போகப் போகத் தெரியும் – 44

அண்ணாதுரை வைத்த ஆப்பு

ktkthangamani1அப்போது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் காரணமாகக் கடும்பஞ்சம். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தாங்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடிக்கொண்டிருந்தார்கள்.

சிவகங்கையில் அரசுக் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது. தேவகோட்டையில் இருந்த சப்-கோர்ட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். திருவாடானை நீதிமன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கைப்பற்றிக்கொண்டார்கள்.

போலீஸ் எதுவும் செய்யத் திராணியற்று முடங்கிப் போனது ஏனைய அரசு அலுவலங்கங்கள் எதுவும் செயல்படமுடியவில்லை.

இன்றைக்கு சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என்றழைக்கப்படும் மூன்றும் அன்றைக்கு ஒரே மாவட்டமாக இருந்தன. கிழக்கு ராமநாதபுரத்தில் மூன்று மாதகாலமாக அரசு என்று எதுவும் இல்லை. மக்களே ஆட்சி நடத்தினார்கள். இந்த எழுச்சியை நசுக்க வெளியிலிருந்து பிரிட்டிஷ் அரசு போலீசைக் கொண்டுவந்தது.

எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் எல்லாரும் வேட்டையாடிப் பிடிக்கப்பட்டனர். இதில் முக்கியமானவர் சித்தூர் சிவஞானம். அவரும் கைதுசெய்யப்பட்டார்.

சிவஞானத்தைக் கொன்றுவிடுமாறு அரசாங்கம் தகவல் தந்துள்ளதாக மிகுந்த மனவருத்தத்தோடு சப்-இன்ஸ்பெக்டர் ராமையா என்னிடம் கூறினார்.

‘கைதானவரை எப்படிக் கொல்லமுடியும்?’ என்றேன்.
கோர்ட்டுக்குப் போகும் வழியில் தப்பித்துச் சென்றதாகவும் அப்போது போலீஸ் சுட்டதாகவும் அதில் இறந்து போனதாகவும் ரிப்போர்ட் தரச் சொல்லியிருக்கிறார்கள்’ என்றார் அவர்.

’அப்படிக் கொன்று விடுவார்களா?’ என்று பதைத்துக் கேட்டேன்.

‘காலையிலேயே கட்டிவைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்’ என்றார்.

எனக்குள் இச்செய்தி இடியாய் இறங்கியது.

ஆறுமாதகாலம் வழக்கு நடந்தது.. ஸ்பெஷல் கோர்ட் 30 பேரை விடுதலை செய்தது. 100 பேருக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் எல்லோரும் சாதாரண ஜனங்கள். யாரும் வசதி படைத்தவர்கள் இல்லை. படிப்பறிவும் கிடையாது. தேவர்களும், ஹரிஜனங்களும்தான் மிகப் பெரும்பாலானவர்கள்.

இவர்கள் ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து வீரச் சமர் புரிந்தனர். ஏராளமான இன்னல்களையும் சித்திரவதைகளையும் இன்முகத்தோடு ஏற்றனர்.

– கே.டி. கே. தங்கமணி, தினமணி சுதந்திரப் பொன்விழா மலர்.

ராமநாதபுரம் மட்டுமல்ல, சாத்தான்குளம், மெய்ஞானபுரம் குலசேகரன் பட்டினம், உடன்குடி ஆகிய திருநெல்வேலி மாவட்டத்துச் சிறுநகரங்களிலும் கலவரம் வெடித்தது. நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்கள் இவை. ஒரு வெள்ளைக்கார அதிகாரி இங்கே கொலை செய்யப்பட்டார்.

rajaji2இந்த வழக்கில் காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947-இல் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக இருந்த ராஜாஜி தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் இருவரையும் மரணதண்டனையிலிருந்து விடுவித்தார்.

பெஞ்சமின், செல்லதுரை, தர்மம் கோவில் பிள்ளை, தங்கைய நாடார், முத்துமாலை நாடார், மந்திரக்கோன் ஆகிய ஆறுபேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. தேவ இரக்க நாடாருக்கு பத்தாண்டும், நாராயண பிள்ளைக்கு ஐந்தாண்டும் மோட்டாரத்தினசாமி, பூவலிங்க நாடார் ஆகிய இருவருக்கும் இரண்டாமாண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. துரைசாமி நாடார், லக்ஷ்மண நாடார் ஆகிய இருவரும் பாதுகாப்புக் கைதிகளாக்கப்பட்டனர்.

கோவை, தஞ்சை, சென்னை, தென்னாற்காடு, ஈரோடு, மதுரை நீலகிரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் வன்முறை வெடித்தது.

அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி 26 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; இதில் 39 பேர் மாண்டனர், 17 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 6000 பேர் கைது செய்யப்பட்டனர். 295 பேருக்குச் சாட்டையடி தண்டனை தரப்பட்டது. காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதற்காக 27 உள்ளூராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இத்தனை எழுச்சிக்கு இடையே நீதிக்கட்சி என்ன செய்தது?

மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று இந்தியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நேரத்தில் நீதிக்கட்சித் தலைவரான சர். ஏ. ராமசாமி முதலியார் வைஸ்ராயின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பதவியேற்றார்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்பட்ட உலகப் போருக்காக ஈவெரா நிதி திரட்டிக்கொடுத்தார். அவருடைய சீடர்கள் நாடகங்களை நடத்தி யுத்தநிதி திரட்டினார்கள்.

ஹரிஜனங்கள், தேவர்கள், நாடார்கள் போன்ற தாழ்த்தப்பட்டவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் முன்னனியில் செயல்பட்ட ஆகஸ்ட் போராட்டத்திற்கு எதிராகவே நீதிக்கட்சி செயல்பட்டது; ஈவெராவும் செயல்பட்டார்.

1942-இல் சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் பிரிட்டிஷ் மந்திரி சபைக்குழு இந்தியா வந்தது. நீதிக்கட்சியின் சார்பில் 30.03.1942 இல் ஈ.வெ.ராமசாமி, டபிள்யு. பி. சவுந்தரபாண்டியன், என். ஆர். சாமியப்ப முதலியார், எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆகியோர் இந்தக் குழுவைச் சந்தித்து மனு கொடுத்தார்கள். திராவிடர்களுக்குத் திராவிடநாடு பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

ஆகஸ்டு போராட்டத்தில் அடக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோர் பற்றியோ பிற்படுத்தப்பட்டோர் பற்றியோ ஈவெராவும் நீதிக்கட்சியும் வாய்திறக்கவில்லை.

தமிழகமே திரண்டு விடுதலைப் போரில் முன்னணியில் இருந்தபோது நீதிக்கட்சியினர் செய்ததெல்லாம் ‘திராவிட நாடு’ வேண்டுமென்று மனுக் கொடுத்ததுதான்.

ஈவெராவைப் பொறுத்தவரை அவர் தேசியத்திற்கு எதிராக இருப்பது போதாது என்று நினைத்தார். ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் கேட்ட ஜின்னாவுக்கு ஆள்பிடித்தார்.

periyar1காந்தியார் காலடியில் பிரிட்டிஷ் சர்க்கார் போய் விழுவதைத் தடுத்தது ஜின்னா அல்லவா? ஜனாப் ஜின்னா அவர்களின் பாகிஸ்தான் கோரிக்கை ஒரு புறமிருக்கட்டும். ஆனால் பாகிஸ்தானில், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில், காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் தாழ்த்தப்பட்டோர் நிலையிலிருப்பதைவிட உயர்ந்த நிலையிலிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திலும் காங்கிரஸ் ராஜ்ஜியத்திலும் தாழ்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்ட நிலையிலேயிருந்து வந்தால் தான் அவர்களால் சுரண்டிவாழ இடமுண்டு என்பதாக நினைத்து வருகிறார்கள். ஆனால் முஸ்லீம் ஆட்சியில் இவ்வாறு ஒரு சமூகத்தை மற்றோரு சமூகம் சுரண்டி வாழ இடமிருக்காது.

– விடுதலை, 12.05.1943

எரிகிற வீட்டில் கிடைத்ததைப் பிடுங்க ஈவெரா செய்த முயற்சி இது.

ஆகஸ்ட் தீர்மானம் இந்நாட்டு மக்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல என்பதோடு அது ஜப்பான்காரனின் பலத்தை நம்பி அவன் வெற்றி பெற்றுவிடுவான் என்கின்ற தைரியத்தில் அவனுக்கு தங்கக் குடத்தில் பூரண கும்பம் எடுப்பதற்குச் செய்யப்பட்ட ஒரு சதிச்செயல் தீர்மானமேயாகும்— என்று எழுதி ஈவெரா தமிழர்களின் தியாக உணர்வையும் நாட்டுப் பற்றையும் இழிவுபடுத்தினார்.

தானடித்த ஜால்ரா வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஈவெரா காங்கிரசைக் குறைகூறினார். காங்கிரஸ் எப்போதும் சர்க்காருக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது என்று பச்சைப் பொய் ஒன்றை கட்டுரையாக எழுதினார்.

“காங்கிரசுக்கும் சர்க்காருக்கும் அந்தரங்கத்தில் என்றும் போராட்டம் நடந்ததில்லை. ஆரம்பகாலம் முதல் காங்கிரசானது ராஜ விசுவாச பிரமாணம் செய்து சர்க்காரை ஆதரித்தே வந்திருக்கிறது. சர்க்காரும் காங்கிரசை ஆதரித்தே, அதைப் பெருமைப்படுத்தியே வந்திருக்கிறது,” என்று ‘குடி அரசு’ இதலில் ஈவெரா எழுதினார்.

அரைப்பொய், கால்பொய் என்று சொல்லி இயக்கத்தைத் துவக்கிய ஈவெரா, தன் பொய்யில் தானே மயங்கி அதை முக்கால் பொய், முழுப்பொய்யாக்கி, அதுவும் போதாமல் அண்டப்பொய், ஆகாசப்பொய்யாக ஆக்கி விடுதலையே வேண்டாம் என்றார்.

கூட இருந்து கொண்டாடியவர்களுக்கே இவருடைய மக்கள் விரோதப்போக்கை சகிக்கமுடியவில்லை. அண்ணாதுரை வைத்தார் ஆப்பு. அது பற்றிய விவரங்களை போகப்போகத் தெரியும் இரண்டாம் பகுதியில் காணலாம்.

மேற்கோள் மேடை:

நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்துவிடுமோ? கடவுள் வாழ்த்துவேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள்தனம்.

– ஈவெரா / விடுதலை / 13.04.1972

6 Replies to “போகப் போகத் தெரியும் – 44”

 1. டாப்ல ”அண்ணாதொர வச்ச ஆப்பு” ன்னு டைடில் பாக்க ஸொல்ல படா குஷியா பட்சேன் ஸார். ஆனாக்கா கட்ஸீ வரெக்கும் அவுரு வச்ச ஆப்பு இன்னான்னு ஸொல்லாம டபாய்ச்சுட்டீங்க நைனா! நாயமா இது? அட்த பார்ட்டு வர வரெக்கும் தேவுடு காத்துனு இருக்கணுமா? பேஜார் பண்டீங்களே வாத்யாரே!

  அண்ணாதொர ஈவெராவுக்கு ஆப்பு வெச்சாரு; கலிஞரு அண்ணாதொரெக்கு ஆப்பு வச்சாரு. ஆனா அண்ணாதொர, ஈவெரா ரெண்டு பேரையும் வச்சுக்கினு ஸொம்மா நாப்பது வர்ஸம் ஸோக்கா பாலிடிக்ஸ் பண்டாரே! கலிஞரு கில்லாடி தான் ஸார், இன்னா நா ஸொல்றது?

  ஈவேராவும், தொரையும், கலிஞரும் நம்ம தமில் மக்கலுக்கு ஆப்பு வச்சாங்கோ, சரி. எம்ஜாரு அண்ணா நாமம் வாய்க…அண்ணா நாமம் வாய்கன்னு நம்ம அல்லாருக்கும் நாமமே போட்டாரே….அத்த எங்க பொய் ஸொல்ல?

  ஆரியம், திராவிடம், தமிழு, சுய மர்யாத, சமூக நீதி, இட ஒதுக்கீடு, இலவஸம்…இப்ப கட்ஸியா கரன்ஸி! இன்னா ஸோக்கா பாலிடிக்ஸ்ன்ற பேர்ல பம்மாத்து பண்ணிகறானுங்க படுபாவிங்க!

  தமிழன் மடையன்; அவ்ளோதான். வேற இன்னா ஸொல்ல, ஆ?

  வர்டா…

  நொந்து போன மன்னாரு.

 2. விடுதலை, குடி அரசு என்கிற இரண்டையும் வைத்துக் கொண்டே இதுவரை ஈவேராவை அம்பலப்படுத்திய சுப்பு அவர்கள் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.

  மேற்கோள் மேடை – Super Expose!

  புத்தகம் பல்லாயிரம் பிரதிகள் விற்க வேண்டும். தமிழ் மக்கள் தெளிவு பெற வேண்டும்! வாழ்த்துக்கள்!

  நன்றி, அன்புடன்

  ஹரன்.

 3. அண்ணாத்துரை ஈ.வே.ராவுக்கு ஆப்பு வைத்தார் என்பது தவறு. இருவரும் பிராமணர்களுக்கு வைத்த ஆப்பு அவ்வினமே அழியும் வகையில் விஷ ஆப்பாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

 4. “நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்துவிடுமோ? ” – இ.வெ.ராவின் கன்னட புத்தி இதில் அம்பலமாகிவிட்டது.

 5. காரணம் இல்லாமல் திராவிட இயக்கங்களைத் தாக்கி எழுதும் சுப்பு ஆகஸ்ட் போராட்டத்தில் கம்யுனிஸ்ட்கள் தேச துரோகிகளாக செயல்பட்டதைச் சொல்லவில்லையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *