மஹா யோகம்

மஹா யோகம் என்ற தலைப்பில் நான் முதலில் ஆங்கிலத்தில் எழுத முற்பட்டபோது எனக்குத் தோன்றியது இந்தச் சுருக்கத் தொடர்தான்:

ramana maharishiMind annihilation
A direct path
Home in
Always am

Yonder nothing
Only the Self
Grasp that IS
Abide as IS

ஞாபகம் கொள்வதற்கு இது வசதியாக இருக்கும் என்பதால் அதை இங்கேயும் கொடுத்துள்ளேன். இந்த முறை என்ன என்று தெரிந்து கொள்வதற்கு நாம் இதைக் கூறிய பகவான் ரமணரின் படைப்புகளைச் சற்று ஆராய்வோம்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி இயற்றியவைகள் அனைத்தும் சேர்த்துப் பார்த்தால் சுமார் 250 பக்கங்களுக்குள் அடங்கிவிடலாம். ஆனால் அவைகளின் பயனோ எல்லை இல்லாதவையாகும். தன்னை நாடி கேள்வி கேட்போருக்கு விளக்கம் கொடுப்பது அன்றி வேறு எந்த மாதிரி பிரசாரத்திலோ, வாக்குவாதங்களிலோ ஈடுபடாது, எப்போதும் தனது இயல்பு நிலையிலேயே இருந்து, தான் சொல்ல வந்ததை வாழ்ந்து காட்டிய அம்மாமுனிவருக்கு எழுத என்ன, பேசக்கூட ஓர் அவசியமும் இருந்திருக்காது அல்லவா? “கோஹம்” என்ற வேத-உபநிஷத் சாரம் மிகுந்த “நான் யார்?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ளும் ஞான விசார வழியைக் காட்டும் அவரது முதல் நூன்மாலை சிவப் பிரகாசம் பிள்ளை என்ற அவரது அடியவர் ஒருவரின் கேள்விகளால் உருவாகிய தொகுப்பே. ரமணர் திருவண்ணாமலையில் இருந்த தொடக்க நாள்களில், வீடு வீடாகச் சென்று இரந்து உண்பதுதான் பழக்கம். அது சமயம் வீதியில் பாடிக் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்குமே என்பதனால் அவருடன் இருந்த அடியார்கள் அவரை பாடல் ஒன்று தொடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள். அவரோ தமிழிலும், வடமொழியிலும் பல பாடல்கள் இருக்கும்போது புதிதாக ஒரு பாடலுக்குத் தேவை இல்லை என்று முதலில் மறுதலித்தார். ஆனாலும் அச்சமயம் அவரது வாயிலிருந்து ஏதோ வார்த்தைகள் முணுமுணுப்பாக வருவதைக் கேட்ட அவரது அடியார், ஒரு முறை கிரிவலம் செல்லும்போது, மற்றவர்களிடம் பேப்பரும் பென்சிலும் எடுத்துக்கொண்டு போகச் சொல்லி, ரமணர் போகும்போது சொல்லிக்கொண்டே போவதை எழுதிக்கொண்டு வரச் சொன்னார். அப்படி எழுதப்பட்டு நமக்குக் கிடைத்ததுதான் “அருணாசல அக்ஷர மண மாலை” என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பு. அதில் அவர் அருணாசலனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்து 108 இருவரிப் பாக்களில் தனது உள்ளக் கிடக்கையை பக்தி ரசம் ததும்பத் தெளித்துள்ளார். அந்தக் காலக் கட்டத்தில், தன்னிச்சை ஏதுமின்றி அதே போன்று தோன்றிய மற்றும் நான்கு பாமாலைகளையும் இத்துடன் சேர்த்து தொகுக்கப்பட்டதுதான் “அருணாசல ஸ்துதி பஞ்சகம்” என்ற அவரது முதல் கவிதை நூல். ரமணரது படைப்புகளிலேயே பக்தி ரசம் கொண்ட நூல் இது ஒன்றே ஆகும். மற்ற அனைத்திலும் ஞான வழியைக் காட்டும் முறைகள் பற்றிய தத்துவார்த்த விளக்கங்களே இருக்கும்.

அவரது மற்ற படைப்புகளிலே உபதேச உந்தியார் எனும் உபதேச நூல் முதலாக வந்தது. அது உருவான கதையைக் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். அவரது முதன்மை அடியார்களில் ஒருவரான முருகனார்தான் அதற்குக் காரணகர்த்தா ஆனார். முருகனார் ஒரு தமிழ் பண்டிதர். அவர் ரமணரை முதன் முதலில் பார்க்க வரும்போதே ஒரு செய்யுள் இயற்றிக் கொண்டு வந்தபோதும், ரமணரைக் கண்ட மாத்திரத்தில் சப்த நாடியும் ஒடுங்கி அவரது ஒளி பொருந்திய கண்களையும் முகத்தையும் பார்த்துப் பிரமித்துப்போய் செய்வதறியாது நின்று விட்டார். ரமணருக்கு நிலவரம் தெரிந்து சற்றே கிண்டலாக, “ஏதோ கொடுக்க வேண்டும் என்றாலும் மறைத்து வைத்திருப்பது போல இருக்கிறதே,” என்று கேட்டபின், சுய நினைவிற்கு வந்தவராய் முருகனார் தான் எழுதியதை நீட்டுகிறார். அதைப் படித்துவிட்டு ரமணரும் “வாசகம் போல் எழுதுவீரோ?” என்று பின்வருவதை முன்னுரைப்பதுபோல் கேட்கிறார். ஞானிகளின் கூற்று நிகழப்போவதை அறிவிப்பதுபோல், வெகு காலம் பின்பு முருகனாரும் சிவ புராணம் போன்ற ரமண புராணம் உள்ளடக்கிய மாணிக்கவாசகர் இயற்றிய ‘திருவாசக’ த்திற்கு நிகரான ‘ரமண சந்நிதி முறை’ யையும் இயற்றுவார். அந்தச் சந்நிதி முறைப் பாடல்களில் ஒன்றுதான் நாம் சொன்ன உபதேச உந்தியார் படைப்பும் ஆகும். அதில்தான் நாம் காணவிருக்கும் “மஹா யோகம்” பற்றியும் உள்ளது.

திருவாசகத்தில் உள்ளது போலவே ‘உந்தீபற’ என்ற இறுதிச்சொல் தொடரைக் கொண்ட 100 திருஉந்தியார் பாடல்கள் எழுத வேண்டும் என்பது முருகனாரின் எண்ணம். அந்தச் சொற்றொடரை வெறும் ஈற்றுச் சொல் என்றும் கொள்ளலாம், அல்லது ‘முயன்று உந்தினால் உயரலாம்’ என்று சாதகருக்குச் சொல்வதுபோலவும் கொள்ளலாம். பாடல்கள் இயற்றும் முயற்சியில், தனது குருவான ரமணரின் லீலைகளையும், தத்துவங்களையும் கூறும் முகமாக முருகனாரே 70 பாடல்கள் இயற்றிவிட்டார். அந்தப் பகுதியின் இறுதியில் தாருக வனத்தில் உள்ள கர்மகாண்டிகளான ரிஷிகளுக்குப் போதனை தரும் பொருட்டு சிவபெருமான் ஒரு இளந் துறவியாகவும், அவருடன் மோகினி வடிவத்தில் விஷ்ணு அவரது பத்தினியாகவும் எழுந்தருளிய லீலை பற்றி எழுதத் துவங்கினார். அவ்வன ரிஷிகள் தங்கள் யாகயஞ்ஞங்களின் பலனாக எதையும் அடைந்து விடலாம் என்று சற்றே கர்வத்துடன் இருந்தனர். அதாவது எது தேவையோ அதற்கேற்ற வேள்வியைச் செய்தால் போதும், தேவை பூர்த்தியாகி விடும் என்ற அறிவு பூர்வமான நினைப்பில் இருந்தனர். அதே போல ஆத்மாநுபூதி அடைவதற்கும் தேவை இன்னும் ஒரு வேள்வியே என்றும் இருந்தனர். அவர்களுக்கு யஞ்ஞமும் கர்மத்தைச் சேர்ந்ததே; கர்மம் எதுவும் பலன் அளிக்க வேண்டுமானால் கர்ம-பல-தாதா ஆகிய இறைவன் அருள் தேவை என்பதை அடியோடு மறந்திருந்தனர். அவர்களுக்குக் கர்மத்தின் பலன் கர்த்தனது ஆணையால் அன்றி வேறு எதனாலும் அல்ல என்பதை உணர்த்தவே கருணை மிகுந்த அவ்விரு கடவுளர்கள் அங்கு எழுந்தருளினார்கள்.

kanchi-kailasantha-temple-1அவ்விரு முதற் கடவுளர்களும் அங்கு தோன்றியதும், இளந் துறவியின் தவப் பயனாய் அவர் அளித்த தோற்றத்தையும், அவருடன் இணைந்து வந்த மோகினியின் வனப்பையும் கண்டு ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் மிகவும் அதிசயித்தனர். அவர்களிடம் இருந்துதான் எல்லாம் வருகிறது என்ற அவர்களின் மேன்மையின் ரகசியம் அறியாது, ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் அவர்களை ரசித்துக் கொண்டிருந்தனர். மோகினியின் அழகில் மயங்கிய ரிஷிகளோ அவள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்க, துறவியின் தோற்றத்தில் மயங்கிய ரிஷிபத்தினிகளோ அவருக்கு ஏவல் பணிவிடை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். தாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்டு கொள்ளாது, தம் பத்தினிகள் துறவியின் பின் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த ரிஷிகள் பொறாமை கொண்டு அவர்களைத் தம் வழிக்குக் கொண்டுவர “அபிசார” யாக-யக்ஞ ஏற்பாடுகளைச் செய்யலாயினர். அவர்களுக்குத்தான் எந்த கர்ம-அனுஷ்டானுங்களைச் செய்தால் என்ன பலன் வரும் என்பது தெரியுமே. யாக குண்டத்திலிருந்து அவர்கள் வரவழைத்த பொருள்கள் அனைத்தையும் துறவி ஏற்றுக்கொண்டார். எப்படி என்று கேட்கிறீர்களா? அவர்கள் ஏவிய யானையையும், புலியையும் தோலுரித்து ஆடையாக்கிக் கொண்டார். பாம்பை கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டார். அவர் மேல் ஏவி விடப்பட்ட சூலத்தைத் தன் திரிசூலமாக்கிக் கொண்டார். அன்று அவருக்குக் கிடைத்ததைத்தான் நாம் இன்றும் அவர்மேல் காண்கிறோம். அப்படி எதிர்மறையாக நடந்துகொண்டிருந்ததைப் பார்த்த ரிஷிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. தாங்கள் செய்த வேள்வியாகிய கர்மாக்களின் பலன் என்ன ஆயிற்று என்று திகைத்தனர். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்துகொண்டனர். அதாவது, வந்திருக்கும் துறவி சாமானியர் அல்லர்; தங்களை விடவும் சக்தி mohini-kaanchi-devarajaswamiவாய்ந்தவர். அதை உணர்ந்ததும், அவர்கள் துறவியிடம் சரணடைந்து அவரிடம் எந்த கர்மா செய்ததால் அவருக்கு அப்பேர்ப்பட்ட சக்தி கிடைத்தது என்று கேட்டனர். இந்த இடத்தில் சிவபெருமான் அவர்களிடம் கருணை கொண்டு அவர்களுக்குக் கர்மத்தின் நியதியைப் பற்றி எடுத்துரைக்கலாயினார். கர்மத்திற்குப் பலன் அளிக்கும் பரம்பொருளை விடுத்து ஒருவர் செய்யும் கர்மமே எல்லாப் பலனையும் அளிக்கும் என்ற அவர்களது தவறான எண்ணத்தைப் பற்றி அவர்களுக்கு விளக்க முற்பட்டார். இதுவரை நாம் கண்ட நிகழ்ச்சியையும் சேர்த்து 70 பாடல்களில் எழுதிவிட்ட முருகனார் சிவ பெருமானது அறிவுரைகளை வாழும் பெருமானான ரமணரே வரும் 30 பாடல்களில் எழுதுவது பொருத்தம் என்று நினைத்தார். அப்படி வந்ததுதான் 30 செய்யுட்களைக் கொண்ட உபதேச உந்தியார் என்று முதலில் தமிழில் வந்த ரமணரின் அடுத்த படைப்பு.

சிவனும் விஷ்ணுவும் வந்ததன் நோக்கமே கர்மத்தைப்பற்றி கர்மகாண்டிகளிடம் விளக்கம் அளிக்கவே என்பதால், ரமணரும் கர்ம யோகத்தைப் பற்றி ஆரம்பித்து மற்ற சம்பிரதாய யோகங்களும் எப்படி கர்ம யோகத்தின் வெவ்வேறு வடிவங்களே என்பதைக் கூறுகிறார். இந்த விவரங்களை முதல் 15 பாக்களில் அலசிவிட்டு, அதற்கு அடுத்து வரும் 15 பாக்களில் “நான் யார்” எனக் கேட்டு தன்னை விசாரித்துத் தன்னை அறியும் “மஹா யோக”த்தைப் பற்றி விவரிப்பார். பதினைந்தாம் செய்யுளிலிருந்து பின்வரும் பதினாறு பாடல்களை, இரண்டிரண்டாக எட்டு ஜோடிகளாகப் படித்து அதில் உள்ள விளக்கங்களைச் சுருக்கிக் காணும்போது தோன்றியதுதான் கட்டுரையின் முதலில் ஆங்கிலத்தில் குறிப்பிட்ட அந்தச் சுருக்கத் தொடர். இப்போது அதன் சற்றே விரிவான விளக்கத்தைக் காண்போம்.

maha_yogaMind annihilation: 15-ம் செய்யுளில் ரமணர் “மஹா யோகி” என்ற பதத்தை அறிமுகப் படுத்திவிட்டு, எவர் ஒருவர் மனத்தை ஒழித்துவிட்டு (மனோ நிக்ரஹம்) தாம் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் அறவே இல்லாது (ஆசை என்று ஏதும் இல்லாததால்) தன்னிலே தான் இன்புற்று இருப்பாரோ அவரே மஹா யோகி என்று விளக்குவார். இதற்கு முன்பாக வெவ்வேறு யோகங்களைப் பற்றிச் சொல்லும்போது மனமானது பூஜை, ஜபம், தியானம், பிராணாயாமம் போன்ற முயற்சியின் பயனாய் கட்டுப் படலாம். ஆனால் ஒருவன் தன் உண்மை நிலை உணர மனதை உள்முகப் படுத்தும்போதுதான் மனோ நிக்ரஹம் அடையலாம் என்று சொல்லியிருப்பார். அது ஒரு திருடன், போலீஸ் போல் தன்னையே பிடிப்பதுபோல என்பதால், அதற்கு அறிவு சார்ந்த ஒரு முதிர்ந்த முயற்சி வேண்டும். அத்தகைய முயற்சி கைகூடுவதற்கு முதல் படியாக, மனம் ஐம்புலன்கள் மூலம் வெளிப்பட்டு வெளி விஷயங்கள் மற்றும் உலக நடப்புகளில் செல்வதை நிறுத்த வேண்டும். அப்படிச் செல்லாது, மனமானது ஒன்றைக் குறிப்பிட்டு நோக்குவதற்கும், விஷயங்களைக் கிரகிப்பதற்கும் வேண்டிய சக்தி எங்கிருந்து வருகிறது என்று அந்த மூலத்தையே உணர முயற்சி செய்ய வேண்டும். வேறு வழிகள் எல்லாம் மனம் எனும் கருவியைக் கொண்டே செய்யப்படுவதால் அதனதன் தன்மைக்கேற்ப விளைவுகளைக் கொடுக்கும். மூலத்தைத் தேடும் முயற்சியில் தன்னுள்ளே நோக்குபவனுக்கு மனம் அழிவதால் ‘தானே ஒரு அரிய விஷயம்’ என்ற ஒரு பெரும் உண்மை புலப்படும். அதுவே உண்மையான பேரறிவு.

A direct path: தூக்கம், சோம்பேறித்தனம் போன்ற தாமச நிலைகளைக் கடந்த ஒரு திருடன் முழு மனதுடன் உண்மையாகவே திருடனைத் தேட முனைந்தால் ‘திருடன்’ என வேறெவரும் இல்லை; தான்தான் அவன் என்று உணர்வான் அல்லவா? அதே போன்று மனத்தை உள் முகமாகத் திருப்பினால் மனமென்று ஒரு பொருள் தனியாக இல்லை என்பதை சாதகன் உணர்வான். சாதகன் தானே தானாக எப்போதும் இருப்பவன் என்பதை நேரடியாக உணர்வதால் இதுவே நேரான வழியாகும். அதை மறைத்து ‘நான்- எனது- நாம்- நமது- நீர்- உமது’ போன்ற உலகியல் சார்ந்த எண்ணங்களைத் தோற்றுவிப்பது எது? நமது முந்தைய எண்ணங்கள், செயல்கள் இவற்றால் உருவாகிய பல நினைவுக் கோவைகளே மனதாகத் தோன்றுகிறது. அவை எதுவாகினும் அதற்கு மூலமாக முதலில் தோன்றுவது “தான்” என்கிற உணர்வை விட்ட “நான்” என்கிற எண்ணமே. ஆழ் நிலைத் தூக்கத்தில் இல்லாத அந்த “நான்”, உறக்கத்தில் இருந்து ஒருவன் எழுந்ததும் முதன் முதலில் உதிக்கும் எண்ணம். இது ஒவ்வொருவரின் இயல்பான அனுபவம் தான். ஒன்று என்பதை அடிப்படையாகக் கொண்டே மற்ற எண்கள் வருவதுபோல், நான் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேதான் மற்ற எண்ணங்கள் எல்லாம் வரும். இந்த ‘நான்-எண்ணம்’ உதிக்கும்போது தான் நமது உடல் பற்றிய எண்ணமும் உண்டாகும்; மனம் என்ற ஸ்தூல உணர்வும் பெருகும். இவை எதுவும் ஆழ்நிலைத் தூக்கத்தில் இல்லை என்பதும் எவரது அனுபவமே. உடல்-மனம் இரண்டும் தோன்றியதும் நாம் உள்ள இயல்பு நிலையிலிருந்து நழுவி உடல்-மனம் சம்பந்தப் பட்ட உணர்வுகளில் உழன்று உலகைப் பார்க்கவும், வேறு எண்ணங்களை வளர்க்கவும் ஆரம்பித்து விடுகிறோம். அவை அனைத்தும், தானாக உள்ள இயல்பை விட்டு நழுவி முளைத்த நமது நினைவுக் கோவைகளை மேலும் வளர்க்க ஆரம்பித்து விடுகின்றன.

Home in: எவருமே தன்னிடத்தில் இருப்பதை வைத்துக் கொண்டுதானே எந்த முயற்சியையும் ஆரம்பிக்க முடியும்? தன்னிடம் இப்போது இருப்பது என்ன? இந்த நினைவுக் கோவைகளான மனம் ஒன்றுதான். மனமானது உண்மையை விசாரிக்கத் தொடங்கினால், திருடன் யார் எனத் தேடத் துவங்கினால் தான்தான் அது என்று எப்படித் தெளிகிறானோ, அது போல் மனம் என்ற ஒன்றே இல்லை எனத் தெளிகிறது. திருடன் தானேதான் அவன் என்று தெரிந்ததை விட்டுவிட்டு வேறு யாரோ திருடன் என்று வெளியே தேடினால் எப்படிக் கிடைப்பான்? இருக்கும் இடத்தில்தான் தேட வேண்டும். இதுதான் அறிவு சார்ந்த ஞான வழி. ஏனென்றால் இவ்வழியில் தனது மதியையே கருவியாகக் கொண்டு மதியின் மூலத்தை ஆராய்ந்து அதன் இறுதியில் கதியை அடைய இயலும். அடைவது என்றால் ஏதோ புதிதாக அல்ல; எப்போதும் இப்போதும் அப்படித்தான் உள்ளோம் என்று வெறும் அறிவுபூர்வமாக மட்டும் அல்லாது அனுபவ வாயிலாக உணர்வது. உள்ளத்தில் உணர்வது என்னும் இதன் முடிவோ அதை உணருவதோ எல்லாம் தன்னிலேயே நடப்பதாலும், ‘இது நான்’, ‘அது நான்’ என்று வெளியில் இருப்பது எதையும் சுட்டிக் காட்டாததாலும், நடப்பது எல்லாமே உள்ளார்ந்த ஒரு முயற்சியே. முயற்சியின் ஆரம்பத்தில் உடல்-மனம் என்ற கருவிகளும், தேடுகின்ற நான் என்ற எண்ணமும் இருக்கும். இறுதியிலோ, உள்ளது என்ற உணர்வும், அது இன்று அன்று அல்ல என்றும் உள்ளதே என்னும் உண்மையும் புலப்படும். அது ஒன்றே நிரந்தரமானது; அதற்கும் மேல் கிளம்புவதுதான் நான் என்ற எண்ணம்; மற்றும் நமது உலகியல் உணர்வுகள், தோற்றங்கள் எல்லாம் என்று அறிவினில் இலங்கும்.

Always am: ஆழ்ந்த தூக்கத்தில் என்னை நான் அறியாதிருந்தபோதும், நான் இல்லாது போகவில்லை. ஏனென்றால் நான் கனவு கண்டேனா, ஆழ்ந்து தூங்கினேனா, விட்டு விட்டுத் தூங்கினேனா என்றிவ்வாறான பல அனுபவங்களும் எனக்கு அப்போது உண்டு. ஆனாலும் அதையெல்லாம் என்னால் அப்போது சொல்ல இயலாது; விழித்த நிலையில்தான் சொல்ல முடியும். இருந்தாலும் தூக்கத்தில் அனுபவங்கள் இருப்பதால் நான் அப்போதும் இருக்கிறேன் என்றுதான் முடிவாகிறது. ஆகையால் எந்த “நான்” அப்போது தன்னை உணராவிடினும் அப்படி அனுபவிக்கிறதோ அந்த “நான்” எப்போதும் இருக்க வேண்டும்; எனது எந்த நிலையிலும் இருக்க வேண்டும். இல்லையென்றால், “நான்” ஆகிய எனக்கு ஒரு தொடர்ச்சி இல்லாது போய்விடும். அதாவது, “நான்” எப்போதும் உள்ள நான் தான். உடல், புலன் உணர்வுகள், மனம், சுவாசம், தூக்கத்தில் இவை எதையும் அறியாமை ஆகிய இவை எல்லாமே காணப்படும்/ உணரப்படும் பொருள்களே அன்றி “நான்” என்னும் சாரம் அல்ல. அவை எல்லாம் “நான்” எனும் ‘சாஸ்வதமாய் என்றும் உள்ள’ நிலைக்குப் பின் அதனை அடிப்படையாய் கொண்டு அதன் மேல் எழும்பும் நிலைகள்தான்.
.
Yonder nothing: தன்னை உணர்வதற்கு, தான் வேண்டும். அப்படி ஒருவன் தன்னை உணரும்போது அதற்குமேல் அங்கு என்ன தேவையாய் இருக்கிறது? இந்த ஞான வழியே செல்பவனுக்கு பயிற்சி, அனுபவம் எல்லாமே உண்முகமாய் இருப்பதால் வேறு எதுவும் தேவை என்று இருக்காது. அப்படி தேவை என்று இருந்தால், அது பகிர்முகமாகி வெளியில் உள்ள பொருள் தேவை என்று வரும். அப்போது அவன் வெளியில் உள்ளது தன்னை உணர முடியாது என்றும், தான்தான் தன்னை உணர வேண்டும் என்றும் மனத்தை உண்முகப்படுத்த வேண்டும். அதுவரை அவன் சாதகன் தான். அந்த நிலையைக் கடக்கும் வரை, எப்படி ஒரு குழந்தைக்குத் தாய் தேவையோ அதுபோல் அவனுக்கு ஏதோ ஒரு உருவில் ஒரு வழிகாட்டியும் முதலில் தேவைப்படும். ஆக இங்கு ஒருவன், தான் எப்போதும் உள்ள நிலையை உணர்கிறான்; தன்னை விட்டு வேறு என்று சொல்ல ஒருவரோ ஒரு பொருளோ கிடையாது என்றும் உணர்கிறான். தன்னில் அவ்வாறு உணர்ந்த அவன், தான் காணும் சகல ஜீவராசிகளின் உண்மை நிலையும் அதுதான் என்றும் உணர்கிறான். அதாவது தான் தன்னிலே உணர்வுமயமாய் இருப்பது, அல்லால் வேறு என்று எதுவும் இருந்தால் அது அந்த உணர்வின் மேல் வருவதுதான். ஆதலால் அந்த உணர்வாய் இருப்பது அல்லது அந்த உணர்வு இல்லாது இருப்பது என்பதே எங்கும் உள்ள பிரம்மத்திற்கும், அதன் தன்மை உணர முடியாதவர்க்கும் உள்ள பேதம். இதுவன்றி வேறு எதிலும் அவர்களுக்கு வேற்றுமை எதுவும் கிடையாது; இருவரும் ஒரே பொருளாவர்.

Only the Self: இப்படியாக அவர்கள் இருவருக்கும் பேதம் வேறெதிலும் இல்லாததால், தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை விலக்குவதே முக்திக்கு வழி ஆகிறது. உள்ளதோ உள்ளபடி சுயம் பிரகாசமாய் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரும் தன் பாதையில் செல்லும்போது வளர்த்துக் கொண்ட ‘வாசனை‘களாகிய பழக்கங்களே இப்படி ஒரு திரையாக வளர்கிறது. அதை விலக்குவதற்கு ‘தான்’ ஆகிய அந்த அறிவுமயமான தன் இயல்பு நிலையை உணர்ந்து, அதிலேயே எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும். இதற்கு மேலோ, புதிதாக ஒன்றோ எதுவும் அடைய வேண்டியது இல்லை. இப்படியாக தான் இருக்கிறோம் என்ற அறிவும், தானாய் இருப்பதும் இரண்டும் ஒன்றே ஆகும். அப்படி இருந்தால் ‘நான்-நீ’ என்றோ, ‘உணர்பவன்-உணரப்படுவது’ என்ற இருநிலை பேதமோ கிடையாது. ஆகையால், ‘உள்ளது’ என்ற தன் இயல்பு நிலையில் இருப்பதே அனைத்திலும் முக்கியம்.

Grasp that IS: ‘அறிந்திருக்கிறோம்- அறிந்திருக்கவில்லை’ என்ற இருநிலைப்பாடும் இல்லாத அந்தச் சுத்த சுயம் பிரகாச அறிவே தானாய் இயல்பு நிலையிலே இருக்கும் தன்மை. அங்கு புதிதாய் அறிந்து கொள்ள என்று எதுவும் இல்லை. அது அறியும் தன்னையே அறியும் அறிவு. ஆக அறிய வேண்டியதில் மிக முக்கியமானதான தன்னை அறிதலானது தானாய் இருத்தலே. அப்படி இருக்கிறோம் என்ற நினைப்பும் இல்லாது தானாய் இருப்பதே தனது உண்மை நிலை என்பதை உணர்வதே அந்த முக்தி நிலை. அவ்வப்போது வரும் நான் என்ற உணர்வு இல்லாது சத்-சித்-ஆனந்தமாய் இருப்பதுதான் அந்நிலை.

Abide as IS: பந்தப்பட்டு விட்டோம், அதிலிருந்து விடுபடுகிறோம் என்றிவ்வாறான எந்த நினைவுகளும் இல்லாது அந்த சத்சிதானந்த நிலையில் நிற்பதே ஒவ்வொருவர் பிறந்ததன் லட்சியம். இங்கு சாதகம் அல்லது தவத்தின் பயன் என்பது இல்லாத ஒன்றை புதிதாக அடைவது இல்லை. மாறாக, தன் இயல்பு நிலையை மறைத்துக் கொண்டு – சத்வம்-ரஜஸ்-தமஸ் என்ற வெவ்வேறு குணங்களால் உருவாகி மனதளவில் நான் எனும் அகந்தையாய் – இருக்கும் திரையை விலக்கி தானே தானாய் இருத்தலே ஆகும்.

உபதேச உந்தியாரில் மஹா யோகத்தைப் பற்றி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி இப்படியாகச் சொல்கிறார்.

மற்ற யோக வழிகளைப் பற்றிச் சொல்லிவிட்டே ரமணர் மஹா யோகத்தைப் பற்றி சொல்வதால், இந்த முடிவை அடைய வேறு வழிகள் உண்டு என்று கொள்ளலாம். ஆதலால், யாருக்கு எவ்வழி சரி என்று தோன்றுகிறதோ அதை அவர்கள் கடைப்பிடிக்கலாம். ஆனால் அதோடு முயற்சியை நிறுத்தக்கூடாது. மற்ற வழிகள்  எல்லாவற்றைப் பற்றியும் சொல்வதற்கு 15 செய்யுள்களை எடுத்துக்கொண்ட ரமணர், மஹா யோகத்தை விளக்குவதற்கு மட்டுமே 15 செய்யுள்கள் எடுத்துக் கொண்டார் என்றால் இதன் மகிமையை நாம் உணரலாம். முதலில் இதை தமிழில் எழுதிய அவர், பின்பு வேறு மொழிகளிலும் எழுதினார். சமஸ்கிருதத்தில் அவர் எழுதியதை உபதேச சாரம் என்று அழைக்கின்றனர். அன்றிலிருந்து இன்றும் ரமணாஸ்ரமத்தில் வேதம் ஓதும் சமயம் உபதேச சாரமும் ஓதப் படுகிறது. அதிலிருந்தே இதன் மகிமையைப் புரிந்துகொள்ளலாம்.

ஓம் தத் சத்!

4 Replies to “மஹா யோகம்”

  1. அன்புள்ள ஐயா,

    மஹா யோகம் ஏன் இப்படி அழைக்க படுகிறது? பகவான் ரமணர்
    ஆத்மா வில் நான் யார் என்று கேட்டு விசாரித்து எல்லா வற்றையும்
    ஒதுக்கி ஆத்மா வில் மனது ஒடுங்குவதையே மகா யோகம் என்றார்.
    இது பக்தி, கர்மா, யோகம், ஞானம் என்ற எல்லா யோகத்திலும் வேறு
    பட்டது அல்ல. இது எல்லா விதமான தொட்டு விட்டு மேலே செல்லுவது.

    நமஸ்காரம்,

    சுப்ரமணியன். இரா

  2. திரு. சுப்பிரமணியன்:

    தாங்களே மகா யோகத்தை விளக்கிவிட்டீர்கள். நான் அறிந்தவரை சொல்லுகிறேன். யோகம் என்பது ஒன்றுதல் ஆகும். ஒருவன் தன் பிறப்பிடத்தை நோக்கிச் செல்லும் முறை பலதரப்படும். இதைப் பற்றி தெரிந்துகொண்டு, இதில் நாட்டம் கொண்டோருக்கு அவரவர் கர்ம வினைப்படி அவரவருக்கு ஏற்ற வழி என்று ஒன்று புலப்படும், அமையும். அந்த வழியில் செல்லும் போது தனது பயணத்தையும், உள்ளுணர்வுகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்க கவனிக்க அதுவே அவன் செல்லும் வழி எதுவானாலும், அவனை மகா யோகத்திற்க்குக் கொண்டு செல்லும். ஆக ஒருவனால் முடியுமாயின், முதலிலேயே அவன் தன்னையே தான் யார் என புத்தி பூர்வமாக அறிவு வாயிலாகக் கேட்டு தன் உள்ளுணர்வு மூலமாக (அறிவு வாயிலாக அல்ல) தன்னை உணர்வதே, அனைத்திலும் உத்தமமான வழி எனக் கூறப்பட்டுள்ளது. அதுவே மகா யோகம் ஆகும். கேள்வி கேட்கும் வரைதான் நமது முயற்சிக்கு அறிவு கை கொடுக்கும், அதற்கு மேல் அல்ல. அங்கு இறைவனான ஒருவன் அருள் இன்றி ஏதும் நடக்க இயலாது. ஒன்றும் நடக்கவில்லையே என்று ஒருவன் உணரும் போது, அவனது “நான்” என்னும் எண்ணம் ஓங்கியுள்ளது என்று அறியலாம். “தான்” என்னும் தன்மையில் ஒருவன் அடங்கும் வரை அப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தோர் கூறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *