போகப் போகத் தெரியும் – 45

c-n-annaduraiநம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்குத் தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங்களை எதிர்த்துப் போராடி சர்க்காருக்கு அனுகூலமான நிலையை உண்டாக்க உதவிசெய்து வந்ததும், குறிப்பாக, சென்ற ஐந்தாண்டு காலமாக நடந்து வரும் உலக யுத்தத்தில் நல்ல நெருக்கடியில் நேச நாடுகளின் வெற்றிக்குக் கேடு உண்டாக்கும் படியான நிலையில் நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்து வந்த பெருங்கிளர்ச்சியையும் நாச வேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும் நேச நாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரசாரம் முதலியவைகள் நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும் சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப் படத்தக்க நிலை ஏற்படுவதற்குப் பயன்பட்டுவிட்டது.

இந்திய அரசியல் சமூக இயல்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில், சர்க்கார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

இந்திய மக்கள் அரசியல் சமுதாய இயல்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத் தக்கதாகவும் நீதிநெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்து வந்தும் நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக்கூட சேர்த்துப் பேசுவதற்கில்லாததாக அலட்சியப்படுத்தப்பட்டது.

மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ இந்திய மந்திரியாலோ, பிரிட்டிஷ் முதல்மந்திரியாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றி பலதடவை பேச்சு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ, நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிடக் கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டிருக்கிறது.

— நீதிக்கட்சி மாநாட்டில் அண்ணாதுரை தீர்மானம் / சேலம் / ஆகஸ்ட் 1944

சேலம் நகரில் 27.08.1944 அன்று நீதிக்கட்சியின் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு ஈவெரா தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் இது.

வெள்ளைக்காரன் ஏவிய படியெல்லாம் பணிசெய்தும் தங்களை அந்த அரசு மதிக்கவில்லை என்கிற ஆதங்கம் இந்தத் தீர்மானத்தில் வெளிப்படுகிறது. அடிமையாக இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் இது.

நீதிக்கட்சி என்று மக்களால் அழைக்கப்பட்ட அந்தக் கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். சேலம் மாநாட்டில் இந்தப் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது.

ஈவெரா தலைமையில் இருந்த இயக்கம் திராவிடர் கழகம். பின்னர் சி.என். அண்ணாதுரை தலைமையில் உருவான அரசியல் கட்சியின் பெயர் திராவிட முன்னேற்றக் கழகம். திமுகவில் ‘ர்’ இல்லை என்பதைக் குறித்துக்கொள்ளவும். இதற்கான காரணங்களை அந்தக் காலகட்டத்தில் பார்க்கலாம்.

நீதிக்கட்சிக்குத் தலைமையேற்ற ஈவெராவுக்கு தனக்கு மட்டும்தான் தமிழர்களின் தலைவனாகத் தகுதி உண்டு என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் தமிழனால் மதிக்கப்படக்கூடிய போற்றக்கூடிய, ஒரு தமிழன் கூடக் கிடையாது. என்று எழுதினார் அவர். (குடி அரசு / 17.11.1943)

  • விடுதலைப் போரில் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்து, சிறைச்சாலையில் செக்கிழுத்த சிதம்பரனார் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • பொதுவுடமைக் கொள்கையைத் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த, மீனவர் குலத்தைச் சேர்ந்த ம. சிங்காரவேலர் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • சுயமரியாதை இயக்கத்தில் இவருக்குத் தோள் கொடுத்து நின்ற ப. ஜீவானந்தம் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • அரசியல் நெறிக்கும், தமிழ் நடைக்கும் உரியவரான திரு. வி. கல்யாணசுந்தரனார் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • விடுதலைப் போரில் தமிழகத்து விடிவெள்ளியாக இருந்த ராஜாஜி இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.
  • சைவப் பெரியவரான மறைமலை அடிகள் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.

இது ஏதோ அவசரத்தில், ஆத்திரத்தில் சொல்லப்பட்ட கருத்து என்று தள்ளிவிடமுடியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கருத்தையே ஈவெரா மீண்டும் சொல்கிறார்.

‘நீ ஒரு கன்னடியன். அப்படியிருக்க, நீ எப்படித் தமிழர்களுக்குத் தலைவனாக இருக்கமுடியும்? ‘ என்று என்னைக் கூடக் கேட்டார்கள். ‘தமிழன் எவனுக்கும் அந்தத் தகுதி இல்லையப்பா!’ என்று நான் அதற்கு விடைசொன்னேன்

– விடுதலை / 01.06.1954

இப்படித் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட ஈவெராவின் தலைமையால் நாட்டுக்குக் கிடைத்த நன்மை என்ன?

கிருத்துவப் பாதிரியார்களால் தயாரிக்கப்பட்ட திராவிட இனவாதத்தை ஒரு அரசியல் கொள்கையாக அறிவித்ததுதான் இவருடைய பெருமை.

இந்தத் திராவிட இனம் என்ற வாதத்திற்கு எந்தவித இலக்கிய, வரலாறு மற்றும் அறிவியல் அடிப்படையும் கிடையாது. ஆரியம் ஒரு இனம், திராவிடம் என்பது மற்றொரு இனம் என்பதை மானுடவியல் அறிஞர்கள் எவரும் இன்று ஏற்றுக்கொள்வதில்லை.

இதுபற்றி சற்று விபரமாகப் பார்ப்போம்,

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த பயணிகளான ஹிவான் ஸ்வாங், அல்பெருணி, அமீர் குஸ்ரூ, இபத்பதுதா, மார்கோபோலோ போன்றவர்களின் குறிப்புகளில் ஆரிய இனம், மற்றும் திராவிட இனம் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

திராவிட இனம், ஆரிய இனம் என்ற சொற்கள் பழைய தமிழ் இலக்கியத்திலோ சமஸ்கிருத இலக்கியத்திலோ எங்குமே இடம் பெறவில்லை; தெலுங்கு இலக்கியத்திலோ மலையாள இலக்கியத்திலோ, கன்னட இலக்கியத்திலோ எங்குமே இல்லை.

காலனி ஆதிக்கம் செய்யவந்த போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்த இனவேற்றுமை கண்ணில் படவில்லை.

ரோமானியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், பாரசீகர்கள் யாருமே இந்தியாவில் உள்ள ஆரிய இனம், திராவிட இனம் பற்றிப் பேசவில்லை. இது மட்டுமல்ல.

மார்க்சிஸ்ட் சார்புடைய சரித்திர ஆய்வாளரான ரோமிலா தப்பார் எழுதுகிறார்: “திராவிட மொழி பேசுபவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தவறான கருத்தாகும். ஆரிய மொழி பேசுபவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து இப்போது கைவிடப்பட்டு விட்டது. ”  — India : Historical Begining and the concept of the Aryan National Boo Trust

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார்: “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை.”

புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர் பி.டி. ஸ்ரீனிவாஸ அய்யங்கார் எழுதுகிறார்: “வேதத்தை உருவாக்கியவர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது முட்டாள்தனமான கருத்து.”

எஸ். ஆர். ராவ் என்ற தொல்லியல் அறிஞர் எழுதுகிறார்: “சிந்து சமவெளியில் கிடைத்துள்ள ஆதாரங்களில் ஆரியப் படையெடுப்புக்கான ஆதாரம் ஒன்றுகூட இல்லை.”

பாரதியார், நாமக்கல் கவிஞர், அரவிந்தர் போன்றவர்கள் திராவிட இனம் பற்றிக் கூறிய கருத்துகளை இந்தத் தொடரின் முன்பகுதியில் (போகப் போகத் தெரியும் -20″) கொடுத்திருக்கிறேன்.

இத்தனை ஆதாரங்களுக்கும் எதிராக ‘பகுத்தறிவு’ இயக்கம் பிழைத்தது ஒரு துன்பியல் நிகழ்வுதான்.

இனி பிழைக்காது என்ற எண்ணத்தில் நடு வீட்டில் போடப்பட்டிருந்தது நீதிக்கட்சி; காங்கிரசின் கோஷ்டிப் பூசலும், இந்தி எதிர்ப்புப் போராட்டமும், சைவ வேளாளர்கள் அங்கீகாரமும் அதற்குப் புத்துயிர் கொடுத்து நடமாட வைத்தது என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.

காங்கிரசின் தவறான கொள்கைகளும், நாடக மற்றும் சினிமா கவர்ச்சியும் திராவிட இயக்கத்திற்கு வலு சேர்த்து தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதை இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

தமிழ்ப் படிப்பதனாலாவது தமிழ்த்தாய் பற்றினாலாவது மனிதனுக்குத் தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று அய்யப்பட வேண்டியிருக்கின்றது.
ஈவெரா / பெரியார் ஈவெரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி, பக் 1766

இந்தத் தொடர் புத்தாண்டில் (ஜனவரி 2010) புத்தகமாக வரவிருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு தமிழ் ஹிந்துவில் வெளிவரும்.

இந்த முயற்சியில் எனக்கு உதவிபுரிந்தவர்கள்:

தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவினர்
வாசகர்கள்
நிதி உதவி அளித்த அன்பர்கள்

இவர்களுக்கு என் நன்றி!

 

9 Replies to “போகப் போகத் தெரியும் – 45”

  1. //இந்தத் தொடர் புத்தாண்டில் (ஜனவரி 2009)//

    Is it Jan 2009 or 2010?

  2. //சைவப் பெரியவரான மறைமலை அடிகள் இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை//

    ஸாரி பாஸ். அந்த லிஸ்ட்ல இவுரு பேர எப்டி சேத்துக்கினீங்க? இவுரு கிறுஸ்து பார்டிங்க கூட அன்கோ போட்ட ஆளாச்சே! காவேரி டெல்டா பக்கம் இவுர பாதிரி மகன்னு தானே ஸொல்வாங்க! இவுரு இஷ்டார்ட் பண்ணிவுட்டாரு…அப்பாலிகா சில சைவ மடங்க அதே ரூட்ல இன்னும் போயினுருக்காங்க. மன்ஸுக்கு ஒரே ஃபீலிங்கான மேட்டரு அது. இன்னா நா ஸொல்றது?

    இவுரு பேர ஸொல்லி தானே கலிஞரு தமில் வர்ஸ பொறப்ப மாத்திகினாரு?

    பொஸ்தகம் ரெடி பண்ண ஸொல்ல இவுரு பேர லிஸ்ட்லர்ந்து எட்துருங்க ஸார்.

    இன்னா வர்டா,

    மன்னாரு

  3. இன்னும் ஏன் தமிழ் பித்தனுங்க இன்னமும் எந்த பதிலும் சொல்லாம இருக்காங்க .
    பொந்கிஎழவெந்டாம.கழக தமிழா உண்மைஎபேச தயாரா ?
    வாருங்கள் .மக்கள் உண்மையே புரிதுகொள்ளட்டுமே .
    ஹரிஹரக்ரிஷ்ணன்

  4. இந்தத் தொடர் புத்தாண்டில் (ஜனவரி 2010) ?

    எல்லாம் சரி ஆனால் இந்த “புத்தாண்டு” தான் நெருடலா இருக்கு !

  5. அகோரிகளின் குழுவை அகடா என கூறுவார்கள். அகோரிகளின் இந்த குழுவை தவிர அகோரிகளின் ஆற்றல் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அகோரிகள் தங்களின் ஆற்றலை பிறருக்குள் செலுத்தி அவர்களை கருவியாக்கி சமூகத்தை தூய்மையாக்குவார்கள்.

    காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்…! கருப்பு என்பது சமூகத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பது மட்டுமல்ல காலபைரவரின் நிறம் அது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    காசி நகரமே காலபைரவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காசி நகருக்கு சென்று திரும்பும் எவரும் ஏதோ ஒருவிதத்தில் தங்களுக்குள் மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்வார்கள்.

    https://vediceye.blogspot.com/

  6. //விடுதலைப் போரில் தமிழகத்து விடிவெள்ளியாக இருந்த ராஜாஜி இவருக்குத் தலைவராகத் தெரியவில்லை.//

    இந்து மதத்தையும் இந்திய தேசத்தையும் விட்டுகொடுக்காமல் இறுதிவரை போராடிய தேசிய துறவி பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

    “தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள்” என்று சொல்லி இறுதிவரை நாட்டுக்காக வாழ்ந்த ; பதவிகள் தன்னை தேடிவந்தபோது எல்லாம் அந்த பதவிகளை மற்றவர்களுக்கு விட்டு கொடுத்து வாழ்ந்த தேசிய துறவி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு சாதியவாதி, அதனால் அவர் பெயரை குறிப்பிடுவது கூட ஒரு மாபெரும் தவறு என்று எண்ணி நீங்கள் அவர் பெயரை விட்டு விட்டீர்கள் போலிருக்கிறது.

    பெரியாரின் கருத்துக்களை மறுதலித்து பேசியவர்களில் முதன்மையானவர் தேசிய துறவி பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

    மெய்பொருள் காண்பதறிவு
    வெயிலணன் சு.க.

    (Edited and published)

  7. திரு. நடராஜன்,
    இந்த https://vediceye.blogspot.com/ உள்ள நபரைப் பற்றி எனக்கு நிறையவே தெரியும். இந்த சுவாமி ஓம்கார் ‘ஆள் பிடிக்க’ அலைபவர். நல்ல எழுத்தாற்றல் உடையவர் . தான் நினைப்பது மட்டும் தான் ஹிந்து மதம் என்ற அகம்பாவம் நிறையவேயுள்ள, அதை நிலைநாட்ட ஆட்டம் போடும் இவரை நானும் ஒரு காலத்தில் நம்பினேன். இவர் திராவிட கழக நாட்டமும், அவர்களை இம்ப்ரெஸ் செய்துவிட்டால் குமுதம், ஆனந்தவிகடன் என்று எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று கணக்கிட்டு அதில் வெற்றியும் பெற்றவர். இதனால்தான் இவர் பெரியார் பற்றி எழுதினார்.

  8. அண்ணாவின் இந்த முகம் அறியாதது!

    துரோகத்தில் பிறந்து துரோகத்தில் வளர்ந்து தமிழர்களின் இன்றைய இழிநிலைக்கும் காரணமாய் இருப்பது இந்த திராவிடர் கழகமும் அதன் வழித்தோன்றல்களும். ஏன் என்று சிந்திப்பவர்களுக்கு விடை அண்ணாவின் இந்த தீர்மானத்தில் இருக்கிறது.

  9. பசும்பொன் முதுராமளிங்கத்தேவரைப் பற்றி இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளில் எழுதியுள்ளேன். போகப் போகத் தெரியும் பாகம் 7 மற்றும் 20 படித்துப் பார்த்து இன்புறுக.
    அன்புடன்
    சுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *