கம்பராமாயணம் – 1

பால காண்டம்

1. ஆற்றுப் படலம் – The Canto of the River

மழை பொழிதல்

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,

காசு அலம்பு முலையவர் கண் எனும்

பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1

சொற்பொருள்: ஆசலம்: சஞ்சலம். காசு வைர மணிகள் (வைரமணிகளால் கோக்கப்பட்ட ஆரங்கள்) பூசல் போர்.

சஞ்சலத்துக்கு மனிதனை உள்ளாக்கக்கூடிய ஐந்து புலன்களாகிய அம்புகளும்; எப்போதும் ஒன்றோடு ஒன்று மோதுவதால் ஒலியை எழுப்புகின்ற வைரமணிகள் பதிக்கப்பட்ட ஆரங்களை அணிந்த பெண்களுடைய கண்களாகிய போர் அம்புகளும், ஒருபோதும் ஒழுக்க நெறியைவிட்டு விலகி அப்பால் செல்லாத இயல்பை உடையதாகிய கோசல நாட்டை அணி செய்யும் சரயு நதியின் பெருமையைக் கூறுவோம்.

மனிதனை ஒழுக்க நெறியைவிட்டு அப்பால் செல்ல எப்போதும் தூண்டுகோல்களாக விளங்குபவை என்ற காரணத்தால் ஐம்புலன்களை அம்புகளாகச் சொன்னார். ஆடவர்களுடைய புலன்களாகிய அந்த அம்புகளுக்கு எதிர் அம்புகளாக விளங்குவன என்று (விலையுயர்ந்த மணிகள் பதித்த பல ஆரங்கள்ஒன்றோடு ஒன்று மோதி ஒலியெழுப்பும் தன்மையை உடையவைஎன்பதனால் செல்வச் செழுமை நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பு. அத்தகைய பெண்களின் (போருக்கு அழைக்கும் தன்மையைக் கொண்ட கூரான) கண்களும் ஒழுக்க நெறியைவிட்டு நீங்காத தன்மையை உடைய நாடு கோசலம். ஆடவர், புலன்களை நெறிப்படுத்தியவர்.

3 Replies to “கம்பராமாயணம் – 1”

 1. ஐயா,

  தங்கள் விளக்கங்கள் மிக அருமை.

  சரயுவின் புகைப்படம் கண்ணை கவருகிறது. அயோத்தியை சென்று பார்த்து வர ஆசை.

  இதன் தொடர்ச்சி வெளியிட தாமதமாகிறதே. விரைவில் பதியுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  நன்றி

  ஜயராமன்

 2. திரு ஜயராமன்,

  நன்றி. ஆற்றுப்படலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இனி அடுத்த படலத்தைத் தொடங்குவோம்.

Comments are closed.