாம். அந்த இடத்தைப் பலமுறை ரீவைண்ட் செய்து பார்த்திருப்பேன். கோல்டா மேயர் பேசுவதாக வரும் அந்தக் காட்சிகள் கடுமையான பொறாமை உணர்வையும், கழிவிரக்கத்தையும், சுயவெறுப்பையும், ஆத்திரத்தையும், கோபத்தையும், ஆற்றாமையும், விரக்தியையும் ஒருசேர ஏற்படுத்தின.

ஏன் நமக்கு கோல்டா மேயர் போன்ற துணிச்சலான தலைவர் கிட்டவில்லை? கோல்டா மேயர் வேதனையின் உச்சத்தில் இருந்தபோதிலும் தனக்குப் பாதுகாவலானாக வேலை பார்த்த ஒரு சாதாரண அரசு ஊழியனை, ஆரத் தழுவி வரவேற்கிறார். காப்பி வேண்டுமா என்று கேட்டு உபசரித்து அவரே காபி கலந்து தருகிறார். குடும்பத்தைப் பற்றிப் பரிவாக விசாரிக்கிறார். அப்பொழுது அவர் பேசும் வசனங்கள் படத்தின் உயிர்நாடி. எந்தவித சட்டத்திற்கும் பிடிபடாத, இஸ்ரேலின் இருப்பையே ஒத்துக்கொள்ளாத கொலைவெறிக் கூட்டத்தை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் நிதானித்து, “These people vowed to destroy us. Every civilization finds it necessary to compromise with its own values, forget peace now, we need to show we are strong” என்று கூறி, தமது நாடு சட்ட திட்டங்களை மீற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மிகுந்த வேதனையுடன் கூறுகிறார்.

அவ்னெராக வரும் எரிக் பானா சில காட்சிகளில் நம்மை உலுக்கி விடுகிறார். தான் உயிர் பிழைப்போமா, குழந்தையைப் போய்ப் பார்ப்போமா என்று தெரியாத நிச்சயமற்ற நிலையில், தான் ஒரு கொலைகாரனாக மாறி எதிரிகளைக் கொன்றுவரும் நிலையில் தன் குழந்தையின் குரலைக் கேட்டவுடன், சொல்லவியலாத சோகத்தைக் கொட்டி, குலுங்கி அழும் காட்சியில் நம்மை உலுக்கிவிடுகிறார். என்னதான் உறுதியான கொலைப்படைத் தலைவனாக இருந்தாலும் தான் பிறவிக் கொலைகாரன் அல்ல, குருதியும், சதையும், மனிதாபிமானமும் நிரம்பிய ஒரு சாதாராண பாசமுள்ள தந்தைதான் என்று உருகுகிறார். மிகச் சிறப்பான நடிப்பு அது.

அவ்னெரின் நிலை

தான் செய்த கொலைகளும், மனசாட்சியின் கேள்விகளும், துர்க்கனவுகளும், முக்கிய தீவிரவாதியைத் தவறவிட்ட குற்ற உணர்வும், தன்னையும் குடும்பத்தையும் மொஸாட் கொன்றுவிடுமோ என்ற அச்சமும், மாஃபியாக்கள் துரத்துகிறார்களோ, பிஎல்ஓ துரத்துகிறதோ, சிஐஏ துரத்துகிறதோ என்று அறியாமல் தூக்கமிழந்து தவிக்கும் அவ்னெர் சொல்லொணாத மனக் கலக்கத்துக்கு ஆளாகும் காட்சியை இதைவிட அருமையாக யாரும் காட்டிவிட முடியாது. இறுதியில் அவ்னெர் மூலமாக ஸ்பீல்பெர்க் என்னும் இயக்குனர் பேசுகிறார். பழிவாங்குவதால் நாம் என்ன சாதிக்கிறோம், மீண்டும் மீண்டும் தீவீரவாதிகள் முளைக்கின்றனர், நம்மால் அமைதியை வாங்க முடிந்ததா? ஒவ்வொரு உயிருக்கும் பதில் நூறு உயிர் என்பது எதில் போய் முடியும்? இந்தக் கேள்விகளை இஸ்ரேல் மொஸாட் கேஸ் ஆபீசர் எப்ரகிமிடம் எழுப்புகிறார். எப்ராகிம் ஆம், நம் நகத்தை வெட்டினால் கூடத்தான் மீண்டும் முளைக்கிறது அதற்காக வெட்டாமல் இருக்க முடியுமா? அந்த லக்சுரி நமக்கு உள்ளதா? என்கிறார். அவ்னெரின் அம்மாவோ இஸ்ரேல் தரப்பு நியாய்த்தை இன்னும் அழுத்தமாகக் கூறுகிறார். நம் வீட்டை யாரும் தரப்போவதில்லை, அதை எடுத்துக் கொள்வதையும், பாதுகாப்பதையும் நாம்தான் செய்ய வேண்டும் என்கிறார். குழம்பித் தவிக்கும் தன் மகனை ஆசுவாசப்படுத்தி அவன் செய்தது சரியானதொரு செயல்தான் என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவ்னெரைப் போலவே ஸ்பீல்பெர்கும் குழம்பித் தவிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

பார்வையாளர்கள் மனதில் இந்தப் படம் நிச்சயமாக இஸ்ரேல்மீது அனுதாபம் ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்தாலும் உள்ளுக்குள் அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறார் ஸ்பீல்பெர்க். உலகின் தலைசிறந்த இயக்குனரின் படம் என்பதைப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்த்துகின்றது.

கொலையுண்டது 11 விளையாட்டு வீரர்களே. ஆனாலும் அவர்கள் உயிருக்கும் விலை உண்டு என்று நினைத்த அந்த கோல்டா மேயர் எங்கே, தாக்கப் பட்டது பாராளுமன்றமே ஆனாலும் விடுதலை செய் என்று சொல்லும் நம் அரசியல்வாதிகள் எங்கே?

நம் நாட்டின் மானத்தைக் காக்கத் துணியும் அனைத்து வீரர்களுக்கும், எதிரிகளை அழிக்க முன்வரும் ஒவ்வொரு தேச பக்தருக்கும் எனது வீர வணக்கம். ஜெய்ஹிந்த்!

4 Replies to “ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்”

  1. மிக அழகாக பகிர்ந்துள்ளீர்கள் விசுவாமித்ரா. நன்றி. மனதை கனக்க வைக்கின்றன உங்கள் வார்த்தைகள்.நாம் சிந்திய இரத்தங்கள் போதும். அடுத்த தலைமுறையிலாவது இந்துக்களும் இந்தியாவும் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் பலத்துடன் நிமிர்ந்து நிற்க வழிவகுக்கும் அரசியல்வாதிகளை ஆண்டவன் நமக்கு அருளட்டும். அத்தகைய அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் விவேகத்தை மக்களுக்கு அருளட்டும்.

  2. Dear Viswamithra,

    Having read this article, I have seen the movie.. Fantastic..and your article covers all the points.. nothing to add.. Good article..

    Regards.

    Mahesh.

  3. இப்போதுதான் இந்த கட்டுரைகளை படிக்க சந்தர்பம் வந்தது. நன்றி! இது போல் கட்டுரைகள் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *