கோபிகா கீதம்

krishna-leela1மனம் அவனேயாகி
அவனைப் பற்றியே பேசி
அவன் செயல்களை நடித்து
அவனில் ஒன்றி
அவனது குணங்களையே பாடி
தங்கள் வீடுகளை மறந்திருந்தார்கள்

krishna-leela5கண்ணனே உணர்வானவர்கள்
மீண்டும்
காளிந்தி நதியின் கரை வந்து
கண்ணன் வரவுக்கு ஏங்கி
ஒரே குரலில் புலம்பிப்
பாடலானார்கள்-

 

krishna-leela18

 

நீ பிறந்த ஆயர்பூமி
மேன்மேலும் ஜொலிக்கிறது
திருமகள் இங்கேயே நிலையாகத் தங்கிவிட்டாள்
உன்னிலேயே உயிர்தரித்தோம்
திக்குத் திக்காக உன்னைத்
தேடி அலைகிறோம்
அருள்கூர்ந்து பாரேன்

krishna-leela23சரத்காலத் தடாகத்தில்
விரிந்து மலரும்
தாமரைப் பொகுட்டின் அழகைக்
கொள்ளையடிக்கும் கண்களால்
எப்போதும் தான் எங்களைக் கொல்கிறாய்
காதல் மன்னனே
கூலி கேட்காத உன் அடிமைப் பெண்களை
வரதா, இங்கும் வதைக்கலாமா


krishna-leela3

நச்சுப் பொய்கையில்
நாக அரக்கனின் பிடியில்
புயல் மழையில்
மின்னலில் நெருப்பில்
கன்றாய் வந்த மயன்மகன் தாக்குதலில்
எல்லா இடர்களிலும்
காளையே
மீண்டும் மீண்டும்
நீயல்லவா எங்களைக் காப்பாற்றினாய்

krishna-leela17ஆய்ச்சியின் மகன் அல்ல நீங்கள்***
உடல்தரித்தவை அனைத்திலும் சாட்சியாக நிற்கும்
அந்தராத்மா
உலகைக் காக்கவேண்டுமென்று
படைத்த பிரம்மன் வேண்டி
தோழனே நீர்
தோன்றியிருக்கிறீர் யாதவ குலத்தில்

krishna-leela15பிறவிச் சுழலில் அஞ்சிப்
பாதம் பற்றினோர்க்கு
அபயம் தரும் அந்தக் கைகள்
விருஷ்ணிகளின் தலைமகனே
விரும்பினோர் விரும்பியதைத் தரும்
தாமரைக் கைகளை எங்கள்
தலைமீது வையேன்
திருவின் கரம் பற்றிய திருக் கைகள்

krishna-leela14ஆயர் மக்களின் துயர் அகற்றும்
வீரனே
உனது மக்களின் தற்பெருமையையும் நொறுக்கிவிடும்
உன் புன்முறுவல்
பணியாள்களாக வந்திருக்கிறோம்
தோழனே
அந்த அழகு மலர் முகத்தைக்
கொஞ்சம் காட்டேன்

krishna-leela6பணியும் உயிர்களின் பாவம் துடைக்கும்
பசுக்களின் பின் ஓடும்
அழகின் இருப்பிடமாகும்
பாம்புத் தலைமீது ஆடும்
பாதத் தாமரைகளை எம்
மார்பகத்தில் வை
இதயத்தின் ஏக்கங்களை
வருடிக் கொடு

krishna-leela10அந்த இனிய பேச்சிலும்
அறிந்தவர் மனம் கொள்ளும்
இன்பம் தரும் சொற்களிலும்
மயங்கிக் கிடக்கிறோம்
தாமரைக் கண்ணா உனக்காக
இந்தப் பெண்கள் எதுவும் செய்வோம்
வீரனே
உன் இதழ் அமுதத்தால்
உயிர்கொடு

krishna chaithanyaஉன் கதை அமுதம்
தவிப்பவர்க்கு உயிர் தருகிறது
கவிகளின் களிப்பாகிறது
களங்கமனைத்தையும் துடைக்கிறது
அழகும் நலமும் கொண்டு
கேட்கும் தோறும் இன்பமூட்டுகிறது
புவியின் நிறைமனிதர்கள்
அதையே பாடுகின்றனர்


krishna-leela12நிறைந்த சிரிப்பும்
அன்பே
உன் காதல் பார்வையும்
விளையாட்டுக்களும்
தியானிக்கும் தோறும் இன்பம்
கள்வா
நெஞ்சின் ஆழத்தில் சென்று தீண்டிய
உன் ரகசியப் பேச்சுக்கள்
மனதில் கொந்தளிக்கின்றன

krishna-leela16ஆயர்பாடியில் கிளம்பி
மாடுமேய்க்கப் போகையில்
நாதா உன்
நளினமலர்ப் பாதங்களில்
அன்பே
கல்லும் புல்லும் செடிகளும் குத்துமே என்று
எங்கள் மனம்
கலங்குகிறது

krishna-leela9அந்தி சாயும் போதில்
பசுக்களின் குளம்பெழுப்பும் புழுதி படர
சுருண்ட கருங்குழல் அசையும்
காட்டுப்பூப் போன்ற உன் முகம்
வீரனே
மீண்டும் மீண்டும் மனதில்
காதலைத் தூண்டிவிடுகிறது


krishna-leela24பணிவோர்க்கு வரம் தரும்
புவிக்கு அணியாகும்
துயரத்திலும் தியானிக்கத் தகும்
மலரவன் அர்ச்சிக்கும்
புனித கமலப் பாதங்களை
எங்கள் ஸ்தனங்களின் மேல் வைப்பாய்
உள்ளத் துயர் தீர்ப்பாய்

krishna-leela8

இன்பம் ஊற்றெடுக்கும்
சோகம் அழிக்கும்
ஸ்வரமெழுப்பும் புல்லாங்குழல்
அதை அழுத்தி முத்தமிடும்
மானிடத்தின் மற்ற பற்றுக்களையெல்லாம்
மறக்கடிக்கும்
உன் இதழ் அமுதம்
வீரனே
எங்களுக்குத் தா

krishna-leela11பகற்பொழுதில் நீ கானகத்தில் திரிகையில்
உன்னைக் காணாமல்
அரை நொடியும் யுகமாகத் தோன்றுகிறது
கருங்குழற் கற்றை அசையும் உன் திருமுக அழகைக்
காணும் கண்களுக்கு
இமைகளைப் படைத்தவன்
ஜடமாகத் தான் இருக்கவேண்டும்


krishna-leela7துணையையும் மக்களையும்
உடன்பிறந்தாரையும் சுற்றத்தையும்
முழுதாகப் புறக்கணித்து
உன் கானத்தில் மோகித்து
அதன் வழியே
அச்சுதா உன்னைத் தேடி வந்தோமே
இளம்பெண்களை இரவில் யார் இப்படி
தனியாகத் தவிக்கவிட்டுப் போவார்கள்
முரடன் நீ

krishna-leela4ரகசிய நெருக்கங்களும்
நெஞ்சில் காதலைத் தூண்டும்
சிரிக்கும் முகமும்
காதல் பார்வைகளும்
திரு வாழும் அகன்ற மார்பும் கண்டு
மீண்டும் மீண்டும்
ஏக்கம் வருகிறது
மனம் மோகத்திலாழ்கிறது

krishna-leela2ஆயர்பாடியில் வனத்தில்
துன்பம் தீர்ந்தொழிந்தது
நீ உருவெடுத்து வந்தாய்
உலகம் மங்கலமடைந்தது
உன்னவர்கள் நாங்கள்
எங்கள் மன ஏக்கம் தீர்க்கும் மருந்தைக் கொஞ்சம்
தரலாகாதா


krishna-leela13உனது அழகிய மென்மலர்ப் பாதங்கள்
நோகுமோ என்று பயந்து கொண்டே எங்கள்
கடின ஸ்தனங்களில் ஏந்துகிறோம்
கானகத்தில் கல்லிலும் முள்ளிலும் நடக்கையில்
அந்தப் பாதங்களுக்கு வலிக்குமே
என்று எண்ணும்போதே
உன் உண்ர்வோடு கலந்த எங்கள் மனம்
வேதனைப் படுகிறது

இங்ஙனம், பரமஹம்சர்களின் சம்ஹிதையாகிய ஸ்ரீமத் பாகவத மகா புராணத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில் கோபிகா கீதம் என்னும் முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

[*** மற்ற எல்லா இடங்களிலும்  “த்வம்”  “தவ”  (நீ,  உனது)  என்றும்  இந்த ஒரு பாடலில் மட்டும்  “பவான்”  (நீங்கள்)  என்றும் வருகிறது..    கிருஷ்ணனின்  மகிமை உணர்ந்து மரியாதையும்,  ஏற்கனவே உணர்ந்த நெருக்கமும்,  காதலும்  எல்லாம்  கலந்த பல உணர்வு நிலைகளின்  வெளிப்பாடு  இந்தக் கவிதை என்பது  பற்றி இயல்பாகவே  இது வந்திருக்கலாம்.  அதனை அப்படியே  மொழிபெயர்த்திருக்கிறேன்]

************

சுகமுனியின் திருவாக்கிலிருந்து அமுதத் தாரையாகப் பெருகும் ஸ்ரீமத் பாகவதம் என்ற புராண மகா காவியத்தின் மைய அம்சமாகவும் உன்னதமான பக்தியின் சாரமாகவும் இலக்கணமாகவும் கோபிகைகளின் காதல் இடம் பெறுகிறது. “ஜயதி தேதிகம்…” என்று தொடங்கி, கோபிகைகள் கண்ணனுக்காக ஏங்கும் இந்தப் பத்தொன்பது பாடல்கள் ‘கோபிகா கீதம்’ என்று அழைக்கப் படுகின்றன (சம்ஸ்கிருத மூலம் இங்கே).

மதுர சப்தங்களும் ஓசை நயமும் காதலும் பக்தியும் புலம்பலும் கலந்த கவித்துவமான இந்த கீதம் காலங்காலமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தூய இதயத்தின் ஆழத்திலிருந்து பெருகும் தூய அன்பின் வெளிப்பாடாக கோபிகைகள் கிருஷ்ணன் மீது கொண்ட பிரேம பக்தியானது இந்து பக்தி மரபில் போற்றிப் புகழப்பட்டு வந்திருக்கிறது.

ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா |

”அனைத்திற்கும் அப்பாற்பட்ட தீவிர அன்பே பக்தி”

என்று தொடங்கி பக்திக்கு இலக்கணம் வகுக்க ஆரம்பிக்கிறார் நாரத மகரிஷி. யோக மரபில் பதஞ்சலியின் சூத்திரங்களுக்கு இணையாக, பக்தி மரபில் நாரத பக்தி சூத்திரங்கள் திகழ்கின்றன. பக்தியின் பல்வேறு நிலைகளையும், தன்மைகளையும் ஆழமாகக் குறிப்புணர்த்திச் சொல்பவை, இந்த அழகிய சூத்திரங்கள்.

தல்லக்ஷணானி வாச்யந்தே நானா மதபே⁴தா³த்|

அதன் (பக்தியின்) இயல்புகளை பல்வேறு விதமாக மறையோர் கூறுகிறார்கள்.

பூஜாதி³ஷு அனுராக³ இதி பாராச’ர்ய: |

பூஜை முதலான அன்புச் செயல்கள் (பக்தியின் இயல்புகள்) என்று சொல்கிறார் பராசரரின் புதல்வர் வியாசர். (பூஜை என்ற சொல்லுக்குப் பொருள் “மலர்தல்” என்பதாகும். இறை அன்பில் மலரும் இதயமே பூஜையின் அடிப்படை. பூஜை என்பது ஒரு அன்புச் செயல். ஒரு வெளிப்பாடு, ஒரு expression. பொதுவாக எண்ணப் படுவது போல ஒரு “சடங்கு” (ritual, ceremony) அல்ல).

கதா²தி³ஷு இதி க³ர்க³: |

அன்பில் தோய்ந்து அதனையே எண்ணுவதும் பேசுவதும் (பக்தியின் இயல்பு) என்று கர்கர் கூறுகிறார்.

ஆத்மரதி அவிரோத⁴ன இதி சா’ண்டி³ல்ய: |

சுயமாக அன்பிலேயே இன்புற்று அதற்கு எதிரான மற்ற எல்லா எண்ணங்களையும் தவிர்ப்பது என்கிறார் சாண்டில்யர்.

நாரத³ஸ்து தத³ர்பித அகி²லாசாரதா, தத்³ விஸ்மரணே பரம வ்யாகுலதா இதி (ச) |

நாரதன் கூறுகிறேன் – அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் அவனுக்கே* அர்ப்பணித்து, அவன் நினைப்பொழிந்த சிறுபொழுதும் தீவிரமான பெரும் துயரமாக மாறும் நிலையே (பக்தியின் இயல்பு).

[* ”அவனுக்கே” என்று கூறியது பேசுபொருள் கருதி. மூலத்தில் உள்ள “ததர்பித” என்ற சொல்லின் பொருள் “அதற்கே அர்ப்பணித்து” என்பதாகும். அந்த ரீதியில் பார்த்தால் பொருள் இன்னும் பரந்ததாக, ஆழ்ந்ததாக விரியும்].

இது தான் உண்மையான பக்தியின் இயல்பானால், இதற்கு ஏதாவது உதாரணம் இருக்கிறதா? நாரதர் சொல்கிறார் –

அஸ்தி ஏவம் ஏவம்|

இருக்கிறார்கள், இத்தகைய இயல்பினர் இருக்கிறார்கள்.

யதா² வ்ரஜ கோ³பிகானாம் |

ஆயர்பாடியின் கோபிகைகளைப் போல.

தத்ராபி ந மாஹாத்ம்ய-ஞான-விஸ்ம்ருதி அபவாத³: |

அப்போதும் (கோபிகைகள் கண்ணனைக் காமுற்றுக் காதல் கொண்டபோதும்), அவனது பரம்பொருள் தன்மை பற்றிய அறிதல் அவர்கள் நினைவில் இல்லை என்ற பழி பொருந்தாது.

தத்³விஹீனம் ஜாராணாம் இவ|

அந்த நினைவு இல்லாதிருந்தால் (அவர்களுடைய அன்பு) கள்ளக் காதலிகளுடைய மோகம் போன்றதாகவே இருந்திருக்கும்.

நாஸ்த்யேவ தஸ்மின் தத் ஸுக²ஸுகி²த்வம் |
அத்தகைய மோகம் அன்புக்குரியவனது இன்பத்தை அல்ல, தனது இன்பத்தையே மையமாகக் கொண்டது.

–(நாரத பக்தி சூத்திரங்கள், 15-24).

 

கோபிகைகளது பக்தியின் உண்மை இயல்பை, மேன்மையை இவ்வாறு பக்தி சூத்திரங்கள் குறிப்புணர்த்திச் செல்கின்றன.

புலிக்கு காட்டிலுள்ள மற்ற எல்லா மிருகங்களையும் அடித்துச் சாப்பிடும் சக்தி உள்ளது போல, தீவிர பக்தி உணர்வு என்ற புலி காமம், குரோதம், மோகம் என்ற மற்ற எல்லா ஆசை உணர்வுகளையும் அடித்துக் கொன்று விடும்;  கோபிகைகளின் பக்தி அப்பேர்ப்பட்டது என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

raas_leela1

”மாஹாத்ம்ய-ஞானம்” என்று 23வது சூத்திரம் பேசுவது கண்ணனது மாஹாத்மியங்களை (மகிமைகளையும், பெருமைகளையும்) கோபிகைகள் அறிந்திருந்தார்கள் என்பது பற்றி மட்டும் அல்ல. கண்ணன் பரமாத்மா, எல்லா உயிர்களின் ஆத்மாவும் அவனே என்ற ஞானமும் அவர்களுக்கு இருந்தது என்றே அது கூறவருகிறது. தங்கள் துணையையும், மக்களையும் சுற்றத்தையும் எல்லாம் துறந்து கண்ணனிடம் ஓடிவந்தார்கள் என்பதன் பொருள் இவை எல்லாம் கண்ணனே என்று அவர்கள் அனுபூதியில் உணர்ந்தார்கள் என்பதே. ராச லீலையில் ஒவ்வொரு கோபிகையின் விருப்பத்திற்கேற்பவும் ஒவ்வொரு கண்ணனாக உருவெடுத்து அவளுடன் கூடி விளையாடினான்; அதே நேரத்தில் அவர்களது வீடுகளில் கணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய பணிவிடைகளையும் ஒவ்வொரு கோபிகையாகவும் உருவெடுத்து அவனே செய்தான் என்று பாகவதம் சொல்வதை இதனுடன் பொருத்திப் பார்க்கவேண்டும். தூய அன்பில் தோய்ந்த மனம், பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் பேதங்கள் அழிகின்றன. ஆழிமழைக் கண்ணன் மீதான காதல் அகிலம் முழுவதையும் அரவணைக்கும் காதலாக விசுவரூபம் கொள்கிறது.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், ஆண்டாளின் அன்புப் பிரவாகத்தில், மீராவின் இதய கானத்தில், ஜெயதேவனின் சிருங்கார காவியத்தில், சூர்தாசரின் தெய்வீக இசையில், நமது நாட்டிய வடிவங்களின் அடவுகளில் கோபிகைகளின் நெஞ்சம் நம்மிடம் பேசுகிறது. நம் உயிரையும், உணர்வையும் தீண்டுகிறது.

’பிருந்தாவனத்தில் விளையாடிய கிருஷ்ணனை விட குருக்ஷேத்திரத்தில் சங்கநாதம் செய்யும் கிருஷ்ணனே நமக்கு இன்று தேவை’ என்று முழங்கிய வீரத்துறவியின் லட்சிய ஆவேசம் அவரது சிந்தனையை ஆட்கொண்ட போதும், அவரது இதயம் கோபிகைகளின் தூய அன்பின் மகோன்னதத்தைப் புரிந்து கொண்டு வணங்கியது. அதனையே லட்சிய அன்பாக முன்வைத்தது.

vivekananda6… வேறு ஒரு நோக்கமும் இல்லாமல் அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தை குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதார புருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீ கிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது…

… அந்த அன்புதான் எத்தகையது! அவர்கள் அன்பின் தன்மையைத் தெரிந்து கொள்வது மிகக் கடினம் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். இந்த அதி அற்புதமான அன்பைத் தப்பர்த்தம் செய்யும் மூடர்கள் நம்மிடமும் இல்லாமலில்லை. இதைக் கேவலமாக நினைக்கும் இழிந்த அறிவீனர் நம் ரத்தத்தில் பிறந்தவர்களுள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். கோபிகளுடைய அன்பை வருணிக்கும் சரித்திராசிரியர் பிறவியிலேயே மிகப் புனிதமான சுகதேவர் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். மனிதன் மனதில் சுயநலம் இருக்கும்வரை, கடவுளை உண்மையாக நேசிப்பது அசாத்தியம். அத்தகையவர்களின் அன்பு வெறும் வியாபாரமே யொழிய வேறல்ல. ” பகவானே! நான் உனக்கு ஒன்று தருகிறேன், அதற்குபதிலாக நீ வேறொன்று தா “ என்று உரைக்கின்றது அவர்கள் அன்பு. ” நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்” என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ ”வழிபாடு” செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்?…

முதலில் பொன், பெயர், புகழ் முதலிய இவ்வற்ப ஆசைகளை மறந்துவிடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கோபிகளுடைய அன்பின் தன்மையை உணர முடியும். அப்புனிதமான அன்பை பூரண மனப் பரிசுத்தமடையாதவர்களால் அறிய முடியாது. காமமும், லோபமும் மற்ற ஆசைகளும் நிறைந்த அற்ப மனிதர்களுக்கு கோபிகளின் மாசற்ற அன்பில் குறைசொல்லத் தைரியமிருக்கிறதா? இவ்வன்பு தான் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் மகிமையாகும். கீதையின் உயர்ந்த தத்துவங்கள் கூடத் தன்னை முற்றிலும் மறந்த இவ்வன்புக்கு ஈடாகாது….

– சுவாமி விவேகானந்தர் (கிருஷ்ணாவதாரம் பற்றிய சுவாமிஜியின் முழு உரையையும் இங்கே படிக்கலாம்).

மாபெரும் தத்துவ ஞானியாகிய ஸ்ரீஅரவிந்தர் கூறுகிறார் –

அரவிந்தர்

The Gopis are not ordinary people in the proper sense of the word: they are embodiments of a spiritual passion, extraordinary by their extremeness of love, personal devotion, unreserved self-giving. Whoever has that, however humble his or her position in other respects (learning, power of presentation, scholarship, external sanctity, etc.) can easily follow after Krishna and reach him: that seems to me the sense of the symbol of the Gopis. There are many other significances, of course ; that is only one among the many.

புனிதத்தையும் புனிதமாக்கும் கோபிகைகளின் தூய அன்பு காலம் தோறும் மானுடத்தை இறையன்பில் தூக்கி நிறுத்துகிறது. நமது தேசியப் பண்பாட்டின் அறுபடாத சரடாக இழையோடிக் கொண்டிருக்கிறது.

**********

தெய்வீக பக்தி என்றல்ல. காதலில், அன்பில் ஏங்கும் சாதாரண மானுட இதயத்திலும் கூட கோபிகையின் கீதம் எதிரொலிக்கும். திவ்யப் பிரபந்த பாசுரங்களை மட்டுமல்ல,  திரைப் பாடல்களையும் அது தீண்டும்.

யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..

என்று சிலிர்க்கும்,

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா – நான்
கண்ணாடிப் பொருளில்லையா

என்று சிணுங்கும்,

காற்றில் வரும் கீதமே – என்
கண்ணனை அறிவாயா
அவன்வாய்க் குழலில் அழகாக
அமுதம் பொழியும் இசையாக..

என்று உருகும்,

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்; காதல் சொன்னான்
காற்றில் குழலோசை
பேசும் பூமேடை மேலே…

என்று களியாட்டம் போடும்

வணிகக் கலையின் வண்ணமயமான காதல் கீதங்களில் கூட நாம் கண்ணனுக்காக ஏங்கும் கோபிகையைத் தானே பார்க்கிறோம்!

நமது மரபில் கோபிகைகளின் அன்பு பரா-பக்தி (எல்லாவற்றுக்கும் அப்பாலான பக்தி), அவ்யபிசாரிணீ  பக்தி (மாறுதலும், தவறுதலும், பிசிறும் இல்லாத பக்தி) என்று மிக உயர்ந்த நிலையில் வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு மகோன்னத லட்சியம்.

ஆனால் இதன் சிறு பரிமாணங்களை சிறு துளிகளைக் கூட நம்மளவில் நமது அன்றாட வாழ்வில், நமது உறவுகளில் நாம் கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம். இந்திய மனதில் “பக்தி” என்ற சொல் “மதரீதியான” குறுகிய பொருள் கொண்டதல்ல; பரந்த ஆழமான பொருள் கொண்டது. அதனால் தான் தேசபக்தி, பதிபக்தி, குருபக்தி ஆகிய சொற்கள் நம் மொழிகளில் புழக்கத்தில் உள்ளன. மேலும், ”ஆன்மீக ரீதியாக செய்யப் படும் எந்த ஒரு சிறு முயற்சியும் வீண்போவதில்லை, அதற்குப் பலன் உள்ளது” என்று கீதை கூறுகிறது.

உதாரணமாக, எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் அமைவது தூய அன்பு அல்ல. தூய அன்பு கட்டற்றதாக, நிபந்தனையற்றதாக (unconditional) இருக்க வேண்டும் என்று மனோதத்துவ நிபுணர்கள் முதல் கணவன் – மனைவி சண்டைகளைத் தீர்க்க வரும் குடும்ப உறவு ஆலோசகர்கள் வரை பலர் ஒரு புதிய தத்துவம் போன்று கூறுகிறார்கள். இப்படி ஒரு தத்துவம் சொல்வதற்கு மிகவும் எளிது, கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

”தூய அன்பிற்கு வெளி சாட்சியங்கள், பிரமாணங்கள் தேவையில்லை. அதற்கு அதுவே சாட்சி, அதுவே பிரமாணம்” என்று பக்தி சூத்திரம் இதனை இன்னும் அழகாகச் சொல்கிறது. கோபிகைகளின் பக்தியில் இந்த தத்துவத்திற்கு அற்புதமான உதாரணம் உள்ளது. கிருஷ்ணனின் மகா சக்தியையும், பரம கருணையையும் பற்றி நன்கறிந்தவர்கள் அவர்கள். ஆயினும் கிருஷ்ணனிடமிருந்து அவர்கள் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. ஐயோ உனக்குக் காலில் முள் குத்துமே என்று கவலைப் படுகிறார்கள். உன் இதழ் முத்தம் ஒன்று போதும் என்று ஏங்குகிறார்கள். ஒரு யோகியின் மனநிலையையும், குழந்தையின் மனநிலையும் அங்கே ஒருங்கே தென்படுகிறது..

கோபாலனின், கோபிகைகளின் திவ்ய சரிதத்தை நாம் படிக்கப் படிக்க, அதனைப் பற்றி மேலும் மேலும் சிந்திக்க, தியானிக்க, நமது அன்றாட வாழ்க்கையில் அன்பு ஒளி அதிகரித்துக் கொண்டே வரும்.

யமுனையில் மணல் திட்டுக்களில் எழுந்த அன்பின் அலைகள் உலகம் முழுவதையும் ஆட்கொள்வதாக!

15 Replies to “கோபிகா கீதம்”

 1. அருமை! அருமை! திரு ஜடாயு அவர்களே. தற்செயலாக தற்போது எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் pyaare darshan பாடலை வேறு கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனந்த க்கடலின் மிக அருகில் நிற்கும் பிரமை.
  இப்படிப்பட்ட கட்டுரைகள் அவ்வபோது எல்லார்க்கும் தேவை. இவை நம்மையெல்லாம் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நடுவில் நமக்கெல்லாம் மிகவும் தேவைப்படும் டானிக்.
  S S Cohen -Sadhu அருணாச்சலா [ ரமண ஆஸ்ரமம் ] இந்த தெய்வீக அன்பைப்பற்றி அழகாக விளக்குகிறார்.
  ஒரு சிலர் பக்தி மார்கத்தை குறைவாக எண்ணுகிறார்கள் . பக்தியின் உயர்ந்த நிலை ஞானமே என்று ரமணரும் அழகாக கூறுகிறார்.
  வேண்டுமென்றே இதை புரிந்து கொள்ளாமல் மூலாதார நிலையில்தானும் நின்று, அடுத்தவரையும் மேல் சக்கரங்களுக்கு உயர விடாமல் தடுக்கும் பலர் இங்கு .
  கண்ணதாசன் முதலில் நாத்திக கட்சியில் இருந்து பின்னர் பக்தி மானாக உயர்ந்தவர். அவர் உருகி உருகி பாடியுள்ள கண்ணன் பாடல்கள் அநேகம். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
  பக்தி என்ற உணர்வு கால தேசம் தாண்டியது. மாணிக்க வாசகரை பெண்ணாக உருக வைத்தது. மேலும் எத்தனையோ பேருக்கும் பிரேமையின் வழி உயர வைதிர்ருகிறது.
  இது மனிதக்காதல் அல்லவே அல்ல.
  மனதை தெளிவாக வைத்திருப்போருக்கு புரியும். மீண்டும் நன்றிகள் பல.. மேலும் இது போல் கட்டுரைகள் அவ்வபோது தேவை.
  அன்புடன்
  சரவணன்

 2. Pingback: Indli.com
 3. தமிழ் ஹிந்து தளத்தின் முகப்பில் கோபிகா கிருஷ்ணர்களின் படத்துக்கு அடுத்ததாக மண்டை ஓடுகளின் வரிசை படம் பிளாஷ் ஆவது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

 4. அருமையான கவிதை. அற்புதமான விளக்கம். நாராயணீயத்தின் சுவைச் சாறு போல தித்திக்கிறது. கற்பனை நயம் கலந்த தமிழ் விளக்கம். வாழ்க வளமுடன். இது போல பல இறைச் சிந்தனைகளை அள்ளி வழங்குக. மிக்க நன்றி. கடந்த கால பாடல்களுக்கு இற்றை நாள் எடுத்துக்காட்டுகளை தந்து உள்ளீர்கள். வணக்கம்.

 5. அருமையான கட்டுரை. திரைப்பாடல்கள் உதாரணம் அருமை. மேலும் சில ராதா-கோபியர் பாடல்கள்: “ராதா ராதா நீ எங்கே? கண்ணன் எங்கே நான் அங்கே!”, “கோபியர்கள் எங்கு உண்டோ, நம் கோபாலன் அங்கு உண்டு!”, “கண்ணா வருவாயா?”, ”ராதா அழைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்” போன்றவை சட்டென்று நினைவுக்கு வரும் பாடல்கள்.

 6. நாங்கள் சிறுவர்களாக இருந்த போது குமரி மாவட்ட இந்து சமய வகுப்புகளில் கோபிகா கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று பிரபலமாக இருந்தது. துளஸிராம் என்கிற ஒரு பெரியவர் அதனை செய்திருந்தார். குழந்தைகளின் கும்மி-கோலாட்ட நடனங்களுக்கும் ஏத்த மெட்டில் அதை பெரியவர் செய்திருந்தார். முழுவதும் இல்லை சுருக்கம்தான் என நினைக்கிறேன் அதனை கீழே தருகிறேன்:

  அன்பின் நாயகா கிருஷ்ணா அமுத இன்பமே உன் பிறப்பினால் கிருஷ்ணா உயரும் கோகுலம்
  உனது பிறப்பினால் கிருஷ்ணா புனிதம் இத்தலம் லக்ஷ்மி தேவியும் கிருஷ்ணா என்றும் இங்குளாள்
  கோபியர்கள் யாம் கிருஷ்ணா உனைப் பிரிந்ததால் தேடி அலைகிறோம் கிருஷ்ணா காட்சி அருளுவாய்
  அபயம் என்றுனை கிருஷ்ணா அடைக்கலம் புகும் அடியவர்க்கு நீ கிருஷ்ணா ஆபத்பாந்தவா
  ஸ்ரீ நிகேதனம் கிருஷ்ணா பாதபங்கஜம் சரணம் எய்துவோர் கிருஷ்ணா பாவம் போக்குமே
  கருணை நிறைவினால் கிருஷ்ணா பசுவை மேய்க்கும் நீ பாம்புத்தலையிலும் கிருஷ்ணா ஆடும் பதம் உளாய்
  நின் கதாம்ருதம் கிருஷ்ணா துன்புற்றோர்க்கெல்லாம் இன்ப மங்களம் கிருஷ்ணா முனிவர்க்கானந்தம்
  ச்ரவண மங்களம் கிருஷ்ணா சாந்தி நல்கிடும் போற்றுவோரெல்லாம் கிருஷ்ணா புனிதவான்களே
  சரணுற்றோர்க்கெல்லாம் கிருஷ்ணா அபயம் நல்கும் நீ பரமன் அச்சுதன் கிருஷ்ணா உனையே நம்பினோம்
  சியாம சுந்தரா கிருஷ்ணா பீதாம்பரதரா அடிமை எங்களை கிருஷ்ணா கைவிடாதருள்.

 7. அருமையான கட்டுரை. காமம் கலக்காத காதல் உண்மையான அன்பு என்றால் என்ன என்பதற்க்கு கிருஷ்னலீலா ஒரு உன்னதமான முன்உதாரணம். (iskcon) கிருஷ்னலீலா வண்ண புகைப்படங்கள் உயிர்ஓட்டம் உள்ளவை. சளைக்காமல் பார்த்துகொண்டே இருக்கலாம். மனத்திற்க்கு நிறைந்த சாந்திதரும் தத்ரூப பிம்பங்கள். யசோதையின் மடியில் குழந்தை கிருஷ்னன் அமர்நது (iskcon) வெளியிட்டுள்ள வண்ணப்படம் பல வீடுகளின் வரவேற்ப்பு அறையை ஒர் ஈர்ப்பு சக்தியாக அலங்கரித்து வருகிறது. அந்த முக்கியமான படம் உங்கள் கட்டுரையில் ஏன் சேர்க்கவில்லை. கண்ணனைப்பற்றிய பரவசம்ழூட்டும் பாடல்கள் தான் எத்தனை எத்தனை !! பாரதியும் கண்ணதாசனும் எழுதிய கண்ணன் பாடல்களை ரசிக்காதவர்களாக யாரும் இருக்க முடியாது. திருமதி எம்.எஸ்.சுப்பலஷ்மியின் ”குறை ஒன்றும் இல்லை” “காற்றினிலே வரும் கீதம்“ பாடல்களால் மயங்காதவர்கள் யாரேனும் உண்டோ !! கண்ணனின் லீலைகளுக்கும் கீதா உபதேசத்திற்க்கும் ஈடு இணை இவ்வுலகில் எதுவுமே இல்லை !!!

 8. எனக்கு புரிந்ததை எழுதுகிறேன். கண்ணன் அல்லது பிரஹ்மம் என்பதே மூலப்பொருள் – எப்படி பால் கோவாவிற்கு பால் மூலமோ, பானைக்கு களிமண் மூலமோ அது போல. நம் அனைவருக்கும் உள்ளே இருக்கும் ஆத்மா அந்த பரம் பொருளை நினைத்து நாடுவதே பக்தி. எப்படி காந்தத்தின் அருகில் உள்ள இரும்பு ஈர்க்க படுகிறதோ அது போல பரம் பொருளை அடைய நினைத்து தியானித்தால், அது நம்மை ஈர்க்க ஆரம்பித்து விடும். ஆனால் நாம் பரம் பொருளை நினைக்காமல் மற்ற உலக பொருள்களின் மீது பற்று கொண்டு விட்டால், நாம் காந்தத்தின் இருந்து தொலைவின் இருக்கும் இரும்பு துண்டம் போல ஆகி விடுகிறோம். பக்தி இல்லை எனில் பரம் பொருளை விடுத்து வேறு வழிகளில் வெகு தூரம் சென்று விடுகிறோம். கோபிகா பெண்கள் நம்மில் இருக்கும் ஆத்மா போன்றவர்கள். கண்ணன் பரம் பொருள் ஆதனால் கோபிகைகள் கண்ணனை அடைய காதல் கொள்கின்றனர். அந்த தேடல் இல்லாதவர்கள் பிறவி கடலில் சிக்கி உழல்கிறார்கள். நாம் அனைவரும் கோபிகைகள் போல முக்திக்கு விழைய வேண்டும். பிறவி பிணியை தொலைக்க முயல வேண்டும்.

 9. இறைவன் நேரில் உன் முன்னே தோன்றினால் நீ என்ன கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களிடம் கேளுங்கள். நம் சான்றோர்கள் அதை கண்டு பிடித்து வைத்திருக்கின்றனர். உனக்கு பொன் வேண்டுமா, பொருள் வேண்டுமா, மண் வேண்டுமா, மனை வேண்டுமா, பெண் வேண்டுமா, இன்னும் என்ன வேண்டும் என்பார் கடவுள். நாம் கேட்க வேண்டியது முக்தி எனும் மாறாத பேரின்பமே. நன்மை, தீமை, இன்பம், துன்பம், இது போன்ற இரட்டைகளை கடந்த பேரின்பம். அதுவே முக்தி, பிறவாமை, என்ற உயர் தத்துவம். அந்த பரம் பொருள் என்ற மூல பொருளின் இருந்து விடுபட்டு வந்த இந்த ஆத்மாவை (நம்முள் இருக்கும்) அதனுள் மீண்டும் சேர்த்து விடும் பேரானந்தமே முக்தி. அதன் பிறகு மறு பிறவி கிடையாது.

 10. ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன். நாரதரும் வியாசரும் யமுனை நதியருகில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது வியாசரிடம் நாரதர் சொன்னாராம் “நம்மை விட இந்த கோபியருக்கு தான் பக்தி அதிகம் என்று…” இதை வியாசர் ஒப்புக்கொள்ள வில்லை. “நமக்கு சாஸ்திரம் தெரியும் வேதம் தெரியும் வேதாந்தம் தெரியும்… இவர்களுக்கு அதெல்லாம் எங்கே தெரியும்?” என்பது அவர் வாதம்.

  நாரதர் “இப்போது கண்ணனுக்கு உடம்பு சரியில்லை. யாராவது தன் கால் பட்ட மண்ணை கொடுத்தால் அதை குழைத்து பத்துப் போடலாம் என்று வைத்தியர் சொல்லி இருக்கிறார். வேதம் படித்த மகா ரிஷியான உமது பாத தூளியை கொடுங்கள்” என்று கேட்டார்.

  அதற்கு வியாசர் பகவானுக்கு என் காலடி மண்ணையா கொடுப்பது என்று அஞ்சி விட்டார்.

  அதே வழியில் சில கோபிகைகள் வர, நாரதரும் விஷயத்தைச் சொல்ல சற்றும் தாமதிக்காமல் அத்தனை பெரும் கொட்டங்கச்சிகளால் காலை கரட் கரட் என்று வரண்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்களாம். கண்ணனிடம் அவர்கள் வைத்திருந்தது பக்தியை தாண்டிய அன்பு.

 11. இக்கட்டுரை படிக்கும் போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது

  புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
  எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
  அருமையான கட்டுரை ஆசிரியருக்கு நன்றி
  அன்புடன்
  சிவா

 12. ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வாழும் முறையான live-in குறித்த ஒரு வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதி ‘அதி மேதாவித்தனமாக’ இதை நியாயப் படுத்த கிருஷ்ணருக்கும் கோபிகைகளுக்கும் இருந்த உறவு போல்தான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
  அவர் ரிஷி அரவிந்தர் கோபிகைகளைப் பற்றிக் கூறியுள்ளதைப் படிக்கட்டும்

 13. பாராட்டும், கருத்துக் கூறும் அன்பர்கள் அனைவர்க்கும் நன்றி.

  அரவிந்தன், நீங்கள் அளித்த பாடல் அருமை. கோபிகா கீதம் சம்ஸ்கிருதப் பாடலின் அதே சந்தத்தில் இருக்கிறது, பாடுவதற்கும் இனிமையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *