ரீதிகெளளை

Lalgudi Jayaramanஒவ்வொரு டிசம்பரும் நம் வெகுஜனப் பத்திரிகைகள் இசைச் சிறப்பிதழ் வெளியிடுவது வழக்கம். 2008 டிசம்பர் அமுதசுரபியின் அட்டையில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் புகைப்படம் இருந்ததால் முற்போக்கு இலக்கியச் சிறப்பிதழாக இருக்குமோ என்று சந்தேகத்துடனே புரட்டினேன். ஆனால் லால்குடி ஜயரமானின் பேட்டி, செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரைப் பற்றிய புத்தகத்திலிருந்து சில பகுதிகள் என இசை தொடர்பான நிறைய விஷயங்கள் அதில் இடம்பிடித்திருந்தன.

‘செம்மங்குடியின் குரல்’ என்ற இன்னும் வெளிவராத புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்த பத்திகள் சுவாரசியமாக இருந்தன. செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரே தன் வாழ்க்கையைச் சொல்வது போல் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

அதிலிருந்து ஒரு பகுதி:

“(என் குரு) எனக்கு முதலே வர்ணம் ஆரம்பிச்சார். ஆரம்பிச்சது மட்டுமில்லை. அவர் கைப்பட எழுதியும் கொடுத்தார். அதுலே ஒரு விஷயம் என்னன்னா, சாகித்தியத்துக்கு அப்புறம்தான் ஸ்வரம் எழுதுவார். ஸ்வர சாகித்யமா நொடேஷனோடு சொல்லிக்கொடுக்கும் வழி அபூர்வம்தான். இதனாலே நானும் அழகா நொடேஷன் எழுத ஆரம்பிச்சேன். இப்ப மாதிரி இல்லை. சுமாரா எட்டு, பத்து வர்ணங்கள் சொல்லிக் கொடுத்தார்.

வர்ணங்களில் எனக்கு ரீதிகெளளை வர்ணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எப்பவும் அதைப் பாடிக் கொண்டிருப்பேன். ராஜகோபால நாயுடுன்னு ஒருத்தர் அடிக்கடி வருவார். அவர் நான் அடிக்கடி அதைப் பாடறதைக் கேட்டு என் பெயரையே ரீதிகெளளை வர்ணம்னு வச்சுட்டார். வரும்போதெல்லாம், ‘எங்கே அந்த ரீதிகெளளை வர்ணம்?’ அப்படின்னு கேட்டபடிதான் வருவார்!”.

இதைப் படித்துவிட்டு, செம்மங்குடி பாடிய ரீதிகெளளை வர்ணம் எதுவும் கிடைக்குமா என்று கர்நாடக சங்கீதக் கடலான சங்கீதப்ரியாவில் தேடினேன். செம்மங்குடி பாடியது கிடைக்கவில்லை. ஆனால் வேறு பல கலைஞர்களின் ரீதிகெளளை வர்ணங்கள் கிடைத்தன.

அதில் லால்குடி ஜயராமனின் படைப்பில் ஒரு சிறுபகுதியை இங்கே கேட்கலாம்:

Get this widget | Track details | eSnips Social DNA

கர்நாடக சங்கீதத்தில் ‘வர்ணம்’ என்படுவது ஒரு நீண்ட கச்சேரியின் ஆரம்பத்தில் பாடப்படுவது. பொதுவாக ஒரு ராகத்தின் அனைத்து சாயல்களையும், விதவிதமான பிரயோகங்களையும் கொண்டதாக இருக்கும் ‘வர்ணங்கள்’ பாடகர் தன் குரலை கச்சேரிக்காக நிலைப்படுத்திக்கொள்வதற்கான பயிற்சியாக இருக்கும். அதனால் வர்ணத்தைப் பாடி, குரலைப் பதப்படுத்திக்கொண்டபின் கீர்த்தனைகளுக்குள்ளோ, விரிவான ராகங்களுக்குள்ளோ நுழைவது கச்சேரி மரபாக இருக்கிறது. தியாகராஜரின் நேரடி சிஷ்யரான வீணை குப்பையர் இயற்றிய ‘வனஜாக்ஷா’ பிரபலமான ரீதிகெளளை வர்ணம்.

கர்நாடக சங்கீத ராகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவம் உண்டு. அத்தகைய பிரத்தியேக வடிவத்தை அளிப்பது அந்த ராகத்திற்கே அமைந்த சிறப்புப் பிரயோகங்கள்தான். அவற்றைக் கொண்டுதான் குறிப்பிட்ட ராகத்தின் வடிவத்தை எளிதில் இனங்கண்டு கொள்ள இயலும். ஆழமான ராகஞானம் இல்லாதவர்கள்கூட எளிதில் கண்டு கொள்ளக்கூடிய ராகமாக ரிதிகௌளையின் வடிவம் அமைந்திருப்பது அதன் பெருமை. அதனால் கர்நாடக சங்கீத ராகங்களின் வடிவங்களை இனங்கண்டு ரசிப்பதற்கு ரீதிகெளளை ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.

கர்நாடக சங்கீத ராகங்களின் ஒரு பிரிவான ‘ரக்திராகம்’ என்னும் வகையைச் சேர்ந்தது ரீதிகெளளை. ரக்திராகங்கள் மனதை உருக்கும் இனிய மெலடியைக் கொண்டவை. ரீதிகெளளை, சஹானா, வராளி போன்றவை இவ்வகைப்படும்.

தியாகராஜர் தன்னைப் பெண்ணாக உருவகித்துக் கொண்டு ராமனை நினைத்துப் பாடும், ஏக்கம் சொட்டும் கீர்த்தனைக்கு ரக்திராகமான ரீதிகெளளையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

“நீ என்னிடம் ஏன் வரமாட்டேன் என்கிறாய்? இது முறையல்ல. ஒரு அநாதைப் பெண் தன் கணவனைத் தஞ்சமடைந்து பாதுகாப்பாக இருப்பது போல், நான் உன்னையே நம்பியிருக்கிறேன்; பலமுறை இறைஞ்சுகிறேன். நீ என்னைப் பாதுகாக்கக் கூடாதா? நான் உன் கருணை பொங்கும் முகத்தை ஏங்கித் தியானிப்பதை நீ இப்படித்தான் இரக்கமில்லாமல் பார்ப்பாயா?” என்று ரீதிகெளளையில் கேட்கிறார் தியாகராஜர்.

ஆலத்தூர் சகோதரர்களின் சிறப்பாகக் கருதப்படும் ‘சேர ராவதேமிரா? ராமையா!’ என்ற அந்தக் கீர்த்தனையை பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இங்கே கேட்கலாம்:

Get this widget | Track details | eSnips Social DNA

இது தவிர G.N.பாலசுப்ரமணியம் மிக அழகாகப் பாடிய ‘ராகரத்னமாலிகசே’, டி.கே.பட்டம்மாளின் சிறப்பாக அறியப்படும் ‘நன்னு விடச்சி’, M.D.ராமநாதனின் பிரபலமான ‘படலிகதீரா’, ராமபகவானைத் தாலாட்டுவது போல் வரும் ‘ஜோ, ஜோ ராமா’ ஆகியவையும் தியாகராஜர் ரீதிகெளளை ராகத்தில் இயற்றிய கீர்த்தனைகள்.

சியாமா சாஸ்திரிகளின் புதல்வரான சுப்பராய சாஸ்திரி இயற்றிய ‘ஜனனி நின்னுவினா’ என்ற ரீதிகெளளை கீர்த்தனையும் வெகு பிரபலமான ஒன்று. செம்மங்குடி சீனிவாச ஐயரின் ஸ்பெஷாலிட்டி இந்தக் கீர்த்தனை!

Get this widget | Track details | eSnips Social DNA

‘ஜனனி நின்னுவினா’வைப் போலவே இன்னொரு மிகப்பிரபலமான ரீதிகெளளை கீர்த்தனை ‘பாபநாசம் சிவன்’ இயற்றிய ‘தத்வமறிய தரமா?’. இந்தக் கீர்த்தனையை மிக சிறப்பாகப் பாடக்கூடியவர் மதுரை மணி ஐயர்.

Get this widget | Track details | eSnips Social DNA

இங்கே கொடுத்திருக்கும் சாம்பிள்களைக் கேட்கும்போது, ராகம், சாகித்யம் இதையெல்லாம் தாண்டி முதலில் நமக்குக் கிடைப்பது இந்த ராகத்தின் மனதை உருக்கும் இனிய மெலடி. இப்போதெல்லாம் கர்நாடக சங்கீதம் என்றாலே, பழமையான, பக்தியோடு தொடர்புடைய, மிகவும் பயிற்சி தேவைப்படும், பண்டிதர்கள் மட்டுமே ரசிக்கக் கூடிய விஷயம் என்ற பிம்பம் உருவாகியிருக்கிறது.

2002-ஆம் ஆண்டு வெளிவந்த தினமணி இசைச்சிறப்பிதழில் திருவெண்காடு ஜெயராமன், மதுரை மணி ஐயருடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதி:

“ஒரு தடவை கபாலி கோயிலில் கச்சேரி. அவர் கச்சேரி என்றால் கோயில் மதில் மீதெல்லாம் ஜனங்கள் உட்கார்ந்து கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். மைக் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவிரும்பி சிலநாள் என்னை வெளியில் போய் பாட்டு எப்படி கேட்கிறது என்று கேட்கச் சொல்வார். அப்படி நான் ஒருமுறை வெளியே போய் மைக்கில் பாட்டு எப்படி கேட்கிறது என்று கவனித்தேன். தெருவில் ஒரு ரிக்ஷாக்காரர், ரிக்ஷாவின் பின்சீட்டைப் பிளாட்பாரத்தில் போட்டு அதில் சாய்ந்தபடி கச்சேரி கேட்கிறார். அப்போது யாரோ சவாரிக்குக் கூப்பிட்டார்கள்.

அவர், “சாமி.. வண்டி இன்னிக்கு வராதுங்க” என்றார்.

சவாரிக்கு வந்தவர், “அட, கூட வேணா காசு வாங்கிக்கய்யா. வா.. வண்டிய எடு” என்றார். ரிக்ஷாக்காரர் சொன்னார்: “காசு இன்னா பெரிய காசு… நாளைக்குக் கூட சம்பாரிச்சுக்குவேன். ஐயிரு பாட்டு போச்சுன்னா அப்புறம் எப்படி கேக்கிறது? வண்டி வராது.”

ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட எந்த பேதமுமில்லாமல், எல்லோரும் அதன் இனிமையில் திளைத்து ரசித்துக்கொண்டிருந்த விஷயமாகக் கர்நாடக சங்கீதம் இருந்திருக்கிறது.

திரைத்துறையுடன் தொடர்பு வைத்திருக்கும் என் நண்பர் ஒருவர் நம்பமுடியாத ஒரு விஷயத்தைச் சொன்னார். இப்போதைய இளம்தலைமுறை இசையமைப்பாளர்கள் கடும் ட்யூன் பஞ்சத்தில் சிக்கித்திணறுவதாகவும், அதனால் சில சமயங்களில் படத்தின் இயக்குநர்களே தங்களுக்குத் தேவைப்படும் ட்யூனின் சாயலை இசையமைப்பாளர்களிடம் சொல்லவேண்டி வருகிறது என்றும் சொன்னார். கர்நாடக சங்கீதத்துடன் கொஞ்சம் பரிச்சயம் கொண்டிருந்தால் கூட இவர்கள் இப்படி ட்யூனுக்குத் தடுமாறத் தேவையில்லை. ராகங்களின் பல்வேறு வடிவங்களைக் கொண்டு தங்கள் கற்பனா சக்தியை உபயோகித்து எப்படி விதவிதமான மெட்டுகளையும், மெலடிகளையும் அமைக்கலாம் என்பதற்கு ஏராளமான கீர்த்தனைகள் சான்றாக இருக்கின்றன.

kangal irandalசமீபத்தில் பெரிய ஹிட்டான சுப்ரமணியபுரத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடல்கூட ரீதிகெளளை ராகத்தை வெகு அழகாகக் கையாண்ட பாடல்தான். ஜேம்ஸ் வசந்த் இசையமைத்த முதல் திரைப்படம் இது. நீண்ட நாட்களுக்குப்பின் ப்ரிலூட், இண்டர்லூட், சரணம், பல்லவி என அனைத்து அம்சங்களும் கச்சிதமாக அமைந்த முழுமையான பாடலாக இது அமைந்திருந்தது. S.N.சுரேந்தரின் குரலை நினைவூட்டும் குரலைக் கொண்ட பெள்ளிராஜா என்ற பாடகரின் முதல் பாடல் இது.

இப்பாடலின் வெற்றிக்குப் பின் இவர் அளித்த பேட்டியில், “இப்பாடலை முதலில் இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு இளம்பாடகர்தான் பாடுவதாக இருந்தது. ஆனால் அவர் இப்பாடலின் பிரயோகங்கள் கடினமாக இருக்கின்றன என்று பாட மறுத்துவிட்டார். இதே ராகத்திலமைந்த ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலை நான் அடிக்கடி மேடையில் பாடுவேன். அதை நினைவில் வைத்திருந்த ஜேம்ஸ் வசந்த் எனக்கு இப்பாடலைப் பாடும் வாய்ப்பைத் தந்தார். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடல் மூலம் ரீதிகெளளையின் வடிவம் புரிந்திருந்ததால் ‘கண்கள் இரண்டால்’ பாடலைப் பாடுவது எனக்கு எளிதாக இருந்தது!” என்று சொல்லியிருக்கிறார்.

பெள்ளிராஜா குறிப்பிடும் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடல் 1977-இல் இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த ‘கவிக்குயில்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. எனக்குத் தெரிந்து இந்த ராகத்தை திரையிசையில் முதன்முறையாகக் கொண்டுவந்தது இந்தப்பாடலே. ‘ச-க-ரி-க-ம-நி-த-ம-நி-நி-ச’ என்ற ரீதிகெளளையின் ஆரோஹணமே, ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ என்ற முதல்வரியாக இப்பாடலில் அமைந்திருக்கிறது. இளையராஜா இசையமைக்க ஆரம்பித்து இரண்டாம் வருடம் வெளிவந்தது இப்பாடல். கர்நாடக ராகங்களில் தனக்கிருக்கும் ஆளுமையையும், பரிச்சயத்தையும் இளையராஜா முழுமையாக முதன்முறையாக வெளிப்படுத்தியது இந்தப்பாடலில்தான். தீவிர எம்.எஸ்.வி. ரசிகர்களும் இளையராஜாவை கவனிக்க ஆரம்பித்தது இப்பாடலுக்குப் பின்தான் என்றார் இக்காலகட்டத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர்.

பாலமுரளிகிருஷ்ணா திருவிளையாடல் திரைப்படத்தில் பாடிய ‘ஒருநாள் போதுமா?’ பாடலுக்குப்பிறகு, ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ்த்திரையிசையில் பாடிய பாடல் இது என்று அறிகிறேன்.

அவர் குரலில் இப்பாடலின் ஒர் இங்கே கேட்கலாம்:

Get this widget | Track details | eSnips Social DNA

இப்பாடலுக்குப் பின் இளையராஜா இந்த ராகத்தை ‘தலையைக் குனியும் தாமரையே’ என்ற பாடலிலும், ‘மீட்டாத ஒரு வீணை’ என்ற பாடலிலும் கையாண்டிருக்கிறார். இரண்டு பாடல்களின் இரண்டாவது இண்டர்லூடுகள் மிக அழகாக ரீதிகெளளையை வெளிப்படுத்தியவை.

‘தலையைக் குனியும் தாமரையே’ என்ற பாடல் 1983-இல் வெளிவந்த ‘ஒரு ஓடை நதியாகிறது’ என்ற படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ராஜேஸ்வரி பாடி வெளிவந்தது. இப்பாடலின் பல்லவியின் தாளம் மிக அழகாக 1/123 எனப் பிரித்து 4/8 சதுஸ்ரமாக வெளிவருகிறது. ஆனால் சரணம் ஒரு இயல்பான மரபிசையின் தாளமாக இருக்கிறது. இப்பாடலின் இரண்டாம் இண்டர்லூட், அதைத்தொடர்ந்து வரும் சரணம், பல்லவியை இங்கே கேட்கலாம்:

Get this widget | Track details | eSnips Social DNA

‘மீட்டாத ஒரு வீணை’ பாடல் ‘நிலவே முகம் காட்டு’ என்ற படத்தில் இடம்பெற்றது. மிகவும் கடினமான தாளத்தில் அமைந்தது இந்தப்பாடல். சரணத்திலேயே இரண்டு இடங்களில் தாளம் மாறுகிறது. ஆனாலும் ரீதிகெளளை இந்தத் தாளங்கள் மேல் அழகாகப் பயணிக்கிறது. மேற்கத்திய இசை வடிவம், கர்நாடக ராகம் இரண்டும் ஒன்றிலிருந்து இன்னொன்று தனித்துத் தெரியாமல் இயல்பாகவே ஒருங்கிணைந்து வெளிப்படும் இப்பாடல் ஒரு நல்ல Fusion எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. ஹரிஹரனும், மஹாலக்ஷ்மி ஐயரும் நன்றாகவே பாடியிருக்கிறார்கள். இப்பாடலின் இரண்டாம் இண்டர்லூட், அதைத்தொடர்ந்து வரும் சரணம், பல்லவியை இங்கே கேட்கலாம்:

Get this widget | Track details | eSnips Social DNA

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல்வன் திரைப்படத்தில் வரும் ‘அழகான ராட்சஷியே’, வித்யாசாகர் இசையில் ‘சுடும் நிலவு’, யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘தீண்டத் தீண்ட’ பாடல்களும் ரீதிகெளளை சாயலைக் கொண்டவை.

ரீதிகெளளை ‘கண்கள் இரண்டால்’ பாடலாக ஊரெங்கும் சமீபத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. அதைக் கேட்டு ரசித்த பெரும்பாலானோருக்கு அது ரீதிகெளளை என்று தெரிந்திருக்கவில்லை. அப்பாடலை ரசிக்க அந்த விஷயம் தெரிந்திருக்கத் தேவையுமில்லை. அதைப் போலவே இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், நீயும் நானும் கூட இறைவன் என்று சொல்லும் அத்வைதம், இன்று ‘நான் கடவுள்’ என்ற திரைப்படப் பெயராகப் பரவியிருக்கிறது. ‘நான் கடவுள்’ என்ற பதம் அத்வைதம் என்று அறிந்து தத்துவ விசாரத்தில் மூழ்க வேண்டாம் – மனிதர்கள் எல்லோரும் அடிப்படையிலேயே பாவிகள் இல்லை, “ஏக இறைவன்” முன் மண்டியிட்டு தண்டனைக்கும், மன்னிப்புக்கும் இறைஞ்ச வேண்டாம் என்று புரிந்து கொண்டால் கூடப் போதும்!

இந்த அத்வைதம் பற்றிய விவாதம் கொஞ்ச நாளாகவே நிறைய நடந்து கொண்டிருக்கிறது. புதுக்கவிதைகளில் ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ போன்ற பதங்கள் சரியான அர்த்தத்திலோ, தவறான அர்த்ததிலோ தென்படுகின்றன. கவிஞர் விக்ரமாதித்யன் கூட ‘த்வைதம் x அத்வைதம்’ என்ற ஒரு புதுக்கவிதையை சமீபத்தில் எழுதியிருந்தார். அத்வைதம் இந்து மதம் என்பதால் அதைப்பற்றிப் பேசத் தயங்குபவர்கள் கூட, கிட்டத்தட்ட அந்தக் கருத்தை உள்வாங்கிக்கொண்ட சூஃபி தத்துவங்களை சிலாகித்துப் பேசுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் மகத்துவத்துக்குக் காரணம் அவர் அடிப்படையில் சூஃபி தத்துவத்தை உள்வாங்கிக் கொண்டதுதான் என்றெல்லாம் எழுதிப் புல்லரிக்க வைக்கிறார்கள்.

“த்வைதம் சுகமா, அத்வைதம் சுகமா?
அண்டத்தின் இயக்கங்களுக்கு
சாட்சியாக இருப்பவனே என்னிடம் சொல்!
நான் இந்தப் புதிரிலிருந்து
விடுபட்டுத் எந்த சந்தேகமுமில்லாமல்
தெளிவாகப் புரிந்துகொள்ள
எனக்கு விளக்கிக் கூறு.
அனைத்துலகிலும் நிறைந்திருப்பவனே,
பஞ்சபூதங்களிலும்,
பக்தர்களின் மேலான அன்பிலும் நிலைத்திருப்பவனே,
எனக்கு பதில் சொல் –
எது சுகம்?
த்வைதமா? அத்வைதமா?”

மேற்கண்ட பொருள்வரும் கவிதையை ‘த்வைதமு சுகமா?’ என்ற பாடலாக இயற்றியவர் தியாகராஜர். அதைக் கீர்த்தனையாகப் பாட அவர் தேர்ந்தெடுத்த ராகம் ரீதிகெளளை.

16 Replies to “ரீதிகெளளை”

 1. சேதுபதி அருணாசலத்தின் பதிவு மிக அழகாகவும் ஆழமாகவும் இருக்கிறது.
  ரீதிகௌளை ராகம் பற்றிய இந்த முழுநீளக் கட்டுரையை கர்நாடக இசைக் கலைஞர்கள் அனைவரும், ரசிகர்களும் அவசியம் படிக்க வேண்டும். கர்நாடக இசையின் வசீகரத்தைப் பற்றி எழுதுபவர்கள் அரிதிலும் அரிது.
  சேதுபதி அருணாசலத்திற்கு எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

 2. //அத்வைதம் இந்து மதம் என்பதால் அதைப்பற்றிப் பேசத் தயங்குபவர்கள் கூட, கிட்டத்தட்ட அந்தக் கருத்தை உள்வாங்கிக்கொண்ட சூஃபி தத்துவங்களை சிலாகித்துப் பேசுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் மகத்துவத்துக்குக் காரணம் அவர் அடிப்படையில் சூஃபி தத்துவத்தை உள்வாங்கிக் கொண்டதுதான் என்றெல்லாம் எழுதிப் புல்லரிக்க வைக்கிறார்கள்.//

  ஹமீது பாய் என்கிற மனுஷ்ய புத்திரன் நடத்தும் உயிர்மை என்னும் சிறுபத்திரிகையில் சாரு நிவேதிதா எழுதியுள்ள Slumdog Millionaire விமர்சனக் கட்டுரையைக் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறு பத்திரிகை வாசகர்களுக்கு சாரு சொல்லியுள்ள செய்தி பூடகமானதல்ல. மிக வெளிப்படையானது. இந்து மதம் / இந்திய தேசியம் என்ற ‘சாக்கடைக’ளிலிருந்து வெளிவந்து உய்வுபெற ஒரே வழி ஏ.ஆர். ரஹ்மானைப் போல இஸ்லாத்தைத் தழுவி முஸ்லீமாக மாறுவதுதான் என்பதே சாருவின் செய்தி. சூஃபி பற்றியெல்லாம் அவர் எழுதியுள்ளதை இந்தக் கீர்த்தனைக்கு அவர் பாடியுள்ள வர்ணமாகத்தான் கருதவேண்டும் என்பதும் உயிர்மை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

 3. // சூஃபி தத்துவங்களை சிலாகித்துப் பேசுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் மகத்துவத்துக்குக் காரணம் அவர் அடிப்படையில் சூஃபி தத்துவத்தை உள்வாங்கிக் கொண்டதுதான் என்றெல்லாம் எழுதிப் புல்லரிக்க வைக்கிறார்கள்.//

  அப்படிப் புல்லரிக்க வைப்பவர்களுக்கு சூஃபியிஸம் என்றால் என்ன என்பதே தெரியாது என்பதும், இந்துமதம் பற்றிய ஆழமான அறிவு அவர்களுக்கு இல்லை என்பதும் தெள்ளிதின் விளங்குகிறது. அரைவேக்காடுகளின் உளறலுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

  இசை பற்றிய அற்புதமான, ஆழமான கட்டுரை இது. சேதுபதி அருணாசலம் தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகளை எழுத வேண்டும். சூஃபி இசை, அரபி இசை, தமிழ் இசை, ஆங்கில இசை என்றெல்லாம் உளறிக் கொண்டிருப்பவர்கள் இதையெல்லாம் படித்தாலாவது திருந்துவார்களா என்று பார்க்க வேண்டும்.

  எல்லாவற்றையும் கடந்து நிற்கும் இசைக்கு ‘மொழி’ என்னும் குறுகிய அடையாளத்தை ஏற்படுத்த முனைவர்கள் முழு மூடர்கள் என்பதில் ஐயமில்லை.

  Music is not a Language. It’s a feeling. It’s an Experince. It’s a wonderful Expression of Nature.

 4. Sethupathi,

  Nice one!
  one correction: ‘Meettadha oru veenai’ is from Poonthottam starring Murali and Devayani, not Nilave Mugam Kaattu. The director was the same though.

 5. நல்ல கட்டுரை. இளையராஜாவின் பல திரைப்பாடல்கள் கர்னாடக ராகங்களை நளினமாக உள்ளடக்கியுள்ளன. சமீபத்திய இசை(?) இம்சைகளுக்கு நடுவே ஜேம்ஸ் வசந்தனின் இசை மென்மையாகவே இருக்கிறது. நல்ல கட்டுரை தந்த அருணாசலத்திற்கு நன்றி

 6. சேது, உங்களது கட்டுரையைப் படித்தபின் ஆச்சர்யமாக இருக்கிறது ‍உங்கள் வயதை நினைத்து; ஆசையாக இருக்கிறது நிறையத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று;
  பொறாமையாக இருக்கிறது எவ்வளவோ விஷயங்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோமே என்று.

  கண்ணன்.

 7. மேலும் ஓர் அற்புத படைப்பு.
  இசையில் உங்களது ஆளுமை வியப்படைய வைக்கிறது. ரீதிகெளளை ப‌ற்றி நிறைய‌ தெரிந்து கொண்டோம்.

  ஓரே ஒரு விஷயம். இசைப‌ற்றி ம‌ட்டுமே சொல்லி கொண்டு வந்து விட்டு இறுதியில் திடீரென‌ சூஃபி, ‘த்வைதம் / அத்வைதம்’ என்று த‌ட‌ம் புரண்டு விட்ட‌து. சொல்லிய‌ க‌ருத்துப் ப‌ற்றி எதுவும் சொல்ல‌வில்லை, infact அதுபற்றி ஒரு தனி க‌ட்டுரை வேண்டுமாலும் போடுங்கள், ஆனால் இந்த‌க் க‌ட்டுரைக்கு அது பொருந்தாம‌ல் போயி விடுகிறது.இத‌னால் வாச‌க‌னின் இறுதி மனநிலை ரீதிகெளளையை விட்டு வில‌கி வேறு ஒன்றில் நின்றுவிடுகிறது. என‌க்கு அப்ப‌டித்தான் இருந்த‌து.

  இது என் க‌ருத்து ம‌ட்டுமே , இதை positiveஆக‌ ம‌ட்டும் எடுத்து கொள்ளவும்.

  வாழ்த்துக்க‌ள். அன்புடன் தங்கள் நண்பன்.
  Dilli babu

 8. The easiest way to familiarise oneself with karnatic ragas is identifying ragas in film music. G.S. Mani iyer has given 3 cassettes in this format. I read and reread this article on rithigowlai. My request is similar articles vis-a-vis film music and ragas can be brought out. Vaazhga Sethupathi Arunachalam

  with regards
  subbu

 9. கர்நாடக சங்கீதம் போன்ற மக்களிடமிருந்து விலகிவிட்ட கலைகளைப் பற்றி பொதுமக்களுக்காக எழுதுவது மிகக்கடினம். கொஞ்சம் ஆழமாகப் போய்விட்டாலும் நிறைய பேருக்குப் புரியாது. மேலோட்டமாக இருந்தால் கர்நாடக சங்கீத அறிமுகமிருப்பவர்களுக்குப் பிடிக்காது. கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம். நிறைய கர்நாடக சங்கீதம் தொடர்பான கட்டுரைகள் எழுதியவன் என்ற வகையில் அந்த கஷ்டம் எனக்குத் தெரியும். அந்த விதத்தில் சேதுபதி அருணாசலம் பிரமிக்கத்தக்க வகையில் பலதளங்களைத் தொட்டு எழுதியிருக்கிறார். இவர் தொடர்ந்து எழுதினால் இசையைப் பற்றி எழுதும் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராக அறியப்படும் வாய்ப்புண்டு.

 10. சேதுபதி, சில நாட்கள் முன்பு இந்த ராகம், இந்த கீர்த்தனைகள் எல்லாம் பற்றி போகிறபோக்கில் பேசினோம். அத்துடன் பல விஷயங்களையும் சேர்த்து அருமையாக எழுத்திசைச் சித்திரம் ஒன்று தீட்டி விட்டீர்களே.. சபாஷ்! பலே.

  உங்கள் பட்டியலில் பிரபல ரீதிகௌளை கீர்த்தனைகளைக் கொடுத்திருக்கிறீர்கள். அதில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய இன்னொன்று ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யரின் “பிருந்தாவன நிலயே, ராதே”. கண்ணனைப் பற்றி நிறையப் பாடல் உண்டு, இது அவனது இணைபிரியாத சக்தியான ராதையைப் போற்றி அவர் இசைத்தது. சரணத்தில் வரும் ஜதிஸ்வரங்கள் அற்புதமானவை.

  பாடலை இங்கே கேட்கலாம் –
  https://www.hummaa.com/music/album/21811/Krishna+Maadhuryam

 11. சேதுபதி:
  இசை, ஆன்மீகம், தாத்பர்யம் என பல கோணங்களில் எழுதப்பட்ட ஒரு அழகான கட்டுரை. அனைத்துத் தரப்பான வாசகர்களும் எளிதில் அறியும் வண்னம் கட்டுரையைக் கையான்ட விதம், மதுரை மணி ஐயர் ரீதிகெளளை‍‍‍‍‍‍‍ யய் கைய்யான்டதின் தாக்கமோ ?

  தில்லி பாபுவின் கருத்து எனது கண்ணோட்டத்தை ப்ரதிபலிக்கின்றது. மொத்ததில் ஒரு முத்தான கட்டுரை. வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  விக்கி

 12. நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட கருத்துரை. ரீதிகௌளையை நன்றாக அனுபவிக்க வேண்டுமா. சுப்பராய ‍சாஸ்த்ரியின் ஜனனி நின்னுவினாவைக் கேட்கவேண்டும் அதுவும் எம்டிஆர் பாடி கேட்கவேண்டும்.

 13. சேதுபதி அவர்களின் கட்டுரை அருமை. ரீதிகௌளையின் முழு பரிணாமத்தை அழகாக விளக கியுள்ளார். ரீதிகௌளையைஅனுபவிக்க முழுவதுமாக மூழ்கி , அதன் சுகம் உடலெங்கும் பரவி அப்படியே உடல் மிதவையாக வானில் பறக்க M D ராமநாதனின் ‘ பரிபாலய’ வை க்கேட்கவேண்டும்.

 14. சேதுபதி அவர்களின் கட்டுரை அருமை. ரீதிகௌளையின் முழு பரிணாமத்தை அழகாக விளக கியுள்ளார். ரீதிகௌளையைஅனுபவிக்க முழுவதுமாக மூழ்கி , அதன் சுகம் உடலெங்கும் பரவி அப்படியே உடல் மிதவையாக வானில் பறக்க M D ராமநாதன்ன் பாடிய பாடலைக் கேட்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *