கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

Birsa Mundaபத்தொன்பதாம் நூற்றாண்டில் பீஹார் மாநிலத்தில் மலைவாழ் மக்களின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட செயல்வீரன் பிர்ஸா முண்டாவைப் பற்றிய உண்மைக் கதைதான் கண் விழித்த கானகம்.

ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுதியபோது சுஜாதா முன்னுரையில் “உண்மை எவ்வளவு, கற்பனை எவ்வளவு என்பது தொழில் ரகசியம்” என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் கண் விழித்த கானகத்தில் பெரும்பகுதி உண்மையே, சிறுபகுதிக் கற்பனையும் உண்மையை ஒட்டியதே என்கிறார் ஆசிரியர் திரு. மலர் மன்னன். மலர் மன்னன் 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுரை, திறனாய்வு, சிறுகதை, நெடுங்கதை, மொழியாக்கம் எனப்பல இலக்கியப் பங்களிப்பாலும் 1/4 என்ற தமிழிலக்கிய மட்டும் பண்பாட்டிற்கான ஆய்விதழை நடத்தியதாலும், கணையாழியுடன் இருந்த நெருங்கிய தொடர்பாலும் அறியப்பட்டவர். பல மாநிலங்களில் வெறும் பத்திரிகையாளராக நிற்காமல், கள ஆய்வுடன் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்தவர். malarmannanசமுதாய சேவைக்காகவும் அறியப்பட்ட எழுத்தாளர். அவரது கள ஆய்வின் விளைவே இந்தக் கதை.

பீஹாரின் மலையடிவாரங்களில் விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய கதாபாத்திரங்களுடன் இந்தக் கதை நிகழ்கிறது. அராஜக ஜமீன்தார்கள், ஆக்கிரமிப்பு வெள்ளைக்கார அரசாங்கம், கபடமற்ற மலைவாழ் மக்கள், செல்வாக்குள்ள வஞ்சகப் பாதிரியார்கள், நேர்மையற்ற போலீசார் இவர்களுடன் நம் கதாநாயகன் செயல் வீரன் பிர்ஸா ‘பகவான்’. இவ்வளவுதான். கதாபாத்திரங்கள் இவ்வளவேயானாலும், ஒருசில காட்சிகளிலேயே வந்து செல்லும் கதாபாத்திரங்கள் கூடப் பெயர் நினைவில் நிற்கும் அளவுக்கு நம் மனதில் இடம்பிடிக்கக் காரணம் நமக்குக் கதையைப் படிப்பதாகவே தோன்றாததுதான். உண்மையில் ஆசிரியர் இக்கதையை எழுதவில்லை; பாத்திரங்களே கதையை எழுதிச் செல்கின்றன! நூறு வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக் காலவெளியில் ஆசிரியர் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று நிகழ்வுகளைக் காட்டுகிறார்.

கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை ‘மலையிலிருந்து வந்தவன்’ என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும். உயர்ந்த மலைத்தேன், சுவையான கனிகள், தூய்மையான காற்று, வாழ்வாதாரமான நதிகள், தெள்ளிய சுனை நீர், உயர்ந்த ஆன்மீக ஞானிகள், பவித்ரமான ரிஷிகள், குறிஞ்சி முதற்கொண்ட அரிய மலர்கள், அற்புத மூலிகைகள் என சிறந்தவை அனைத்தும் மலையிலிருந்துதான் வரமுடியும். கதாநாயகன் பிர்ஸாவும் அப்படித்தான்.

b mundaஇக்கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவற்றின் குணாதிசயத்திலிருந்து பிழறாமல் இயல்பாக நடக்கின்றன. இந்த குணாதிசயங்கள்தான் பாத்திரங்களையே உருவாக்குகின்றன. நம் கதாநாயகன் பிர்ஸாவின் மேல் ஒரு மடந்தை (adolescent) காதல் கொள்கிறாள். ஒரு ஜமீந்தாரின் முரட்டு அடியாள் காழ்ப்புக் கொள்கிறான். பாதிரியார்கள் பொறாமை கொள்கின்றனர். மலைவாழ் மக்கள் அன்பும், பக்தியும் கொள்கின்றனர். பிர்ஸா அன்புடன் அனைவரையும் பேணுகிறான். காதல், காழ்ப்புணர்ச்சி, அன்பு, பயம் என்ற எதையும் யாரும் செய்யவில்லை. உண்மையில் அவையவை இயல்பாக நிகழ்கின்றன. சூரியன் உதிப்பது போல, அதைத் தொடர்ந்து மொட்டுக்கள் இதழ் திறந்து மலர்வது போல, தென்றல் மலர்களினூடே புகுந்து வந்து நம்மைத் தழுவுவது போல, அந்நறுமணம் நம்மையறியாமல் மனதில் ஆனந்தத்தை ஏற்படுத்துவது போல எல்லாமே இயல்பாக நடக்கின்றன. கதையில் தென்றலும், சுகந்தமும், மலர்களும் மட்டும் இல்லை. கடைசியாகப் சூறாவளிக் காற்று வீசிப் பூந்தோட்டம் வேரோடு பிடுங்கி எறியப்படுகிறது. வாசம் மட்டுமே மிஞ்சுகிறது. அதுவும் இயற்கைதானே? இவ்வாறு ஒவ்வொரு பாத்திரமும் அவற்றின் பிறப்பு, குணாதிசயங்களுக்கு உட்பட்டே விதிப்படி நடக்க ஒன்றுமட்டும் மாறுகிறது. அது நம் கதாநாயகன் பிர்ஸாதான். ‘விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்’ என்ற உமர் கய்யாமின் வரிகளை நம் கதாநாயகன் மட்டும் உடைத்தெறிகிறான்.

இக்கதையும் மலையிலிருந்து தோன்றும் நதிபோல, நதிப்படுகையில் வளரும் பூந்தோட்டம் போல ஒரு சிறுமியின் காதலுடன் அழகாக, மெதுவாகத் தொடங்குகிறது. அவளை அறியாமல் மலரும் காதலை எண்ணி அவள் வெட்கப்படுகிறாள். முதல் பாகத்தைப் படிக்கும்போதே அவள் மனதில் மலரும் காதல் உங்கள் நாசிக்குள் நறுமணத்தை உண்டாக்கும் அற்புதத்தை உணர்வீர்கள். செல்லச் செல்ல விஸ்தரித்துக் கொள்ளும் நதிபோல விரியும் கதை 12 வது பாகத்தை அடைந்தவுடன் ஆடிப் பெருக்காகிப் பாய்கிறது. அதன் சுழலில் வாசிப்பவரை ஆகர்ஷித்து, தன்னை இழக்கவைத்து, பெருவெள்ளத்தில் அடித்துச் செல்கிறது. நான் 12 வது பாகத்தைப் படித்தபின் புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாமல் நானே ஒரு 19ம் நூற்றாண்டுப் பாத்திரமாக மாறி, படித்து முடித்தேன். கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.

இக்கதையின் மற்றொரு சிறப்பு இதில் எழுதப்பட்ட சரித்திரம் திரும்புவதுதான். விழிப்புணர்வுடன் கண் விழித்த கானகத்தை படிக்கும் வாசகர்கள் இந்தக் கதையில் வரும் உண்மை நிகழ்ச்சிகள், குறைந்தது மூன்று முறையாவது சரித்திரத்தில் நிகழ்ந்துள்ளதை யோசித்துப் புரிந்து கொள்ளமுடியும். கிட்டத்தட்ட அதுபோன்ற நிகழ்ச்சிதான் தற்போது காந்தமாலிலும் பாதிரியார்களின் வஞ்சகத்தால் நிறைவேற்றப் பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், அவர்க்ளைப் பேணும் சாமி லக்ஷ்மணானந்தர், போலீஸாரின் சார்புத்தன்மை, திரும்பிய சரித்திரத்துக்கு சாட்சியாக நாம். மொத்தத்தில் ‘கண் விழித்த கானகம்’ ஒரு இயல்பான, மிக சுவாரஸ்யமான, சுவையுள்ள, ஆசிரியர் மலர் மன்னனால் ஊறுகாய் தவிர்த்துப் பறிமாறப்பட்ட அறுசுவை உணவு.

புத்தகத்தின் விற்பனையில் 10% மலைவாசிகளின் நலனுக்காக செலவிடப்படுகிறது.

பெயர்: கண் விழித்த கானகம்
பக்கங்கள்: 218
விலை: ரூ.100/-
கிடைக்கும் இடங்கள்: புக் லேண்ட், தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை – 600 017
சுதர்ஸன் புத்தக நிலையம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
====================================

9 Replies to “கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்”

 1. // உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும். //

  அருமை.

 2. கார்கில் ஜெய் மிக நன்றாக எழுதியிருக்கிறார். இப்புத்தகத்தைப் படிக்கும் ஆவல் எழுகிறது!

 3. கார்கில் ஜெய்யின் இந்த புத்தக விமர்சனம் புத்தகத்தை படிக்கும் ஆவலைத் தூன்டுகிறது. அதைவிட விமர்சனம் அருமை. அழகான வர்னனைகள், உலகத்தில் சிறந்தவை எல்லாம் மலையிலிருந்துதான் வரும் என்ற வரிகள்….

  ஜெயக்குமார்

 4. I wish to buy the book “Kan Vizhitha Kaanakam”. I know South Ushman Road. But this is a very long road, Can have phone No. or Complete Address with landmark, if you don’t mind?

  A P IRUNGOVEL

 5. கார்கில் ஜெய்யின் விமர்சனம் அருமை.
  ரவிஷங்கர்

 6. கார்கில் ஜய்,

  உங்கள் விமர்சனம் மிக அருமை! ‘விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்’ உவமை மிக துல்லியம். ரசித்தேன்!

  ‍அமீதா

 7. உலகத்தில் சிறந்தவை எல்லாம் மலையிலிருந்துதான் வரும் என்ற வரிகள்….was an excellent words.
  Kargil Jay continue your good work.

 8. திரு. இருங்கோவேள்,
  புத்தகத்தை நான் இப்போது வாங்கவில்லையாதலால் புத்தக நிலையம் எங்குள்ளது எனத் தெரியவில்லை. மன்னித்தருளவும்.

  அனைவருக்கும் :
  கருத்துப் பதிவு செய்து, ரசித்ததைப் பகிர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. இக்கதையில் பாலகுமாரன் புதினங்களைப் போல் வசியம் செய்யும் எழுத்துக்களைப் பார்க்க முடியாது. ஒரு உண்மைக் கதையை எழுதவேண்டிய கட்டுப்பாட்டில் கதாசிரியர் தன்னைப்பின் தள்ளி, பிர்ஸா பகவானை முன்வைத்து எழுதியிருக்கும் வரலாற்றுக் குறிப்பின் எல்லைகளை உணர்ந்து வாசித்தல் வேண்டும்.

 9. A.P.Irungovel said:

  //I wish to buy the book “Kan Vizhitha Kaanakam”. I know South Ushman Road. But this is a very long road, Can have phone No. or Complete Address with landmark, if you don’t mind?//

  Here is the address of the bookshop at Chennai:

  New Book Lands
  52-C, North Usman Road,
  T’Nagar, Chennai – 600017,
  Tamilnadu, INDIA.
  Phone: 91-044-28158171 / 28156006
  Fax : 91-044-42123839
  Email : orders@newbooklands.com / enquiry@newbooklands.com

  It is near G.R.T and Panagal Park.

  I inquired with the shop and they confirm that the book is available.

  S.K

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *