பாரதியின் சாக்தம் – 2

பாரதியின் சாக்தம்பகுதி 1

(தொடர்ச்சி…)

durga

பாரதத்தின் பல பகுதிகளில் சாக்தத்தின் சம்பிரதாயங்கள் இருப்பினும், சாக்தம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது வங்காளமே. காரணம் சாக்தத்திற்கான பல பண்பாட்டு சமுதாய அம்சங்கள் அங்கு அடித்தளமாய் அமைந்திருக்கின்றன. வாழ்வின் இனிய முகங்களையே தெய்வீகத்தின் பிரதிமைகளாய்க் காணும் போக்கு மற்றைய பகுதிகளில் அதிகம் என்றால், வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்.

ஆனால் இறந்தவருடன் அவருடைய மனைவியையும் சேர்த்து எரிக்கும் வழக்கமான சதி என்பதும் வங்காளத்தில்தான் பெருமளவு இருந்து, பின் ராஜாராம் மோஹனராய், லார்டு பெண்டிங் பிரபு முதலியோரால் அகற்றப்பட்டது என்பதும் சரித்திரம்தான்.

சாக்தத்திலும் வாமாசாரப் பிரிவு பெரிதும் சாக்த பக்தர்களில் சில பிரிவினரால் கைக்கொள்ளப்பட்டுப் புழக்கத்தில் இருந்ததும் வங்காளத்தில். சாக்தத்தில் என்று இல்லாமல் மற்றைய தெய்வ வழிபாடுகளிலும் இவ்விதமாக ஆண் பெண்ணைத் துணைக்கொண்டும், பெண் ஆணைத் துணைக்கொண்டும் வழிபாட்டின் ஊடகமாக ஆக்கிக்கொள்ளும் முறைகளும் இருந்தன என்பதை கர்த்தபஜா முதலிய பிரிவினரைப் பற்றிய குறிப்புகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் காலத்திற்கு முன்வரையிலும் கூட வைதிக ஆசார நெறிமுறைகள், பாரதம் எங்கும் தீர்த்த யாத்திரை மேற்கொள்வோரை கௌட தேசத்திற்குச் (வங்காளம்) சென்றால் பின் பிராயச்சித்தம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியது இவ்விதமான ஒப்புக்கொள்ளப்படாத வழிமுறை வழிபாடுகள் வங்காளத்தில் புழக்கத்தில் இருந்த காரணத்தாலேயே ஆகும்.

இது ஒரு பக்கம் எனில், மனித சிந்தனை இயல் என்பதன் வரலாற்றிலேயே மிகவும் மகத்துவம் வாய்ந்த சாதனையான நவ்ய நியாயம் என்ற மிகச்சரியாகக் கட்டமைக்கப்பட்ட அளவையியல் பள்ளிகள், மிதிலாவைச் சேர்ந்த கங்கேச உபாத்யாயாவில் ஆரம்பித்து, வாசுதேவ சார்வபௌமரால் வங்காளத்தில் தாயகம் கொண்டு பெருகின. கதாதர பட்டாச்சார்யாவின் காலத்தில் மிகவும் உச்சத்தை அடைந்தன. எந்த சாஸ்திரம் கற்க வேண்டுமாயினும் ஒருவன் நவ்ய நியாயம் நன்கு தேறியிருக்க வேண்டும் என்பது அற்றை நாளின் வித்வான்களின் குழுவில் பாரதம் எங்கும் பொதுக் கோட்பாடு. எனவே கௌட தேசம் சாத்திர மாணவர்களின் அளவையியல் தேர்ச்சிக்கான யாத்ரா ஸ்தலமாகவும் இருந்தது. அக்ஷபாத கௌதமரிடம் நூல் வடிவம் கண்டு கங்கேச உபாத்யாயாவின் காலத்திற்கு முன்வரையில் நியாய சாத்திரமாக இருந்த படிப்பு, கங்கேச உபாத்யாயா, ரகுநாத சிரோமணி, கதாதர பட்டாச்சாரியா மற்றும் அவருக்குப் பின் வந்த வங்காள வித்வான்கள் காலத்தில் நன்கு செம்மையாகி நவ்ய நியாயம் என்ற அசைக்க முடியாத துறைப் பொது மொழியாக வளர்ச்சி கண்டது

இந்த நவ்ய நியாயத் துறையில் நன்கு ஊறிய பண்டிதர்தான் கௌராங்கர் என்னும் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர். ஸ்ரீகிருஷ்ண பக்தி என்பதை உயிரின் பெருநெறியாக அவர் கண்டடைய உதவியது ராமாநந்தர் மூலமாகவும் வேறு சில வழிகளிலும் வங்காளம் சென்றடைந்த ஸ்ரீராமானுஜ தர்சனம். ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தமிழ்நாட்டில் வந்து ஸ்ரீரங்கத்தில் தங்கி வங்காளம் திரும்பியதும் கொண்டுசென்று தந்ததுதான் மதுர பக்தி என்னும் தலைவன் தலைவி காதல் பாவத்திலான கடவுள் பக்தி.

சங்கப் புலவனின் அகத்திணையும் தமிழ்நாட்டு வேதாந்திகளின் மெய்ப்பொருளியலும் கலந்து செய்த சாதனைதான் சடகோபன் செய்த தமிழ் மறைக்கு ஸ்ரீராமானுஜரின் கட்டளையால் பெரும் வேதாந்த வித்வான்கள் தமிழில் ஊற்றம் கொண்டு உரைப் பெருக்காய் வளர்த்த பகவத் விஷய வியாக்யானங்கள். அதிலிருந்து கௌராங்கர் மொண்டு சென்றதுதான் ரூப கோஸ்வாமியிடம் அவர் அளித்த மதுர பக்தி என்னும் ஆன்மிக நெறி. ஆனால் ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் காலத்தில் அவர் வேதாந்தத்தின் ஆட்சியைப் பெரிதும் அகற்றி உணர்ச்சி பூர்வமான ஸ்ரீகிருஷ்ண பக்தி என்பதை மட்டும் மேலோங்கச் செய்தது அவர் வரலாற்றில் தெரிய வரும் ஒன்று. ஆனால் தமிழ்நாட்டின் சாதனை, சடகோபன் பொன்னடியை ஏற்றிய வேதாந்திகளின் சாதனை வேதாந்தத்திற்கும், தீவிர பக்திக்கும் சிறிதும் பிசகாத இசைவான தீர்வு கண்டு அதைப் பனுவலாக்கித், தொடர்ந்து நிகழும் நிகழ் கலையாக்கி, அடியார் உணர்வு பூர்வமாக வாழ்நெறியாகப் பேணும் பெருநெறியாக ஆக்கி வைத்தமையேயாகும். இதை விரிவாக முன்னரே ‘அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்’ என்ற தமிழினி இதழில் வெளிவந்த கட்டுரைத் தொடரில் நிறுவியிருக்கிறேன்.

பொதுவாகவே வேதாந்தம் என்ற மாபெரும் மனித குல கருத்துலகச் சாதனைக்குப்பின், சாக்தமாகட்டும், சைவமாகட்டும், வைஷ்ணவமாகட்டும், அல்லது மஹாயானப் பிரிவுகள் சிலவாகட்டும் அனைத்துமே தங்கள் துறை சார்ந்த ஆகமக் கருத்து நெறி எப்படி வேதாந்தத்துடன் ஒவ்வியதாய் இருக்கிறது என்பதைக் காட்டித் தங்களை அறிவுசால் நெறியாக நிறுவிக்கொள்வதிலேயே மும்முரம் காட்டின. அதில் அவையவை அடைந்த வெற்றி எந்த அளவோ, ஒன்று மட்டும் புரிகிறது, எந்தத் தனிப்பட்ட பிரிவினரின் ஆகமப் பார்வைகளாகட்டும், மதம் என்று தங்களைப் பொதுவில் நிறுவிக்கொள்ள வேதாந்தம் என்ற பொதுக் கருத்தியல் சட்டமே அனைவராலும் இசைந்து பேணப்பட்டது. இதில் பெரு வெற்றி கண்டிருப்பது ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களாகிய பாஞ்சராத்திரமும், வைகானஸமும்; அதிலும் நம் தமிழ்நாட்டு நம்மாழ்வாராலும், திராவிட வேதாந்திகளாலும் என்பது நம்மை இறும்பூது கொள்ளச் செய்கிறது.

ramakrishnar-kaliஇதைப் போலவே சாக்தம் வேதாந்த ரீதியில் தன் மெய்ப்பொருளியலை வளர்த்தெடுக்க மிகவும் முனைந்தது வங்காளத்தில் எனலாம். கிட்டத்தட்ட சாக்தத்தின் அத்தனை நுட்பங்களையும் சோதித்துப் பார்க்கும் சோதனைப் பணிக்களமாகக் காட்சியளிக்கிறது வங்காளம், பல நூற்றாண்டுகளாக. சாக்தம், ஸ்ரீகிருஷ்ண பக்தி, ஸ்ரீராம பக்தி என்று இவ்வாறு செழித்த சூழ்நிலையில்தான் ஸ்ரீராம பக்தியில் சிறந்த குடும்பத்தில், க்ஷுதிராம் சட்டோபாத்யாயாவிற்குப் பிறந்த கதாதரர் என்னும் ஸ்ரீராமகிருஷ்ணர் காளி கோயிலுக்குப் பூசாரியாகிக் காளி பக்தியில் உயிரின் பெரு நெறி கண்டது. (நவ்ய நியாயத்துக் கதாதரர் வேறு; காலத்தால் முந்தியவர்; பரமஹம்ஸரான இந்த கதாதரர் வேறு; பெயர் ஒற்றுமையில் குழம்ப வேண்டாம்). ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையே முழுதும் குறியீடுகளால் புனையப் பட்ட கவிதை போல் இருக்கிறது. (இதைப் பற்றி வேறொரு சமயம் விரிவாகப் பார்ப்போம்).

வேதாந்தம் கூறும் பிரம்மமும், உலக அன்னையான தம் தாய் காளியும் வேறல்ல; ஒன்றே என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். தாயைக் காண குழந்தையின் வெறித்தனமான பதட்டம் என்ற பக்தியின் முதிர்ச்சியில் தத்துவங்களைப் பற்றிய ஞானத்தைப் பெற்றார்; கடைசி வரையில் இவ்வாறே பெற்றுக்கொண்டும் இருந்தார். பல வித சாதனைகள், பலவித மதங்களின் ரீதியாக இறையியல் உணர்வு என்று எங்கு சுற்றினாலும் கடைசியில் காளியிடம் வந்து சேரும் குழந்தையாகவே கடைசி வரைத் தன்னை இருத்திக்கொண்டார். ‘நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்த நரேந்திரரை இறையனுபவம் என்ன என்பதை உணர்த்தி, கடைசியில் பல ஆண்டுகளுக்குப் பின் அதே ‘நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?’ என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர். இதை நரேந்திரரும் பின்னாளில் நினைவுகூர்ந்து எழுதும்போது, ‘அவர் என்னைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டார். அதுவரை இந்தக் காளி இதெல்லாம் நான் சிறிதும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் காளி பக்தி என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதை நான் யாரிடமும் கூறுவதில்லை. அதைப்பற்றி ஒரு வார்த்தையேனும் உபதேசமும் செய்ததில்லை’ என்ற கருத்துப்படக் கூறுகிறார்.

kali1

இவர்களுடைய பாஷையில் காளி என்று இவர்கள் குறிப்பிடும் அந்த ஆன்மிக நிதர்சனம் என்ன? கன்னங்கரேல் என்ற உருவமும், ரத்தம் வடியும் வாளும், படைகள் ஏந்திய பல கைகளும், குருதியின் சுவை பொங்க வீழும் நாவும், மண்டையோட்டு மாலையும், எலும்பாரமாகப் புனைந்த இடுப்பின் மறைப்பும், நிர்வாணமான கொடூரத்தின் திணிந்த இருளை நேருறக்கண்ட ஆயாசத்திலோ, பரவசத்திலோ பாதங்களின் கீழ் கிடையாகக் கிடக்கும் சிவனாரும் — இதுதான் காளியா? அதாவது இவர்கள் குறித்த காளியா?

இந்தக் காளியைக் குறித்து பாரதியார் ஆகஸ்டு 1906-இல் சக்ரவர்த்தினி இதழில் எழுதுகிறார்—-

‘ராம் மோஹன சூரியன் பெங்காளத்திலே உதித்த போது இத்தேசம் பேரிருளில் முழுகிக் கிடந்தது.

கண்ணால் பார்க்கவும், மனத்தால் நினைக்கவும் அருவருப்புத் தரக்கூடியனவாகிய விக்கிரகங்கள் வணங்கப்பட்டன. ஐயோ! நாம் முதன்முறை காசியிலே ஓர் பெங்காளிக் கூட்டத்தார் தொழுகின்ற பொம்மையைப் பார்த்தோம்.

கரேலென்ற உருவமும், இரத்த நிறங்கொண்ட விழிகளும், பேய் கண்டாலு மஞ்சக் கூடிய பற்களும், சரியாக ஒன்றரை முழம் கீழே தள்ளியிருக்கும் நாக்கும் பார்த்தவுடன் எம்மையறியாமல் எமதுடலம் பதறத் தொடங்கிற்று. இந்தக் கருங்காளிப் பொம்மையின் காலடியில் ஓர் ஆணுருவங் கிடந்தது. அதன்மீது இக் கரும்பேய் உண்மையாகவே நடனஞ் செய்வதுபோல் எமக்குத் தோன்றியது.

இக் காளிப் பொம்மையின் முன்பு நூற்றுக்கணக்கான எருமைகள் வரிசை வரிசையாக வெட்டுண்டன. வடநாட்டெருமைகள் இந் நாட்டெருமைகளினும் மிகப் பெரிய வடிவமுள்ளன. எங்கே பார்த்தாலும் இரத்த மயமா யிருந்தது. நாம் கண்டு கண்ணை மூடிக் கொண்டு திரும்பி விட்டோம்.

ஐயோ! ராம்மோஹன ராயரும், கேசவ சந்திரரும் வாழ்ந்த நாட்டார் இன்னும் இந்தப் பாதகச் செய்கைகளை நிறுத்தவில்லையே யென்று எமது மனம் பொங்கத் தொடங்கி விட்டது’

(– கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் 1, திரு.சீனிவிசுவநாதன்)

dancing-kali-by-aaron-staenglஇவ்வாறு எழுதிய பாரதியார்தான் பின்னர் ‘ஊழிக்கூத்து’ பாடலில்

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியோடு பூதம்பாடப்-பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ, சாமுண்டீ, கங்காளீ!
அன்னை, அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.’

(– பாரதியார் கவிதைகள், பதிப்பு சீனி.விசுவநாதன்,
14 ஏப்ரல் 1991 பக் 211)

என்று பாடியதும். பாரதியாரின் இந்தச் சக்தி தரிசனம் அவருக்குக் கிட்டியது எவ்வாறு?

ஸ்ரீராமகிருஷ்ணரின் தோற்றத்திற்குப் பின்னர்தான் ஹிந்துவின் சமய வாழ்வு, உணர்வுபூர்வமாக இருந்த நிலை முதிர்ந்து அறிவுபூர்வமான தேற்றங்களும் பிரகடனமும் வெளிப்பாடு ஆகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் போதம் வெறுமனே சடங்குகளிலும், நம்பிக்கை சார்ந்த வழிபாடுகளிலும் அடங்கி விடுவதில்லை. அஃது அனைத்துத் துறைகளிலும் ஊட்டம் நல்கிப் பன்முகப் பண்பாட்டின் மேம்பாட்டிற்கான மூல சங்கேதம் என்பது சுவாமி விவேகானந்தரின் திட்டவட்டமான உறுதிப்பாடு. அந்தப் பெரும் ஊர்ஜிதத்தில்தான் விவேகானந்தரின் வாக்கும், எழுத்தும் பெருகியது. விவேகானந்தரின் நூல்களும் பேச்சுகளும் சுதேசிய இயக்கத்தின் மூல காரணமாய்த் திகழ்ந்தன. தேசத் தந்தை மகாத்மா என்பதுபோல், சுதேசிய உணர்வின் தந்தை விவேகானந்தர் என்னத் தகும்.

“இப்போது நடைபெறும் நவீன உணர்ச்சியின் மூலபுருஷரான ஸத்குரு ஸ்ரீ விவேகானந்த ஸ்வாமிகள் நமக்குக் கட்டளை யிட்டிருக்கிறார்” என்றே சுதேசிய உணர்ச்சிக்கு மூல புருஷர் விவேகானந்தர் என்று குறிப்பிட்டுப் பாரதி எழுதுகிறார். (– கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், ஐந்தாம் தொகுதி, பக் 202.)

விவேகானந்தப் பாசறையில்தான் சுதந்திரப் போராட்ட வீரர்களின் எண்ணங்கள் ஏற்றமும் விரிவும் செப்பமும் அடைந்தன. நாடு, சமயம், ஆன்மிகம், பண்பாடு, சரித்திரம், சமய அனுஷ்டானம், பொதுஜன ஊக்கம், தேசப்பற்று, இறைநாட்டம், சமுதாய எழுச்சி என்றபடி அனைத்தையும் ஒரு கோவையாக்கிக் காண்பதற்குக் கற்றுக் கொடுத்தவர் விவேகானந்தரே எனலாம். இளசை சுப்பிரமணியன் என்ற புலவனின் சமய, சமுதாய, பண்பாட்டுக் கல்வியில் விவேகானந்தப் பரமஹம்ஸத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்பது பாரதி படைப்புகளின் பரப்பெங்கும் புலப்படும் ஒன்று. பாரதி மட்டுமன்று, அவர் காலத்திய வளரும் தலைமுறைகள் அனைத்திற்கும் பொதுவாகவே வங்க எழுச்சியின் தாக்கம் உண்டு.

ஆனால் சக்தி என்ற வழிபாடு வங்கம் சொல்லித்தான் தென்னாடு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. ஆயினும் பாரதியின் சாக்தம் என்பது வெறுமனே தெற்கத்திய சாக்த பத்ததியோடு வகைப்படுத்திவிடக் கூடியதன்று. ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், சகோதரி நிவேதிதை என்ற குரு பரம்பரையாகப் பெற்ற அறிமுகம், விளக்கம், உத்வேகம் இவையெல்லாம் இல்லாமல் நாம் பாரதியின் சாக்தத்தைப் புரிந்துகொள்ள இயலாது.

kali-upasana

பிரம்மமேயாகிய என் அன்னை உலகனைத்துமாய் ஆகி நிற்கிறாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

Maya is a simple statement of facts– what we are and what we see around us.– என்று கூறுகிறார் விவேகானந்தர்.

Kali is the Vision of Shiva — என்று கூறுகிறார் சகோதரி நிவேதிதா.

அதே மூச்சை உள்வாங்கி இந்த முன்று நிலைகளையும் பாரதி பாடும் விதம் வியப்பிற்குரியது.

யாதுமாகி நின்றாய் காளி! யாதிலும் நீ நிறைந்தாய்.

இயற்கையென் றுனையுரைப்பார் –சிலர்
இணங்குமைம் பூதங்க ளென்றிசைப்பார்
செயற்கையின் சக்தி யென்பார்

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் — அதை
அன்னை யெனப்பணிதல் ஆக்கம்

மூலப் பழம்பொருளின் நாட்டம் — இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்.

இத்தகைய பிரதிபலிப்பும், ஒத்திசைவுகளும் பாரதியின் பாடல்களில் நெடுகக் காணலாம். தன் குருமணி என்று சகோதரி நிவேதிதாவைக் கருதி, வெளிப்பட எழுதி வைத்த பாரதியின் சாக்த போதம் காண்பாரற்ற வெளிப்படையான ரகசியமாய் இருப்பது பெரும் வேடிக்கை.

சகோதரி நிவேதிதா தமது விவேகானந்தரைப் பற்றிய நூலான The Master As I Saw Him என்பதில் கூறுகிறார் —

He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience, in which the soul turns page after page, only to find that there is nothing in it, after all. And this, to my own mind, is the final explanation. Kali the Mother is to be the worship of the Indian future. In Her name will her sons find it possible to sound many experiences to their depths. And yet, in the end their hearts will return to the ancient wisdom, and each man will know, when his hour comes, that all his life was but as a dream. (pp121 The Complete Works of Sister Nivedita, Volume 1, Advaitha Ashrama, April 2006)

இதைப் புரிந்து கொண்டாலன்றி நம்மால் எப்படி பாரதியின்

barathiyarதுன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கு மெரியே சக்தி
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி

(பக் 178 சக்தி, பாரதியார் கவிதைகள், திரு சீனி,விச்வநாதன் பதிப்பு, 14 ஏப்ரல் 1991)

என்ற வரிகளைப் புரிந்துகொள்ள முடியும்?

சகோதரி நிவேதிதா தமது நூலில் (The Master..) எழுதும் பகுதி வருமாறு —

On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to Her that in his own life had acted as a veritable charm. “And mind!” he added suddenly, turning with what was almost fierceness upon the receiver, “make Her listen to you, when you say it! None of that cringing to Mother! Remember!”
……….
Or becoming half-lyric in the intensity of his feeling, “Deep in the heart of hearts of Her own, flashes the blood-red knife of Kali. Worshippers of the Mother are they from their birth, in Her incarnation of the sword!”

இந்தப் பகுதிகளை மனத்தில் வைத்துக்கொண்டால் அல்லவோ பாரதியின்

‘நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் — அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்
அடி காளீ வலிய சாமுண்டீ!’

என்ற வரிகளின் மூர்த்தண்யமும்,

‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர் மணிப்பூண்’

என்ற வரிகளின் உள்ளர்த்தமும் புரியும்.

சகோதரி நிவேதிதாவின் எழுத்தை பாரதியார் வாசித்திருப்பாரா என்ற சந்தேகம் எழலாம். அதைத் தீர்க்கும் வகையில் அமைந்திருக்கும் வரிகளைப் பார்க்கலாம்…

(தொடரும்…)

5 Replies to “பாரதியின் சாக்தம் – 2”

 1. Pingback: Indli.com
 2. ரத்தினப் பொக்கிஷமான தொடர்.

  நுணுக்கமான தத்துவ விவரிப்பை முதல் பாகம் தந்தது. அந்தத் தத்துவம் செயல்படுமுறையை இரண்டாம் பாகம் விளக்குகிறது.

  நிறைய பேர் காத்திருந்து படிக்கிறோம். தொடருங்கள்.

 3. // Kali the Mother is to be the worship of the Indian future. In Her name will her sons find it possible to sound many experiences to their depths. And yet, in the end their hearts will return to the ancient wisdom, //

  ஆ! என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் வரிகள். “வந்தே மாதரம்” என்ற மந்திரச் சொல் தேசபக்தியின் அடிநாதமாக எழுந்த அதே காலகட்டத்தில் நிவேதிதா தேவி இப்படிப் பேசியிருக்கிறார்.

  பாரதியின் தேசபக்தி, தத்துவப் பார்வை, சமூக விடுதலைக் கண்ணோட்டம் எல்லாவற்றிற்கும் அடித்தளத்தில் அதன் மையமாக சக்தி தரிசனமும், ரா.கி-விவேகானந்த-நிவேதிதா மரபின் ஆன்மிக வழிகாட்டுதலும் உள்ளது. அதனை அற்புதமாக விளக்கிச் செல்கிறது இந்தக் கட்டுரை.

  பேசுபொருளுக்கு ஏற்றவாறு மொழிநடையும் கம்பீரமாக, கவித்துவமாக இருக்கிறது.

 4. ஸ்ரீ ரங்கம் வி.மோகன ரங்கனின் கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது. இரு கட்டுரைகளும் ஆழமான பல விஷயங்களை அழகாகப் பேசுகின்றன. காலத்தின் தேவையறிந்த நவராத்திரி காலத்தில் வெளியிடப்பட்டமையும் இதன் தனிச்சிறப்பே…பாரதி கண்ட பராசக்தி பற்றிய சிறப்பான தெளிவான கண்ணோட்டம் உண்டாக இக்கட்டுரை வழி சமைக்கும் என நம்புகிறேன்..

  .வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
  வெளியி லிரத்தக் களியோடு பூதம்பாடப்-பாட்டின்
  அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக்-களித்
  தாடுங் காளீ, சாமுண்டீ, கங்காளீ!
  அன்னை, அன்னை,
  ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.’

  இப்படி ஒரு கவிதையை சாதாரணமாக எவரும் பாடி விட முடியாது இது உணர்ச்சியின் ஆழமான அனுபவத்தின் வெளிப்பாடு … இவ்வகைப்பாடல்கள் பாரதியின் தெய்வீக அனுபவத்தைக் காட்டி நிற்கின்றன.

 5. ஸ்ரீ மோகன ரங்கன் ,

  என்னவொரு கட்டுரை ! கம்பீரமாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

  சாக்தம் வைதீக மதத்திற்கு விரோதமானது என்று என்னிடம் ஒரு வங்காளி வாதித்தார். வேதாந்தத்திற்கு தன்னை இயைபுடையதாகச் செய்யும் முயற்சியில் சாக்தம் முனைந்தது என்ற செய்தி தங்கள் படைப்பில் காணும் தித்திப்புச் செய்தி.

  வேத மதத்திற்கு முடிந்த வரை மாசு கற்பிக்க முயலும் புல்லுருவிகளின் பிரச்சாரத்திற்கு மத்தியில் இது ஏற்ற படைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *