காற்றினிலே வரும் கீதம்

mssubbulakshmiகாற்றினிலே வரும் கீதம்

1 காற்றினிலே வரும் கீதம்,கண்கள்
பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் [காற்]

2.பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்,
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம் [கா]

3. நிலாமலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதி தீரம்
நீல நிறத்து பாலகனொருவன்
குழல் ஊதி நின்றான் [நெஞ்]

4. சுனை வண்டுடன் சோலைக் குயிலும்
மனம் கனிந்திடவும்
வான வெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்

5 ஆ! என் சொல்வேன் மாயப் பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்[கா]

சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பக்தமீரா என்ற திரைப் படத்தில் இடம் பெற்ற இப்பாடலை சங்கீத மேதை திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் கேட்டு மயங்காதவரே கிடையாது. கண்ணன் குழல் ஊதுவதைப் பற்றிச்சொல்வது இந்தப்பாடல்.

கண்ணன் குழல் ஊதும் போது காற்றிலே வரும் அந்த இசை, அந்த கீதம் இந்த உலகை மட்டுமல்லாமல் தேவலோகத்தையும் பாடாய்ப் படுத்துகிறது. அந்த இசை இன்பத்திலே மயங்கிய ஓரறிவு படைத்த புல் முதலான ஜடப்பொருளும், ஆறறிவு உடைய மக்களும், தேவ மகளிரும், நாரத தும்புருவும் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதைப் படிக்கும் பொழுது நமக்கும் அந்த இசையின்பத்தைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்று ஆவல் மேலிடுகிறது. அந்த நீல நிறத்துப் பாலகனின் வேணுகானத்தை நம்மால் கேட்க முடியாவிட்டாலும் அதைப் பாடிய ஆழ்வார்கள் முதல் அம்புஜம் க்ருஷ்ணா வரை, அவர்கள் அனுபவித்ததை நாமும் அனுபவிக்கலாமே! இன்றும் கூட பிருந்தாவனத்திலே நள்ளிரவில் கண்ணனின் வேணுகானம் கேட்பதாகச் சொல்கிறார்கள்.

சமண சமயத்தைச் சார்ந்தவரான இளங்கோவடிகளும் கண்ணனின் வேணுகானப் பெருமையை ஆய்ச்சியர் குரவை வாயிலாக வெளிப்படுத்துகிறார். தென்மதுரை ஆய்ச்சியர்களுக்குக் கண்ணன் குழலோசையைக் கேட்க வேண்டுமென்று ஒரே ஆவல்.

1. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாதவன்
இன்று நம் ஆலுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி

2 .பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆலுள் வருமேல் அவன் வாயில்
ஆம்பலம் தீங்குழல் கேளாமோ தோழி

என்று அந்தக் குழலோசையில் தங்கள் சிந்தையைப் பறிகொடுத்ததைப் பார்க்கிறோம்.

பெரியாழ்வார் காட்டும் கண்ணன்

கண்ணன் குழலோசையில் தன்னையே பறி கொடுத்த பெரியாழ்வார் நம்மை யெல்லாம் அழைத்து ”இந்த அற்புதத்தைப் பாருங்கள்! கண்ணன் குழலோசையைக் கேளுங்கள்” என்று நம்மை அழைத்து ஒரு நாடகக் காக்ஷியைக் காட்டுகிறார்.

”நாவலம் பெரிய தீவினில் வாழும்
நங்கைமீர்காள்
ஈதோர் அற்புதம் கேளீர்”

என்று நம்மையெல்லாம் விளிக்கிறார்.

பிருந்தாவனத்திலே கண்ணன் குழல் ஊதுகிறான். உறங்கிக் கொண்டிருந்த ஆயர் மகளிர் எல்லோரும் தங்கள் கட்டுக் காவல்களையெல்லாம் மீறி கண்ணன் குழலோசை கேட்க ஓடி வந்து விடுகிறார்கள் வந்த பெண்கள் எல்லோரும் தொடுக்கப் பட்ட பூக்களைப் போல், பூமாலை போல் கண்ணனைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

கண்ணன் குழல் ஊதும் அழகு காட்டிலே பல இடங்களிலும் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்கள் வெகு தூரம் போய் விடாமல் திரும்பி வந்து சேர்வதற்காகக் கண்ணன் குழல் ஊதுகிறான். அவன் ஊதும் போது அவனுடைய முகவாய்க் கட்டையின் இடதுபக்கம் இடது தோள் பக்கம் திரும்புகிறது. இரண்டு கைகளும் குழலின் துளை களை மூடிமூடித் திறக்கின்றன. புருவங்கள் நெறிந்து கொஞ்சம் மேலே போகின்றன. கண்களும் அந்தத் துளைகள் மீதே செல்வது போல் தோன்றுகிறது. வயிறு குடம் போல் குழிந்து தோன்றுகிறது

இட அணரை இடத்தோளோடு
சாய்த்து இருகை
கூடப் புருவம் நெறிந்தேறக்
குடவயிறும் பட வாய் கடை கூடக்
கோவிந்தன் குழல் கொடு
ஊதின போது

குழலூதும் கண்ணனின் தோற்றத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் பெரியாழ்வார். இப்படி கோவிந்தன் குழல் ஊதிய உடன் என்னென்ன நிகழ்கின்றன என்று பார்ப்போம்

கோபிகைகள் பட்டபாடு

பசுக்களை அழைப்பதற்காக ஊதிய குழல் ஓசை கேட்ட கோபிகைகள் பசுக்களுக்கு முன்னதாக வந்து விடுகிறார்கள்.

”மட மயில்களோடு மான் பிணை போலே
மங்கைமார்கள் மலர்க்கூந்தல் கவிழ
உடை நெகிழ, ஓர்கையால் துகில் பற்றி
ஒல்கி ஓடரிக்கண் ஓட நின்றனரே!

மயில்களைப் போலவும், மான்களைப் போலவும் இவர்கள் ஓடி வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் சீவி முடித்து மலர் சூடி அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது வேணுகானம் கேட்டதும் அவசரமாக ஓடி வந்த ஓட்டத்தில் கூந்தல் அவிழ்ந்து தொங்குவதையும், தொங்கும் பூவையும் கவனிக்கவேயில்லை. கூந்தல் மட்டுமா அவிழ்ந்து தொங்குகிறது? குலைந்த ஆடையையும் ஒரு கையால் பற்றிக் கொண்டு ஓடி வருகிறார்கள். அவர்கள் கண்களுமல்லவா நாணத்தை விட்டு விட்டுக் கண்ணனையே நாடி ஓடுகின்றன!

மிதிலை வீதியில் உலா வருகிறான் இராமன். வில் முறித்து சீதையை மணக்கப் போகும் இராமன் உலாவரும் அழகைப் பார்க்க மிதிலைப் பெண்கள் ஓடி வருகிறார்கள். எப்படி வருகிறார்கள்?

”மான் இனம் வருவ போன்றும்
மயில் இனம் திரிவ போன்றும்”

ஆழ்வாரின் இந்த உவமையை அப்படியே எடுத்தாள்கிறான் கம்பன்.

வேணுகானம் கேட்ட இயற்கை

‘சிறுவிரல்கள் தடவிப் பறிமாற
செங்கண் கோட செய்யவாய்
கொப்பளிப்ப
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப
கோவிந்தன் குழல் கொடு
ஊதின போது

இயற்கையே மாறுபாடடைகிறது. கண்ணனின் கானாமிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்குகின்றன. சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தருகின்றன. அவை தம்மில் தாமே உருகி நிற்கின்றன.

கண்ணனுக்கு அஞ்சலி செய்வது போல கொம்புகளை வளைக்கின்றன. அது, வேணு கோபாலனை நோக்கி வழி படுவது போலிருக் கிறது. ஓரறிவுடைய புல்லும் செடி கொடிகளும் வேணு கானத்தை இப்படி ரசித்தன என்றால் அங்கிருந்த ஆடு மாடுகள் எல்லாம் எப்படி ரசித்திருக்கும்?

”பறவையின் கணங்கள் கூடு
துறந்து வந்து சூழ்ந்து படுகாடு
கிடப்பக்
கறவையின் கணங்கள் கால்
பரப்பிட்டுக் கவிழ்ந்து
இரங்கிச் செவி ஆட்டகில்லாவே

ஆடு, மாடு, கன்றுகள் எல்லாம் புல் மேய்வதை யும் மறந்து தன்னையும் மறந்து நிற்கின்றன. அதுமட்டு மல்ல அவை தமது செவிகளயும் ஆட்ட மறந்து விடுகின்றனவாம்!

கண்ணனும் மான்களும்

குழலூதும் கண்ணனை இப்பொழுது நன்றாகப் பார்க்கிறோம். அவன்தான் எவ்வளவு அழகாக இருக் கிறான்! என்று அவன் அழகிலும் ஈடுபடுகிறார் பெரியாழ்வார். சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டது போல முகத்தாமரையை சுருண்ட தலைமயிர் அழகு செய்கிறது. இந்த முகத் தாமரையிலிருந்து தேனினும் இனிய கீதம் பெருகி வருகிறது. இந்த அமுத கீதத்தைப் பருகிய மான்கள் எப்படி அனுபவிக்கின்றன?

திரண்டெழு தழை மழை முகில்
வண்ணன் செங்கம மலர் சூழ்
வண்டினம்போலே
சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த
முகத்தான் ஊதுகின்ற
குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை
மறந்து மேய்ந்தபுல்லும்
கடைவாய் வழிசோர
இரண்டுபாடும் துலுங்காப் புடை
பெயரா எழுது சித்திரங்கள்
போல நின்றனவே!

krishnaமான் கூட்டங்கள் எல்லாம் மேய்ச்சலை நிறுத்தி விட்டு இந்தக் குழலோசையில் ஈடுபட்டு மயங்கி வாயில் கவ்வியிருந்த புல்லும் கடைவாய் வழியாக வெளியில் விழுவதும் தெரியாமல் நிற்கின்றன. அவை நின்ற இடத்தை விட்டு இம்மியளவும் அசையாமல் இருப்பதால் அவையெல்லாம் சித்திரத்தில் எழுதியவை போல்
தோன்றுகிறன

கோபிகைகள் பட்ட பாடு

குருவாயூரப்பன் சன்னதியில், தனது ரோகம் தீரும் பொருட்டு ”நாராயணீயம்” பாடிய பட்டத்ரி, கண்ணனுடைய வேணுகானத்தை கேட்ட கோபிகைகள் பட்ட பாட்டையெல்லாம் மிக அழகாக எடுத்துரைக் கிறார். பாலூட்டிக் கொண்டிருந்த அருமைக் குழந்தையை அப்படியே விட்டு விட்டு வருகிறாளம் ஒரு கோபி. சில கோபிகைகள் நகைகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள் குழலோசை கேட்டதும் பாதி நகைகளை அவசர அவசரமாக அணிந்து கொண்டும் பாதி நகைகளைக் கையில் அள்ளிக் கொண்டும் வருகிறார்கள்.

இதைப் பற்றி ””ஓடக்கும்மி”” இப்படி வருணிக்கிறது

1. காலிலிடும் நகை காதிலிட்டாள்
பீலியை மூக்கிலே வாங்கி விட்டாள்
தாலியைத் தன் முழங்காலிலே
மாட்டி
கோலியே வேகமாய்க் கண்ணனிடம்

2. பட்டாடை தனை கழுத்தில் கட்டி
பாங்குடன் ரவிக்கையை இடுப்பில்
சுற்றி ஒட்டியாணத்தை தலையில் மாட்டி
ஓடியே வேகமாய்க் கண்ணனிடம்

3. ஜாடையாய்க் கண்ணன்
குழலோசை சில
ஸௌந்தரி கேட்டுடன் மெய்மறந்து
ஆடையவிழ்ந்ததை அறியாமல்
வெகு
அலங்கோலமாய் வாராள் சில
கோபி.

4. கருமுகில் வண்ணன் குழலோசை
சில காதலி கேட்டுடன் மெய்மறந்து
அருமையாய்ப் பெற்ற மகனை
யெறிந்து அலங்கோலமாய் வாராள் சில கோபி,

5 மாதவன் கீதா வலையினிலே
மதிமயங்கி கோபியர்கள்
மாதர்கள் கண்ணுக்கு வழி
தெரியாமல்
மதிலேறி விழுவார் சில கோபி.

சிலர் பொட்டு வைக்க மறந்தும், சிலர் மையிட மறந்தும் வருகிறார்கள். முகப்பூச்சை தலையிலே பூசி, தலையில் தடவ வேண்டிய எண்ணையை முகத்தில் தடவிக் கொண்டும், நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டிய சிந்தூரத்தைக் கண்ணிலும், கண்களுக்கு இட வேண்டிய மையை நெற்றியிலும் இட்டுக் கொண்டும் வருகிறார்கள். இடுப்பில் சங்கிலியையும் காதிலே வளையல்களையும் மாட்டிக் கொண்டி ருக்கிறார்கள். காற்றினிலே வரும் முரளீகானம் அவர்களை அந்தப்பாடு படுத்துகிறது.

தேவலோகப் பெண்கள் பட்ட பாடு

இந்த உலகத்துப் பெண்கள் மட்டுமா? தேவலோகத்துப் பெண்களும் கூட இந்தக் குழலோசையில் உள்ளம் மயங்கி நிற்கிறார்கள். ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவ லோகத்துப் பெண்களும் தங்கள் ஆடல் பாடல் மறந்து நிற்கிறார்கள்.

கானகம்படி உலாவி
கருஞ்சிறுக்கன்
குழல் ஊதின போது
மேனகையோடு திலோத்தமை,
அரம்பை உருப்பசியர்
அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பின்றி
ஆடல் பாடல்
அவைமாறினர் தாமே

இவர்களாவது தேவ லோகத்தில் நாட்டியமாடும் பெண்கள், அதனால் குழலோசையில் மயங்கி விட்டார்கள் எனலாம். ஆனால் முற்றும் துறந்த முனிவர்களான நாரதரும் தும்புருவும் அல்லவா மயங்கி விட்டனர். அவர்கள் இருவரும் வீணை இசைப்பதை மறந்து விட்டனர். கின்னர மிதுனங்களும் தங்கள் தங்கள் கின்னரம் தொடுவதில்லை என்று சபதமே செய்து விட்டார்களாம்!

கலை மகளின் நாணம்

rajarajeshwari-deviஒரு சமயம் தேவி ராஜராஜேஸ்வரி சப்த மாதர்களுடன் கொலு
வீற்றிருக்கும் பொழுது வீணாதாரிணியான ஸரஸ்வதி தேவி ஈசனின் திரு விளையாடல்களை எல்லாம் வரிசையாக வீணையில் வெகு இனிமையாக வாசித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் தேவி தன்னை மறந்து ”சபாஷ்” ”சபாஷ்” என்று வீணாதாரிணி யின் வாசிப்பைப் பாராட்டினாள். தேவியை ”வீணாகான தச கமக க்ரியே” என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் போற்றுவார். வீணையிலிருந்து வரும் பத்து விதமான கமகங் களையும் உண்டாக்குபவள் என்று பொருள். அப்படிப்பட்ட தேவியே பாராட்டினாள் என்றால் ஸரஸ்வதி தேவி மிகவும் சந்தோஷம் அடைய வேண்டு மல்லவா? ஆனால் வாக்தேவியோ தனது வீணையை உறையிலிட்டு மூடி விடுகிறாள். தேவியின் சபாஷ் என்ற வார்த்தையே சங்கீதம் போல அவ்வளவு மதுரமாக இருந்ததாம். இந்த இனிமையான வாங் மாதுர்யத்திற்கு முன்னால் நான் வீணை வாசிக்கவும் தகுதியில்லை என்று நாணி வீணையை மூடிவிடுகிறாளாம் வீணா தாரிணி. இப்படிக் கற்பனை செய்கிறார். ஆதி சங்கரர் “சௌந்தர்யலஹரி” என்னும் ஸ்லோகத்தில். தேவியின் வாக்கினிமைக்கு முன்னால் தான் எப்படி வீணை வாசிக்க முடியாது என்று வாக்தேவி நாணி நின்றாளோ அது போல் கண்னன் குழலோசைக்கு முன்னால் நாம் எப்படி வாசிப்பது என்று நாரத தும்புருவும் திகைக்கி றார்களாம்.

‘அம்பரம் திரியும் கந்தர்ப்பரெல்லாம்
அமுதகீத வலையால் சுருக்குண்டு
நம்பரம் அன்றென்று நாணி மயங்கி
நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே

ambujam-krishnaகாலஞ்சென்ற திருமதி அம்புஜம் க்ருஷ்ணா அவர்கள் ஆழ்வர் பாசுரங் களின் கருத்துக் களைத் தனது பாடலில் அழகாகப் பாடி யுள்ளார்.

அம்பரம் தனிலே தும்புரு நாரதர்
அரம்பையரும் ஆடல் பாடல்
மறந்திட
அச்சுதன் அனந்தன் ஆயர் குல
திலகன்
அம்புஜ நாபன் ஆர்வமுடன் முரளி
கானமழை பொழிகின்றான்
கண்ணன்
யமுனா தீரத்தில் யாதவர் குலம்
செழிக்க [கான]

ஓரறிவுடைய புல் முதல் ஐந்தறிவுடைய பறவைகளும் மிருகங்களும் ஆறறிவுடைய கோபிகைகளும், தேவமகளிரும் முற்றும் துறந்த நாரத தும்புருவையும் மெய்மறக்கச் செய்கிறது கண்ணனின் வேணுகானம். பிருந்தாவனத்திலே இப்பொழுதும் கேட்பதாகச் சொல்லப்படும் வேணுகானம் இந்த உலகை மகிழ்வித்து அமைதி நிலவச்செய்யட்டும்.

2 Replies to “காற்றினிலே வரும் கீதம்”

  1. மிக அருமையான கட்டுரை. படிக்கையில் உள்ளம் நெகிழ்ந்து,கண்களில் நீர் பனித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *