காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “காயத்ரீ” என்ற நூலில் இருந்து –

(வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639115)

முந்தைய பகுதிகள்:

காயத்ரியும், சாவித்ரியும் ஒன்றே என்பதை ஏற்கனவே ஆராய்ந்தோம். இனி இதே மந்திரத்தை சரஸ்வதி என்றும் இயம்பலாம். சரஸ்வதி வழிபாடு கல்வி கற்கின்ற அனைவருக்கும் பொதுவானது. யாண்டும் வெண்மையே வடிவெடுத்தவள் கலைமகள். வெண்மை தூய்மையின் சின்னம். சத்துவ குணம் ஓங்குமிடத்து வெண்மை நிறம் வாய்க்கிறது. சத்துவகுணத்தில் பண்பாடு அடைந்தவர்களே கலைகள் கற்கத் தகுதி வாய்ந்தவர்கள் என்பது தேற்றம். சரஸ்வதி வழிபாட்டில் சொல் சுத்தம் முதன்மை பெறுகிறது. சொல் சுத்தத்தைச் சிக்ஷா (siksha) என்று அழைப்பது ஐதிகம். நாவினின்று ஏதோ ஓசையைக் கிளப்பினால் போதாது. ஓசையானது தெளிந்த சொல்லாகத் திருந்தியமைய வேண்டும்.

hj_ge_saraswati02அக்ஷரங்களையெல்லாம் முறையாக உச்சரிக்க வேண்டும். அதற்கு நாப்பழக்கம் முற்றிலும் அவசியம். நாப்பழக்கத்துக்கு நல்ல கருவியாக அமைந்திருப்பது காயத்ரீ. அதன் அர்த்தம் விளங்காதவிடத்தும் மந்திரத்தை முறையாக ஓதுகின்றவருக்கு நா திருந்தியமைகிறது. சொல் சுத்தம் தானே வந்தமைகிறது. எந்தப் பதத்தையும் சரியாக உச்சரிக்கும் பண்பு வாய்க்கிறது. திரும்பத் திரும்ப ஓதிவருகிற காயத்ரீ மந்திரத்தைக் கொஞ்சம் பொருள் தெரிந்து ஓதினால் அது ஜபமாகிறது. ஆத்ம சாதனங்களுள் மிகச் சுலபமான சாதனம் நாம ஜபம். பரம்பொருளுக்கு அமைந்துள்ள நாமங்களில் சிவ, நாராயண, ராம போன்ற நாமங்கள் ஜபத்துக்குரியவைகள். இருபத்து நான்கு அக்ஷரங்களை உடைய காயத்ரீ மந்திரமும் ஜபத்துக்குரியது. இந்த மந்திரத்தை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகச் சாதகன் ஜபிக்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் ஆத்ம பரிபாகம் அடைகின்றான். ‘யக்ஞங்களுள் நான் ஜபயக்ஞம்’ என்று கிருஷ்ண பரமாத்மா தமது மகிமையை விளக்குகிறார். ஏனைய யக்ஞங்கள் கஷ்டமானவைகள். ஆனால் ஜபயக்ஞமோ அத்தகையதன்று. எந்த வேளையில் வேண்டுமானாலும் நாமஜபம் பண்ணலாம். எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் நாமஜபம் பண்ணலாம். பலப்பல அலுவல்களுக்கிடையிலும் நாமஜபம் பண்ணலாம். நடமாடும் பொழுதும், பயணம் போய்க்கொண்டிருக்கும் பொழுதும் நாமஜபம் பண்ணலாம். ஜபம் பண்ணுவதற்குக் காயத்ரீ மந்திரம் மிகச் சிறந்ததாகிறது.

காயத்ரீ மந்திரத்தைத் தியானிப்பதற்கு ஏற்ப, ஜபிப்பதற்கு ஏற்ப அந்தக் கரணம் சுத்தியடைகிறது. சித்த சுத்தி அல்லது அந்தக்கரண சுத்தி மானுட வாழ்க்கையின் மேலாம் குறிக்கோள் ஆகிறது. நல்ல மனம் படைத்திருப்பவன் நன்மகனாகின்றான். நல்ல மனம் படைத்திருப்பவனுக்கு இகலோக வாழ்வு இனிது நிறைவேறுகிறது. நல்ல மனம் படைத்திருப்பவன் ஆத்மீகத் துறையில் விரைந்து மேல்நோக்கிச் செல்லுகிறான். முற்றிலும் மனபரிபாகம் அடைந்தவன் மிக எளிதில் பரம்பொருளுக்கு உரியவனாகிறான்.

பிரார்த்தனை என்பது மேலாம் வேண்டுதலின் வாயிலாக ஜீவாத்மன் பரமாத்மாவோடு இணக்கம் கொள்ளுதலாம். ஜீவாத்ம பரமாத்ம இணக்கத்தை நிலை நாட்டுதற்குப் பிரார்த்தனையானது சிறந்ததொரு கருவியாகிறது. பிரார்த்தனை வெறும் உரைநடையில் இருக்கலாம்; செய்யுள் வடிவத்தில் அமைந்திருக்கலாம். எப்படி அமைந்திருந்தாலும் உள்ளத்தில் உணர்ச்சி ஓங்கியிருக்குமாகில் அது பிரார்த்தனையாகிறது. உணர்ச்சியற்ற பாடலோ, உரைநடையோ பிரார்த்தனையாகாது. அது பொருளற்ற ஓசை. உணர்ச்சியை உருவாக்குவதற்குக் காயத்ரீ மந்திரம் பெருந்துணை புரிகிறது. ஆதலால் காயத்ரீ மந்திரத்தைப் பொருளோடு கூட்டி உணர்ந்து உச்சரித்தால் அது நல்ல பிரார்த்தனையாகிறது.

கிரியையோடு கூடிய வழிபாடுகளைச் செய்வதும் ஆத்ம சாதனமாகிறது. அத்தகைய வழிபாட்டில் ஈடுபடுகிற ஒருவன் சிறிது நேரம் காயத்ரீ மந்திரம் ஜபித்துவிட்டு வழிபாட்டில் இறங்குவானாகில் அவ்வழிபாடு பக்தி மிக நிறைந்ததாக அமையும். சடங்குகள் தம் அளவில் பொருளற்றவைகள். செக்கு மாடு சுற்றிச் சுற்றி வருவது போன்று சில பூஜா சடங்குகளை மனிதன் காலமெல்லாம் கையாண்டு வருகிறான். ஆனால் சுற்றிவருகிற செக்குமாடு இருந்த இடத்திலேயே இருப்பது போன்று உணர்ச்சியற்ற கிரியைகளில் ஈடுபடுபவன் ஆத்மீகத் துறையில் சிறிதேனும் முன்னேற்றம் அடைவதில்லை. காயத்ரீ ஜபத்தின் வாயிலாக உள்ளத்தில் உணர்ச்சியை ஓங்குவித்த பின் கிரியா விசேஷங்களில் பிரவேசிக்கின்றவன் இனிது முன்னேற்றம் அடைகிறான்.

நேர் தியானத்தில் அமர்கின்ற ஆத்ம சாதகர்கள் காயத்ரீ மந்திரத்தை ஒரு தடவை மனத்தினுள் சிந்தனை செய்து அக்கருத்து மயமாக அமர்கிறார்கள். அது ஆழ்ந்த தியானமாகிறது. நேரம் போவது கருத்தில் படுவதில்லை. ஆதலால் தியான மந்திரங்களுள் சிறந்தது காயத்ரீ மந்திரமாம்.

காயத்ரீ மந்திரத்தில் மற்றொரு சிறப்பு இருக்கிறது. ஒரு மனிதன் தனக்காகவென்று தனியாகச் செய்கின்ற சாதனமன்று காயத்ரீ. ‘நம்முடைய அறிவை எப்பொருள் தூண்டுகிறதோ’ என்று அது பன்மையில் துவங்குகிறது. ‘அப்பெரிய பொருளை தியானிப்போமாக’ என்று பன்மையில் முடிகிறது. ஆத்மசாதகன் தனித்திருந்து சாதனங்கள் பயிலுகின்ற இடத்தும் எண்ணத்தால் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்துக் கொள்ளவேண்டும். தான் வேறு, மற்ற உயிர்கள் வேறு என்று பிரிவுபடுத்துவது அறியாமை. உயிர்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி இறைவனுடைய விராட் சொரூபமாக உணர்தல் வேண்டும். தனியாகத் தனக்கென்று வாழ்பவன் சிறுமையுறுகின்றான்; அனைத்தையும் தன்மயமாகக் கருதுகின்றவன் மேன்மையுறுகின்றான்.

கருதுவது மட்டும் போதாது. அது செயலாக வடிவெடுக்க வேண்டும். காயத்ரீ மந்திரத்துக்குத் தகுதி வாய்ந்தவர்களை எல்லாம் தெரிந்தெடுத்து அவர்களை அத்துறையில் தூண்டுவது நல்ல சாதனமாகிறது. பரநல சேவைக்கு எல்லை கட்ட முடியாது. பரநல சேவையில் ஜீவபோதத்தை முற்றிலும் ஒப்படைக்கிறவன் பரத்துக்குரியவன் ஆகிறான். ‘ மானுடா, நீ அலாதியாக உனக்காகவென்று வாழ்பவன் அல்லன். உலகு அனைத்துக்குமே உன்னை உரியவனாக்கு’ என்னும் கோட்பாட்டைப் பன்மையில் அமைந்துள்ள காயத்ரீ மந்திரம் ஞாபகம் ஊட்டுகிறது. ஆதலால் தான் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவுக்குரிய தேசீய மந்திரமாக இருந்த காயத்ரியை உலகுக்குரிய விஷ்வ மந்திரமாக விரிவுபடுத்த வேண்டும்.Agape Choir இசைக்குழு பாடும் காயத்ரி மந்திரம்

காயத்ரீ என்னும் சொல்லில் காய+த்ரீ என்னும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. காய என்றால் கானத்துக்குரியது எனப் பொருள் படுகிறது. கானம் பண்ணுதல் அல்லது இன்னிசையோடு இணைப்பது சிறந்த செயலாகும். மேலாம் கருத்து ஒன்றை உரைநடையில் சொல்லலாம் அல்லது அதை இசையோடு இணைத்து வெளியிடலாம். இசையோடு இணைப்பதற்கேற்ப இனிமை அதிகரிக்கிறது. உள்ளத்தைத் தொடும்படி உணர்ச்சியை வளர்க்கிறது. காயத்ரீ மந்திரமானது கான சொரூபமாக இருந்து உயிர்களையெல்லாம் உயர்நிலைக்கு எடுக்கவல்லதாம். கண்ணனுடைய குழலோசை உயிர்களையெல்லாம் ஒன்றுபடுத்தி அவைகளை உயர்நிலைக்கு எடுத்தது. காயத்ரீ கானத்துக்கும் அத்திறமை உண்டு. பலரை ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு கானமயமாக அதைக் கையாளுதல் நல்ல சாதனமாகிறது.

இனி த்ரீ – த்ராயதே என விரிவுபடுகிறது. பயத்தினின்று காப்பாற்றுகிறது என்பது இச்சொல்லின் விளக்கமாம். பயப்படும் பாங்குடையவர்களாக ஜீவர்கள் இருக்கிறார்கள். ஜனன மரணத்தைப் பற்றிய பயம், வாழ்விலே வந்து வாய்க்கும் இன்னல்களைப் பற்றிய பயம் இப்படிப் பயந்து வாழ்கின்ற ஜீவர்கள் பரம்பொருளை அணுகுகின்ற பொழுது அபயம் அல்லது அஞ்சாமையைப் பெறுகின்றனர். அபயகரம் படைத்திருப்பது தெய்வத்திடத்திருக்கும் சிறப்பாகிறது. அபயகரத்தோடு அம்பிகை, ஹரி, ஹரன் ஆகியவர்கள் மிளிர்கின்றனர். காயத்ரீ தேவியும் அபய சொரூபிணி. காயத்ரியைச் சார்ந்திருப்பவர்கள் அபயத்தில் நிலைபெற்றவர் ஆகின்றனர். வாழ்க்கைப் பிரசினைகளையெல்லாம் விலக்கி வைக்க வல்லவள் காயத்ரீ தேவி.

இம்மந்திரத்தில் ந: திய: ப்ரசோதயாத் – ’நம்முடைய அறிவைத் தூண்டுகின்ற’ என்பது முதற்கருத்து. தூண்டப் பெறுவதால் நம்முடைய அறிவு வளர்ந்து வருகிறது. ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை’ என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் உண்மையில் ஆத்மசொரூபம்; அறிவைத் தூண்டித் தருவது வாழ்க்கையின் குறிக்கோள். தூண்டுதற்கு ஏற்ப அறிவு மேலும் மேலும் வளர்கிறது.

புறத்திலுள்ள சூழ்நிலை அறிவைத் தூண்டுவதற்கு ஏதுவாகிறது. தூண்டுதல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு நிலைகளிலும் நிகழ்கிறது. சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். கிழவனார் ஒருவர் தள்ளாடி நடந்து வருகிறார். சிரமப்பட்டு நடக்கிற அவர் பின்புறம் ஏதோ சப்தம் கேட்டார். திரும்பிப் பார்த்தார். நாகசர்ப்பம் ஒன்று வருவதைப் பார்த்தார். உடனே ஓட்டம் பிடித்து நெடுந்தூரம் சென்று நின்றார். ஓடினால் தான் உயிர் தப்பிப்போம் என்னும் அறிவு அவருக்கு உதயமாயிற்று. அங்ஙனம் அவர் அறிவைத் தூண்டியது புறத்திலிருந்த சூழ்நிலையாகிற நாக சர்ப்பமாம். பயமூட்டுதல் என்னும் பாங்கில் அக்கிழவருக்கு அறிவூட்டப் பட்டது.

இனி, அதே கிழவருக்கு உடன்பாட்டு முறையிலும் அறிவு தூண்டப் பெறுவதாகும். கோயில் ஒன்றுக்குத் தரிசனத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். ஆராதனைக்காக மணியடிக்கும் ஓசை அவர் காதில் பட்டது. விரைந்து செல்லா விட்டால் கோயிலை மூடி விடுவார்கள் என்னும் சூழ்நிலை அவருடைய அறிவைத் தூண்டியது. ஆதலால் அவர் விரைந்து நடந்தார். எல்லா உயிர்களுக்கும் இங்ஙனம் இரண்டுவிதமான தூண்டுதல்கள் புற உலகிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. அத்தூண்டுதல்களால் ஏவப்பெற்று நாம் அறிவை வளர்த்து வருகிறோம்.

வேதத்தின் சாரம் காயத்ரீ மந்திரம் என்று கூறப் படுகிறது. இயற்கையின் நடைமுறையையும் அந்நடைமுறையினின்று உயிர்களுக்கு வருகிற நலனையும் வேதம் விளக்குகிறது. காயத்ரீ மந்திரமும் அதே செயலைச் செய்கிறது. அச்சீரிய செயல் புறவுலகமாகிய பிரபஞ்சத்தில் நிகழ்கிறது. அகவுலகமாகிய அந்தந்த ஜீவனுடைய அந்தராத்மாவிலும் அதே செயல் நிகழ்கிறது. அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கிறது என்பது கோட்பாடு. அண்டத்திலும் இருப்பது அணுவிலும் இருக்கிறது என்பதும் கோட்பாடு.

சுவாமி சித்பவானந்தர்
சுவாமி சித்பவானந்தர்

அண்டம், அணு ஆகிய இரண்டு பொருள்களுக்கு இடைநிலையில் இருப்பது பிண்டம் அல்லது மானுட அமைப்பு. அகிலாண்டத்தோடு சீர்தூக்கினால் மானுட பிண்டம் எவ்வளவு சிறியதும், நுண்ணியதும் ஆகின்றதோ, அவ்வளவு சிறியதாகவும் நுண்ணியதாகவும் ஆகிறது மானுட பிண்டத்தோடு சீர் தூக்கப் படுகிற அணு. மானுடராகிய நாம் அகிலாண்டத்தின் அமைப்பையும், அகிலாண்டத்தின் நிகழ்ச்சியையும் முற்றிலும் அறிந்து கொள்ள முடியாது. அதே விதத்தில் ஒரு அணுவின் அமைப்பையும், அதன் நிகழ்ச்சியையும் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் மானுட பிண்டத்தையும், அதன் செயலையும் அறிய நமக்கு இயலும். இதைச் சரியாக அறிந்து கொண்டால் அண்டத்தையும், அணுவையும் அறிந்தவர் ஆகிறோம். ஏனென்றால் பெரியதிற் பெரியதாய் இருக்கிற அகிலாண்டத்திலும், இடைநிலையில் இருக்கிற பிண்டத்திலும், அணுவுக்கு அணுவாய் இருக்கிற பரமாணுவிலும் அமைப்பு ஒரே விதமானது. நிகழ்கிற நிகழ்ச்சியும் ஒரே விதமானது.

காயத்ரீ மந்திரத்தின் துணை கொண்டு புறவுலகத்திலுள்ள பெருமைகளையும், செயல்களையும் மக்கள் எல்லாரும் அறிந்து கொள்ளக் கூடும். அதே பெருமைகளும், செயல்களும் அகவுலகு ஆகிய மானுட சொரூபத்தில் அமைந்துள்ளன. புறவுலகின் துணை கொண்டு புறவுலக மகிமைகளையும், அறிகிறவன் சாதாரண மனிதன். அதே மகிமைகளையும், செயல்களையும் அகவுலகு ஆகிய தன் சொரூபத்தில் அறிய வல்லவன் துவிஜன் அல்லது இருபிறப்பாளன். இனி துவிஜன் மூன்று படித்தரங்களில் வைத்துப் பாகுபடுத்தப் படுகிறான். தலைத்தரத்தில் இருப்பவன் துவிஜோத்தமன். அவனை அந்தணன் என்றும் பிராமணன் என்றும் அழைப்பது மரபு. இடைநிலையில் இருப்பவன் துவிஜமத்திமன். அன்னவனை க்ஷத்திரியன் என உலகம் பாகுபடுத்துகிறது. கடைநிலையில் இருப்பவன் துவிஜ அதமன். அவன் வைசியன் எனப் படுகிறான். காயத்ரீ மந்திரத்தின் அத்யாத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள இயலாதவைச் சூத்திரன் என்று உலகம் இயம்பி வருகிறது.

இனி வஸ்துவுக்குக் கொடுக்கப் பட்டிருக்கின்ற மூன்று பெயர்களிலும் புறவுலக விளக்கம், அகவுலக விளக்கம் இரண்டையும் சீர்தூக்கி ஆராய்வோம். ஸவித்ரு என்னும் சொல்லுக்குத் தூண்டுதல் தருபவன் என்கிற பொருள் உண்டு. உலக நடைமுறைகளக்குத் தூண்டுதல் தந்து கொண்டிருப்பது சூரிய தேவதை. என்னென்ன விதங்களில் சூரியதேவதை தூண்டுதல் தந்து கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்குமளவுக்கு அந்த அரிய செயல் நமக்கு நன்கு விளங்கும். மானுட சொரூபத்தில் ஆத்ம சைதன்யம் சாட்சியாக அமைந்திருக்கிறது. அது செயல் ஒன்றும் புரிவதில்லை. தானே செயலற்றது எனினும் மானுட வாழ்க்கையில் நிகழ்கின்ற செயல்கள் அனைத்துக்கும் தூண்டுதல் தருவது ஆத்ம சான்னித்தியமாம். ஆத்மாவின் அந்த மஹிமையை அறியவல்லவன் துவிஜன் அல்லது இருபிறப்பாளன் ஆகிறான்.

(தொடரும்)

2 Replies to “காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *