தேவை: சமச்சீர் வசதிகள்

அடுத்த கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி தமிழகப் பள்ளிகளில் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. சமச்சீர் கல்வியை ஆதரிப்பவர்கள் மட்டும்தான் சமூக சிந்தனைவாதிகள் என்றும், அவர்கள் மட்டுமே சமூக அக்கறைகொண்டவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள். சமச்சீர் கல்வித்திட்டத்தினை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிரானதாகவும், தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் பெரும்பாலானோர் எடுத்துக் கொண்டுள்ளனர். தனியார் பள்ளிகளின் வளர்ச்சியை இத்திட்டம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்று நினைப்பதாலேயே இதனைப் பலர் ஆதரிக்கிறார்கள்.

school-children-prayingசமச்சீர் கல்வித்திட்டத்தால் தனியார் பள்ளிகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அரசு கொண்டுவருவது சமச்சீர் பாடத்திட்டமே தவிர, சமச்சீர் கல்வி அல்ல. சமச்சீர் பாடத்திட்டம் என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகமாக இருக்கும். எல்லா மாணவர்களுக்கும் சமச்சீரான கல்வியை யாரும் வழங்க முடியாது. ஒரே வகுப்பில் பயிலும் நாற்பது மாணவர்களும் ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெறுவதில்லை.

அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக கல்வி போதித்திக்கப்பட்டாலும் கற்கும் திறன் என்பது மாணவர்களைப் பொறுத்தே அமைகிறது. அரசியலில் எல்லோரும் சமம் என்கிற கம்யூனிச சித்தாந்தம் கல்விக்குப் பொருந்தாது. இந்த பூமிப்பரப்பில் எல்லா இடங்களிலும் சமவெளிகள் சாத்தியமில்லை. அதுபோலத்தான் சமச்சீர் கல்வியும். இயற்கையின் மேடுபள்ளங்களைப் போல மாறுபட்ட கற்கும் திறன் இயற்கையானது. எல்லா மாணவர்களையும் ஐ.ஏ.எஸ். படிக்க வைத்து கலெக்டராக்கிவிட முடியாது. கனவும், கடின உழைப்பும், கற்பனை வளமும் இருக்கும் ஒரு மாணவன்தான் உயர் பதவிக்கான லட்சியங்களுடன் வாழ்ந்து அதனை அடையமுடியும். அந்த லட்சிய வாழ்க்கையை கனவு காணதவர்கள் உடல் உழைப்பை மேற்கொள்கிற அடிப்படை பணிக்குத் தான் செல்ல முடியும். எல்லோரையும் சமச்சீராக ஒரே பணிக்கு தயார் செய்து அனுப்ப முடியாது.

ஒரே விதமான பாடத்தை எல்லோருக்கும் ஒரே விதமாக நடத்தி எல்லோரையும் ஒரே விதமான மதிப்பெண்கள் எடுக்கச் செய்வது என்ற முயற்சி கல்வியில் ‘குளோனிங்’ போன்று விபரீகத்தான் முடியும்.

தனியார் பள்ளிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் சமச்சீர் கல்வியின் மறைமுகமான நோக்கம் என்றால் அதுவும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தினை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமாக மாற்றிக் கொள்ளதிட்டமிட்டுவருகின்றன.

இன்னொரு காரணம், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது அது தனியார் பள்ளியா? அரசுப் பள்ளியா? என்கிற வேறுபாட்டைத் தான் பார்க்கிறார்கள். பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டம் பற்றிய கேள்விகளோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை. அல்லது அது தேவையில்லை என்று கருதுகிறார்கள்.

தனியார் பள்ளிகளின் வசதிகளும் வரைமுறைகளும் பெற்றோர்களை மிகவும் கவர்வதாக உள்ளன. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைத் தேடி மாணவர்கள் ஓடுவதற்கு அதன் பாடத்திட்டம் மட்டும் காரணமல்ல என்பதை கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளோடு ஒப்பிடும்போது மெட்ரிக் பள்ளிகள் பல்வேறு வகைகளில் தங்களைத் தரமாக வைத்திருக்கின்றன. மெட்ரிக் பள்ளிகளில் பின்பற்றப்படும் ஒழுங்கு முறைகள், விதிகள் போன்றவை அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படுவதில்லை. கீழ்க்கண்ட உதாரணங்களைச் சொல்லலாம்.

மெட்ரிக் பள்ளிகளில் வாரந்தோறும் தேர்வுகள் நடத்தி விடைத்தாள்கள் திருத்தப்பட்டு உடனடியாக அவை பெற்றோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பெற்றோர்கள் வாராந்திர தேர்வு மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு தேர்வு ஏடுகளில் கையெழுத்திட்டு தருகிறார்கள். படிப்பில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து உடனடியாக கலந்துரையாடப்படுகிறது. குறைபாடுகளைக் களைவதற்கு அறிவுறுத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் பேணப்படும் சுகாதாரம் முற்றிலுமாக அரசுப் பள்ளிகளில் இல்லை. சில தனியார் பள்ளிகள் சோலைவனமாக காட்சியளிக்கின்றன. மாணவர்கள் வாரந்தோறும் நகம் வெட்டிக்கொண்டு வருகிறார்களா? மாதந்தோறும் முடித்திருத்தம் செய்கிறார்களா? அழுக்கில்லாத தூய ஆடை அணிந்து வருகிறார்களா…? என்பதெல்லாம் பிற ஆசிரியர்களால் கண்காணிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களும் கடைபிடிக்க முடியும். இதுபோன்ற தனி மாணவ சுகாதாரம் அரசுப்பள்ளிகளில் கண்காணிக்கப்படுவதில்லை.

இன்று மனிதர்களை பல்வேறு விதமான நோய்கள் தாக்கிவருகின்றன. தனியார் பள்ளிகளில் பராமரிக்கப்படும் தூய்மையான கழிப்பிடவசதிகள் மாணவர்களை நோயிலிருந்து பாதுகாக்கின்றன. சில தனியார் பள்ளிகளில் மதிய உணவு மாணவர்களுக்கு சுடச்சுட வழங்கப்படுகிறது. அரசு விதிகளின்படி போதுமான அளவு விளையாட்டு மைதானங்கள் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. இவை மாணவர்களுக்கு கற்பதற்கான சூழலையும் இயல்பான ஆர்வத்தையும் உண்டு பண்ணுகின்றன.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கென்று சீருடை வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் கம்பீரமான தோற்றம் மாணவர்களை உளவியல் ரீதியாகக் கவருகிறது. ஆசிரியர்களின் பணிகள் நுணுக்கமாகக் கவனிக்கப்படுகின்றன. அதனால் ஆசிரியர்கள் அதிகம் உழைக்கிறார்கள். (வேறு மொழியில் ஆசரியர்கள் கசக்கிப்பிழியப்படுகிறார்கள்.)

ஆண்டு தோறும் நடக்கும் வண்ணமிகு ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் செல்லக் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு ரசிக்கிறார்கள். இவற்றையெல்லாம் தனியார் பள்ளி நோக்கி பெற்றோர்கள் படையெடுப்பதற்கான காரணங்களாகச் சொல்லாம்.

இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் தான் படிக்கிறார்கள் என்பது விநோதமான உண்மை. தங்கள் கல்விமீது நம்பிக்கை இல்லாமல் இந்த ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்களா..? அல்லது தனியார் பள்ளிகளில்தான் நன்றாக படிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அனுப்புகிறார்களா? எதுவாயினும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்குள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க விரும்பவில்லை. இன்னும் ஒரு காரணம் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கும் அளவிற்கு அதிகமான வருமானம் அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்குத்தான் வருகிறது.

school-indiaஅரசுப் பள்ளியின் சூழல் நமக்கெல்லாம் தெரிந்ததுதான். தூசும் ஒட்டடையும் அடைந்த கட்டிடங்கள், தாங்கள் அமரும் மேஜையைக் கூட சில ஆசிரியர்கள் துடைத்து வைப்பதில்லை. உடைந்த டெஸ்க்குகள், காரை பெயர்ந்த தரைகள் என்று பாழடைந்த கட்டிடங்களாகத்தான் அரசுப் பள்ளியின் கட்டிடங்கள் காட்சிதருகின்றன.

இதைவிட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் (டியூஷன்) எடுப்பதை ஆதரிக்க முடியாது. மாலையில் பள்ளி நேரம் முடிந்தவுடன் தலைவாரி, பவுடர் பூசிக்கொண்டு ஆசரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு புறப்பட்டுவிடுகின்றனர். இரவு ஒன்பது மணிவரை டியூஷன் எடுக்கிறார்கள். பிறகு காலை நேர டியூஷன். இவ்வாறு ஓய்வின்றி உழைக்கும் சில ஆசிரியர்கள் பகல் நேர வெயிலில் ஓய்வெடுப்பதற்காக அரசுப் பள்ளியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது கசப்பான உண்மை.

ஆசிரியர்களுக்கு பொருளாதார ரீதியிலான கவலைகள் இருக்கக்கூடாது. அப்படி கவலைகள் இருந்தால் தன்னம்பிக்கையுள்ள ஒரு மாணவ சமுதாயத்தை அவர்களால் உருவாக்க முடியாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு போதுமான அளவைவிட அதிகமாக அரசு சம்பளம் வழங்குகிறது. ஆனால் இவர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்திக் கொண்டு அந்தக் கட்டணம் ஒழுங்காக வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

”எனக்கு மாதம் முடிந்தால் சம்பளம், நீ படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன?” என்று கேட்கும் ஆசிரியர்களை நாம் பார்க்க முடியும். ஆசிரியர்களின் முழு நோக்கமும் பணம் பண்ணுவதாகவே இருப்பதால் மாணவர்களின் லட்சியக் கனவுகள் குறித்து இவர்கள் கவலைப்படுவதில்லை (விதி விலக்காக இருக்கும் ஆசிரியர்களை இக்கட்டுரை கணக்கில் கொள்ளவில்லை.)

மேலும் இந்த அரசு கொண்டு வந்திருக்கின்ற சமச்சீர் கல்வித்திட்டம் தனியார் பள்ளிகளுக்கு எதிரான திட்டம் என்று எடுத்துக்கொண்டால் அதனால் பாதிக்கப்போவதும் அரசியல் வாதிகள்தான். ஒரு நல்ல தரமான எல்லா வசதிகளும் நிரம்பிய மெட்ரிக் பள்ளியை அரசு விதிமுறைகளின்படி நடத்த வேண்டுமானால் அது ஓர் அரசியல்வாதியாலோ அல்லது அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாலோ தான் முடியும்.

அரசின் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், ஆசிரியர்கள் முதலில் தன்னிறைவு மனநிலை பெறவேண்டும். ஆசிரியப் பணியின் உன்னதத்தை அவர்கள் உணர வேண்டும். ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் சமச்சீர் கல்வித்திட்டம் வெற்றி பெறும். இல்லையென்றால் இது வெறும் சமச்சீர் பாடத்திட்டமாக மட்டும் நின்று போய்விடும்.

விஜயபாரதம் (25-8-2009) இதழிலிருந்து.

4 Replies to “தேவை: சமச்சீர் வசதிகள்”

 1. வணக்கம்.

  மிக மிக அருமையான, இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற கட்டுரை, நன்றி ஸ்ரீ சூரியகுமார்,

  எல்லா ஆசிரியர்களும் தமது பொறுப்புணர்ந்து செயல் பட நீங்கள் வீசிய முதல் கணை என்றே இதை நான் அறிகிறேன்.

  அரசு பள்ளிகளில் ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை தங்களின் வகுப்பு அறைகளின் சுத்தம் முதல் பள்ளி மைதான சுத்தம் வரை எதை பற்றியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொண்டதாக நான் இன்று வரை அறிந்ததில்லை. சில இடங்களில் பள்ளிகளில் மாணவர்களை வெய்யிலில் வறுத்து எடுத்து விடுகிறார்கள், மைதானத்தை சுத்தம் செய்கிறோம் என்ற சாக்கில்.

  கல்வித்துறை இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பள்ளிகளை மாதம் ஒருமுறையாவது அதற்கான அதிகாரிகளை அனுப்பி பள்ளிகளின் பராமரிப்பு, ஆசிரியர்களின் நடவடிக்கை, மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்கள் போதிக்கும் முறை போன்ற பல செயல்பாடுகளை மிக சரியாக ( கூலிக்கு மாரடிக்காமல்) கடமையுணர்ந்து செயல் பட்டாலே எதிர்கால சந்ததியினர் அரசு பள்ளியில் படித்தாலும் குறைந்த பட்சம் ஒரு நல்ல கல்விமானாகவாவது இருப்பார்கள்.

  அய்யா அரசு பள்ளி ஆசிரியர்களே தயவு செய்து எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் (வகுப்பறையில்) உள்ளதை மனதில் உணருங்கள்.

 2. மிக அருமையான கட்டுரை. நன்றி.

 3. *//அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக கல்வி போதித்திக்கப்பட்டாலும் கற்கும் திறன் என்பது மாணவர்களைப் பொறுத்தே அமைகிறது.//* இது மறுக்க முடியாத உண்மை.

  திறமையும் பெற்றோர்களின் கவனிப்பும் ஆசிரியர்களின் கவனிப்பும் உள்ள மாணவர்களால் மட்டுமே சிறந்த மாணவர்களாக வர முடியும் என்பதை பெரும்பலானோர் ஒப்புகொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன். நடைமுறை உண்மை இவ்வாறிருக்க ஆசிரியர்களை மட்டுமே (விதிவிலக்குகளை குறிப்பிடவில்லை என்றாலும்) குறை சொல்வது எந்த அளவிற்கு நியாயம் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

  தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட்டு அவர்களுக்காக இரவும் பகலும் படிக்கும் பெற்றோர்கள், அதுவே அரசு பள்ளி என்றால் எந்த அளவிற்கு அவரவர் பிள்ளைகளை கவனிக்கிறார்கள்? கடமை முடிந்தது என்று இருந்து விடுகிறார்கள் அல்லவா!.

 4. மேலும், தற்போது ஆரம்ப மற்றும் தொடக்க பள்ளிகளில் ‘செயல்வழி கற்றல் முறை’ என்ற ஒரு முறையை புகுத்தி மாணவர்களை குழப்புவதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களையும் குழப்பத்திற்கும் சலிப்பிற்கும் ஆட்படுத்துகிறார்கள். இது புதிய முறை என்பதால் ஆசிரியர்களின் பணிகள் கல்வி அதிகாரிகளால் நுணுக்கமாகக் கவனிக்கப்படுகின்றன. இதனாலும் தான் ஆசிரியர்கள் அதிகம் உழைக்கிறார்கள். (வேறு மொழியில் ஆசரியர்கள் கசக்கிப்பிழியப்படுகிறார்கள்.)

  ஆரம்ப, தொடக்க பள்ளி ஆசிரியர்களை கேட்டுப்பாருங்கள் இந்த ‘செயல்வழி கற்றல் முறை’ யால் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் கல்வி அதிகாரிகளிடமும் அவர்கள் படும் பாட்டை. கல்வி துறையின் மேல் மட்டங்களில் உள்ள குறைகளையும் கலைந்தால் மட்டுமே உருப்பட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *